சிறுகதை நடப்பியல்

நிலமெங்கும் பூத்த முகம்

கு. இலக்கியன்
15 Apr 2026, 7:33 am
0

னி இறங்கியிருந்த வானில் சூரியன் சுணக்கத்தோடு இருந்தது. நெடுநேரம் நடந்த முத்தாவுக்குக் கால்களை நீட்டி நொடக்கி அமர வேண்டும்போல் இருந்திருக்கலாம். உட்கார இடம் எதுவென்று மனம் தேடவில்லை. நின்ற இடத்திலேயே உட்கார்ந்தான். "இந்தப் பூமி மனுசனை எப்படியெல்லாம் தாங்குது? எவ்வளவு பெரிய அயோக்கியனா இருந்தாலும் ஒரு எதிர்ப்பும் காட்டறதில்ல... ஒரு மறுப்பும் சொல்றதில்ல..." மனதில் சட்டென ஒரு சுழலைப்போல வந்து திரும்பிய நினைவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மழை வருமா என்று வானத்தை நிமிர்ந்து பார்த்தான் முத்தா. தாழத் திரண்டிருந்த மேகம் கொஞ்சம் இருட்டியும் இருந்தது.

காற்றில் அல்லாடும் ஓர் உயிரற்ற சரடுக்கு, காற்று எந்தப் பக்கம் வீசினால் என்ன? மழையோ வெயிலோ பெய்தாலென்ன? காய்ந்தாலென்ன? முத்தாவும் இப்போது ஓர் உயிரற்ற சரடுதான். நீண்டு நெடிந்திருந்த தன் கால்களை நீட்டியும் மடக்கியும் உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினான். அப்போது, வானம் சன்னத்தூறலுக்கு இறங்கியது. மனம் புறப்படத் தயாராகிவிட்ட பின்பு சூழல் ஒரு பொருட்டல்லதானே. முத்தா எழுந்து போய்க்கொண்டிருந்தான். சற்று ஓய்விற்குப் பிறகான அவனின் நடை கொஞ்சம் துடிப்போடு இருந்தது. ஆனாலும் முத்தாவின் கால்கள் காலத்தால் தளர்ந்த கால்கள். அது சாக்கடைக் குழிக்குள்ளிருந்தும் பிணக் குழிக்குள்ளிருந்தும் மேலேறி வந்துவிடப் போராடிச் சறுக்கித் தளர்ந்த கால்கள். ஒருவேளை முத்தாவின் கால்கள் பேசத் தொடங்கினால் அது இந்த மனுசங்களின் நாத்ததைப் பற்றியதாகவேதான் இருக்கும்.

நாத்தம் பற்றிப் பேசுகிற சொற்களில்கூட நாத்தம் தங்கியிருப்பதைப்போல, முத்தாவின் சொற்களில் வலி தங்கியிருக்கிறது. வார்த்தைகளில்கூட, கசக்கிற வாழ்க்கை முத்தாவினுடையது. அது சமவெளிக்கும் சாக்கடைக் குழிக்குமான இடைவெளி கொண்டது. குழிக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பனுக்கு வானம் குறுகலாகத்தானே தெரியும். அத்தகைய குறுகலானதுதான் அவன் வாழ்க்கை. அதற்காக முத்தா ஒருநாளும் வெறுப்போ குற்ற உணர்வோ கொண்டவனில்லை. அது மேல் கீழாக, தலை கீழாக இருக்கிற இந்தச் சமூகம் கொள்ளக்கூடியது என்பதைக்கூட அறியாதவன் முத்தா. ஒரு மின்னல் கீற்றைப்போலப் பளிச்சிட்ட முத்தாவின்  கண்கள்தான் இப்போது துயரம் அப்பிப் பழுப்பேறியிருக்கின்றன.

முத்தாவை அந்தச் சிறு நகரத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணிக்கு ஒப்பந்த பணியாளனாக சேர்த்துவிட்டார் தூரத்து உறவுக்காரர். முத்தாவின் அந்த வயசும் வாலிபமும் பழக்கப்படாத பல செயல்களுக்குக் காலம் அவனைப் பழக்கியிருந்தது. பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டுக் கழிவறையில் அவர் மனைவி தவறவிட்ட ரத்தினக்கல் மோதிரத்தை செப்டிக் டேங்கிலிருந்து அலசியெடுத்த அன்றுதான் முத்தா மதுவின் முதல் வாடைக்குப் பழகினான். "பீ நாத்தத்தைவிடக் கொடுமையா இருக்கே இந்தச் சாராய நாத்தம்" என்ற முத்தாவின் வார்த்தைகளைக் கேட்டுப் பல பேர் சிரித்துக்கிடந்தனர்.

பிறகு எத்தனையோ மலக்குழிகளை வாரியெடுப்பது, சாக்கடைக் குழிகளுக்குள் முழிப் பிதுங்குவது, மூத்திரச் சந்துகளை நறுமண மிக்கவைகளாக மாற்றுவது, கல்யாணம், காரியம், எழவு வீடுகளென்று எல்லா இடங்களிலும் வாருகோலோடு போய் நிற்கப் பழகிவிட்ட முத்தா இப்போது விடலைக்கே உரிய முறுக்கில் இருந்தான். முத்தாவின் மனம் ஒரு மாதிரி ஏக்கமும் தவிப்புமாக இருந்தது. மதுவாடையில்லாமலே பொழுதுகள் பரவசமாகியிருந்தது. பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அவன் வரத்துக் குறையும்போதெல்லாம், எங்காவது குந்திக்கொண்டு பாண்டிச்சி மகள் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பான்.

பஞ்சாயத்து தலைவரின் பாதி அதிகாரம் பாண்டிச்சிதான். தலைவரின் அநேக ஓய்வு பாண்டிச்சி வீட்டில்தான். மர வேலைபாடுகள் கொண்ட பழமையான வீடு. பாண்டிச்சிக்குப் பஞ்சாயத்துத் தலைவரை வைத்து காரியம் சாதித்துக் கொள்வதற்கெல்லாம் விருப்பமில்லை. அவளின் ஒரே மகளான (கஸ்தூரி) கதுவாரியைப் பாதுகாத்து வளர்ப்பது மட்டும்தான். ஆண் துணையற்ற தனக்கு ஓர் அரணாகப் பஞ்சாயத்துத் தலைவரை நினைத்திருந்தாள் பாண்டிச்சி. பள்ளிப் படிப்பை முடித்திருந்த கதுவாரியை அதற்குமேல் படிக்க அனுப்பவில்லை. அவ்வப்போது கடைத்தெருவுக்கும், கோயில் தளத்திற்கும் தன்கூடவே கூட்டிப்போவதோடு சரி. மற்றபடி வீட்டு வேலைக்கே பழகியிருந்தாள் கதுவாரி.

வளித்து வாரிக்கொண்ட கோரைத் தலைமுடியும், மேலும் கீழும் உருளும் முட்டை முழியும் என கதுவாரி பருவத்தின் அழகோடு இருந்தாள். பஞ்சாயத்துத் தலைவர் வந்துபோவதைச் சகித்துக்கொள்ளாதவளாக, விபரம் தெரிந்தவளாக வளர்ந்துவிட்ட பின்புதான் பாண்டிச்சிக்குப் பெரும் அவதியாகிவிட்டது. எப்போதும் எரிச்சலுற்ற கதுவாரியின் மனம் கொஞ்சம் அமைதி கொள்ளுவதெல்லாம் முத்தா பற்றிய நினைவுகளில்தான்.

அவர்கள் புழங்கும் ஊர், ஒரு சிறு நகரமென்றாலும் பரபரப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் சிறிதும் குறைவில்லாத நகரம் பெரிதும் கலகலப்போடு இருந்தது.  அன்று ஞாயிறு காலை. வாரம் முழுக்கக் கவிச்சிக்கு ஏங்கித் தவித்திருந்த நாவுகள் எச்சிலொழுக வாரச் சந்தையில் நிற்பதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும். காதர்பாய் கறிக்கடையில் சின்னச் சின்ன பஞ்சாயத்தும் சலசலப்பும் இல்லாமல் ஞாயிறு முடிந்ததேயில்லை. உயிர் மீன்களுக்கென்று திரளும் கூட்டம் கொஞ்சம் பிதுங்கித்தான் போகும். புது ஆற்றின் கெண்டைகளுக்குப் பெரும் கிராக்கி. கூடவே, உரித்து மஞ்சள் குளித்திருக்கும் நாட்டுக்கோழிக்கு இன்னும் மவுசு. முட்டைச் சரடு சேர்ந்திருக்கும் பெட்டைக்கோழி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வாரச் சந்தையின் பரபரப்பில் சந்தைக் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு நின்றுகொண்டிருந்த முத்தாவைக் கூப்பிடும் குரல். அது பஞ்சாயத்து தலைவர்.

"பாண்டிச்சி வீட்டச்சுத்தி மழத் தண்ணி தேங்கிக் கிடக்காம் முத்தா...., அத சரிபண்ணிட்டு, சாக்கடையும் வெட்டிவிட்டுட்டு வா" என்ற கணம்தான். தன் பழைய சைக்கிளில் தொரட்டி, வாருகோலோடு புறப்பட்டவனிடம் " முத்தா...இத பாண்டிச்சிக்கிட்ட கொடு" என்று கொஞ்சம் ரூவாய் தாள்களைக் கொடுத்தனுப்பினார். நேராக பாண்டிச்சி வீட்டில் போய் நின்றவனுக்கு கதுவாரிதான் கண்களில் பட்டாள். அலங்கரித்துக்கொள்ளாத தலை முடியோடும், தூக்கம் அப்பியிருந்த முகத்தோடும் கையில் வாளி நீரோடு வாசலில் நின்றாள். சைக்கிளில் வந்து நின்ற முத்தாவை ஒருகணம் பார்த்தவள் சட்டென்று திரும்பி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

"பாண்டிச்சிக்கா... எக்கா.... பாண்டிச்சிக்கா...." கூப்பிட்டுக்கொண்டே வாசலில் நின்றவனுக்கு எந்தப் பதிலுமில்லை. கொஞ்ச நாழிகையில் கதுவாரியே வெளியில் வந்து "அம்மா கொல்லப்பக்கம் போயிருக்கு.... என்ன வேணும்?" "தலீவரு மழத் தண்ணிய வெட்டி சுத்தம் பண்ணீட்டு வரச்சொன்னாரு... அப்றம் இந்தக் காச பாண்டிச்சி அக்காக்கிட்ட கொடுக்கச் சொன்னாரு..." என்று சொல்லிக்கொண்டே ரூவாயை எடுத்து நீட்டியவனிடம் "அத அம்மாக்கிட்டே கொடுத்துடு" என்று உள்ளே போய்விட்டாள்.

ஐப்பசி, கார்த்திகை மழையில் சேறும் சகதியுமாகி நசநசத்திருந்தது. குண்டுக் குழிகளில் தங்கியும் தேங்கியும் இருந்த மழை நீரை வடித்துவிட்டவன் சகதிப் பள்ளங்களைச் சீர் செய்யத் தொடங்கினான். அப்போது வெளியே வந்த பாண்டிச்சி "முத்தா... எப்ப வந்தவன்? கூப்பிட்டியா முத்தா?" . "ஆமாக்கா.... உன்னதான் வந்ததிலேர்ந்து கத்துனேன். ஒரு கொரலும் வரல.. உம் பொண்ணுதான் கொல்லப்பக்கம் போனதா சொன்னுச்சு. இத்தக்கா... தலீவரு கொடுக்கச் சொன்னாரு" என்று ரூவாய நீட்டியதும் வெடுக்கென்று வாங்கி கைக்குள் மறைத்துக்கொண்டவள் "எம் பொண்ணுக்குத் தெரியாதில்ல முத்தா...?" என்றவளிடம் அவன் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. மனம் ஒரு மாதிரி ஆகிவிட்டது அவனுக்கு. வந்த வேலையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.

"மனுசன் வாழ்க்க ஒரு ஒட்டுண்ணியாட்டம்தான் இருக்கு. யாரையாச்சும் ஒட்டிக்கிட்டோ தொத்திக்கிட்டோதான் செத்துத் தொலையணும்போல". மனம் கனத்திருந்ததான் முத்தா. பாண்டிச்சிக்கு வீடு, வாசல், மகள், உறவுகளென்று ஒரு தழைத்த மரம்போலச் செழிப்பாக இருந்தாலும் அதன் நிழல் சாக்கடையில் விழுவதைப்போல, இந்தத் தலைவரோட சவகாசம் எரிச்சலாக இருந்தது. ஏனோ முத்தாவுக்கு பாண்டிச்சி பற்றிய நினைவுகள் மேலெழுந்தவாறு இருந்தது.

கவலைக் கொண்டவனின் பகல் மௌனமாகக் கழிவதைப்போல, அன்றையப் பொழுது மிக நிதானமாக இறங்கியது. முத்தாவும் கட்ட ரவியும் ராவுத்தர்பாய் கடையில் சாரல் மழைக்கு இதமாக டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். கட்ட ரவிக்கு போன். எடுத்து " அலோ ... யாரு?" என்ற நொடிதான், போன் முத்தாவின் கைகளுக்கு மாறியது. "முத்தா உடனே பள்ளிக்கூடம் ரோட்டுக்கு வேகமா வா..." பாண்டிச்சியின் குரல்தான். அவனுக்கு அலுப்பாக இருந்தாலும், ஏதோ அவசரமென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சாலையில் இருவரும் இறங்கினார்கள். மழைத் தூறலோடு இருந்தது. வடக்கோரம் சாலையில் மழைத் தண்ணி பெருகெடுத்து சாக்கடையில் விழுந்து ஓடிக்கொண்டிருந்த சிறு பாலத்தில்  கூட்டமும் கூச்சலும். முத்தாவைப் பார்த்த சிலர் "ஸ்கூல் புள்ள சாக்கடைக் குழிக்குள்ள விழுந்துருச்சிப்பா" என்றதும் உள்ளே குத்தித்துவிட்டான் முத்தா. கட்ட ரவி உள்ளே  இறங்கிய சில நொடிகளில் முதுகில் மாட்டியிருந்த பையோடு பிள்ளையை இருவரும் தூக்கினார்கள். பேச்சு மூச்சற்றிருந்த பிள்ளை மேலே வந்ததும் இருமத் தொடங்கியது. அப்போது கூட்டம் ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டது.

மனிதனின் அத்தனை கழிவுகளோடும் நிரம்பி ஓடுகிற சாக்கடையிலிருந்து ஏதுமறியாத ஓர் அறிய மலரைப்போல சிரித்த முத்தா, மேலேறி வந்தான். பாண்டிச்சியும் இன்னும் சிலரும் பிள்ளைமேலிருந்த சேறு சகதியைக் கழுவிக்கொண்டிருக்க, அதற்குள் போலீஸ் வந்து யார் குழந்தையென்று விசாரிக்கத் தொடங்கினர். அந்தச் சிறு பிள்ளையின் பையிலிருந்த அத்தனை கனமான புத்தகங்களை வெளியில் எடுத்து அடுக்கினான் ரவி. அவைகள் நனைந்தும் சிதைந்தும் இருந்தன. மீண்டும் வானம் சன்னத்தூறலுக்கு இறங்கியதும் கூட்டம் கலையத் தொடங்கியது.

அந்த நேரம்தான், பாண்டிச்சியின் பின்னால் நின்றுகொண்டிருந்த கதுவாரியைப் முத்தா பார்த்தான். இப்போது அவள் நேர்த்தியாக அலங்கரித்திருந்தாள். பாவாடை தாவணி அவளுக்குத் தனி அழகை தந்திருந்தது. கதுவாரியின் கண்கள் முத்தாவைத் துளைப்பதுபோல் ஊடுருவத் தொடங்கிய சில நொடிகளில் அவள் அவனைக் கடந்தாள். அதற்குப் பின்தான் தன் மீது வீசும் சாக்கடைக் கவுலை உணர ஆரம்பித்தவன் "கட்டா சைக்கிள எடுடா... மொதல்ல புதாத்து தண்ணில போய் விழணும்ண்டா" என்று விரட்டினான்.

வீடும் வீதியும் விளக்கேற்றும் நேரம். முத்தாவின் குடிசைப் பகுதிக்குள் கார் வரும் சத்தம் கேட்டு எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கூடினர். மேல் சட்டையின்றிக் காக்கி டவுசரோடு லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் முத்தா. வாசலில் நடுத்தர வயதொத்த ஒரு ஆணும் பெண்ணும். அது அந்த பள்ளிக் குழந்தையின் பெற்றோர்கள் என்பது அவர்கள் கண்களில் நீர் பூத்து நின்றக் கோலமே காட்டிக்கொடுத்தது. அருகில் வந்த இருவரும் முத்தாவைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அதைப் பெருந்தன்மையோடு முத்தா மறுத்த கணம், அந்தப் பெண் காரிலிருந்து முழுவதும் சுற்றிநிருந்த ஒரு துணிப்பையை எடுத்து வந்து முத்தாவிடம் நீட்டினாள். அதை வாங்க மறுத்த முத்தா என்னவென்றுகூடப் பார்க்கவில்லை. இருவரும் வற்புறுத்தி அவனது கைகளில் திணிக்க முயன்றபோது தவறிய பை கீழே விழுந்தபோதுதான் தெரிந்தது பை முழுக்கப் பணக் கட்டுகள்.

முத்தாவுக்கு உடல் மெல்ல நடுக்கமெடுக்கத் தொடங்கியது. அவன் அதைத் தொடக்கூட இல்லை. அதற்குள் அங்கு கூடியிருந்தவர்கள் வாய்ப் பிளந்து நின்றிருந்தனர். முத்தா சட்டென்று தன் குடிசைக்குள் போய் மேல் சட்டையோடு வெளியே வந்தவன் "காசுக்காகப் புள்ளைய காப்பாத்தலக்கா... எனக்குக் காசு வேண்டாம். இத கை நீட்டி வாங்கிட்டா கொழந்த உசுற காப்பாத்துனதுக்குப் போய் காசு வாங்கிட்டோம்ன்னு மனசாட்சி உசுற அறுக்கும். போயிட்டு வாக்கா... புள்ளைய பத்ரமா பாத்துக்கோக்கா.." என்று மிக இயல்பாகச் சூழலைப் புறந்தள்ளிவிட்டு போன முத்தாவை பெரும் வியப்போடு பார்த்து நின்றது கூட்டம்.

மழை ஓய்ந்து பனிக்குத் திரும்பிய நாட்கள் நகர்ந்தோடின. பஞ்சாயத்து ஆபிசும் வாரச்சந்தையும், சாக்கடையும் சகதியுமென்று முத்தாவுக்குப் பொழப்பு புரண்டோடியது. கதுவாரியின் நினைவுகள் அவ்வப்போது அவனுக்குள் வந்து தங்கிக்கொண்டாலும் வீட்டிற்கெல்லாம் போய் பார்க்கமுடியாது. மனசு தவித்திருந்தும் தனித்தே கிடந்தான் முத்தா.

காலை பனி முற்றிலும் விலகி, வெயில் ஏறியிருந்த நண்பகல். ராவுத்தர் டீக்கடையில் நின்றிருந்த முத்தாவை கட்டரவிதான் ரகசியமாகச் சந்துப்பக்கம் கூட்டிப்போனான். "ஏய் முத்தா... பாண்டிச்சி மவ கதுவாரி வூட்ட வுட்டு ஓடிப்போச்சாம் முத்தா.... ரெண்டு நாளாச்சாம். தலீவரு யாருக்கும் தெரியாம தேடுறதுக்கு ஆள அனுப்பிருக்காராம். உனக்கு தெரியுமாலே?" என்ற கேள்வியின் பின் அவன் மனசுக்குள் நாலஞ்சு தொரட்டிக் குச்சிகள் வாரி எடுப்பதுபோல் வலித்தது. தூக்கம் அப்பியிருந்த, அலங்கரித்துக் கொள்ளாத அவள் முகம் நினைவில் வந்தது.  'பாண்டிச்சி என்ன செய்வாள்? ஒத்தப் பிள்ளை கதுவாரி.  தலீவரு கொடுத்தக் காசயே தன் மவளுக்குத் தெரியாம வாங்கி வைத்துக்கொண்டவள். என்ன நடந்துச்சோ? என்ன காரணமோ?' பாண்டிச்சியும் கதுவாரியும் மாறி மாறி நினைவில் நின்றார்கள். முத்தாவின் மனம் குமிழ் உடைத்து நொதித்தோடும் சாக்கடைப்போல தெளிவற்றுப் போனது.

மனம் குழம்பி நின்றவன் 'யாரிடம் போய் விசாரிப்பது? என்ன நடந்திருக்கும்? கதுவாரி திரும்பி வருவாளா? உண்மையிலே யாரக்கூடவும் பழக்கமா?' முத்தாவுக்குப் பதில் சொல்ல ஒருவரிடமும் சொற்களில்லை. நாட்கள் இரண்டானது, மூன்றானது, நான்கானது,  வாரமானது. எந்தத் தகவலுமில்லை. முத்தாவுக்கு பாண்டிச்சியக்காவைப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது. ஆனாலும் நாமாக எப்படிப் போய் கேட்பது? தலைவருக்குத் தெரிஞ்சா வம்பாகிவிடுமென்று அமைதியாகிவிட்டான்.  ஆனால் தலைவரே கூப்பிட்டு "முத்தா, பாண்டிச்சி வூட்டுப் பரணுமேல பெருச்சாலி செத்துக்கிடக்காம். ரெண்டுநாளா முகம்பிடிக்க முடியலையாம். பாண்டிச்சி உன்ன வரச்சொல்லிவிட்டா" என்றதும் "சரிங்க தலீவரே" என்றவாறு சந்தர்ப்பம் வாய்த்தவனாக வேகமெடுத்தவன் பாண்டிச்சி வீட்டின் முன் நின்றான்.

"யக்கா... பாண்டிச்சிக்கா..." என்ற முத்தாவின் குரல் கேட்டு வெளி வந்தவளின் முகம் வீக்கம் கண்டிருந்தது. 'கட்டரவி சொன்னது சரிதான் போல... கேட்கலாமா வேண்டாமா?' என்று மனதில் ஊசலாட்டமாகவே இருந்தவன் தாமதிக்கவில்லை...கேட்டுவிட்டான். "கதுவாரி எங்கக்கா? வெளியூர் ஏதும் போயிருக்காக்கா?" என்ற நொடிதான் தாமதம். யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்போல் இருந்த பாண்டிச்சி, வேகமாக உள்ளே போய் வெடித்தழத் தொடங்கினாள். ஆனால் முத்தா, அவளைக் கூப்பிட்டுக் கொண்டே கொல்லை பக்கம் போனான். "யக்கா....யக்காவோ...பின்னாடி நிக்கிறேன்க்கா... வெளியே வாக்கா..." நிதானமாக அழைத்தான்.

சில நாழிகைகள் கழித்து, அழுந்த துடைத்த முகத்தோடு வெளியே வந்தவள் "கதுவாரி வெளியூர்ல்லாம் போகல முத்தா. நான் மேலுக்கு முடியாம ஆஸ்பத்திரிக்குப் போன சமயத்துல அந்தாளு வந்து புள்ளைய தொந்தரவு பண்ணிருக்கான். முன்னாடியும் இது பல வாட்டி நடந்திருக்கு. அப்பல்லாம் புள்ளய சமாதானம் படுத்திட்டு விட்டுட்டேன். இந்தவாட்டி என்ன நடந்துச்சுன்னு தெரியல முத்தா. புள்ளயக் காணோம். வெளியில கேட்கவும் தேடவும் வெக்கமா இருக்கு. ஏதாவது உதவி பண்ணு முத்தா" என்று அவள் குரல் உடைந்து சொன்ன அத்தனை சொற்களிலும் கண்ணீரின் பிசுப்பிசுப்பு அப்பியிருந்தது. "பெருச்சாலி செத்துக்கிடக்கு , சுத்தம்பண்ணிட்டு வாடா'னு அனுப்பிவுட்டாருக்கா அந்தாளு". " ஆமா முத்தா...ரெண்டு நாளா வூடு பூறா ஒரே நாத்தமா இருக்கு. பரண் மேல எதும் கிடக்கான்னு தெரியல... மூச்சுவிடக்கூட முடியல...கொஞ்சம் பாரேன்" என்றதும், வீட்டிற்குள் நுழைந்தவன் சன்னல் கட்டையின் மீதேறி பரணில் கால் வைத்தான். ஒரே இருட்டு. டார்ச் வாங்கி இண்டு இடுக்கெல்லாம் அடித்துப் பார்த்தான். எதுவுமில்லை. ஆனால் சிறுக நாத்தம் மட்டும் வந்துகொண்டிருந்தது.

வடக்குப்புறமாகத் திரும்பி டார்ச்சை அடித்தான். இரண்டு பெரிய மண் தொம்பைகள் தெரிந்தன. மெல்ல நகர்ந்து தொம்பை பக்கம் வந்தான். நாத்தம் குபீரென்று கிளம்பியது. கிட்டப் போகவே முடியவில்லை. பரண் மேலிருந்து உள் மூலையிலிருந்த மண் தொம்பைக்குள் லைட் அடித்தான். "யம்மோவ்....." என்று அலறல். கொல்லைப் புறத்தில் விசனத்திருந்த  பாண்டிச்சி படபடத்து ஓடிவந்தாள். "யக்கா... கதுவாரிக்கா"...என்று கத்திய முத்தா, சற்று நிதானித்து டார்ச்சை உள்ளே அடித்து உற்றுப் பார்த்தான். குந்தியபடி இருந்த கதுவாரியின்  உடல் மூன்று மடங்காக ஊதிப்போய் இருந்த்து.

அதுவரை ரகசியம் காத்த பாண்டிச்சி, மாரில் அடித்து, அங்கம் புரண்டு ஊரைக் கூட்டிவிட்டாள். அக்கம் பக்கமென ஊர் திரண்டது. யாரோ போலீசுக்குத் தகவல் தந்தார்கள். போலீஸ் வந்ததும் அவர்களின் சொல்படியே நடந்தது. அவனையும் பாண்டிச்சியையும் போலீஸ் ஒரு மாதிரி பார்த்ததுவிட்டு, எதுவும் விசாரிக்காமலே அது தற்கொலை என்று எழுதிக்கொண்டார்கள். முத்தாதான் மண் தொம்பையை உடைத்தான். பிண வாடைத் தாளாதவர்கள் முகம் சுழித்து ஒதுங்கினார்கள். ஊதி உப்பிப் போயிருந்த கதுவாரியை முத்தா முதல் தடவையாகக் கைகளால் தொட்டான். சதை பிய்த்துக்கொண்டு வந்தது. கதுவாரியின் உப்பிய விழிகளில் ஒரு யுகத்தின் பயம் சூழ்ந்தது போல மிரண்டிருந்தன.

பின், மண் தொம்பையைத் துணியால் சுற்றிக்கட்ட கட்டளையிட்டது போலீஸ். எப்போதும் பாண்டிச்சி வீட்டில் குடியாகக் கிடக்கும் பஞ்சாயத்து தலைவர் மட்டும் வரவேயில்லை. போன் போட்டும் எடுக்கவில்லை. சதைத் தேகம் சிதைந்து, உருவிழந்து போயிருந்த கதுவாரியை போலீசோடு முத்தாவும் உடன் போய்  மண் தொம்பையோடு சேர்த்துப் புதைத்துவிட்டு வந்தவன்தான். அதற்குப் பிறகு பஞ்சாயத்து ஆபிசுக்கும் போகவில்லை... பாண்டிச்சி வீட்டுக்கும் போகவில்லை... ஊரை விட்டுக் கிளம்பிய முத்தா ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளவுமில்லை. கட்டரவியிடம்கூட எதுவும் பேசவில்லை. அவனது  நீண்ட பயணத்தினூடான நினைவுகளில் திரும்பத் திரும்ப பாண்டிச்சியின் ஓலக்குரல் ஓலமிட்டபடியே இருந்தது. வளித்து வாரிக்கொண்ட கதுவாரியின் முகம் அவன் முன் இந்த நிலமெங்கும் அடர்ந்து பூத்திருப்பதாகப் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு. இலக்கியன்

கு.இலக்கியன், 1984 ல், தஞ்சை மாவட்ட குக்கிராமத்தின் ஒரு நெற்குடி நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பெற்ற இவர், தற்போது அரசு கலைக் கல்லூரியில் மதிப்புறு விரிவுரையாளர். கவிதை, சிறுகதை மற்றும் ஆய்வுக் கட்டுரை வகைமைகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அலர் பதிப்பகம்அநித்யம்சிறுகதைத் தொகுதிநாளையும் நாளையேம.கேசவன்பிப்ரவரி தினம்மழைவில்நுண்கதைஆய்வுசாட்சிசீர்மை இதழ்நேர்காணல்பொம்மை கார்கடைசி வெடிச்சத்தம்விமர்சனம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சதுக்கம்இலக்கிய நிகழ்வுகள்ரூமி‘ராஜ் கௌதமன்தொ.பத்தினாதன்நான் ஏன் பதிப்பிக்கிறேன்அக்காக்கள்ஒரு துளி கருணைதலித் இலக்கியம்தலித் வரலாறுசூஃபி இசைமழை ஓய்ந்த சாலையில்ஆலடியான்மெல்லிய கோடுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!