‘நீங்க எப்படி தாராவை இவ்வளவு அழகா வாசிக்கறீங்க?’
‘அது எப்படி சொல்றீங்க. பாட்டெ மனசிலே வெச்சிக்கிட்டு ஸின்ஸியரா வாசிச்சா எல்லாருமே நல்லா வாசிக்கலாம்.’
‘... இல்லே ... நீங்க தாராவை ஹாண்டில் பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு.’
‘அது ஒண்ணும் கஷ்டம் இல்லே. ரெகுலரா பண்ணிட்டே இருந்தா போதும்.’
‘இதுலே எத்தனை கம்பி போடலாம்?’
‘ஆறு அல்லது ஏழு கம்பி வரைக்கும் போடலாம்.’
‘கம்பி போடுறது ரொம்ப கஷ்டமான விவகாரமா?’
‘கம்பி போடறது ஒண்ணும் கஷ்டம் இல்லே. ஆனா அந்த ஆறேழு கம்பிகளையும் ஒண்ணா ஸ்வரப்படுத்தறதுதான் கஷ்டம்... கஷ்டம்னா என்ன... ரொம்ப கீன்னாக நம்ப மைன்டை கான்ஸென்ட்ரேட் பண்ணினா சுலபம்தான். ஆனா நமக்கு அவ்வளவு தூரம் கான்ஸென்ட்ரேட் பண்ண பொறுமை இருக்கறதில்லை.’
‘ஸ்வரப்படுத்தறதுன்னா ... வாட் டு யூ மீன்? எனக்குப் புரியலே.’
‘ம்... வந்து... ஏதாவது ஒரு கம்பியோட நாதத்துக்கு மற்ற எல்லாக் கம்பிகளோட நாதங்களும் இணையனும். எந்தக் கம்பியைத் தட்டினாலும் ஒரே நாதம் வரணும். இன்னொரு விதமா சொன்னா, எல்லாக் கம்பியுமே ஒரே டென்ஷன்லே இருக்கணும்.’
‘ஆமா இதெ எப்படி ட்யூன் பண்றது?’
‘அதுக்கு தாரா வாங்கும்போதே ட்யூனர் ஒண்ணு குடுப்பான். அது நம்ப வால்கிளாக் கீ மாதிரி இருக்கும். அதே இந்த கம்பியெ பண்ணியிருக்கோம்ல அதுலே பொருத்தி மெதுமெதுவா திருகி ட்யூன் பண்ணலாம்.’
‘இதெ நீங்கதான் ட்யூன் பண்ணினீங்களா?’
‘ம்... ஹூம்... நான் எப்படி ட்யூன் பண்ணுவேன். அவ்வளவு பொறுமை இருந்தா நான் ஏன் தாரா வாசிக்கிறேன்? வீணைல வாசிப்பேன். எங்க தெருவிலே வயலின் மாஸ்டர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்டே கொடுத்துதான் ட்யூன் பண்ணச் சொல்வேன்.’
‘இதிலே எந்த மியூசிக் வேணும்னாலும் வாசிக்கலாமா?’
‘எனக்குத் தெரிஞ்சவரைக்கும் லைட் மியூசிக் மட்டும்தான் வாசிக்க முடியும்னு நெனக்கிறேன். ரொம்பப் பெரிய மாஸ்டரா இருந்தா கர்னாடிக் மியூசிக் கொஞ்சம் வாசிக்கலாம்னு நம்பறேன். அதிலேயும் எல்லாத்தையும் வாசிக்க முடியாது. ஏன்னா இந்த இன்ஸ்ட்ருமெண்ட்ல சில டிஃபெக்ட்ஸ்லாம் இருக்கு. அதனாலேதான் ப்யூர் மியூஸிசியன்ஸ்லாம் இதை ப்ரிஃபர் பண்றதில்லே.’
‘இதிலே வரக்கூடிய பாட்டு எந்த பாட்டு வேணும்னாலும் வாசிப்பீங்களா?’
‘ம்ஹூம். அது முடியாது. மியூசிக் நமக்குத் தெரிஞ்சிருந்தா அது சுலபம். இல்லாததினாலே எனக்குப் பழக்கப்பட்ட அல்லது நான் பழகிக்கொண்ட, அதாவது நான் ப்ராக்டிஸ் பண்ணினதை மட்டும்தான் வாசிக்க முடியும்.’
‘உங்களுக்கு எத்தனை பாட்டு வாசிக்க முடியும்?’
‘தமிழ்லே ரெண்டு, மூணு பாட்டும், ஹிந்தி பாட்லே ஒரு பாட்டும் வாசிப்பேன்.’
‘தமிழ்லே என்ன பாட்டு?’
‘“அவன்” படத்திலே “ஏகாந்தமாம்...”.’
‘ஓ... தோ இட் இஸ் வெரி நைஸ். அதெல்லாம் ரொம்ப பழகல்ல?’
‘பழசுதான்.. ஆனா எவ்வளவுக்கெவ்வளவு பழசா இருக்கோ அந்த அளவுக்கு நல்லது. ஏன்னா காலாகாலத்துக்கு நாம் கேட்டு, பாடிப்பாடி அதெல்லாம் நம்ப மனசிலே ஊறிப்போய் இருக்கிறதினாலே, தாராவைக் கத்துக்கும்போது ரொம்ப சுலபமா வரும். பாட்டு நம்ப மனசிலே ஓடவோட நாம்ப சீக்கிரம் பிக்கப் பண்ணிக்கலாம். நமக்கும் என்கரேஜிங்கா இருக்கும்.’
‘அப்படியா?’
‘அதனாலேதான் புதுசா கத்துக்கறவங்க எல்லாம் “கொஞ்சிக் கொஞ்சி..” பாட்டைத்தான் ஆரம்பிப்பாங்க. அது ரொம்ப ஈஸி.’
‘உங்களுக்கு ஏதாச்சும் புதுசா தெரியுமா?’
‘ம்... அந்தாஸ், ஆராதனா, ஹரே ராம் ஹரே கிருஷ்ணா இதிலேயெல்லாம் சில பாட்டுகள் வாசிப்பேன்.’
‘அப்படின்னா “ஜிந்தகி ஏக் ஸஃபர்” வாசிங்களேன்.’
‘ஓ... ஷ்யூர். தாராவுக்கே அது ரொம்ப சுலபமான பாட்டு’ என்று சொல்லி ரவி தாராவை மீட்டுகிறான்.
ஆஹா என்ன இனிமை! விரல்களின் லாவகத்தில், கம்பிகளின் ரீங்காரத் துள்ளல்களில் ஸ்ட்ரைக்ஸையும் மீறிக்கொண்டு பாட்டு ஒரு பின்னிழையாய், கோர்வையாய் வரும் இனிமையில், இதயத்தை அப்படியே பிடுங்கிப் பிடுங்கித் தாராவுக்குள்ளே வைக்கிற மாதிரி உணர்கிறான் பஞ்சு. பித்துப் பிடித்தவனாய், பேசவும் நாவெழாமல், மனம் லயித்து விரல்களின் ஓட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான் பஞ்சு. வாசிப்பவன் மட்டும் அவனுடைய நண்பனாக இல்லாதிருக்கும் பட்சத்தில், கொஞ்சம் அசந்திருப்பானாகில், கண்மூடிக் கண் திறப்பதற்குள் தாராவைத் தூக்கிக்கொண்டு இந்நேரம் கண்ணுக்குக்கெட்டாத தூரம் ஓடியே போயிருப்பான். அது மட்டுமல்ல, அப்படியெல்லாம் சிறுமையான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுப்போக அவன் பள்ளிக்கூடத்து மாணவனும் அல்லவே. ஆனால் பஞ்சுவிடம் அப்படியெல்லாம் ஒரு வெறி உண்டாகியிருந்தது என்பதை மறுக்க முடியாது.
‘நான் கொஞ்சம் ட்ரை பண்ணட்டுமா?’
‘ஓ... ஷ்யூர். தாராளமாக.’
‘நான் ஏன் இவ்வளவு தூரம் கேட்கறேன்னா, எனக்கு ஏதாச்சும் ஒரு ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ருமென்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசையிலேதான் நான் கோயம்புத்தூர்லே இருக்கும்போது, ஒரு ஆர்கெஸ்ட்ராவிலே சேர்ந்தேன். அப்ப அங்கே வயலினுக்கு ஆள் இல்லே. அதனாலே என்னை வயலின் கத்துக்க சொன்னாங்க. நானும் ரொம்ப என்த்தூஸியாஸ்டிக்கா ஸெவன்டி ஃபைவ் பக்ஸ் செலவு பண்ணி ஒரு வயலின் வாங்கினேன். என்கூட இன்னொரு நண்பரும் வயலின் வாங்கிக்கொண்டு வந்தாரு. ஒரு ரெண்டு மாசம்போல, ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா கத்துக்கிட்டோம். நல்லாவே வந்துச்சு. ஆனா, அதுக்கப்பறம் அன்ஃபார்ச்சுனேட்டா மாஸ்டர் சரியில்லாத காரணத்தாலேயும், வயலின்லே ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் மேற்கொண்டு தொடர முடியலே. லீவ் இட். அது ரொம்ப அன்ப்ளஸன்ட். கடைசியா எப்படியோ கஷ்டப்பட்டு வயலினை அறுபது ரூபாய்க்கு வித்தேன். இட்ஸ் போரிங். இல்லே லெட் அஸ் கம் ஹியர்.
‘இப்படி பிடிச்சுங்குங்க. கீழே வெக்காதீங்க. மடியிலே வச்சிக்கிறதுதான் பெட்டர்.’
‘நான் நம்பர் சொல்றேன். அது மாதிரி ப்ளே பண்ணுங்க.’
‘முதல்லே ஃப்ரியா பீட் பண்ணுங்க.’
‘பரவாயில்லை.’
‘இப்ப கவனிங்க. 2லு, 2112 2லு இத மட்டும் ட்ரை பண்ணுங்க.’
ரவி சொல்றபடி பஞ்சு வாசிக்க முயல்கிறான். ஆனால் அது அவன் நெனச்சபடியும், ரவி சொன்ன மாதிரியும் சுலபமாக இல்லை. ஃபிங்கரிங் வந்தால் ஸ்டிரைக்ஸ் வரவில்லை; ஸ்டிரைக்ஸ் வந்தால் ஃபிங்கரிங் வரவில்லை. இரண்டுமே வந்தாலும் விரல்கள் நழுவிவிடுகின்றன. பாட்டின் ராகமே மாறிப்போய், வேறொரு இசையாக வெளிவந்தாலும், அதன் நாதம் மட்டும் இனிமையாக இருந்தது பஞ்சுவுக்கு.
‘பரவாயில்லை. நீங்க சீக்கிரம் கத்துக்கலாம்.’
‘அப்ப நானும் ஒரு தாரா வாங்கி விடட்டுமா?’
‘ஓ வாங்கலாமே.’
‘அப்ப சரி. இந்த மாசம் முடியட்டும். ஒண்ணாந் தேதியே ஒரு தாரா வாங்கிடறேன்.’
‘ஏன் அது வரைக்கும் நீங்க இதிலேயே ட்ரை பண்ணலாமே.’
‘தேங்க் யூ. ஐ ஆம் வெரி ப்ளீஸ்ட். பட்... ஆனா அப்புறம் உங்களுக்கு? நீங்க வாசிப்பிங்களே...’
‘பரவாயில்லே அதனாலே என்ன, கொஞ்சம்நாள்தானே எனக்கும் கொஞ்சம் சீரியஸ் வொர்க் இருக்கு. எப்படியிருந்தாலும் நான்தானே உங்களுக்கு டீச் பண்ணப் போறேன்.’
‘இப்பவே நான் போறப்பவே இதெ எடுத்துக்கிட்டு போய் நைட் உட்கார்ந்து ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.’
‘ம். பண்ணுங்களேன். நான் வேணுமானா நம்பர் எல்லாம் குறிச்சித் தர்றேன்.’
‘தட்ஸ் குட்!’
‘ஆனா ஒரு விஷயம்... பாட்டை நீங்க நல்லா மனசிலே வெச்சுக்கணும். முதல்லே ரொம்ப கஷ்டமா இருக்கும். போகப்போக சரியாயிடும்.’
‘அது சரி. இப்ப நாம போறவரைக்கும் உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாப் பாட்டையுமே வாசிச்சிக் காட்டுங்களேன்.’
‘எல்லாப் பாட்டையுமா...? மணி எட்டு இருபது... அப்ப இன்னும் நேரம் இருக்கு... ஐ கேன் ப்ளே.’
பஞ்சுவிடமிருந்து தாராவை வாங்கி ரவி தனக்குத் தெரிந்த எல்லாப் பாடல்களையும் வாசித்துக் காட்டுகிறான். ரவி ரொம்பவும் ஸ்வாரஸ்யமாய் வாசிக்க ஆரம்பிக்கிறான். எத்தனை இனிமை! என்ன சுகம்! ஏழு கம்பிகளின் நாதங்களும் ஒன்றாக இணைந்து ஒரே குரலில். ஒரு மெல்லிய கோடு மாதிரி. ஒரு பெண்ணின் இனிமையான முனகல் மாதிரி பாட்டு தென்படுவது பஞ்சுவுக்கு ஆச்சரியம்தான். அவனுக்கு இன்று இரவு சாப்பாடு வேண்டாம். இது போதும்.
வாசித்துக்கொண்டிருக்கையிலேயே இரண்டு கம்பிகள் அறுந்து விழுகின்றன.
அதற்காக பஞ்சு ரொம்பவும் வருத்தப்படுகிறான்.
‘பரவாயில்லை. இட்ஸ் நத்திங். இதனாலே ஒண்ணும் பெரிய நஷ்டம் இல்லே. வேறே கம்பி போட்டுக்கலாம்.’
‘ஒரு கம்பி என்ன விலையாகும். ரொம்ப காஸ்ட்லியா?’
‘அதெல்லாம் ஒண்ணும் இல்லே. ஒரு பாக்கெட் இருபது பைசா. அதிலே ரெண்டு கம்பி இருக்கும்... ஐ யம் சாரி மேன், இப் யூ டோண்ட் மைண்ட்... நான் இதெ எடுத்திட்டுப்போய் நாளைக்கு கம்பி போட்டு வெக்கிறேன்.’
‘அந்த ரெண்டு கம்பி இல்லாமெ வாசிக்க முடியுமா?’
‘வாசிக்கலாம். ஆனா இதுலே உள்ள ரிஷப்ஷன் இதுலே இருக்காது.’
‘தட்ஸ் குட்... எனக்கு இன்னொரு டௌட்... ஆமா இதெ ஒரு தடவை ட்யூன் பண்ணினா அப்படியே கான்ஸ்டென்டா இருக்குமா?’
‘அப்படி கிடையாது. புதுசா இருந்தா உடனே உடனே ட்யூன் இறங்கிட்டே இருக்கும். நம்ம கையிலே பழக்கப்பட்டபுறம் அதாவது துலங்க துலங்க அது ஒரு வாரம், பத்து நாள் சமயத்திலே ஒரு மாதத்துக்கு மேலேயும் தாங்கும். அல்லது தாரா ஷேக் ஆனா உடனே ட்யூன் இறங்கிடும்.’
‘அப்ப நாளைக்கு கம்பி போட்டு வைங்க.’
‘ஷ்யூர்... நாளைக்கு நான் வேறே இடத்துக்கு போக வேண்டியிருக்கு. அதனாலே சாயங்காலம் நீங்க ஆபீஸ் முடிஞ்சு வரும்போது அப்படியே நம்ப வீட்டுப் பக்கம் வாங்க நான் தர்றேன்.’
‘ம் ... சரி... இப்பவே எனக்குக் கொண்டுபோகணும்னு தோணுது.’
‘எனக்கும்கூட அப்படித்தான். ஆனா இதுதான் அன்எக்ஸ்பெக்ட்டட் ஆக அறுந்து போச்சே. ட்யூன்லாம் வேறே கொஞ்சம் இறங்கிப் போயிருக்கு. அதையும் கொஞ்சம் செட் பண்ணிட்டா நாளைக்கு ரொம்ப ஜோரா இருக்கும்.’
‘தட்ஸ் ஆல்ஸோ குட்.’
‘சரி அப்ப நாம போகலாமா, மணி ஒன்பதே முக்கால் ஆயிடுச்சு.’
‘ஆமாம் அப்ப நாளைக்கு சாயங்காலம் நான் உங்க வீட்டுக்கு வர்றேன்.’
‘ஷ்யூர்... தென்... குட்நைட்.’
மறுநாள் காலை பஞ்சு ஆவலோடு வருகிறான், தாராவை வாங்கிகொண்டு போக. தெருவில் நுழையும்பொழுது ரவியின் வீட்டு வாசலில் கும்பலாக இருக்கிறது. பெஞ்சுகளும், கட்டில்களும் போடப்பட்டு பலர் சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்.
அந்தத் தெருவிலோ, அந்த வீட்டிலோ அவனுக்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை ரவியைத் தவிர.
கொஞ்ச நாள் பழக்கம்தானே!
ஆமாம் ரவி எங்கே?
பஞ்சு, வீட்டு வாசலுக்கு வந்துவிட்டான்.
உள்ளேயிருந்து அழுகை ஒலங்களினூடே வார்த்தைகள் தெறித்தன.
‘மத்தியானம் சோறு போடும்மான்னு சொல்லிவிட்டு கட்டில்லே படுத்தவன்தானே... சோறு போட்றதுக்குள்ளே உனக்கு என்னடா அவசரம்?’ தாயின் குரல்.
‘உள்ளே போய்ப் பாருங்க ஸார்.’
நேற்று என்னமாய் தாரா வாசித்த கைகள். இன்று...? இதுக்காகத்தான் அவ்வளவு பாட்டையுமே நேற்றே வாசித்தானோ?
நாளைக்கு வேறே ஒரு இடத்துக்கு போகணும்னு நேத்து சொன்னானே... அது...?
அந்த மூலையில் மேஜையின் ஒரு ஓரத்தில் தாரா அவன் கண்ணில் பட்டது. அதில் ஏழு கம்பிகள் இருந்தன.
பஞ்சு வெளியே வந்தான்.
தெருவில் இறங்கி நடந்தான்.
‘அவன்தான் போய்ட்டானே தாராவை எனக்குத் தரமாட்டீங்களா?’
தெருகோடிவரை மெதுவாக நடந்தான்.
பிறகு வேகமாக நடந்தான்.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

எஸ். அற்புதராஜ்
தாரா கேம்பெல்
து. பிரபாகரன்
ரமீஸ் பிலாலி
கிருஷ்ணமூர்த்தி
Be the first person to add a comment.