கவிதை

கோ. கமலக்கண்ணன் கவிதைகள்

கோ. கமலக்கண்ணன்
30 Apr 2026
0

1.

குருதிப் பாதையைக்
குதித்துக் கடந்த என்மேல்
சாரலாய்த் தெளித்த சில்லிருள்
கண் வழியே கலுழ்ந்து கசிந்திடுமோ
கமலநாசியில் தும்மலாய்த் துடித்திடுமோ
வாய்வழி வன்சொலாய் வழிந்திடுமோ?

அஞ்சிப் புலன்கட்டி தலைகுனிந்து நடந்த என்
புறந்தலையை நீவத் தன்
பறந்தலையும் ஒளிவிரல்களைப் பரவவிட்டு
முடிகோதி வருடித் தந்தது நிலவொளி
நாணத்தில் கீறல் விழாத பதத்தில்

2.

எனக்குக் கண்ணாடி
பார்க்க விருப்பம்
என்னை நான்
பார்க்க எதற்குக் கண்ணாடி?

வேண்டும்,
என்னைக் காட்டி
என்னைக் குழப்பாமல்
தன்னை மட்டும் காட்டும்
ஒரு தன்னிலைக் கண்ணாடி

 

3.

வளர்ந்ததும்
புரியும் என்றார்கள்
வளர வளர
புரிதல் குறைந்தது
வளர்ந்ததும்
அமைதி வரும் என்றார்கள்

வளர வளர
அமைதி தொலைந்தது
வளர்ந்ததும்
காலம் இருக்கும் என்றார்கள்

வளர வளர
காலம் குறைந்தபடியே வந்தது
வளர்ந்ததும்
நீ சொல்லக் கேட்பார்கள்
என்றார்கள்
அதுவொரு முரண்கணம்

வளர வளர என் சொல்
கேட்க வரிசையில் நின்றார்கள்
அகத்தில் ஊறி குருதியில் தோய்ந்து
குரலை எட்ட
தயாராகத் துடித்த சொற்கள் யாவும்
வளர வளர
தளர தளர
குன்றியபடி வந்து
கரைந்துபோயின.

 

4.

மென்வெய்யில் வன்வெய்யில்
சிமிட்டாமல்
பார்த்திருந்தேன்.
கண்மூடியது ஒரு வன்கை
கண்ணாமூச்சி பாடியது ஒரு துன்குரல்
ஆட்டத்தின் லயிப்பில்
சந்தடியின்றி நழுவியது காலம்
ஆறு நொடியில் ஆறு திங்கள் கரைந்தன.
நடுக்குற்று விலகியது
விரலால் ஆன கண்மூடி
விழிமுன் பனித்திடல்
வெள்ளைச் சொர்க்கம்
“வெய்யில் எங்கே கண்டுபிடி” என்றது
நடுங்கிய கிழவிக்குரல்.

 

5.

ஊழியின் இறுதி நாளில்
அனைவரின் குணத்தையும் குற்றத்தையும்
தேவர் எடைபோடுவாராம்.

அது உண்மையா பொய்யா
என்று தெரியவில்லை
ஆனால் அது நடந்தால்
ஒரு வாய்மொழித் தேர்வைப் போலத்தான்
இருக்குமென ஊகிக்கிறேன்.

பதறிக்கொண்டே வரிசையில் உக்கார வேண்டும்
என்று என்ன அவசியம்?
என்முறை வரும்வரை
மகிழ்ந்தபடியே உக்காருவேன்.

உள்ளே போனதும்
அவர் கேட்கும் கேள்விகளுக்கு
நிதானமாகப் பதில் சொல்வேன்
முடிந்தவரை சரியாகச்
சொல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஓரிரு பொய் சொல்ல நேர்ந்தால்
ஆசனவாயை இறுக்கிக்கொண்டு
முகத்தை இயல்பாக வைத்தபடி சொல்வேன்

அது அவருக்கு உண்மைபோலத் தோன்றக்கூடும்
ஒருவேளை கண்டு பிடித்துவிட்டாலும்
என் குசும்பை எண்ணி
அவர் சிரித்து இளகுவார்
தேர்வாளரைப் பதற்றப்படாமல் வைத்தாலே
நமக்கு நல்ல மதிப்பெண் வரும்
ஆனால் வாய்மொழித் தேர்வுக்கும் இதற்கும்
ஒரேயொரு வேறுபாடு
முன்னால் சென்றவர்கள் திரும்பி வந்ததும்
அவர்களிடம் தேர்வாளர் கேட்ட கேள்விகளை ரகசியக்குரலில்
கேட்டறியமுடியாது.

கேட்டறிந்தாலும் ஒன்றும் பலனில்லை என்பதால்
அவர்கள் வராமல் இருப்பதே நல்லது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ என்னும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது.


2






பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

இலக்கிய விமர்சனம்அறபு இலக்கியம்சிறுகதைத் தொகுதிநான் ஏன் பதிப்பிக்கிறேன்ஏ ஜி கௌதம்அநித்யம்மழைவில்அங்கதம்சிறுகதைதாரகன்கடைசி வெடிச்சத்தம்காலச்சுவடுபோர்ரோலாண்ட் பார்த்விஜய்ஆய்வுஅலர் பதிப்பகம்நுண்கதைநானென்பது லெட்டூஸ்கவ்வாலிஒரு துளி கருணைதமிழக அரசியல்கஸல்இக்பால்சந்துரு மாயவன்பெருங்கொங்கை பூத்தாள்குறுங்கதைசுஜித் லெனின்பின்னவீனத்துவம்சதுக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!