கட்டுரை ஸுஃபித்துவம்

ஸூஃபி இசை

ரமீஸ் பிலாலி
30 Apr 2026
0

இதயத்தில் இருந்து எழும் சொற்கள்
பேராற்றல் உள்ளவை;

அவற்றுக்குச் சிறகுகள் இல்லைதான்,
ஆனால், பறக்க வல்லவை!

என்றார் மகாகவி இக்பால்.  

‘இறைவனிடம் மனிதன் முறையீடு செய்கிறான்; அதற்கு இறைவன் பதில் கூறுகிறான்’ என்னும் கட்டமைப்பில் அவர் எழுதிய ‘ஷிக்வா வ ஜவாபே ஷிக்வா’ என்னும் கவிதை நூலில் இறைவன் மனிதனுக்குச் சொல்லும் பதில் இந்த வரிகளுடன் தொடங்குகிறது.

மனிதனின் இந்த முறையீட்டுக்கு இறைவன் விடை சொல்வதாக நீளும் அந்தக் கவிதையில், இசை குறித்து இப்படி ஒரு கருத்து இடம்பெறுகிறது:

 "உன் சங்கீதம் என்ற 
ஸ்வரச் சிறகு!

ஓ! என்னையே தொடும்
சிறகல்லவா அது!"

இசை மிகவும் ஆற்றல் மிக்கது என்பதை இது காட்டுகிறது. என்னதான் ஒரு கவிதையில் ஆழமான கருத்துகள் இருந்தாலும் பொருத்தமான இசையுடன் அது இணையும்போது உள்ளத்தில் அது மிகுந்த உணர்வெழுச்சியை உண்டாக்கிவிடுகிறது. எனவேதான், உலகம் எங்கும் தோன்றிய ஆன்மிக நெறிகள் அனைத்திலும் இசை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மனிதனின் உள்ளத்தில் எழும் எல்லா வகையான உணர்வுகளுடனும் தொடர்புறும் தன்மை இசைக்கு உண்டு. எனவே, மனிதனில் தோன்றும் உயர்வான நல்ல உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவனில் தோன்றும் கீழான தீய உணர்வுகளுடனும் இசை தொடர்புகொள்கிறது. இசையின் தன்மை, அதனைக் கேட்கும் நபர் ஆகியவற்றின் அடிப்படையில் அது ஒருவரில் நல்ல உணர்வையோ தீய உணர்வையோ தூண்டிவிடக் கூடும். 

இஸ்லாம் இந்த அவனியில் இறுதி இறைத்தூதராம் நபிகள் நாயகத்தின் வழியாக இறைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது கலை வடிவங்களின் மீது கண்டிப்பான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. சிலை வணக்கத்தைக் கிஞ்சிற்றும் அனுமதிக்காத நிலையில் அது சிற்பக் கலையை அறவே மறுத்தது. ஓவியக் கலையில் நிழலுருவங்கள், தாவரங்கள், நிலக்காட்சிகள் ஆகியவற்றை வரைவது மட்டும் அனுமதிக்கப்பட்டது. எனவே, எழுத்துகளையே சித்திரம்போல் அழகுபடுத்தி எழுதுகின்ற கவினெழுத்துக் கலை (calligraphy) அதில் பரிணமித்து வந்தது. [பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் நெகிழ்வுற்றன என்பது வேறு.] 

சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளின் மீது காட்டிய அளவுக்கு இசை மீது இஸ்லாம் மறுப்பைக் காட்டவில்லை என்று கூறலாம். எனினும், இசையை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பதில் அது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. நபிகள் நாயகம் இப்புவியில் உதித்த காலத்தில் இருந்த அறபியரிடம் இசை என்பது மட்டற்ற புலனின்ப நுகர்ச்சிக்காகக் கையாளப்படும் ஒரு கருவியாகவே இருந்தது. எனவே, ‘இசைக் கருவிகளை உடைப்பதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) சொன்னார்கள். அதாவது, மனிதனை விலங்கைவிடவும் இழிவுறச் செய்யும் இசைகளை ஒழிப்பது அவர்களின் இறைத் தூதுத்துவப் பணியில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இப்போதும் அதுதான் நியதி.

எனினும், ஒட்டக ஓட்டிகள் பயணக் களைப்புத் தெரியாமல் உற்சாகமாகச் செல்வதற்காகப் பாடுவது; பெருநாள் கொண்டாட்டங்களின்போது குழலும் கொட்டும் இசைப்பது; தம் தலைவரை வரவேற்க தஃப் என்னும் தாளக்கருவி இசைத்தபடி கவிதை பாடுவது; திருமண நிகழ்வுகளில் பாடகியர் கஸல் என்னும் மெல்லிசைப் பாடல்களைப் பாடுவது ஆகியவற்றை நபிகள் நாயகம் அனுமதித்தார்கள். 

பழங்காலத்தில் கவிதை படித்தல் என்றாலே அதன் வரிகளை ராகத்தோடு பாடுவதைத்தான் குறிக்கும். எனினும், பள்ளிவாசலில் கவிதை படிக்கத் தன் தோழர்களுக்கு நபி (ஸல்) அனுமதி அளித்தபோது இசைக் கருவிகள் இல்லாமல் வெறுமனே குரலெடுத்துப் பாடுவதைத்தான் அனுமதித்தார்கள். அதுதான் குர்ஆன் ஓதுதலுக்கு நெருங்கிய இசை வடிவமாகும். ஏனெனில், குர்ஆன் என்பது ஓதப்படுவதாகும். அது பாடப்படும் ஒன்றன்று. அதற்கு இசைக் கருவிகளின் பயன்பாடும் கூடாது.

ஸூஃபி இசையின் தொடக்கம்

மஸ்ஜிதுக்கு வெளியே, வேறு இடங்களில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. எனவே இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதும், காதலரின் (அஹ்லே இஷ்க்) ராகங்களைப் பாடுவதும் இசைப் பாடல்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகிறது. இந்த அடிப்படையில் இருந்துதான் ஸூஃபி இசையின் உருவாக்கத்தையும் படிமலர்ச்சியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே ஸூஃபி இசை காலந்தோறும் எப்படிப் பரிணமித்து வந்தது என்னும் வரலாற்றை விரிவாக எழுதுவது நோக்கமன்று. சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாம் எங்கெல்லாம் பரவியதோ அந்தந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாடு சார்ந்த இசை வடிவங்களை ஸூஃபிகள் வரித்துக்கொண்டு அவற்றில் தம் ஆன்மிகக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். எனவே, உலகெங்கும் ஸூஃபி இசை வடிவங்கள் வேறுபடுகின்றன. அதற்கான சில உதாரணங்கள் உரைக்கிறேன்.

ஐரோப்பியக் கண்டத்தில் ஸ்பெய்ன் நாட்டில் எண்ணூறு ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நடந்தது. அங்கு ஸூஃபித்துவமும் இருந்தது. ‘மாபெரும் குருநாதர்’ (ஷைஃகுல் அக்பர்) என்றழைக்கப்படும் முஹய்யுத்தீன் இப்னு அறபீ (ரஹ்) அங்கேதான் பிறந்து வளர்ந்தார். அதேபோல் வட ஆப்ரிக்க நாடுகளான மொரொக்கோ, அல்ஜீரியா, லிபியா, எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் பல்வேறு ஸூஃபிக் குழுக்கள் உள்ளனர். அறபகம், யமன், சிரியா, லெபனான், திமிஷ்க் என்னும் டமஸ்கஸ் முதலிய நாடுகளிலும் ஸூஃபிக் குழுக்கள் உள்ளனர். ஃபார்சி மொழி பேசப்படும் ஈரான், இராக், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், ஏனைய மொழிகள் பேசப்படும் கஸகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் முதலிய நாடுகளிலும் பல்வேறு ஸூஃபிக் குழுக்கள் உள்ளன. துருக்கியில் மவ்லானா ரூமியின் மவ்லவிய்யா நெறி கீர்த்தி பெற்றுள்ளது. அந்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சியை நடத்திய உஸ்மானியர்கள் நக்‌ஷ்பந்திய்யா என்னும் ஸூஃபி நெறியைச் சேர்ந்தோராவர். இந்தியாவில் காதிரிய்யா, சிஷ்திய்யா, ஷாதுலிய்யா, நக்‌ஷபந்திய்யா ஆகிய நெறிகள் ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டவையாக உள்ளன. இந்த ஸூஃபிப் பள்ளிகளில் கையாளப்படும் ஸூஃபி இசை வடிவங்கள் யாவும் அந்தந்த மண்ணுக்குரிய மரபுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

இன்று ஸூஃபி இசை என்றதும் மவ்லானா ரூமியே முன்னிறுத்தப்படுவதைப் பார்க்கிறோம். அவர்தான் கவிதை வரிகளுடன் இல்லாத தூய இசையை (அல்லது மொழியற்ற இசையை) முதன்மைப்படுத்திக் கையாண்டார். அத்துடன் ரக்ஸ் என்னும் சுழற்சியையும் தன் நெறிக்கான தியான வடிவமாக அமைத்தார்.

மவ்லானா ரூமி (ரஹ்) அவர்கள் தன் தியானத்திற்கான தூய இசைக்கு புல்லாங்குழலைத் தேர்ந்தெடுத்தார். அந்த நாணல் குழல், அல்லது மூங்கில் குழல் ஃபார்சி மொழியில் ‘நை’ என்று அழைக்கப்படுகிறது. அது காதலால் நையும் மனித ஆன்மாவுக்குக் குறியீடாக உள்ளது! அவரின் மாபெரும் ஆன்மிகக் காவியமான ‘மஸ்னவி ஷரீஃப்’ இப்படி ஆரம்பிக்கிறது:

“புல்லாங்குழல் என்ன கதை சொல்கிறது, சற்றே கேள்;
பிரிவுத் துயரில் அது புலம்புவதைச் சற்றே கேள்.”

இங்கே புல்லாங்குழல் என்பது ஸூஃபிக்கு ஒரு குறியீடு ஆகிறது. புல்லாங்குழல் உள்ளீடு இன்றி வெறுமையாக உள்ளது. ஸூஃபி தன் ஆணவத்தை இழந்து, தான் ஒன்றுமில்லை என்னும் உணர்வில் — இறைவனில் தன்னை அழித்துக்கொண்ட ஃபனா என்னும் நிலையில் — இருக்கிறார். புல்லாங்குழலில் சூட்டுக் கோலால் இடப்பட்ட துளைகள் என்னும் காயங்கள் உள்ளன. ஸூஃபி இறைக்காதல் என்னும் தீயால் சுடப்பட்டுள்ளார். புல்லாங்குழல் தானாக இசைக்காது. அதை ஒரு கலைஞன் தன் வாயுடன் பொருத்தி அதனுள் ஊதி இசைக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து இசை வெளிப்படும். ஸூஃபி பெரிதும் மௌனமாக இருக்கிறார். இறைவனைக் கொண்டே பேசுகிறார். 

இந்தக் கண்ணியின் முதல் வார்த்தை “பிஷ்னூ” (கேள்) என்றுள்ளது. ஸூஃபி இசை நிகழ்வுக்கு அறபி மொழியில் ‘சமாஃ’ என்று பெயர் இடப்பட்டுள்ளது. அதன் பொருள் ‘கேட்பது’ என்பதே. 

ரூமி கையாளும் ‘புல்லாங்குழல்’ என்னும் இந்தக் குறியீட்டை மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் கையாண்டுள்ளார். அவரின் புகழ்பெற்ற கீதாஞ்சலி நூலின் ஏழாவது பாடல்:

என் கவி தன் அணிகளைக் களைந்துவிட்டாள்.
ஆடையிலும் அலங்காரத்திலும் அவளுக்குக் கர்வமில்லை.
அணிகலன்கள் நம் இணைவுக்கு இடையூறு செய்யும்.
அவை உனக்கும் எனக்கும் இடையில் வந்து தடையாகும்.
அவற்றின் கலகலப்பு உன் கிசுகிசுப்பை மூழ்கடித்துவிடும்.
நின் பார்வையின் முன் என் கவியின் கர்வம் வெட்கிச் சாகிறது.
என் ராஜ கவியே! நான் உன் காலடியில் அமர்ந்துவிட்டேன்.
நின் இசையால் நிரம்பி இருக்க
ஒரு நாணல் குழலைப் போல் என் வாழ்வை
எளிமையும் நேர்மையும் ஆகவிடு”

ஸூஃபி இசை உலகில் இந்தத் தூய இசை அல்லது கவிதை வரிகள் இல்லாத முழு இசை மட்டுமே கேட்பது என்பது மவ்லானா ரூமியின் ஆன்மிக வழியில் மட்டுமே உள்ள பயிற்சியாகும். அது மிகவும் சொற்பமான மனிதர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பான்மை ஸூஃபிக் கூ(ட்)டங்களில் இத்தகைய இசை கிடையாது. ஆனால், இசைக் கருவி இல்லாமல் வெறும் குரல் கொண்டு ஆன்மிகப் பாடல்களைப் பாடுவதே பெரும்பாலும் ஸூஃபிகளின் தியானக் கூடங்களில் நிகழ்த்தப்படுகிறது. அதிகம் போனால் தஃப் என்னும் ஒரு தாளக் கருவியை மட்டும் பயன்படுத்துகின்றனர். அதைத்தான் உலகெங்கும் உள்ள ஃபக்கீர்கள் வாசிக்கின்றனர், தமிழ் நாட்டு ஃபக்கீர்கள் உட்பட.

கவ்வாலியும் அதன் கட்டமைப்பும்

உலகெங்கும் பரவலாக அறியப்பட்டிருக்கும் இன்னொரு ஸூஃபி இசை வடிவம் உள்ளது. அதுதான் ‘கவ்வாலி’. அந்த இசை வடிவம் இந்தியாவில் தோன்றியது. இந்தியச் செவ்வியல் இசை என்பது உன்னதமான பரிணாமத்தை எட்டியிருந்தது. இசை என்பது பக்தியுணர்வுக்கு உரியது என்று அது பன்னெடுங் காலம் முன்பே கண்டிருந்தது. எனவே, இந்தியாவில் ஸூஃபி நெறிகள் பரவியபோது, ஆன்மிகத்திற்கு அதனை ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதை ஸூஃபிகள் உணர்ந்தனர். இங்கே பக்தி நெறியில் பாடப்பட்ட இசை வடிவமான பஜனை என்பதை ஒத்ததாக உருவாக்கப்பட்ட இசை வடிவமே ‘கவ்வாலி’. இதனைச் செம்மை செய்து இன்றுள்ள வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் என்று ஹஸரத் அமீர் ஃகுஸ்ரோ (ரஹ்) (பொ.ஆ 1253 – 1325) சுட்டப்படுகிறார். இவர் தில்லியில் வாழ்ந்தார். ஹஸரத் நிஸாமுத்தீன் அவ்லியா (ரஹ்) என்னும் மாபெரும் ஸூஃபி குருவின் சிறப்பான நேசத்தைப் பெற்ற சீடராக இருந்தார். இவர் ‘தோத்தாயே ஹிந்த்’ (இந்தியாவின் கிளி) என்று அழைக்கப்பட்டார். ஃபார்சி, ஹிந்தவி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இந்திய நாட்டுப்புற வடிவங்கள் சார்ந்தும்; அறபி, ஃபார்சி மரபின் கஸல் வடிவம் சார்ந்தும் பாடல்கள் புனையும் திறன் மிக்க கவிஞராக இருந்த இவர் ‘கவ்வாலியின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். தப்லா என்னும் இசைக் கருவியை இன்றுள்ள வடிவத்திற்குப் பரிணமிக்கச் செய்தவர் இவர்தான் எனப்படுகிறது.

கவ்வாலி இசை வடிவத்தில் பிரதானமாக இருப்பவை மூன்றே அம்சங்கள்தாம். ஒன்று, கவ்வாலிக்குரிய பாடல் வரிகளைப் பாடும் பாடகர். இவருக்குக் ‘கவ்வால்’ என்று பெயர். இரண்டாவது, கைத் தட்டும் ஓசை. இதனை முதன்மைப் பாடகருடன் இணைந்து பாடும் துணைப் பாடகர்கள் செய்கின்றனர். மூன்றாவது, ‘தப்லா’ என்னும் தாளக் கருவி. [‘டோலக்’ என்னும் கருவியும் பயன்படுத்தப் படுவதுண்டு.] பின்னாளில், இவற்றுடன் ஹார்மோனியம் என்னும் இசைக் கருவியும் இணைக்கப்பட்டது.

கவ்வாலியில் பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் ஸூஃபி ஞானியரால் அல்லது அவர்தம் ஸூஃபி நெறியைச் சேர்ந்த சீடர்களால் எழுதப்பட்டவையாக இருக்கும். இங்கே, குர்ஆன் பற்றி முன்பு நாம் பார்த்த திருவசனம் ஒன்றை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்: “இது ஒரு கவிஞனின் பேச்சன்று” (“வ மா ஹுவ பி கவ்லி ஷாஇர்” — 69:41). இதில் உள்ள ‘கவ்ல்’ என்னும் அறபிச் சொல்லுக்குப் ‘பேச்சு’ என்று பொருள். இந்தக் கவ்ல் என்னும் சொல்லில் இருந்தே கவ்வாலி என்னும் சொல் வந்துள்ளது. எனவே, கவ்வாலி என்பது இறை ஞானியரின் ஆன்மிகப் பேச்சுகளை இசை வடிவத்தில் வெளிப்படுத்துவதாகிறது. அதனால் இந்த இசை வடிவத்துக்கு “ஆரிஃபானா கலாம்” (மெய்ஞ்ஞானியரின் உரை) என்றொரு பெயரும் உள்ளது.

கவ்வாலியின் வடிவம், உள்ளடக்கம் குறித்து இங்கே சில அடிப்படைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கவ்வாலி என்னும் இசை வடிவம் கையாளும் கவிதை பெரும்பாலும் அறபி, ஃபார்சி, உருது ஆகிய மொழிகளில் அமைந்த கஸல், கஸீதா, மஸ்னவி ஆகிய வகைமைகளே ஆகும். இவை மூன்றுமே கண்ணிகளால் அமைந்தவைதாம். கஸல், கஸீதா ஆகியவை முதல் கண்ணியின் இரண்டு அடிகளில் உள்ள ஈற்றுச் சீர்களும், அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த கண்ணிகளின் இரண்டாம் அடியில் உள்ள ஈற்றுச் சீர்களும் இயைந்து ஒலிக்கும்படி எழுதப்படுபவை. அதாவது, AA-BA-CA-DA-EA… என்னும் கட்டமைப்பில் அமைபவை. கஸலும் கஸீதாவும் அளவால் வேறுபடுபவை. இலக்கண வரம்பு நோக்கில் ஐந்து முதல் பதினைந்து கண்ணிகள் உள்ளது கஸல் என்றும், பதினைந்துக்கு மேற்பட்ட கண்ணிகள் கொண்டவை கஸீதா என்றும் சொல்லப்படுகின்றன. எனினும், பொருண்மை அடிப்படையில் நோக்கும்போது கஸல் என்பது பெரிதும் தன்னிலைப் பாடலாகவும், கண்ணிகளுக்கு இடையில் பொருட்தொடர்பு இல்லாமல் பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகவும் அமையும் ஆனால், கஸீதா என்பது பொருட் தொடர்புகொண்ட கண்ணிகளால் ஆன தொடர் நிலைச் செய்யுள் ஆகும். இனி, மஸ்னவி என்பது ஒவ்வொரு கண்ணியிலும் அதற்கே உரிய ஈற்றுச் சீர்களின் இயைபு கொண்டு அமைவதாகும். அதாவது, AA-BB-CC-DD-EE… என்னும் கட்டமைப்பில் அமைவதாகும். 

மேற்சொன்ன மூன்று கவிதை வடிவங்களே அன்றி அரிதாக வேறு வடிவக் கவிதைகளும் கவ்வாலியில் பாடப்படுவதுண்டு. உதாரணமாக, மகாகவி இக்பால் இயற்றிய ‘ஷிக்வா வ ஜவாபே ஷிக்வா’ (முறையீடும் மறுமொழியும்) என்னும் நெடுங்கவிதை ஐந்து கண்ணிகள் கொண்ட பத்திகளால் ஆனது. அதுவும் கவ்வாலிக் கலைஞர்களால் பாடப்பட்டுள்ளது. 

பொருண்மை அடிப்படையில் கவ்வாலியை வகைப்படுத்துவதுதான் மரபு. அந்த அடிப்படையில் பின்வரும் நான்கு வகையில் கவ்வாலி அமைகிறது:

  1. ஹம்து — இது இறைப் புகழ்ச்சியாகவும் இறையியல் விளக்கமாகவும் அமையும் பாடல்களைக் குறிக்கும். [‘அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்’ என்பது குர்ஆனின் முதல் அத்தியாயமான ஃபாத்திஹா என்பதன் முதல் திருவசனம் என்பது கவனிக்கத்தக்கது. இதன் பொருள் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே; அவன் அகிலங்கள் அனைத்தின் ரட்சகன்’ என்பதாகும். எனவே இந்த வகையான பாடல்களைப் பாடியே கவ்வாலி நிகழ்வுகள் தொடங்குவது ஒரு மரபு.]
  2. நஅத் — இது நபிகள் நாயகத்தைப் புகழ்ந்தும் வருணித்தும் அவர்களின் அகமியத்தை விளக்கியும் பாடப்படும் பாடல் ஆகும்.
  3. மன்கபத் — இது அவ்லியா என்னும் இறைநேசர்களை / இறைஞானியரைப் புகழ்ந்து பாடப்படும் பாடல் ஆகும். இது பொதுவாக ஒவ்வொரு ஸூஃபிக் குழுவின் குருமார்களைப் புகழ்ந்து பாடுவதாக அமையும். குறிப்பாக, நபிகள் நாயகத்தின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவரும் மருமகனும் ஆன ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் மீது இது பாடப்படுகிறது.
  4. குறியீட்டுப் பாடல்கள் — இவ்வகைப் பாடல்கள் ‘இஷ்க்’ என்னும் இறைக்காதல் பற்றிய பாடல்களாக அமையும். இதன் வரிகள் இறைவனின் பெயரை நேரடியாகச் சுட்டாமல் காதலன் தன் காதலியைப் பற்றிப் பாடுவது போன்ற நாயக-நாயகி பாவனையில் அமைந்து குறியீடாக ஆன்மிகப் பொருள் தரும்.

மேற்சொன்ன வகைமைகளில் அமையும் கவ்வாலிகளில் ஆரம்பமாக கவ்ல், கல்பனா ஆகிய சிறு வடிவப் பாடல்களும் இடம்பெறுவது உண்டு. இவை ஹஸ்ரத் அமீர் ஃகுஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். கவ்ல் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் ஏதேனும் ஒரு வாசகத்தைக் கொண்டு அமையும். கல்பனா என்பது ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்களைப் பற்றிய பாடலாக அமையும்.

கவ்வாலி பாடுபவர் பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசை மரபின் ராகங்களைக் கொண்டு உருவாக்கப்படும் மெட்டுகளிலேயே பாடுகிறார். எனினும், கவ்ல் என்னும் பேச்சுக்கும் அதில் இடம் உண்டு. இடையிடையே பேசியபடியும் அவர் பாடுகிறார். எனவே, கவ்வாலி என்பது ‘உரை இடையிட்ட பாட்டு’ ஆகிறது. சில நேரங்களில் கவ்வாலி பாடுபவர் வெறுமனே கூவிக் கத்துவது போன்ற பாவனையும் உண்டாகிறது. அது உணர்ச்சி மேலீட்டால் ஏற்படுவதாக இருக்கும். அதற்கும் கவ்வாலியில் அனுமதி இருக்கிறது. இந்த நிலைகள் பாடுவோரிடம் மட்டுமல்லாது கேட்போரிடமும் உண்டாகலாம். 

உண்மையான ஸூஃபி இசை என்பது ஸூஃபி பயிற்சிக் குழுக்களான தரீக்காக்களின் தியானக் கூடங்களான ஃகான்காஹ் அல்லது தைக்கா என்னும் இடங்களில் மிகக் கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஒன்றுதான். அது பொது மக்கள் காணும்படி வெளியில் நடைபெறும் ஒன்றன்று. இது குறித்து விரிவாக அறிய வேண்டும் எனில் ஃபார்சி மொழியில் ஸூஃபி மகான் அல்ஹுஜ்வீரி (ரஹ்) இயற்றிய ‘கஷ்ஃபுல் மஹ்ஜூபு’ என்னும் நூலின் இறுதியில் உள்ள ‘சமாஃ’ என்னும் அத்தியாயத்தையும், அறபி மொழியில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இயற்றிய இஹ்யா உலூமித்தீன்’ என்னும் பெருநூலில் உள்ள கிதாபுஸ் சமாஃ’ என்னும் அத்தியாயத்தையும் வாசிக்க வேண்டும். அந்நூல்கள் சொல்லும் செய்திகளில் இருந்து முக்கியமான ஒரு கருத்தினை இங்கே தருகிறேன். ஸூஃபிகள் சமாஃ என்னும் இசை நிகழ்வு நடத்துவதற்கு மூன்று நிபந்தனைகளைக் கவனிக்க வேண்டும்:

  1. ஸமான் (நேரம்) — இசை நிகழ்வு நடத்தப்படும் நேரம் கடமையான இறை வழிபாடுகளுக்கு இடையூரான நேரமாக இருக்கக் கூடாது.
  2. மக்கான் (இடம்) — இசை நிகழ்வு நடத்தப்படும் இடம் பொது மக்களின் ஊடுருவலுக்குச் சாத்தியமான இடமாக இருக்கலாகாது.
  3. ரிந்தான் (தோழர்கள்) — இசை நிகழ்வில் கலந்துகொள்வோர் இறைக்காதல் கொண்ட ஆன்மிகச் சாதகர்களாக இருக்க வேண்டும். அஃது இல்லாதார் அந்நிகழ்வில் இடம் பெறக்கூடாது. 

இதனால்தான், சமாஃ என்பதை நடத்துவதற்கு நேரில் அங்கே ஒரு ஆன்மிக குரு அல்லது அவரின் பிரதிநிதி தலைமை தாங்கி நெறிப்படுத்த வேண்டும் என்று ஸூஃபிகளிடம் நியதி உள்ளது.

ஸூஃபிகள் இசை கேட்பது இறைவனுக்காகவே. அவர்கள் ஒவ்வொரு ஒலியிலும் இறைவனை அவதானிக்கவே விரும்புகின்றனர். இதுபற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

“உலர்ந்த நரம்புகள், உலர்ந்த குச்சிகள், உலந்த தோல்
எங்கிருந்து வருகிறது இவற்றில் நண்பனின் குரலோசை?

நரம்பிலிருந்தோ குச்சியிலிருந்தோ தோலிலிருந்தோ அல்ல,
நண்பனின் குரல் வருகிறது அவனில் இருந்தே!”

இன்றைய கவ்வாலி

இன்று கவ்வாலி என்பதும் அனைத்து இசை வடிவங்களையும் போலவே கார்ப்பரேட் மயமாகி உள்ளது. அது ஒரு கேளிக்கையாகவும், வணிகப் பொருளாகவும் ஆகிவிட்டது. நீங்கள் பொதுவான இசை நிகழ்வுகளில் காணும் கவ்வாலிகளில் உண்மையான ஸூஃபி இசையைப் பார்க்க முடியாது. மவ்லானா ரூமியின் தியான வடிவமான சுழலுதல் (ரக்ஸ்) என்பது இன்றைக்கு துருக்கியில் அப்படியான ஒரு கேளிக்கையாகவும் வணிகப் பண்டமாகவும் உள்ளது. டூரிஸ்டுகளுக்கு நிகழ்த்திக் காட்டிப் பணம் ஈட்டும் ஒரு கலை வடிவம் ஆகிவிட்டது. எந்த டூரிஸ்டும் தன் நிழற்படக் கருவியுடன் போய் உண்மையான மவ்லவி சுழல்வதைப் பிடித்துவிட முடியாது. அதே போல்தான் சமாஃ என்னும் ஸூஃபி இசை நிகழ்வுகளும். அவை கலையரங்கங்களிலோ நட்சத்திர ஓட்டல்களிலோ நடப்பவை அல்ல. ஏன், தர்காக்களில் பொதுமக்கள் காணும்படி நடத்தப்படும் கச்சேரிகளும் உண்மையான சமாஃ நிகழ்ச்சிகள் அல்ல.

இன்று நவீன கவ்வாலி குழுக்கள் என்று கிளம்பியுள்ள ‘ஃபனா ஃபில்லாஹ்’ போன்ற குழுக்களில் இரு பாலரும் பாடும்படியாக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பாப் இசைபோல் இது மாறிவருகிறது. அத்தகைய இசைக் குழுக்களின் நிகழ்வுகள் உண்மையான ஸூஃபி இசை அல்ல என்பது திண்ணம். ஏ.ஆர். ரஹ்மான் பொது மக்களுக்காக இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். அதில் ஸூஃபி ஞானிகளைப் புகழ்ந்து கவ்வாலி பாடுகிறார். அப்போது அவரும் அவரின் குழுவும் அதற்கென்று ஷேர்வானி அணிந்து, தலையில் தொப்பி அல்லது தலைப்பாகையுடன் தோன்றிப் பாடுகின்றனர். ஊடகங்கள் அவர்களை ஸூஃபிகள் அழைக்கின்றனர். இதெல்லாம் வணிக ரீதியான கேலிக்கூத்துகள். உண்மையான ஸூஃபித்துவம் இத்தகைய நிகழ்வுகளில் இல்லை.

இங்கே ஸூஃபிகளின் இசையான சமாஃ நிகழ்வுகளில் பாடப்படும் முக்கியமான கவ்வாலி பாடல்கள் பற்றி நான் எழுதப் போகும் கட்டுரைகள், தொடரும்.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரமீஸ் பிலாலி

இயற்பெயர் அ. தௌஃபீக் ரமீஸ் (1976). கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர். ஸூஃபித்துவம், இஸ்லாமிய ஞான ஆக்கங்கள், கவிதைகள் எனப் பலவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்துள்ளார். குறிப்பாக ரூமியின் பாடல்களையும் உரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தில் தனித்துவமானவர். தொடர்புக்கு: trameez4l@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அங்கதம்ஒரு துளி கருணைவிஜய்அதிகாரம்எழுத்தாளரின் மரணம்தமிழக அரசியல்பின்னவீனத்துவம்தலையங்கம்அக்காக்கள்சந்துரு மாயவன்ரூமி‘ரோலாண்ட் பார்த்மண்வாசனை கதைகள்பிம்ப அரசியல்வாசகர் கூட்டம்ராஜ் கௌதமன்தொ.பத்தினாதன்கடைசி வெடிச்சத்தம்சுஜித் லெனின்சிறுகதைசாட்சிபிரான்ஸ் காஃப்காரமீஸ் பிலாலிழ என்ற பாதையில் நடப்பவன்நான் ஏன் பதிப்பிக்கிறேன்கு இலக்கியன்கிராமியம்ஒளிரும் சொற்கள்பேட்டிகோ கமலக்கண்ணன் கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!