‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன. ஒரு எழுத்தாளரின் சிந்தனையின் ஆழத்தையும் சமூகப் பொறுப்பையும் உணர வேண்டுமெனில், அவருடைய கட்டுரைகளையும் விமர்சனங்களையும் கவனமாக வாசிக்க வேண்டும். அவ்வகையில், ‘ஒளிரும் சொற்கள்’ என்பது கட்டுரைத் தொகுப்பு மட்டுமன்று; அது ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்.
“விளிம்புநிலை மக்களைப் பற்றிய புதிய ஆய்வுகளும், அமைப்பியல் வகைப்பட்ட சிந்தனாமுறையும், பெண்ணியச் சிந்தனைகளும் என்னைப் பெரியாரிடமும் அம்பேத்கரிடமும் இட்டுச் சென்றன. சேர வேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் பிறந்தது. பாட்டாளி மக்கள் பற்றிய மார்க்சியமும், சூத்திரர் பற்றிய பெரியாரியமும், பெண்கள் பற்றிய பெண்ணியமும், தலித்தியத்துக்கான ஓர் அறிவுச் சொல்லாடலை நிர்மாணிக்கும் தேவையை வலியுறுத்தின” (2025:135) எனக் கூறும் ராஜ் கௌதமன், தமிழக தலித்தும் தமிழ் தலித் இலக்கியமும், தலித் பண்பாடு, தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட தன்தொடக்க கால எழுத்துகளில் பெரியாரின் கோபமும் ஆவேசமும் வெளிப்பட்டதாக நினைக்கிறார். கலக உணர்வோடு, வெகு நிச்சயத்தோடும் தன்னம்பிக்கையோடும் பெரிய விஷயங்கள் எனப் போற்றப்பட்டவற்றை நிசாரமாகத் தூக்கி எறிய முடிந்ததற்குப் பெரியார் ஒரு முதன்மையான காரணம் என்கிறார்.
மேலும், “தலித் இயக்கங்கள் வீறுகொண்டபோது சூத்திரர்களின் சாதி மேட்டிமை முயற்சிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. பெரியார் கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறார்; ஆத்திகராயினும் நாத்திகராயினும் சூத்திரர் யாரும் தத்தம் சாதியை விட்டொழிக்கவில்லை. பெரியார் சொன்ன இந்து மதத்தையும் கடவுளையும் கோயிலையும் சாத்திரங்களையும் விட்டொழித்த பெரியாரியவாதிகளில் பலரும் தங்கள் சாதிகளை விட்டொழித்தபாடில்லை. சூத்திரர் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெரியாரின் பிராமணிய எதிர்ப்பை இன்று சூத்திரச் சாதிகள் கைவிட்டதோடு, சாதிபோற்றும் பிராமணியத்தை தத்தம் அரசியல் பொருளாதார இலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன” (2025:56) எனக் கூறும் ராஜ் கெளதமன் இந்திய - தமிழக தலித்துகளுக்கான சாதி ஒழிப்புப் போர்த் திட்டம் என்பது அம்பேத்கரையும் அயோத்திதாசரையும் விட்டால் வேறு எந்த இசத்திலும் இருக்கவியலாது என்பதை நிதர்சனம் என்கிறார்.
வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ‘வெள்ளையானை’ நாவலில் இடம்பெற்றுள்ள காத்தவராயன் கதைமாந்தரின் போராட்டக் குணத்தை அயோத்திதாசரின் (வாலிபப் பருவம்) இளமைக்கால வாழ்வோடு பொருத்திப் பார்க்கிறார் கௌதமன். ‘சாதி ஒழிப்புக்கு நீங்கள் முன்வைக்கும் செயற்திட்டங்களும் தீர்வுகளும் என்னென்ன?’ என்று சீனு தமிழ்மணி அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் ராஜ் கெளதமன்,
“கைவசம் ஒரு நாவலை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. தீர்வுகளுக்காகத் திட்டங்கள் போடுகிறோம். ஆனால், இரண்டுக்கும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. தீர்வுகளுக்காகப் போடும் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பச் சூழலில் சில நபர்களால் வரையறுக்கப்படுகின்றன. அவை, மாறிவிட்ட இன்னொரு வரலாற்றுச் சூழலில் நொண்டி அடிக்கின்றனவே. அம்பேத்கர் பௌத்த மதமாற்றத்தைச் சொன்னார். அவருக்கு முன் அயோத்திதாசர் பிரிட்டிஷ் ராஜ விசுவாசிகளாகும்படி சொன்னார். சுயராச்சியம் கூடாதென்ற பெரியார் சாதி - மத கலப்புத் திருமணத்தை முன்வைத்தார். ரொம்ப நூற்றாண்டுகளுக்கு முன் வேள்வித் தீயில் விழுந்து புலை உடம்பின் தீட்டை அகற்றும் உபாயத்தைச் சொன்னார்கள். புரட்சி வெடித்து அரசியல் சர்வாதிகாரம் நமக்கு வந்துவிட்டால், சாதி தானாக உதிர்ந்துவிடும் என்று உள்ளூர்த் தோழர்கள் உறுதி சொன்னார்கள். ஆனாலும், எப்படியோ தெரியவில்லை எப்படி மாறினாலும் சாதி வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறதே. மூன்று தலைமுறைகளாகப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதி வேறுபாடு பற்றிச் சொல்லாமல் வளர்த்தால் சரியாகிவிடும் என்று ஒரு வெள்ளைக்காரர் கூறினார். ஆனால், நம்முடைய மொழி சாதி போற்றும் மொழியாக இருக்கிறதே. இன்னொரு வெள்ளைக்காரர், ஒரு கட்டத்தில் சாதி பளுவைத் தாங்க முடியாத இம்மக்கள் திரள் நடத்தும் ரத்தக் களறியால் தீரும் என்ற யோசனையைக் கூறினார். சாதி ஒழிப்புக்காக, தலித்துகள் தங்களுடைய ரத்தத்தைச் சிந்துகிறார்களேயொழிய மற்ற யாரும் சிந்துகிற மாதிரி தெரியவில்லை. தலித்துகள் ஒன்று வியர்வை சிந்த வேண்டும் அல்லது ரத்தம் சிந்த வேண்டும். வேறு ஏதாவது சிந்தினால் மற்றவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை. சாதி ஒழிப்புக்கு இதுவரை முன்வைத்த திட்டங்களுக்கும் தீர்வுகளுக்கும் பயன்கள் ஏதுமில்லை என்று இப்போதே சொல்லிவிட முடியாது. சொல்லுவதற்கான கால அவகாசம் இன்னும் போதாது. சாதியின் வேர் ரொம்ப ஆழமானது. அதைக் கெல்லி எறிவதற்குச் சில காலம் பிடிக்கத்தான் செய்யும். இப்போதைய சூழலில், ஜனநாயக அரசியல் அமைப்பு தந்துள்ள உத்திகளைத் திறம்படவும் சோர்ந்துபோகாமல் விடாப்பிடியாகவம் பயன்படுத்திக்கொண்டிருப்பது மிகவும் அவசியம்” (2025:141-142) என்று குறிப்பிடுகிறார் ராஜ் கெளதமன்.
ராஜ் கெளதமன் அவர்கள் தமிழ் இலக்கியத்தையும் சமூக வரலாற்றையும் ஒன்றோடொன்று இணைத்து வாசித்தவர். குறிப்பாக சாதி, ஆதிக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, சமூக மாற்ற இயக்கங்கள் போன்றவற்றை விமர்சனரீதியில் அணுகியவர். அவருடைய எழுத்துகள் வாசகரைச் சமாதானப்படுத்துவதில்லை; மாறாக, சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தூண்டுகின்றன.

‘ஒளிரும் சொற்கள்’ தொகுப்பில் 1978இல் படிகள் இதழில் கௌதமன் என்னும் பெயரில் ராஜ் கெளதமன் எழுதிய ‘சோவியத் அழகியல்’ Aesthetics And Poetics என்னும் கட்டுரை முதல், எழுத்தாளர் பாமாவின் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 2024இல் ‘பாமா: தமிழ் இலக்கியத்தின் திசைவழி’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கிசும்புகாரன் நூலை முன்வைத்து’ என்னும் கட்டுரைவரை ‘ஒளிரும் சொற்கள்’ நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், அரசியல், அமைப்பியல் பற்றி யூரி பரபாஸ் கூறியவற்றை மறுக்கும் ராஜ் கெளதமன், “சோவியத் அரசும் கொள்கையும், உலகில் மிக முற்போக்கான விஷயங்கள் என்ற பொய்யான கருத்தினடிப்படையில் இந்நூலின் விவாதங்கள் அமைவதை எரிச்சலுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது. தேசியம், நாட்டுப்பற்று என்ற வாதங்கள் அணுகுண்டைவிட வருங்காலங்களில் கம்யூனிசத்தின் எதிரிகளாக விளங்குமென்ற அர்த்தத்தில் பெற்ராண்ட் ரஸ்ஸல் கூறிச் சென்றதில் உண்மை இருக்கிறது. புரட்சியிலிருந்து தூரமாய்ப் போய் நிற்கிற ஒரு அரசுக்குரிய விதமாய் சோவியத் அழகியல் லட்சணம் அமைந்திருக்கிறது வெறுமனே சோஷலிச நாடு என்ற நாமம் சூட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமே அதற்கு மார்க்சியத்தில் ஒரு தலைமை பீடமோ, வழி நடத்தும் தகுதியோ வந்துவிடுமோ?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். கலை இலக்கிய மொழியில் தர்க்கத்தின் ஆதிக்கம் குறைவாக இருப்பதற்கு வடமொழி அணி இலக்கண நூல் தழுவலான தண்டியலங்காரம் கூறும் உருவக மொழி மரபானது, கலை – இலக்கியம் என்பது சாதாரணப் பேச்சிலிருந்து வித்தியாசப்பட்ட ஒருவிதமான உருவகப் பேச்சு என்று கூறுவதைக் காரணமாகக் கூறிவிடலாம் என ராஜ் கௌதமன் கூறுவது பொருளுடையது.
இவ்வாறு, ‘ஒளிரும் சொற்கள்’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதி அடுக்குகள் எவ்வாறு பண்பாட்டிலும் இலக்கியத்திலும் பதிந்துள்ளன என்பதை அவர் ஆழமாக ஆராய்கிறார். இலக்கியம் வெறும் கலைச்செயலாக மட்டுமில்லை; அது ஒரு அரசியல் செயற்பாடாகவும் இருப்பதை அவர் வலியுறுத்துகிறார்.
தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள் பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பு (1930-1959) ‘பதிப்பாளர்களுக்கான பாடநூல்’ என்னும் தலைப்பில், வள்ளலார் இராமலிங்கனாரின் எழுத்துகளைப் பதிப்பிக்கும் பணியைத் தன் வாழ்நாள் பணியாகக் கருதி உழைத்த ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் பதிப்புப் பணியை, ஒரு பதிப்பாளருக்கு வேண்டிய அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, கடும் உழைப்பு, நாணயம், நேர்மை, சமூக அக்கறை, தொலைநோக்கு, அறிவியல் – அழகியல் நோக்கு முதலிய அத்தனையும் இவருக்கு இருந்தன என்று ராஜ் கெளதமன் மதிப்பிடுகிறார்; வியக்கிறார்.
இந்நூலின் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில், அது எந்தவொரு அதிகார அமைப்பையும் தயங்காமல் விமர்சிக்கிறது. ஆதிக்கக் கதைகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை முன்னிறுத்துகிறது. இதனால் இந்த நூல் ஒரு சமூக அறம் நோக்கிய சிந்தனைப் பதிவாகத் திகழ்கிறது.
மேலும், ராஜ் கெளதமன் அவர்களின் எழுத்து நடை கேலியும் நையாண்டியும் என எளிமையானதாய் இருந்தாலும் அதில் உள்ள கருத்து ஆழமும் வலிமையானதுமாக உள்ளது. அவர் பயன்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள், சமூக ஆய்வுகள், இலக்கிய மேற்கோள்கள் ஆகியவை அவரது ஆராய்ச்சித் திறத்தை வெளிப்படுத்துகின்றன. வாசகர் ஒருமுறை படித்துவிட்டுப் புத்தகத்தை மூட முடியாது; மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தளைப்படுவர். இன்றைய இளைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, தமிழ் ஆய்வில் சமூகநீதிப் பார்வையை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு முக்கிய வழிகாட்டி. இலக்கிய விமர்சனம் எவ்வாறு சமூக அரசியலுடன் தொடர்புடையது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
‘ஒளிரும் சொற்கள்’ என்ற தலைப்பே மிகவும் பொருத்தமானது. இங்கு ‘ஒளிரும்’ என்பது வெறும் அழகிய சொல் அன்று; அது உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் சிந்தனையைக் குறிக்கிறது. அந்த ஒளி சில நேரங்களில் கண்களைக் குத்தும்; ஆனால், அதுவே விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்நூல் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பல முன்கூட்டிய கருத்துகளைச் சவாலுக்கு உட்படுத்துகிறது. வரலாறு யாருடையது? இலக்கியம் யாருக்காக? சமூக மாற்றம் எவ்வாறு சாத்தியம்? போன்ற கேள்விகளை முன்வைக்கிறது. இக்கேள்விகள் இன்று மிகவும் பொருத்தமானவையும் தேவையானவையும் ஆகும்.
‘மலமும் சாதியத் தீண்டாமையும்’ (இத்தொகுப்புப் பின்னிணைப்பில் இக்கட்டுரையின் கையெழுத்துப்படி இடம்பெற்றுள்ளது) என்னும் தலைப்பிலான கட்டுரையில் ஆலன் டண்டிசு அவர்களின் Two Tales of Crow and Sparrow – A Freudian Folkloristic Essay on Caste and Unthouchability என்ற நூல் பற்றிய விமர்சனமானது, நாட்டுப்புறக் கதைகளில் வருகிற காக்கா பற்றிய பண்பாட்டு அடையாளம், வைதிக மரபில் காக்காவுக்குத் தரப்பட்டுள்ள அடையாளத்தோடு தொடர்புடையது. இனக்குழு மரபை ஓரப்பகுதிக்குத் தள்ளிய வைதிக மரபின் நோக்கு நிலையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, அம்மரபிற்கும் சாதகமான கருத்தியல் கட்டுமானத்தையே ஆலன் டண்டிசு முன்வைக்கிறார் என்பதை கௌதமன் சுட்டுகிறார். மேலும், பறவைகளில் காக்கா, பறைச்சாதிப் பறவை என்றும்; பறையா என்ற சாதிப் பெயரைப் புதிய வகைச் சொல்லாக ஐரோப்பிய அகராதிகளில் இடம்பெறச் செய்த பிரெஞ்சுப் பாதிரி அபே துபாயின் மேற்கோள் துணைகொள்ளுதலும்; தீட்டு, தீண்டாமை, இழிவு ஆகியவற்றை மலம், எச்சில், கழிவு ஆகியவற்றிலிருந்து உருவான மனப்பழக்கம் என்ற தமது ஆய்வு முடிவுற்கேற்ப மலம், எச்சில் ஆகியவற்றோடு தொடர்புடைய காகத்தை மனித – விலங்குகளின் மலம், எச்சில் ஆகியவற்றை அகற்றும் சாதி மாந்தரோடு ஒப்பீடு செய்வதையும், இந்துச் சாதியத்தின் வாய் பிராமணன் என்றும் மலம் வரும் குதம் தீண்டாச் சாதியார் என்றும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து டண்டிசு பொருள்கோடல் செய்வதை ராஜ் கௌதமன் விமர்சிக்கிறார்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பின்போது தொகுப்பாசிரியர் சந்துரு மாயவன், எழுத்தாளர் பூமணி அவர்களின் ‘ரீதி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ‘நீதி’ என்றுள்ளதைத் திருத்த வேண்டும். ‘நீ யார் என்பதைக் காட்ட ஒரு வார்த்தைபோதும்’ என்னும் தலைப்பிலான நேர்காணலில் அ. மாதவையா அவர்களின் பிறந்த ஆண்டு 1925 என்றுள்ளது (ப.163), அதையும் 1872 எனத் திருத்தவேண்டும்.
‘ஒளிரும் சொற்கள்’ விவாதிக்க வேண்டிய ஒரு சிந்தனைத் தளம். தமிழ் இலக்கியத்தையும் சமூக வரலாற்றையும் புதிய கோணத்தில் அணுக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு முக்கியப் பதிவு இந்நூல்.
*****
ஒளிரும் சொற்கள்: ராஜ்கௌதமன் தொகுக்கப்படாத எழுத்துகள், சந்துரு மாயவன், நீலம் பதிப்பகம், 2025, சென்னை 600 008.


1

2




பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.

க. திருமூர்த்தி
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
உமர் ஃபாரூக்
கிருஷ்ணமூர்த்தி
அருண்பாண்டியன் மனோகரன்
கு. இலக்கியன்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
Anbarasan S 2 months ago
மிக நேர்த்தியான கட்டுரை, செறிவான மொழி நடை. கட்டுரையாளர் தம் விமர்சனத்தின் வழியாக வாசகர்களை ராஜ் கௌதமனின் படைப்புலகிற்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ராஜ் கௌதமனின் சமரசமற்ற விமர்சனப் பார்வையையும், அவர் முன்வைக்கும் சமூக-அரசியல் உரையாடல்களையும் சிதைக்காமல் அப்படியே வாசகர்களிடம் கடத்தியிருப்பது இக்கட்டுரைக்குக் கூடுதல் வலிமை சேர்க்கிறது.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Maniyv 2 months ago
உங்களது நடை மிகவும் செறிவாகவும், ஆழமான கருத்துப் புலப்பாட்டோடும் இருக்கிறது.தெளிவான ஆய்வுப் பார்வை: பெரியாரின் தாக்கம் தலித் இலக்கியங்களில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் விளக்கியுள்ளீர்கள்.நேர்த்தியான சொல்வளம்: 'நிசாரமாகத் தூக்கி எறிய முடிந்தது', 'வெகு நிச்சயத்தோடும்' போன்ற பிரயோகங்கள் வாசிப்பவருக்கு ஒரு வலுவான பிம்பத்தை வழங்குகின்றன.தொடர்ச்சி: ஒரு வாக்கியத்திலிருந்து அடுத்த வாக்கியத்திற்குச் செல்லும் ஓட்டம் (Flow) மிகச் சிறப்பாக உள்ளது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
இராக்கண்ணன் 2 months ago
மிக விரிவாகவும் , வாசிப்பின் வேகம் குறைந்திடா வண்ணமும் மிகவும் ஆழமாக அனைத்து சாரங்களையும் தொட்டு எழுதப்பட்ட விமர்சன கட்டுரை . சமரசமற்ற ஆசிரியரின் எழுத்தைப் போலவே திருமூர்த்தி அவர்களின் விமர்சனமும் அமைந்துள்ளது. உச்ச பட்ச உதாரணம் கடைசி பத்தி. நன்றி .
Reply 1 0
க. திருமூர்த்தி 2 months ago
தங்களின் ஆழமான வாசிப்புக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எழுத்தின் நோக்கத்தையும் அதன் உள்மனச் சாரத்தையும் இவ்வளவு நுட்பமாக உணர்ந்து பதிவு செய்திருப்பது பெரும் ஊக்கமாக உள்ளது. மகிழ்ச்சியையும் பொறுப்பையும் ஒருசேர அளிக்கிறது. தொடர்ந்து சிந்திக்கவும், மேலும் பொறுப்புடன் எழுதவும் தங்களின் இந்தப் பதிவு உறுதுணையாக இருக்கும். மிக்க நன்றி.🙏🥰❤️🌱📚🖊️
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Ragu Pathi 2 months ago
அருமையான கட்டுரை...✍🏻👌🏻 எனக்குத் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஆசிரியர் தூண்டி உள்ளது....📚📖 மேலும் ஆசிரியர் இது போல் பல நல்ல கட்டுரைகளை எழுதி வெளியிட வேண்டும். ஆசிரியருக்கு நன்றிகள் மட்டும் பாராட்டுக்கள்...❤️✨
Reply 5 0
க. திருமூர்த்தி 2 months ago
மிக்க மகிழ்ச்சி ரகு. நன்றி. உத்வேகம் அளிக்கிறது. நிச்சயம் எழுதுவேன். 👏🥰📚🌱🌻
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.