நுண்கதை

பெருங்கொங்கை பூத்தாள்

சுஜித் லெனின்
15 Apr 2026, 7:34 am
0

௦1. நுண்கதை

‘தினமொரு இளங்குமரி கேட்டேனே என்னவாயிற்று’ என்றவாறு கடும் உக்கிரத்துடன் செங்கோலைக் கையில் ஏந்தியவாறு படுக்கை அறையின் குறுக்கே நடந்தபடி இருந்தார் கடவுள். சிறிதுநேர அமைதிக்குப் பின் மண்ணாங்கட்டியை அழைத்து ‘இதற்குத் தீர்வே இல்லையா’ என்றார். தம் கண்களை இறுக மூடியக் கட்டியார் ‘உண்டு’ என்றவாறு ‘நாட்டில் நிகழும் பேரிடர்களை’ மனதில் கொண்டு சற்றுப் பொறுங்கள் என்று அகன்றார். விரைந்து வந்த வைத்தியர், ‘கட்டியார்’ எனச் சொல்லத் துவங்க இடை மறித்த கடவுளார் ‘அவ்வாறே ஆகுக’ என்றார். சற்றே அதிர்ந்தவர், ‘நிதானமாக மதுவில் மயக்க மருந்தூட்டி கடவுளின் குஞ்சாமணியை நீக்கி’ அகன்றார்.
0
௦2.குறுங்கதை:

கடவுளாரின் ஆட்சி எல்லையின் கிழக்குப் பகுதி கடல் சீற்றத்தாலும் தென்பகுதி நோயாலும் பாதிக்கப்பட்டு உயிர்ச்சேதம் ஆயிரங்களை எட்டியிருந்தது.

கடவுளுக்குக் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இது எப்படிச் சாத்தியமென மருகினார். மாளிகையே சோகமயமாகக் காட்சி அளிக்கும் வண்ணம் விளக்கொளியின் நிறங்கள் மாற்றப்பட்டன.

சபை கூடியது. மண்ணாங்கட்டியை உற்று நோக்கியபடி ‘இவ்வாறு நிகழ்வதைத் தடுக்க இயலாதா?’ என்றார் கடவுள். அந்த ‘இவ்வாறு’ என்பதன் பொருளை முற்றிலும் உணர்ந்த மண்ணாங்கட்டியார் ‘இயலும்’ எனச் சொல்ல ‘அவ்வாறே ஆகுக’ என்றார் கடவுள்.

அரண்மனை வைத்தியரின் காதில் கிசுகிசுத்த மண்ணாங்கட்டியை அதிர்ச்சியுடன் நோக்கினார் வைத்தியர். அவரின் தயக்கத்தை உணர்ந்தவர் ‘கடவுளாரின் சபையில் நீரும்தானே இருந்தீர்?’ என சடசடக்க ‘அரை மனதுடன் அவ்விடம் நீங்கிய வைத்தியர் மதுவில் மயக்க மருந்தூட்டி கடவுளின் குஞ்சாமணியை நீக்கினார்’.

நாடே அழிந்தாலும் தினமொரு புதுக்குமரி கேட்ட கடவுளார் சமநிலையுடன் மஞ்சத்தில் மல்லாந்து கிடந்தார். மண்ணாங்கட்டி மன்னரின் பெயரால் நகர்வலம் சென்றிருந்தார்.
0
௦3.சிறுகதை:

காலம் தோன்றியது முதல் ஆற்றுப் பாசனமும் மும்மாரியும் தவறாத பொன் விளையும் பூமியது. கலவையான நில அமைப்பைக் கொண்டது. ஒரு பக்கம் கடலையும் ஒரு பக்கம் மலையையும் ஒரு பக்கம் பாலையையும் ஒரு பக்கம் புல்வெளியையும் எல்லையாகக் கொண்டது. அங்கு வாழும் உயிரினங்கள் அந்நிலத்திற்கு மேலும் மெருகூட்டின.
காலை. சபை நிறைந்திருந்தது. ஓரத்தில் குடிகளில் சிலர் பதற்றத்துடனும் பயத்துடனும் துண்டினை இடுப்பில் கட்டியவாறும் கைகளில் ஏந்தியவாறும் நின்றபடியிருந்தனர்.
நாட்டின் கிழக்கு எல்லையில் கடல் சீற்றம் ஏற்பட்டுப் பேரழிவுகள் நிகழ்ந்திருந்தன. தென்னைகள் அதிக அளவில் சேதம் அடைந்திருக்க, தினமும் மீனவக் குடியின் பிணங்கள் கரையொதுங்கிய வண்ணம் இருந்தன. ஓலங்கள் எங்கும் நிறைந்திருந்தன.

தென்பகுதியில் எப்போதும் இல்லாத அளவில் தொற்று ஏற்பட்டிருந்தது. முதலில் சுரமும் அதைத் தொடர்ந்து நடக்க இயலாமலும் அதைத் தொடர்ந்து கண்கள் வீங்கி வெடித்தும் மரணித்தபடி இருந்தனர். வைத்தியர்கள் திக்குமுக்காடிப் போயினர்.
நாட்டின் இரு எல்லையிலும் ஏற்பட்டிருந்த பேரிடர்களால் மனம் நொந்திருந்த தலைமை அமைச்சர் மண்ணாங்கட்டி, எப்படியும் சமாளிப்போம் என்னும் வைராக்கியத்துடன் நிதானத்தை இழக்காமல், அவையில் அமர்ந்திருந்தார்.
கடவுளார் சபையில் நுழைந்தபோது மரபின்படி மரியாதையின் பொருட்டு அனைவரும் எழுந்தனர். சைகையால் அமரச் சொன்னவர், தானும் அமர்ந்து தீவிர யோசனையில் இருந்தார்.

முப்பாட்டன் காலத்திருந்து ஆட்சிசெய்து வருவதன் நீட்சி என்பதை உணர்த்தும் வண்ணம் உடல் மின்னிக் கொண்டிருந்தது. நல்ல திடகாத்திரமாக, வளர்ந்தவராக, ஒளியைச் சிந்தும் கண்களுடன் இருந்தார் கடவுளார். இயல்பிலேயே தன் மார்பின் சுருள் மயிர்கள் வெளித்தெரியும் உடையணிந்து பழகியிருந்தார்.
கடவுளாரின் குழப்பமான தோற்றம் கண்டு ஆசுவாசம் அடைந்திருந்தார் மண்ணாங்கட்டி. இப்பேரிடரால் நடந்த ஒரேயொரு நன்மை இயற்கை அவருக்குப் புத்தியைப் புகட்டியிருப்பது மட்டும்தான்; குறைந்தபட்சம் அதுவாவது நிகழ்ந்ததே எனப் பெருமூச்சுடன் அமர்ந்திருந்தார்.
நாட்டின் நிலையைக் குடிகள் தொடங்கி ஏனையோரும் எடுத்துரைத்தனர். வைத்தியரும் ஒற்றர் படைத் தலைவரும் நிலைமையை ஆமோதிக்க தலைமை அமைச்சரும் தன் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டார்.
அப்போது சபையில் நுழைந்த கடவுளின் அந்தரங்க சேவகன் அவரின் காதுள் சிறிது நேரம் முணுமுணுத்தான். உடன் எழுந்தவர் தன் உடையைச் சீர் செய்தபடி இயற்கையின் முடிவைத் தள்ளிவிட நாம் யார் என்றபடி எல்லாவற்றையும் தலைமை அமைச்சர் பார்த்துக்கொள்வார் ; அவர் சொல் வேறு என் சொல் வேறு அல்ல. புரிந்ததா என்றவாறு நீங்கினார்.
வந்திருந்த சேவகனைப் பார்த்தபோதே மண்ணாங்கட்டியாருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. சற்று முன்னர் தாம் எண்ணியது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை உணர்ந்தார். பெருமூச்சுடன் தன்னருகே இருந்த வேரனை உற்றுப் பார்க்க, குறிப்புணர்ந்தவன் மன்னர் சென்றதன் காரணத்தை அறியப் புறப்பட்டான். சபையில் இருந்த கடைசி மனிதனின் கோரிக்கைவரை பொறுமையாக இருந்து கேட்ட தலைமை அமைச்சர் ‘இயன்றதைச் செய்வோம்’ என நம்பிக்கை தந்து சபையைக் கலைத்தார். நண்பகல் வெயிலின் உக்கிரம் காற்றில் தெரிந்தது.
உணவு முடிந்தபின் வந்த வேரன் பணிந்தான்.
‘சாப்பிட்டாயா?’
‘இல்லை அமைச்சரே.’
‘சாப்பிடு. பிறகு சொல்’ என்றார். உண்டவன் சொல்லத் தொடங்கினான்.
‘நாட்டிய மங்கை பெருங்கொங்கை பூத்தாள் நீராடித் திரும்பும் வழியில் காலில் முள் தைத்துவிட்டதாம்.’
அதற்கென்ன இப்போது! என்றிருந்தது மண்ணாங்கட்டியாரின் பார்வை.
‘ஆகையால் அவரை நலம் விசாரிக்க ரதத்தினைத் தயார் செய்யச் சொல்லிவிட்டுத்தான் மன்னர் சபைக்கே வந்துள்ளார்’.
தன் கண்களை மூடி ஆத்திரத்தைச் செரித்துக்கொண்ட கட்டியார் அமைதி காக்க, மேலும் தொடர்ந்த வேரன்,
‘ஒவ்வொரு வார இறுதியிலும் புதியபுதிய மடந்தைகளை எதிர்பார்க்கும் மன்னருக்கு நேற்றைய தினம் ஏமாற்றமே மிஞ்சியதாம். ஆகவே, நாடெல்லாம் தேடிப் புதியவளைக் கவர்ந்து வந்திருக்கின்றனர்’ என்றான் அமைதியாக.
ஒரு கணம் தலைமை அமைச்சருக்கு ‘ச்சீ‘ என்றானது. பேதையாவும் பெதும்பையாகவும் மன்னருக்கு இருக்கும் மகவுகளை எண்ணிப் பார்த்தவர், ‘வேறு வழியில்லை’ என்றபடி, மிகத் தீர்க்கமாக ‘தலைமை வைத்தியனை’ அழைத்து வா என உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில் வந்தார் வைத்தியர்.
‘அமரும் வைத்தியரே’
‘சொல்லுங்கள் அமைச்சே’
‘ஓர் ஐயம்’.
‘தங்களுக்கா!’
‘ஆம்’.
‘விளையாடாமல் சொல்லும் ஐயா’.
‘நாடு இருக்கும் நிலையில் நான் உம்முடன் விளையாடத்தான் அழைப்பேனா?’ என்ற அவரது குரலில் கடுமை தெரிந்தது. வைத்தியர் மௌனமாக இருந்தார்.
‘கொல்ல வேண்டியது நோயையா? அல்லது அதனை உற்பத்தி செய்யும் மூலத்தையா?’.
இதன் பதில் சிறு குழந்தைக்கும் தெரியுமே என்கிற குழப்ப முகத்துடன் சொன்னார், ‘மூலத்தைதான்’.
‘மகிழ்ச்சி’ என்றவர் வைத்தியரை அருகே அழைத்து இரகசியமாக உத்தரவிட்டார். அதிர்ந்த வைத்தியரை நோக்கி,
‘சபையில் மன்னர் சொன்னதைக் கவனித்தீர்தானே!’
‘ஆம்’.
‘எனில் செய்யும்’.
‘சரி’ என்றவாறு அகன்றார்.
இரவு. தீப்பந்தங்களும் அந்தரங்க மெய்க் காவலர்களும் சூழ்ந்திருக்க அறைக்குள் நுழைந்த வைத்தியர் சேடியர் இருவரைத் தவிர அனைவரையும் அகலச் சொன்னார்.
அதீதமான மது மயக்கத்தில் இருந்த கடவுளாருக்கு மீள மயக்க மருந்து கலந்த மதுவைப் புகட்டினர். பிறகு, உயிருக்கு ஆபத்தில்லா வகையில் ஐயனின் குஞ்சுமணியை அறுத்து நீக்கினார். நீங்கினார்.
சேடிப் பெண்டிர் மயிலிறகாலான கவரி வீச, பிளந்த வாயுடன் உறங்கிக் கிடந்தார் கடவுளார்.
0

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சுஜித் லெனின்

பெயர் : சுஜித் லெனின் ஊர் : வியாழன்மேடு மாவட்டம் : திருச்சிராப்பள்ளி படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள்: உயிர் எழுத்து, நடுகல், சீர், மலைகள்.இன், வாசகசாலை, அகநாழிகை,கலகம்,தினவு, அம்ருதா, காலச்சுவடு. வெளிவந்துள்ள நூல்கள்: 1. பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் 2. கடவுளும் மண்ணாங்கட்டியும்








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

கஸல்நறுங்கதைதாரகன்சதுக்கம்எஸ் அற்புதராஜ்பிரான்ஸ் காஃப்காநுண்கதைஇலக்கியம்ராஜ் கௌதமன்இலக்கிய விமர்சனம்சாய் வைஷ்ணவிகாஃப்காவின் காதுகள்ஆலடியான்குறுங்கதைபேட்டிழ என்ற பாதையில் நடப்பவன்வாசகர் கூட்டம்சீர்மைபிப்ரவரி தினம்மழை ஓய்ந்த சாலையில்கருத்தரங்கங்கள்கவ்வாலிபொம்மை கார்நிலமெங்கும் பூத்த முகம்ரமீஸ் பிலாலிகவிதைகள்பின்னவீனத்துவம்ஆசிரியர் உரைஅக்காக்கள்ஜார்ஜ் ஜோசப்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!