கவிதை

பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்

பெரு. விஷ்ணுகுமார்
30 Apr 2026
0

1. மழை ஓய்ந்த சாலையில்

மழை ஓய்ந்த சாலை
நம்மையும் மௌனமாக்கி விடுகிறது 
மரங்கள் நிறைமுற்றாய் ஓய்வெடுக்கின்றன
வாகனங்களும் மந்தமாகத்தான் செல்கின்றன. 
மழை ஓய்ந்த சாலையைக் கடந்து செல்பவர்களும் 
கூடுதலாய்க் கொஞ்சநேரம் நின்று செல்கின்றனர். 
யாருக்கும் பேசத் தோணவில்லை
சிரிக்கவோ, அழவோ, சண்டையிடவோ
யாருக்கும் தோணவில்லை
அந்த மழை ஓய்ந்த சாலையில்
மழை ஓயாத ஒரேயொரு இளைஞன் மட்டும்
சத்தமாக எதையோ வினவுகிறான்
அவளும் திரும்பப் பதிலளிக்கிறாள் 
ஆனால் கேட்கும்படி அல்ல 
புரியும்படியும் அல்ல.

 

2. சாட்சி

பூமியின் முகப்பில் சிறார்கள் சிலர் 
விளையாடிக் கொண்டிருந்தனர் 
ஒருவன் பந்தை தவறான திசையில் வீசினான் 
மற்றொருவன் மட்டையை மேகங்களை நோக்கி வைத்திருந்தான் 
ஒருவனுக்குப் பந்தைப் பிடிக்கவே தெரியவில்லை 
இன்னொருவனுக்கோ எந்த ஸ்டம்பைநோக்கி 
எறிவதெனத் தெரியவில்லை 
இரண்டு பக்கமும் ஒரே குழப்பமும் கூச்சலும். 
அதே பூமியின் விளிம்போரம்
கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்த நான்
அவர்களிடம் சென்று
என்னையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்கவில்லை
கேட்கப் போவதுமில்லை 
ஏனெனில் அவர்கள் ஆடும் அதே ஆட்டத்தை
எனக்குச் சரியாகவும் விளையாடுவது
எப்படியெனத் தெரியும். 

 

3. நகரத்தின் கடைசி வெடிச்சத்தம்

வழக்கம்போல்
செய்வதையெல்லாம் செவ்வனே ஆற்றிய பின்பு 
தூரம் சென்று காதைப் பொத்தி அமர்ந்துகொண்டேன்
இருள் உதிர ஆரம்பிக்கிறது
சுடர் தனக்குப் படைக்கப்பட்ட திரியைத் தயக்கத்துடன் உண்கிறது
விதைத்ததும் முளைத்து எழுந்து
ஆகாயம் நிறைக்கும் வானவேடிக்கைக்குப் பதிலாக
தான் பிறந்த நோக்கத்தையே தவிர்த்து நிற்கும் அந்தப் பட்டாசு
முதல்முறையாகத் தன்னிலிருந்து ஒரு ஆழமான மௌனத்தைக்
கேட்கச் செய்தது.
எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை
எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம்
கணிக்கவும் முடியவில்லை
மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான்
ஆனால்
நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெரு. விஷ்ணுகுமார்

முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் 2015க்குப் பிறகு எழுதவந்தவர். பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு இதுவரையில், ‘ழ என்றபாதையில்நடப்பவன்’, ‘அசகவதாளம்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதைகளோடு தொடர்ந்து கட்டுரைகள், கதைகள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவருகிறார். தொடர்புக்கு: peru.vishnukumar@gmail.com








நுண்கதைபுதிய வருகைமழைவில்கருத்தரங்கங்கள்சாகுல் ஹமீதுகவிதையியல்விஜய்ஆலடியான்நான் ஏன் பதிப்பிக்கிறேன்ராஜ் கௌதமன்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்டோனி பிரஸ்லர்அநித்யம்தலையங்கம்குறிகேட்டல்பதிப்புத் துறைவேறொரு மழைஈழம்ஒரு துளி கருணைஆசிரியர் உரைஇலக்கிய அறிமுகம்அசகவதாளம்சாய் வைஷ்ணவிசூஃபி இசைஇலக்கியக் கூட்டம்சாட்சிபிம்ப அரசியல்நாஞ்சில்நாடன்தலித் இலக்கியம்வைத்தியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!