கவிதை

சீவகன் கவிதைகள்

சீவகன்
30 Apr 2026
0

1. பிப்ரவரி தினம்

காதலிப்பதற்குத் தகுதியே
காத்திருத்தலும்
பொறுமை காத்தலும் என்றபோதுதான்
தொடங்கியது
பயணச் சீட்டில்லாப் பயணம்
நீ வேலைசெய்யும் அலுவலகத்தின்
டீக்கடை முன்
அனுப்பிய குறுஞ்செய்திகளின்
பதிலுக்காகப்
பேருந்து நிலையத்தில்
பிச்சைக்காரரோடும் நாய்களோடும்
ஒற்றைக்கால் கொக்காய்
காத்திருந்தோம்
நானும் காதலும்
பிறிதொரு நாளில்
அற்புதம் நிகழ்த்தவே
கூர்தீட்டா வாளெடுத்து
வெட்டினாய் நீ
பஞ்சாகிப் பறக்கலாயின துண்டங்கள்
பின் நிதானமாக
உன் லாகவத்திற்கு நன்றி சொன்னோம்
இருவரும்
எருக்கம்பூ மாலையோடு
பிறிதொரு நாளில்.

 

2. நானென்பது லெட்டூஸ்

சும்மா இருக்கும்போதும்
எந்தவொரு சாதனையும்
செய்யாதபோதும்
ஒரு கவிதையைச்
செய்திருக்க வேண்டும் என்கிறாய்
நான் கவிஞனே கிடையாது
இருள் மூழ்கும் அறையுள்
மல்லாந்து‌ கிடக்கும்
ஒரு பூனைக்குட்டி
தூங்கி எழுந்து தூங்கி
அசதியுறுகையில்
கதவின் பின் டொக்டொக் என்பான்
கோப்புகளோடு காத்திருக்கும்
என் பரதேசி
அவனுக்காய் கத்துவேன்
உடல் நெளித்தவாறு
ஒரு மியாவ்
அம்மாவின் காலைச் சுற்றி உரசித்
தலைமுட்டி
இரண்டு மியாவ்கள் என்பேன்
நினைத்த நேரத்தில்
மோர் சாதங்களைக் கொட்டுவாள்
என் அழுக்குப் பாத்திரத்தில்
அரிதாய்
அப்பா தூக்கி வீசும்
சில்லறைகளோடு சிதறும்
இந்தா என் செல்லப் பூனையே
என்பதற்கு
வால் அசைத்து‌
வெட்கமின்றிக் கண்மூடி
மூன்று மியாவ்கள் என்பேன்

மெல்ல மெல்ல
யாவற்றையும்
நாவால் துடைத்து
தொடுவானம் பார்த்து
எண்ணிடலடங்கா
மியாவ்களை முனகுகிறேன்
உருவாகிறது மாபெரும் கவிதை
நான் ஆகிறேன்
மகாகவி

ஆனாலும் நண்பா
அத்தனை சுலபமில்லை
ஒரு
சின்னஞ்சிறு பூனைக்குட்டி ஆவது.

 

3. மூத்தோள்

அக்காக்கள் ஒருபோதும் அதட்டுவதில்லை
அழகாகவும் கூட இருப்பார்கள் 
அழகாய் இருப்பவர்கள்தான் என் அக்காக்கள்
வர்ணித்தால்
சிரித்துக் கன்னம் கிள்ளுவார்கள்
அக்கா ஏன் சீக்கிரம் பிறந்தீர்கள் என்றால்
போடா தம்பி என்று சிணுங்குவார்கள்

அவர்களுக்கு
காவ்யா, கிருத்து, நிவேது, ஷோபி என்று
விரும்பும் செல்லப் பெயர்களை இடலாம்

தோழிகளே 
காதலிகளே
என் அக்காக்கள்
உங்களைப் போல் இல்லை 
என்னை ரசித்து முத்தமிடுவார்கள்
கட்டி அணைத்துக் கொள்வார்கள்

கல்யாணம் செய்து கொள்ளலாமா என்றால் 
யோசிக்காமல் ம்ம் கொட்டுவார்கள் 
அதற்காகவே ஒவ்வொரு அக்காவுக்கும்
ஒரு கவிதை எழுதுகிறேன்
அவர்களுக்குத் திருமணம் நடந்தேறும் போதெல்லாம் 
அவையும் என்னைப் போல் சாகின்றன

செல்ல அக்காக்களே 
தம்பிக்கு
உங்களை விரும்பும் பட்சத்தில் 
துயரமும் இருக்கவே செய்கிறது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீவகன்

இயற்பெயர் சி.கார்த்திக். முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். கதவு, நடுகல் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் எழுதுவதிலும் அதைவிட அதிகமாய் கவிதை வாசிப்பதிலும் ஆர்வங்கொண்டவர். தொடர்புக்கு: seevagansk@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

கஸல்சீர்மை இதழ்நேர்காணல்இக்பால்தலித் வரலாறுகருத்தரங்குகள்ஆய்வுமண்வாசனை கதைகள்அக்காக்கள்இலக்கியக் கூட்டம்சுஜித் லெனின்அப்பாவின் குழிபிரான்ஸ் காஃப்காநுண்கதைடோனி பிரஸ்லர்கிருஷ்ணமூர்த்திஇலக்கிய அறிமுகம்ம.கேசவன்மெல்லிய கோடுகள்அங்கதம்காஃப்காவின் காதுகள்நிலமெங்கும் பூத்த முகம்நானென்பது லெட்டூஸ்திருச்சி வாழ்க்கைஆலடியான்நவீனத்துவம்பொம்மை கார்ஈழம்கவ்வாலிஏ ஜி கௌதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!