ஈழத் தமிழ் இலக்கியங்கள் போர்ச் சூழலின் அவலங்களையும், அடையாளங்களை இழந்த வாழ்க்கையையும் சுமந்து வருபவை. அதன் கிளைப் பிரிவாக அகதி வாழ்க்கையைப் பேசும் படைப்புகளும் வலிகள் நிரம்பிய பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய போர்ச்சூழலில் அதிகாரத்தால் தாய் நிலத்தைக் கைவிடச் செய்யப்பட்டவர்கள் நினைவுகளில் தங்களுடைய நிலத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கனவுகள் இல்லை; வாழ்தலே இலக்கு. நினைவின் சுமையிலிருந்து காக்கும் ஒவ்வொரு செயலும், வாழ்வியல் செயல்பாடும் ஆசுவாசமாகிறது. பால்யத்தையும் இளமையையும் போர்க் காலங்களில் கழித்ததால் அசைபோட இனிமையான நினைவுகளற்று கழியும் வாழ்க்கை. அவர்களுக்குப் பண்பாட்டு வேர்களும் அழிந்துவிடுகின்றன. அகதியாகச் செல்லும் நிலத்தில் இருக்கும் பண்பாட்டோடு இணங்குவது மட்டுமே அவர்களுக்கான ஒரே வாய்ப்பாக அமைகிறது. தாய் நிலத்திற்குத் திரும்பும் பாதை கனவுகளின் தடத்தில் முளைக்கின்றன. சுய அடையாளம் குறித்த அச்சம் அவர்களின் நிழல்போல் துணை வருகிறது. இந்த அச்சத்தை யார் விதைத்தது? போர் எனில் சிறுவர்களுக்கு அவ்வகையான அச்சம் எங்கிருந்து விதைக்கப்படுகிறது? போரின் நிலத்தில் அதிகாரம் விதைக்கும் அச்சம் பண்பாட்டின் கூறாகிறது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. வேறு வேறு பருவங்களில் இந்த அச்சங்களின் பிரதிபலிப்பை சிறுகதையாக எழுதியிருப்பவர் தொ. பத்தினாதன். அவருடைய “நாளையும் நாளையே” சிறுகதைத் தொகுப்பு இவ்வகைமையிலான பத்து சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.
அச்சத்திற்கு எதிரான ஆசுவாசமாக நம்பிக்கையே அமைகிறது. அதுவும் கைவிடப்படும்போது அச்சம் ஆழமாக வேரூன்றுகிறது. தொகுப்பின் முதல் சிறுகதை “பயம்”. இருட்டைக் கண்டு அஞ்சும் சிறுவன். அவனுடைய அக்கா தன் வயதிற்கே உரிய ரகசியங்களைச் சொல்லாமல் காக்கிறாள். சில மிட்டாய்களை லஞ்சமாகக் கொடுத்து தம்பியைச் சமாளிக்கிறாள். தனிமையில் விடப்படுவதும் இருட்டில் இருப்பதும் குளத்தில் குளிப்பதும் அவனுக்குப் பயம் தரக்கூடிய விஷயங்களாகின்றன. அவனுடைய பயத்தை அக்காவும் அம்மாவும் எள்ளி நகையாடுகிறார்கள். பொருட்படுத்தத்தக்க விஷயங்களாகக் கருதாமல் கடந்து செல்கிறார்கள். பகுத்தறிவின் நிழல் அண்டாத வயதில் பயத்திற்குத் தீர்வாகச் சொற்களின் வழியே கிடைக்கும் துணையே ஆசுவாசமாகிறது. அவை இரண்டும் எட்டாத பட்சத்தில் அவர்களின் மீதிருக்கும் பற்றைக் கைவிடுகிறான். இந்தக் கைவிடுதல் எனும் அம்சம் கதையில் கையாளப்பட்டிருக்கும் இடங்கள் வசீகரமாகவும், இறுக்கமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன.
பால்யத்தைக் கடந்து இளமைப் பருவத்தில் பிறரிடமிருந்தான நம்பிக்கைகளை மனிதர்கள் எதிர்பார்ப்பதில்லை. தொகுப்பின் அனைத்து கதைகளும் ஒரே மனிதனின் வேறு வேறு பருவங்கள் என்று எண்ணக்கூடிய வகையில் கதைகளும் அதன் மையங்களும் அமையப் பெற்றிருக்கின்றன. “அகதி” சிறுகதையில் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஐந்து நட்சத்திர உணவகத்தில் ஊழியனாகப் பணிபுரிகிறான். அவனுடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் எல்லாம் அச்சம் சூல் கொள்கிறது. ஓரிடத்தில் மதுரை என்கிறான். கேட்கும் சக ஊழியனும் மதுரை என்பதால் பேச்சில் இணக்கமாகின்றனர். சகஜமாக உரையாடத் தொடங்குகின்றனர். ஆனால் இரண்டு மதுரைகளும் ஒன்றல்ல என்பதை அவரவரின் உடல்மொழி குறித்த விவரணைகள் பேசுகின்றன.
தொகுப்பில் தமிழ்நாட்டின் நிறைய இடங்களும், அவற்றிலிருந்த அகதி முகாம்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் வாழ்க்கை முறைகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. “அ(க)திகாரம்” சிறுகதையில் அரசு அகதிகளுக்காகக் கொடுக்கும் பணத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் இழிவைச் சொல்கிறார்கள். அந்தப் பணம் எப்போது கொடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. அதிகாரத்தில் இருப்பவர்களின் அன்றாட வசதிக்கேற்ப அவை வழங்கப்படும். ஆனால் கொடுக்கப்படும் தினத்தில் அகதிகளும் அவர்தம் குடும்பங்களும் நேரில் இருக்க வேண்டும். வெளியூருக்குப் பணி நிமித்தமாகச் செல்லக்கூடாது. வெளியூர் செல்லக்கூடாது. ஜனாதிபதியின் வருகையின்போது அனைவரும் முகாமுக்குள்ளேயே இருக்க வேண்டும் போன்ற தகவல்கள் அவர்களின் சுதந்திரப் பறிப்பாகப் பதிவாகின்றன. அனைத்திலும் தென்படும் அதிகாரத்தின் முரட்டு ஆணவம் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. இந்த அதிகாரம் வெறும் வாழ்வின் பெரும் சிக்கல்களில் மட்டும் நிகழ்வதில்லை. “புடலங்காய்” என்னும் சிறுகதையில் விதையிடாமல் ஒரு புடலங்காய்க் கொடி அகதி முகாமில் முளைக்கிறது. நீர் ஊற்றவில்லை, ஆனால் காய்க்கவும் செய்கிறது. புடலங்காயினால் பாம்புகள் வருகின்றன. பாம்பின் வருகைக்கு அகதி முகாமில் இருக்கும் புடலங்காய் மட்டுமே காரணமாகச் சுட்டப்படுகிறது. அரசு பாம்பிடமிருந்து மக்களைக் காப்பாற்றாமல் அகதி முகாமில் வளர்க்கப்படும் புடலங்காயைப் பிடுங்கி எரியத் திட்டமிடுகின்றனர். கதையின் முடிவு அதிகாரத்தின் மீதான பகடியாக முடிவடைகிறது. அவை வெறும் பகடியன்று. போரின் அகதிகளாக்கப்பட்டவர்கள் தமிழர்கள். வந்து வாழ நேர்ந்திருப்பது தமிழ்நாட்டில். இருப்பினும் இதுபோன்ற அதிகாரத்தின் சிறுமைத்தனத்தில் அகதியின் அடையாளத்தை அவ்வாழ்க்கை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. அவர்களை அகதி என்னும் சொல்லுடன் நினைவளவிலும் ஒட்டவிடாத வாழ்க்கையே அவர்களுக்குத் தேவையாகிறது. அதிகாரத்தின் ஆட்டத்தில் தாய் நிலத்தின் மீதான ஏக்கமும், போர் கொடுத்த வடுக்களும் அவர்களின் அன்றாடத்துடனேயே தங்கிவிடுகின்றன.
அந்த அன்றாடத்தின் விவரணைகளும் முகம் சுழிக்க வைக்கின்றன. “பத்துக்கு பத்து” என்னும் சிறுகதை, அகதி முகாமில் அளிக்கப்படும் இடத்தின் விவரணைகளாக நீள்கிறது. வீடு பாதுகாப்பின் அடையாளம். காதலுக்கான, தம்பதிகளின் தனித்த உரையாடலுக்கான, குடும்பத்தின் விழுமியத்திற்கான அமைப்பாக வீடே அமைகிறது. அவை சுருங்கச் சுருங்க அல்லது முறையாக அமையாத பட்சத்தில் குடும்பம் என்னும் அமைப்பு உடைபடுகிறது. இந்த உடைபடுதலின் ஒரு பங்காக குடும்ப அமைப்பினர்களின் கைவிடப்படுதல் நிகழ்கிறது. குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தும், தம்பதிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவரும் கைவிடப்படுதலுக்குக் கண்ணியாகின்றனர். விவரணைகளின் வழியாகவே இதன் ஆழத்தை எட்டியிருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம்.
தொகுப்பில் விவரணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அகதி வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களைப் பேசும் கதைகள் அதற்கு நிகராக அக்கதாபாத்திரத்தின் பணிச் சூழலையும் விவரிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக நட்சத்திர உணவு விடுதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய அவசரங்கள், பணிச்சூழல்கள் ஆகியன மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் நம்பிக்கையின் அடிப்படையில் தாய் நிலத்திற்குத் திரும்பலாம் என்னும் ஏக்கத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் ஏமாற்று வேலைகளும் விரிவாகவே சிலகதைகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
“நோஞ்சான் பயல்” என்னும் சிறுகதை இம்மதிப்புரையில் கூறப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே சிறப்பாக அமையப்பெற்றிருக்கும் ஒரு கதை. விருந்தினர்களிடம் ஓரங்க நாடகத்தை நாயகன் நிகழ்த்திக் காட்டுகிறான். நினைவிலிருந்து போரின் சூழலை நாடகமாக்குகிறான். ஆசுவாசத்திற்காக கடலுக்குச் செல்லும் மனிதர்களின் முன், போரின் அச்சம் நிரம்பியக் கண்களுடன் பார்க்கும் கடலை விவரிக்கிறான். தமிழ் நிலத்திலிருந்து போரை அணுகும் சூழலின் படிமமாகக் கதையில் அவை விரிவடைகின்றன. அவனுடைய பால்ய மகிழ்ச்சிகளும் அவற்றைக் கபளீகரம் செய்த அதிகாரத்தின் அச்ச முகங்களையும் விவரிக்கிறான். அவை ஒற்றை முகமாக அவனுடைய வாழ்க்கையில் தேக்கம் கொள்ளவில்லை. மாறாக எல்லோர் முகத்திலும் அந்த அதிகாரத்தின் ரேகையை இனம் காண்கிறான். அப்படிக் காணுந்தோறும் அச்சம் கொள்கிறான். கதையை முடிக்கும் விதம், நம்மை ஆட்டுவிக்கும் அதிகாரம் எது என்னும் கேள்வியை விதைத்துச் செல்கிறது.
சிறுகதைகளில் கையாளப்படும் உவமைகளிலும்கூட இந்தக் கையறு நிலையை, அச்சத்தை, அதிகாரத்தின் தோரணையைத் தத்துவமாக மாற்றும் தன்மை சிறப்பாக வெளிப்படுகிறது. ஓரிடத்தில் தாய்ப்பாலுக்காக அழும் குழந்தையிடம் தாயின் அதிகாரம் வெல்கிறது. அவளுடைய அதிகாரத்தால் குழந்தை தாயிடம் வருகிறது என்கிறார். அடுத்த வரியில் குழந்தை வராதபோது தாய்ப்பால் கட்டிவிடுகிறது. அங்கே குழந்தையின் அதிகாரம் வெல்கிறது. தாய் குழந்தையைத் தேடி வருகிறாள். அதிகாரத்தைத் தேடிப் படையெடுக்கும் வாழ்க்கையின் குறுக்குவெட்டு தோற்றமாகவும், அப்படையெடுப்புகளால் அகதிகளாக்கப்படும் மனித வாழ்க்கையின் மீதான பார்வையாகவும் அமைகின்றன இக்கதைகள்.
*****
நாளையும் நாளையே, தொ. பத்தினாதன், சிறுகதைகள், காலச்சுவடு, முதல் பதிப்பு 2025.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கிருஷ்ணமூர்த்தி
உமர் ஃபாரூக்
து. பிரபாகரன்
ரமீஸ் பிலாலி
Be the first person to add a comment.