நேர்காணல் பதிப்பு

நான் ஏன் பதிப்பிக்கிறேன்?

ம. கேசவன் ஜார்ஜ் ஜோசப்
30 Apr 2026
1

[ம. கேசவன், பொறியியல் பட்டதாரி. இலக்கிய வாசகராக இருந்து பதிப்பாளராகக் களம் கண்டுள்ளார். அலர் பதிப்பகத்தின் மூலமாக தற்போதைய இலக்கியச் சூழலுக்கும் சமூகச் சூழலுக்கும் அவசியமான நூல்களைப் பதிப்பித்துவருகிறார். அல்புனைவு, மொழியாக்கம் உள்ளிட்ட களங்களில் அதிக கவனம் செலுத்திவரும் கேசவன், தனது பதிப்புச் செயற்பாடுகள் தொடர்ந்து எப்படி அமைய வேண்டுமெனத் திட்டமிடுவதில் ஊக்கமாக இருக்கிறார். நாடெங்கும் நிகழும் இலக்கிய நிகழ்வுகளிலும் திரையிடல்களிலும் கலந்துகொள்கிறார்.]

(நேர்கண்டவர்: ஜார்ஜ் ஜோசப்)

உங்கள் வாசிப்புக்கும் பதிப்பிற்குமான உறவு?
நான் பதிப்பகம் சார்ந்து செயற்படத் தொடங்கியதற்கு நூல் அறிமுகங்கள், இலக்கியக் கட்டுரைகள், பதிப்புசார்ந்த நூல்களின் வாசிப்பு ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைந்தன. வாசிப்பின் வழியே பதிப்புலகைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் மெதுவாக வளர்ந்தது. குறிப்பாக, பெருமாள்முருகன் எழுதிய ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ என்னும் நூல், என்னுள் பதிப்பார்வத்தைத் தூண்டிய முக்கியமான திருப்பமாக அமைந்தது. அந்நூல், பொதுவாசகருக்கும் பதிப்புணர்வு ஏன் அவசியம் என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன், பதிப்பின் அடிப்படைக் கூறுகள், வெவ்வேறு பதிப்புகளின் தனித்துவங்கள், பதிப்பு நுட்பங்கள் போன்றவற்றையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வகையில், வாசிப்பு என்பது எனக்கு ஒரு அறிவுசார் அனுபவமாக மட்டுமின்றி, பதிப்புலகில் ஈடுபடத் தூண்டிய செயற்பாட்டுச் சக்தியாகவும் மாறியுள்ளது.

பதிப்புத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
பதிப்புத்துறைக்கு நான் வந்த விதம் ஒரு திட்டமிட்ட முடிவாக இல்லாமல், வாசிப்பின் வழியாக உருவான ஒரு ஆவலின் தொடர்ச்சியாக அமைந்ததாகும். நீண்ட நாள்களாகவே பதிப்பில் இல்லாத முக்கியமான நூல்களை மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘அந்நியமாதல்’, சுப்பிரமணிய பாரதியின் புதுச்சேரி வாழ்க்கையை மையப்படுத்தி எழுத்தாளர் ஆதவன் எழுதிய ‘புழுதியில் வீணை’ என்ற நாடகம், மேலும் பாரதியை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பேராசிரியர் பாரதிபுத்திரன் எழுதிய ‘தம்பீ, நான் ஏது செய்வேனடா?’ போன்ற நூல்கள் நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லை. இந்நூல்களை மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தபோதிலும், அவற்றை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

அப்படியான சூழலில், நான் நீண்ட நாள்களாகத் தேடிக்கொண்டிருந்த பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் அவர்களைப் பற்றிய நூலின் தொகுப்பாசிரியர் எஸ். அற்புதராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நூலைக் கேட்டபோது, அவரிடம் ஒரே ஒரு பிரதிதான் இருப்பதாகச் சொன்னார். உடனே, அவர் ஒப்புதல் அளித்தால் அந்த நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்தேன். அவர் அதற்கு மனமுவந்து ஒப்புதல் அளித்தார்.

நண்பர்கள் அமந்தா, திருமூர்த்தி, விஜய், மோகன்ராஜ், இராக்கண்ணன், விக்னேஷ் ஆகியோரின் துணையுடன், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த அந்த நூலை, மிகக் குறுகிய காலத்தில் பதிப்புசார்ந்த அனைத்து பணிகளையும் நிறைவுசெய்து வெளியிட முடிந்தது. எங்கள் முதல் வெளியீடாக, ஆல்பர்ட் அவர்களின் நினைவு தினமான ஏப்ரல் 26 அன்று அந்த நூலை மறுபதிப்புச் செய்து வெளியிட்டோம். அந்த ஒரு முயற்சியே என்னைப் பதிப்புத்துறைக்குள் கொண்டுவந்தது.

அபுனைவு நூல்களை மையப்படுத்தி தொடர்ந்து வெளியிட்டு வருவதற்கான பின்னணி?
என் வாசிப்பு இயல்போடும் அறிவார்வத்தோடும் தொடர்புடையது அது. என்னுடைய வாசிப்பு பெரும்பாலும் அபுனைவு நூல்களாக அமைந்துள்ளதால், அந்த வகை நூல்களின் அவசியமும் சமூகப் பயனும் எனக்குள் தெளிவாகப் பதிந்துள்ளது.

அதே நேரத்தில், நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாமல் போயுள்ள நாவல்கள், சிறுகதைகள் போன்ற முக்கியமான இலக்கியப் படைப்புகளையும் மீண்டும் வாசகர்களிடம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. குறிப்பாக, மறுபதிப்புச் செய்யப்பட வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, கன்னட எழுத்தாளர் லங்கேஷின் கதைகள் (தமிழில்: இறையடியான் மொழிபெயர்ப்பு), ஒரிய எழுத்தாளர் ரிஷிகேஷ் பாண்டாவின் ‘ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்’ (தமிழில்: தமிழ்நாடன் மொழிபெயர்ப்பு), த.நா. குமாரசாமி மொழிபெயர்த்த நூல்கள் போன்றவை நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாதவை. இவ்வாறான முக்கியப் படைப்புகளை மறுபதிப்புச் செய்வதன் மூலம், மறைந்துபோகும் இலக்கியச் செல்வங்களை மீண்டும் வாசிப்பு உலகிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் முயற்சியின் மைய நோக்கம்.

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம், நெஞ்சம் மறப்பதில்லை, சகாயம் செய்த சகாயம், கே. அனந்த நம்பியார் போன்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பதிப்பிப்பதன் நோக்கம்?
மேற்குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான படைப்புகள் ஆகும். இந்நூல்கள் நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்ததால், அவற்றை மறுபதிப்புச் செய்வது அவசியமாகக் கருதப்பட்டது. இந்த முயற்சியின் மைய நோக்கம் வெறும் மறுபதிப்பு அல்ல; மறக்கப்பட்ட ஆளுமைகளையும் அவர்களின் பண்பாட்டு, சமூகப் பங்களிப்புகளையும் இன்றைய தலைமுறைக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதாகும். இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய முன்னுதாரண மனிதர்கள் இவர்கள்.

பேராசிரியர் ஆல்பர்ட் கலை - இலக்கியச் செயற்பாடுகளுக்காகச் சிறப்பாக அறியப்பட்டவர். குன்றக்குடி அடிகளார் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய ஆன்மிகத் தலைவர். சகாயம் சமரசமற்ற நேர்மையின் அடையாளமாகப் பொதுமக்கள் மத்தியில் நிலைத்திருப்பவர். கே. அனந்த நம்பியார் இரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய உறுதியான குரல். இவ்வாறாக, தத்தம் துறைகளில் முன்மாதிரிகளாக வாழ்ந்த இவர்களைப் பற்றிய பதிவுகள் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும், புதிய தலைமுறைக்கு அவர்கள் வாழ்வும் பணியும் சென்றடைய வேண்டும் என்பதற்கும்தான் இந்த நூல்கள் மறுபதிப்புச் செய்யப்பட்டன.

'பனைக்கதைகள்' போன்ற பெருந்திட்டத்தை முன்னெடுக்கத் தோன்றியது எப்படி? அத்திட்டம் எந்நிலையில் உள்ளது?
மிகவும் இயல்பான வாசிப்பு அனுபவத்திலிருந்தே உருவானது. 2019ஆம் ஆண்டில் பனை ஆய்வாளர் காட்சன் சாமுவேல் நடத்திய ‘பனை இரவுக் கொண்டாட்டம்’ என்ற இரண்டு நாள் நிகழ்வில் பங்கேற்றதே பனை குறித்த ஒரு முழுமையான அறிமுகத்தை எனக்குக் கொடுத்த முக்கிய தருணமாக அமைந்தது. அந்த அனுபவம் தொடர்ந்து பனை குறித்து வாசிக்கவும், தகவல்களைச் சேகரிக்கவும் என்னைத் தூண்டியது.

பின்னர் சிறுகதைகள் வாசிக்கும்போது, பல கதைகளில் பனை தொடர்பான நுட்பமான குறிப்புகள், பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கைச் சுவடுகள் இடம் பெற்றிருப்பதைக் கவனித்தேன். இதுவே அவற்றைத் தனியாகத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அந்தச் சிறிய முயற்சிதான் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்ட ஒரு விரிவான தொகுப்பாக வளர்ந்துள்ளது. இந்தப் பணியில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் அதங்கோடு அனிஷ்குமார் அவர்களும் என்னுடன் இணைந்து ஊக்கமாகச் செயற்பட்டுவருகிறார்.

தற்போது, இந்தத் திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. சுமார் 1300 பக்கங்கள் கொண்ட, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய இரண்டு தொகுதிகளாக இது உருவாகியுள்ளது. அடுத்த மாதத் தொடக்கத்தில் முன்பதிவுத் திட்டத்தை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தத் தொகுப்பின் முக்கிய நோக்கம், புனைகதைகளின் ஊடாக பனை குறித்து ஒரு விரிவான உரையாடலை உருவாக்குவது. அதேசமயம், இது அதிகமான வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக விலையடக்கப் பதிப்பாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்ப் பதிப்புச் சூழல் இளைஞர்களுக்கு ஏற்ற களமாக உள்ளதா?
தமிழ்ப் பதிப்புச் சூழல் இளைஞர்களுக்கு மிகவும் ஏற்ற களமாகத்தான் இன்று உருவாகியுள்ளது. ஏற்கெனவே பல இளைஞர்கள் பதிப்புத் துறையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதும் இதற்குச் சான்றாகும். இன்றைய சூழலில், பதிப்புத் துறையில் இளைஞர்கள் முன்னேற வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், வெறும் ஆர்வம் மட்டும் போதாது. உள்ளடக்கத் தேர்வில் தெளிவு, வாசகர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன், சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் ஆகியவை மிகவும் அவசியமானவை. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகச் சில முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.

முயற்கூடு பதிப்பகம் – மலிவுப் பதிப்புப் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கிறது.
வான்கோ புக்ஸ் – மொழிபெயர்ப்பு நூல்களின் மறுபதிப்பில் கவனம் செலுத்துகிறது.
வாசகசாலை – புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தருகிறது.
இறைவி பதிப்பகம், மீ வெளியீடு, ழகரச்சிறகு பதிப்பகம் போன்றவை தங்களுக்கென்று தனித்துவமான பார்வையோடு செயற்பட்டுவருகின்றன. இந்தப் பதிப்பகங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தமிழ்ப் பதிப்புத்துறை இளைஞர்களுக்குத் திறப்பாகவும் அவர்களின் முயற்சிகளை வரவேற்கும் ஒரு வளமான சூழலாகவுமே இருக்கிறது எனத் தெரிகிறது.

நீங்கள் பதிப்புத்துறையில் எதிர்காலத்தில் சாதிக்க விரும்புவது அல்லது அடையவேண்டிய இடம் என நினைப்பது எதனை?
பதிப்புத்துறையில் நான் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறேன். இந்தத் துறையில் நுழைந்து ஒரு வருடமே ஆகிறது. இதுவரை ஐந்து நூல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறோம். எனவே, உள்ளடக்கத் தேர்வு, பிழையில்லாப் பிரதியமைப்பு, அச்சுத் தொழில்நுட்ப நுணுக்கங்கள், சந்தைப்படுத்தல் போன்ற பல துறைகளில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்று உணர்கிறேன்.

எதிர்காலத்தில், பிழையற்ற, உயர்தரமான நூல்களை வெளியிடுவது என் முதன்மை நோக்கமாகும். அதேசமயம், பதிப்பிக்கும் நூல்கள் அச்சு வடிவில் மட்டுமல்லாமல் மின்னூல் (e-book), ஒலிநூல் (audiobook) போன்ற அனைத்து வடிவங்களிலும் வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் முயற்சி செய்ய விரும்புகிறேன். மேலும், காலத்தால் மறக்கப்பட்ட முக்கியமான நூல்களை மீண்டும் வாசகர்களிடம் கொண்டுவருவதும், புதிய சிந்தனைகளைக் கொண்ட படைப்புகளை ஆதரிப்பதும் எனது பதிப்புப் பயணத்தின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன.

ஒரு வட்டாரத்தின் நுண்வரலாறுகளை ஒரு பதிப்பாளர் ஏன் கவனப்படுத்தவேண்டும்?
ஒரு வட்டாரத்தின் நுண்வரலாறுகளை ஒரு பதிப்பாளர் கவனப்படுத்துவது மிக அவசியமான பணியாகும். அறிவார்ந்த துறைகளில் ஈடுபடுபவர்கள் ஆவணப்படுத்துதலின் தேவையை முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில், பதிப்பித்தல் என்னும் அறிவுச் செயற்பாட்டில் ஈடுபடும் பதிப்பாளர்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு வட்டாரத்தின் நுண்வரலாறு என்பது பெரிதாகக் கவனிக்கப்படாத ஆளுமைகள், மறைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள், இடங்கள், தெருக்கள், கலாச்சாரச் சுவடுகள் போன்ற பல கூறுகளை உள்ளடக்கியது. குறிப்பாக திருச்சியைப் பொருத்தவரை, ஆவணப்படுத்தப்படாமல் உதிரிகளாகச் சிதறிக் கிடக்கும் நுண்வரலாறுகள் ஏராளமாக உள்ளன. இவை முறையாகத் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும்போது, எதிர்காலத்தில் புதிய வரலாற்றுப் புரிதல்களுக்கும், வரலாற்றுப் புனைவுகளுக்கும் வளமான அடித்தளமாக அமையும்.

தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவலாகக் கருதப்படும் மோகனாங்கி, 17ஆம் நூற்றாண்டில் திருச்சியையும் தஞ்சையையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கர், தஞ்சையை ஆட்சி செய்த விஜயராகவ நாயக்கர் ஆகியோருக்கிடையே நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு எவ்வாறு புனைவாக மாறுகிறது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் கிடைக்கிறது.

இதேபோல், திருச்சியை மையப்படுத்தி இன்னும் பல வரலாற்று நாவல்கள் உருவாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது. நகரத்தின் தெருக்கள், பகுதிகள், பழமையான கட்டிடங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றை மட்டுமே மையமாகக் கொண்டுகூட தனித்தனி நூல்கள் எழுதக்கூடிய அளவுக்கு வரலாற்றுச் சான்றுகள் இங்கு உள்ளன. இதற்கு ஒப்பான முயற்சியாக, தஞ்சையின் தெருக்களின் வரலாற்றைப் பதிவுசெய்த எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின் ‘தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இதனால், ஒரு பதிப்பாளர் நுண்வரலாறுகளைப் பதிவுசெய்வது என்பது வெறும் பதிப்பு நடவடிக்கையாக இல்லாமல், மறைக்கப்பட்ட சமூக நினைவுகளை மீட்டெடுக்கும் பணியாகவும், எதிர்கால அறிவியல் மற்றும் இலக்கியச் சாத்தியங்களை உருவாக்கும் அடித்தளமாகவும் அமைகிறது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ம. கேசவன்

திருச்சியில் வசித்துவருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், ‘அலர் பதிப்பகம்’ என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்திவருகிறார். நண்பர்களோடு இணைந்து ‘டோடோ புக்ஸ்’ என்ற பெயரில் ஆன்லைன் நூல் விற்பனை நிலையமும் நடத்திவருகிறார். திருச்சியில் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். நவீன இலக்கியம், சூழலியல், பதிப்பியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர். தொடர்புக்கு: kesavan2510@gmail.com

ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958



1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Amanta VG   2 months ago

Starting young in Tamil publishing is not easy and commendable. Hope your work inspires more youngsters to explore this space, Kesavan. More respect and power to you❤️

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

இணைய இதழ்ழ என்ற பாதையில் நடப்பவன்கிராமியம்அசகவதாளம்இலக்கிய விமர்சனம்வேறொரு மழைபிரான்ஸ் காஃப்காகிருஷ்ணமூர்த்திசந்துரு மாயவன்ம.கேசவன்ஆய்வுஜார்ஜ் ஜோசப்ஆலடியான்கருத்தரங்குகள்சீர்மைசாய் வைஷ்ணவிகவிதைகள்டோனி பிரஸ்லர்நானென்பது லெட்டூஸ்திருச்சி வாழ்க்கைதலையங்கம்ஆசிரியர் உரைஇலக்கிய அறிமுகம்சதுக்கம்ராஜ் கௌதமன்அறபு இலக்கியம்ஒளிரும் சொற்கள்அப்பாவின் குழிஎழுத்தாளரின் மரணம்இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!