தலையங்கம்

புதிய வருகை

தலையங்கம்

ஜார்ஜ் ஜோசப்
30 Apr 2026
3

1

சீர்மை கடந்த ஐந்தாண்டுகளாக மிக முக்கியமான நூல்களைத் தமிழில் வெளியிட்டு வந்திருக்கிறது. அறபி, பாரசீகம் போன்ற மூலமொழிகளிலிருந்து முக்கியமான பிரதிகள் நேரடியாகத் தமிழுக்கு வரத்தாகி வளம் சேர்த்துள்ளன. அரசியல், ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், சினிமா, மெய்யியல், சிறுவர் இலக்கியம் என விரிந்த பொருண்மையில் சீர்மை தொடர்ந்து செயற்பட்டுவருகிறது. தற்போது ஓர் இணைய இதழையும் அதே பெயரில் தொடங்குகிறது. 

அநேக இணைய இதழ்கள் ஏற்கெனவே தமிழ் இலக்கியச் சூழலில் செறிவாக இயங்கிக்கொண்டிருக்க, சீர்மை தன்னால் இயன்ற புது முயற்சிகளோடும் புதியவர்களை எழுதவைக்கும் முனைப்போடும் செயலாற்ற முன்வந்துள்ளது. எண்பதுகளில் எழுத ஆரம்பித்தவர் தொடங்கி தற்போது தொடர்ச்சியாய் எழுதுவோர்வரை பலதரப்பட்ட படைப்பாளிகளிடம் இருந்து இந்த இதழுக்கான பங்களிப்புகள் வந்துள்ளன. முதன்முதலாக எழுதத் தொடங்கியிருக்கும் இருவர் இந்த இதழில் பங்களித்துள்ளனர் என்பது இதழின் நோக்கத்தை முதல் முயற்சியிலே நிறைவேறச் செய்திருக்கிறது. தொடர்ந்தும் இதைச் செய்யவிருக்கிறோம். அதேவேளை, அதிகப்படியான பதிவுகளால் நிரப்பி இதழை வாசிக்க வருபவர்களை மூச்சுமுட்டச் செய்யக்கூடாது என்றும் தீர்மானித்திருக்கிறோம். குறைவான படைப்புகள் இடம்பெறினும், அவை செறிவாக வரும். இப்போதைக்கு ஆண்டுக்கு மூன்றுமுறை மட்டுமே சீர்மை இதழ் வெளியாகும். பங்களிக்கும் அனைவருக்கும் மதிப்பூதியம் தரப்பட வேண்டுமென்றும் முடிவுசெய்திருக்கிறோம். சிறிய அளவிலான தொகையே எனினும், அது எழுதுபவரின் அர்ப்பணிப்புக்கும் நேரத்துக்குமான அடையாள வெகுமதி எனக் கருதுகிறோம்.

சிற்றிதழ் மரபின் அறிதலும் பார்வையும் கொண்டு, காலத்தேவைக்கு ஏற்ப பரவலான இலக்கிய வாசகத் தரப்பைத் தொடும் நோக்கோடு சீர்மை இணைய இதழ் விரிய விரும்புகிறது. அதற்காக, வாசகர்களும் எழுத்தாளர்களும் தங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2

இலக்கியம் சமகாலத்தைக் கருத்தில் கொள்வதைவிட்டு நிறையவே விலகிவிட்டதாகப் படுகிறது. சமகால இலக்கியப் பாடுபொருள்களை முன்னிறுத்தி இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும்கூட எழுத்தாளர்கள் சில கட்சிகளுக்கு நேரடி ஆதரவு தருவதைப் பார்க்கிறோம். தேவையான சமயங்களில் பொதுப் பிரச்சினைகளில் கருத்தாடுவதையும் காண்கிறோம். ஆனால் இந்தச் சீற்றமும் தீர்க்கமான பார்வையும் எழுத்தாளனுக்கே இருக்க வேண்டிய நுட்பம்கூடிய தொலைநோக்கு நிலையும் புனைவிலோ கவிதையிலோ மிகக் குறைவாக வெளிப்படுவது, பொருட்படுத்த வேண்டியச் சிக்கலே.

அதைத் தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்குச் சென்றதற்காகக் கவலைப்பட்டுச் சீற்றங்கொண்ட எழுத்துச் சமூகம் பெண்களுக்கு எதிராகப் பலமடங்கு பெருகிவரும் குற்றங்களையும் லாக்அப் மரணங்களையும் தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான கொடுங்குற்றங்களையும் போதைப் பயன்பாட்டுப் பெருக்கத்தையும் கண்டும் காணாதிருப்பது அவலமானது. மேலும் எந்த அரசும் எழுத்தாளரின் குரலுக்கு அஞ்சுவது போன்ற சூழலும் இங்கில்லை. அதிக பார்வையாளர் கொண்டுள்ள, கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்திப் பிறரை இழிவுபடுத்திப் பேசுபவர்களின் விமர்சனம்மீது அதிகாரத்திற்கு உள்ள அச்சம்கூட, இலக்கியவாதி ஒருவரின் சொல்லுக்கு இல்லையெனில் நாம் விமர்சிப்பதே இல்லை என்றுதானே அர்த்தம். எழுத்தின் பலம் அதிக நபர்களைச் சென்று சேர்ந்தால்தான் உண்டு என்ற கணக்கு, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கிறது.

வெகுசன அரசியலில் அப்பார்வை சரியாகவும் இருக்கிறது. நம்மவர்களும், குறைந்த குற்றங்களைச் செய்யும் தரப்புக்கு ஆதரவு என்று கருதுவதன் காரணமாகவே, பேசவேண்டிய நேரத்தில் அரசியல் விளைவைக் கருதி மௌனித்திருப்பது, இன்னும் ஆபத்தாய் முடிகிறது. அது ஐயோவென்று போகும் செயலல்லவா!

ஞானபீடம் பற்றிக் கூடுதலாகச் சில வார்த்தைகள்:

வாழ்க்கை பற்றிய மிக மேலோட்டமான புரிதல்முதல் ஆழமான பார்வைவரை என ஒரே பிரதியில் பல பரிமாணங்கள் காணக்கூடும். வலுவான செவ்வியல் படைப்பு எனக் கருதப்படும் ஒன்றில்கூட, தட்டையான பகுதிகள் இடம்பெற்றிருக்கலாம். நல்ல இலக்கியம் என்பது மிக லேசான கருவைக்கூட நுட்பத்துடனும் அழகியலுடனும் உணர்வுத்தளத்தைத் தொடும் வகையிலும் சொல்வதாகும். மேலும் பலவாறாக இலக்கியம் எது என்பது பற்றிய வரையறைகள் விரியும்.

பரீட்சார்த்த முறையில் எழும் படைப்புகள் பலவும் கவனிக்கப்பட்டுள்ளன என்றாலும் அது அறிவுச் செருக்குக்குத் தீனிபோல் அமைவதால் கொண்டாடப்படுகிறதே அன்றி, வாசகரை அணுக்கமாக்கி உரையாடும் தன்மையைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. மறுவாசிப்புக்கு உகந்த பிரதிகளாக பெரும்பாலான பரீட்சார்ந்த எழுத்துகள் இருப்பதில்லை. அங்கே பிரதியை வாசகர் தன்வயப்படுத்திக் கொள்வதற்கான தளம் அருகியிருக்கிறது. அதனால் பரீட்சார்த்த புனைவுகளைச் செய்த பலரும்கூட, நடப்பு வாழ்வை எழுதி செவ்வியல் படைப்பை வழங்க வேண்டும் என்ற புள்ளியை நோக்கி நகர்கின்றனர். தமிழிலும் அதற்குச் சான்றுகள் உண்டு.

இந்த முறை ஞானபீட விருது பெற்றுள்ள வைரமுத்து தன் எழுத்துகளில் சொற்பமான அளவிலேதான் இலக்கியத் தன்மையை நெருங்கியிருப்பார். அவருடைய ‘வில்லோடு வா நிலவே’ போன்ற நாவல்கள் பொழுதுபோக்கு வாசிப்புக்கு உகந்தவையே. ஆனால் அவருக்குத் தீவிர இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதை (அப்படியாகக் கருதப்படுவதை) வழங்கியதில் பரவலான ஏற்பின்மையும் கசப்பும் ஏற்படுகின்றன. அத்துடன் அவர்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் பொருட்படுத்த வேண்டியவையாக உள்ளன. தன் கண்களை இறுக மூடிக்கொண்டு விருதுகளின் வழியாகக் களங்கங்களைக் கடக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கக்கூடும். ஒரு சாதாரணனுக்குக் காலம் விமோசன முகமாக இருப்பதுபோல் பிரபலஸ்தர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. அதற்கு வெற்றிகரமான உதாரணங்களும் பல இருப்பதால் பழகிய பாதையிலே சென்றிருக்கிறார் கவிப்பேரரசு. ஆனால் எழுத்தாளர் நக்கீரன் குறிப்பிட்டுள்ளதுபோலச் சுற்றுச்சூழலை நச்சுப்படுத்தும் ஒரு நிறுவனம் வழங்கும் விருதுக்கு இனியும் தமிழ் அறிவுலகம் இத்துணை தூரம் மாரடிக்க வேண்டியதில்லை. அதேபோல் பிரம்மாண்டத் தொகை அறிவிப்பின் வழி தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் வேறு அறிவுப்புகளுக்கும் முகம் கொடுத்துப் பலனில்லை. அதிகப்படியான பணம் ஒன்றில் பிரதானப்படும்போது அங்கே லாபநோக்க ஆதரவு அரசியல் கணக்குகள் சேர்ந்துவிடுவது இயல்பு.

இந்த சச்சரவுகளுக்கு அப்பால், இன்றைய இலக்கியம் யாரைத் தன் இலக்காகக் கொண்டுள்ளது என்பதையும் நோக்கிப் பார்த்தல் வேண்டும். எல்லாவற்றையும் நல்ல இசைக் கோர்வையுடனும் படத்தொகுப்புடனும் கொடுத்தால் ஏற்கத் தயாராக உள்ள பெருந்திரளை நோக்கியே எழுதுகிறோம். அவர்களே எதிர்காலமாக உள்ளனர். அத்திரளுடன் பேசவிரும்பும் நாம், அத்திரளின் பாஷையிலே பேச முற்படுவதும் அவர்களின் ஊடகத்தின் வழி அவர்களைச் சென்று சேர்வதும் காலத்தின் தேவைகளாக உள்ளன. சமூக நலனுக்கு அவசியமான காணொலிகளையும் உரைகளையும் தொடர்ந்து நிகழ்த்துபவர்களை இலக்கியத் தளத்தினர் உற்சாகப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களின் வழி படைப்பைப் பிரபல்யப்படுத்த வேண்டிய தேவை எழுத்தாளர்க்கும் பதிப்பகத்துக்கும் கூடியிருக்கிறது. இக்காலத் தேவையை உணராமல் அப்படியான ஊக்கப்படுத்துதல்களை தன்முனைப்பு என்று பேசுவதும் விமர்சிப்பதும் அவசியம்தானா என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

3

இலக்கியத்துக்கும் அதை எழுதியவரின் வாழ்க்கைக்குமான இடைவெளி என்றுமே இருக்கக்கூடிய ஒன்றுதான். தான் முன்வைத்துப் பேசிய அறங்களின் தொகுப்பாகவும் மதிப்பீடுகளின் உச்சமாகவும் எழுத்தாளர்கள் வாழ்வதில்லை. இலக்கியவாதி தன்னை சோதனைகளுக்கும் மனப்போராட்டங்களுக்கும் முடிவெடுக்க முடியாக் குழப்பங்களுக்கும் உட்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், முழுமையான தீர்மானத்துடன்கூட உறுதிமிக்க படைப்பை வழங்கிவிட முடியும். எழுத்து அவருக்குக் கைப்பழக்கமல்லவா!

மிகவும் சுத்திகரிக்கப்பட்ட வடிவம்தானே நம் முன் படைப்பாக வந்துசேர்ந்திருக்கிறது. பிரதி முழுமைக்கு முன் அதனுள் இருந்த சிந்தனைகளுக்கும் எழுதி அழிக்கப்பட்டவற்றுக்கும் எங்கே மூலம் தேடியலைவது?! அவை கண்டுபிடிக்கப்பட்டால் நாம் நமது பிடித்தமானவர்களின் பட்டியலைப் பெருமளவு மாற்ற வேண்டிவரும். அதேவேளை எழுத்தாளர், செயற்பாட்டாளர், வாசகர், புத்திஜீவி போன்ற பட்டங்களில் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு பிரக்ஞைப்பூர்வமாக உழைப்பையோ உடலையோ சுரண்டுவதும் சுரண்ட முயல்வதும் கண்டித்தக்கது. விழிப்புநிலையில் செய்யப்பட்ட எந்த நேரடிக் குற்றத்துக்கும் ஒப்பானது அது. குற்றச் செயலில் வீழ்ந்திருக்கையில் அறிவுப்பூச்சு எதையும் நியாயப்படுத்திவிடாது.

தொடர் பண்பாட்டுப் பதிவான இலக்கியம் வாழ்க்கையைப் பண்படுத்தலாம், அல்லது பண்படுத்தாமலும் போகலாம். ஆனால், அது தனியொழுங்கில் ஒருவர் செய்பவற்றைப் பற்றிய விழிப்பையும் விளைவு குறித்த பார்வையையும் வழங்கும் வலிமையான சாதனம். அதுவே இதுவரை மானுட விழிப்புணர்வை உயர்த்திவந்துள்ளது. இனியும் வழிநடத்திச் செல்லும்.

****

பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணிபுரிந்தவரும், காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்து வந்தவரும், தனித்துவமிக்க எழுத்தாளருமான அரவிந்தன் அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

நல்ல வாசகரான நிஜந்தன் தன் இலக்கியப் பங்களிப்பை, சமூக வலைத்தளங்களில் படைப்புகள் பற்றி விமர்சிப்பதன் வழியே தொடர்ச்சியாகச் செய்துவந்தார். சமீபத்தில் ‘பிறழ்’ என்ற புதினத்தை எழுதிக் கவனம் பெற்றார். அவரது எதிர்பாரா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. 

இருவருக்கும் அஞ்சலிகள்.

****

தொடர்ந்து பயணிப்போம். எல்லாத் தளத்திலும் ஆரோக்கியமான இலக்கியச் சூழலை வளப்படுத்துவோம். சீர்மை இதழுடன் பங்களிப்பின் வழி உடன் பயணியுங்கள்.

— ஜார்ஜ் ஜோசப்
(பொறுப்பாசிரியர்)

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958








பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Maria Dhanaraj T   2 months ago

வாழ்த்துக்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Mohamed Saakir Mohamed Ibrahim   2 months ago

நல்ல ஆரம்பம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Abdul Latheef   2 months ago

வருக... வருக...

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

சிறுகதைத் தொகுதிபோர்எஸ் அற்புதராஜ்தாரா கேம்பெல்தமிழக அரசியல்விஜய்அதிகாரம்இலக்கிய விமர்சனம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்சாகுல் ஹமீதுரூமி‘கவ்வாலிகிருஷ்ணமூர்த்திம.கேசவன்நறுங்கதைஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்தலித் இலக்கியம்கு இலக்கியன்நானென்பது லெட்டூஸ்கிராமியம்விமர்சனம்மழைவில்பின்னவீனத்துவம்நேர்காணல்அக்காக்கள்நுண்கதைஇலக்கியக் கூட்டம்இக்பால்நாஞ்சில்நாடன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!