“வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
அது, யார் பதிலளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
இதை நீங்கள் ஒரு பெரியவரிடம் கேட்டால் ஒளி குறித்தும், அது காற்றுத் துகள்களில் பட்டு எப்படித் தெறிக்கிறது, சில அலை நீளங்கள் (அதாவது நிறங்கள்) எப்படி உறிஞ்சப்படுகின்றன, சில நிறங்கள் (அதாவது அலைநீளங்கள்) எவ்வாறு திருப்பி அனுப்பப்படுகின்றன என்பவை குறித்தும் ஒரு பதிலை நீங்கள் பெறக்கூடும். அந்தக் குறிப்பிட்ட நிறங்கள்/அலைநீளங்கள் (அதாவது நீலம்)தான் நீங்களும் நானும் காணக்கூடியவை.
நீங்கள் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டால், அதே பதிலின் இன்னும் குழப்பமான ஆனால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு வடிவத்தை நீங்கள் பெற வாய்ப்புள்ளது.
ஆனால் நீங்கள் ஒரு எழுத்தாளரிடம் கேட்டால், ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான பதிலைப் பெறுவீர்கள்.
உதாரணமாக, இதற்கான ஒரு பதில், நீல விரல்சாயத்தின் (fingerpaint) சிறப்புப் பண்புகளில் உள்ளது. குழந்தைகள் எப்போதெல்லாம் நீலச் சாயத்தைப் பயன்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் சாயத்தின் நுண்ணிய துகள்கள் அவர்களின் கைகளிலிருந்து காற்றில் கரைந்து அதை நீல நிறமாக்குகின்றன. காலப்போக்கில் அந்த நிறமி மங்கிவிடும், ஆனால் விரல் சாயத்தால் வரைந்து கொண்டிருக்கும்வரை, வானம் எப்போதும் நீலமாகவே இருக்கும்.
மற்றொரு பதில், வட மற்றும் தென் துருவங்களில் உள்ள நீலக் கண்கள் கொண்ட உயிரினங்களுடன் தொடர்புடையது. அவை எப்போதும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கண்களில் உள்ள நீல நிறம் உலகம் முழுவதும் காணும் வகையில் பிரதிபலிக்கின்றன. இந்தத் துருவ உயிரினங்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், செயற்கைக் கோள்கள் மற்றும் தேடலாய்வாளர்களிடமிருந்து எப்படி ஒளிந்துகொள்வது என்று அவற்றுக்கு நன்றாகத் தெரியும். அவற்றின் கண்களின் பிரதிபலிப்பை மட்டுமே நாம் காண முடியும்.
ஆனால் இப்போது நான் உண்மையாக நினைக்கும் பதில், தேவதைகள் மற்றும் அவுரிநெல்லிகள் பற்றியது.
உங்களுக்கே தெரியும், அவுரிநெல்லிகள்தான் தேவதைகளின் விருப்பமான உணவு. அதைவிட அதிகமாக அவர்கள் வேறெதையும் விரும்புவதில்லை; அத்துடன் அவுரிநெல்லிகள் ஆரோக்கியமானவை. எனவே இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. ஒரே பிரச்சனை என்னவென்றால், தேவதைகள் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையானவர்கள். மேலும் அவர்கள் நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் — யாழ் வாசிப்பது, பாட்டு பாடுவது, சிறிய குழந்தைகள் சமையலறை தொட்டியின் கீழ் உள்ள மாசகற்றும் (bleach) பொருட்களை அணுகாமல் தடுப்பது போன்ற - பிற காரியங்களையும் செய்வதுண்டு. ஆனாலும், அவுரிநெல்லிகளைக் கொரிக்க அவர்களுக்கு இன்னும் நிறையவே நேரம் இருக்கிறது — எப்படிப் பார்த்தாலும், அவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள் — எனவே சிறிய அவுரிநெல்லித் துண்டுகள் வானம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
அதைவிட மோசம் என்னவென்றால், சில தேவதைகளுக்கு அவுரிநெல்லியின் தோல்கள் பிடிக்காது, எனவே அவர்கள் ஒவ்வொரு பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்பு தோலுரித்து, அவற்றை ஓரமாக வீசியெறிந்துவிடுகிறார்கள். இதனால், அவர்களைக் குப்பை போடுபவர்கள் என்று அப்பட்டமாகக் கூறவிட முடியாது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்; ஏனெனில், தோல்களை நாமே பிறகு அப்புறப்படுத்திவிடுவோம் என்று அவர்களுக்குத் தெரியும்; இருந்தாலும், அப்போதைக்கு அல்ல அவ்வளவுதான்.
எனவே நேரம் செல்லச் செல்ல, தேவதைகள் மேலும் மேலும் அதிகமாக அவுரிநெல்லிகளை உண்பார்கள்; சூரியன் மறையத்துவங்கும்போது, அதன் ஒளி வானத்தில் உள்ள அவுரிநெல்லியின் சதைப்பகுதி மற்றும் சாறு வழியாகப் பிரதிபலித்து, அற்புதமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை உருவாக்குகிறது. அப்போதும் தேவதைகள் சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. நீல நிறத் தோல்கள் மற்றும் அவுரிநெல்லியின் துண்டுகள் வானத்தை மேலும் மேலும் இருளடையச் செய்கின்றன. சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுக்கான சிறு இடைவெளிகளைத் தவிர, பூமியை வேறு எந்த ஒளியும் சென்றடையாதவகையில், தேவதைகள் தொடர்ந்து கொரித்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில், பெரும்பாலான நேரங்களில் சந்திரனுக்குக்கூடப் போதுமான இடம் இல்லை, அதனால்தான் நீங்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே முழு நிலவைப் பார்க்கிறீர்கள்.
நள்ளிரவில், இறைவிக்குப் போதும் போதும் என்றாகிவிடுகிறது; அதனால், தேவதைகளிடம் அவர்களது குப்பைகளைச் சுத்தம் செய்யத் துவங்குமாறு கூறுகிறாள். நிச்சயமாக அவர்களும் உடனடியாகத் தொடங்கி விடுகிறார்கள்; ஆனால் அது ஒரு பெரிய குப்பைமேடு, அதனால் அதைச் சுத்தம் செய்ய நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. அவர்கள் சுத்தம் செய்யும்போது, அவுரிநெல்லிக் குப்பைகளின் அடுக்கு வழியாகச் சிறிய ஒளித் துண்டுகள் ஊடுருவத் துவங்குவதை நீங்கள் காணலாம். அவர்கள் துடைத்துத் தேய்க்கும்போது விடியத் துவங்குகிறது, அதன் பின்னர் பூமியின் மீது மீண்டும் சூரியன் பிரகாசிக்கப் போதுமான அவுரிநெல்லிகளை அவர்கள் இறுதியாக அகற்றும்போது பகல் உதயமாகிறது.
ஒரே பிரச்சனை என்னவென்றால், அவுரிநெல்லியின் தோல்கள் கறைபடியும்; அத்தோடு, அதன் தடயங்களை தேவதைகளால் முழுமையாகத் தேய்த்து அகற்ற முடிவதில்லை. சில நாட்களில் அவர்கள் நன்றாக அகற்றுகிறார்கள், அப்போது வானம் வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. ஆனால்,வெயில் பிரகாசமாக அடிக்கும் நாட்களில் நீங்கள் கறையை முழுமையாகக் காணலாம், அப்போது வானம் அடர்ந்த கருநீல நிறத்தில் தெரிகிறது. ஆனால் இறைவி அந்தக் கறைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்தக் கறைகள் அழகாக இருப்பதாக அவள் நினைக்கிறாள்; மேலும், கீழே பூமியில் வசிக்கும் வாடகைக்காரர்களும் (அதாவது நாமும்) அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை. அத்துடன், விரைவில் எந்த நேரத்திலும் இடம் மாறும் திட்டமும் அவளுக்கில்லை, அதனால் அவள் மறுவிற்பனை மதிப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அவளைப் பொறுத்தவரை முக்கியமானது என்னவென்றால், தேவதைகள் தங்களால் இயன்றதைச் சிறப்பாகச் செய்தார்கள், அவ்வளவுதான்.
இப்போது, தேவதைகள் அவுரிநெல்லிகளைச் சாப்பிட்டு அலுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அவர்கள் புற்றுப்பழங்களுக்கு (raspberries) மாறினால் என்ன நடக்கும்? வானம் காலப்போக்கில் ஊதா நிறமாக மாறிவிடுமா? அவர்கள் வாழைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்கினால், மஞ்சள் நிறத்தோல்கள் நீல வானத்தைப் பச்சையாக மாற்றுமா? அல்லது அவர்கள் எலுமிச்சைகள் மீது விருப்பத்தை வளர்த்துக் கொண்டால், அவற்றின் சாறு வானத்தின் நிறத்தை என்றென்றைக்குமாக வெளுத்துவிடுமா? அப்படி நடந்தால், வானம் ஒரு காலத்தில் நீல நிறமாக இருந்தது என்பதை உங்கள் பேரக் குழந்தைகள் நம்புவார்களா?
அல்லது, தேவதைகள் மற்றும் அவுரிநெல்லிகளைப் பற்றி கதைகள் சொல்லும் ஒரு வேடிக்கையான கதைசொல்லி என்று உங்களை அவர்கள் நினைப்பார்களா?
தமிழில்:
ஜி.ஏ. கௌதம்







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

தாரா கேம்பெல்
சுஜித் லெனின்
எஸ். அற்புதராஜ்
து. பிரபாகரன்
ரமீஸ் பிலாலி
கிருஷ்ணமூர்த்தி
Be the first person to add a comment.