இலக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பை விரிவாக அணுகும்போது, இலக்கியத்துக்கும் அவற்றைச் சுற்றிய நிகழ்வுகளுக்கும் இடையேயான உறவைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. வாசிப்புக்கும் எழுதுதலுக்கும் இந்நிகழ்வுகள் உண்மையில் உதவுகின்றனவா? சமூகச் சூழலில் அவற்றின் பங்கு என்ன, அவை எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றன, அந்த நோக்கம் நடைமுறையில் நிறைவேறுகிறதா போன்ற கேள்விகள் முக்கியமானவை. பொதுவாக, பதின்ம வயதில் வாசிப்பை நோக்கி ஒருவரை இட்டுச் செல்லும் முக்கியக் காரணங்கள் காதலும் அரசியலும் ஆகும். இந்த இரண்டும் வாசிப்பை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கவோ, அல்லது குறிப்பிட்ட நோக்கத்தில் தேக்கமடையச் செய்யவோ வாய்ப்புள்ளது.
எனது வாசிப்பு அனுபவமும் பதின்ம வயதில்தான் தொடங்கியது. நூலகம் அல்லது வாசிப்பு வட்டாரங்களின் தொடர்பில்லாத சூழலில், என்ன வாசிக்க வேண்டும் என்ற தெளிவில்லாமல் இருந்த காலகட்டம். சுயமுன்னேற்ற வாசிப்பை வலியுறுத்தும் கல்வி அமைப்புகளையும், வயதுக்கே உரிய காதல் ஈர்ப்புகளையும் தாண்டி, லட்சியவாத அரசியலை நோக்கி வாசிப்பை நகர்த்தினேன். அந்தக் காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களின் வாசிப்பு அமைப்புகள் எனக்கு முதன்முதலில் அறிமுகமாயின. ஆனால் அவற்றில் இருந்தவர்களில் பலர் வாசிப்பைவிட கோஷங்களை முன்னிறுத்தினார்கள். உரையாடல்கள் மார்க்சியத்தின் மேலோட்டமான பார்வையிலேயே இருந்தன. இதனால் அவற்றிலிருந்து ஒரு விலகல் ஏற்பட்டது. இருப்பினும், தற்போதைய நிலையில் அவை ஓரளவு ஜனநாயகமாக மாறி, திறந்த உரையாடல்களுக்கு இடமளிக்கின்றன. அவற்றின் கிளை அமைப்பான ISCUF எல்லாத் தரப்பிலான வாசிப்பையும் உரையாட அனுமதிப்பதில் தயாராக உள்ளதென்பது ஆரோக்கியமானவொரு போக்கு.
இணைய வளர்ச்சி எனது வாசிப்பு உலகை மாற்றியமைத்தது. பேஸ்புக் போன்ற தளங்கள் வாசகர்களுக்கிடையே உரையாடல்களை உருவாக்கின. வாசிப்பிற்கு ஏற்ற புத்தகங்களைக் கண்டறியும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான தூரம் குறைந்தது. சென்னை புத்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் எழுத்தாளர், வாசகர், பதிப்பாளர் ஆகியோருக்கிடையே நேரடித் தொடர்பை உருவாக்கின.
ஆரம்பத்தில் இலக்கிய நிகழ்வுகள் எனக்கு அந்நியமாகவே தோன்றின. அவை குறுங்குழுக்களுக்கானவை என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் நண்பர்களின் அழைப்பின் பேரில் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது, வாசிப்பைப் பகிர்ந்து பேசுவதில் உள்ள ஆனந்தத்தை உணர்ந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாக்கிக்கொண்டேன்.
இலக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுவாக உருவாகும் கருத்துகளுக்கும் அவற்றின் உண்மை அனுபவங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. உதாரணமாக, ‘விஷ்ணுபுரம் விருது விழா’ குறித்து வெளியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் பிம்பம் இருந்தாலும், நான் கடந்த சில ஆண்டுகளாகக் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையில், அது தமிழில் இலக்கியத்தை மையமாகக் கொண்ட மிகச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்று என்று கூறலாம். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தங்குமிடம், உணவு, உரையாடல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த அனுபவமாக அமைகின்றன. முக்கியமாக, நிகழ்வுகளுக்கு வெளியிலும் சிறுசிறு குழுவாகத் தொடர்ந்து இலக்கிய உரையாடல்கள் நடைபெறுவது அதன் சிறப்பம்சமாகும். இதற்கு இணையாக, ‘குமரகுருபரன் கவிதை விருது விழா’ போன்ற நிகழ்வுகளும் இளம் படைப்பாளிகளுக்கு முக்கியமான தளங்களாக இருக்கின்றன.
வெள்ளிமலை பயிற்சி வகுப்புகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அந்த அமைப்பின் மொத்தப் பங்களிப்பை மறுப்பதற்கு அவை காரணமாக இருக்க முடியாது. சுனில் கிருஷ்ணன் முன்னெடுக்கும் காரைக்குடி ‘மரப்பாச்சி’ அமைப்பின் கூடுகைகள், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு ஆழமான விவாதங்களை நடத்துகின்றன. இதன்மூலம் வாசிப்பு அனுபவம் விரிவடைகிறது. இதற்கு ஒத்த முயற்சிகளாக அரிசங்கர் முன்னெடுக்கும் 'பனை', யாவரும் பதிப்பகத்தின் புத்தக அறிமுகங்கள், ஓசூர் ‘புரவி’ அமைப்பின் மாதாந்திரக் கூடுகைகள், எதிர் வெளியீடு மற்றும் பனுவல் புத்தக அங்காடிகளில் நடைபெறும் மாதாந்திர நூல் அறிமுக நிகழ்வுகள், லாவண்யா சுந்தர்ராஜன் நடத்தும் ‘அன்றில்' அமைப்பு, திருச்சியின் 'நாற்று' அமைப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புகள் தீவிர இலக்கியத்தை குறுங்குழு எல்லைகளிலிருந்து வெளியே கொண்டுவந்து, பரந்த வாசகர் பங்கேற்பை உருவாக்க முயல்கின்றன.
அதேசமயம், சில அமைப்புகள் சிறிய குழுக்களைத் தேர்வுசெய்வதன் மூலம் ஆழமான உரையாடலை உறுதிப்படுத்த முயல்கின்றன. ஓசூர் ‘புரவி’ அமைப்பின் ஆண்டுக் கூடுகை இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. இரு தினங்கள் நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று உரையாளர்கள் என அவர்களின் உரைகள் முன்கூட்டியே எழுத்து வடிவில் வாசகர்களுக்குத் தரப்பட்டு அவற்றைக் குறித்து அங்கு உரை நிகழ்த்தப்பட்ட பிறகு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இலக்கியத்தை அதன் தீவிரத்தன்மை குறையாது விவாதிக்க வழிவகை செய்யப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் நடத்தப்படுவதன் மூலம் ஒவ்வொருவரும் செயற்பாட்டாளர்களாக இருப்பதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.
மேலும், அகரமுதல்வன் முன்னெடுக்கும் ‘ஆகுதி' அமைப்பின் ஒரு நாள் நிகழ்வும் குறிப்பிடப்பட வேண்டியது. ‘நாயகி’ அமைப்பு பெண் எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கும் நிகழ்வுகள் இந்தச் சூழலுக்கு மிகவும் அவசியமானவை. காலச்சுவடு பதிப்பகம் கல்லூரிகளுடன் இணைந்து நடத்தும் நிகழ்வுகளும், அலர் பதிப்பகத்தின் ஆவணப்படத் திரையிடல் முயற்சிகளும் கல்லூரி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்க்கின்றன. சிறார் இலக்கிய அமைப்புகள் அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் இடதுசாரி அமைப்புகளின் பங்கு முக்கியமானதாகும்.
இன்றைய நிலையில் சமூக வலைதளங்களிலும் பெருமளவு வாசகர் குழுக்கள் உருவாகிவருகின்றன. சில இடங்களில் ஆரோக்கியமான வாசிப்பு உரையாடல்களும் பகிர்வுகளும் நடைபெறுகின்றன. இதன்மூலம் இலக்கியம் பரவலாகப் பகிரப்படுகிறது. இவ்வளவு ஆரோக்கியமான முன்னேற்றங்கள் இருந்தாலும், சில இடங்களில் குழு மனப்பான்மை வாசிப்பை ஒரு குறிப்பிட்ட கோட்டிற்குள் அடக்கத்தான் செய்கிறது. இது வழிபாட்டுத் தன்மையை உருவாக்கி எதிர்க் கருத்துகளுடனான திறந்த உரையாடலைத் தடுக்கிறது. இத்தகைய போக்குகள் இலக்கிய நிகழ்வுகளின் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகியவையாகும்.
எனவே, இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் தங்களது சுயமான சிந்தனையை இழக்காமல் இருக்க வேண்டும். இத்தகைய கூட்டங்கள் அறிவை விரிவுபடுத்தவும், வாசிப்பை ஆழப்படுத்தவும், சிந்தனையைச் செம்மைப்படுத்தவும் உதவியாக இருக்க வேண்டும். அதையே நோக்கமாகக் கொண்டு இலக்கிய நிகழ்வுகளை அணுகுவது அவசியமான காலத்தேவை ஆகும்.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

உமர் ஃபாரூக்
கிருஷ்ணமூர்த்தி
து. பிரபாகரன்
க. திருமூர்த்தி
ரமீஸ் பிலாலி
Be the first person to add a comment.