கட்டுரை ஆய்வு

ரீல்ஸில் பெண்ணுடல்

ஞா. குருசாமி
02 Sep 2026
0

சமீப காலமாக ரீல்ஸில் பெண்களின் இடம் குறித்து நேர் / எதிர் கருத்துகளைப் பேசுவது அதிகரித்திருக்கிறது. ரீல்ஸை எதிர்க் கருத்தாளர்கள் ஆபாசமாக இருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது முழுமையும் உண்மையல்ல. அப்படிச் சொல்கிறவர்கள் ‘ஆபாசம்’ என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு, அதற்கு அப்பால் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றிக்கொள்ளத் தவறுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். முதலில் ரீல்ஸ் சர்வதேசக் கலாச்சாரங்களினுடைய காட்சி வடிவக் கிட்டங்கியாக மாறிவிட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கிட்டங்கிக்குள் சர்வதேச அளாவிலான உணவு, உடை, சடங்கு, கலை, இலக்கியம், அரசியல், வணிகம் உள்ளிட்ட பலவற்றையும் ஆய்வு செய்வதற்கு அள்ளக் குறையாத தரவுகள் கிடைக்கின்றன. அந்தவகையில் ரீல்ஸில் தம்மை மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதன் வழியாக ஓர் உரையாடலைத் தொடங்கி இருக்கும் பெண்களின் குரலை, 1830கள் தொடங்கித் சர்வதேசச் சூழலில் தீவிரமாகப் பேசப்பட்ட பெண்ணியத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது சமகால டிஜிட்டல் வெளியில் உருப்பெற்ற புதிய ஒன்றாகவோ கருத முடியுமா என்பது பற்றி யோசிக்கலாம். 

I

பெண்கள் வெளிப்படும் ரீல்ஸ் பொழுதுபோக்கு, நடனம், தன்னம்பிக்கை, விளம்பரம், சமையல், குழந்தை வளர்ப்பு, பிறமொழி பயிற்றல், தொழில், அரசியல் என்று பல வகைகளில் உண்டு.  அவை யாவற்றிலும் ‘நான் இருக்கிறேன்’ என்கிற தன்னுடைய இருப்பை அழுத்தமாக சுட்டும் மறைபொருள் உள்ளாழ்ந்து கிடக்கிறது. மனித குலம் தோன்றிய காலந்தொட்டு பெண் தனது இருப்பைச் சுட்டிக்காட்டி வந்திருந்தாலும் இப்போது சுட்டுவதில் மிகுந்த வேறுபாடு உண்டு.

இதுவரையிலான சுட்டுதலில் ‘செய்யச் சொல்பவர் – செய்யும் பெண் –செய்வதைப் பார்ப்பவர்’ என்ற நிரலாக்கம் இருந்தது. பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்போதும் ஆணாகவே இருக்கும் ‘செய்யச் சொல்பவர்’ தான் தீர்மானித்தார். அதன்படி தான் பெண் செய்ய வேண்டும். அந்தச் செயலில் சிந்தனைச் சுதந்திரத்துக்கு அனுமதியில்லை. இந்த நிரலாக்கத்தை வீட்டு அடுப்படி, சினிமா முதற்கொண்டு சகலத்திலும் பார்க்க முடியும். சான்றாக ஒரு நடிகையை எடுத்துக்கொள்வோம். அவர் அபாரமான நடிப்புத்திறன் கொண்டவராகவோ, தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் தேர்ந்தவராகவோ, தத்துவத்தெளிவு கொண்டவராகவோ இருக்கலாம். ஆனாலும் அவர் என்ன நடிக்க வேண்டும் என்பதை ‘செய்யச் சொல்பவர்’ தான் முடிவெடுப்பார். பல நேரங்களில் இந்தச் செய்யச் சொல்பவருக்குள் இயக்குநர் மட்டும் இருப்பதில்லை. நடிகரும் இன்ன பிறரும் இருப்பார்கள். அதாவது, செய்வது பெண்ணாக இருக்கிற போது அவரைச் செய்ய வைப்பதற்கான இயக்குநருக்குள் ‘ஆண் ஒருங்கிணைப்பு’ நிகழ்ந்திருக்கும். இது ஒரு சான்று மட்டுமே. அந்த ‘ஆண் ஒருங்கிணைப்பு’ சொல்வதை பெண் செய்யவில்லை என்றால் அவர் மீது வன்முறையை நிகழ்த்தும். இச்சூழலை விளக்கும் பெண்ணியத் திரைப்படக் கோட்பாளரான லாரா முல்வி (Laura Mulvey) தன்னுடைய ‘காட்சி இன்பமும் கதை சொல்லும் சினிமாவும்’ (Visual Pleasure and Narrative Cinema) கட்டுரையில் ‘திரையில் வரும் பெண் உடன் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தனித்தனி காமப் பொருளாகத் தெரிய வேண்டியிருக்கும் நிலையே தொடர்ந்து உருவாக்கப்பட்டுத் தக்கவைக்கப்படுகிறது என்பதாகச் சொல்வார். சான்றாக ‘Only Angels Have Wings’, ‘To Have and Have Not’ என்னும் இரண்டு ஹோவார்ட் ஹாக்ஸ் இயக்கிய திரைப்படங்களைக் காட்டுவார். முல்வியின் கூற்றுக்கு அரண் சேர்க்கும் வகையில் தமிழிலும் நிறையப் படங்களைச் சொல்ல முடியும். 

இப்போது ரீல்ஸில் பெண்ணின் சுட்டுதல் மேற்கூறிய நிரலாக்கம் அப்படியே இல்லை; புதிய வடிவத்தைப் பெற்றிருக்கிறது. ‘செய்யச் சொல்பவர்’ இருந்த இடத்தில் அவருக்குப் பதிலியாக ‘டிஜிட்டல் சுற்றுச்சூழல்’ பதிலியாக வந்துவிட்டது. அதாவது, செய்யச் சொல்கிறவராக இருந்த ஆண், தனது பீடத்திலிருந்து விலகி அல்காரிதம், சந்தை, ட்ரெண்ட், பிராண்ட் எனும் பல்வேறு அதிகார மையங்களாகப் பிரிந்துவிட்டார். அதனால் யாருக்காக, எதற்காக தன்னைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்  அதிகாரத்தில் பெண்ணுடலின் பங்கு முன்னெப்போதையும் விட அதிகரித்து இருக்கிறது. சான்றாக, அமெரிக்க வழக்கறிஞரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியுமான ஏஞ்சலா டெனீஸ் ஆல்சோப்ரூக்ஸ் (Angela Deneece Alsobrooks) - ன் ரீல்ஸ் வரிசையைக் குறிப்பிடலாம். ஆப்பிரிக்க அமெரிக்கரான அவரது ரீல்ஸ் பெண்களின் வெளிப்பாட்டு வடிவத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. 2025 ஆம் ஆண்டு முதல் மேரிலாந்து மாநிலத்தின் இளநிலைச் செனட்டராகப் (junior senator) பணியாற்றி வரும் இவரது ரீல்ஸ் அரசியல் பணி, சமூகப் பணி, நிருவாக ஆளுமை ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பொதுவெளியில், முன்பிருந்த ‘செய்யச் சொல்பவர்’ என்ற ‘அதிகாரம்’ இல்லாமல் ஒரு பெண் தன் அரசியல் / பணி வாழ்க்கையை சமகாலத்தில் நேரடியாகச் சுட்டிக்காட்ட முடிகிறது என்பதே இங்கு முக்கியம்.

இந்தியாவில் மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் மேடைக் கலைஞருமான அலீனா(Aleena)வின் ரீல்ஸ்களைச் சுட்டலாம். விளிம்புநிலையினர், பெண்களின் சமகாலச் சிக்கல்களைத் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறார். மற்றவற்றை விட பெண்களைப் பற்றிப் பேசும் ரீல்ஸிகளில் அவரது உடல்மொழி உஷ்ணமாயிருக்கிறது. மேடையில் சுதந்திரமான தனித்துவத்தை தன் உடல்வழி முன்வைப்பது பெண்ணுடலின் நவீன நகர்வைக் காட்டுகிறது. தமிழில் peya_dharsh, subanu_gobinath, sheniha_sheni உள்ளிட்ட பலர் தங்களது இன்ஸ்டாவை வணிக அடையாளத்தின் கூட்டியக்கமாக (Brand Collaboration) வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். அதன்வழி, தங்களை மாடலாகப் பயன்படுத்திக்கொள்ள வணிக நிறுவனங்களை அழைக்கிறார்கள். அதற்கான காட்சி வடிவ சுயவிவரக் குறிப்பாக (Visual Resume) தங்களது ரீல்ஸ்களை வடிவமைக்கிறார்கள். அவற்றில் அவர்களின் உடலை, உடல் வழியிலான மொழிதலைக் கொண்டாட்டமாக நிகழ்த்துகிறார்கள். 

சோஜர்னர் ட்ரூத் (Sojourner Truth), சிமோன் டி போவார் (Simone de Beauvoir), வர்ஜீனியா வூல்ஃப் (Virginia Woolf), மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), ஆலிஸ் வாக்கர் (Alice Walker), ஆட்ரி லார்ட் (Audre Lorde) போன்றவர்கள் தொடங்கி தமிழில் பாமா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, குட்டிரேவதி உள்ளிட்டவர்கள் தங்களது உடலை அரசியலாகவே எழுதினார்கள். பெண்ணுடல் குறித்து நிலவிய பொதுப்புத்தியில் உடைப்புகளை ஏற்படுத்தினார்கள். அதனால் உருவான சுதந்திரவெளியுடன் இளந்தலைமுறைப் பெண்களின் ரீல்ஸ் வெளிப்பாட்டுக்கு ஒரு கருத்தியல் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் எழுத்தில் வெளிப்பட்ட பெண்ணுடலுக்கும் ரீல்ஸில் வெளிப்படுகின்ற பெண்ணுடலுக்கும் ஒரு தொடர்ச்சி இருப்பதாகப்படுகிறது. அதே சமயம் ரீல்ஸ் பெண்ணுடல் டிஜிட்டல் யுகத்திற்கான பெண்ணிய அரசியலைப் பேசத் தொடங்கிவிட்டதான அறிகுறியும் தெரிகிறது. இவர்களால் பெண்களின் விஷயத்தில் முன்னெப்போதும் இல்லாத நல்ல மாற்றத்தைச் சமூகத்தில் நிகழ்த்த முடியும்.

இந்த அற்புதமான திறப்பில் ஒரு சிக்கலும் உண்டு. அதாவது,  பார்க்கும் / பார்க்க வைக்கும் நிலையின் இயங்குவிசையால் விருப்பக்குறி (likes), பின்னூட்டங்கள் (comments), பகிர்வுகள் (shares), பின்தொடர்வோர் (followers) ஆகியவை சமூக மதிப்பாக மாறும். சில சமயங்களில் அந்த மதிப்பு பணமாகவும் மாறும். இதனால் உடல் ஒரு தனிப்பட்ட சுயவெளிப்பாட்டிலிருந்து விடுபட்டு கவனத்தை உருவாக்கும் சமூக, பொருளாதார மூலதனமாகவும் மாறக்கூடும். உடலை அரசியலாக்குதல் என்பதில் சிறு பிசகு தட்டினாலும் உடலைப் பொருளாக்கும் கார்ப்பரேட் வலைக்குள் தானே கொண்டுபோய்த் திணித்தலில் முடியும். பெண் தனது உடலை அரசியலாக்குவது வரையில் அவர் வலிமையானவர். விருப்பத்துக்கு மாறாக அவரோடு யாரும் அணுக்கமாக முடியாது. பெண்ணுடல் பொருளாகும் சுழலுக்குள் சிக்கிக்கொண்டால் சந்தை, சமூகத்தின் அவதூறுகள், அல்காரிதம் அனைத்தும் பங்குபோட்டுச் சிதைக்கும்.  அந்தச் சிக்கலுக்குள் ஆட்பட்டவர்கள் தான் திடீரென்று வைரலாகி இல்லாது போனவர்கள். 

II

ரீல்ஸாக அல்லாமல் தனிப்படங்களாக தங்களது உடலை வெளிப்படுத்துவதும் அதன்வழி உரையாடலை நிகழ்த்துவதும் தனியொருவகையாக உருவெடுத்திருக்கிறது. சான்றாக, தீவிரமான எழுத்துக்காவும் பேச்சுக்காவும் அறியப்பட்டவரும் சூடானிய-அமெரிக்கருமான சஃபியா எல்ஹில்லோ இன்ஸ்டாவில் பதிவேற்றிய அவரது தனிப்படத்தை குறிப்பிடலாம். அவர் கடந்த 2025 நவம்பரில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ‘டார்பூர் பெண்கள் செயல் குழு’ (Darfur Women Action Group)வுக்கு நிதிதிரட்டும் வகையில் கவிதைப் பயிற்சிப் பட்டறையை அறிவித்தார். அவரே தான் பயிற்சியாளர். அந்த அறிவிப்பில் அமைப்புக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு ஒரு கவிதையை சுமார் 20 நிமிடங்கள் விளக்கி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வேண்டாதவர்களுக்கும் விருப்பப்படும் கொடையாளர்களுக்கும் ஒரு கவிதை வாசிக்கப்படும் என்று சொல்லி அந்த அறிவிப்போடு தனது பாதியளவு படத்தையும் பதிவேற்றியிருந்தார். கொடை கொடுத்து பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குத் தனது முகம் காட்டப்பட வேண்டும் என்பதற்காகப் படத்தைப் பதிவிட்டதற்குக் காரணமும் சொல்லி இருந்தார். படத்திற்குக் கீழே ‘மனவேதனை நம்மைப் பயனுள்ளவர்கள் ஆக்கட்டும். கொலைகாரர்களால் முடியாது’ என்பதான குறிப்பும் அவரால் எழுதப்பட்டு இருந்தது. 

போரால் பாதிக்கப்பட்ட சஃபியா எல்ஹில்லோ, தனது பதிவேற்றத்தில் பாதிஉடல் படத்தை மட்டும் மையமாக வைத்துக்கொண்டு படத்திற்கான விளக்கம், கவிதை, கவிதைப் பயிற்சி, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதிதிரட்டல், கொலைகாரர்களால் மனவேதனையைப் புரிந்துகொள்ள முடியாது என்ற குறிப்பு ஆகியவற்றின் வழி போருக்கும் இனஅழிப்புக்கும் எதிரான மனநிலையை வேண்டுகிறார். போரால் பாதிக்கப்பட்டு உயிருடன் மிஞ்சியுள்ள தனது உடலைப் போருக்கு எதிரான முன்னெடுப்புகளில் ஓர் அங்கமாக மாற்றுகிறார். அது உடனடியாக சர்வதேசத்தின் கவனத்தைப் பெறுகிறது. இதுமாதிரியான தரவுகளை வைத்துக்கொண்டு ஆராயும்போது பெண்கள் தங்கள் உடல்வழி பேசும் அரசியல் புதிய பரிமாணங்களைப் புலப்படுத்தும். சமகால சர்வதேசியத்தைப் புரிந்துகொள்ள திசை காட்டும்.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஞா. குருசாமி

ஞா.குருசாமி (மே 15, 1983) தமிழ் இலக்கிய ஆய்வாளர். மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார் நூல்கள்: தமிழ் இலக்கணப் புறனடைகள், அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும், நீர் - நிலம் - சாதி - சாஸ்திரம், தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்...) தொல்காப்பியத்தில் பொருளியல்








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

கருத்தரங்கங்கள்தாரகன்நான் ஏன் பதிப்பிக்கிறேன்தவெகபொம்மை கார்ஒரு துளி கருணைஜார்ஜ் ஜோசப்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ஆலடியான்கிராமியம்சீர்மைமண்வாசனை கதைகள்பிரான்ஸ் காஃப்காஅங்கதம்இலக்கியக் கூட்டம்ராஜ் கௌதமன்அதிகாரம்ரோலாண்ட் பார்த்ஆசிரியர் உரைகாலச்சுவடுடோனி பிரஸ்லர்சிறுகதைத் தொகுதிதலித் வரலாறுழ என்ற பாதையில் நடப்பவன்ஒளிரும் சொற்கள்குறுங்கதைசாட்சிஅறபு இலக்கியம்போர்பெருங்கொங்கை பூத்தாள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!