ஹாலில் இருந்த சின்னிஞ்சிறிய சோஃபாவில் உடம்பை ஒடுக்கிக் கொண்டு குறுகி அமர்ந்திருந்த ஒரு அப்பாவித்தனமான தோற்றத்தில்தான் முதல்முறை அவனைச் சந்தித்தேன். அவனைப் பார்த்தபோது முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. என் இடது காலில் வலி இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் குழப்பத்தோடு விழித்தபடி அத்தாவைத் திரும்பிப் பார்த்தபோதுதான் அதை அவர் ரசித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. மிரட்சியடைந்த என் முகத்தைப் பார்த்ததும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். சிரிப்பு அதிகமாகி நெஞ்சுச்சளியின் கரகரப்பு ஓசையோடு இருமத் துவங்கியதும் விழிப் பிதுங்கி கண்ணீர்த் துளி மூக்கு நுனியில் வடிந்தது. மூடிய வலது கையை வாயில் வைத்து இருமளை அடக்கியதும் மீண்டும் எங்கள் இருவரையும் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். முகத்தைச் சுளித்துக் காண்பித்த என் எச்சரிக்கை குறியையும் பொருட்படுத்தாமல் அத்தாவின் சிரிப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. எரிச்சலூட்டும் அந்தச் சிரிப்புதான் எனக்குள்ளிருந்த சாத்தானை அப்போது உயிர்த்தெழச் செய்த அழைப்பு மந்திரமோ என்று பின்னாட்களில் பல முறை எண்ணியிருக்கிறேன். ஆனால் எதையொன்றையும் வெறுப்பதற்கு என்றுமே எனக்குக் காரணங்கள் தேவைப்பட்டதில்லையென்றாலும், அத்தாவின் இந்தச் சிரிப்பு மட்டும் ஒரு மாதிரி என்னைத் தொந்தரவு செய்துவிட்டது.
“நம்ம வீட்டுக்கு இன்னோரு காஃப்கா வந்தாச்சுடா” என்று சொல்லி சோஃபாவின் கை வைக்குமிடத்தில் ஓங்கிப் படீரென அறைந்தார். அதில் உட்கார்ந்திருத்த அப்புவின் உடல் அதிர்ந்தபடி நடுங்கியது. கண்ணிமை அகல விரிந்து, மேல் உதடு மெல்லத் துடித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் நான் வெளிப்புறம் புடைத்து நீண்டிருந்த அவன் காதுகளைக் கவனித்தேன். ஆம், அப்பு அப்படியே என்னைப் போலவே இருந்தான். அதிர்ச்சியில் அவனை ‘வா’ என்று ஒரு வார்த்தைக்குக்கூட நான் கூப்பிடவில்லை என்பதையும் மறந்திருந்தேன். அத்தாவின் கையைப் பற்றிக்கொண்டு ஹாலின் மூலைக்கு இழுத்துச் சென்றேன். வளைந்த என் இடதுகால் பாதத்தைக் குளிர்ந்த டைல்ஸ் தரையில் கரப்பான்பூச்சி ஊர்வதைப்போல் இழுத்து வந்தேன்.
“யாருத்தா இது? உனக்குத் தெரிஞ்ச பையனா? சாப்பாடுதான வாங்கிட்டு வாறேனு சொல்லிட்டுப் போன. யாரு இது திடீர்னு...”
“டேய் மெதுவாப் பேசு, அவனுக்குக் கேட்டுறபோது. என்ன எதுவும் தெரியாத மாறி நடிக்கிறியா... யேய். அப்டியே உன்ன மாறியே இருக்கான் பாருடா. மூனாவது கள்ளக் காஃப்கா.” என்று என் இடுப்பில் கிள்ளி கிச்சங்காட்டினார். எனக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது.
“ப்ச்" என்று அத்தாவின் கையைத் தட்டிவிட்டு, “விளையாடாம விஷயத்தச் சொல்லு” என்றேன்.
“பாவம்டா அவன். நா ஸ்கூட்டில போய்க்கிட்டு இருந்தப்ப பெரியாஸ்பத்திரி பக்கத்துல காம்பௌன்ட் ஓரமா நின்னுட்டு இருந்தான். பார்த்த ஒடனே எனக்குத் திடுக்குனு ஆயிருச்சு. நீதான் நிக்கிறியோன்னு பயந்துட்டேன். அப்பறம்தான் இவன் யாரு என்னன்னு விசாரிச்சேன். சின்ன வயசுலயே அனுபவிக்கக் கூடாததெல்லாம் பாத்துட்டு வந்துருக்கான்டா. இவன் பேரு அப்பு. இவனுக்கு அப்பா அம்மா இல்ல. இவன் வந்து...” என்று அத்தா தாழ்ந்த குரலில் கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருந்ததை இடை மறித்தேன்.
“அதுல்லாம் எனக்குத் தேவ இல்லாதது. இப்ப நீ என்னா செய்யப் போற அத மட்டும் சொல்லு” என்று கூறி அத்தாவின் கண்களைத்தான் ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். கண்ணிடுங்கி இமைகளில் சுருக்கமிருந்தது. அவர் என்ன சொல்லப் போகிறாறென்று தெரிந்ததும் மெல்ல மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.
“வேற என்னடா பண்ண முடியும். இவனயும் நம்மகூடயே வச்சிக்கிடலாம். என்ன சொல்ற?”
எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் ஒரு வேகாளம் புறப்பட்டது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வேகமாக நகர்ந்து என் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டேன்.
“டேய் ஜலால். நில்லுடா ஜலால் டேய்” என்று கெஞ்சிக் கொண்டே அத்தா பின்னால் ஓடி வந்து கதவைத்தட்டிக் கொண்டு நின்றிருந்தார். டமடம ட்டமடம’ என்று விடாமல் தட்டிக் கொண்டே இருந்தார். மூளைக்குள் குளவி கொட்டியதைப் போல் வலிக்க ஆரம்பித்தவுடன் மெத்தையில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கி கதவில் ஓங்கி மட்டென் எறிந்தேன். மரக்கதவு பயங்கரமாக அதிர்ந்தது.ச்அத்தா கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார். ஆனால் அவர் அங்கேயே வெகுநேரம் நின்றிருப்பது கதவுக்கு அடியிலிருந்த இடுக்கு வழியாகத் தெரிந்தது. நகர்ந்து செல்லும்போது அவர்விட்ட பெருமூச்சையும் நன்கு கேட்ட முடிந்தது.
எப்போதும் அத்தாவின் கிறுக்குத் தனங்களைப் பார்த்துக் கோபப்படுவது போல் காட்டிக் கொண்டாலும் அதை உள்ளூர ரசிக்கும் எனக்கு இன்று என்ன ஆனது என்று என்னையே கேட்டுக் கொண்டேன். ஒருவேளை இது வழக்கமான கிறுக்குத்தனமில்லையோ? மீண்டும் மீண்டும் இடது கால் வலிக்க ஆரம்பித்தது. வளைந்த எழும்பை அழுத்தித் தடவியபோது வின்வின்னென்று வலித்தது. கதவில் தூக்கி எறிந்த புத்தகத்தின் அட்டைப் படத்திலிருந்த தஸ்தயேவ்ஸ்கி சோகமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். கட்டிலுக்கு அடியிலிருந்து ஒரு தகரப்பெட்டியை இழுத்துத் திறந்து அதிலிருந்த அட்டைகளுக்கும் காகிதங்களுக்கும் நடுவில் துழாவி அம்மாவின் ஃபோட்டோவைத் தேடி எடுத்தேன். அத்தாவுக்குத் தெரியாமல் நான் மறைத்து வைத்திருக்கும் அம்மாவின் ஒரே ஒரு எஞ்சிய ஞாபகம். ஒடுங்கிய கன்னம், மூக்கின் பக்கத்தில் பெரிய பருவோடுமிருந்த அம்மாவின் உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டைவிரலால் ஃபோட்டோவைத் தடவி உதட்டைப் பதித்து முத்தமிட்டேன். அழ வேண்டுமென்று செயற்கையாக முயன்றாலும் கண்ணீர் வரவேயில்லை.
விழித்தெழுந்ததும் பட்டை, கிராம்பின் மனம்தான் அறை முழுவதும் இருந்தது. என் அறைக்குப் பக்கத்தில்தான் சமையல் கட்டு. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. நெஞ்சின் வியர்வையில் அம்மாவின் ஃபோட்டோ ஒட்டியிருந்தது. அதை பெட்டிக்குள் வைத்து மூடி கட்டிலுக்கடியில் தள்ளினேன். மசால் வாசம் வந்ததும் பசியில் வயிறு சத்தம் போடத் துவங்கியது. தஸ்தயேவ்ஸ்கியைத் தூக்கி மொத்தையில் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தேன். வடச்சட்டியில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த அத்தா தலையைத் திருப்பி என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
“வாங்க கோவக்கார பெரிய மனுஷா. எப்டிப் பழியா கோவம் வருது இவனுக்கு” என்று சொல்லி கரண்டியில் ஒரு கறித்துண்டை எடுத்து ஊதி ஊதி என் புறங்கையைப் பிடித்துத் திருப்பி உள்ளங்கையில் போட்டார். கோழிக்கறியின் இளஞ்சூடு பசியைக் கிளறிவிட்டது. கறித்துண்டை வாயிலிட்டதும் சூட்டில் உதடு குவிந்து எச்சில் ஊறியது. அத்தாவின் கை ருசியை இன்று வேறுபடுத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பசிதான் காரணமா என்று தெரியவில்லை. ஆனால் அத்தாவின் கைப்பக்குவமே மாறியிருந்தது.
“ எப்டிடா ஐயாவோட தி பெஸ்டு சிக்கன் கிரேவி. ஊர்ல ஒருத்திக்குக்கூட சுட்டுப் போட்டாலும் வராதுடா உங்கப்பே கைமனம். சுலைமான்பாகம்ன்னு ஒரு சமயற்கலையவே உண்டு பண்ணி புரட்சி செய்யப் போறேன்” என்று கரண்டியைச் சுற்றிக் கொண்டிருந்தார். ஹாலில் எட்டிப் பார்த்தேன். அப்பு உட்கார்ந்த இடத்திலிருந்து நகராமல் அப்படியேதான் இருந்தான்.
“ அப்பு... இங்க வா. லஞ்ச் ரெடி” என்று அவனைக் கூப்பிட்டார். எனக்குள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த பசியெனும் ஜந்து உறும ஆரம்பித்தது.
“ எனக்கு மொதல்ல சாப்பாட குடுத்துட்டு அப்றம் என்ன வேணும்னாலும் பண்ணு” என்றேன்.
“ இல்லடா எல்லாருமா ஒன்னா உக்காந்து...”
“இப்ப நா சாப்டனும்ங்கிறியா இல்ல அப்டியே போயிறாவா”
“இருடா இருடா போட்டுத்தாறேன். ஏன் இன்னைக்கு இப்டி நடந்துக்கிற. வீட்டுக்கு வந்தவன வான்னு ஒரு வார்த்தைக்குக் கூட கூப்புடல. என்னமோப்பா!” என்று சொல்லிக்கொண்டே வட்டியில் சோற்றைப் போட்டு கிரேவியையும் அள்ளி ஊற்றினார்.
ஆவி பறக்க சோற்றுத்தட்டை வாங்கியதும் கையால் கிண்ட ஆரம்பித்தேன். நன்கு குழைந்த சோற்றின் சூடு விரல்களை எரித்தது. சோற்றை அள்ளி அள்ளி வாயிலிட்டேன். இரண்டாவது கவளத்திலேயே தொண்டை அடைத்துக் கொண்டதும் தலையை நிமிர்த்தினேன்.
“டேய் கிறுக்கா. எதுக்குடா இம்புட்டு அவசரம். பொறுமையாத் தின்னுடா. யாராவது சோத்த புடிங்கிக்கிறவாப் போறாங்க” என்று செம்பில் தண்ணீர் முகந்து கொடுத்தார். மடமடவென்று ஒரு செம்புத் தண்ணீரையும் குடித்ததில் வயிறு ரொம்பிவிட்டதைப் போலாகிவிட்டது. சாப்பிட்டு முடித்ததும் என் அறையில் வந்து படுத்துக்கொண்டு ஒரு நாவலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பக்கங்களில் மனம் ஒட்டவேயில்லை. வெகுநேரம் கழித்துதான் கதவைத் திறந்து வெளியே வந்தேன். அப்பு அதே சோபாவில் உட்கார்ந்திருந்தான். மெல்ல நடந்து அவன் பக்கத்தில் சென்று இன்னொரு சோஃபாவில் உட்கார்ந்தேன்.
“உன் பேரு அப்புவா?” ஏன் கேட்கிறேனன்று தெரியாமலேயே கேட்டேன்.
“உம்” என்று தலையை மட்டும் ஆட்டினான்.
“நீ இந்த ஊர்தானா?”
“இல்ல சொந்த ஊரு பேரையூர் பக்கத்துல அணைக்கரப்பட்டி”
“அங்க இருந்து இங்க எப்டி? சரி அதெல்லாம் தேவையில்ல. நீ பாக்குறதுக்கு அப்டி ஒன்னும் என்ன மாதிரிலாம் இல்ல. ரெண்டு பேருக்கும் காது மட்டும்தான் ஒன்னா இருக்கு. அத்தா ஒரு லூசு. காஃப்கா பிறந்த ஜூலை மூனுல தா நானும் பொறந்தேனாம். அதயும் இந்தக் காதயும் வச்சுதான் என்ன காஃப்கா மாறி இருக்க காஃப்கா மாறி இருக்கன்னு சொல்லிட்டு அலையும். சரியான காஃப்கா பைத்தியம். ஆமா அப்டினா உனக்கு யாருன்னு தெரியுமா?” என்று கேட்டேன். ஆந்தையைப் போலவே மிரண்டு போய் விழித்துக் கொண்டிருந்தான்.
“அங்க பாரு. செவுத்துல ஒரு ஆளோட ஃபோட்டோ மாட்டிருக்கா. அதுதான் காஃப்கா. ஒரு ரைட்டர். எங்கத்தாவுக்கு இந்தாள் மேலதான் பொறக்கிறுக்குப் புடிச்சிருக்கு. பாத்தியா எந்த விஷயத்துலயுமே நீ என்ன மாறி கிடையாது. அந்த ஃபோட்டோவையும் சேர்த்து நம்ப மூனு பேருக்கும் சொல்லிக்கிற மாறி எந்த ஒற்றுமையுமில்ல. இந்தக் காதத்தவர” என்று சொல்லி விரலை வைத்து என் காதைச் சுண்டிக் காண்பித்தேன். அவன் அமைதியாக இருந்தான். இயல்பாக என் பார்வை அவனுடைய இடதுகால் பாதத்தில் விழுந்தது. வளைவில்லாத நேரான பாதம். கணுக்கால் மூட்டு நன்கு உருண்டு அழகாய் இருந்தது. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தேன். இப்போது என் இடது காலை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் கண்ணிலிருந்து ஒரு துளி நகைப்பையோ, இகழ்ச்சியையோ அல்லது ஏதோவொன்றைக் கண்டுபிடிக்க மனம் முயன்று கொண்டிருந்தது. அவனிடமிருந்து கண்ணை விலக்கிக் கொண்டாலும் உடம்பு நடுங்கிக் கொண்டிருப்பது எனக்கே தெரிந்தது. கால்களை சோஃபாவுக்கடியில் ஒடுக்கிக் கொண்டேன். வெளியே சென்றிருந்த அத்தா உள்ளே வந்து எங்களிருவரையும் பார்த்தார்.
“என்ன ரெண்டு காஃப்காவும் சமாதானமாயிட்டீங்க போல” என்று சொல்லி என் தோளில் கை வைத்தார். அத்தாவின் முகத்தில் எங்கிருந்துதான் இப்படி ஒரு அசட்டுத்தனமான புன்னகை வந்து புகுந்து விடுகிறது என்று எரிச்சலாக வந்தது.
“எத்தாவ் இப்டியே லூசுத்தனமா எதாச்சும் செல்லிட்டேதான் இருப்பியா? உன்னோட பைத்தியக்காரத்தனத்த எல்லாம் ஏன்ட காட்டாத . எனக்கு எதுவும் புடிக்கலத்தா” என்று சொல்லி எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு அந்நிய ஆளின் முன் தத்தித் தத்தி நடப்பதை நினைக்கும்போதே உள்ளுக்குள் பற்றியெரிந்தது. என்னைப் பார்க்கிறானா என்று அவனைத் திரும்பிப் பார்த்தேன். சுவரிலிருந்த காஃப்காவின் படத்தைதான் அவன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அத்தாவைப் பார்த்தேன். மொத்த உணர்ச்சியும் வற்றிப்போன அவரின் முகத்தைப் பார்க்கச் சகிக்காமல் உடனே தலையைத் திருப்பிக் கொண்டேன்.
எப்போதும் போல என் அறையின் கதகதப்பிற்குள் வந்ததும் மனதின் அலையடிப்புகள் சட்டெனத் தணிந்தது. மற்ற அறைகளிலிருந்து எந்த வித்யாசமான ஒன்றும் இதிலில்லை. என் அதிகப்படியான அந்தரங்கத் தருணங்களுக்கு சாட்சியமாய் அமைந்துவிட்டதன் காரணத்தினால்கூட என் இறுக்கங்களைத் தளர்த்தும் இடமாக இது இருக்கலாம். எல்லாவற்றைவிடவும் அம்மாவுக்கும் எனக்கும் நெருக்கமான அறை. பலமுறை இங்கிருந்து இடம் மாற்ற அத்தா முயன்றபோதும் மூர்க்கமாக எதிர்த்ததெல்லாம் இந்த ஒரு அறையின் பொருட்டுதான். யாருடனும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாத அறை.
ஒரு மழைநாளில் அத்தா வீட்டுக்குத் தூக்கி வந்திருந்த அந்தப் பூனையின் காதுகள் சட்டென்று நினைவிற்கு வந்தது. அந்தப் பூனையைப் பார்த்ததும் எனக்கு முதலில் உண்டானது ஒருவித ஒவ்வாமைதான். வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் ஈரத்தில் நனைந்திருந்தது. என் பக்கத்தில் வர அதை அனுமதிக்கவேயில்லை. அதன் சிறிய முன்னங்காலைத் தூக்கி நாவால் நக்கிக் கொண்டே ‘மியாவ்... ம்மியாவ்’ என்று அழும் தொனியில் கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே பதற ஆரம்பித்துவிடுவேன். ஒரு வாரம் அது இங்கிருந்தது. அத்தாவும் அதுவும் காதலர்களாகவே மாறிவிட்டார்கள். பாலைக் குடித்துவிட்டு அப்படியே அத்தாவின் மேல் தாவி ஏறி முகம் முழுவதும் நாவால் நக்கத் துவங்கியதும் அவர் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டுவார். ஒரு நாய்க்குட்டியைப் போலத்தான் அது அத்தாவிடம் நடந்துகொண்டது.
ஆனால் அந்த கள்ளப் பூனை ஒரு வாரத்தில் என் இரவுகள் அனைத்தையும் மோசனமானதாக மாற்றிவிட்டது. அறைக் கதவை உட்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டுதான் தூங்குவேன். இருந்தாலும் கதவிற்கு மேலே சதுர வடிவில் ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும். அன்று இரவு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து ஏதோ ஒரு தொடுகை என்னை விழித்துக் கொள்ளச் செய்தது. என் இடது காலில் என்னவென்று தெரியாத மிருதுவான ஒன்றின் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. சற்றுத் தலையைத் தூக்கிப் பார்த்ததும் உடல் விதிர்க்க எழுந்து கொண்டேன். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து கையும் காலும் நடுங்கொண்டிருந்தது. திருட்டுப் பூனை வேகமாக ஓட்டை வழியாக ஏறிக் குதித்து ஓடிவிட்டது. அந்த நள்ளிரவின் மூர்க்கத்தை யாரிடம் காட்டுவதென்று தெரியாமல் தலையணையின் பஞ்சைக் கைகள் பிதுக்கிக் கொண்டிருந்தது. அன்று இரவு மட்டும் மூன்று முறை அந்தப் பூனை இதே போன்றே என்னை வதைத்தது. ஒரு வாரம் முழுவதும் இதேதான். என் வளைந்த இடது காலை உரசிக் கொண்டு படுப்பதில் அதற்கு அப்படி என்ன சுகமென்று எனக்குத் தெரியவேயில்லை. எரிச்சலில் ஒவ்வொரு முறையும் கால்களால் எட்டி உதைத்த பிறகும்கூட ஒரு பந்து போல் மீண்டும் சுருண்டு என் கால்களிடமே வந்தது. அறையை மாற்றிக் கொள்ளச் சொன்ன அத்தாவை ‘ பூனையைத் துறத்தி விடு’ என்று சொல்லி கண்டபடி திட்டிக்குமித்து விட்டேன். கடைசிவரைக்கும் அத்தா அதைத் துறத்தவேயில்லை. நள்ளிரவில் தூக்கம் கலைந்தெழுந்து பித்துப் பிடித்தது மாதிரி படுக்கையில் உட்கார்ந்திருப்பேன். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் உச்சக்கட்டக் கோவத்துடன் அன்றிரவு என் படுக்கையில் கிடந்த கரமசோவ் சகோதரர்களைத் தூக்கி ஓங்கி அடித்தேன். கணமான புத்தகத்தால் அடிபட்ட பூனை, ஒரு குழந்தையின் குரலில் மெல்ல கேவியது. ஒரு கணம் மட்டும் நின்று என்னைப் பார்த்தது. அப்பாவித்தனமான பார்வையது. திருட்டுப் பூனை வழக்கம் போலவே ஏறிக் குதித்து ஓடிவிட்டது. மீண்டும் அந்தப் பூனையை நான் பார்க்கவேயில்லை. பூனையைத் தேடித் தேடி சலித்துப்போனார் அத்தா.
மறுநாள் திங்கட்கிழமையிலிருந்து அத்தா வழக்கம் போல் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். தமிழ் பேராசிரியராக இருந்தாலும் உலக இலக்கியம் மீது ஆழ்ந்த வாசிப்புள்ளவர். அதிலும் முதல் தரமான காஃப்கா பைத்தியம். அவரைத் தாக்க வேண்டுமென்று மூர்கத்தனமாக காஃப்காவை கிழித்துத் தள்ளுவேன். ‘அவன் தன் சுய தத்தளிப்புகளை மட்டுமே பைத்தியம் பிடித்தது மாதிரி எழுதித் தள்ளியவன். அவனின் கொண்டாடப்படும் படைப்புகள் பலவும் நிறைவற்றவை. முழுமைபெறாத அவைகளை அவனே ஒப்புக் கொண்டிருக்கிறான். டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, டிக்கென்ஸ், மார்க்வேஸ் என்று நீளும் இந்த வரிசையில் அவனை எந்த மூலையில் நிற்க வைக்க முடியும்?.’ எப்போதும் அத்தாவிடமிருந்து மௌனமே பதிலாக வரும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் பதில் சொன்னார். அதுவும் ஒற்றை வரியில் .‘அவன் மாளிகை எதுவும் கட்டுற ஆள் கிடையாதுடா. அவன் உருவாக்கினது சின்னஞ்சிறிய மணல் வீடுதான். நுழைவதற்கு மட்டுமே வாசலுள்ள வீடு. ஆனால் விரிந்துகிடக்கும் மொத்த கடலையும் தன்னுள் அருவமாக உள்வாங்கும் மணல் வீடு. அந்த வீட்டுக்குள் புக முடிந்தவர்களுக்குத்தான் அவனுடைய தந்தளிப்பின் அர்த்தம் புரியும்.’
அப்புவும் நானும் தனியாகத்தான் இருந்தோம். அவனிடம் எதுவும் பேசக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டேன். எதன் பொருட்டு அவன்மீது இத்தனை வெறுப்பு? இந்த வீட்டுக்குள் புகும் ஆட்கள் என் அந்தரங்கத்தைத் தொந்தரவு செய்கிறவர்கள் என்று பாவிக்கும் அசட்டுத்தனமான எண்ணத்தாலா? ஒருவேளை அது என்மீதே எனக்கிருக்கும் வெறுப்பா? பிடிபடாத கேள்விகள் தாங்க முடியாத ஒரு அமைதியின்மையை உருவாக்கிவிட்டது. அவன் மீது ஒருவிதமான கருணையையும், அதீதமான வெறுப்பையும் மாறி மாறி மனம் நிகழ்த்திக் கொண்டிருந்தது. என் அறையிலிருந்து எட்டிப் பார்த்தேன். ஃசோபாவில் அமர்ந்திருந்த அவனின் பின் மண்டையும், புடைத்த காதுகளும் நன்றாகத் தெரிந்தது.
எனக்கும் அத்தாவிற்கும் இடையில் பேசிக் கொள்ள ஒன்றுமே கிடையாது எனும் சூழலை உருவாக்கிக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒரு சோர்வான ஆளாக மாறிப்போனார். வீடு முழுவதும் படர்த்திருந்த கசப்பை என்னாலும் நன்கு உணரமுடிந்தது. எந்தக் காரணமுமில்லாமல் அந்தக் கசப்பு பரவியதை மட்டும் அத்தாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அத்தாவால் ஒருபோதும் அதைப் புரிந்துகொள்ள முடியாதென்று எனக்குத் தெரியும்.
ஆனால் எதன் பொருட்டும் அப்புவின் மௌனம் கலையவேயில்லை. இன்னும் ஏன் அவன் இங்கேயே இருக்கிறான் என்று எரிச்சல்தான் வந்தது. அவன் மௌனம் ஒரு தந்திரமா என்றுகூட சந்தேகம் உண்டானது. ஒவ்வொரு முறையும் புரிந்து கொள்ளவியலாத ஒரு மாயக்கண்ணாடியாகவே இருந்தான். அவனிடமிருந்து நான் கண்டு கொண்டவைகள்கூட நானே புனைந்துகொண்ட பிம்பங்களைத்தான். உன் தீர்மானங்களுக்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது என்ற ஒரு குரல் என் மூளையைக் குடையும் போதுதான் நான் இன்னும் அதிக வெறி கொண்டவனாக மாறிப்போகின்றேன்.
அன்று மாடிக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றியது. நான் மாடிப்படியில் ஏறிச் செல்வதே மிகவும் ஆபூர்வம். என்னுடைய நினைவுப்படி சொல்வதென்றால் அத்தாவோடு கடைசியாக வீட்டை விட்டு வெளியே சென்றே இரண்டு வருடமாகிறது. எண்ணங்களைக் கூட ஓட்டை விட்டு வெளிக்கு நீட்டாத வெற்றிகரமான ஒரு ஆமையாக மாறியிருக்கிறேன் என்று நினைக்கும்போது சிரிப்பு வந்தது. கம்பியைப் பிடித்துக் கொண்டே மெதுவாக இடதுகாலை எடுத்து வைத்து படி ஏறினேன். பருத்த தசைகளில் அங்குமிங்குமாக வியர்வை ஊறிச் சட்டையை நனைத்தது. மூச்சு ஏறி இறங்க ஒரு வழியாக மாடிக்கு வந்ததும் காற்றின் இனிமையில் சதைகள் விடுதலையடைந்தன.
உடலின் பகுதி ஏதோ ஒன்றினை இழந்த உணர்வில்தான் நெஞ்சு பதறிக் கொண்டே இருந்தது. எனக்கும் அத்தாவுக்குமிடையே உண்டாகியிருந்த இந்தப் புது மௌனம் என்னை எந்த வகையிலாவது தொந்தரவு செய்கிறாதா என்று பலமுறை கேட்டுக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் காரணம் பழிகாரப்பயல் அப்புதான். எங்கள் நிம்மதியை உடைப்பதற்காகத்தான் அந்தக் கோடாரி வீட்டு நடுவில் முளைத்திருக்கிறது. அத்தாவுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக என் சதையை உண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது. நான் முழுவதும் கறைந்து இல்லாமல் போன பிறகு அத்தா தன் காலுக்கு அடியில் கிடக்கிற கோடாரியை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைவார். ‘அப்போது என்னைத் தேடி அலையும் உங்கள் கைகளுக்கு எட்டாத தொலைவில் சென்றிருப்பேன் அத்தா.’ அழ வேண்டுமென்று நானாகவே மூக்கை உறிஞ்சி முனங்க ஆரம்பித்தேன். அழுகையே வரவில்லை.
கீழிறங்கி வந்தபோது அத்தா வீட்டுக்கு வந்து விட்டார் என்று தெரிந்தது. என் அறைக்குள் இழுத்துப் போட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
”அத்தா... என்ன செய்ற அங்க” என்று கத்திக் கொண்டே பக்கத்தில் சென்றேன். நான் வருவதற்குள் தகரப்பெட்டியிலிருந்த அம்மாவின் போட்டோவை எடுத்து விட்டார். கோபத்தில் அத்தா முகமே அடையாளம் தெரியாம் மாறிப்போனது. என் கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“இத எங்க இருந்துடா எடுத்த?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார்.
“எங்க எடுத்தா உனக்கென்ன? ஏம் பொருள அநாவசியம எதுக்கு நீ நோண்டுவ? அத குடு ஏன்ட.”
“டேய் என்ன வெறி புடிக்க வைக்காத. இவளப் பத்தியே நெனைக்காத. அவ உனக்கு அம்மா இல்ல, அவ சம்மந்தப்பட்ட ஒரு பொருள் கூட இந்த வீட்ல இருக்கக் கூடாதுன்னு எத்தன தடவ படிச்சு படிச்சு சொல்லிருக்கேன். நம்ம வேணாம்னு தானடா அவ விட்டுட்டுப் போனா. ஏன்டா... அப்ப நா கேணப்பயலா... சொல்டா.”
“இப்ப எதுக்குத்தா ரொம்பக் கத்துற? ஃபோட்டோதான வச்சிருந்தேன். என்னால உன்ன மாறிலாம் இருக்க முடியாது.”
“அப்ப என்னோட சுகம் எதையும் பாக்காம உன்ன தடவித் தடவிக் குடுத்து வளத்த என்னக் காட்டியும் அந்த ஓடுகாலிதா உனக்கு ஒசந்தவளா?”
“ஆமா...இப்ப என்னா? அசிங்கமா எதுவும் பேசாத. என்னைய அப்டி என்ன வளத்த? உன்னப் பத்தி எனக்குத் தெரியும்தா. ஒரு நொண்டிய மகனா எப்டி ஏத்துக்குறதுன்னுதான உன் மனசுல நெனச்சிட்டு இருக்க.”
“டேய் கிறுக்கா என்னடா புதுசா என்னமோ பேசுறா?”
“ஆமா அதனாலதான அவன வீட்டுக்குக் கூட்டி வந்து உக்கார வச்சிருக்க. பாக்க என்ன மாறியே இருக்கான்னு சொல்லி என்ன சமாதானப்படுத்த நெனைக்கிற? ஆனா அவனுக்கும் எனக்கும் வித்யாசம் இருக்குத்தா. எனக்கு நொண்டிக் காலுத்தா. அவனுக்கு ஒச்சம் எதுவுமில்லாத நல்ல காலு. உனக்குக் கால் நல்லாருக்குற மகன்தானத்தா வேணும்?”
“சப்புனு அறஞ்சு மொகறையப் பேத்திருவேன் நாயே... என்ன பேச்சுடா பேசுற? ஒத்த குரங்கா உட்கார்ந்து கிடந்தா இப்டிதான்டா யோசிக்கத் தோணும். ஸ்கூலுக்குகூட ஒன்ன அனுப்பாம விட்டு வச்சது என் தப்புதா.”
“நல்லா பேத்திரு. யாருன்னே தெரியாதவனுக்கு இம்புட்டுக் கருண காட்றியே அதான்தா புரியல. சொந்தக்காரப் பசங்களகூட நீ பக்கத்து வச்சிக்கிட்டு நா பாத்ததே இல்ல. கடைசியா நம்ம வீட்டுக்கு வெளியாள் வந்தது எப்பன்னு தெரியுமா? யாருக்குத் தெரியும் நீ செய்றத எல்லாம் பாத்தா அவன் உன்னோட மகனாவேகூட இருக்கலாம். அதான் அம்மா உன்ன விட்டு ஓடிருச்சு போல...” என்று சொன்னதும் சப்பென்று கன்னத்தில் அடி விழுந்தது. ஒரு மிருகத்தைப் போல வெறிகொண்டு என்னைத் தாக்க ஆரம்பித்தார். என் காலை எட்டி உதைத்துக் கையில் கிடைத்தப் பொருளையெல்லாம் என் மேல் தூக்கிப் போட்டார். விலாவில் எத்தியபோது உடல் முழுதும் அதிர்ந்தது. வலியில் துடித்துக் கத்திக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு இன்பம் ஊறிக் கொண்டிருந்தது. இன்னும் அதிகமாக இன்னும் அதிகமாக என்று கூப்பாடு போடும் உடலின் அவஸ்தையை விளங்கிக் கொள்ள இயலாமல் அத்தாவின் அடியில் மூச்சு முட்டியது.
விழுந்துகொண்டிருந்த அடி சட்டென்று நின்றதும் தலையை நிமிர்ந்து பார்த்தேன். பரிதாபப்பட வைக்கும்படியான தன் மெலிந்த கரங்களால் அவன் அத்தாவை இழுத்துப் பிடித்திருந்தான். அத்தாவின் எடை மிகுந்த உருவம் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள திமிறுவதைப் பார்க்கும் போது விந்தையாக இருந்தது. கல்லடிபட்ட செந்நாயைப் போல முனங்கிய படியே எழுந்து நின்றேன்.
“நீ ஏன்டா அவரப் புடிக்குற? அவரு எனைய கொலகூட செய்வாரு. நீ ஏன்டா தடுக்குற நாயே? எல்லாத்துக்கும் நீதான்டா காரணம். யாருனே தெரியாதவங்க வீட்டுக்குள்ள கூச்சமே இல்லாம இருந்துக்கிட்டு எங்க நிம்மதிய நீதான்டா கெடுக்குற. போடா இங்க இருந்து” என்று வெறி புடித்தவன் மாதிரி அவன் பக்கத்தில் சென்று கத்திக் கொண்டிருந்தேன்.
அத்தா சொற்களையே மறந்தவரைப் போல உறுமியபடியே கைகளைப் பிறாண்டுவது மாதிரி என்னை நோக்கி வீசினார். அப்புவின் பிடி தளரவேயில்லை. அவன் முகத்தைப் பார்த்ததும்தான் வெறி பற்றியெறிய ஆரம்பிக்கிறது. துளியும் உணர்ச்சி என்று அவன் முகத்தில் எதுவுமில்லை. கல்லா? மரமா? எனப் புரியாதபடிக்கு ஜடமாக இருந்தான். அத்தா கொஞ்சம் தணிந்ததும் அவன் கைகளை விலக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார். கசக்கிப் போடப்பட்டிருந்த அம்மாவின் ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு அறை மூலையில் சாய்ந்து உட்கார்ந்தேன். வாசலில் ஒட்டி வைத்த மாதிரி நின்றிருத்தவன் ஏரித்து விடுவதைப்போல நான் நிமிர்ந்து பார்த்ததும் மெல்ல நகர்ந்து சென்றுவிட்டான். நுனி நாவின் கசப்பு இப்போது உடல் முழுதும் பரவியதில் ஒருவித வலிகலந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
உண்மையிலேயே இது நான்தானா? இத்தனை வெறுப்பும் எனக்குள் இருந்ததா? உடலின் ஏதோ ஒரு மூலையில் இத்தனை ஆண்டாகப் பதுக்கி வைத்த மொத்த விஷத்தையும்தான் இன்று சிந்திவிட்டேனோ? எனக்குள்ளேயே உருவாகிக் கொண்டிருந்த சுயவெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக்கடித்து கையால் தலையை மாறி மாறி குத்த ஆரம்பித்தேன். வாயிலிருந்து வடிந்த எச்சிலில் சட்டைக் காலர் நனைந்தது.
அத்தா என்னை முற்றிலும் மறந்தவரைப் போலத்தான் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார். சாப்பிட அழைப்பதற்குக்கூட என்னிடம் போசாமல் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வேளை தவறாமல் சாப்பாடு தயார் செய்து விடுகிறார். ஆனால் இந்த இரண்டு நாளும் சாப்பாட்டை யார் சாப்பிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. மொத்த வீட்டிற்கும் உணவின் மீதிருந்த ஒவ்வாமையால் சமையல்கட்டில் பழஞ்சோற்றின் நாற்றம்தான் அதிகம் வீசியது.
இரைப்பை வெந்து உருகினாலும் ஒரு பருக்குகூட உண்ணக் கூடாது என்று இரண்டு நாளும் பட்டினி கிடந்தேன். முதல் நாள் அவன் வைத்து விட்டுப்போன போன சோற்றுத்தட்டைத் தூக்கி மதிலில் எறிந்த பிறகு அப்பு என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நான் வீட்டுக்குள் வெறுப்பைப் பரப்பும் ஒரு பூச்சியாக உருமாறிவிட்டேன். ஆதாம் உண்டு மிச்சம் வைத்த ஆப்பிள் எனும் முதற் பாவம் என் உடம்புக்குள்தான் எங்கோ இருக்கிறது. அதை என் மீது தூக்கி எறிந்தது யார்? நிச்சயம் அது அத்தா கிடையாது. அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு பூச்சியாக உருமாறிய பிறகுதான் காஃப்காவின் மணல் வீட்டுக்குள் நுழைய முடிகிறது. மனதின் இருண்ட பகுதிகளைப் புரிந்துகொள்ள கரப்பான் பூச்சிதான் பொருத்தமான உயிரினம். ஆமாம் அத்தா... இப்போது காஃப்கா ஒரு சிறந்த கரப்பான் பூச்சி என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. காஃப்காவின் eleven sons கதையில் வருகிற எட்டாவது மகனாக என்னை உணர்ந்த பிறகுதான் அத்தாவிற்கும் எனக்கும் ஊடாக வளர்ந்த நிற்கிற மதில் சுவரின் உயரம் தெரிந்தது.
குடல் சுருங்கி வயிற்று வலி வேதனை தந்த பிறகுதான் ‘இது உடல்’ என்று நினைவு வந்தது. தண்ணீர் குடிக்க எழுந்தபோது விசை உடலைக் கீழே தள்ளியது. சமையல் கட்டுப்பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன். இன்னும் தூங்காமலே சோஃபாவில் அவன் உட்காந்திருந்தான். ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் பார்க்கும்போது அப்படியே காஃப்காவைப் பின்புறத்திலிருந்து பார்ப்பது போலவே இருக்கிறது. ‘ஒருவேளை அவனேதான் வந்திருக்கிறானா? ச்சை வெறும் மடத்தனம்.’ திரும்பி அறைக்கு வந்து கையால் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்.
காலையில் கண் விழித்தபோதே அப்பு வீட்டில் இல்லை என்று தெரிந்தது. நிச்சயம் அத்தா அவனை அனுப்பி வைத்திருக்க மாட்டார். அவனாகவேதான் ஓடிவிட்டான் என்று தெரியும். திடீரென்று உடற்சதைகளுக்கு ஊக்க மருந்து தரப்பட்டதைப்போல துடித்து எழ ஆரம்பித்தது. பல் துலக்கிவிட்டுச் சமையல் கட்டிற்கு வந்தேன். முன்கூட்டியே வட்டியில் சோறு போடப்பட்டிருந்தது. இரண்டு நாள் பசியால் சோற்றைப் பிசையாம் கூட அள்ளி அள்ளி வாயில் திணித்ததில் விக்கியது. அத்தாவிடம் எந்த மாறுதலும் தெரியவில்லை. அவன் இல்லாததை அவர் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை. எதுவும் நடக்காதது மாதிரி எப்போதும் போலவே காலேஜ்க்குக் கிளம்பிச் சென்று விட்டார். அவன் இல்லாமல் போனதைப் பற்றியோ, அவனைக் தேடுவதைக் குறித்தோ அவர் யோசிக்கவேயில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஹாலில் வந்து உட்கார்ந்ததும் காஃப்காவின் ஃபோட்டோவின் மீதுதான் பார்வை சென்றது. வேட்டையாடப்படும் ஒரு மானின் மிரட்சியை ஞாபகப்படுத்தும் அந்தக் கண்கள்தான் மொத்தப் பரிவையும் தன் வசப்படுத்திவிடுகிறது. ஆம் அவனுக்கும் அதே கண்கள். அப்புவின் முகம் நினைவுக்கு வந்ததும் உடனே தலையை அசைத்து கலைக்க முயன்றேன். ஏன் அவன் இங்கிருந்து சென்றது எனக்கு மகிழ்வை உண்டாக்கவில்லை? வீட்டிலிருந்த அமைதி எனக்குள் மேலும் அமைதியின்மையைத்தான் உருவாக்கியது. உண்மையில் எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. என் சுய வெறுப்பின் பொருட்டு அத்தாவை முற்றிலும் சிதைத்து உருக்குலைத்திருக்கிறேன் என்று எண்ணும்போதுதான் கம்பியால் தாக்கப்பட்டதைப் போல் தலைக்குள் வேதனை உருவாகியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளே சென்று படுத்துக் கொண்டேன்.
ஒரு பாம்பாக உருமாறி அப்புவைத் துரத்திக்கொண்டிருந்தேன். அவனுக்கு வலது கால் வளைந்திருந்ததால் நொண்டியபடியே ஓடிக் கொண்டிருந்தான். அவன் விட்டுச் சென்ற பாதத் தடங்கள் ஒவ்வொன்றையும் கொத்தி விசமேற்றிக் கொண்டிருந்தேன். என் ஒவ்வொரு கடியிலும் அவனது ஒட்டத்தில் ஒரு அடி குறைந்துகொண்டே வந்தது. தொண்டையை நெரிப்பதைப்போல விக்கலெடுக்க ஆரம்பித்ததும் அப்படியே நின்றுவிட்டேன். பாதையோரம் நின்றிருந்த கிழவியொருத்தி வெற்றிலை எச்சிலை என்னைப் பார்த்துத் துப்பி, ‘சவத்து மிருகமே... அம்புட்டு பசியா எடுக்குது உனக்கு. எல்லாத்தையும் முழுங்கிட்டு நீ மட்டும் இருப்பன்னு நெனைக்கிறியா? த்தூ... முண்டக் கழுதை' என்று ஏசினாள். அவளை ஒரு நொடி முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் துரத்த ஆரம்பித்தேன். அவ்வளவுதான் இன்னும் ஒரே ஒரு எட்டில் அவனைப் பிடித்துவிட முடியும். அவன் தளர்ந்து சரியும்போது அந்த வளைந்த காலை என் கூரிய பற்களால் கவ்விப் பிடிக்க ஆவலோடு வாயைத் திறந்தேன். திடீரென்று அத்தா அவனைத் தூக்கி தன் தோள்மீது போட்டுக் கொண்டார். கையில் பெரிய மூங்கில் கம்பொன்றை வைத்திருந்ததார். அவர் முதுகுக்குப் பின்னாள் மறைந்துகொண்டு அம்மா என்னை எட்டிப் பார்த்து முகத்தைச் சுளித்தாள். ஒரு கையால் அத்தாவின் தோளையும் மறுகையால் அப்புவின் பின் தலையையும் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். கோபத்தோடு அப்புவைப் பார்த்து நான் சீற ஆரம்பித்ததும் அத்தா மூங்கிலால் தலைமீது ஓங்கி அடித்தார். உடலை உலுக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவானதுகூடத் தெரியாமல் இத்தனை மணி நேரம் உறங்கியிருக்கிறேன்.
என் அறைக்குள் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை உணர முடிந்தது. திடீரென்று புறப்பட்ட ஒரு மெல்லிய ரீங்காரத்தை உடனே காதுகள் அடையாளம் கண்டுகொண்டன. கதவைத் திறந்து ஹாலில் எட்டிப் பார்த்தேன். அத்தா சோஃபாவில் உட்கார்ந்து கைகளைப் பின் மண்டையில் கட்டியவாறே அவருடைய டேப் ரெக்கார்டரில் இசை கேட்டுக் கொண்டிருந்தார். நீண்ட இழுப்போடு இசை துவங்கியதைக் கேட்டதுமே அது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் செனாய் என்று தெரிந்துவிட்டது. ‘ப்பகடி ஜின்ஜோடி’ ராகத்தில் அமைக்கப்பட்ட இசை. அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாட்களில் இதைத்தான் அத்தா பித்துப் பிடித்தது மாதிரி கேட்டுக் கொண்டிருந்தார். ‘இதே ராகத்தில் ராபின் கோஷ் வாசித்த வயலின் இசையோடு ஒப்பிடும்போது பிஸ்மில்லா கானால் பக்கத்தில்கூட நிற்க முடியாது’ என்று சொல்லி ஒவ்வொரு முறையும் வீம்பாக அத்தாவை ஏளனம் செய்திருக்கிறேன். ஆனால் இன்று உஸ்தாதின் செனாய் நரம்புகளுக்குள் புகுத்து உடம்பைச் சிலிர்த்துப் போக வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக இனிய ஒலி அறைக்குள் நிறைந்து கொண்டே இருந்தது. உஸ்தாதின் செனாய் ஒலி பள்ளங்களுக்குள் புகுந்து சென்று மேடுகளில் சட்டென தோன்றி காற்றில் பாவும் அருவியாக உருமாறி ஒரு குழந்தையைப் போல கருணையன்றி உணர்வுகளோடு விளையாடியது. பிஸ்மில்லா கான் செனாய் வழியாகவே சிரித்தார், அழுதார், முனங்கினார், கூச்சலிட்டார். செனாய் எழும்புகளுக்குள் ஊடுருவி மனக் குவியலில் இருந்து எதை எதையோ தூக்கி வந்து கண்முன் நிகழ்த்தியது. நெஞ்சை ஏதோ ஒன்று பிசைவது போல ஒரு உருக்கம் எனக்குள் புகுந்து கொண்டது. இத்தருணத்து உணர்வின் பிரவாகங்கள் அனைத்தும் அந்த நாணலின் சின்னஞ்சிறிய ஒட்டைகளின் வழியே புறப்பட்டு வருபவைதானா? எலும்பு மூட்டுகளைக் குடைகின்ற இந்தப் பரவசத்தைத் தாங்க முடியவில்லை. என் அறையின் மூலையில் பிஸ்மில்லா கான் புடைத்த கன்னங்களோடு இசைத்துக் கொண்டிருந்தார். எட்டி அத்தாவைப் பார்த்தேன். அவர் கண்களில் நீர்மையின் பளபளிப்பு மின்னியது. மெத்தையில் வந்து அமர்ந்து கொண்டதும் என்னையும் மறந்து அழ ஆரம்பித்தேன். வலியுடன் துடிப்பதைப் போலக் கட்டுப்படுத்த முடியால் கேவிக் கேவி உடல் அதிர்ந்தபடி உகுத்த கண்ணீர் கன்னங்களில் வடிந்து கொண்டிருந்தது. உஸ்தாதின் செனாய் நியாயத் தீர்ப்பு நாள் வரையில் நிற்கப் போவதில்லை என்றபடி ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்கள் மீண்டும் தூக்கத்தில் புதைந்து போயின. செனாய் வருடிக் கொடுக்கும் ஸ்பரித்தை துயிலின் அடி ஆழத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.
கண்விழித்ததும் மனம் எடையற்று இருந்தது. எழுந்த உடனேயே அத்தாவிடம்தான் சென்று நின்றேன். எதையோ எழுதிக் கொண்டிருந்திருந்தவர் நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். துளி வெறுப்புகூட அவர் முகத்திலில்லை. அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘‘தயவு செஞ்சு அப்புவ கூட்டிவாத்தா” என்று கம்மிய குரலில் கூறினேன். பதிலுக்கு அத்தா எதுவுமே சொல்லாமல் புன்னகையோடு நெற்றியைத் தடவிக் கொடுத்து முத்தமிட்டார். கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தேன். ரோமங்களடர்ந்த இந்த முரட்டுக் கரங்களின் தொடுகைக்காக ஏங்கியதைப் போல என் உடல் தவித்துக் கொண்டிருந்தது. எல்லாவும் இதற்காகத்தான் என்று தோன்றியவுடன் கறைந்து போய்விட ஆசைப்படுபவனைப் போல அத்தாவை இறுக்கிக் கொண்டேன். கல்லூரிக்கு விடுப்பெடுத்துக் கொள்வதாக செல் ஃபோனில் கூறிவிட்டு அத்தா கிளம்பி வெளியே சென்றார்.
வீட்டின் சன்னல்களையெல்லாம் முழுமையாகத் திறந்து வைத்தேன். அத்தாவின் டேப்பில் மீண்டும் செனாய் கேசட்டுகளைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது வயலினும், ராபின் கோஷும் நினைவுக்கு வரவில்லை. நேரம் பொறுத்துக் கொள்ள முடியாதபடி துளித்துளியாய் வடிந்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஒருவழியாக மாலை அத்தா வீட்டுக்கு வந்தார். ஆனால் அப்புவை அழைத்து வந்திருக்கவில்லை. கையில் கருப்பு வெள்ளை கலந்த நிறத்தில் பூனையை வைத்திருந்தார். ஆம், அந்தப் பூனையேதான். அதே அப்பாவியான முகத்தோடு என்னைப் பார்த்துவிட்டு அத்தாவின் சட்டைக்குள் ஒடுங்கிக் கொண்டது. பக்கத்தில் சென்று அதைத் தூக்கியதும் உடம்பை உதற ஆரம்பித்தது. கால் நகங்கள் உரசுவதைப் பொருட்படுத்தாமல் மெல்ல கட்டியணைத்ததும் அமைதியாகிவிட்டது. வழக்கத்தை விடவும் நீண்டிருந்த அதன் காது மடல்களை வருடிக் கொடுத்தேன். அத்தா என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பூனையைத் தூக்கி என் முகத்துக்கு நேராக வைத்தேன். ”ய்யாவ்...ய்யாவ்” என்று முனங்கியபடியே என் மூக்கை நாவால் சுழற்றி ஈரமாகியது. ”ச்சீ கள்ள காஃப்கா” என்று காதைப் பிடித்துத் திருகினேன். நான் சிரிப்பதைப் பார்த்ததும் படுஜோராக முகம் முழுவதைஉம் முத்தமிட்டு முத்தமிட்டு நனைக்க ஆரம்பித்தது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.


எஸ். அற்புதராஜ்
தாரா கேம்பெல்
து. பிரபாகரன்
ரமீஸ் பிலாலி
கிருஷ்ணமூர்த்தி
Be the first person to add a comment.