கல்வி என்பது ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த சொல் ஆகும். ‘கல்’ என்னும் சொல்லிற்குத் தோண்டுதல், பயிலுதல் ஆகிய பொருள் உண்டு. ‘கல்’ என்னும் சொல்லை மூலமாகக் கொண்டே ‘கற்றல்’ என்ற சொல்லும் பிறக்கிறது. கல்வியின் நோக்கமே கண்டடைதல் எனலாம். மாணவர்கள் புதியனவற்றைக் கண்டடையும் நோக்கில் கல்விப்புலம், பயணிக்க வேண்டும். மாணவர்களின் திறன், அறிவு, ஒழுக்க மேம்பாட்டின் மையமாக இருப்பது ‘கல்வி’ ஆகும். கல்விச் செயல்பாடு என்பது முற்றுப்பெற்ற தன்மை நோக்கிச் செல்வதன்று. ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்கிறது நாலடியார்.
கல்வி என்பது பரந்து விரிந்த புலத்தில் இயங்கும் பன்முகத்தைக் கொண்டது. பன்முக இயங்குதளத்தில் கல்வி செயல்படுகிற பொழுதுதான் கல்வியின் நோக்கம் நிறைவுறும். கல்வியின் நோக்கம் நிறைவுற்றால்தான் மாணவர்கள் திறன் பெறுவர். இத்திறனையும் திறன்சார்ந்தவற்றையும் வழங்கும் பணி கல்வி நிறுவனங்களுக்குரியவை. ‘கற்க கற்கத்தான் கல்லாமை தெரியும்’ என்பது தமிழ் முதுமொழி.
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
(திருக்குறள், குறள் எண்.397, ப. 281)
என்னும் குறள் மனிதனுக்குள் நிகழ வேண்டிய தொடர் கல்விச் செயல்பாட்டை அறிவுறுத்துகிறது.
கல்வி கற்கும் களங்களின் தொகுப்பாகக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் அறம், திறன், அறிவு மேம்பாட்டின் மையமாகத் திகழ வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் முறையான கல்வி நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தனிமனித மேம்பாடே சமூக மேம்பாடாகும். தனிமனித மேம்பாட்டிற்குரிய கருவிகளில் முதன்மையானது கல்வி ஆகும். கற்றலும் கற்பித்தலும் முறையாக நடக்கிற கல்வி நிறுவனமே நல்மாணாக்கர்களை உருவாக்கும். கல்வி நிறுவனங்களை மையமிட்டு நடைபெறுகிற கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, ஆசிரியர் பணியிடங்கள், மதிப்பீடு, மொழி ஆசிரியர்களின் செல்நெறி போன்றவற்றில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்ட நாஞ்சில் நாடன் தன் படைப்புகளில் அங்கதமாகப் பதிவு செய்துள்ளளார். சிறியன செய்கிலாதார், வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம், காக்கைக்கு கூகை கூறியது, பாம்பு முதலிய சிறுகதைகள் கல்விப் புலத்தை விமர்சனத்திற்குட்படுத்தி அங்கதத்தை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்ட கதைகள் எனலாம். ஏனைய சிறுகதைகள் சிலவற்றிலும் நாவல்களிலும் கவிதைகளிலும் கல்விப்புலம் சார்ந்த அங்கதம் பரவலாகக் காணப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் படித்தமைக்கான சான்றிதழ்கள் வழங்கும் அமைப்பாகவோ; மாணவர்களுக்கு வேலை வாங்கித் தரும் தொழிற்கூடமாகவோ இருக்கக் கூடாது. மாணவர்களை அறிவு மேம்பட்டவர்களாகவும் திறன் மேம்பட்டவர்களாகவும் உருவாக்குவதுடன் அறம் மேம்பட்டவர்களாகவும் உருவாக்க வேண்டும். தனிமனித வாழ்வில் அறம் சிதைந்தால் சமூகச்சிதைவு நிகழும். அறத்தை நிலைநாட்ட வேண்டிய கல்வி நிறுவனங்களின் பிறழ்வை நாஞ்சில் நாடன் அவர்கள் அங்கதத்துடன் எடுத்துரைக்கிறார். கல்வி நிறுவனத்தின் முக்கியமான கூறுகளாகத் திகழ்பவை கற்றல் கற்பித்தலை உள்ளடக்கிய மாணவர், ஆசிரியர் ஆகும். மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையேயான புரிதல் செம்மையாக இருத்தல் வேண்டும். மாணவர் பிழையால் நேரும் பாதிப்பினைவிட ஆசிரியர் பிழையால் நேரும் பாதிப்பு அதிகம். மாணவர்கள் உணர்கைத் திறன் அதிகம் உடையவர்களாக இருப்பதால் பெரும் கவனத்துடன் அவர்களை ஆசிரியர்கள் கையாள வேண்டிய நிலை உள்ளது.
இக்கையாளலில் நேரும் பிழை கற்றல் கற்பித்தலில் பிழையாகி கல்வி நிறுவனத்தின் பிழையாகப் பரிணாமம் அடைகிறது. மாணவர்கள் தவறிழைக்கும் பொழுது மாணவர்களைத் தண்டிப்பதில் அக்கறை செலுத்தாமல் நன்னெறிப்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். இச்செயலே அறம் ஆகும். ஆனால், சில ஆசிரியர்கள் தண்டனை வழங்குவதில் அக்கறை செலுத்தும்போது எதிர்மறை விளைவுகளே தோன்றும்.
‘வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்’ என்னும் சிறுகதை கல்விப்புலத்தில் நடைபெறும் சிறுசிறு முறைகேடுகள் மூலம் கல்வி நிறுவனத்தின் தகுதியை விமர்சிக்கப்படும் இடத்திற்கு நகர்த்துவதை எடுத்துரைக்கிறது. இக்கதை மாணவர்கள் பாடம் கற்பதைக் காட்டிலும் ஆசிரியர்கள் பாடம் கற்பித்தலை அங்கதத்துடன் பதிவு செய்கிறது; இன்றைய ஆசிரியர்களின் போக்கை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளைப் பெரிதுபடுத்தும் ஆசிரியர்களின் அகமனத்தைப் பகடிக்கு உட்படுத்தும் நோக்கில் நாஞ்சில் நாடன் அவர்கள் இக்கதையைப் படைத்துள்ளார். இக்கதையில் மாணவர்கள் வகுப்பறையில் செய்த தவறிற்காக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். பெற்றோர்களில் ஒருவர், மாணவரின் தவறினை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆசிரியர்களுக்குச் சொல்லித் தருவது போல உரையாடல் பகுதி ஒன்று அமைகிறது. உரையாடலின் நிறைவில் அப்பெற்றோர் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது நேரடியாகச் சினம் கொள்ளாமல் கல்வி நிறுவனத்தின் மீது தன் சினத்தை ஏற்றிச் சொல்கிறார். “பள்ளிக்கூடம் நடத்துகானுகோ பள்ளிக்கூடம்... இதுக்கு கசாப்புக்கடை நடத்தலாம். நாறத்தேவடியா... மவனுகோ” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.495) என்னும் மேற்கோளில் கல்வி நிலையங்கள் மாணவர்களைக் கையாளும் தன்மையை எடுத்துரைக்கிறது.
“பல்கலைக்கழக கூட்டுறவுப் பண்டகத்தில் சென்று ஒரு புத்தகம் விலைக்கு வாங்கி வர வேண்டுமானால், காலை பத்தேகாலுக்கு டோக்கன் எடுத்தால் பிற்பகல் நாலரைமணி அளவில் கிடைக்கும் என்றார்கள். அதைவிட வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சாதிச் சான்றிதழ்கள் பெறுவது எளிதாக இருக்கும்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.506) என்னும் மேற்கோள் கல்வி நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளால் ஏற்படும் சிக்கலை வட்டாட்சியர் அலுவலத்தில் சான்றிதழ் பெற ஏற்படும் சிக்கலுடன் ஒப்புமைப்படுத்தி அங்கதத்துடன் பேசுகிறது. கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்களைப் போன்றே பணத்துடன் தொடர்புடையனவாய் மாற்றம் பெற்று வருகின்றன. கல்வி எந்தளவிற்கு மேன்மையானதோ அதே அளவிற்குக் கல்வி நிறுவனத்தை நடத்துகிறவர்களும் மேன்மையானவர்களாக இருக்க வேண்டும். மேன்மை இல்லாவிட்டாலும் கீழ்மை இல்லாமல் இருக்க வேண்டும்.
மனிதர்கள் வியாபாரம் செய்து பணம் செய்வதற்குப் பலவழிகள் உள்ளன. இவ்வழிகளில் கல்வியும் இணைந்துவிட்டது வருத்தத்திற்குரியதாகும். ‘தடம்’ இதழில் ‘இன்னும் சில சொற்கள்’ என்னும் பகுதியில் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் வினாவிடையாக, “ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியாக நமது கல்வி முறை பற்றி? – கல்வி வணிகமயமாக்கப்பட்டு விட்டது” (தடம், மார்ச் 2017, ப.94) என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பணம் பண்ணுவதற்குரிய தொழிற்சாலையாகக் கல்வி நிறுவனங்களை மாற்றத் தொடங்கி விட்டனர். இதன் விளைவாக கல்வியின் தரமும் கல்வி நிறுவனங்களின் தரமும் சரியத் தொடங்கியது / தொடங்கின. கல்வியின் தரம் தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் குறைந்தாலும் சமூகத்தில் கல்வி நிறுவன நிர்வாகிகள் கல்வித் தந்தைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
“பொண்ணு புடிக்கிறவன், மயானக் கொள்ளையடிக்கிறவன், கல்வித் தலங்களில் மடி நிறைக்கிறவன், குற்றச் செயலுக்குக் கூட்டு நிற்கிறவர் எல்லா மயிராண்டியம் உமக்கு மேன்மை தாங்குனவனா ஓய்?” (அம்மை பார்த்திருந்தாள், ப.17) என்னும் மேற்கோளில் ‘மேன்மை தாங்கிய’ என்னும் முன்னொட்டுடன் வலம் வருகிறவர்களின் இழிசெயல்களைப் பட்டியலிடுகிறபொழுது கல்வி நிறுவனங்களில் நடக்கும் இழிசெயல்களையும் பட்டியலிடுகிறார்.
“ஊருப்பட்ட கல்வித்தந்தைவே நாட்டிலே... சாராயம் காய்ச்சினவன், மணல் கடத்தினவன், சந்தனமரம் வெட்டினவன், சுடுகாடு கெட்ட காண்ட்ராக்ட் எடுத்தவன், மலையக் கொடஞ்சு கல் எடுத்தவன்ணு நாட்லே கல்வித் தந்தை கூடிப் போச்சுவே! கல்விதான் நாசாமாப் போச்சு...” (தொல்குடி, ப.123) என்னும் மேற்கோள் ‘கல்வித் தந்தை’ ஆனவர்களின் பின்புலத்தைப் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதப்பட்ட ‘சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே‘ என்னும் கவிதை சமுதாயத்தில் பணம் சேர்ந்திருப்பவர்களைப் பட்டியலிடும் பொழுது கல்வி நிறுவனம் நடத்துபவர்களையும் இணைத்துக் கொள்கிறார்.
தேவர்களும் தெரிவறியாச்
சீர்மகளைப் பேர்மகளை அலைமகனை
அண்ணாந்து பார்த்தேன்!
கைப்பிடித் தங்கம்
கரை சேர்க்கும் என்றேன்!
வணிகர், வங்கியர், கல்வித் தந்தையர்
தாதுக் கொள்ளையர், கனிம உரிமையர்,
கலைக் காவலர், கலப்படம் செய்பவர்
மனைகள்
விற்பவர், மருத்துவ மனையர்
உரிமைப் பெண்டிர் கழுத்தில் இடுப்பில் காலில் கிடக்கும்
காணக் கிடைக்கும் வாங்கக் கிடைக்காது
(வழுக்குப் பாறை, ப.199)
துணைவேந்தர்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் கல்வியாளர்களாக இருப்பதுதான் கல்வியின் உயர்வுக்கு நலம் பயக்கும். கல்வியாளர் ஒருவர் துணைவேந்தராக இருந்தால்தான் ஆசிரியர்களையும் மாணவர்களையும் திறம்படக் கையாள இயலும். கல்வி சார்ந்து பெரும்பணியாற்ற வேண்டிய துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைத்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் துணைவேந்தர்கள் தேர்வில் பல்லாண்டுகளாகத் தொடர் முறைகேடுகள் நடந்து வருகின்றன. “இந்தத் துணைவேந்தர் சமீப காலத்தில் பதவி ஏற்றவர். பதவி ஆண்டுகள் இன்னும் இருந்தன. கல்வி அமைச்சரின் மனைவியின் தமக்கை கணவர். எனவே பதவி நீட்டிப்பு கூடக் கிடைக்கும்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.300) என்னும் மேற்கோள் துணைவேந்தர் தேர்விற்குப் பின் இருக்கும் அரசியலை அங்கதத்துடன் வெளிப்படுத்துகிறது.
“ஒமக்கு ஒண்ணும் லௌகீக ஞானம் இல்லியே வே’ இதென்ன துணைவேந்தர் பதவியா, பத்து கோடி வீசி எறிஞ்சு பாஞ்சு புடிக்கதுக்கு?” (கறங்கு, ப.58) என்னும் மேற்கோள் துணைவேந்தர் பதவியைப் பெற கோடிகளைக் கொட்ட வேண்டிய சூழலையும் பதவி பெறலுக்குப் பின்னிருக்கும் கீழ்மைச் செயல்களையும் அர்த்தச் செறிவுடன் நுண்மையாக அங்கதத்துடன் காட்சிப்படுத்துகிறது. கோடிக் கணக்கிலான தொகையைக் கையூட்டாகத் தந்து துணைவேந்தர் பதவியினைப் பெற்றவர்கள் எப்படியாவது தந்த பணத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று முனைப்புக் காட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பணம் பெறுவதற்காகக் கீழ்மைத்தனங்களின் எல்லைக்கே சென்று விடுகின்றனர். “பல்கலைக்கழக வெளிச் சுற்றுச் சுவரோரம் இளநீர்க்கடை போட்டிருந்த அண்ணாச்சி ஒருவரிடம் மிரட்டி அன்பளிப்பு வாங்கிய துணைவேந்தர் இருந்த நாடு இது. அவரும்தான் என்ன செய்வார் பாவம், பதவி வாங்கப் பதினைந்து கோடி கொடுத்திருக்கலாம்! இலஞ்சம், கையுறை, கையூட்டு, கோழை, கட்டிங், கமிஷன், பங்கு, சில்லறை, தரகு என எத்தனை மாற்றுச் சொற்கள் தமிழில் அன்பளிப்புக்கு? எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒன்றுதானே! அவனன்றிப் பாரத மணித் திருநாட்டில் ஓராணியைக் கூட வலித்தெடுக்க இயலாது!” (அம்மை பார்த்திருந்தாள், ப.130)
பாடத்திட்டம்
கற்றலையும் கற்பித்தலையும் இணைக்கும் புள்ளியாகத் திகழ்வது பாடத்திட்டம் ஆகும். இப்பாடத்திட்ட உருவாக்கத்தின் பின் பல்வேறு அரசியல் நடைபெற்று வருகிறது. அவ்வரசியல் அரங்கேற்றம் பணத்தை மையமிட்டே நடைபெறுகிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன் துறையின் பாடத்திட்டத்தில் கும்பமுனி கதையினை வைப்பதற்கு அனுமதிகேட்டு இல்லத்திற்கு வருகை தருகிறார். வருகை தந்த பேராசிரியரிடம் கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் எழுத்துச் சூழல் குறித்து உரையாடுவதே இக்கதையின் செல்நெறி ஆகும். “’அதுக்காகச் சுட்டியா இம்புட்டு தூரம் வந்தேரு? அவருக்கு ஒப்பு, நீரு போட்டுக்கிட மாட்டோரா’ என்றார் தவசிப்பிள்ளை. ‘கெட்டுச் சோத்துக்குள்ளே எலியை வச்ச மாதிரி, நமக்குண்ணு இப்படி ஒரு மந்திரி’ என்று கறுவினார் கும்பமுனி. பேராசானுக்கு புத்தியில் அது போய் தாக்கிற்று. ‘சே! என்ன வேல மெனக்கெட்ட வேல.... காரியமாட்டுத்தாலா சொல்லுதாரு... கணிசமாட்டு ஒரு தொகை வவுச்சர் போட்டிருக்கலாம்... புத்தி கெட்டுப் போயி வந்தேன்’ என்று கழிவிரக்கப்பட்டவர், கும்பமுனியிடம் இருந்த, இன்னும் கையொப்பம் இடாத கடிதத்தைப் பிடுங்காத குறையாக வாங்கிப் பத்திரப்படுத்தினார்” (தொல்குடி, ப.123) என்னும் மேற்கோள் படைப்பாளர்களைப் பாடத்திட்டம் தயாரிப்பவர்கள் நடத்தும் முறையை எள்ளலுடன் எடுத்துரைக்கிறது. ‘செல்விருந்து’,’ வருவிந்து’, ‘நல்விருந்து’ என்னும் சொற்களைத் திருவள்ளுவர் தன் குறள் நூலில் பயன்படுத்துகிறார். ஆனால் நாஞ்சில் நாடன் அவர்கள் அங்கதத்தை வெளிப்படுத்தவதற்காகவே ‘வல்விருந்து’ என்னும் புதிய சொல்லாட்சியைக் கையாள்கிறார்.
ஆராய்ச்சி
நாஞ்சில் நாடன் அவர்கள் பெரும்பாலும் முனைவர் பட்ட ஆய்வின் தரமின்மை குறித்துத் தன் படைப்புகளில் பதிவு செய்கிறார். சிறியன செய்கிலாதார், பாம்பு அகிய இரண்டு கதைகளும் முனைவர் பட்ட ஆய்வின் தரமின்மையையும் கல்விப்புலச் சூழலையும் விமர்சிப்பதற்காகவே எழுதப்பட்ட கதைகள் எனச் சுட்டலாம். முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வாளர், நெறியாளரின் வழிகாட்டுதலின்படி ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். நெறியாளரின் வழிகாட்டுதல் ஆய்வேடு செம்மைப்பட வழிவகுக்கும். ஆனால் இன்றைக்கு நெறியாளருக்கும் ஆய்வாளருக்குமான உறவு ஆண்டானுக்கும் அடிமைக்குமான உறவோ? என்று எண்ணுமளவிற்கு மாற்றமடைந்து வருகிறது. “ஐயத்துக்கு இடமான பகுதிகளை வாயில் பென்சில் கவ்வி கோடு போட ஆரம்பித்தபோதே, பேராசிரியரின் ஆய்வு மாணவன் கையில் மதுக்குப்பிகளுடன் அறையினுள் நுழைந்தான். குருதட்சனையாக இருக்க வேண்டும் என நினைத்து” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.535) என்னும் மேற்கோள் ஆய்வாளர்கள் நெறியாளர்களுக்குச் செய்யும் பணிவிடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
ஆய்வு நெறியாளர்களைச் சாடும் அளவிற்கு ஆய்வாளர்களையும் நாஞ்சில் நாடன் அவர்கள் எள்ளி நகையாடுகிறார். ‘டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்’ என்னும் சிறுகதை கும்பமுனி தவசுப்பிள்ளையை முன்னிறுத்தி நடக்கிற கதை ஆகும். இக்கதையில் ‘புல்கானின்’ என்பவர் கும்பமுனியைச் சூழலியல் பற்றி பேட்டி காண வருவார். புல்கானினைப் பார்த்து கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் உரையாடுவது நகைச்சுவை உணர்வை உண்டாக்கும். “’பார்த்தா முனைவர் பட்ட ஆய்வாளன் போலத் தெரியல்லியே’ என்றார் கும்பமுனி. ‘அவனுக நடமாட்டம் தானே இப்பம் அதியமா இருக்கு!’ என்றார் தவசிப்பிள்ளை” (தொல்குடி, ப.150)
‘சவம் நினைந்து உரைத்தல்’ என்னும் கதையில் கும்பமுனி, தவசுப்பிள்ளை கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருப்பர். இக்கதையில் முனைவர் பட்ட ஆய்வாளர் குறித்து கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் எள்ளலுடன் உரையாடுவர். “எந்த வயசுலே என்ன பேச்சு பேசுகேரு? இப்பம் ஒரு பய உம்மைக் கூடக் கூட தேடீட்டு வாறாம்லா? ஏதோ ஆராய்ச்சி பண்ணுகாம்லா? என்ன தலைப்பு பாட்டா? ஆங்... இப்பம் பிடி கெடச்சு... ‘கும்பமுனி ஆக்கங்களில் சிவ பரத் தத்துவம்... அவனுக்க சோலி முடியது வரைக்கும், என்ன சொன்னாலும் கேப்பான்.’ ‘ஓ! அதுனாலதான் அவங்கிட்டே அண்ணைக்கு அரை லிட்டர் பால் பாக்கெட் வேண்டீட்டு வரச் சொன்னேரா? இப்படித் தரங்கெட்டுப் போயிட்டேரே!’ நீரு ஒண்ணு... அவனவன் காசு கொடுத்து தீசிஸ் எளுதி வாங்குகான் பாட்டா! அதுக்கு மேலயும் உண்டும்... அதை இங்க பேச நீதி இல்லே.. நீரு கௌட்டுப்பசு செனையானது போல, ஈன முக்கவும் மாட்டேரு... ஈனுன கண்ணுக்குட்டியை நக்கவும் மாட்டேரு....” (அம்மை பார்த்திருந்தாள், ப.14) என்னும் உரையாடல் முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படுவதையும் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
ஆய்வேட்டின் முகமாகவும் உயிர்ப்பாகவும் திகழ்வது ஆய்வின் தலைப்பாகும். ஆய்வின் தலைப்பை ஆய்வுச் சிக்கலின் அடிப்படையில் கருதுகோளினைக் கொண்டு உருவாக்க வேண்டும். ஆனால், ‘ஆய்வுத் தலைப்பு’ ஆய்வு அடிப்படைகள் எதனையும் பின்பற்றாமல் அமைந்து ஆய்வேடாகவும் உருப்பெற்று விடுகிறது. “பெரும்பாணாற்றுப் படையில் மலைநாட்டு விவசாயம், பெருங்கதையில் கிரேக்க இதிகாசங்களின் ஆளுமை, வடூவூர் துரைசாமி ஐயங்காரும் வண்ணதாசனும் – ஒர் ஒப்பாய்வு” (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், பக்.297-298) என்னும் ஆய்வுத்தலைப்புகள் ஆய்வாளருக்கும் நெறியாளருக்கும் இருக்கும் ஆய்வின் மீதான அறிவினைப் பறைசாற்றுவது ஆகும்.
ஆய்வு குறித்த புரிதல் இல்லாமல், ஆய்வுலகம் இயங்குவதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் படைப்புகளில் பதிவு செய்துள்ளார். “இனி மேலால் முன்னைப் போல் ஓடியாடிக் கதை எழுத முடியாது. வேணுமானால் கதையாடல் செய்யலாம். எப்படியம் சாகுமுன் பெருங்கதை ஒண்ணு எழுதணும். எவுனும் திருத்தக்க தேவர் எழுதுனதுண்ணு நம்ம கதையை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டுக் கெடப்பான். ஆனா மனசு வறண்டு கெடக்கு. வடநாட்டுக்காரன் ரயிலிலே திங்கப்பட்ட ரொட்டியைப் போல” (சூடிய பூ சூடற்க, ப.41)
ஓர் ஆய்வாளர், ஆய்வுத் தலைப்பு தொடர்பாக ஒரு நூலைகூட வாசிக்காமல் ஒரு பத்தி எழுதாமல் முனைவர் ஆகிவிடும் ஆய்வுச் சூழல் இன்றைக்குப் பெருகி வருகிறது. நேரடியாகப் பொது வாய்மொழித் தேர்வில் கலந்துகொள்கிற பணியை மட்டும் ஆய்வாளர் மேற்கொள்ளும் அளவிற்கு ஆய்வுப் புலம் சிதைந்து வருகிறது. ‘சிறியன செய்கிலாதார்’ என்னும் சிறுகதையில் “சிலருக்கு இரண்டாம் பேர் அறியாமல் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆய்வே எழுதிக் கொடுத்துள்ளார். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சிக் கொறடாவாக இருக்கும் டாக்டர் ‘பூந்தளிர்’ பொன்னனுக்கு ‘மு.வ.வின் நாடகங்களில் அங்கதச் சுவை’ என்று ஆய்வு எழுதிக் கொடுத்ததும் அவர்தான்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.298)
ஆய்வேட்டை நெறிப்படுத்தும் நெறியாளரும் ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் நெறியாளரும் தங்களுக்குள் செய்துகொள்ளும் மறைமுக உடன்படிக்கை மூலம் தரமற்ற ஆய்வேட்டினையும் மிகவும் தரத்துடன் வந்துள்ளது என்று மதிப்பீடு செய்கின்றனர். ஆய்வு தொடர்பாகச் சிந்திப்பதைக் காட்டிலும் இதற்கென நெறியாளர்கள் அதிகமாகவே சிந்திக்கின்றனர் எனலாம். “வெளிப் பல்கலைக்கழகம் எனும் போது வழக்கமாய் ஒரு காப்பி மலேசியா போகும் அல்லது கொழும்பு போகும். மலேசியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் சுப்பா நாயக்கர், பூரணலிங்கனின் தோழர் மதிப்பீடுகள் அவருக்கே போகும்படி பார்த்துக் கொள்வது பெரிய காரியமல்ல. மற்ற இந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றுக்கு இன்னொரு காப்பி போகும். அங்கெவரும் பூரணலிங்கனாரை அறியாமல் இருக்க முடியாது. ஏதாவது குசும்பு செய்ய நினைத்தால், அவர்களின் மாணாக்கரின் ஆய்வுகள் இவரிடம் வர நேரும்போது சங்கதி சிக்கலாகி விடும் என்று யோசிப்பார்கள். மற்றும் இதை உட்கார்ந்து எவன் பொறுமையுடன் படித்துவிடப் போகிறான்?” (நாஞ்சில் நாடன் கதைகள், பக்.299, 300)
ஆய்வேட்டினை மதிப்பீடு செய்பவர், ஆய்வாளரிடம் இருந்து இயன்றவரை ஆதாயம் பெறுவதில் கருத்துடையவர்களாக உள்ளனர். “சாதாரணமாய் ஆய்வுகள் வரும் போது நியாயமான சில மாதங்கள் கிடப்பில் வைப்பார். ஒரு விடுமுறை நாளில் சம்பந்தப்பட்டவர் பழக்கூடை, பட்டுப்புடவை, டேபிள் ஃபேன், மிக்சி, பிரஷர் குக்கர் என்ற ரீதியில் மரியாதை செய்து விட்டுப் போவார். போகும்போது பூரணலிங்கனின் நாற்பத்தேழு நூற்கள் கொண்ட ஒருசெட் வாங்கியும் போவார். ஆய்வு தேறிவிடும்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.300) என்னும் மேற்கோள் மதிப்பீட்டாளர்கள் பெறும் கையூட்டினை விரிவாகவும் நுட்பமாகவும் விவரிக்கிறது.
கல்வி நிறுவனங்களின் தமிழ்த்துறைகள் வருடம்தோறும் ஏதாவது ஒரு பொருண்மையில் மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கங்களை நடத்துகின்றன. கருத்தரங்கங்கள் வருடம்தோறும் நடத்த வேண்டும் என்ற சடங்கினை நிறைவேற்றுவதற்கு “ஏதோ ஒரு செமினாரில் தமிழுக்குக் களை பிடுங்கியதற்குக் கொடுத்த ரெக்சின் தோள்ப்பை ஒன்று கிடந்தது புதிதாகவே” (கான்சாகிப், ப.121) என்னும் மேற்கோளில் ‘தமிழுக்கு களை பிடுங்கியதற்கு’ என்னும் ‘தொடர்’ பயன்பாடு ‘ஆய்வு’ என்னும் பெயரில் நடக்கும் போலித்தனங்களைச் சாடுகிறது. கல்விப்புலச் செயற்பாடுகள் அனைத்தும் அறத்திலிருந்து பிறழ்ந்து வியாபாரமாகிக் கொண்டிருக்கும் தற்காலக் கல்விச் சூழலை ’கற்கை நன்றே கற்கை நன்றே’ என்னும் கவிதையின் வாயிலாக அங்கதத்துடன் வெளிப்படுத்துகிறார்.
திருத்தப்பட்ட விலைப் பட்டியல்
புத்தாண்டு முதல் அமலாக்கம்
துணைவேந்தர் பத்துக் கோடி
விரிவுரையாளர் அறுபது லட்சம்
ஆசிரியர் முப்பது இலட்சம்
ஆசிரியர் பணியிட மாறுதல் ஐந்து லட்சம்
Ph.D. ஆய்வேடு ஐந்து லட்சம்
M.Phil ஆய்வேடு இரண்டு லட்சம்
M.D/M.S கல்வி அட்மிஷன் இரண்டு கோடி
M.B.B.S. கல்வி அட்மிஷன் அறுபது இலட்சம்
கற்கை நன்றே, கற்கை நன்றே!
தோட்டம் துரவு வீடு விற்றும்
வங்கிக்கடன் கல்விக்கடன் பெற்றும்
நகை நட்டுப் பணயம் வைத்தும்
நயந்தும் நச்சியும் இச்சகம் பேசியும்
நட்பில் உறவில் இருகை ஏந்தியும்
கந்து வட்டிக்குக் கடன் வாங்கியும்
பிச்சை புகினும்
கற்கை நன்றே, கற்கை நன்றே!
(அச்சமேன் மானுடவா, ப.28)
என்னும் கவிதை வரிகள் ஒட்டுமொத்த கல்விப் புலச் சீர்கேட்டினையும் தொகுத்து அங்கதத்துடன் எடுத்துரைக்கிறது.
தரமற்ற முனைவர் பட்ட ஆய்வேட்டினைத் தயாரித்துவிட்டு அவ்வாய்வேட்டுப் பொருண்மையை வைத்து தன் பெயருக்கு அடைமொழி தேடுகிற ஆய்வாளர்கள் பெருகி வருகின்றனர். ‘சிறியன செய்கிலாதார்’ என்னும் சிறுகதையில் “டாக்டர் பட்டத்தோடு ‘சிந்தாமணிச் செல்வர்’ என்ற பட்டத்தையும் இந்த ஆய்வு கொணரும் என்று எதிர்பார்த்ததில் முதலே மோசம் போனது. ‘ஆயிரம் பக்கம் பீராய்ந்த அபூர்வ சிந்தாமணி’ என்று பி.ஏ. மூன்றாமாண்டு வகுப்புக் கரும்பலகையில் எழுதியிருந்தது தன்னைக் குறிக்கவே என்பது அவருக்குத் தோன்றாமற் போகவில்லை” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.301) என்னும் மேற்கோள் முனைவர் பட்டத்துடன் பெறும் அடைமொழி மீதான விருப்பத்தைப் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
கற்றல்
கல்விப்புலத்திலுள்ள கற்றல் செயற்பாடு முழுமையாக மாணவர்களைச் சார்ந்தது. பயிலும் முறை, சிந்தித்தல், மொழி, கவனமின்மை, தேர்வு, கல்விச்செலவு, கல்வி நிறுவனங்களின் தரம், கற்பவர்களின் வறுமை, பயிற்சி வகுப்புகள், வேலையின்மை ஆகியனவற்றை உள்ளீடாகக் கொண்டது கற்றல் செயற்பாடாகும். கவனம் கற்றலில் புரிதலையும் புதிய படைப்பாற்றலையும் உண்டாக்கும் வல்லமை பெற்றது. “குடிசையின் படிப்புரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த முருகப்பன் எட்டாவது வகுப்புப் பாடத்தை வாய்விட்டு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே தட்டில் விழும் காணிக்கையைக் கவனிக்கும் பூசாரி போல, உரத்துச் சொல்லிக்கொண்டு வேறெதையோ கணக்கெடுத்துக் கொண்டிருந்தான்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.69) என்னும் மேற்கோளில் மாணவரின் கவனமின்மையை வெளிப்படுத்தப் படைப்பாளர் பயன்படுத்தும் உவமை மிகப் பொருத்தமானதாகும்.
கல்வியில் கவனமும் சிந்தனையும் ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகும். கவனத்தின் நீட்சியே சிந்தனை எனலாம். பெரும்பாலும் இந்நகர்ச்சி நிகழாமலேயே பயின்றதற்கான சான்றிதழுடன் கல்வி நிறுவனத்தைவிட்டு வெளியேறி விடுகின்றனர். “அந்தரத்தின் மூளைக்கப்பல் எப்போது ஆழ்கடலில் பயணம் செய்யும் எப்போது தரை தட்டி நிற்கும் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் தரைதட்டி நிற்கும் நேரங்களே அதிகம்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.200) என்னும் மேற்கோள் மாணவர்களின் சிந்தனைப் போக்கினைப் பகடியுடன் எடுத்துரைக்கிறது. ‘முரண்டு’ என்னும் சிறுகதையில் இம்மேற்கோள் அமைந்துள்ளது.
ஆசிரியரும் மாணவரும் ஒரு புள்ளியில் மையமிடுவதே கல்வியின் வெற்றியாகும். அம்மையமிடலுக்குக் கவனமும் சிந்தனையும் மிக அவசியம். “நாற்பத்தெட்டு மாணவர்களுக்கும் தமிழ் ஐயாவுக்கும் நாற்பத்தொன்பது வகையான சிந்தனைகள் என வகுப்பு குவிமையம் கொண்டிருந்தது” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.488) என்னும் மேற்கோள் வகுப்பறையில் நிகழும் கவனச் சிதறலைக் குறிப்பிட்டுச் சிந்தனை உருப்பெறாமையையும் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
‘வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்’ என்னும் சிறுகதையில் “’பறித்த வாளியைப் பருவலித் தடக்கையால் பற்றி' என்று வாசித்து நிறுத்தியவர், ‘சரம், பகழி, வாளி எல்லாமே ஒரே பொருள்தான். வாளி என்றால் பொருள் தெரியுமா? குமரேசன் சொல்லு’ என்றார். ‘வாளிண்ணா கிணத்திலேருந்து தண்ணி கோரக்கூடிய சாதனம் ஐயா’ (நாஞ்சில் நாடன் கதைகள், ப.429) என்னும் மேற்கோளில் உள்ள மாணவர்களின் பதில் நகைச்சுவை தருவது போல் அமைந்திருப்பினும் அவர்களின் மொழியறிவின்மையைப் புலப்படுத்துகிறது.
‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் சுடலையாண்டி பாடத்தின் செய்திகளைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறையை
“ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக் கொண்டு..... ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக் கொண்டு...... ம்.... அதை நன்றாகக் கழுவவும்... அதை நன்றாகக் கழுவவும்... ம்ம்....” (என்பிலதனை வெயில் காயும், ப.137) என்னும் மேற்கோள் கல்வியில் மனப்பாடம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைப் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
மாணவர்கள் பயிலும் காலத்தில் கல்வி நிலையங்களை நோக்கி முறையாகச் செல்லாததன் விளைவாகவே பயிற்சி வகுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. பயிலும் காலத்தின் அருமை அறியாதவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற பிறகு வருத்தப்படுகின்றனர். “இதற்கு முன்னாலும் அவன் ஊரிலிருந்து சிலபேர் கல்லூரிக்குப் படிக்கப் போயிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கொல்லா மரக் கவிகையினுள் பொழுது போக்கவும், நகராட்சிப் பூங்காவில் எவருக்கும் தெரியாமல் ‘வாழு வாழவிடு’ படிக்கவுமே நேரமிருந்தது. பாடத்தில் சிரத்தையில்லை” (என்பிலதனை வெயில் காயும், ப.138) என்னும் மேற்கோள் சிரத்தையெடுத்து கல்லூரிக்குச் செல்லாதவர்களைப் பற்றி எள்ளலுடன் எடுத்துரைக்கிறது.
‘எவனொருவனுக்குத் தாய்மொழியில் புலமையில்லையோ, அவனுக்கு மற்ற மொழிகளில் புலமை வராது’ என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்களின் கூற்று இங்கு நினைவு கூறத்தக்கதாகும். ஆங்கிலத்தை மொழியாகப் பார்க்காமல் அறிவாகப் பார்க்கிற போக்கு மக்களிடத்தில் நிலவுகிறது.
“அன்றுடன் சொக்கனின் படிப்பும் வீரமரணம் அடைந்தது. அது மட்டுமல்ல. ‘திஸ் இஸ் எ கேட்... தேட் இஸ் எ ரேட்...’ என்று சொக்கன் பிளந்து கட்டுவதை ‘என்ன எளவு பாசையோ? திஸ் புஸ் தஸ்... தஸ் புஸ் திஸ்ஸீண்ணு... சவத்துக்கு வா தான் வலிக்காதோ?’ என்று அண்டை அயலிடம் ஆத்தா பீத்திக் கொள்வதும் முற்றுப் பெற்றது.” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.47) என்னும் மேற்கோள் ஆங்கிலம் பேசுபவர்களைப் பெருமையாக எண்ணுவதை எள்ளலுடன் விளக்குகிறது.
கற்பித்தல்
கல்விப்புலம் சார்ந்த செயற்பாடுகளில் கற்றலுக்கு இணையானது கற்பித்தல். கற்றல் குறைபாட்டிற்கான தொடக்கம் கற்பித்தலில் தொடங்குகிறது எனலாம். ஆசிரியர் மையக் கற்றலாயினும் மாணவர் மையக் கற்றலாயினும் கற்பித்தல் செயற்பாடு மிகவும் இன்றியமையாதது. இக்கற்பித்தலில் குறைபாடு நேரும்பொழுது கல்விப்புலச் சூழல் சிதைகிறது.
கற்பித்தல் பணி தொழில் சார்ந்த ஒன்று அன்று. சிந்தனை சார்ந்தது. சிந்தனைக்கும் வாசிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாசிப்பினை நிகழ்த்தாமல் சிந்தனை பக்கம் செல்லாமல் ஆசிரியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதன் விளைவாகச் சான்றிதழ் பெறும் எல்லோரும் ஆசிரியர்களாக விரும்புகின்றனர். “முருகப்பன் படிப்பில் பெரிய சாமார்த்தியக்காரன் இல்லை. படித்து பள்ளிக்கூட வாத்தியாராகிவிட வேண்டும் என்பதுதான் அப்பா மகனிடம் அறிவித்த ஆசை” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.70) என்னும் மேற்கோள் ஆசிரியத் தொழிலுக்கு வர நினைக்கும் எண்ணத்தைப் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
ஆசிரியர்களின் உரையாடலில் பணம் குறித்த பேச்சு அதிகமாக உள்ளதால் ஊதியப் போதாமை குறித்த எண்ணம் உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. “சம்பளத்தைப் போல இன்னொரு மடங்கு பயணப்படி, பஞ்சப்படி, ஆய்வுப்படி, அதிநேரப்படி, சோற்றுப்படி, வீட்டுப்படி, வேலையாட்கள் படி, புத்தகங்கள்படி, அப்படி இப்படி எனப் படிகள் பதினெட்டு” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.538) என்னும் மேற்கோளில் ஆசிரியர்கள் பெறும் படியினைப் பட்டியலிட்ட நாஞ்சில் நாடன் அவர்கள் புத்தகங்கள்படி, அப்படி, இப்படி என்ற சொற்களைப் பயன்படுத்தி அங்கதத்தினை வெளிப்படுத்துகிறார்.
“மாணவர்கள் செய்யும் சிறிய பெரிய குற்றங்களையும் தண்டனைகளையும் பட்டியலிட்டால் இந்தியன் பீனல்கோடு அளவுக்குப் போகும். அவற்றுக்குச் சற்றும் குறையாத, ஆனால் வெளியே தெரியாத ஆசிரியக் குற்றங்கள்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.492) என்னும் மேற்கோள் ஆசிரியர்கள் செய்யும் குற்றங்களை மறைமுகமாவும் அங்கதமாகவும் எடுத்துரைக்கிறது.
“தலைமையாசிரியருக்கு ஊருக்குப் போகும் அவசரம். சற்று நேரத்துடன் போனால் நெரிசல் இல்லாமல் வண்டி பிடிக்கலாம். வெள்ளிக்கிழமை என்றால் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். எதற்கும் இருக்கட்டும் என்று அவசர வேலையாக வெளியே போவதற்கான சிறுகுறிப்பு மேசைமேல் இருக்கும். யாராவது அதிரடி சோதனை வந்தால் காட்ட. பயன்படவில்லை என்றால் திங்கட்கிழமை கிழித்துப் போட்டு விடலாம். பெரும்பாலும் விடுப்புகளுக்கும் இதே சூத்திரம்தான். தலைமையாசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏகமனம் இருந்தால் விடுப்பு என்பது ஆதிரை கையின் மாயக்கலம்” (நாஞ்சில் நாடன் கதைகள், பக்.490-491) என்னும் மேற்கோள் ஆசிரியர்கள் அனுமதி பெற்று முன் செல்வதையும், விடுப்பு எடுப்பதை மறைப்பதையும் அங்கதத்துடன் பதிவு செய்கிறது. தலைமையாசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஒத்துப்போனால் எத்தன்மைத்தான இழிகாரியமும் கல்விப் புலத்தில் சாத்தியப்படுகிறது. ‘விடுப்பு என்பது ஆதிரை கையின் மாயக்கலம்’ என்னும் தொடர் இவ்விடத்திற்குப் பொருத்தமான அர்த்தச் செறிவுள்ள தொடர் ஆகும்.
ஆசிரியர்கள் என்றாலே வாசிப்புடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். வாசிப்பிற்குரிய மூலமாகத் திகழ்வது நூலகம் ஆகும். நூலகம் என்பது பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகிற அறிவுசார் மையம் ஆகும். ஆசிரியர்களாக இருப்பவர்கள் மாணவர்களை நடைமுறைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன் தானும் பின்பற்ற வேண்டும். ஆனால் தான் பின்பற்றாமல் மாணவர்களைப் பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருப்பர். நூலகம் செல்லாவிட்டாலும் தன் ஊதியத்தில் ஒரு பங்கை ஒதுக்கி சொந்தமாக நூல் வாங்குகிற பேராசியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒருவேளை சொந்தமாக வாங்கப்பட்டவைகளும் ஆசிரியர்களின் வீட்டுப் புத்தக அலமாரிகளில் அடுக்கப்பட்டிருக்குமேயன்றி படிக்கப்பட்டிருக்காது.
‘பாம்பு’ என்னும் சிறுகதையில் நூலகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் இடையேயான தொடர்பு அங்கதத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். “சமீபத்திய சில பத்தாண்டுகளில் எந்த நவீன இலக்கியமும் பிரித்துப் பார்த்திருக்க மாட்டார் போலும். பின்னட்டைக் குறிப்புகள் கூடப் படித்திருக்க மாட்டார். மேலும் சில பத்தாண்டுகளில் எந்தப் புதிய புத்தகமும் வாங்கி இருக்கவும் மாட்டார். பல புத்தகங்களில் வேறு வேறு கல்லூரிகளின் முத்திரைகள் இருந்தன. அத்தனை கல்லூரிகளிலும் வேலை பார்த்தவரா அல்லது ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்போன போது நவட்டிக் கொண்டு வந்தவையா எனத் தெரியவில்லை. விலைக்கு வாங்கி இருக்க நியாயமில்லை. ஏனெனில் பாடப் புத்தகங்களுக்கு வெளியே அந்த இனத்தவர் பலர் புத்தகங்கள் வாங்குவதில்லை” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.533) என்னும் மேற்கோள் பாடப் புத்தகங்களுடன் மட்டும் பேராசிரியர்கள் தங்கள் வாசிப்புலகத்தைச் சுருக்கிக் கொள்ளும் சூழலையும் பகடியுடன் எடுத்துரைக்கிறது.
வாசிப்புடைய ஆசிரியர்களின் வகுப்பறைகளில்தான் கற்றல் கற்பித்தல் சூழல் இனிமையாக இருக்கும். “தொடர்ந்து வாசிக்காத ஆசிரியர் வகுப்புகளில் உருவாகும் வெற்றிடம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் ‘அரைத்த மாவுப் பேச்சு’ மாணவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கும்” (என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா, ப.44) என்னும் மேற்கோள் வாசிப்பில்லாத ஆசிரியரின் வகுப்பறைச் சூழலைக் காட்சிப்படுத்துகிறது.
“தமிழ் ஐயா யாதொரு சுவாரசியமும் இன்றி பல்லில்லாதவன் பரோட்டா தின்பது போல வாலிவதைப் படலம் நடத்திக் கொண்டிருந்தார்” (நாஞ்சில் நாடன் கதைகள், ப.48) என்னும் மேற்கோள் இங்கு பொருத்தமானதாகும்.
‘நீரிழிவு நோய்’ இன்றைக்கு தேிசய வியாதியாகிவிட்டது. நீரிழிவு நோயைத் தமிழாசிரியர்களுடன் தொடர்புப்படுத்தி நாஞ்சில் நாடன் அங்கதத்தை வெளிக்கொணர்கிறார். “’சாயா போடட்டா? கட்டனா? பாலூத்தியா?’ என்றார் தவசுப்பிள்ளை ஊடறுத்து. ‘பாலுத்தியே போடுங்க... பஞ்சாரை போடண்டாம்’ என்றார் பேராசான். ‘அதுக்குள்ளே நீரிழிவு வந்தாச்சா’ – தவசிப்பிள்ளை. ‘ஏழு வருஷம் ஆச்சு’ – பேராசான். ‘வேலையிலே சேந்ததுமே வந்திற்றோவ்’ – தவசிப்பிள்ளை. ‘வந்திரும்லா? தமிள் சொல்லித் தரப்பட்ட வேலையில்லா?’ என்றார் கும்பமுனி” (தொல்குடி, ப.122)
வேலைக்குப் பணம்
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடம் பெறுவதற்குப் பல இலட்சங்களை லஞ்சமாகத் தர வேண்டியிருக்கிறது. இலட்சங்களைக் கொடுத்துப் பணியிடம் பெற்ற பேராசிரியர்கள் பணத்தை எடுப்பதற்குக் காட்டும் அக்கறையைக் கற்பித்தலுக்குக் காட்டுவதில்லை. காட்டுவதில்லை என்று சொல்வதைவிட காட்ட இயலாது என்பதே எதார்த்தம். ‘பாவலர் தெங்கரை முத்துப்பிள்ளை’ என்னும் சிறுகதையில் பாவலர் தெங்கரை முத்துப்பிள்ளைக்கு இட்டுக் கட்டிப் பாடத்தெரியும். ஆனால் இலக்கணம் எதுவும் தெரியாது. “ஈதெல்லாம் அறியக் கிடைத்திருந்தால் ஏதாவது பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் ஆகி இருப்பாரே! அதற்கும் இன்று மேலது நீங்கலாக அறுபது லட்சம் கைமணி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்” (அம்மை பார்த்திருந்தாள், ப.37) என்னும் மேற்கோளில் பணிவாய்ப்புக்குத் தரும் தொகை அதிர்ச்சியளித்தாலும் கல்விப் புலங்களில் பரவலாக இம்முறை நடைமுறையில் உள்ளதையே ஆசிரியர் தன் படைப்பில் அங்கதத்துடன் சுட்டியுள்ளார். இவ்வாறாக கல்விப் புலத்தில் நிகழக்கூடிய ஏனைய செயல்பாடுகளையும் நாஞ்சில் நாடன் தன் படைப்புகளில் விரிவாய்ப் பேசியுள்ளார்.
- (‘நாஞ்சில் நாடன்’ படைப்புகளில் அங்கதம் என்னும் ஆய்வேட்டில் ‘கல்விப்புலத்தில் அங்கதம்’ என்னும் இயலின் சுருக்கப்பட்ட வடிவம்.)







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

து. பிரபாகரன்
உமர் ஃபாரூக்
கிருஷ்ணமூர்த்தி
எஸ். அற்புதராஜ்
ரமீஸ் பிலாலி
டோனி பிரஸ்லர்
அருண்பாண்டியன் மனோகரன்
சாகுல் ஹமீது
Be the first person to add a comment.