1
வாசிப்பதற்குரிய அணுகுமுறையில் சில திட்டங்களை முதலில் நாம் வகுப்பதில்லை, மேம்போக்கான வகையில் இன்பமும் ஆர்வமும் சில கதவுகளைத் திறந்துவிடுகிறது. விருப்பத்தேர்வு, உள் நோக்கம், தற்பெருமை, கூட்டுச்சேர்த்தல் என்று ஏற்கனவே பழக்கப்பட்ட உணர்ச்சிவேகக் கலாச்சாரப் பாதையில் செல்ல வேண்டிய நிலைக்கு வருகிறோம். ஓர் இடைத்தங்கல் குகையைப் போலது செயல்படுகிறது. அன்றாடங்கள் பயன்படுத்தும் சக்திகளிடமிருந்து தப்பித்து உணர்ச்சி மயக்கம் நம்மைக் காப்பதுபோல், வேறொன்றாக ஆகக்கூடிய அமானுஷ்யப் பந்தம் தோன்றுகிறது. அலுப்பின் வாடை வீசாத, நாம் அறியாத புதிய பிரதேசமான வாசிப்பு இன்பம் தரும் நுகர்வு ஆகிறது. எதிரும் புதிரும் முயங்கும் வாசிப்புணர்வின் குறுக்காக அவரவர் அழகியலும் சுவாரசியங்களும் வித்தியாசம் வருவது அவரவர் தேர்ந்தெடுக்கும் கொண்டாட்ட நிலையின் பொறுத்தே அமைகிறது. இந்நிலத்தின் ஆத்மார்த்தமான நம்பிக்கைகள் சார்ந்த கடவுள், கோட்பாடு, விசாரணைகள் முதலியவையே இத்தளங்களில் தொடக்கத்தில் வேலைப்பாடாக மாறுகிறது. ஒரு விஷய வளர்ச்சியை காணும் உணர்வால், சந்தேகங்களால் அதன் சிந்தனை விதி உருமாறுகிறது. தமிழ் மனதுக்கு, சாக்ரடீஸ் இங்கே வருவதற்கு முன்பிருந்தே அரசியல் நேர்த்தன்மைகளும் (political correctness) அறம்சார்ந்த பல வாதங்களும் நம்மிடம் உண்டு. அதை மானம், விதி, கடவுள் விட்ட வழி என மேலும் பல கற்பனை முடிவுகளின் பெயரால் சொல்லுவோம். அதற்கு எல்லைகள் இருக்கிறது. சார்புகள் உள்ளது. வீரம், காதல், அறம், கருத்து, புனைவுவரை அதனதன் தரப்புக்களுக்கும் நியாயத்தொடர்ச்சி இருக்கிறது. உலகளவில் ஆஸ்கார் வைல்டு, ப்ராட்ஸ்கி, நெருதா என யாரும் விதி விலக்கல்ல. Author is dead என்ற எண்ணங்கள் சார்ந்த கோட்பாடு இருந்தாலும் தமிழ்மனம் இன்னும் சமூக அறிவியலையே தனது புழங்கு மைதானமாக வைத்திருக்கிறது. யாருமே தன்னிடத்தைத் தன்னிலையை மறப்பதில்லை, மறுக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. மறந்தால் இச்சூழலே உங்களைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளைச் சொல்லி உங்களை ஏற்கச் சொல்லும். உதாரணமாக ஆக்டேவியா பாஸ், மெக்சிகோவில் குடித்துவிட்டு ஒருவன் களியாட்டம் போடுவதையும் சாமியாடுவதையும் மெக்ஸிகன் ஆன்மாவின் முக்கிய அடையாளமாக முன்வைக்கிறார். ஒரு கொலை அல்லது கலவரத்தை நிகழவிடாமல் பெரும்பான்மை சனத்தை அச்சடங்கு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்.
2
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய ஆக்கங்களே, நவீன இலக்கியத்தின் செல்திசைகளைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மொழியாக்கப்பட்ட இலக்கியப் பிரதிகள், அவை மொழிபெயர்ப்பின் தரத்திற்கும் அப்பாற்பட்டுப் பயன்பாட்டுச் சக்தியைக் கொண்டதாக இருக்கிறது. கோணங்கியின் மொழியை முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விளைவும் மொழிபெயர்ப்புக்கு உண்டு. தொடர்ந்து இலக்கியப் பத்திரிகையின் சீரான ஊக்கத்தை மொழிபெயர்ப்புகளாலே தீர்மானிக்க முடிகிறது. தன் சிந்தனை, மொழியின் மீது சந்தேகம் மிக்கவனாக இருக்கும் கற்பனைமிக்க எழுத்து மனம், ஒரு சீர்மையை நோக்கிச் செல்ல மொழியாக்கம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. Living Translationஇல் காயத்ரி ஸ்பீவக் குறிப்பிடுவதுபோல. an act of understanding the other as well as the self. அதோடு the translator must surrender to the text in order to show the limits of the source language. படைப்பாக்க மனதின் எல்லைகளைப் பலமாக அசைக்கின்ற வேலையை மொழியாக்கங்களாலே அதிகம் சாத்தியப்படுகிறது. தன் எழுத்தின் உள்ளடக்கத்திற்கு மொழிபெயர்ப்பை மட்டுமே பலமாக நம்பியிருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சூழலில் பலர் உள்ளனர். மொழியாக்கமே தமிழ்ப் படைப்பாக்க வெளியை (CREATIVITY SPACE) அதிகமாக இயக்குகிறது. அதற்கே முன்னிலை கொடுக்கப்படுகிறது. நேரடி அனுபவ விதிகளுக்கும், உலக இலக்கியக் கற்பனை மோதலுக்கும் இடையே இவை செயல்படுகிறதா என்பதற்கு, இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இதனால் தீவிரக் கூருணர்வு கொண்ட வாசிப்புத் தளம் மிகச்சிறியது ஆகிறது.
தமிழ் எழுத்தாளர்கள், தனக்காக மொழிபெயர்க்கும் ஆக்கங்களில், அவர்கள் சிந்தனைக்குப் பொருந்தமாக, ஒரு கச்சாப்பொருளாகத் தோன்றும், தனக்குத் தேவைப்படும் ஆக்கங்களை (நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம்) தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கிறார்கள். மொழிபெயர்க்கும் ஆக்கத்தில் அவ்வெழுத்தாளரின் உள்ளடக்கம் எதிரொலிக்கும். அவரது படைப்புணர்வுக்கும் தேவைக்கும் உதவுமா என்பது முன்னிலை. ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கத்தை வாசிப்பது போன்ற உணர்வைத் தற்போதைய படைப்புகள் ஏற்படுத்துவது அதனால்தான். சங்க காலம் தொட்டு வளர்ந்த தமிழ்ச் சமூக இலக்கிய இயங்கியலைப் பற்றிய பேச்சும் இன்று அதீதமாக வேண்டப்படுகிறது.
3
தமிழ்க் கவிதை இயக்கத்தில் மரபு, புதுக்கவிதை, நவீன கவிதை என்ற மூன்றும் இன்றும் பழக்கத்தில் இருக்கிறது. கவிதையைப் பொறுத்தவரை இந்தப் பரவலாக்கம் ஆரம்பம் முதலே தானாக இயங்கி வளர்ந்திருக்கிறது. யாரும் யாருடனும் இல்லை என்பதே கவிதைசொல்லிக்கும் கவிஞருக்கும் இன்னும் தனியாகத் தனித்து இயங்கும் வேகத்தைக் கொடுக்கிறது. கவிதை, மொழியின் மிக நுட்பமான வேலைத்தளம். நவீன கவிதை இன்னும் பலமான பல உள்ளுணர்வை உருவாக்கும் போக்கையே கொண்டது. மேலும் தொடர்ந்து உரையாட விரும்புகிறது. கதையோ கவிதைகளோ கட்டுரையோ, படைப்புமொழியின் மனம் , அவரவரை அவரது எழுத்து வழியாகவே காட்டிக்கொடுத்துவிடும். எழுத்தை எவ்வளவு வசமாகத் திருகினாலும் எழுதுபவனின் உள்நோக்கத்தை அப்பட்டமாக காட்டிக் கொடுத்துவிடுகிறது தமிழ் மொழி.
கவிதை அனுபவப்பூர்வமானது. கவிதையின் போக்குகளை உற்றுநோக்கினால், ஒப்பிடும் அளவுமுறைகள், தினசரி வாழ்முறைகளோடு சம்பந்தப்படுகிறது. உண்மையும் அதன் பிழையும் தனித்தனி உயிரிகள் போன்றவை. ஆதார இணைப்புகளாக நாம் கணக்கிடும்போது, பிழைகளின் அடிப்படைக் குணங்களே கவிதையின் வளர்ச்சியில் தேவைப்படுகிறது. பிறக்கும்பொழுது குழந்தையின் மொழி குலைவானது. குலைவு சரிவரப் புரியாது. கவிதையின் பிறப்பு சிதிலங்களிலானது அன்று. சட்டென வெடிப்புறும் பிரமிப்பின் இடையே அதைச் சரிவரப் பரிமாறத் தெரியாத அழுத்தங்களால் உருவம் பெறுகிறது. வாழ்வென, சொல்லிக்கொடுக்கப்பட்ட கருத்தியல் மரபழுத்தம் தானாகவே நம்மிடமிருக்கிறது. மனித வளர்ச்சியிலும் பூவின் வளர்ச்சியிலும் படிநிலைகள் அறிவியல் பாற்பட்டதுபோல், கவிதையில் படிநிலைகளை இயற்கையாக வளரும் சூழல் உருவாக்கத் தொடர்ச்சியிலே சரிவர அளவிட்டுப் பார்க்க முடியும். உருவாகும் பல் வராத குழந்தையின் அழுகையோ சிரிப்போ மொழியின் விவரிப்பில் சீரற்றதாக இருக்கிறது. ஆனால் அம்மொழியே அவனது கனவுகளின் ஆரம்ப விளைவுகளைக் கணிக்கப் பயன்படும். அவற்றைச் சரிவர வளராக் கவிதைகள் என்ற சமாதானத்தில் ஏற்றுக்கொள்ளலாம். கவிதையில் அசைவுகள் சுற்றியிருக்கும் சுழலைப் பொறுத்து மாறுகிறது. மொழியின் பழக்கம் அதன் சொல்நிலை, சொல்லப்படும் சூழலின் முன்னிலையைக் கண்டிப்பாகக் கொண்டிருக்கும். சந்தேகங்கள், எண்ணங்களின் உண்மையான காரணத்தைக் கண்டுவிட்டால், அதன் மொழி மயக்கும் யுக்தியைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்னொரு பக்கம், கவிதையின் எந்த நேர்கோடும் தெரியாது, it is Random என்று கவிதை எழுதுபவர் ஒத்துக்கொள்பவராகி விடுகிறார். எழுத்தின் பொருள், முழுத் தன்னிலையும் மறதிக்கு உட்படும் மாற்றமே, இன்னொரு நிலைகளில் கவனிக்க வேண்டும். சமூகம் உண்மையைத் தொடுவதற்கும் அஞ்சி, நேர்மறை நேர்மறை என்று பயந்து கூவுகிறதும், நேர்மையின்றிச் சமூகத்தின் உடையணிகிற மனிதனாகக் கவித்துவமும் தன்னை மாற்றிக்கொள்ளும்போது, போதாத போலி தரும் தோற்றங்களிள் பேய்மைப் பிடித்துவிடுகிறது. நோய்மையின் நிறம், அதன் தொடர்ச்சியைப் பின்பற்றும் பலவகைப் பழுதுகளோடு, உருவானதாக உள்ளது. கனவுகளில் நிஜத்தைப் பொருத்திக் கலைப்பதுபோல். சிந்தனையைச் சாத்தியமாக பயன்படுத்த வேண்டும். நவீன காலத்தில் பிரதியின் இடம், பலரின் வாசிப்பாகவே எடுத்துக்கொள்ள இயலும். சிலிர்ப்பும், வியப்பும், தப்பித்தலும்கூட ஒரு வாசிப்பே. அது வார்த்தைகளில் அரிதாரம் செயல்படும் காலம், நேர்மை, சூழல், வட்டாரத்தைப் பொறுத்து மாற்றமெடுக்கிறது. பொது மொழிப்போக்கு இருப்பதாகத் தோன்றினாலும் எல்லாமே வட்டாரவழக்கம் கொண்ட மனங்களின் கவிதைகளாகவே உள்ளது.
தனித்துவக் கூட்டம் ஒன்றுண்டு. சங்ககாலம் தொடங்கி சமகால நவீன கவிதையிலும் தொடர்ந்து projectகளைச் செய்பவர்கள் உண்டுதான். அது பெரும்பான்மை கிடையாது. ஆனால் அவரவர் உள்ளடக்கம், மனம், எல்லைகள் முதலியன வேறுபடும். உள்ளார்ந்த அனுபவம், தனது நோக்கம், அரசியல், தனது இலக்கிய இயக்கம், தேடல் போன்ற இன்னும் பல கூறுகளை முன்வைத்து உருவாக்கப்படுவது. திருவள்ளுவர், இளங்கோவடிகள் தொடங்கி பிரம்மராஜன், யவனிகா ஸ்ரீராம், ரமேஷ்-பிரேம், ரமேஷ் பிரேதன், ஷங்கர் ராமசுப்ரமணியன், தவசி கருப்பசாமி, வெய்யில், நரன், இளங்கோ கிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன், சபரிநாதன், பெரு. விஷ்ணுகுமார், நெகிழன் ஆகியோர் இந்த projective verseல் ஓரளவு வெற்றியடைந்தவர்களாக இருக்கிறார்கள். கவிதையில் இன்னொரு அம்சம், மொழியின் வாழ்க்கை முறையைக் கண்டுபிடிப்பது. கவிதை எதைத் தேடுகிறது என்று மொழியின் வன்மைக்கு தன்னை அனுமதிக்கும் கவிஞர் தன்னுடைய அகத்தை முன்னிலைப்படுத்தியும் இல்லாமலும் விசாரணையை மேற்கொள்ள வேண்டியதாகிறது. இன்னொரு வளமான அம்சம், புதிதாக எழுதுபவனுக்கு இதுவரை எழுதப்பட்ட அத்தனை கவிதைகளும் அவனிடம் சமருக்கு முன் நிற்கிறது. அதனால் நேற்று வெளியான தொகுப்புவரை எல்லாக் கவிஞர்களும் புதிதாக எழுதுபவனின் சமகாலத்தியவர்களாக எப்போதும் ஆகிவிடுகிறார்கள்.
4
வாசிப்பின் ஓருடல் தன்மையை; ஒற்றை வாசிப்புத் தன்மையை அடையத் துடிக்கும் பெருங்கூட்டத்தின் கேள்விகளை; வாசிப்பின் மீது நிகழ்த்தப்படுகிற அதிகாரமாவே சொல்லமுடியும். சராசரி மனிதனின் வாழ்முறை வட்டம், பெரிதும் பிறப்பு, பசி, பிழைப்பு, சாவு என்பதைத் தாண்டவில்லை. தானும் தன் மோகமும் சுற்றுகிற சுழலில் கவிதையை அதைக் கொண்ட மனிதனிடமிருந்தும் மனநிலையில் இருந்தும் கழற்றியெடுப்பது பொருந்தாது. கவிதைகளும் தனக்கேரிய வட்டங்களில் புழங்கத் தொடங்கிடும். புதிய வாசிப்பே இல்லையா என்பது கேள்வி. செயற்கையாகக் கவிதை இந்த இறுக்கத்தைத் தளர்த்தும்போது நாம் முக்கிய நகர்வாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காலமும்போல் தமிழ்ச்சமுகம் அரசியல் மயப்பட்டு இருக்கிறது. சமூக விருப்ப உணர்வு சொல்லும் விதிகள்/நம்பிக்கை காரணங்களைக் காப்பதிலேயே காலம் சென்றுவிடுகிறது. வாழப்படாத மனமாகவே இருப்பதே சராசரி மனிதனின் கலை. கலைஞன், வசிப்பிருந்த தனி வீடுகளைவிட்டு வீதியின் வாசலில் உறங்க வேண்டியவனாகிறான். மொழி தோய்ந்த தொழில்களில்தான் மாற்றுச் சட்டைகள் அவனுக்குக் கிடைக்கிறது. கலையாகுமா ஆகாதா என்று முடிவுகளுக்கு அப்பால், கடைசி பசியுடையவனின் தேய்வழக்கால் ஆன மொழியாக உருமாற வேண்டும். அது மீட்சியைப் பற்றிய பாடலன்று. மேலும் யதார்த்தத்தில் நானும் நாமும் சமரசங்களோடு பசியின் பொருட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.இங்கே இலக்கிய இயக்கம் சமரசம் இல்லாமல் இயங்க வேண்டும் என்பது ஒரு நேர்மையான போக்குக்கு ஏங்கும் கனவுதான்., வாழவும் விடாது சாகவும் விடாது.
சொல்லப்போனால், தனது உள்ளம் துரத்தும் தேடலின் எல்லைகளை உடைத்து ஓடுபவர், இன்று மிகமிகச் சொற்பமே இருக்கிறார்கள், நான் உட்பட. இசையை எடுத்துக்கொள்வோம். கலையின் விளைநிலம், அதன் ஆதாரம் வாழ்வுதான். வாழ்ந்த காலம், அது தான் அனுபவித்த கணக்குகளைக் கொண்டது. வகை தொகை எதுவாக இருப்பினும், அதன் சாரமே சரக்கு. வாழ்வைப் போலச்செய்தலில், கடவுளைப் போலச்செய்தலே கலைச்செயல் தொடக்கம். மேன்மை என்கிற பெயரில் இடம் பொருள் பிரபல்யம் சார்ந்து கலைஞனுக்கு அந்தஸ்து தரமுடியாது. சினிமா, இசை, ஓவியம், இலக்கியம் எல்லாமே கலையின் வேறுவேறு ஒப்பனைகள். ஒன்றுக்கொன்று போட்டியே இல்லை. எப்பொருளின் விரிவு எல்லை விரிந்து பரந்து பல பேரைத் தொட்டுணர வைக்கிறதோ, அங்கே கற்பதற்கு நிறைய இடமுண்டு. இலக்கியத்தில் தமிழ் சினிமாவை போல பொதுவான பார்வையாளர்களுக்குப் பொதுவாகப் பரிமாறுவது போன்ற பொது ரசனைக்கான வியாக்கியானங்களை இங்கே நிகழ்த்த முடியாது என்று நம்புகிறேன்.
5
- ஒவ்வொரு வாசகனின் ரசனையும் தேர்வும் தனியானது, தனித்துவமானது. வாசகரின் வாழ்மானம், கருத்தியல் மனம், அரசியல் முதலானவற்றைப் பொறுத்து அவரவர் திசையின் தேர்வுகள் மாறும். பொதுவான வாசகர்கள் எங்கேயும் இருக்கவும் இயலாது. இலக்கியப் பீடங்கள் அழுத்தம் செலுத்தலாம். ரசனையை அவர்கள் தீர்மானிக்கலாம். ஏற்பதும் விலகுதலும் நன்மை.
- அரசியல் தூக்கமே இல்லாத சனமாக, தமிழ்நாடு இருக்கிறது. கொஞ்சமாக அசந்தாலும் அரசியலின் கொடுவாள் நம்மை முழுங்கிவிடும் என்ற நிலையை எங்கிருந்து பெற்றோம். நமக்கான அரசியல் பேச்சுக்கள் வெறும் பேச்சாகவே உள்ளது. புதிய தலைவன் ஆற்றலாகக் களமிறங்கியவுடன் என்ன நிகழ்கிறது என்றால், அணியெனப் பிரிந்து தலைவர்களுக்குப் பழைய மன்னர்களின் விருப்பமான ஏவல் படையென மாறத் தொடங்குகிறோம். ஜனநாயக அமைப்பாக யாரும் அணிதிரளவில்லை.
- நீதி, நியாயம், சட்டம் என்ற மூன்றும் வேறுவேறு தளங்கள். நியாயம் என்பது தரப்புகளைப் பொறுத்து மாறுபடும். நியாயம் வஞ்சமிக்கது. சட்டம் என்பது ஓர் ஒப்பந்தம். அது மக்களுக்கும் அரசாங்க மையத்திற்கும் இடையில் நிற்கும் நிலைத்த ஆள். அது இயக்கவுணர்வைச் செயல்பட வைக்கவும், சீர்கெடாமல் கண்காணிக்கவும் உதவுகிற அமைப்பாக்கம். நீதி என்பது நிலையானது. ஆள் பொறுத்து மாறுபாடு கொள்ளாது. அதனால்தான் நீதிமன்றம் என்று சொல்கிறோம். நியாயமன்றம் என்று சொல்வதில்லை. நியாயத்திற்கு எல்லையே இல்லை. அத்துமீறவேண்டியது எது. ஒழுங்குணர்வு எங்கே இருக்க வேண்டுமென்ற அடிப்படைகளே அரசியலின் மனிதனை நிர்ணயிக்கும்.
- ஒரு புத்தகத்தை நாம் பல சமயம் உள்ளார்ந்து அறிந்ததாக வாசித்தபின் பாவித்துக்கொள்வோம். அது பாதி உண்மைதான். ஒரு பிரதியில் வாசகர் கோடிட்டு காட்டும் வாசிப்புகள் அவனது சொந்த எல்லையின் கவலைகள். அப்படியாகவே வாசிப்பும் தொடங்கும். தனக்கு எதுவெல்லாம் தெரியவில்லையோ அதைப்பற்றி வாசக அனுபவம் பேசாது. உள்ளதை உள்ளபடி தெரியாதெனச் சொல்ல நாக்கும் தடுக்கும்.
- ஆசைகள், தொடர்ந்து செயல்படத் தூண்டும் உணர்ச்சியைத் தருபவை. ஆசைகளின் மீதான கவர்ச்சிதான் ஒருவரை எச்செயல் நோக்கியும் உள்ளிழுக்கும். தொடர்ந்து செயல்படத் தன் தேடலின் பொருண்மையை நோக்கிப் பாதையைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற வேகமும் வரும். இல்லையென்றால் தன் தனிவழியில் நிறைவு காணும் ஊக்கத்தைப் பெற முடியாது.
- நானும் ஒரு தரப்பு, எனக்கும் தனிப்பட்ட அரசியல், ஆதாயம், மதம், பணம், நியாயம் என்பன உண்டு. நான் அதை மறுக்கவில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட கலை நிலைகளை மோதல் ஏற்படுத்தி புதிய நிலைகளுக்கு வழி ஏற்படுத்த முடியும். காலம் மாறுகிறது. சமூகம் மாறுகிறது. பணம் மாறுகிறது. பசி மாறுகிறது. மான்டெல்ஷாம் சொல்வது போல் ‘கலையெனப்படுவது நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை’ ( Art is a hope against hope). பழைய நம்பிக்கைகளை விஞ்சும் புதிய நம்பிக்கைகள்.
- பாவனையிலிருந்து வெளியேறாத கற்பனை, அதீத புனைவு ஆகிறது.
Author is dead, ஆசிரியர் இறந்துவிட்டார் என்கிறபோது உரையாடல்களை இன்னும் சுதந்திரமாக அணுகலாம் என்கிற எண்ணம் என்றே தோன்றுகிறது. அஃது Classic criticism, இங்கிருந்து வெளியேறிய நிகழ்வு. அப்படியானால் நமக்கு அந்தச் சூழல் வந்துவிட்டதா? உலவும் கலைப்பேச்சுகளின்படி இங்கே உரையாடல்களே இன்னும் இயக்கம் பெறவில்லை. விமர்சனம் சீக்கிரம் பிறக்க வேண்டும். பின்னரே நாம் ஆசிரியரைக் கொல்ல முடியும். Author is dead என்கிற கோட்பாடெல்லாம் தமிழ் மக்களுக்கே (artist, writer and reader) பொருந்தாது. Hereby, Art is never valued without the absence of artist. ஆளில்லாமல் உருவாக்கிய ஆக்கமே இல்லை என்பதும் இன்னொரு நியதி.
நமது சமூக வளர்ப்பு, முக்கியஸ்தர் ஆகிவிட்ட ஒருவர் தவறான யோசனைகள் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்கிற பழக்கம் கொண்டது. பிரபலமானவர் சொன்னார் என்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற போக்கு, author is dead என்கிற எண்ணம் இன்னும் இங்கே தொடங்கவே இல்லை என்பதைக் காட்டுகிறது. இப்படியாக, வாசக பலம் கொண்ட சில எழுத்தாளர்களைச் சொல்ல முடியும். வாசகன் அவர்களிடம் மறுபேச்சு பேசுவதில்லை. Only உத்தரவு எசமான். இங்கே படைப்பு ரீதியான பரம்பரைகள் தொடர்ந்து வளர விரும்புகிறார்கள். எழுத்து வம்சங்களை உருவாக்கவும் விரும்புகிறார்கள். இந்தக் கோட்பாடு அவர்களுக்கு மகிழ்ச்சியான வசதிகளைத் தருகிறது.
பைபிளில் இதற்குத் துணையாக ஒரு வரி இருக்கிறது.
"கடவுளின் முட்டாள்தனம் எனப்படுவது மனிதனின் கூர்மையான அறிவாற்றலைவிடச் சரியானது"
இது அரசியல், குடும்பம், கல்வி, இதழியல், ஆன்மிகம் என எத்தனை தரப்புகள் உண்டோ, அத்தனைக்கும் பொருந்தும். கடவுளின் பெயரால் எல்லாமே சாத்தியம். அதேபோல் சமூக பிரபல்யம் முன்னிலைப்படுத்தும் ஆட்களை, தமிழ்ச் சமூக பிம்பங்களை உருவாக்கிறது எனக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது. அதைத் தொடர்ந்து தக்க வைப்பது, அவர்களுக்கு இன்னும் முக்கியமான வேலை. தமிழ் சூழலில் in real surface, மதம், சாதி, நிறம், ஊர், யாருடைய தரப்பு, விருப்பமான ஆட்கள் யார், யாருக்கு யார் விசுவாசி என்பதைப் பொறுத்து ஒவ்வொரு விஷயங்களின் முன்னிலைப்படுத்தல்கள் மாறுபடும். கருத்தியல் எல்லாம் பின்னே மெதுவாக வரும், வந்து சேரும். கலை வழியாக ஒரு கருத்துரையாடல் நிகழ வேண்டுமென்ற ஏக்கம் பல பேருக்கு இருக்கிறது. வெறும் ஏக்கம்தான். மற்றபடி பிம்பங்களைத் தற்காத்து கொள்வதுதான் முதல் வேலை. ஏனெனில், பிறப்பிலிருந்து அது உரமிடப்படுகிறது. கவிதைத் தரப்பை எடுத்துக்காட்டுக்குச் சொல்றேன். கவிதையில் எதையும் மறைக்காதீர்கள், அது இயல்பிலேயே நிர்வாணமானது எனச் சொல்கிறார் போர்ஹேஸ். தனது கீழ்மைகள் வெளிப்பாடு கொல்லும் முக்கிய வடிவமாகக் கவிதைகளின் இயக்கம், சுதந்திர வடிவமாகப் பேராற்றல் கொண்டது என்கிறார் ian mckenzie. தன்னைத்தானே உடைத்து கொண்டு எந்தச் சுமைகளும் தன்னை அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று பேசுகிறான் Zorba the Greek. நம் கலை சூழல் முகங்களின், அறச்சார்பு எப்படியானது என்றால், அறச்சீற்றம் என்ற பெயரில் சுரண்டலாகச் சுற்றுகிறது. So art is never valued without the presence of artist here. கலைஞன் இல்லாமல் கலைப்பொருளில்லை. பிக்காஸோவை அறிந்த பிறகுதானே அவர் ஓவியத்தைப் பார்க்கிறோம். அவரது ஓவியத்தால் மட்டுமே நாம் அவரைத் தேடி அறியவில்லை. சொல்லப்போனால் ஓவியம் புரிவதே இல்லை. கலையின் பாவனையை மதமும் இப்படித்தான் பயன்படுத்திக்கொண்டது என்று புரிகிறது.
இன்னொரு வகை, Author is dead என்கிற கோட்பாட்டின் பயன்பாடு, இன்னும் ஆள் பொறுத்து மாறும். பெரும்பாலும் இங்கே காண்பது, Author is dead என்கிற கோட்பாட்டைப் பயன்படுத்தும்போது தன் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கிற முக்கிய வேலையைக் கூச்சமின்றி முன்னெடுக்கும் செயலை வேறெந்த பகுதியிலும் இவ்வளவு அதிகமாகக் காண முடியாது. ஏன் தெரிதாவின் ஒற்றை வரியை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு மற்றவற்றைக் கழற்றிவிட்டுவிட வேண்டும். அது சிலரின் ஊழல்போக்கு வகை. அதற்கு நம் சூழலின் சமூகக் கணக்குகள் பற்றிய தெளிவென அறிதல் வேண்டும். கூட்டத்தில் பாதிக்குப் பாதிபேர் இருக்கிறார்கள். விவரமானவர்கள். தமிழ்ச் சூழலில் உலவும் உள்நோக்கங்களுக்கு அப்பால், ஒருவர் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்ல விரும்புவது இல்லை. மக்களிடமிருந்து உருவாகும் கலையின் ஆட்கள் அனைவரும், இந்தச் சமரச பாவனையை மிக எளிதாகத் தவிர்க்க இயலாது. அது இயல்புதான் ஏற்கிறேன். கலைசார்ந்த தீவிர உணர்வும், தன்னை நோக்கி தானே கேள்வி வீசும் விமர்சன பேச்சை, கலைஞன் தன்னை நிர்வாண நிலையில் பொருத்திக்கொண்டு அலைந்தாலன்றி, அனுபவ நுட்பத்திலிருந்து, சிந்தனை உருவாக்கும் பேச்சுமுறையை, சாதாரண மொழியின் சொல்லாடலிருந்து விடுவிக்க முடியாது. நெரிசல் மிக்க அவசரக்கலையின் யுகத்தில், ஏற்கனவே அறிந்த கலையின் பெருமைகளை ஓரமாகக் கைவிட்டுவிட வேண்டியதும் அவசியமாகிறது.
இதில் உண்மை என்பது கட்டுரைகளினால் நிறுவப்படும் முடிவுரையல்ல. நான் கூறும் வார்த்தைகள் அனைத்துமே தொடக்கப்புள்ளி.
துணை ஆதாரங்கள் :
1. SOCIAL FUNCTION OF POETRY - T.S.Eliot
2. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்
3. கலைத்தர்க்கம் - பிரமிள்
4. கவிதையின் அணுகல்கள் - பிரம்மராஜன்
5. ஸ்ரீநேசன்- ஜீ.முருகன் - மனுஷ்யபுத்திரன் நேர்காணல்
6. நஞ்சுண்ட காடு - பா. செயப்பிரகாசம்
7. PROJECTIVE VERSE - Charles Olson
8. Modern Poetry : A Personal Essay - Ian Mckenzie
9. The Kinds of Poetry I Want - Charles Bernstein
10. காலம், கவிதை - இரண்டு உரையாடல்கள் -வே.நி.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

டோனி பிரஸ்லர்
ரமீஸ் பிலாலி
கிருஷ்ணமூர்த்தி
து. பிரபாகரன்
Be the first person to add a comment.