கவிதை

சாய் வைஷ்ணவி கவிதைகள்

சாய் வைஷ்ணவி
30 Apr 2026
0

1. ஒரு துளி கருணை

எல்லோரிடமும் உண்டு ஒரு பிச்சைப் பாத்திரம்
கோரிக்கைகளோடு கையேந்தும் தட்டில்
எப்போதாவது விழும்
நம்பிக்கைகளின் நாணயங்கள்
அவனுக்காக
இவளுக்காக
எவளுக்காகவோ
வேண்டும் குரல் எவ்வளவு இலகுவானதோ
அவ்வளவு கருணை உங்களுக்கு
கடலளவு கருணை கொண்ட ஒருவனிடம்
துளியளவு கண்ணீரைப் பெற்றுக்கொண்ட
ஒருத்தியைக் கண்டேன்
பல மாதங்களுக்குப் பிறகு எங்கள் ஊரில்
பெருமழை பெய்தது நேற்று
வற்றிய மாரில் பாலூறுதலை
ஒத்திருந்தது அது

 

2. வேறொரு மழை

துணையெழுத்தைப் போலவே
அவனோடு உடன்பட்டு
விரல் கோர்த்து வலம் வந்த நாளில்
பெரும் மழை வந்தது
நிரம்ப அரிசி தின்றவளென்று வாழ்த்திச்
சிரித்துக்கொண்டே சென்றவர்களை
மீண்டும் பார்த்த நாளில்
அவர்கள் கண்களால்
மழை பெய்துகொண்டிருந்தனர்
அந்நேரம்
அவன் சாலையில் சிந்தியிருந்த செந்நீர்த்துளிகளை
வேகவேகமாக
மறைத்துக்கொண்டிருந்தது
வேறொரு மழை

 

3. பழைய புதையல்

சீட்டியடித்து வரும் மாநகராட்சி வாகனத்தில்
அசைந்தசைந்து வருகின்றன
ஊர்க் கழிவுகள்
மூட்டையோடு நிதானித்து எழுந்திடும்
அவன் கண்களுக்கு மட்டும்
அவை பழைய புதையல்கள்

 

 4. மருத்துவருக்காகக் காத்திருத்தல்

அநேக மதியம்
வயிற்றுப்பல்லி கொக்கரிக்கத் தொடங்கியிருந்தது
எனக்கென்றில்லை
அருகிலிருப்பவளின் பல்லி சத்தமும்
கூடிக்கொண்டது
காலாதி காலாமாக
பூதம் காத்த புதையலிருந்த
கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவினேன்
என்றோ வைத்த கைக்குட்டை
எப்போதோ பிரித்து வைத்த டைரி மில்க் தாள்
கருகிப்போன வாழைப்பழத் தோல்
இரண்டு மூடியில்லாத பேனா
ஆபத்திற்கென்றிருந்த நாப்கின்
பயனற்றுக் கிடந்த பணப்பரிமாற்றத் தாள்கள்
சில விபூதி குங்குமப் பொட்டலங்கள்
பல் குத்தும் குச்சிகள்
பக்குவப்படாத தோள்பைக்கு
எப்படிப் புரிய வைப்பேன் என் பசியை?
பூட்டியிருந்த மருத்துவர் அறைக்கு
வெளியில் காத்திருக்கின்றன அறிவிக்கப்படாத பசிகள்

வெள்ளை உடை தேவதை
அவளது வீட்டில்
சல்லாபித்திருக்கலாம்
அவளது கடிகாரம் உறைந்திருக்கலாம்
சோறு வேகாமல் போக்கு காட்டலாம்
பூனை குறுக்கில் சென்றிருக்கலாம்
அவளது தாமதத்தை யாரும்
அவளுக்கு அறிவிக்காமல் இருந்திருக்கலாம்
பூட்டியிருக்கும் மருத்துவர் அறைக்கு வெளியில் காத்திருக்கும்
மதியநேரத்துப் பசிகளைப் பற்றி அவள்
கேள்விப்படாமல் இருந்திருக்கலாம்
அவளின் பாதைகளில் உதிர்ந்திருக்கும்
காய்ந்த ரோஜா சாயலில்
இதழ்கள் வறண்டு கொண்டிருப்பதை
எப்படிச் சொல்வோம் அவளிடம்?
அவ்வப்போது கடக்கும் செவிலியரிடமிருந்து
உதிரும் ஒன்றிரண்டு புன்னகைகளைக் கொண்டு
எவ்வளவு நேரம்தான்
சமாதானம் செய்வேன்
இந்த மதிய நேரத்துப் பசியை

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் சொந்த ஊர். தொழில் நிமித்தம் திருச்சியில் வசிக்கிறார். இளங்கலை உயிர்தொழில் நுட்பவியலில் பட்டம் பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் மெடிக்கல் கோடிங் துறையில் பணி புரிந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தலைவியாக ஓய்வு நேரங்களில் ஏற்படுத்திக்கொண்ட புத்தக வாசிப்புப் பழக்கம் இலக்கியத் தேடலுக்கும், கவிதைத் தொகுப்பிற்கும் வழிதந்தது. கணையாழி, ஆனந்த விகடன், உயிர்மை, கொலுசு, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதைகள் வெளிவந்தன. ‘வலசை போகும் விமானங்கள்’ முதல் கவிதை தொகுப்பு ஆகும். இது புன்னகை விருது, இராஜபாளையம் விருது, அசோகமித்ரன் விருது என மூன்று விருதுகளையும் நற்புகழையும் பெற்றுத் தந்தது. இரண்டாம் தொகுப்பு ‘இடமிருந்து எட்டாம் விரல்’ வாசகசாலை பதிப்பாக வெளிவந்தது. இதில் சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான புரட்சியையும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் பேசுகிறது. சமீபத்தில் ஹெர் ஸ்டோரீஸ் என்ற அமைப்பு 2025 ம் ஆண்டிற்கான ‘வளரும் இளம் எழுத்தாளர்’ என்ற விருதினை அளித்தது. தமிழ் மொழிப்பற்றின் காரணமாக திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் சமீபத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றிருக்கிறார். தொடர்புக்கு: vaishnavim90@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ஈழம்பிப்ரவரி தினம்குறுங்கதைதலித் வரலாறுகருத்தரங்குகள்ஆசிரியர் உரைராஜ் கௌதமன்நவீனத்துவம்சிறுகதைத் தொகுதிஏ ஜி கௌதம்இலக்கிய நிகழ்வுகள்பிம்ப அரசியல்அநித்யம்தலித் இலக்கியம்தொ.பத்தினாதன்இக்பால்அறபு இலக்கியம்சந்துரு மாயவன்நேர்காணல்எழுத்தாளரின் மரணம்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்நாஞ்சில்நாடன்கவிதையியல்சிறுகதைபொம்மை கார்ழ என்ற பாதையில் நடப்பவன்ரோலாண்ட் பார்த்கருத்தரங்கங்கள்நாளையும் நாளையேதாரகன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!