சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ்
30 Apr 2026
1

என் தந்தையின் வலது கரத்தைப் பற்றிக்கொண்டு அவர் எட்டி எட்டி வைக்கும் அடிகளுக்கு ஈடாக ஓட்டமும் நடையுமாக அவரோடு நடந்தேன். நான் அணிந்திருந்த கறுப்புக் காலணி, பள்ளிச் சீருடை, சிவப்பு நிறத்தொப்பி அனைத்தும் புதியனவாக இருந்தன. அனைத்தும் புதுசு என்றாலும் புதுத்துணி உடுத்திய உற்சாகம் ஏனோ என்னிடம் இல்லை. ஏனெனில் அது கொண்டாட்டத்திற்கான நாளாக இருக்கவில்லை. மாறாக, அது நான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளாக இருந்தது. 

நாங்கள் செல்வதை என் தாயார் சாளரம் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு உதவிட வந்திடுவார் என்றெண்ணி அவ்வப்போது அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நாங்கள் நடந்துசென்ற வீதி பயிர்பச்சைகளால் சூழப்பட்டிருந்தது. வீதியின் இருமருங்கிலும் இருந்த விசாலமான விளைநிலங்களில் கள்ளிப்பழச் செடிகளும், மருதாணி மரங்களும் கொஞ்சமாகப் பேரீத்த மரங்களும் பயிரிடப்பட்டிருந்தன.

“எதுக்குப் பள்ளிக்கூடம்? நீங்க எரிச்சல்படும் அளவுக்கு நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று என் தந்தையிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன்.

“நான் உன்னைத் தண்டிக்கவில்லை” சிரித்துக்கொண்டே சொன்னார் அப்பா. 

“பள்ளிக்கூடம் என்பது தண்டனைக் கூடம் அல்ல. அது ஒரு தொழிற்கூடம். சிறுவர்களைப் பயனுள்ள மனிதர்களாக மாற்றித்தரும் தொழிற்கூடம். அப்பா மாதிரியும் அண்ணன் மாதிரியும் ஆகவேண்டும் என உனக்கு ஆசையில்லையா?”

அப்பா சொன்ன பதில் எனக்கு ஏனோ சரியெனப் படவில்லை. அன்பான வீட்டில் இருந்து என்னைப் பிரித்தெடுத்து, சாலையின் கடைசியில் இருக்கும் பெரும் மதில்கள் சூழ்ந்த கோட்டை போன்று காட்சியளிக்கும் அந்தக் கடுங்கொடூரமான கட்டடத்தில் தள்ளிவிடுவதை நல்லதுதான் என்று நம்புவதற்கு என்னால் இயலவில்லை.

வாயிலின் அருகே வந்தபோது, பள்ளி வளாகம் சிறுவர் சிறுமியரால் நிரம்பிவழிவதைக் காணமுடிந்தது. “நீயா உள்ள போ! போயி அவங்களோட சேர்ந்துக்கோ! போ... சிரிச்சிட்டே போ! உன்னைப் பார்த்து அவங்களும் கத்துக்குவாங்க!” என்று அப்பா சொன்னார்.

தயக்கத்தோடு அவரது கரத்தைப் பற்றிக்கொண்டே நின்றேன். அவர் மெதுவாக என்னைப் பிடித்து பள்ளிக்கூடம் நோக்கித் தள்ளினார். “தைரியமாகப் போ! இன்னைக்குத்தான் உண்மையாகவே உனது வாழ்க்கையைத் தொடங்கப்போகிறாய். வீட்டுக்குத் திரும்பவேண்டிய நேரம் வரும்போது அப்பா உனக்காகக் காத்துக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்.

மெதுவாக முன்னோக்கி நகர்ந்தேன். தயங்கி நின்றவாறே பார்த்தேன். முதலில் ஒன்றும் கண்களுக்குப் புலப்படாதவாறு தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக சிறுவர் சிறுமியரின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. அங்கிருந்த ஒருவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அங்கிருந்த ஒருவருக்கும் என்னைத் தெரிந்திருக்கவில்லை. வழிதவறி வந்த அந்நியன்போல என்னை உணர்ந்தேன். ஆனாலும், பலரும் என்னை ஆர்வத்தோடு நோக்கியது தெரிந்தது. அதில் ஒரு சிறுவன் என்னருகே வந்து, “யாரு உன்னைக் கூட்டிட்டு வந்தது?” என்று கேட்டான்.

“எங்க அப்பா” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.

“எங்க அப்பா செத்துப் போயிட்டாரு” என்று அவன் ரொம்பச் சாதாரணமாகச் சொன்னான். 

என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. 

ஒரு பரிதாபகரமான கீச்சொலி சப்தத்தை எழுப்பியவாறு வாயில் கதவு மூடப்பட்டது. குழந்தைகளுள் சிலர் இப்போது அழத் தொடங்கினர். மணி அடித்தது. ஒரு பெண்ணும் அவரைத் தொடர்ந்து சில ஆண்களும் வரிசையாக வந்தனர். வந்தவர்களில் ஆண்கள் எங்களை ஒரு சிக்கலான தரவரிசைப்படி வகைப்படுத்தினர். நாங்கள் இருந்த அந்த பரந்த வளாகத்தைச் சுற்றி மூன்று திசையிலும் உயரமான மாடிக்கட்டடங்கள் இருந்தன. ஒவ்வொரு மாடியும் ஒரு நீண்ட வராண்டாவைக் கொண்டிருந்தது. வராண்டாவின் மேற்கூரையாக பலகையாலான சாய்ப்புக்கூரை இருந்தது.

“இதுதான் உங்களுடைய புதிய வீடு” என்று அந்தப் பெண் கூறினார்.

“இங்கேயும் தாய் தந்தையர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி தரக்கூடிய எல்லாமும் இங்கே இருக்கின்றன. மேலும் அறிவுக்குப் பயன்தரக்கூடிய, சமயத்திற்கு நலம்பயக்கக்கூடிய எல்லாமும் இங்கே இருக்கின்றன. அதனால் அழாதீங்க.... சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்க” என்றும் சொன்னார்.

இனி இதுதான் நிஜம் என்றான பின் அந்த நிஜத்திற்கு நாங்கள் எங்களையே ஒப்புக்கொடுத்தோம். இப்படி ஒப்புக்கொடுத்தது ஒருவகையில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. உயிருள்ள ஒருவர் உயிருள்ள மற்றவர்பால் ஈர்க்கப்படுவார் என்பது சரியே. ஏனெனில், அக்கணத்தில் இருந்து எந்தச் சிறுவனை என் நண்பனாக்க விரும்பினேனோ அவனையே நண்பனாக்கினேன்; எந்தச் சிறுமியை அன்பு செய்யவேண்டும் என்று விரும்பினேனோ அந்தச் சிறுமியையே அன்பு செய்தேன். பள்ளிகுறித்து நான் கொண்டிருந்த அச்சம் தேவையற்றது என விளங்க ஆரம்பித்தது. பள்ளி இப்படிப் பரவசம் நிரம்பியதாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஊஞ்சல், பச்சைக் குதிரை, பந்து விளையாட்டுகள் போன்ற அனைத்து வகையான விளையாட்டுகளையும் விளையாடினோம். எங்களுடைய முதல் பாடலை இசை பயிற்றுவிக்கும் வகுப்பில் பாடினோம். அங்குதான் எங்கள் மொழிக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. சுழலும் உலக உருண்டையைக் கண்டதும் அங்கேதான். அது எங்களுக்குக் கண்டங்களையும் தேசங்களையும் காட்டியது. கணிதம் பயில ஆரம்பித்ததும் அங்கேதான். அண்டத்தையும் உலகத்தையும் படைத்த இறைவன் பற்றிய கதை எங்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. இறைவனின் திருவசனங்கள் எனச் சில வாக்கியங்கள் உதாரணங்களாக எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. சுவையான உணவு உண்டோம். குட்டித் தூக்கம் போட்டோம். தூங்கி எழுந்தோம். நட்பு, பாசம், விளையாட்டு, படிப்பு என்று மறுபடி தொடர்ந்தோம்.

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம். கேளிக்கைகள், விளையாட்டுகளோடு பகைமையும் இருக்கும் என்பது புரிந்தது. இந்தப் பகைமை வெறுப்புக்கும் வலிகளுக்கும் இட்டுச் செல்லலாம்; சில வேளைகளில் நாங்கள் எங்களுக்குள்ளாக அடித்துக்கொள்ளும் அளவுக்குக்கூட இட்டுச்செல்லும் என்பதும் புரிந்தது. மலர்ந்த முகம் கொண்ட அந்தப் பெண்மணி அவ்வப்போது எங்களை முறைத்துப் பார்த்துத் திட்டவும், ஒரு சில நேரங்களில் எங்களை அடிக்கவும் தயங்கவில்லை.

இதே நேரம், வீடு எனும் சொர்க்கத்திற்கே சென்றுவிடலாம் என்று நினைப்பதற்கும் இடம் இல்லாமல் போனது. இப்படி முடிவெடுப்பதற்கான காலஅவகாசம் ஏற்கனவே கடந்து போயிருந்தது. எங்களுக்கு முன்னால் இருந்ததெல்லாம் கஷ்டங்களும் கடும்முயற்சியும் பெரும் பிரயத்தனங்களும் மட்டுமே! இந்தச் சங்கடங்களுக்கிடையே கிடைத்த வாய்ப்புகளை யார்யாரெல்லாம் பற்றிக்கொண்டனரோ, அவர்கள் புகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நோக்கி நகர்ந்தனர்.

அன்றைய தினமும் வேலையும் முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும் வகையில் மணியடித்தது. வாயில் கதவுகள் திறந்தன. வாயிலை நோக்கி குழந்தைகள் சாரை சாரையாக ஓடினர். என் சிநேகிதர்களிடமும் எனக்கு மிகவும் பிடித்தவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு நானும் வாயில் வழியே வெளியே வந்தேன். அங்கும் இங்குமாகப் பார்வையை வீசியபோது எனக்காகக் காத்திருப்பேன் என்று சொன்ன என் தந்தையை எங்கும் காணவில்லை. பாதையிலிருந்து சிறிது ஒதுங்கி அவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். நேரம் ஆகியும் அவர் வராததால், நானாகவே போய் விடுவேன் என்று எண்ணி சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பேன். எனக்குத் தெரிந்தவராகத் தோன்றிய ஒரு நடுத்தர வயது மனிதர் என்னைக் கடந்துசென்றார். யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவர் என்னை நெருங்கிவந்து என் கையைப் பற்றிக் குலுக்கி, “பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.... எப்படி இருக்க?” என்று கேட்டார்.

லேசான தலையசைப்பில் அதை ஆமோத்தித்துவிட்டு, “நீங்க எப்படி இருக்கீங்க?” என்று திருப்பிக் கேட்டேன்.

“நீங்களே பாக்குறீங்களே... அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை... மாஷா அல்லாஹ்!” என்று சொல்லியவாறு மறுபடி எனது கையைக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றார். 

நான் அப்படியே முன்நகர்ந்தேன். பேரதிர்ச்சி! அப்படியே உறைந்து நின்றேன். அடக்கடவுளே! வயல் சூழ்ந்த அந்தப் பாதை எங்கே போனது? எப்படிக் காணாமல் போனது? இவ்வளவு வாகனங்களா? எப்போது, எப்படி இங்கே வந்தன? இவ்வளவு கூட்டமா? எப்போது, எப்படி இந்த இடத்தை இப்படி நிறைத்தார்கள்? இரு புறமும் இப்படியான குப்பைமேடுகள் எப்படி வந்தன? சுற்றியிருந்த பயிரும் பச்சைகளும் எங்கே போயின? அவை இருந்த இடங்களில் பெருங்கட்டடங்கள் அல்லவா இருக்கின்றன? வீதியெங்கும் சிறுவர்கள்! வெளியெங்கும் இரைச்சல்! ஆங்காங்கே வேடிக்கை காட்டுவோர் கூடையில் இருந்து பாம்பை வெளியே எடுப்பது போலப் பல்வேறு வேடிக்கைகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். கோமாளிகளும் பயில்வான்களும் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து ஒரு பேண்டு செட் ஊரில் சர்க்கஸ் நடக்க இருப்பதை அறிவித்துக்கொண்டு சென்றது. ராணுவ வீரர்களைத் தாங்கிய வாகனங்கள் கம்பீரமான தோரணையோடு மெதுவாக ஊர்ந்து சென்றன. தீயணைப்பு வண்டியின் சைரன் சத்தம் அலறுவது கேட்டது. இந்தப் பரபரப்பின் நெளிவுசுளிவுகளுக்குள் நுழைந்து எங்கோ கொழுந்துவிட்டெரியும் தீயை அணைக்க அந்த வண்டி எப்படிச் செல்லும் என்பது ஒரு புதிராகவே இருந்தது. டாக்சி ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்தப் பயணியின் மனைவி உதவி கேட்டுப் பிறரை அழைத்ததை ஒருவரும் பொருட்படுத்தவே இல்லை. 

நான் திகைத்துப்போய் நின்றேன். தலை சுற்றியது. பித்துப் பிடித்தவன்போல ஆனேன். அரை நாளில் இவ்வளவு மாறியிருக்க முடியுமா? காலையில் ஏறிய கதிரவன் இப்போதுதானே இறங்கத் தொடங்கியிருக்கிறான். அதற்குள் இது சாத்தியமா? தந்தைக்கு விடை தெரியலாம். விரைவாக வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆனால்.... வீடு எங்கே? உயரமான கட்டடங்களும் மக்கள் கூட்டமும் மட்டுமே கண்களுக்குத் தென்படுகின்றன! அபூ ஹுதா பாலத்திற்கும் வயல் வெளிக்கும் இடையே இருந்த குறுக்குச்சாலையை விரைவாகக் கடந்தேன். அபூ ஹுதா பாலத்தைத் தாண்டினால் வீடு வந்துவிடும். ஆனால், பெரிய வெள்ளம்போலத் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் வாகனங்கள் வழியை விடுவதாகத் தெரியவில்லை. தீயணைப்பு வண்டியின் சைரன் பெரிய அலறலோடு மெதுவாக நகர்ந்து சென்றது. ‘தீ நாக்கு தனக்கு வேண்டியதெல்லாவற்றையும் ருசித்து விழுங்கட்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் “எப்படா இதைக் கடந்து போகலாம்?” என்று எரிச்சலாக இருந்தது. சாலையோர இஸ்திரிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவன் வந்து என்னை அழைக்கும்வரை நெடுநேரமாக அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். நல்லவேளையாக அவன் வந்தான். வந்தவன் கையை நீட்டித் துணிச்சலோடு சொன்னான், “தாத்தா... வாங்க. நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்.”

*****

(அறபியிலிருந்து ஆங்கிலத்தில் - டெனிஸ் ஜான்சன்-டேவிஸ்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் - தி. மரிய  தனராஜ்)

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
நஜீப் மஹ்ஃபூழ்

நஜீப் மஹ்பூழ் (1911 - 2006) எகிப்து நாட்டைச் சார்ந்தவர். அறபி மொழியில் எழுதக்கூடியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் படைப்பூக்கம் மிக்கவராக விளங்கியவர். 34 புதினங்களையம் 13 சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டுவந்தவர். 1988ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் நகரமயமாக்கம், அது மக்களின் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியே அதிகம் பேசுபவையாக இருக்கின்றன. இது போக, இவருடைய கதைகள் இருத்தலியம் பற்றியும், இறையியல் - மெய்யியல் சார்ந்தும் பேசுகின்றன என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இவரது ‘களவாணியும் நாய்களும்’ என்ற நாவல் தமிழில் சீர்மை வெளியீடாக மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது.

தி. மரிய தனராஜ்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊரைச் சேர்ந்தவர். இளங்கலையில் ஆங்கில இலக்கியமும், முதுகலையில் நாட்டுப்புறவியலும் பயின்றவர். தற்போது நாட்டுப்புறவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். ‘மற்றவர்களின் சிலுவை’, ‘எழுத்தில் எங்க சாமிகள்’ ஆகிய தொகை நூல்களின் தொகுப்பாசிரியர்.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

ELANGO N   18 days ago

நல்ல கதை, நல்ல மொழிபெயர்ப்பு ஆரம்பத்தில் உள்ளே நுழைகையில் புதியனவா/புதுசு என்ற நடைபிறழ்வைத் தவிர்த்து நுழையும் பொழுது பேச்சு வழக்கில் 'புதுசு' போன்ற பேச்சு நடையையும், ஒரு புள்ளியில் காலமாற்றம் நிகழும் போது எழுத்து நடையில் மாற்றி வெளிவரும்போது தொடர்ந்து கடைசி வரியில் திருப்பம் தந்திருந்தால், சலவைப் பையன் மீண்டும் பேச்சு நடைக்கு வந்திருந்தால், கருவும் மொழியும் இணைந்து கதை சொல்லியிருக்கும். வாழ்த்துகள்!

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்இலக்கிய அறிமுகம்குறுங்கதைவேறொரு மழைபிரான்ஸ் காஃப்காரமீஸ் பிலாலிஅறபு இலக்கியம்ஆசிரியர் உரைஇலக்கியக் கூட்டம்டோனி பிரஸ்லர்தொ.பத்தினாதன்பொம்மை கார்கருத்தரங்குகள்அங்கதம்மெல்லிய கோடுகள்சுஜித் லெனின்ரோலாண்ட் பார்த்அசகவதாளம்ஏ ஜி கௌதம்இணைய இதழ்காஃப்காவின் காதுகள்சதுக்கம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சிறுகதைத் தொகுதிஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்கவ்வாலிகவிதையியல்இலக்கிய நிகழ்வுகள்சீர்மைதலித் இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!