குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன்
15 Apr 2026, 7:33 am
0

பொம்மை கார்

அந்த மஞ்சள் நிறக் குழந்தைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தன்மீது தொடுக்கப்படும் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மௌனமாகப் படுக்கையில் படுத்திருந்த குழந்தை அந்தப் பொம்மை கார் எங்கு தொலைந்தது என்பதைத் தீவிரமாக யோசித்துக்கொண்டே தனது காற்சட்டைப் பையில் கையை விட்டுத் தேடியது. ஆனால் அதன் கைகளுக்குக் கொஞ்சம் தேங்காய்ப் பூவும் வறுத்த எள்ளும்தான் அகப்பட்டன..

தெருவின் கடைக்கோடியிலிருந்து வரும் நீலநிறக் குழந்தைதான் மஞ்சள்நிறக் குழந்தைக்காக எப்போதும் வறுத்த எள்ளைக் கொண்டு வரும். வறுத்த எள்ளுடன் தேங்காய்ப் பூவைச் சேர்த்து சாப்பிடுவதை நீலக்குழந்தைதான் மஞ்சள்நிறக் குழந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இன்று மதியம் அவ்வாறு வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து எள்ளும் தேங்காய்ப் பூவும் கலந்த தின்பண்டத்தைச் சாப்பிட்டுக்கொண்டே விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் தான் வைத்திருந்த பொம்மைக் காரைத் தவறவிட்டிருந்தது அம்மஞ்சள் நிறக் குழந்தை. தொலைந்தது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி இரு குழந்தைகளும் விளையாட்டு முசுவில் ஆழ்ந்திருந்தார்கள்.

அன்றிரவு வேலைக்குப் போய்விட்டு வந்த அப்பா தரையில் அமர்ந்து சாப்பிட்டவண்ணம் மஞ்சள்நிறக் குழந்தையைப் பார்த்து 

“அந்த புது காரு எங்க” என்று கேட்டார்.

படுக்கையில் படுத்து அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, அப்பா சொன்னது கேட்கவில்லை என்ற பாவத்தில் மேலும் அலைப்பேசியின் திரையில் மூழ்குவதைபோல் முகத்தை வைத்துக்கொண்டது.

“ஒன்ன தானே கேக்குறேன், எங்க அந்த காரு” முன்பைவிட உரத்திருந்த அப்பாவின் குரலால் அலைபேசியைக் கீழே வைத்துவிட்டு அவரைப் பார்த்தது அந்தக் குழந்தை.

“எங்க தொலைச்சிட்டியா அதுக்குள்ள, இருவத்தஞ்சு ரூவாடா அது”

என்று மிரட்டும் தொனியில் அப்பா கேட்க, அதற்கு அந்தக் குழந்தை

“உள்ரூம்ல” என்று சினுங்கியப்படி சொன்னது.

“போய் எடுத்துட்டு வா போ”

கட்டிலை விட்டு எழுந்து உள்ளறைக்குள் ஓடிய குழந்தை வெறுமனே அறையைச் சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டு நின்றிருந்தது. அப்பாவின் குரல் வெளியறையில் இருந்து கேட்க அழுதுக்கொண்டே அப்பா முன்போய் நின்றது. கையைக் கழுவிக் கொண்டே குழந்தையை பார்த்த அப்பா

“யார்கூட வெளையாண்ட”

குரல் கேட்டுச் சமையலறையை விட்டு வெளியே வந்த அம்மா

“அந்த சீனீயூட்டுப் புள்ளகூடத்தான்”

“அண்ட குறும்மமூட்டு புள்ளய ஏன் வூட்குள்றலாம் உட்ற”

“நம்மூட்டு சனியன்தான் ஒட்டாரம் கட்டுதே அதுக்கூட வெளையாடனும்னு” என்று சொல்லிவிட்டு அம்மா அந்த மஞ்சள்நிறக் குழந்தையைப் பார்க்க அது மேலும் அழத்தொடங்கியது.

’தெருவுல வெளையாட மாட்டாங்களாம்மா” என்றவர் குழந்தையிடம்

“வாய மூடு” என்று அதட்டியவராய் அம்மாவைப் பார்த்து “அந்தப் புள்ளதான் எடுத்து வச்சுருக்கும் காத்தாலக்கி போய் வாங்கியாந்துரு” என்று சொல்ல அம்மா தலையாட்டிவிட்டுச் சமையலறைக்குள் போனார். அழுதுக்கொண்டிருந்த குழந்தை ஓடிப்போய் கட்டிலில் படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டது.

 

தாரகன்

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்து வருகிறது. ஆனால் அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக் கொண்டே இருந்தான். இத்தகு அலைகழிப்பை மேற்சொன்ன கணம் உடைத்தெறிந்தது. அறையினுள் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அவனுடைய எழுத்து மேஜை மட்டும்தான். அவன் எப்போதும் அதை உபயோகப்படுத்தியதேயில்லை. கடந்த மாதம் அவனுக்கு வந்த பிறந்தநாளின்போது அதில் வைத்து கேக் வெட்டினான். அதன் துணுக்குகள்கூடக் கறையாய் அதில் இன்னமும் ஒட்டியேயிருந்தது. தனிமையுணர்வால் பீடிக்கப்பட்டிருந்த அவனது வாழ்வை மீட்டெடுக்க அவன் நிறைய தனித்த பயணங்களை மேற்கொண்டான். வயதை அசட்டைச் செய்யாது அனைத்துவிதமான பெண்களையும் புணர்ந்தான். சில நேரங்களில் ஆண்களையும்கூட. அது எதுவும் அவனுக்கு மீட்சியளிக்கவில்லை. மாறாக அவையெல்லாம் அவனை மேலும் அயற்சியடைவே செய்தன. வாழ்வின் மீதான சலிப்பை மேலும் அதிகரிக்கவே செய்தது. அப்போதுதான் ஏதேனும் எழுத வேண்டும் என்று முடிவுக்கு வந்திருந்தான். ஒருநாள் மதியம் கடைத்தெருவில் ஓர் ஓவியனைப் பார்த்தான். இந்த உலகில் அவன் ஒருவன் மட்டும் இருப்பது போன்ற பாவனையில் ஆழ்ந்த கவனத்தோடு வரைந்து கொண்டிருந்தான். அவன் உருவங்கள் எதையும் வரையவில்லை. அந்த ஓவியப் பலகை முழுக்கப் பல்வேறு வண்ணங்கள் மட்டுமே சிதறிக்கிடந்தது. நெடுநேரமாக நின்று அந்தப் பலகையில் நிறைந்திருந்த வண்ணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டுக் குப்பைதொட்டி உடைந்த பிரஸ்களாலும், அவன் வீட்டுத் தரை கொட்டப்பட்ட வண்ணக் கலவைகளாலும் நிரம்பி வழிந்தது. அதில் கால்வைப்பதை அவன் விரும்பவில்லை. வரைவது இயல்பில் பெருஞ்செயல் அதற்கு அவன் தன்னை ஒப்புகொடுக்கத் தயாராக இல்லை. எதற்காகவோ ஒரு வாலிபன் பூங்காவில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான். அவனது கைகளில் கைக்குட்டை இல்லை. வழியும் சளியைத் தன் சட்டையினால் துடைத்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். அவனைச் சுற்றிலும் மனிதர்கள் நடைப்பயிற்சி செய்துக்கொண்டும், காதலித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். அந்தப் பூங்கா கைக்குட்டைகளற்றது. வாழ்வே கைக்குட்டைகளற்றது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்க பூங்காவை விட்டு வெளியேறி ஓடத் தொடங்கினான். அதன்பின், நீண்ட நாட்களாய் வீட்டை விட்டு வெளியேவரவில்லை. அலுப்பூட்டும் நிறைய சுயமைதுனங்கள் நிறைந்த பகல் இரவுகளைக் கடந்த பின் இன்று அந்த முடிவிற்கு வந்து சேர்ந்தான். மேஜையை இழுத்து மின்விசிறி நேர்கீழே போட்டான். மேஜைமீது ஏறி நின்றபோது மின்விசிறி எங்கோ உயரத்தில் இருப்பதாய்ப் பட்டது. அவன் வீட்டில் சேலைகளோ அல்லது நீளமான துணிகளோ இல்லை. வெறுப்படைந்தவன் மேஜையை விட்டுக் கீழிறங்கி நகரம் முழுக்கக் கயிறுக்காக அலைந்து திரிந்தான். அந்த இரவு நேரத்தில் கடைகள் எதுவுமில்லை. இறுதியாக ஒரு வீட்டின் கொடிக்கயிறைக் கண்டைந்தான். மின்விசிறியில் கயிறை நன்றாகக் கட்டியபின் அதைக் கழுத்தோடு நன்கு பிணைத்துக் கொண்டான். மேஜையில் இருந்து முழுவேகத்தோடு குதித்தான். தலை வெடிக்குமளவிற்கு அழுத்தம் அதிகரிக்கும்போது எழுத்து மேசை மீது அந்தரத்தில் ஆடும் தன் கால்களைத் திரும்பவும் பதித்துக்கொள்ள மிகுந்த பிரயாசை செய்து பார்த்தான். ஆனாலும் அதற்கெல்லாம் அப்போது எந்தப் பொருளுமில்லை. கழுத்து நரம்பு மெல்ல அறுப்படத் தொடங்கியபோது, அறையின் ஒவ்வொரு பரப்பிலும் ஜீவனிருப்பதை உணரத் தொடங்கினான். ஆனால் அப்போது நேரம் கடந்திருந்தது. இதனிடையே வெளியில் ஒளி நிறைந்த வானும், வாழ்வும் எப்போதும் போல் நகர்ந்துகொண்டே இருந்தது.

 

அப்பாவின் குழி

அப்பாவின் நினைவாக எஞ்சியிருப்பது எங்கள் வீட்டின் முன் இருக்கும் அப்பா தோண்டிய அந்த ஆழமான குழிதான். நானும் தங்கையும் சேர்ந்து அக்குழிகளில் எப்போதும் மலர்களை நிரப்புவோம். காலைக் கடன்கள் கழிக்கப் பாழி பக்கம் செல்லும்போதும், பள்ளிக்கூடம் சென்று வரும் போதும், விளையாடச் செல்லும்போதும் என எப்போதும் ஓய்வின்றி நானும் தங்கையும் அப்பாவின் குழிக்கான மலர்களைச் சேமித்துக்கொண்டே இருப்போம். சில நேரங்களில் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து கொள்வாள் என்றாலும், கழிப்பறைக் கட்டுமானத்தை எப்படியேனும் தொடர வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அதன் பொருட்டே அப்பா அந்தக் குழியைத் தோண்டினார். நானும் தங்கையும் அன்று படிக்கட்டில் அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.. அன்றிரவு அப்பா செத்தும் போனார். அன்றிலிருந்து தான் நானும் தங்கையும் மலர்களைச் சேமிக்கத் தொடங்கினோம்.

 

சதுக்கம்

வெயிலும் இருளுமற்ற அந்த மாலை நேரத்தில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு அடியில் உள்ள நகர சதுக்கத்திற்குச் செல்வது அவனது திட்டமாக இருந்தது. அது அவனது அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்று. மகிழ்ச்சி நிறைந்த மனிதர்கள் கூடும் அச்சதுக்கத்திற்கு மாலைநேரம் கூடுதல் வசீகரத்தைக் கொடுக்கும். அப்படியான சூழலில் அம்மனிதர்களுக்கு மத்தியில் அமர்ந்து தேநீரை உறிஞ்சும் அந்தச் சில கணங்கள் வெக்கை நிறைந்த நகரத்தின் அவசரங்களிலிருந்தும், தனிமையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் வாய்ப்பினை அவனுக்கு வழங்கும்.

இயர்போட்ஸைக் காதுகளில் பொருத்திக்கொண்டவன் நீண்ட யோசனைக்குப் பின் அலைபேசியில் ஏ. ஆர். ரஹ்மான் இசைத்தொகுப்பைத் தெரிவுசெய்தான்.

அவனது இருசக்கர வாகனம் சீரான வேகத்தில் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உதயம் தியேட்டரைக் கடந்த போதுதான் அந்தப் பெண் எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள். அவன் வைத்திருந்ததைப் போன்றொரு இருசக்கர வாகனத்தைத்தான் அவளும் ஓட்டி வந்தாள். இவனைக் காட்டிலும் அவளின் சீரான பராமரிப்பில் அந்த இருசக்கர வாகனம் மிளிர்ந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு அசூயைக் கொண்டவன் சாலையின் மீது கவனத்தைக் குவித்து வண்டியை இயக்கினான். கண்ணாடி வழியே பார்த்தபோது, அவள் அவனைப் பின் தொடர்வதாய்ப்பட்டது. அதனால் வண்டியின் வேகத்தை அதிகரித்தான். அப்போது அவளும் வேகத்தை அதிகரிப்பதாய்த் தோன்றியது. அவன் மேலும் வேகத்தைக் கூட்ட அவளும் அப்போது வேகத்தைக் கூட்டுவதுபோல் தெரிந்தது. காசி திரையரங்கத்தைக் கடந்து மேம்பாலத்தை அவன் தொட்டபோது மின்னல் வேகத்தில் அவள் அவனைக் கடந்திருந்தாள். அந்த நேரத்தில் அவனுக்குள் எழுந்த அவமான உணர்வால் முகம் சுண்டிப்போனது. மேலும் கடுமையான மூர்க்கமொன்று அவனது உடலில் வேகமாகப் பரவியது.

முழுப் பலத்தோடு அந்த மனிதன் வண்டியை முடுக்கியபோது அதே மூர்க்கத்தோடு சீறிப் பாய்ந்தது. அவன் மேம்மபாலத்தின் மத்திய பகுதியை அடைந்த நேரத்திற்கெல்லாம் அவள் மேம்பாலத்தைவிட்டுக் கீழிறங்கியிருந்தாள். அவன் மேம்பாலத்தை விட்டுக் கீழறிங்கியபோது லயாலி சர்வதேச உணவகம் எதிரே உள்ள போக்குவரத்துக் குறிகை அருகே சென்றிருந்தாள். சிவப்பு விளக்கு எரிந்தும் அவள் நிற்கவில்லை. அவனும் அதேபோல் அவளை வேகமாகப் பின் தொடர்ந்தான். அந்த வேகத்திற்குப் பராமரிப்பற்ற அவனது வாகனம் எலும்பும் தோலுமான குதிரையைபோல் அதிரத் தொடங்கியது. அவளைப் பின்தொடர்ந்தே அவன் ஒலிம்பியாவைக் கடந்தான். கத்திப்பாரா மேம்பாலத்தைக் கடந்தான். அதன் கீழே நகர சதுக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அப்போது சாலையும் அவனது சக்கரமும் உராய்ந்து கொள்ளாது காற்றில் சில கணங்களுக்கு மிதந்தலைந்தது. அவனது வேகமானி தொண்ணூறைத் தொட்டிருந்தும் அவள் தன்னை முந்துவதற்கு அவனுக்கு எந்த இடமும் தரவில்லை. “தேவுடியா முண்ட” என்ற கருவிக் கொண்டவன், கார்களுடையில் அவசரகதியில் இடது வலமாக வளைத்து முன்னேறினான். அந்த வளைத்தலில் நேர்த்தி என்று எதுமில்லை அனுபவமின்மையும் பதட்டமும்,வெறியுமே நிறைந்திருந்தது. அவளது வாகனம் விமானநிலையச் சாலையில் இலகுவாக பறந்துக் கொண்டிருந்தது. அவளுக்குப் பின்னால் அவன் மல்லுகட்டி முன்னேறி வந்துக் கொண்டிருந்தான். விமானநிலைய சிக்னலை கடந்தவுடன் அவளது வண்டியின் மெல்ல வேகம் குறைய தொடங்க அவனோ உற்சாகத்தோடு மேலும் வேகமெடுத்தான். இன்னும் சில தப்படிகள்தான். ஆனால் அத்தனை எளிதாக அதைக் கடக்க முடியவில்லை.. ஒரு கணத்திற்கு அருகில் வருவதும் மறுகணத்திற்குத் தள்ளிப் போவதுமாய் அவள் போக்கு காட்டினாள். இறுதியாக, கண்களை மூடிக் கொண்டவன் பற்களை இறுக்கமாகக் கடித்தப்படியே நன்கு வண்டியை முடுக்க அவளை அவன் கடந்திருந்தான். வெறியோடு உரக்கச் சிரித்தவன் எங்கும் நில்லாது தன் முன்னே இருந்த சாலையில் சென்று கொண்டே இருந்தான். அவனது சிந்தையில் இருந்து வசைச்சொற்கள் சாலை முழுக்கச் சிதறிக் கொண்டே இருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் அவன் எல்லாவற்றையும் இழந்திருந்தான். அதன்பின் பாடல்கள் முதலான அனைத்தையும் மறந்திருந்தான்.

 

அநித்யம்

தோலைச் சுட்டெரிக்காத வெயிலில் குளித்துக் கொண்டிருந்த காலைப் பொழுதொன்றில் அவன் இரும்புப் பாதை கடவை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். அதில் அத்தனை நிதானமிருந்தது. அவனுள் தொழிற்படும் அந்த நிதானம் அவனுடன் பிறந்தது இல்லை. தேன் கூட்டில் துளித் துளியாய் தேன் சேர்க்கப்படுவதைப் போல் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்து அவன் சிறிது சிறிதாகச் சேர்த்துக்கொண்டது. 

அத்தகு நிதானத்தில் தான் அவனது இரசனையான வாழ்வு பொதிந்திருந்தது. அவன் வருவதற்கு முன்பே நூற்றுகணக்கான வாகனங்கள் கடவின்முன் நின்று கொண்டிருந்தது. அந்தக் கடவின் எதிர்புறம் இருக்கும் மற்றொரு கடவருகேயும் இதேபோல் வாகனங்கள் நிறைந்திருந்தது. தொடர்வண்டி எங்கு வந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாத அளவிற்குச் சந்தி அமைதியாக இருந்தது. இரண்டு இரும்புப் பாதைகளுக்கு நடுவே வெள்ளைச் சட்டையணிந்த வாயில் காப்பாளர் பச்சை மற்றும் சிவப்பு நிறக் கொடிகளை கையில் வைத்துக்கொண்டு தொடர்வண்டி வரும் திசையை எதிர்ப்பார்த்து நின்றுகொண்டிருந்தார். கடவருகே வந்து சேர்ந்தவன் தனது வாகனத்தின் பக்க நிலைப்பொறியை எடுத்து நிறுத்திவிட்டுத் தன்னை சுற்றி இருக்கும் வாகனங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். 

சுற்றிலுமிருந்த வாகனங்கள் அனைத்தும் பாயக் காத்திருக்கும் விலங்கினைப் போல் உறுமிக் கொண்டிருந்தது. வாகனங்களை அவ்வாறு உறும வைத்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் இரைகளாய் அவர்கள் முன்னிருந்த பாதைகளைப் பார்க்க முடிந்தது. தூரத்தில் தொடர்வண்டியின் ஓசை கேட்கத் தொடங்கியதுமே வாகனங்களின் உறுமல் சப்தங்கள் அதிகமாகியது. அவற்றில் இருந்து வெளியான புகையின் நாற்றம் அவனுக்குக் குமட்டலை ஏற்படுத்தியது. மட்டுமன்றிப் பின்னால் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் இவனை நோக்கி இடைவிடாது ஒலிகளை எழும்பிக்கொண்டிருந்தன. அந்த இடம் முழுவதுமே இதுபோன்ற ஒலிகளாலும் புகையினாலும் நிரம்பியிருந்தது. தொடர்வண்டி அருகே நெருங்க நெருங்க இவைகளின் சப்தமும் அதிகரித்துக்கொண்டே போனது. முழுதும் சிவப்பு நிறம் கொண்ட தொடர்வண்டி சந்தியருகே வந்தது. அந்த நிறத்தில் இழைந்திருக்கும் இளமையில் அவன் இலயித்துப் போயிருந்தான்.

தொடர்வண்டி கடந்து போனபோது அதன் பெட்டிகளை ஒவ்வொன்றாக எண்ணுவது அவனுக்கு மகிழ்வைக் கொடுத்தது. இதற்கிடையே அவனைச் சூழ்ந்துள்ள வாகனங்களின் சப்தங்கள் உச்சஸ்தாயில் இருந்தது. தொடர்வண்டி அந்தச் சந்தியை வேகமாக கடந்து சென்றது. இப்போது அனைத்துக் கண்களும் வாயிற்காப்பாளனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்க அந்தக் கூட்டத்தில் இருந்து சற்று வெளியேறி பொறுமையாகச் சந்தியை கடக்கலாம் என்று அவன் நினைத்தபோது சட்டெனக் கடவு நீக்கபட்டது. இருபுறங்களில் போர் வீரர்கள் மோதிக்கொள்வதுபோல் கடவின் இருப்புறமிருந்த வாகனங்களும் எதிரெதிரே கட்டற்று ஓடத்தொடங்கின. பெரும் நீரோட்டம் ஒன்றில் அகப்பட்டதைப் போன்ற மனநிலையில் அவன் இயங்க வேண்டிருந்தது. திடுமென அது எப்படி நடந்ததென்று யூகிக்க முடியவில்லை அதற்கான அவகாசம் அவனுக்கில்லை . அவன் காலின் மீது அவன் வாகனம் அந்த நெரிசலுக்கு மத்தியில் வீழ்ந்துக் கிடந்தது. இரும்புத் தண்டவாளத்தை பற்றிருந்த அவன் கைகளில் ஒரு வாகனம் ஏறி இறங்கியது. அவனுடைய குருதி சூடாக வெளியேறி தண்டவாளத்தை நிறைக்கத் தொடங்கியது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அருண்பாண்டியன் மனோகரன்

திருச்செங்கோட்டை சேர்ந்த எனது முதல் நாவல் அணங்கு எதிர்வெளியீடாக வெளியாகியிருக்கிறது. மட்டுமன்றி எனது குறுங்கதைகள் தொடர்ந்து நீலம், தினவு, மணல்வீடு, உயிர்மை போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கிறது.சினிமாவில் வேட்டையன், யாத்திசை போன்ற படங்களில் முதன்மை உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். தற்சமயம் முதல் படம் இயக்குவதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இருக்கிறேன்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

இலக்கிய அறிமுகம்இலக்கிய நிகழ்வுகள்ஜார்ஜ் ஜோசப்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்நாஞ்சில்நாடன்எழுத்தாளரின் மரணம்இலக்கிய விமர்சனம்தலையங்கம்இக்பால்அலர் பதிப்பகம்கருத்தரங்கங்கள்பின்னவீனத்துவம்பிப்ரவரி தினம்மழைவில்ம.கேசவன்வாசகர் கூட்டம்சீர்மை இதழ்ழ என்ற பாதையில் நடப்பவன்தாரகன்கவிதைகள்கடைசி வெடிச்சத்தம்சுஜித் லெனின்சீர்மைசதுக்கம்கவிதையியல்விமர்சனம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்பெருங்கொங்கை பூத்தாள்அநித்யம்பிரான்ஸ் காஃப்கா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!