கட்டுரை அரசியல்

ரீகன், ஜெலென்ஸ்கி முதல் விஜய் வரை

மக்களின் பொதுப்புத்தியை அறுவடை செய்யும் பிம்ப அரசியல்

அருண் நெடுஞ்செழியன்
01 Jun 2026
1

மே 4இல் வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவு, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் முற்போக்கு அறிவுஜீவிகள் வரை ஒருவித அரசியல் பதற்றத்தையும் திகைப்பையும் தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு, ஒருவரும் கற்பனை செய்திராத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது. பங்கேற்ற முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஒருபுறம் திமுக-அதிமுகவின் ரகசியக் கூட்டணி பேரங்கள், பெரும்பான்மையை நிலைநாட்ட தவெக மேற்கொண்ட தந்திரோபாய சமரச முயற்சிகள், காங்கிரஸ்-திமுக  கூட்டணி முறிவு, அதிமுகவின் உள்கட்சி உடைவு முதலிய அடுத்தடுத்த பரபரப்பான நகர்வுகள் தமிழக அரசியல் களத்தைச் சூடேற்றின. இருப்பினும், இந்த அசுர வெற்றி எப்படிச் சாத்தியம் என்ற தர்க்கரீதியான கேள்விக்கு, வெறும் ‘திமுக எதிர்ப்பு’ அல்லது ‘தவெக ஆதரவு’ என்ற ஒற்றைத்தன்மை கொண்ட தளங்களிலேயே ஊடக விவாதங்கள் சுருங்கிப் போயின.

இடதுசாரிகளும் இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்த ஆழமான ஆய்வுகளைச் செய்ததாகத் தெரியவில்லை. இத்தகையவொரு சூழலில்தான், தவெகவின் இந்தப் பிரம்மாண்ட வெற்றி, தமிழக மக்களின் சமகால அரசியல் உணர்வு, அவர்களின் தற்போதைய வாக்களிக்கும் முறை, உலகளாவிய பிம்ப அரசியலின் போக்கு ஆகியவற்றுக்கு இடையே நிலவும் பரஸ்பரத் தொடர்புகளை பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகவியல் பார்வைகளின் வழியே விவாதிக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது.

1) அந்தோனியோ கிராம்சியின் பொதுப்புத்தியும் பாரம்பரிய அறிவுஜீவிகளின் வீழ்ச்சியும்

அனைத்து மனிதர்களும் அறிவுஜீவிகளே என்பார் அந்தோனியோ கிராம்சி. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறனும் உலகத்தைப் பற்றிய தனித்த பார்வையும் உண்டு. மிகக் கடினமான, உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கும்கூட அன்றாடச் செயற்பாட்டிற்குச் சிந்தனையும் திட்டமிடலும் தேவைப்படுகின்றன. எனவே, அடிப்படைச் சிந்தனைத் திறன் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அறிவுஜீவிகளே / தத்துவவாதிகளே.

ஒரு சாமானிய மனிதன் அவனது அன்றாட உழைப்பு, அவன் பேசும் மொழி, அவனுடைய சமூக உறவுகள் ஆகியவற்றின் வழியே உலகை எதிர்கொள்ளும் ஒரு தனித்துவமான உலகப்பார்வையைத் தனக்குள்ளே எப்போதும் கொண்டிருக்கிறான். இந்த உலகப் பார்வையைத்தான் கிராம்சி ‘பொதுப்புத்தி’ (Common Sense) என்கிறார். இது ஆங்காங்கே சிதறிக் கிடக்கும், சிலநேரம் தங்களுக்குள் முரண்பாடுகள் நிறைந்த எண்ணங்களின் தொகுப்பாக இருந்தாலும், ஒரு சாமானிய மனிதனின் ஆக எதார்த்தமான வாழ்வியல் தேவைகளையும் இருத்தலியல் வலிகளையும் இதுதான் பிரதிபலிக்கிறது.

சிந்தனைத் திறன் எல்லோருக்கும் இருந்தாலும், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ‘அறிவுஜீவிகள்’ என்ற அங்கீகாரத்துடனும் சமூக அந்தஸ்துடனும் வேலை செய்கிறார்கள். உதாரணமாக: ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள். இவர்களின் முதன்மைப் பணி என்பது, தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்குவதும், சமூகப் பொதுக் கருத்தை வழிநடத்துவதுமே ஆகும்.

இதனால்தான் கிராம்சி, உழைக்கும் மக்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தங்களின் கருத்தை நிலைநிறுத்தவும் தங்களுக்குள்ளிருந்தே தங்களுக்கான ‘அறிவுஜீவிகளை’ (Organic Intellectuals) உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போதுதான் சமுதாயத்தில் உண்மையான கட்டமைப்பு மாற்றமும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அதிகார விடுதலையும் நிகழும் என்பது அவரது வாதமாக இருந்தது.

ஆனால், சமகாலத்தில் மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் ‘பாரம்பரிய அறிவுஜீவிகள்’, சாமானிய மக்களின் எதார்த்தமான பொதுப்புத்தியைப்  புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். மக்களின் சிந்தனை உருவாக்கத்தில் நிலவும் ஆளும் வர்க்கத்தின் தந்திரமான ஊடுருவலையும், அதன் உலகளாவிய கருத்தியல் மேலாதிக்கத்தையும் ஆராயாமல், அவர்கள் மிக எளிதாக மக்களை மட்டுமே பழிசொல்கிறார்கள். “மக்களுக்கு அரசியல் பக்குவம் இல்லை” எனத் தூற்றுவதோடு, தங்களின் மேட்டிமைத்தனத்தால் ஆளும் வர்க்கத்தின் அசுரத்தனமான பாத்திரத்தை முற்றிலும் மறந்துவிடுகிறார்கள்.

ஒரு பெரும் அரசியல் அதிர்வு நிகழும்போது, மக்கள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பதை அவர்களின் அன்றாட வாழ்வியல் சூழலிலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் ஆராய இவர்கள் மறுக்கிறார்கள். மாறாக, தங்களின் கண்ணோட்டத்தை மட்டுமே மக்கள்மீது திணித்து, இதை வெறும் ‘சினிமா கவர்ச்சி’, ‘இன்ஸ்டாகிராம் பிரச்சார உத்தி’, ‘திமுக மீதான வெறுப்பு’ அல்லது ‘வாக்கு எந்திரச் சதி’ என மிக எளிமையான கருப்பு-வெள்ளை விமர்சனங்களாகக் கடந்து போய்விடுகிறார்கள்.

உண்மையில், இந்தத் தேர்தல் முடிவு என்பது தற்செயலான விபத்தோ, ஒற்றைக் காரணியால் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. மக்களின் வாக்களிக்கும் போக்கிற்குப் பின்னால் அவர்களின் வாழ்வியல் சூழல் சார்ந்த தனித்துவமான அரசியல் உணர்வு எப்போதும் நிலவுகிறது. அந்தத் தேர்வு, அறிவுஜீவிகளின் தர்க்கத்திற்கு இணங்க இல்லை என்பதற்காகவே, சாமானியர்களின் சுயசிந்தனையை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது.

நிலவுகின்ற அதிகார அமைப்பிற்கு வெளியேயான ஒரு உண்மையான கட்டமைப்பு ரீதியான மாற்று அரசியல் வாய்ப்போ மக்கள் இயக்கங்களோ இல்லாத சூழலில், தங்களுக்குக் கிடைத்துள்ள தெரிவுகளில் இருந்து மக்கள் எவ்வாறு ஒரு தலைவரைத் தேர்வுசெய்கிறார்கள் என்ற உளவியலையும், அதற்குப் பின்னால் இயங்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரோபாயங்களையும் நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இதன் பின்னணியில், பின்வரும் வெவ்வேறான காரணிகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் புள்ளியில் ஒன்றாக இணைந்ததன் விளைவே இந்தத் தேர்தல் திருப்பம்:

மாற்று அரசியல் மீதான நீண்டகால ஏக்கம்: கடந்த 15-20 ஆண்டுகாலமாக திமுக-அதிமுக என்ற இருமுனைப் பாரம்பரியக் கட்சிகளின் அதிகாரக் கட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவாக்கப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு.

தலைமைத்துவ வெற்றிடம்: செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் நிலவிவரும் தொடர்ச்சியான ஆளுமை மற்றும் தலைமைத்துவக் குறைபாடு.

அரசியல் சினிமாமயமாக்கல்: நடிகர் விஜய்யின் வருகையோடு, கார்ப்பரேட் வியூகர்களால் மிகக் கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட ‘அரசியல் சினிமாமயமாக்கல்’ (Cinematization of Politics) சூழல்.

அ) இருமுனைப் பாரம்பரிய அரசியலின் மீதான சலிப்பும், புதிய மாற்றுக்கான உலகளாவிய ஏக்கமும்

கடந்த 15-20 ஆண்டுகாலமாகத் தமிழக அரசியல் களம் என்பது திமுக-அதிமுக என்ற இரு பாரம்பரியச் சித்தாந்த வர்க்கங்களின் அதிகாரக் குவிப்புக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கிறது. இந்த இருமுனை அரசியலில் மக்கள் அடைந்த அன்றாட வாழ்வியல் சலிப்பு, ஊழல், இரு தரப்பிலும் பெரிய மாறுபாடில்லாத பொருளாதாரக் கொள்கைகள் தந்த ஏமாற்றம் ஆகியவை, ஒரு புதிய மாற்று சக்தி மீதான நீண்டகால ஏக்கத்தை மக்களின் ஆழ்மனத்தில் விதைத்திருந்தன. அதிகாரக் குவியலின் வாரிசுரிமைப் போக்கும், சாமானிய மக்களின் பொதுப்புத்தியில் ஒரு தீவிரமான அதிருப்தியை வளர்த்தெடுத்தது.

மக்களின் இந்தத் தீவிர அதிருப்தியும் சலிப்பும் எவ்வாறு ஒரு பாரம்பரிய இருமுனைத் தேர்தல் அமைப்பைத் தகர்த்து எறியும் என்பதற்கு இந்திய மற்றும் உலகளாவிய அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த உதாரணங்கள் உண்டு. குறிப்பாக, பஞ்சாப் மாநில அரசியல் மாற்றம் இதற்கு மிக நெருக்கமான ஒன்று. பல தசாப்தங்களாக பஞ்சாபில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (SAD) ஆகிய இரு பாரம்பரியக் கட்சிகளே மாறி மாறி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தன. வாரிசு அரசியல், விவசாய நெருக்கடிகள், ஆளும் வர்க்கங்களின் ரகசியக் கூட்டு ஆகியவற்றால் சலிப்படைந்த பஞ்சாப் மக்கள், ‘மாற்று ஆட்சி முறை’ என்ற முழக்கத்தோடு களம் புகுந்த ஆம் ஆத்மி (AAP) கட்சியை நோக்கித் தங்களின் வாக்குகளை முழுமையாக மாற்றியமைத்தனர். அதன் விளைவாக பிரகாஷ் சிங் பாதல், அம்ரிந்தர் சிங் போன்ற பல தசாப்த காலப் பாரம்பரிய அசுர ஆளுமைகள் தங்களின் சொந்தக் கோட்டைகளிலேயே வீழ்த்தப்பட்டு, ஆம் ஆத்மி புதிய வரலாறு படைத்தது.

ஆ) ஜெயலலிதாவின் ஆளுமை வெற்றிடமும், எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சியும்

செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் ‘அரசியல் ஆதிக்கம்’ அதன் அடித்தளத்திலேயே ஆட்டம் காணத் தொடங்கியது. ஜெயலலிதா என்ற பிம்பம் வெறும் தேர்தல் வெற்றியைக் கடந்து, மக்களின் ஆழ்மனத்தில் ஒரு கம்பீரமான, ஒற்றைத் தலைமைத்துவம் என்ற பாதுகாப்புணர்வை வழங்கியது. குறிப்பாக, சாமானியப் பெண்களிடம் அவர் பெற்றிருந்த அந்த ‘தாய்வழி ஆளுமைப் பிம்பத்தை’ அவருக்குப் பின் வந்த எடப்பாடி தலைமையால் ஒருபோதும் பிரதிபலிக்கவோ ஈடுசெய்யவோ முடியவில்லை. உட்கட்சிப் பூசல்கள், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா பிரிவுகளுடனான தொடர் பிளவுகள் ஆகியவை அதிமுகவை ஒரு பலவீனமான, சிதறிய கட்டமைப்பாகவே பொதுவெளியில் காட்டின. எடப்பாடி பழனிசாமியின் பிம்பம், ஒரு தற்காலிக நிர்வாகத் தலைமையாக மட்டும் சுருங்கியதே தவிர, சாமானிய மக்களின் பொதுப்புத்தியை ஈர்க்கும் ஒரு ‘மாஸ் லீடராக’ அவரால் பரிணமிக்க இயலவில்லை.

இதற்கெல்லாம் மேலாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது அதிகாரப் பாதுகாப்பிற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் அமைத்த தேசியக் கூட்டணி, தமிழகத்தின் அடிமட்டப் பொதுப்புத்தியில் கடுமையான சித்தாந்த முரண்பாட்டை ஏற்படுத்தியது. மாநில சுயாட்சிக்கும் திராவிடக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு கட்சியோடு அதிமுக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதாக மக்கள் கருதினர். 

இந்தத் தலைமைத்துவ மற்றும் சித்தாந்த வெற்றிடத்தை நடிகர் விஜய் மிகக் கச்சிதமாகத் தன் தந்திரோபாயச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இதனால்தான், தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கத்திலேயே அதிமுகவின் அந்தப் பலவீனமான சமரசப் போக்கை முற்றிலும் நிராகரித்தார். பாஜகவின் சித்தாந்த அரசியலையும், திமுகவின் குடும்ப அரசியலையும் ஒரே நேரத்தில் சமரசமின்றி எதிர்க்கும் ஒரு ‘தூய மாற்று சக்தி’ என்ற பிம்பத்தை தனக்காகக் கட்டமைத்துக்கொண்டார். அதிமுகவின் வீழ்ச்சியால் உருவான அந்தப் பிரம்மாண்டமான தலைமைத்துவ வெற்றிடத்தை, தனது அசுரத்தனமான மாஸ் சினிமா பிம்பத்தின் வழியாகவும், கார்ப்பரேட் பிஆர் வியூகங்களின் துணையோடும் விஜய் மிக எளிதாகத் தன்வசப்படுத்தி இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் மொத்தமாகத் தவறவிட்ட இடம் ஒன்றுண்டு. திமுக, அதிமுக ஆகிய இரு கழக ஆட்சிகளின் அதிகாரக் குவிப்புக்கு மாறான, ஒரு ‘புதிய மாற்று முகம்’ மீதான மக்களின் நீண்டகால ஆர்வம் இந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவராலும் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. போலவே, செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய அதிமுக தலைமைத்துவத்தின் மீதான மக்களின் தீவிர நம்பிக்கையின்மையும், கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர்கள் மேற்கொண்ட ‘உள்ளே-வெளியே’ என்ற சந்தர்ப்பவாத அரசியல் நாடகங்களும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை சாமானிய மக்களின் பொதுப்புத்தியில் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது இத்தேர்தல் முடிவுகள் வழியே தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தில்தான் மக்கள் விஜய்யைத் தங்களின் புதிய மாற்றாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், புதிதாக வாக்களிக்க வந்துள்ள இளம் தலைமுறையினர், பெண்கள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் ஆகியோரின் ஆதரவு மிகத் துல்லியமாக விஜய்யை நோக்கிக் குவிந்துள்ளது. கார்ப்பரேட் பிஆர் நிறுவனங்களும் ஆளும் வர்க்கமும் இந்தத் தளங்களை எவ்வாறு கையாண்டன, சாமானிய மக்களின் இந்த வாழ்வியல் சலிப்பை தங்களின் ‘இரட்சக பிம்ப’ அரசியலின் மூலம் எவ்வாறு தங்களுக்குச் சாதகமாகத் தன்வயப்படுத்திக் கொண்டன என்பதை நாம் அல்துஸரின் கோட்பாடுகளின் வழியே சற்று ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இ) தவெகவின் வெற்றியும், ‘அரசியல் சினிமாமயமாக்கல்’ உத்தியும்

தவெகவின் வெற்றியும் திமுகவின் தோல்வியும் பல கோணங்களில் அலசப்பட்டாலும், பெரும்பாலும் ‘திமுக மீதான மக்களின் அதிருப்தி’ என்ற காரணியே அதிக விவாதத்திற்கு உள்ளாகிறது.

ஆனால், ஒரு புதிய முகத்தின் அறிமுகம், அவரது சினிமா பிம்பம், நிஜத்தையும் திரையையும் பிரித்தறிய இயலாத மக்களின் உளவியலில் சினிமாவின் தாக்கம் ஆகியவை மிகக் குறைவாகவே கவனம் பெறுகின்றன. இந்தக் காரணிகளைக் கூர்ந்து கவனித்தால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு விஜய் பெரிய மெனக்கெடல் இன்றியே முதல்வராகத் தொடர்வார் என்று தோன்றுகிறது. ஏனெனில், எம்.ஜி.ஆர் தனது இறுதிக்காலம் வரை பங்கேற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் (1977, 80, 84) திமுகவால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதே வரலாறு.

நாம் மக்களின் உளவியலை மிக லேசாக எடைபோட்டு விடுகிறோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் தோற்ற இடம் இதுதான். விஜய்யின் தேர்தல் பிரச்சார யுக்தி என்பது, அப்படியே ஒரு சினிமா திரைக்கதையை ஒட்டிய கதையாடலை உருவாக்கியது. திமுக ஒரு ‘தீய சக்தி’, தான் ஒரு ‘தூய சக்தி’ என நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதலாகத் தேர்தலைச் சித்தரித்து, இறுதியில் வில்லனை வீழ்த்தி தன்னை அரியணை ஏற்றுவதை ‘மக்களின் வெற்றியாகக்’ காட்டும் உளவியலை அவர் அடித்தளமாகக் கொண்டார்.

இந்தத் திரைக்கதையில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், வாக்களிப்பதன் மூலம் பங்கேற்பாளராக மாறி, சமூக மாற்றத்தின் அங்கமாகத் தங்களை உணரச் செய்ததே அவரது மாபெரும் பிரச்சாரத் தந்திரம். பெரும்பான்மை பெறுவதற்கு அவர் தடுமாறிய சூழலில், “பார், இந்த நாயகனை வரவிடாமல் எப்படி அலைக்கழிக்கிறார்கள்!’ என்று அனுதாபத்தை உருவாக்கியதும் அந்தத் திரைக்கதையின் தொடர்ச்சிதான்.

வெற்றிபெற்ற பின் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பது என்பது, ஒரு மாஸ் ஹீரோ வில்லனை அடித்து துவம்சம் செய்தாலும், இறுதியில் ‘பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ எனப் பெருந்தன்மை காட்டும் ஹீரோ பிராண்டிங்கை உள்ளடக்கியது. வரும் நாள்களில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துவது, மக்களிடம் குறைகளைக் கேட்பது போன்ற சாதாரணச் செயற்பாடுகளைச் செய்தாலே அவருக்குப் போதுமானதாக இருக்கும். சமூகம் தர்க்கரீதியாக இயங்குகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் யதார்த்தத்தில், சாமானிய மக்களின் உலகம் ‘மிகைப்படுத்தப்பட்ட நிஜத்தால்’ கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே தவெகவின் வெற்றி காட்டுகிறது.

2. ‘மிகைப்படுத்தப்பட்ட நிஜமும்’, அல்துஸரின் ‘கருத்தியல் அரசு எந்திரங்களும்’

லூயி அல்துஸரின் அதி-நிர்ணயக் கோட்பாட்டின்படி, ஒரு சமூக வரலாற்று நகர்வு என்பது ஒருபோதும் ஒற்றைத் தளத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு தளங்களில் தனித்தனியாகத் திரளும் முரண்பாடுகள் அனைத்தும் ஒரே வரலாற்றுப் புள்ளியில் ஒன்றாகக் குவியும்போதுதான் இத்தகையதொரு ‘மாயாஜால சுனாமி’ போன்ற திருப்பம் சாத்தியமாகிறது. மக்களின் ஆழ்மனத்தில் இருக்கும் இந்த அன்றாடச் சலிப்பு, இருத்தலியல் விரக்தி, பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றைத்தான் சினிமா, சமூக ஊடக அல்காரிதங்கள், கார்ப்பரேட் பிஆர் நிறுவனங்கள் போன்ற ‘கருத்தியல் அரசு எந்திரங்களின்’ (Ideological State Apparatuses) துணையோடு ஆளும் வர்க்கம் மிகத் துல்லியமாக அறுவடை செய்துள்ளது.

மக்களின் பொதுப்புத்திக் கருத்துருவாக்கத்தில் ஆளும் வர்க்கத்தின் தந்திரமான ஊடுருவலையும், அதன் பிரம்மாண்டமான உலகளாவிய செல்வாக்கையும் புரிந்துகொள்வதற்கு மார்க்ஸியச் சிந்தனையாளர் லூயி அல்துஸரின் ஆய்வுகள் மிக அடிப்படையானவை. இன்றைய அரசியல் பகுப்பாய்வைச் செய்ய அவரின் கோட்பாடுகள் நமக்கு சிறந்த தத்துவார்த்தக் கருவிகளை வழங்குகின்றன. ஆளும் வர்க்கம் தங்களின் அதிகாரத்தையும் வர்க்கச் சுரண்டலையும் தடையின்றித் தக்கவைத்துக் கொள்ள இரண்டு வகையான அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவதாக அல்துஸர் குறிப்பிடுகிறார்:

அடக்குமுறை அரசு எந்திரங்கள் (Repressive State Apparatuses - RSA): ராணுவம், காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள். இவை வன்முறையின் மூலமும் நேரடி ஒடுக்குமுறையின் மூலமும் மக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவை.

கருத்தியல் அரசு எந்திரங்கள் (Ideological State Apparatuses - ISA): கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள், குடும்பக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், மிக முக்கியமாக ஊடகம், சினிமா, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள். இவை எவ்வித வன்முறையுமின்றி, சாமானிய மக்களின் ஆழ்மனத்தில் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமான சித்தாந்தங்களை இயல்பானவையாகத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ விதைக்கின்றன.

சமகால இந்தியச் சூழலில், இந்த ‘கருத்தியல் அரசு எந்திரங்கள்’ (ISA) எவ்வாறு ஒன்றிணைந்து கூட்டுச் சேர்ந்து உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை மழுங்கடித்து, அவர்களின் சலிப்பை புதியதொரு ‘இரட்சக பிம்பத்தை’ நோக்கித் திருப்புகின்றன என்பதை மூன்று முதன்மைக் கூறுகளாகப் பகுக்கலாம்:

அ) விளையாட்டு என்னும் கருத்தியல் எந்திரம்

அல்துஸர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மதமும் கல்வியும்தான் முதன்மையான ISAக்களாகச் செயற்பட்டன. ஆனால், இன்றைய உலகளாவிய நவதாராளவாத கார்ப்பரேட் யுகத்தில், ஐபிஎல் (IPL) கிரிக்கெட் விளையாட்டு என்பது மக்களின் அரசியல் உணர்வைத் திசைதிருப்பும் மிகவும் சக்திவாய்ந்த கருத்தியல் எந்திரமாக உருவெடுத்துள்ளது.

கவனத் திசைதிருப்பல் உத்தி: பண்டைய உரோமானியப் பேரரசு காலத்தில், கடுமையான வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாடிய சாமானிய மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யாமல் இருக்க ஆளும் வர்க்கம் ‘ரொட்டியும் கொலோசியம் விளையாட்டு அரங்குகளும்’ (Bread and Circuses) என்ற உத்தியைப் பயன்படுத்தியது. இன்றைய டிஜிட்டல் சூழலில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், கட்டமைப்புச் சுரண்டல் போன்ற இருத்தலியல் நெருக்கடிகளால் ஒரு சாமானிய இளைஞன் அவதிப்படுகிறபோது ஐபிஎல் என்னும் 60 நாள் வண்ணமயமான ‘டிஜிட்டல் திருவிழா’ ஒரு மயக்க மருந்தாகத் தரப்படுகிறது. இங்கே ஒருவருக்கொருவர் துயரம் கொண்டவர்களுடன் ஒன்றிணைவது பின்னுக்குத் தள்ளித் தடுக்கப்பட்டு, சென்னை, மும்பை, பெங்களூரு என பிராந்திய கார்ப்பரேட் அணிகளின்' பெயரால் போலியான அடையாளப் பெருமிதங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகின்றன. சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியிடம் கர்நாடக மாநிலக் கொடியைத் திணித்த அரசியல் கட்சியினர், சென்னை மும்பை அணி ரசிகர்கள் பரஸ்பர மோதல் நிகழ்வுகளெல்லாம் அதன் சில நடப்பு உதாரணங்கள்.

ஆ) சினிமாவில் சித்தாந்த ஊடுருவல்: ‘இரட்சகர்’ உற்பத்திக் கூடம்

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அன்று. அது மக்களின் ‘பொதுப்புத்தியை’ ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்ப வடிவமைக்கும் ஆகப் பிரம்மாண்டமான கருத்தியல் எந்திரமாகும். பாலிவுட் முதல் கோலிவுட் வரை தேசியப் பெருமித சினிமாக்களுக்கும் கதாநாயக வழிபாட்டு சினிமாக்களுக்கும் பஞ்சமில்லை.

கற்பனையான எதார்த்தம் (Imaginary Relation): அல்துஸரின் புகழ்பெற்ற வரையறைப்படி, “சித்தாந்தம் என்பது மனிதர்கள் தங்களின் நிஜமான இருத்தலியல் சூழலுடன் கொண்டிருக்கும் ஒரு கற்பனையான உறவைக் குறிப்பதாகும்”. சினிமாவில் ஒரு மாஸ் கதாநாயகன் கார்ப்பரேட் வில்லன்களையும் ஊழல் அரசியல்வாதிகளையும் ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கி, ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் நொடிப் பொழுதில் மாற்றுவதை டிஜிட்டல் திரையில் பார்த்து வளரும் சாமானியன், நிஜ உலகிலும் அதே போன்ற ஒரு ‘அதிவேகத் தனிநபர் தீர்வு’ சாத்தியம் எனத் தன் பொதுப்புத்தியால் நம்பத் தொடங்குகிறான்.

கூட்டு உழைப்பைச் சுரண்டும் பிம்பம்: நிஜ வாழ்வில் உழைக்கும் வர்க்கம் தங்களின் நீண்டகாலக் கூட்டுப் போராட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் மூலமே தங்களின் உரிமைகளை வெல்ல முடியும் என்ற தர்க்கத்தை இந்த சினிமா எந்திரம் மறைக்கிறது. மக்கள் தங்களை வெறும் செயலற்ற பார்வையாளர்களாகவும், திரையில் தோன்றும் நாயகனை தங்களைக் காக்க விண்வெளியிலிருந்து இறங்கி வந்த இரட்சகனாகவும் பார்க்க வைக்கிறது. இந்தத் திரைக் கற்பனைதான், பின்னர் மிக லாவகமாக நிஜ அரசியல் வாக்கு வங்கியாக அறுவடை செய்யப்படுகிறது.

இ) ஊடக மற்றும் அல்காரிதக் கட்டுப்பாடு 

நவீன கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல் பிஆர் (PR) ஏஜென்சிகளும் பாரம்பரிய ஊடகங்களை மட்டுமின்றி, சமகாலச் சமூக ஊடகங்களின் அல்காரிதங்களையும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. மொபைல் திரைகளின் வழியே தொடர்ச்சியாக நுகரப்படும் பிம்பங்கள், அல்காரிதங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரைப் பற்றிய நேர்மறையான, பிரம்மாண்டமான கதையாடல்களை மட்டுமே ஒரு இளைஞனின் திரையில் மீண்டும் மீண்டும் தோன்றும் வண்ணம் வடிவமைக்கின்றன.

நிஜ உலகச் சிக்கல்களுக்கு நீண்டகாலத் திட்டமிடலும், அடிமட்டக் களப்போராட்டமும் தேவைப்படுகின்றன. ஆனால், ஊடகங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த ‘மிகைப்படுத்தப்பட்ட நிஜ’ சூழலில் வாழும் மக்கள், தேர்தல் வாக்களிப்பை ஒரு சித்தாந்தக் கடமையாகப் பார்க்காமல், ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சி போலப் பார்க்கிறார்கள். தங்களின் வாக்கை அந்தத் திரைநாயகனை நிஜ அரியணையில் ஏற்றும் ஒரு ‘ரசிகப் பங்கேற்பாக’ மட்டுமே எண்ணித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

3. உலகளாவிய டெம்ப்ளேட்டும் பிம்ப அரசியலின் சான்றுகளும்

உலக வரலாற்றில், அமெரிக்காவின் கடுமையான பொருளாதார விரக்தியையும், ஊடகப் பயிற்சியையும் மூலதனமாக்கி அரியாசனம் ஏறிய ஹாலிவுட் நடிகர் ரொனால்ட் ரீகன், உக்ரைனின் பழைய பாரம்பரிய அரசியல்வாதிகள் மீதான மக்களின் கடும் வெறுப்பை தன் தொலைக்காட்சிக் தொடரின் ‘தூய்மையான நல்லவன்’ என்ற கற்பித பிம்பத்தால் அப்படியே நிஜ அதிகாரமாக மாற்றிய வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரின் வரலாற்று டெம்ப்ளேட்டுடன் தற்போதைய தமிழக நகர்வு அப்படியே பொருந்திப்போகிறது.

ஆனால் இங்கே நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மக்களின் இந்த நிலவும் பொதுப்புத்தி என்பது ஒருபோதும் வர்க்க உணர்வாகவோ முற்போக்கான அரசியல் உணர்வாகவோ தானாக, தன்னிச்சையாகப் பரிணமிப்பதில்லை. சாமானிய மக்களின் சார்பாக இயங்க வேண்டிய தத்துவவாதிகளும் இடதுசாரி இயக்கங்களும் மக்கள் இயக்கங்கள் வழியே மக்களின் இந்த எதார்த்தச் சலிப்பை வர்க்க உணர்வாக மாற்றத் தவறும்போது, அந்தத் தத்துவார்த்த வெற்றிடத்தை ஆளும் வர்க்கத்தின் புதிய வடிவங்களான ‘கார்ப்பரேட்-சினிமா’ கூட்டுக்கலவை தங்களுக்குச் சாதகமாக மிக லாவகமாக அறுவடை செய்துகொள்கிறது.

திமுக, அதிமுகவிற்குப் பின் இப்போது தவெக எனத் தொடரும் இந்த நீண்டகாலச் சுழற்சியில் எங்கும் உழைக்கும் மக்களின் அதிகார நகர்வோ நிகழ்ந்துவிடவில்லை. மாறாக, கார்ப்பரேட் மூலதனக் குவியல்களின் பின்புலத்தோடு பழைய பொதுப்புத்தி சிதைக்கப்பட்டு, ஒரு புதிய ‘இரட்சகன் பிம்ப’ பொதுப்புத்தியாக மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது மட்டுமே வேறுபாடு. அமெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சியின் கொள்கைகளால் சலிப்படைந்த மக்களின் பொதுப்புத்தியை, குடியரசுக் கட்சியினர் தங்களின் கார்ப்பரேட் நவதாராளவாதச் சித்தாந்தத்திற்குச் சாதகமாகத் திருப்பி, ரீகன் என்னும் சினிமா நடிகரை அரியணையில் ஏற்றினார்கள்.

இந்த வரலாற்றுப் பாடங்களின் பின்புலத்தில் பார்த்தால், தற்போது தமிழகத்தில் நடப்பதும் ஆளும் வர்க்கத்தின் அதே உலகளாவிய போக்குதான். தேர்தல் இயந்திரத்திற்குள்ளும் அதற்கு வெளியேயுமான மக்கள் இயக்கப் பங்கேற்பிலும் மக்களுக்கான ஒரு உண்மையான மாற்றுச் சித்தாந்த அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றுகள் உருவாக்கப்படாத வரை, கார்ப்பரேட் சக்திகள் தங்களின் வர்க்க நலனுக்காக மக்களின் பொதுப்புத்தியை ஒரு முடிவிலாச் சுழற்சிக்குள் முடக்கி வைத்திருக்கும்; ஒரே சிஸ்டத்திற்குள் முகங்களும் சின்னங்களும் மட்டுமே மாறிக்கொண்டிருக்கும். உலகெங்கும் தற்போது இதுதான் ஒரு பெரும் எதார்த்தமாக நடந்துவருகிறது.

தவெக என்பது ‘பழைய மொந்தையில் அடைக்கப்பட்ட புதிய கள்’ போன்றதுதான். தவெகவின் வரவு அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கிகளைத் தன்பக்கம் வெகுவாக ஈர்த்துள்ளது (கிட்டத்தட்ட விழுங்கிவிட்டது). கொள்கை அளவில் தவெக, திமுக எதிர்ப்பு என்பதை முதன்மையாகக் கொண்டு, தமிழகத்தில் நிலவுகிற பாஜக எதிர்ப்பு, ஈழ ஆதரவு, பெரியாரியம், விளிம்புநிலை மக்கள் பிரதிநிதித்துவம் போன்ற உணர்வுகளையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அக்கட்சியின் தலைவர் விஜய், பெரிய அரசியல் சறுக்கல்கள் ஏதுமின்றித் தற்போதைய போக்கிலேயே நிதானமாகப் பயணித்தாலே, அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பெரிய எதிர்ப்பில்லாமல் ஆட்சியைத் தொடரக்கூடிய சூழலே நிலவும் என்பதைத் தற்போதைய களம் உணர்த்துகிறது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அருண் நெடுஞ்செழியன்

தமிழில் பசுமை மார்க்சியராக அறியப்படும் அருண் நெடுஞ்செழியன் இதுவரை ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவரது, 'மார்க்சியச் சூழலியல்’ (விடியல்) என்ற நூல்தான், பசுமை மார்க்சியத்தை நேரடியாகத் தமிழில் பேசிய முதல் நூலாக அறியப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் பெருவெள்ளத்தையொட்டி, ‘சென்னை பெருவெள்ளம்: வளர்ச்சியின் அழிவும், அழிவின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பிலான குறுநூல் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழ்ச் சூழலில் சுற்றுச்சூழல், தனிநபர் சாகசவாதம், அடையாள அரசியல், தமிழ்த் தேசிய அரசியல், இந்துத்துவ இயற்கைவாதம், சட்டவாதம், காந்தியப் பொருளாதாரம், சீர்திருத்தவாதம் எனப் பல்வேறு சீரழிந்த போக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டியதாக, ‘சூழலியல் அடிப்படைவாத அரசியல்’ (உயிர்) நூல் பேசியது. இயற்கையாளர்களான ஸ்டீவ் இர்வின், விட்டேகர், டேவிட் அட்டன்பரோ, ஸ்டீவ் வின்டர் போன்ற ஆளுமைகளின் நேர்காணல்களை, ‘இயற்கை அறிந்து செயல்’ (ஆதி பதிப்பகம்) நூல் தமிழின் சூழலியல் பார்வையை வேறொரு திசைக்குக் கொண்டுசென்றது. அரசியல் கட்டுரைகளை உள்ளடக்கி, ‘இந்திய பாசிசம் இன்று’ (யாப்பு பதிப்பகம்) என்ற நூல் வெளிவந்துள்ளது. சூழலியலை இயங்கியல் பார்வையில் அணுகுவதுடன், தீர்வுகளை நோக்கிய கட்டுரைகளையும் எழுதிவருகிறார். தற்போது மயிலாடுதுறையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.



2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

chozhan vaalarivan   16 days ago

பிம்ப அரசியலை விமர்சிப்பதா, மக்களின் அரசியலைப் புரிந்துகொள்வதா? அருண் நெடுஞ்செழியனின் "ரீகன், ஜெலென்ஸ்கி முதல் விஜய் வரை: மக்களின் பொதுப்புத்தியை அறுவடை செய்யும் பிம்ப அரசியல்" என்ற கட்டுரை, சமகாலத் தமிழக அரசியலை மார்க்சியக் கருத்தியல் கருவிகளின் வழியே புரிந்துகொள்ள முயலும் ஒரு முக்கியமான அறிவார்ந்த முயற்சி. குறிப்பாக, கிராம்சியின் "பொதுப்புத்தி" மற்றும் அல்துஸரின் "கருத்தியல் அரசு எந்திரங்கள்" ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்தி, விஜய்யின் அரசியல் எழுச்சியை வெறும் தேர்தல் வெற்றியாக அல்லாமல், உலகளாவிய பிம்ப அரசியலின் ஒரு பகுதியாக வாசிக்க முயல்வது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தக் கட்டுரையின் பலம் எதுவோ அதுவே அதன் பலவீனமாகவும் மாறுகிறது. கட்டுரையின் தொடக்கத்திலேயே ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார். விஜய்யின் வெற்றி என்பது மக்களின் சுயமான அரசியல் தேர்வு அல்ல; மாறாக, கார்ப்பரேட் ஊடகங்கள், சினிமா, சமூக ஊடக அல்காரிதங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு "இரட்சகர் பிம்பத்தின்" வெற்றி என்பதே அவரது மைய வாதம். அதன் பிறகு கிராம்சி, அல்துஸர், ரீகன், ஜெலென்ஸ்கி ஆகியோரின் உதாரணங்கள் அனைத்தும் இந்த முன்கூட்டிய முடிவை நிரூபிப்பதற்காகவே அணிவகுக்கப்படுகின்றன. இங்கே ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது. மக்களின் அரசியல் தேர்வை நாம் எவ்வளவு மதிக்கிறோம்? கிராம்சி "பொதுப்புத்தி" பற்றி பேசும்போது, அது முரண்பாடுகள் நிறைந்திருந்தாலும், மக்களின் வாழ்வனுபவத்திலிருந்து உருவான ஒரு அறிவு வடிவம் என்கிறார். ஆனால் அருண் நெடுஞ்செழியனின் கட்டுரையில், மக்களின் பொதுப்புத்தி இறுதியில் சினிமாவாலும் ஊடகங்களாலும் எளிதில் மயக்கப்படக்கூடிய ஒரு பலவீனமான மனநிலையாகவே சித்தரிக்கப்படுகிறது. இது கிராம்சியின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதா? அல்லது அவரை ஒரு அரசியல் கருவியாக மட்டும் பயன்படுத்துகிறோமா? இன்னொரு முரண்பாடும் இக்கட்டுரையில் உள்ளது. ஒருபுறம், "மக்களுக்கு அரசியல் பக்குவம் இல்லை" என்று சொல்லும் அறிவுஜீவிகளை ஆசிரியர் விமர்சிக்கிறார். ஆனால் மறுபுறம், மக்கள் ஒரு திரைநாயகனின் பிம்பத்தால் மயக்கப்பட்டு அவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டார்கள் என்ற முடிவுக்கும் வருகிறார். அப்படியென்றால், மக்களின் தேர்வு உண்மையானதா? அல்லது அவர்கள் வெறும் கருத்தியல் எந்திரங்களின் கைப்பாவைகளா? இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள பதற்றத்தை கட்டுரை தீர்க்கவில்லை. மேலும், "கார்ப்பரேட் பிம்ப அரசியல்" என்ற கருத்தை நாம் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், அதே தர்க்கத்தைப் பயன்படுத்தினால், உலக அரசியலில் பெரும்பாலான தலைவர்களின் வெற்றியையும் "பிம்ப அரசியல்" என்று கூறிவிட முடியும். ஒரு தலைவரின் ஆளுமை, அவரது கவர்ச்சி, அவரைச் சுற்றி உருவாகும் கதையாடல் ஆகியவை அரசியலின் இயல்பான கூறுகளா? அல்லது அவை அனைத்தும் கார்ப்பரேட் சதிகளா? இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்தாமல், எல்லாவற்றையும் "பிம்ப அரசியல்" என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடுவது ஒரு வகையான எளிமைப்படுத்தலாகிவிடுகிறது. மேலும், விஜய்யின் அரசியல் எழுச்சியைப் புரிந்துகொள்ள சினிமா மட்டும் போதுமான விளக்கம் அல்ல. திமுக-அதிமுக இருமுனை அரசியலின் மீதான சலிப்பு, அரசியல் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையின்மை, புதிய தலைமுறையின் வேறுபட்ட அரசியல் எதிர்பார்ப்புகள், சமூக ஊடகங்களால் உருவான புதிய பொதுவெளி ஆகியவற்றையும் சமமான தீவிரத்துடன் ஆராய வேண்டியுள்ளது. ஒரு சமூகத்தில் மக்கள் மீண்டும் மீண்டும் "இரட்சகரை" தேடுகிறார்கள் என்றால், அது மக்களின் பலவீனம் மட்டுமல்ல; அந்தச் சமூகத்தின் அரசியல் நிறுவனங்களின் தோல்வியும் கூட. அந்தக் கேள்வியை இக்கட்டுரை தொடுகிறது. ஆனால் அதன் ஆழத்திற்குள் செல்வதற்கு முன்பே, "பிம்ப அரசியல்" என்ற கருத்தியல் முடிவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இருப்பினும், இக்கட்டுரையின் முக்கியத்துவம் குறையாது. ஏனெனில், சமகால அரசியலை வெறும் தேர்தல் கணிதமாக அல்லாமல், சினிமா, ஊடகம், கருத்தியல், பொதுப்புத்தி, உலகளாவிய மூலதன அரசியல் ஆகியவற்றின் பரஸ்பரத் தொடர்புகளின் வழியே வாசிக்க வேண்டும் என்ற அவசியத்தை இது வலியுறுத்துகிறது. அந்த விவாதத்தை இது தொடங்குகிறது. ஆனால் அந்த விவாதத்தின் இறுதி வார்த்தை இதுவல்ல. அரசியல் என்பது எப்போதும் பிம்பத்திற்கும் யதார்த்தத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் அதிகாரத்தின் உற்பத்திக்கும் இடையே நிகழும் ஒரு தொடர்ச்சியான மோதல்தான். அந்த மோதலை இன்னும் நுணுக்கமாகவும், இன்னும் மனிதநேயமாகவும், இன்னும் திறந்த மனதுடனும் வாசிக்க வேண்டிய தேவை இக்கட்டுரையை வாசித்த பிறகு மேலும் அதிகரிக்கிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வாசகர் கூட்டம்நவீனத்துவம்ரூமி‘ஏ ஜி கௌதம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்கவிதையியல்எழுத்தாளரின் மரணம்நறுங்கதைநானென்பது லெட்டூஸ்சிறுகதைவேறொரு மழைபின்னவீனத்துவம்பேட்டிசிறுகதைத் தொகுதிதாரகன்நிலமெங்கும் பூத்த முகம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்இலக்கிய விமர்சனம்விஜய்ஆசிரியர் உரைநேர்காணல்கருத்தரங்கங்கள்ஒரு துளி கருணைதாரா கேம்பெல்அறபு இலக்கியம்கடைசி வெடிச்சத்தம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்அநித்யம்கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!