தமிழ் இலக்கியச் சூழலுக்கு நேர்மாறான போக்கைக் கொண்டது தமிழ் இலக்கியக் கல்விச் சூழல். முகநூலில் முகமறியாத எழுத்தாளரின் நூலை வாசித்துவிட்டு, ஆர்வத்துடன் தன் வாசிப்பனுவத்தை நான்கு பத்திகளில் பகிரும் புதிய வாசகரின் பார்வையைக்கூட நெருங்கமுடியாத பலகீனமான அறிவாலயங்களாகக் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. தமிழ் இலக்கியக் கல்வியைப் போதிக்கும் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கௌரவப் பேராசிரியர்கள் போன்றோரில் பெரும்பகுதியினர் நவீன இலக்கியத்தை முகம் கொடுத்துப் பார்க்கப் பழகவே இல்லை. நவீன இலக்கியத்தின் பக்கம் நாட்டம் கொண்ட ஒரு பேராசிரியரை, மரபான இலக்கண மற்றும் இலக்கியச் செழுமையைப் பாடம் நடத்த அஞ்சி எளிமையான நவீன இலக்கியத்தின் பக்கம் ஒதுங்கிக் கொள்கிறவர் என்று சக பேராசிரியன்மாரே குறைத்துத்தான் மதிப்பிடுகின்றனர்.
கதைகளிலோ கவிதைகளிலோ நடத்த என்ன இருக்கிறது? மாணவர்களே படித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கக்கூடியவர்களே பெரும்பகுதி.
கு. அழகிரிசாமியின் பெயர்கூட அறியாத எத்தனையோ பணி அனுபவம் வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழகக் கல்லூரிகளில் உண்டு. கல்விப்புலத்திலிருந்து ஆச்சர்யப்படத்தக்க வகையில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நவீன இலக்கியப் பொருண்மை சார்ந்து ஒரு கருத்தரங்கம் நிகழ்ந்தாலே அதைச் சாதனையாகத்தான் எண்ண வேண்டும்.
இலக்கியத்தை உணர்ந்துகொள்ளத் தேவைப்படும் கூர்மை இல்லாததும், கடினமான வடிவில் பண்டிதர் மொழியில் அமைந்தவையே தகுதியானவை என்ற மரபான மனப்பான்மையும் முதன்மைக் காரணங்களாகும். வாசிப்பதற்கு நேரமே ஒதுக்காமல் அரசியல், புறணி முதலிய சாரமில்லாதவற்றைப் பேசுவதிலே வகுப்பைக் கழிக்க முடியும் என்ற நடைமுறைப் பழக்கமும் நவீன இலக்கியக் கல்விக்கு எதிரான பேராசிரியர்களின் போக்குக்குக் காரணியாக அமைந்துவிடுகிறது.
புனைவு, கவிதை முதலிய வடிவங்களை எழுதுவதில் நாட்டம் கொண்ட ஒரு மாணவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதாசீனப் படுத்துவார்கள். ஆர்வம் கொண்ட மாணவருக்கு நூலகக் கதவைக்கூடத் திறக்க மாட்டார்கள். இலக்கியக் கூட்டங்கள் நடத்த மாட்டார்கள். நடக்கும் இலக்கியக் கூட்டங்களோ அல்லது கருத்தரங்குகளோ கல்லூரி நிர்வாகத்தைப் போற்றி விளிப்பதற்கு இடம் தரும் ஒன்றாகவும் தன்னைப் பேச அழைத்த வேற்றுக் கல்லூரி ஆசிரியர்களை அழைத்து மொய் வைக்கும் நிகழ்வாகவும்தான் இருக்கும்.
இந்தச் சூழலை எதிர்கொண்டு முதுகலைத் தமிழ் படித்து முடிக்கும் ஒருவர், முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கு வருவதென்பதே ஆச்சர்யத்தக்க விஷயம்தான். உள்ளார்ந்த மொழிக் காதலும் இலக்கியப் பிரேமையும் இல்லாவிட்டாலும் இதில் துணிந்து இறங்க முடியாது. ஆனால் ஓர் ஆய்வாளர், தனது ஆய்வுச்சுமைக்கு அப்பாற்பட்டுப் பல்வேறு அரசியல்களையும் பாரங்களையும் கல்வி நிலையங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நெறிபிறழா வேந்தர்கள்
ஆய்வாளருக்கும் நெறியாளருக்குமான நல்லுறவே சீரான அவசியமான ஆய்வைப் பெற வழிவகுக்கும். பல கல்லூரிகளில் மாணவருக்கு தான் எதிர்பார்த்த நெறியாளர் கிடைப்பதில்லை. பல்கலைக்கழக அளவுகோலின்படி யாரிடம் சேர்ந்து படிக்க இடமுள்ளதோ அவரிடம்தான் சேரும்படி நேரும். பக்தி இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ஒருவரிடம், புக்கோவ்ஸ்கி கவிதைகளை ஃபிரான்சிஸ் கிருபா கவிதைகளுடன் ஒப்பிட நினைக்கும் ஒருவன் சேர்ந்தால், அவன் கதியை யோசித்துப் பாருங்கள்! இலக்கிய ரசனைகொண்ட நெறியாளருக்கு குடகு மலைப்பகுதி மூலிகைகளைக் கள ஆய்வுச்செய்கிறேன் என்று பறித்து வரக்கூடிய மாணவரும் நம் சூழலில் அமையத்தான் செய்கிறார்.
இந்த அடிப்படைச் சிக்கலை சரிசெய்ய, மேலாய்வுக் கல்வியில் நுழையும் ஆய்வாளர், தனது ஆய்வுத் திட்டக் கட்டுரையைத் தயார்செய்து துறையில் முன்வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் பார்வைக்குப் பின், ஆய்வாளரின் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டிற்கும் இயைபுள்ள பேராசிரியர்களை அவ்வாய்வாருக்குப் பல்கலைக்கழகமே பரிந்துரைக்க வேண்டும். அவர்களுள் தனக்கு விருப்பமானவரைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொள்வதுதான் ஆய்வாளருக்கும் நெறியாளருக்கும் துறைசார்ந்த வளர்ச்சிக்கும் நல்லது. பல இடங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சேர்பவருக்கு அடிப்படை மொழிப் பயிற்சி அளிக்கும் நிலையே உள்ளது. சில இடங்களில் நெறியாளருக்கும்!
அறிவியல் பூர்வமாகவும் சுய விருப்பத்தின் பெயரிலும் நெறியாளர் தேர்வு அமைவதற்கு மாறாக, ஒரு கல்லூரியில் இணைய முடிவுசெய்து அங்குள்ள ஒரு நெறியாளரை அவசரமாகத் தேர்ந்துகொண்டு பயணிக்கின்றனர். பிறகு அவருடன் ஏற்படும் முரண்பாட்டால் இணக்கப் போக்கையோ ஆய்வையோ தொடர முடியாமல் போகிறது. அதிகம் இடைநிற்றல் கொண்ட படிப்பு என முனைவர் பட்ட ஆய்வைக் குறிப்பிடலாம். பகுதி நேரமாகச் சேர்பவர்களின் இடைநிற்றல் சதவீதம், முழுநேரத்தை விட இன்னும் அதிகம். ஒரு ஆய்வாளர் தன் நெறியாளர் ஆய்வுப் பொருண்மை அல்லாத கட்டுரைகளை எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும்கூட என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார் என்றுகூறி வருந்தினார். நெறியாளரது இண்டெக்ஸ் புள்ளிகள் உயர, ஆய்வாளர்களே கட்டுரைகள் எழுதி, நெறியாளர் பெயரில் வெளியிட நிர்ப்பந்திக்கப்படுவதும் உண்டு. இந்நிலைகள் மாற, அதிக வெளிப்படைத்தன்மையும் துறைசார் தேர்ச்சியும் கொண்டோரிடம் செல்வதற்கான ஊக்கம் ஆய்வாளர்களுக்கு இருக்க வேண்டும்.
ஆறு இலக்கத்தில் சம்பளம் பெறும் ஆசிரியர்கள், தன்னிடம் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளரின் உதவித்தொகையை ஒரு பகுதியைக் களவாட கண்ணும் கருத்துமாக நடந்துகொள்வதும் அதையும்கூட ஆய்வாளர் பெறுவதற்குக் கையெழுத்துப் போடாமல் தாமதப்படுத்துவதும் சொந்த வீட்டு வேலைகளை வாங்கிக் கொள்வதும் நடந்தபடிதான் உள்ளன. சில நெறியாளர்கள், ஆய்வுக்காலம் முடிந்தும் ஆய்வாளரின் ஆய்வை நிறைவு செய்யவிடாமல் தொடர் உபகாரத்துக்காகத் தக்க வைத்துக் கொள்வதும் உள்ளது. வீட்டிற்கு பைப் மாட்ட, கார் ஓட்ட, ஓய்வு வேளைகளில் நொறுக்குத்தீனிகள் வாங்கிவர, அலுவல்சார் கோப்புகளைத் தயாரிக்க எனப் பல ரூபங்களில் உதவும் ஆய்வாளர்களை, ஆய்வு நிறைவு என்ற பெயரில் அனுப்ப மனமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
வகுப்பறைக் கூலிகள்
ஒன்றிய அரசின் மானியத்தின் கீழ் பயிலும் ஆய்வாளர்களின் கோப்புகளைக் கல்லூரி நிர்வாகப் பணியாள் (Nodal Officer) மாதந்தோறும் சரிபார்த்து ஆய்வாளர் ஆய்வைத் தொடர அனுமதித்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அப்பணியைச் செய்யும் நபர் ஆய்வாளர்களிடம் காட்டும் கடுகடுப்பும் ஏற்படுத்தும் காலதாமதங்களும் நபர்களுக்கேற்ப மாறக்கூடியது. ஆய்வாளர் அலுவலரைக் கவனிக்காததன் தவறு என்று பிறரால் எளிதில் புறந்தள்ளப்பட்டுக் கடந்துசெல்லக்கூடிய மாதாந்திர இடர் இது. இத்தொடர் இடியாப்ப சிக்கலைத் தீர்க்கும் பணியிலே இருக்க வேண்டிய ஆய்வாளர், ஆய்வுசார்ந்து யோசிப்பதற்கான வெளியே இல்லாமல் இருக்கிறது.
யு,ஜி.சி முழு நேர முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் பத்து வகுப்புகள்வரை வழங்க வேண்டும் என்கிறது. அப்படியான கற்பிக்கும் வாய்ப்பு, பெரும்பாலான கல்வியகங்களில் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சில கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு இணையான அளவில் வகுப்புகளுக்கு அனுப்பப்படும் ஆய்வாளர்களும் உண்டு (எந்தக் கைம்மாறும் கிடைக்காமல்). இவற்றைக் குறித்து எந்த ஒரு முறையும் ஒழுங்கும் பேணப்படுவதில்லை.
ஐந்தாண்டுக் காலம் முழுநேரமாய் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டபடி வகுப்புகளையும் நடத்தும் ஒருவனுக்கு, பணி அனுபவச் சான்றிதழ் வழங்கும் எண்ணம்கூட நம் கல்வி இயந்திரத்திற்கு இல்லை. தோராயமாக இருபத்தெட்டு அல்லது முப்பது அகவையில் முனைவர் பட்டத்தைப் பெறும் ஒருவர், தனியார் கல்லூரிகளால் அனுபவமில்லை என்று சொல்லப்பட்டு அற்பச் சம்பளத்திற்கு அடிபணிய வைக்கப்படுகிறார். வேறு எந்தத் துறையிலும் இத்தனை ஆண்டுக்கால கல்விக்குப் பின் இவ்வளவு அடிமாட்டு விலையில் சம்பளம் பேசப்படுவதில்லை. நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சியும் முனைவர் பட்டமும் கொண்ட ஒருவரின் முதல் சம்பளம் இருபதாயிரம் ரூபாயைத் தாண்டி இருப்பதில்லை. மெட்ரோ நகரங்களில் அந்தத் தொகை முப்பதாயிரம் என்ற அளவில் உள்ளது. இன்றையப் பொருளாதார வீக்கத்தோடு கணக்கிட்டால், மிக மிக குறைவான ஊதியம்.
பகலில் கல்லூரியில் பாடம் எடுத்துவிட்டு, மாலையில் உணவு டெலிவரி செய்யும் உதவிப் பேராசிரியர்கள் மிகுந்துள்ளனர். வினாத்தாள் அமைத்தல், விடைத்தாள் திருத்தச் செல்லுதல், வாரயிறுதிகளில் போட்டித் தேர்வு மையங்களில் பாடம் நடத்த செல்லல் என எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் என ஏங்கும் நிலையே உதவிப் பேராசிரியர்களுக்கு உள்ளது. ஒரே பணியை மேற்கொள்ளும் பேராசிரியர்களுக்கு மத்தியில் அரசு x தனியார் என்ற காரணம் காட்டி இருபதுமடங்கு சம்பள இடைவெளி பேணப்படுகிறது.
தனியார் கல்லூரி தன்னிதிப் பிரிவுப் பேராசிரியர்களுக்குத் திருமண வாய்ப்பே உருவாகாத நிலை உண்டாகி வருகிறது. தன் இளமையெல்லாம் மேற்படிப்பிலும் ஆய்விலும் கவனம் செலுத்திவிட்டு, வேலைக்கு வரக்கூடிய ஒருவருக்கு அற்பமான சம்பளத்தின் மூலம் அநீதியான சூழல் கட்டமைத்துக் கொடுக்கப்படுகிறது. நிலையான அரசு வேலையோ அல்லது போதுமான ஊதிய உயர்வோ கிடைக்கும்வரை, ஏன் இந்தப் பணியைத் தேர்வுசெய்தோம் என்று பொழுதெல்லாம் கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மகிழ்ச்சியற்ற ஆசிரியர்களை உற்பத்தி செய்துவிட்டு, இளைய தலைமுறையை அவர்கள் ஆற்றுப்படுத்தவில்லை என்று சமூகம் அங்கலாய்ப்பது வேடிக்கையானது.
இதுகுறித்து தனியார் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இருக்கவேண்டிய தார்மீகக் கவலையைவிட, அரசு ஊதியம் பெரும் சக பேராசிரியர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும். ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம் என்ற நடைமுறையைக் கண்டிக்கக்கூட மனம் வராமல் இருக்கும் கண்ணியத்திற்குரிய அரசப் பேராசிரியக் கூட்டம், ‘நாங்களும் தனியார் வேலையில் இப்படிச் சம்பளம் பெற்றுக் கஷ்டப்பட்டுத்தான் இங்கு வந்தோம். இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். தன் துறையின் இளவல்கள் மீதே அக்கறையில்லாதவர்களால் மாணவர்கள் மீது எப்படி அக்கறை செலுத்த முடியும்.
கூண்டுக்கிளிகள்
ஆய்வாளர்களின் ஆய்வேட்டுத் தரம் தாழ்ந்துவிட்டது என்றும் பேராசிரியர்களின் நெறியாள்கை திறனற்று போய்விட்டது என்றும் பரஸ்பரம் தூற்றிக்கொள்கின்றனர். தூற்றுதலிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
தமிழில் வெளியான இலக்கிய இதழ்கள் குறித்தும் சமகாலப் படைப்புகள் குறித்தும் மாறி வரும் பண்பாட்டுப் புரிதல்கள் குறித்தும் எவ்வித ஓர்மையும் இன்றி, சங்க காலத்தில் மனித மேலாண்மை, இடைக்காலத்தில் மானுடவியல் சிந்தனைகள், பாரதியின் படைப்பில் பாரத தேசம் போன்ற காலத்திற்கு ஒப்பில்லாத தரவுக் கட்டுரைகளையே ஆய்வு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகின்றனர், கல்விப்புலத்தினர். இச்சீர்கேட்டிற்கு ஆய்வாளர், நெறியாளர் என இருசாராருக்கும் சம பங்குண்டு.
முப்பதாண்டுகளுக்கு முந்திய உலக அறிவியக்க ஆய்வுப் போக்கை அறிந்துகொள்ள வேண்டுமானால் சமகாலத் தமிழ் ஆய்வேடுகளின் தலைப்பை எடுத்துப் பார்த்தால் போதும். அவ்வளவுதூரம் நாம் துரிதமாக இருக்கிறோம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு மானுடவியல் சார்ந்த அறிதல் முறைகளும் கல்வியும் ஆதிக்கம் செலுத்தியது. ஆகவே ஒவ்வொரு ஆய்வேட்டின் தலைப்பிலும் அது எதிரொலித்தது. தற்போது நாட்டுப்புறவியல் மற்றும் இனவரைவியலின் காலமாக உள்ளது. ஒரு திகில் திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து சினிமா உலகம் அதுபோன்ற படங்களையே தயாரிப்பதுபோல் ஆகிவிட்டது, ஆய்வுலகமும். தனித்த, சுயம்பாய் முளைத்த ஆய்வுகள் வெகு குறைவாகவே வருகின்றன.
தலித்தின் வலியே தெரியாத; தலித்திய வாழ்க்கையை, இலக்கியத்தின் வழியாகவோ நேரடியாகவோ களாய்வின் வழியாகவோகூட அறிந்திடாத பலர் டிரெண்ட் என்ற காரணத்தினாலே ‘தலித்திய நோக்கை’ ஆய்வின் தலைப்பில் சேர்த்துக் கொண்டு ஆய்வேட்டை எழுதி வெற்றிகரமாக நிறைவே செய்துவிடுகின்றனர்.
பணி உயர்வுக்காகவும் டாக்டர் என்ற பட்டத்திற்காகவும் முனைவர் பட்ட ஆய்வை நோக்கிப் படையெடுக்கும் சதுக்க பூதங்களுக்கு ஆய்வு எழுதித் தர என ஒரு கூட்டமே உண்டு. நெறியாளர்களே சில தருணங்களில் பணம் பெற்றுக்கொண்டும் சில நேரங்களில் முடித்துவிட்டுப் போகட்டும் என்றும் அதைச் செய்வது உண்டு. தீயதைக் கண்களால் பார்க்காதே என்ற சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் சக பேராசிரியர்கள் என்பதால் அவையெல்லாம் அவர்களது விழிகளில் படாது.
ஆய்வாளர் ஆய்வையும் வகுப்பு நடத்துதலையும் தவிர வேறு கல்லூரிசார் அலுவல்களில் ஈடுபடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆய்வாளர், பலரும் பேராசிரியப் பணிக்கான தகுதியோடுகூடத்தான் ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆகவே அவர்களுக்குப் பேராசிரியருக்கான மதிப்பை வழங்க வேண்டும். பேராசிரியர்களுக்கு மாற்றாக வகுப்புகளுக்கு அனுப்பப்படுகையில், அதற்கான ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு கல்லூரிகளில் ஆய்வாளர்களுக்கென மேஜைகளோ நாற்காலிகளோ கிடையாது. நெறியாளரும் துறைப் பேராசிரியர்களும் ஓர் ஆய்வாளர் தன் முன் அமர்ந்து பேசுவதை விரும்பாதவர்களாக இருக்கும் மரியாதையற்ற நிலை மாற வேண்டும்.
முழுநேர ஆய்வாளர்களில் பெரும்பகுதியினர் எவ்வித உதவித்தொகையும் இல்லாமல் ஆய்வை மேற்கொள்பவர்கள் என்பதால் முனைவர் பட்டம் எனும் ஆய்வுப் படிப்புக்கான கட்டனம் ரத்து செய்யப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் படிப்பவர்களுக்கும் முழுமையான கட்டண விலக்கு இருக்க வேண்டும். சுயமரியாதைக்கு மதிப்பளிக்காமல் நல்ல ஆய்வை எதிர்பார்க்க முடியாது.
பல்கலைக்கழகம் எனும் மலைமுழுங்கி
தமிழகத்தில் தமிழ் ஆய்வை ஒழிக்க வேண்டும் என செயல்படுபவையே ஏறக்குறைய எல்லாப் பல்கலைக்கழகங்களும். திறமையான ஆய்வாளரும் தகுதியான நெறியாளரும் கூர்மையான ஆய்வும் அமைந்துவிட்டாலும் அது நிறைவேறிவிடாதபடி முட்டுக்கட்டை போட பல்கலைக்கழக நடைமுறைகள் என்று சில உண்டு. அதில் தலையாயது, ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பித்தல். யு.ஜி.சி வேண்டாம் என்று கூறிவிட்ட ஆய்வுக்கட்டுரையை, பழம் பட்டியலில் இருந்த இதழ்களில் வந்தே தீர வேண்டும் அடம்பிடிக்கும் பல்கலைக்கழகம் மாநிலத்தின் மையத்தில் இருக்கிறது. மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய பல ஆய்வுகளை ஆறாண்டுகள் நீடிக்க வைக்கும் பெருமை அக்கலாசாலைக்கு உண்டு. எதற்கெடுத்தாலும் அபராதம் என்று வசூலித்து, பெரும் பண வேட்டைக்காடாகவே அது மாறி வருகிறது.
ஆய்வுக் கட்டுரை வெளியீடு, வாய்மொழித் தேர்வு உள்ளிட்ட நடைமுறைகளில் தமிழகமெங்கும் ஒரு பொது நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். முதலில் தமிழக அரசாங்கம், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான பணியில் துரிதமாய் இறங்கிச் செயல்படுவது அவசியம். பல்கலைக்கழகங்களில் உள்ள சிண்டிகேட்கள் ஆறுமாதத்திற்கு ஒருமுறை, லாப நோக்கையும் அதிகாரக் குவிப்பையும் மட்டுமே கணக்கில் கொண்டு எதேச்சிகார முடிவுகளை எடுத்து வருகின்றன. மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நலனைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. இன்றைய சூழலில் காவல்துறை போன்ற அதிகாரத்தில் இருக்கக்கூடிய துறையினர், மக்களிடன் கண்ணியமாக பழக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு அரசும் அதை வற்புறுத்துகிறது. காவலர்களின் செயல்பாடுகளிலும் – குறைந்தது புதிய ஆட்சி அமைந்து சில மாதங்களாவது – மிதவாத போக்கில் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள அலுவலர்கள் மாணவர்களையும் ஆய்வாளர்களையும் நடத்தும் நிலையை நேரில் கண்டால், இப்படி அடிபணிந்து படிக்க வேண்டிய தேவையே என்ன என்று கேட்க தோன்றும். பதில் அளிக்கும் தொனி, ஒரு சிறிய திருத்தத்திற்காக அலைய விடுதல் என அதிகார மனப்பான்மையிலிருந்து கொஞ்சமும் இறங்காதவர்களே பெரும்பான்மை பணியாளர்களாக உள்ளனர்.
இதற்கு மத்தியில் ஆய்வை மேற்கொண்டு அது தரம்பட எழுதி வெளியிட்டு, முனைவர் பட்டமும் பெற்று சமூகத்திற்குச் சென்றால்...? மீண்டும் கட்டுரையின் ஊதியச் சிக்கல் பகுதியினை முதலிலிருந்து வாசியுங்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
படிப்பிற்கும் ஆய்விற்கும் வேண்டிய மிக அடிப்படையான வசதி, சுதந்திரமும் சுயமரியாதையுமிக்க களச்சூழல். அதில் எந்த மாற்றமும் நிகழாதவரை எதிர்காலம் என்ன? என்ற கேள்வியை மட்டுமே முன்வைத்து மௌனம் காக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலைதான் தொடர்கிறது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

ஒட்டக்கூத்தன்
றாம் சந்தோஷ் வடார்க்காடு
ஞா. குருசாமி
து. பிரபாகரன்
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.