கட்டுரை ஆய்வு

பல திசை ஊடும் சல்லிவேர்

’ஓரிரு சொட்டுத் தூறல்’ நூலின் அணிந்துரை

றாம் சந்தோஷ் வடார்க்காடு
02 Sep 2026
0

“இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது.”

இந்நூலில் இடம்பெறும் இக்கூற்று, கவிஞர் சுகுமாரன் சிறுகதை குறித்த கட்டுரையில் பெருமாள்முருகன் எழுதியுள்ள வார்த்தைகள் ஆகும். இக்கூற்றில் இடம்பெறும் அவ்வளவாக என்கிற வார்த்தைக்குப் பதிலாகப் போதுமான அளவு என்று போட்டால், அது பெருமாள்முருகனின் புனைவல்லாத படைப்புகளுக்கும் பொருந்தி வரும். 

சமீபத்தில் எம் துறைப் பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பெருமாள்முருகனின் அல்புனைவுகள் குறித்துத் தனிக்கருத்தரங்கம் நடத்தவேண்டிய தேவை உள்ளது என்று சுட்டினேன். உற்ற நண்பர் ஒருவர் பெ.மு. குறித்துப் பேச அழைக்கப்பட்ட போதும் அவருடைய கட்டுரைகள் குறித்துப் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருந்தேன். இதற்கு இன்னொரு காரணமும் இருக்குமானால், அது, நான் பெருமாள்முருகனை அவருடைய கட்டுரை நூல் வழியாக அடைந்தேன் என்பதாக இருக்கலாம்.

‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்ற முன்மாதிரியற்ற நூலை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியோடு சேர்ந்து கிடைத்த அந்நூலை எழுதியவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்ற தகவல் எனக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் இன்ப அதிர்ச்சிகள் இவை. 

பெருமாள்முருகனின் புனைவல்லாத பங்களிப்புகள் கவிதையும் கவிதையின் நிமித்தமும், பதிப்பும் அதன் நிமித்தமும், பேசாப்பொருளைத் துணிந்து பேசுதல், துணிந்து பேசியவற்றைத் தொகுப்பாக்கஞ் செய்து ஆவணமாக்குதல், உரியவற்றிற்கு வழக்குரைத்தல், அஞ்சலிகள் வழி ஆளுமைகளின் பங்களிப்பிற்கு மதிப்பளித்தல், இலக்கிய விமரிசனஞ் செய்தல் எனப் பல நூறு பக்கங்கள் அடங்கியவை. அதன்படியே ‘ஓரிரு சொட்டுத் தூறல்’ என்ற இக்கட்டுரை நூலும் அமைந்துள்ளது; எனினும், இக்கட்டுரைகளுள் வெளிப்பட்ட குணத்தின் வழி இந்நூலை விமரிசனக் கட்டுரை எனக் கொள்ளுதலே பொருந்தும். 

கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கி இதுநாள்வரை எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தேர்வாக இத்திரட்டு அமைந்துள்ளது. பொதுவாகவே பெருமாள்முருகனின் ஆர்வம் இன்ன வகைமையின் பாற்பட்டது என்று ஊகித்தறிய முடியாதது; அது சல்லிவேரைப் போலத் தமிழ்ப் பனுவல் வெளியின் பல திசைகளிலும் கால்கொண்டு சத்துச் சேர்ப்பது. தமிழின் முதல் நாவல் எது? முதல் நாவல்களின் உள்ளடக்கத்தின் முக்கியப் பகுதி குறித்த விசாரணை, வட்டார நாவல்கள் குறித்த விவாதங்கள் என்று தொடங்கி மயிலன் ஜி சின்னப்பன் கதைகளின் நவீனத்துவம் என்பதுவரை இக்கட்டுரைகளின் பொருண்மைகள் விரிந்துள்ளன. 

முதல் கட்டுரையான ‘ஆதியூர் அவதானி சரிதம்: சிறு வரலாறு’ என்கிற கட்டுரையானது தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் (1876) முந்தைய பனுவலான ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூல் குறித்தது. இந்நூலை முதல் நாவலெனக் கூறும் முயற்சிகள், அதன் வரலாற்றின் ஒரு கண்ணியாகப் பெ.மு. இடம்பெறுதல், அதை ஒருசாரார் சொல்ல மறந்துபோதல், அந்நூல் அம்மானையே அன்றி நாவலில்லை, அவ்வாறு (நாவலெனக்) கூற வேண்டியதில்லை என்று பெ.மு. உறுதி பூணுதல், அந்நூல் குறித்த சந்தன மாரியம்மாளின் ஆய்வு நூலைப் பாராட்டுதல் என்பதாக விரிகிறது. 

குழந்தைத் திருமணம் குறித்த இரண்டு செய்திகளால் (தில்லை வாழ் அந்தணர்கள், பீகார் பார்ப்பனரான தமிழ்நாட்டின் மேனாள் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரின் பால்ய விவாகப் பெருமை விழைதல்) தூண்டப்பெற்று எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரையில், தமிழ்நாட்டு அரசியல் முயற்சிகளின் பொருட்டு இவ்விவாக வழக்கம் கட்டுக்குள் வந்தது முஸ்தீபாகவும் தமிழின் தொடக்கக் கால நாவல்களின் ஆசிரியர்களான ச. வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, பெருங்கவி பாரதியார் ஆகியோர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து வந்தமை, முதல் நாவலில் தொடங்கி 1930 வரையிலுமே பல தமிழ் நாவல்கள் குழந்தைத் திருமணத்தை மறுத்து எழுதிவந்தமை போன்றவை ஆராயப்பட்டும் எழுதப்பட்டுள்ளன. 

இவ்வாறு திரட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் சுருங்கக் கூறுவது என் நோக்கமல்ல என்பதால் இது நிற்க.

பெ.மு.வுக்கு முக்கியமற்றது எதுவுமில்லை என்பதாகவே கட்டுரைகள் அமைந்துள்ளன. கட்டுரையின் உள்ளடக்கத்தை இன்னதெனக் கருதிக் கொண்டாலும், அதை வெளிப்படுத்தும்போது அதில் பெ.மு. தடம் என்று சில உபரியான விசயங்கள் நிச்சயம் இருக்கும். இக்கட்டுரைகளிலும் எதனால் உந்தப்பட்டு அல்லது எதன் பொருட்டு எழுதப்பட்டது என்கிற குறிப்புகளுடன் கூடவே பிறர் அதிகம் அக்கறை கொள்ளாத சொல் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், வரலாற்று விடுபடல்களைக் களைதல், நோக்கு நிலை வேறுபாடுகளைச் சுட்டுதல், கோட்பாட்டாக்க முயற்சிகளில் விருப்பங் கொள்ளுதல், வழங்கி வரும் கோட்பாடுகள் குறித்துத் தனது இடையீட்டைச் செலுத்துதல் என்பதாக உள்ளடக்கம் விரிவு பெற்றுள்ளது. 

உதாரணத்திற்கு முதல் கட்டுரையையும் கடைசிக் கட்டுரையையும் எடுத்துக்கொள்ளலாம். முதல் கட்டுரையின் உள்ளடக்கம் எளிது (முன்னரும் கூறப்பட்டது). ஆதியூர் அவதானி சரித்திரப் பதிப்பு, அதை முதல் நாவலாகக் கொள்ளலாமா வேண்டாமா என்ற ஐயத்தை எழுப்பிக் கொண்டு விடையளித்தல் என்பதே அது. கடைசிக் கட்டுரையோ மயிலனின் சிறுகதைகளில் (பெருமாள்முருகன் கருதும்) நவீனத்துவம் பற்றி விவாதித்தல். இவ்வளவுதான். ஆனால் கட்டுரை எழுதுதலில் மைய நோக்கங்களைப் போலவே, பல்வேறு கிளை நோக்கங்களையும் கொண்டவராகப் பெருமாள்முருகன் இக்கட்டுரைகளில் வெளிப்படுகிறார். 

அவ்வாறு முதல் கட்டுரையில், ஆதியூர் அவதானி சரித்திரம் நூலை முதல் நாவலென பதிப்பித்தவர்கள், அந்நூலின் ஆசிரியரைக் குறித்துத் தந்த தகவல்கள் போதுமானவையாகவும் நம்பிக்கைக்குரியவையாகவும் இல்லை என்பதை முதலில் வெளிப்படுத்துகிறார். எனவே அதைக் கண்டடைதலே அக்கட்டுரையின் முதல் முயற்சியாக வெளிப்படுகிறது. அதன்படி, அந்நூலாசிரியரான சேஷையங்காரைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களைப் பின்தொடர்ந்து சென்று சில முடிவுகளை அடைகிறார் (அதில் எனக்கு உவகை அளித்த செய்தி சேஷையங்கார் நான் பணியாற்றும் மாநிலக் கல்லூரியில் பணியாற்றியவர் என்பதாகும்). போலவே மயிலன் கதைகளில் நவீனத்துவம் குறித்துப் பேசும்போதும் தனது பெரும்பாலான கதைகளுக்கு ஒற்றைச் சொல் தலைப்புகளைத் தருவதைப் பற்றி பேசுகிறார். அவற்றுள் சில சொற்களை “வட்டாரச் சொற்கள் என்றும் தீர்மானிக்க முடியவில்லை. அகராதிச் சொற்கள் என்றும் சொல்ல முடியவில்லை” என்று கூறுகிறார். இருந்தும் அவற்றிற்கான பொருளைக் கண்டுபிடித்துவிட்டு முடிவில், அவை பெரும்பாலும் ‘வழக்கிழந்த சமஸ்கிருதச் சொற்’களாகவும், கூடவே, பழந்தமிழ் வாடை கொண்டவையாகவும் உள்ளதைக் கண்டுபிடிக்கிறார். இத்துடன் முடிக்காமல் கட்டுரையைத் “தலைப்பைக் கதையோடு பொருத்திக் காண இன்றைய வாசக மனம் இத்தனை முயற்சி எடுக்குமா என்று தெரியவில்லை” என்றே முடிக்கிறார். 

அன்றியும் இவற்றைத் தான் அறிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளையும் வெளிப்படையாகக் கூறுவதன் வழி அது சார்ந்த பாடத்தையும் கற்றுத் தருகிறார். உதாரணமாக, மயிலனின் கதைத் தலைப்பான எக்கழுத்தம் பற்றிக் கூறும்போது, அது உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலினை நினைவுக்குக் கொண்டுவந்து, சீவக சிந்தாமணியை அவர் பதிப்பித்தபோது அதன் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் ஏக்கழுத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாக உ.வே.சா. கூறும் தகவலையும் அது குறித்த விவாதத்தையும் கட்டுரைக்குள் கொண்டு வருகிறார். “ஏக்கழுத்தமே எக்கழுத்தமாக வழங்குகிறதா தெரியவில்லை” என்று சொல்லி, கூடவே, அகராதி அச்சொல்லுக்குத் தரும் பொருள்களுள் ‘இறுமாப்பு’ என்ற பொருளே மயிலனின் கதைக்குப் பொருத்தமாக உள்ளது என்கிற முடிவுக்கு வருகிறார்; இவ்வாறே ஏனைய வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கட்டுரையின் உள்ளக்கிடை.

போலவே, ஆதியூர் அவதானி சரித்திரம் நூல் பற்றிய ஆராய்ச்சியில், 1865இல் வெளிவந்த ஜான் முர்டாக்கின் Tamil Printed Books நூலைப் பற்றிக் குறிப்பிட்டு, அந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு நூல்களின் பட்டியலைத் தருவதாகும் என்ற தகவலையும் தந்து, அந்நூலில் குணாகரம் (சேஷையங்கார் எழுதிய மற்றுமொரு நூல்) இல்லை என்பதால், அது 1866க்கும் 1875க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ஊகத்திற்கு வந்ததையும் கூறுகிறார். இதுவும் கற்பித்தலே. 

பதிப்புகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர் பெருமாள்முருகன். சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் குறித்துப் பேச வந்து அதில் “ஆய்வாளர்கள் சிரமப்படாத அளவில் தம் எழுத்துகளை எல்லாம் முடிந்தவரை தாமே நூல்களாக வெளியிட்டு ஆவணமாக்கிச் சென்றுள்ளார்” என்று சூழலைச் சாடுகிறார். இதைப் போகிற போக்கில் நிகழ்த்துகிறார் என்றால், பூமணி சிறுகதைகள் குறித்துப் பேசத் தொடங்குபவர் அக்கட்டுரையை, “பூமணி சிறுகதைத் தொகுப்புகளின் பதிப்புப் பிரச்சினையிலிருந்து கட்டுரையைத் தொடங்குகிறேன்” என்றே தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். பூமணியின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளின் பெருந்திரட்டான ‘அம்பாரம்’ 2007இல் வெளிவந்து, பிறகு இரண்டு கதைகள் சேர்க்கப்பட்டு ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ மூலம் மறுபதிப்புக் கண்டுள்ளது. இப்பதிப்பைச் சாடும் பெ.மு. தனது வருத்தத்தைத் “தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சாதனையாளர்களில் ஒருவரான பூமணியின் ஒட்டுமொத்தத் தொகுப்பை இன்னும் சற்றே கவனத்துடன் பதிப்பிக்க வேண்டும். ஆய்வுக்கும் வாசகர்களுக்கும் பயன்படும் தகவல்கள் எதுவுமே பதிப்பில் இல்லை. எழுதிய கால வரிசையில் கதைகள் வைக்கப்பட்டுள்ளனவா தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த வரிசையிலா என்பதைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. ஆகவே பூமணியின் எழுத்து முறைமையில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை அறிவது கடினமாக உள்ளது” என்று கூறுகிறார். தனது கட்டுரையின் நோக்கம் பூமணியின் சிறுகதைகளில் உள்ள மூவகை முரண்கள் (பின்னர் விளக்கப்படும்) குறித்துப் பேசுவதே எனினும், சொல்ல வேண்டியவற்றை எதன் பொருட்டும் ஒதுக்கலாகாது என்று சொல்லிவிடுவது பெ.மு.வின் கரிசனமாக இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. 

மற்றுமொரு கட்டுரை காலத்தின் தேவை கருதிய கண்டித்தலை உள்ளடக்கியது. தமிழ் இலக்கிய வரலாறு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டிக்கும் நோக்கத்தை முதற்பாதியாகக் கொண்ட அக்கட்டுரையின் தலைப்பு: ‘மாலையில் பொருந்தும் மலர்.’ பாடங்களுக்காகத் தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாற்று நூல்கள் எப்படி மோசமானவையாக, நவீன இலக்கியத்தின் மீது கிஞ்சித்தும் அக்கறை அற்றவையாக உள்ளன (வேறு பல கட்டுரைகளில் நவீன இலக்கியத்தைப் பாடமாக எடுக்க வேண்டிய தேவைவரும் சமயமெல்லாம் பேராசிரியர்களே நாவல்களை எழுதிவிடுவதையும், அது எத்தகைய லாபந்தரும் தொழிலாக அத்‘தமிழ்ச்சான்றோர்’களுக்கு இருந்துள்ளன என்பதையும் கூறியுள்ளார்) என்பதைத் தமிழறிஞராகிய தமிழண்ணலின் ‘புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ நூலைச் சான்றுக்கு எடுத்துக் கொண்டு விளக்கியுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரை முழுமையும் முக்கியமே எனினும், “நூலைப் பற்றியும் நூலாசிரியர்கள் குறித்தும் தகவல்கள் கிடைக்காத பழந்தமிழ் இலக்கியம் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும் இவ்விலக்கிய வரலாற்றில் எல்லா வகைத் தகவல்களும் எளிதாகக் கிடைக்கும் நவீன இலக்கியம் பற்றி மிகக் குறைந்த அளவிலேயே எழுதப்பட்டிருக்கிறது” என்று கூறுவது மிக முக்கியமான கூற்று. 

போலவே தமிழண்ணலின் இந்நூலில், ந. பிச்சமூர்த்தியின் பெயரை ந. பிச்சைமூர்த்தி என்றும் எம்.வி. வெங்கட்ராமின் பெயரை எம்.வி. வெங்கட்ராமன் என்றும் பி.எஸ். ராமையாவின் பெயரை பி.எஸ். இராமையா என்றும் குறிக்கப்பட்டுள்ளதையும், தி.ஜ.ர.வின் பெயர் தி.ஜ. ரங்கநாதன் என்று ஒருமுறையும் தி.ஜ.ர. என்று இன்னொரு முறையும் இருவரும் வேறுவேறானவர்கள் என்று கருதி அவர் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார். (இதே போன்ற பிழையையே தமிழ் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (NET-JRF) நடத்தும் யுஜிசி(UGC)யும் அதை நகல் எடுத்து - லட்சினையைக்கூட முழுமையாக அகற்றாமல் - SET தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசும் மேற்கொண்டதை முன்னர் சுட்டிக்காட்டி எழுதியுள்ளேன்; பலனில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?) போலவே இவ்வரலாற்று நூல் கால உணர்வற்றது என்றும் ஆசிரியரின் சாதனைச் சிறுகதை பற்றிய கவனம் இல்லாதது என்றும் மேலும் பல உதாரணங்களுடன், அங்கதத்துடனும் வெளிப்படுத்துகிறார்; ஆற்றாமை அதன் உட்கிடை. 

இந்நூலில் சு.ரா. பற்றிய இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டுமே அவருடைய பனுவல்களுக்கான (‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, ‘பிள்ளை கெடுத்தாள் விளை’) வாசிப்பை இடையீடு செய்யும் கட்டுரைகள். ‘வகைமாதிரிகளின் விளையாட்டுக் களம்’ என்ற கட்டுரையில் ஜே.ஜே. சில குறிப்புகளில் வரும் முல்லைக்கல் மாதவன் நாயர் என்ற பாத்திரத்தை வைத்து “அதை இடதுசாரிகளுக்கு எதிரான சிந்தனையைக் கொண்டது. . . என்று தூற்றிக் கொண்டிருப்பவர்களை” நோக்கிப் பேசுகிறது. போலவே, ‘பாலியல் முறைபிறழ்வு’ என்கிற கட்டுரையில், பிள்ளை கெடுத்தாள் விளையில் தலித் பெண் முறைபிறழ்வில் ஈடுபட்டது பற்றிய கதை தவறான நோக்கங் கருதியது என்று வாசிப்பவர்களுக்குப் பதிலளிப்பதாக உள்ளது. 

முந்தைய கட்டுரையில் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் இடதுசாரிகள் பற்றி மட்டுமல்ல ‘தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களான பல தரப்பு எழுத்தாளர்களின் வகைமாதிரிகளை இந்நாவல் முன்வைத்துள்ளது” என்று கூறி அதைப் பலவகைச் சான்றுகளுடன் சுவாரசியத்துடன் கூறுகிறார் பெ.மு. (‘கவிதைக்கு ஒரு வாசகன் கிடைத்து விட்டான் என்று சந்தோஷப்படுவதற்குள் அவன் தன் சட்டைப் பைக்குள்ளிலிருந்து ஒரு கவிதையை எடுத்து நீட்டுவான்’ என்பது பெ.மு. மேற்கோள் காட்டும் நாவலின் ஒரு வரி; இப்படிப் பல) 

இரண்டாவது கட்டுரையில் அக்கதையில் பாலியல் வன்புணர்வே நடைபெறவில்லை அல்லது அப்பெண் தலித் அல்ல, நாடார் என்பதாகச் சொல்லிச் சு.ரா.வைக் காப்பாற்ற முயலும் இது தொடர்பான முந்தைய வாசிப்புகளிலிருந்து விலகி, “பிறழ்வு நிகழ்ந்தது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று துணிந்தும், ஆனால் அக்கதை பாலியல் முறைபிறழ்வைப் பேசவில்லை. அப்பிறழ்வை இச்சமூகம் எதிர்கொள்ளும் விதம் பற்றியது கதை” என்றும் முடிவுரைக்கிறது. 

தர்க்கம் தேர்ந்த இவ்விரு கட்டுரைகளில் பின்னதிற்கு, கி.ரா., பூமணியின் கூற்றுகளை உரிய இடங்களில் மேற்கோள் காட்டும் பெ.மு., தலித் இலக்கியத்தின் செல்வழியைக் கேள்விக்குட்படுத்துகிறார். அப்பகுதியும் முக்கியமானதே. அதில் முக்கியமான ஒரு கூற்று: 

“தற்போதைய தலித் இலக்கியம் புனிதம் கற்பிக்க முயல்கிறது. தலித் மக்களை எப்போதும் சோகச் சித்திரங்களாகவும் இரக்கத்திற்குரியவர்களாகவும் உருவாக்குகிறது. நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க மதிப்பீடுகளை மனதில் கொண்டு அவர்களை வடிவமைக்கப் பார்க்கிறது. அவர்களின் கொண்டாட்டங்களைக் கூட இருட்டடிப்புச் செய்கிறது. இத்தகைய சூழலில் இலக்கியம் பற்றிய முழுமைப் பார்வை சாத்தியமில்லை. ஏதேனும் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து அதை ஒழுக்க மதிப்பீட்டுக்குள் பொருத்திப் பார்த்துச் சொல்வதே விமர்சனம் என்றாகிறது.”

இத்தகைய பிரச்சினைகளுக்கு அஞ்சிச் “சாதி அடையாளங்களை வலுவந்தமாகப் பிடுங்கி எறிந்துவிட்டு முதலாளி - தொழிலாளி, ஜமீன்தார் - அடிமைகள் என்னும் வகையில் படைப்புகளை முடக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது” (இதைத் திராவிட இயக்க இலக்கிய பாணி என்று பெயரிடுகிறார் பெ.மு.) என்று எழுதுகிறார். சாதியைக் குறித்து எழுதுவது பிரச்சினைக்குரியதாக அறிவுச் சூழல் கருதுவதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். பெ.மு. நூலில் இத்தகைய இடம் குறித்து மாதையன் சுட்டிக் காட்டியது, நாயக்கர் சமூகம் குறித்து அதிகமும் எழுதிய கி.ரா. அச்சாதியில் வழக்கில் இருந்த ஒரு முறைசாரா உடலுறவு குறித்துக்கூட (இளம் வயதுத் திருமணத்தில் பெண் பருவமடைந்து, ஆண் பக்குவமடையாத நிலையில், குழந்தைப் பேற்றிற்குச் சிறுவனின் தந்தை காரணமாதல்) எழுதாதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறார். 

பெ.மு. வட்டார இலக்கியம் குறித்துப் பேசும் இடங்களும் அபாரமானவை. ‘வட்டாரப் படைப்புகளும் ஒற்றை நோக்கும்’ கட்டுரை, ‘வட்டார இலக்கியம்’ என்பது ஆய்வுக்குத் தோதான வகைப்பாடு எனத் தொடங்கி, அதன் உள் வகைப்பாடுகள் குறித்தும் வட்டார இலக்கியம் என்பது கிராமம் பற்றியது மட்டுமா, நகரம் பற்றியதுமா போன்ற கேள்விகளை எழுப்பியபடி நீள்கிறது. இதில் அவர் கூறும் முடிபு ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஒரு வட்டாரத்தின் சில குறிப்பிட்ட அல்லது ஒரு சாதியைப் பற்றி மட்டும் எழுதுவதை வட்டார நாவல் என்றும் அதை எழுதியவரை வட்டார நாவலாசிரியர் என்றும் கூறுவது பொருந்தாது எனக் கூறுகிறார். “சாதியைப் பற்றிய எழுத்தாக இல்லாமல் சாதிகளைப் பற்றிய எழுத்தாக அமைந்தால்தான் கிராமம் பற்றிய முழுச்சித்திரம் கிடைக்கும்” என்கிறார். அப்படியாகத் தமிழின் வட்டார இலக்கியம் எதையும் நிகழ்த்தவில்லை என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தும் பெ.மு., தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த வங்க நாவலான ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவலை வேண்டுமானால் இத்தகைய நாவல்களுக்கு (கிராமம் பற்றிய முழுச் சித்தரிப்பைத் தரும் நாவல்) உதாரணமாகக் கொள்ளலாம் என்கிறார் (இரண்டு கட்டுரைகளில்). 

‘அல்எதார்த்த நாவல்களில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வும் மேம்பாடும்’ என்கிற கட்டுரை தமிழில் மாயஎதார்த்த நாவலாசிரியர்களின் நூல்களில் உள்ள தலித் மக்களைப் பற்றிய சித்தரிப்பில் மோசமானவற்றையும் நியாயமானவற்றையும் பற்றிக் கூறுகிறது. தமிழகத்தில் அனைத்துச் சாதியினருமே கறுப்பானவர்கள்தான் என்றாலும் இத்தகைய நாவல்களில் தலித்துகளைச் சுட்டிக்காட்ட கறுப்பே பலவகைகளில் வருவதைப் பல்வேறு ஆதாரங்களை அடுக்கிக் காட்டுவது ஓர் உதாரணம். இதுவொரு முக்கியமான கட்டுரை. ஆனால் இக்கட்டுரையில் அல்எதார்த்த நாவல்களுக்கு எதிர்தரப்பில் நவீனத்துவ நாவல்களை வைத்து, “நடுத்தர வர்க்கத்தின் மனம் சார்ந்த நெருக்கடிகளைப் பேசச் சாதி அடையாளங்கள் நிர்ப்பந்தமாகவில்லை” என்று அவற்றைக் கட்டுரையின் விவாதக் களத்திலிருந்து ஒதுக்கிவிடுவது பொருத்தமானதா என்று தெரியவில்லை. (உண்மையில், மாயஎதார்த்த நாவல்களுக்கு எதிர்நிலையில் வைத்துப் பேச வேண்டியது யதார்த்த நாவல்களையே அன்றி, நவீனத்துவ நாவல்களை அல்ல. உதா. நவீனத்துவச் சாயல் கொண்ட, ஆனால் யதார்த்த நாவலான நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ மாய எதார்த்த நாவலான தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’). 

சி.சு. செல்லப்பா, சி.என். அண்ணாதுரை, பிரபஞ்சன் ஆகிய ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார் பெருமாள்முருகன். அத்தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரைகள் இத்திரட்டில் அமைந்துள்ளன. 

இலக்கிய வரலாற்றில் இவர்களுக்கு உண்டான இடம், இவர்கள் குறித்த தனது தொடக்கக் கால அபிப்ராயங்கள், அவை பின்னாளில் எப்படி மாறின போன்ற தகவல்களோடு கூடவே, அவர்களுடைய கதையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளை எங்ஙனம் தான் தேர்ந்தெடுத்தேன் போன்றவையும், அவர்களுடைய முக்கியமான கதைகளை விளக்கிச் செல்லுதல் உள்ளிட்டவையும் இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுள் பிரபஞ்சனின் கதையுலகு வழக்காக எப்படி மனிதரின் கீழ்மையை எடுத்துக் காட்டுதல் என்பதிலிருந்து மேன்மையைக் காட்டுவதாக உள்ளது என்பதை உணர்த்தும் விதமும், கருத்து விளக்கக் கதைகளாக பெ.மு. அடையாளப்படுத்தும் அண்ணாதுரையின் கதைகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும், அவ்வகைக் கதைகளை எப்படிப் பூடகமின்மையுடன், சொல்லவந்ததை உணர்த்துதல் ஏதுமின்றி, எதையும் மிச்சம் வைக்காமல் சொல்லிவிடுகின்றன என்று காட்டுவதும் எனக்குப் பிடித்தவை. சி.சு.செ. மீது அதிகமும் மரியாதையை ஏற்படுத்துவது இன்னும் இரண்டு கட்டுரைகள். 

இன்னொரு கட்டுரை சுகுமாரனின் ‘உஸ்தாத்’ சிறுகதைத் தொகுப்புப் பற்றியது. அழகான கட்டுரை அது. சுகுமாரனின் மொழிபெயர்ப்பு குறித்து அதிகமும் யாரும் பேசுவதில்லை என்பது தொடங்கி, அவருடைய சிறுகதைத் தொகுப்பான உஸ்தாத்தின் தலைப்புக் கதையான உஸ்தாத் எப்படி ஒரு தகவலால் உந்தப்பட்டுப் புனைவாகப் பரிணமித்துள்ளது என்று பேசுவது அதன் உள்ளடக்கம். ‘ஓரிரு சொட்டுத் தூறல்’ தேவிபாரதிக்குச் சாகித்திய அகாதெமி தரப்பட்டபோது பெ.மு. எழுதியது; அடுத்த கட்டுரையான ‘நொய்யலின் காவியச் சாயல்’ தேவிபாரதியின் நொய்யல் நாவல் குறித்தது. இவற்றுள் தேவிபாரதியின் எழுத்து முறையில் ஏற்பட்ட மாற்றம் (முதலில் வட்டார வாழ்வியல், வட்டார மொழியைக் கைகொள்ளாமல் இருந்து, பின்னர் நாவல் எழுதும்போது கைக்கொண்டது) அவர் நாவல்களின் தனித்துவம் (பொதுவாக அதிகம் எழுதப்படாத சேவைச் சாதி வாழ்வியலை எழுதியது (குடிநாவிதர்), நொய்யல் ஆற்றைப் பற்றிக் கொங்கு எழுத்தாளர்கள் யாரும் எழுதாத நிலையில் ஆற்றின் தலைப்பிலேயே நாவல் எழுதியது) உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசியுள்ளார். 

மகாலிங்க ஸ்வாமி (கு.ப.ரா.வுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பெயர்), மாடும் பதிலியும் (பொருள் விளக்க வேண்டியதில்லை) என்பவை அதிக சுவாரசியமுள்ள கட்டுரைகள். போலவே பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ள முன்னுரையும். 

கி.ரா.வுக்கும் (துக்கத்தைக் குறை; சந்தோஷத்தை விரிவுபடுத்து), முத்தம்மாள் பழனிசாமிக்கும் (மலேசியாவில் கொங்குக் கிராமம்) எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் அபாரமானவை. பெ.மு. வழியாகக் கி.ரா.வையோ முத்தம்மாள் பழனிசாமியையோ வாசிக்கத் தொடங்கும் வாசகர்கள் பேறுபெற்றவர்கள். (எனக்கு முத்தம்மாள் பெ.மு. கட்டுரையின் வழிதான் அறிமுகமாகிறார்). டி.கே.சி.யை ஆதர்ஷமாகக் கொண்டு கி.ரா. உருவாகியுள்ளார் என்பது எனக்கு வியப்பான செய்தியாக உள்ளது. போலவே முத்தம்மாள் பழனிசாமியின் பங்களிப்பெனப் பெ.மு. கூறுபவை யாவும் என் வாசக ஈடுபாட்டிற்கு உவப்பானவையாக உள்ளன. புலம்பெயர் இலக்கியத்திலும் தன் வரலாற்று இலக்கியத்திலும் முத்தம்மாள் பழனிசாமி ஓர் ஆளுமையாகத் திகழ்வதைச் சான்றுகள் அடுக்கிக்காட்டி விளக்குகிறார். அதன் ஒரு பகுதி பரம முக்கியமானது: 

“சாதி, பாலியல், திருமணம் ஆகியவை பற்றி இங்கு நிலவும் பல விழுமியங்களைத் தகர்த்தெறியும் தன்வரலாற்று நூல் இது. இந்நூலை வாசிக்கும் ஒருவருக்கு இன்று நம் சமூகத்தில் நிலவும் பாவனைகள், போலிப் பெருமிதங்கள், ஆண்ட பரம்பரைப் பீற்றல்கள், பண்பாட்டு மரபு விதந்தோதல்கள் முதலியவை பற்றித் தெளிவுண்டாக வாய்ப்புள்ளது. ஆனால் அத்தகைய வாசிப்பு இந்நூலுக்கு இதுவரை அமையவில்லை. முத்தம்மாளின் குடும்பத்தினர் நல்ல கல்வி கற்று உலகின் பல இடங்களுக்கும் பரவிச் செழுமையான வாழ்க்கை வாழ்கின்றனர். கடைசித் தம்பி இராமசாமி பழனிசாமி மலேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளார். பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி வகித்தார். புலம் பெயர்ந்தோர் இப்போதைய வளமான தம் பின்னணியோடு வேர்களைத் தேடித் தமிழ்நாட்டுக்கு வரும்போது இங்குச் சாதிக் கம்பள வரவேற்புத்தான் முன்னணியில் நிற்கிறது. அதற்கு முத்தம்மாள் பழனிசாமியும் விலக்கல்ல.”

மேலும் இத்திரட்டின் மற்றுமொரு முக்கியமான பங்களிப்பென பழந்தமிழ் இலக்கியக் கோட்பாடுகளான ‘இறைச்சி’, ‘முரண்’ ஆகியவற்றைச் சமகால இலக்கிய விமரிசனத்திற்கு வேண்டி விரிவுபடுத்திப் பெருமாள்முருகன் பயனாக்கம் செய்துள்ளதைச் சொல்லலாம். ஏ.கே. ராமனுஜன், தமிழவன், அய்யப்ப பணிக்கர், க. ஜவகர், துரை. சீனிச்சாமி எனத் தொடங்கி சண்முக. விமல்குமார் வரை நீளும் தொல்காப்பிய வழித் திறனாய்வு வரலாற்றில் தனது இடையீட்டைச் செய்யும் பெருமாள்முருகன் இவர்கள் கவனத்தில் கொள்ளாத ‘முரண்’ என்னும் தொடை வகையை நவீன இலக்கிய விமரிசனத்திற்கு வேண்டி விரிப்பது மிகவும் புதிது. முரண் என்றால் என்ன, அதை வகைப்படுத்தும் உரையாசிரியர்கள் முயற்சிகள், மூவகை முரண்கள் என்று கொள்ளுதலே பொருந்தும் என்ற முடிவுக்கு வருதல் (மூன்று கட்டுரைகளிலும் இவை திரும்பத் திரும்ப வருகின்றன) போன்றவற்றை முதல் அல்லது இடைப் பகுதியாகவும், அவற்றைப் பொருத்திக் காட்டித் தி. ஜானகிராமன், அம்பை, பூமணி ஆகியோரின் படைப்புகளில் மூவகை முரண்களைக் கண்டுபிடித்து விமரிசித்தல் இரண்டாம் பகுதியாகவும் அமையும் இக்கட்டுரைகள் சுவாரசியமானவையாக, புத்துணர்ச்சி அளிப்பவையாக உள்ளன. 

அம்பை கதையை எடுத்துக் கொண்டு, அது சொல், பொருள் முரண்களை மட்டுமல்லாது, சொற்பொருள் முரணையும் கொண்டிருப்பதாலேயே பாடத்திட்டத்தில் தொடர்ந்து வைக்கக் காரணமாக உள்ளது என்று கூறுவது புதுநோக்கு. போலவே, சோசலிசக் கதைகளும், வேறு பல பிரச்சாரக் கதைகளும் சொற்பொருள் முரண்களைக் கொண்டவையாகவே உள்ளன என்று முடிவுரைப்பது அக்கதைகளின் எடுத்துரைப்பியல் சார்ந்த சிறந்த கண்டுபிடிப்புகள். (ஆனால் இத்தகைய கதை முடிவுகளை அவர் விரும்புவதில்லை). 

அன்றியும் இத்திரட்டில் பலரையும் பாராட்ட அவர் தயங்குவதில்லை. குறிப்பாக மாலையில் பொருந்தும் மலர்’ கட்டுரை சுப்பிரமணி இரமேஷ் தொகுத்த ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமரிசனமும் (2019)’ திரட்டு பற்றிய கட்டுரையாகும். அதன் தலைப்பே திரட்டிற்கான பாராட்டு ஆகும். போலவே முதல் கட்டுரையும் ஆய்வு நூலுக்கு எழுதிய அணிந்துரையே. நாவல் குறித்த ஒரு முக்கியப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதை விரிவாக ஆய்வுக்குட்படுத்தி முனைவர் பட்டம் பெற்று அதை ‘ஆதியூர் அவதானி சரிதம் - கதைக் கவிதையா? புதினமா? (2019)’ என்று நூலாக்கம் செய்துள்ள சந்தன மாரியம்மாளை, இலக்கற்ற தமிழ் ஆய்வுப்போக்கில் அவருடைய பங்களிப்பைப் பாராட்டி முடித்துள்ள கட்டுரை ஆகும். 

முத்தம்மாள் பழனிசாமி பற்றிப் பேசும்போது, அவருடைய தன் வரலாற்று நூலை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் முந்தைய பதிப்பிலுள்ள பிழைகளைக் களைந்து மறுபதிப்புக் கொண்டுவந்த தமிழினி வசந்தகுமாரின் முயற்சியையும் பாராட்டுகிறார். எனினும் இந்நூல்கள் தற்போது அச்சில் இல்லை என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

இப்படி நிறையவும் இத்திரட்டில் கூறவும் பாராட்டவும் உள்ளன. மொத்தமாக,

இத்திரட்டின் முழுமையிலும் ஒரு விமரிசகராகவே பெருமாள்முருகன் வெளிப்பட்டுள்ளார். இலக்கிய விமரிசனம் என்பது ஏதேனும் ஒரு இலக்கிய வகைமையின் நயம் பாராட்டலும் அதன் அல்நயம் பழித்தலும் என்பதாக மட்டுமே நின்றுவிடுவது இயல்பு. ஆனால் பெ.மு. அவற்றை மட்டுமல்லாது, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நூல்களின் உள்ளடக்கத்தில் வெளிப்படும் போலிக் கரிசனம், பதிப்பாளர்களின் பொறுப்பின்மை, வாசகர்களின் சோம்பல், வாசிப்பின் பிரச்சினைப்பாடுகள், புனிதங்களைக் கட்டுடைத்தல், பிரச்சாரக் கதைகளின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அதில் எஞ்சிய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுதல், இடக்கரடக்கல் உள்ளடக்கங்களை ஆராய்தல், இலக்கியத்தில் சாதி எனும் உள்ளடக்கம் குறித்துப் பேசிப் பார்த்தல், வட்டார இலக்கியங்களையும் விமரிசித்துக் காட்டுதல், வரலாற்று விடுபடல்களைக் களைதல், சில புனைவுகளின் அலுப்பூட்டும் எடுத்துரைப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவருதல், இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் தகுதியின்மை, பாடத்திட்டக் குழுக்களின் போதாமை உள்ளிட்டவற்றைப் பேசுதல் என விரிவுகொள்கிறார். அவருடைய இறைச்சி, முரண் கோட்பாட்டு விரிவாக்கத்தின் பயனாக்கக் கட்டுரைகளிலும் இத்தகைய விமரிசகராகவே வெளிப்படுகிறார். இத்தகைய கட்டுரைகளுக்காக எம் முன்னத்திக்கு எனது பாராட்டுகளும் வணக்கங்களும். 

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
றாம் சந்தோஷ் வடார்க்காடு

இயற்பெயர் சண்முக. விமல்குமார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்‌. கவிதை, சிறுகதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, பேச்சு எனத் தொடர்ந்து இயங்கி வரும் இவர், ’சொல்வெளித் தவளைகள்’, ’சட்டை வண்ண யானைகள்’, ’தொல்காப்பிய வழித் திறனாய்வு’ உள்ளிட்ட எட்டு நூல்களின் ஆசிரியர். 2022-ஆம் ஆண்டிற்கான பா.ரா. சுப்பிரமணியன் இளம் ஆய்வறிஞர் விருது பெற்றவர். தெலுங்கு, கன்னட மொழிகள் பயின்றுள்ளார். இவரது படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. மொழியியல் துறையில் திட்டப்பணியாளராகப் பணியாற்றிய றாம், தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ரமீஸ் பிலாலிஅக்காக்கள்நான் ஏன் பதிப்பிக்கிறேன்ழ என்ற பாதையில் நடப்பவன்சிறுகதைத் தொகுதிகஸல்சந்துரு மாயவன்ஆசிரியர் உரைகுறிகேட்டல்புதிய வருகைஇக்பால்ஆய்வுகருத்தரங்கங்கள்தவெகஈழம்பிம்ப அரசியல்இலக்கிய நிகழ்வுகள்டோனி பிரஸ்லர்மெல்லிய கோடுகள்தாரா கேம்பெல்நேர்காணல்சுஜித் லெனின்எழுத்தாளரின் மரணம்சாய் வைஷ்ணவிஆலடியான்பொம்மை கார்நகர மயமாக்கம்தொ.பத்தினாதன்அங்கதம்தலித் இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!