கட்டுரை

ஹம்பிப் பயணம்

சிறகன்
02 Sep 2026
0

வரலாற்றை வாசித்தல் என்பது 9ஆம் வகுப்பு முதலே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அப்போதிருந்தே ஹம்பி என்கிற பெயர் எங்கேனும் அடிபட்டுக்கொண்டே இருக்கும். பத்தாம் வகுப்போடு சமூக அறிவியல் பாடம் முடிந்தது. அத்தோடு ஹம்பி என்கிற பெயரும் என்னளவில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அண்ணண் பழனிவேளின் நட்புக் கிடைத்தது. அவர் தான் நீண்ட நாட்களாக எனக்குள் மறைந்து போயிருந்த அந்த ஹம்பி என்கிற வார்த்தையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தார் (கூடவே அவர் சொன்ன ஹலபீடு என்கிற வார்த்தை. அது ஒரு மாதிரி அழகாக சொல்வார்). முன்னரே ஹம்பி பயணத்திற்குத் திட்டமிட்டு, பின் காவிரி நீர்பிரச்சனையால் போக இயலாத சூழல்.

இந்தப் பயணம் ஒரு தனி அனுபவம். இதை இப்படியாக வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

1.திருவண்ணாமலை - ஹம்பி

2.ஹம்பி-ஹலபீடு

3.ஹலபீடு-ஸ்ரீரங்கப்பட்டணம்

நண்பர் நிரஞ்சனும் நானும் 6 நாட்கள் செல்வதற்கான திட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டிருந்தோம். இறுதியாக இப்படி ஒரு திட்டத்தைப் போட்டோம்.

திருவண்ணாமலையிலிருந்து ஹொசபேட் சென்று முதல் நாள் தங்குதல். இதன் தொலைவு 530 கி.மீட்டர்கள். அங்கிருந்து விஜயபுரா என இப்போது அழைக்கப்படும் பிஜப்பூர் (2014இல் பேர் மாற்றம் செய்யப்பட்டது) சென்றுவிட்டு அங்கிருந்து கல்புர்கி, பிடார் சென்று ஆந்திரா வழியாக ஊர் வரலாம் என்பதுதான் திட்டம். ஆனால் எப்போதும்போல நானோ, ‘ஏங்க 5 நாள்ல பிடார் வரைக்கும் போய்ற முடியுமா?’ எனக்கேட்க, ‘முதல்ல ஹம்பி போய்ட்டு ரெண்டு நாள் இருப்போம். அப்புறம் முடிவு பண்ணலாம்’ என பதில் வந்தது. 

திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி - ஒசூர் - பெங்களூரு நைஸ்ரோடு - டும்குர்ரோடு - சித்ரதுர்கா - ஹம்பி என இதுதான் பாதை. கடல்மட்டத்திலிருந்து (பறவை நோக்குபவர் எப்போதும் கடல்மட்டத்திலிருந்து நாம் என்ன உயரத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துவைப்பது மிக முக்கியம்) 150மீட்டர் என்று தொடங்கி பெங்களூருவில் 900மீட்டர் என கடல்மட்டத்திலிருந்து மேலே ஏறுகிறோம் என்பதைத் தெரியாமலே செல்கிறது இந்தப் பாதை. அதுதான் தக்காணபீட பூமி. நைஸ் ரோட்டில் டும்குர் சாலையை அடைவதற்கு, இருசக்கர வாகனங்கள் ஒருமுறை செல்ல 100 ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்தச் சாலையில் கவனிக்கவேண்டிய விசயங்கள் இரண்டு. இது சிமெண்ட் சாலை என்பதால் வாகனங்கள் குதிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அப்படியாக இல்லாமல் சீராக செல்ல முடிந்தது. இந்தச் சாலையில் சராசரி வேகம் 80கிமீ. வழியில் எங்கும் நிறுத்தக்கூடாது என ஆங்காங்கே தகவல் பலகைகள்.

500 கி.மீ. தூரத்திற்கான முதல்நாள் பயணம். மிகப் பொறுமையாவே பயணித்தோம். சித்ரதுர்காவிற்கு முன்னர் மதிய உணவு. அங்கிருந்து ஹம்பி போய் சேர்ந்தோம். காலை 6 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து கிளம்பியது. ஹம்பிக்குள் நுழையும்போது நேரம் மாலை 6.30க்கு மேல் ஆகியிருந்தது. நியு ஹம்பி என பெயர்பலகை வைக்கப்பட்டிருந்த நுழைவு வாயிலிடத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தை வழிமறுத்தார்கள். என்னவோ ஏதோவென கொஞ்ச நேரத்தில் பதட்டமாகிவிட்டது. சார், ரூம் சார், ரூம் சார், 500 சார் எனப் பெருங்கூட்டம். ‘இல்லைங்க நாங்க பாத்துக்குறோம்’னு சொன்னாலும் விடாமல் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார்கள். இறுதியில் ஒருவரிடம் ரொம்ப நேரமாக கிராக்கி செய்து ஒரு வீட்டில் தஞ்சமடைந்தோம். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு. இரண்டுநாட்களுக்கு 1500 ரூபாய்.

இரவு உணவுக்காகச் சென்றோம். ஓட்டலில் தமிழ்ப் பேசினார்கள். நியுஹம்பியில் 90% சதவீதம் தமிழர்கள்தான். அங்கே இருந்த முருகன் கோயில் பற்றி ஒருவரித்தில் கேட்டுக்கொண்டிருந்தோம். தன்னுடைய முன்னோர்கள் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் சேலம் எடப்பாடியிலிருந்து இங்கு வந்ததாகக் கூறினார். எங்கும் தமிழர்களின் பாதச்சுவடு. 5 ரூபாயில் டீவிற்றார்கள். சிறிய காகிதக் கோப்பையில் வழங்கினார்கள். சிறப்பு.

அடுத்தநாள் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி ஹம்பியைச் சுற்றிக்கொண்டிருந்தோம். விருப்பாக்‌ஷி கோயில் அதனைச் சுற்றியிருக்கும் இடங்களெனச் சுற்ற ஆரம்பித்தோம். அனைத்துமே ஆச்சர்யம் தருபவையாக இருந்தன. அக்காலத்தின் பிரம்மாண்டங்கள் என ஒருபுறம், மறுபுறம் எவ்வளவு மக்களின் உழைப்பை எடுத்திருக்கும், எவ்வளவு சுரண்டல்கள் இருந்திருக்கும் என இருவாறான மனநிலை.

விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியிருந்த ஹம்பி, துங்கபத்ரா ஆற்றையொட்டி செழிப்பாக இருந்த ஒரு நகரெனப் புரிந்துகொள்ள முடிந்தது. கோயில்கள், கடைவீதிகள், விவசாய நிலங்களென அனைத்தையும் உள்ளடக்கிய நகரம். ஒரு இடத்தில் படித்தேன், அந்தக் காலத்தில் இந்தியாவின் செழிப்பான பணக்கார நகராக விளங்கியதாகச் சொல்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் ஹம்பி கொஞ்சம் கொஞ்சமாக சுல்தானியர்களின் ஆட்சியில் அழிக்கப்பட்டு, இன்றைக்கு இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன.

வெளிநாட்டவர்களின் பங்களிப்பின் காரணமாக ஹம்பி நகரத்தை ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றுகின்றனர். ஹம்பியில் இருக்கும் புகைப்படக் கண்காட்சியினுள் வைக்கப்பட்டிருக்கும் அலெக்ஸாண்டர் கிரின்லாவின் புகைப்படங்கள் 1856இல் எடுக்கப்படுகின்றன. அதை 1980 வரை வெளியிடாமல் மறைக்கிறது இங்கிலாந்து அரசு. 1990களின் காலகட்டத்தில் ஆராய்ச்சியாளர்களிடத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பியின் இடிபாடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களாக…

1. விருபாக்‌ஷா கோயிலும் அதனைச் சுற்றிச் செயல்பட்ட கடைவீதிகளும்

2. கிருஷ்ணர் கோயிலும் அதனைச் சுற்றிச் செயல்பட்ட கடைவீதிகளும்

3. நரசிம்மர் கோயில

4. அச்சுதராயா கோயிலும் அதனைச் சுற்றிச் செயல்பட்ட கடைவீதிகளும்

5. விட்டாலா கோயிலும் அதனைச் சுற்றிச் செயல்பட்ட கடைவீதிகளும்

6. கற்தேர்

7. ஹேமகுதா மலையும் நினைவுச்சின்னங்களும்

8. இராமர் கோயில்.

9. புத்தர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பது; புத்தரை விஷ்ணுவின் வடிவாக வழிபடுவது.

10. கொண்டாராமா நினைவுச்சின்னங்களும் ஆற்றங்கரை நினைவுச்சின்னங்களும்

11. மஹாநவமி கொண்டாட்டங்களுக்கான இடம். பொதுமக்கள் கூடும் பகுதி, அறிவார்ந்த மக்களுக்கான பகுதி (அனைத்தும் தற்போது இடிபாடுகள் தான்)

12. பல்வேறான கட்டிட அமைப்பைக் கொண்ட நீர்நிலைகள்.

13. இந்தோ-இஸ்லாமிய வகையான கட்டிடங்கள்.

14. பல்வேறு படிக்கட்டுகளைக் கொண்ட நீர்நிலைகள்.

15. யானைகளைக் கட்டி வைக்கும் பகுதி.

16. சமண நினைவுச்சின்னங்கள்.

17. இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள்.

18. அஹமத் கானின் கல்லறை.

எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதோடு ஹம்பியில் தவறவிடக்கூடாத கூடிய முக்கிய இடமான ஆசியாவின் முதல் இந்தியக் கரடிகளுக்கான சரணாலயமான தரோஜி இந்தியக் கரடிகள் சரணாலயம். இங்கு 14 கி.மீட்டர்கள் காட்டிற்குள் அழைத்துச் சென்று கரடிகளின் வாழ்விடங்களுக்குள்ளாக அவற்றைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறலாம். இதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஐந்து பேர் ஒரு வண்டியில் பயணம் செய்யலாம். நானும் நிரஞ்சனும் சென்றோம். எங்களுக்கு முன்னர் நெதர்லாந்தைச் சேர்ந்த 70வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருந்தார். இன்னும் இரண்டு பேர் வந்தால் கிளம்பலாம் அல்லது ஒருவருக்கு 500 ஆகும் என்றார் வினோத் என்கிற 22 வயது தம்பி ஒருவர். அவர் அங்கே நேச்சுரலிஸ்ட் கைடாகச் செயல்படுகிறார். மிகச்சிறப்பான இயற்கை அறிவும் பறவைகளின் மீது நாட்டம் கொண்டவராக இருக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே ஒரு மஹாராஷ்டிரப் பதிவெண் கொண்ட கார் வந்தது. ஆண் பெண் என இருவர்கள் இருந்தார்கள். பெரு நிம்மதி. வண்டியை எடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் பேச ஆரம்பித்து, நானும் ஒரு பறவைகளைக் கவனிக்கக்கூடிய ஒருவன் என அறிமுகம் ஆனேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு காவல்கோபுரத்தின் மீது ஏற வைத்தார்கள். அரை மணிநேரத்திற்குப் பிறகு தூரத்தில் ஒரு குன்றில் ஆறு கரடிகளைப் பார்க்க முடிந்தது. அந்த ஆறு கரடிகளும் சிறிதுநேரத்தில் நாங்கள் நின்றுகொண்டிருந்த காவல்கோபுரத்தின் கீழாகச் சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினோம். போகும் வழியில் வாய்ப்பிருந்தால் சிறுத்தைகளைப் பார்க்கலாம் என்றார் வினோத். ஆனால் பார்க்க இயலவில்லை. மீண்டும் சரணாலயத்தில் இறக்கிவிட்டார்கள். போகும் போது ‘அனுபம்’ என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அந்த மகாராஷ்டிரக்காரர். இன்ஸ்டாவில் என்னுடைய ஐடி கேட்டு பாலோ செய்தார். அப்போதே திறந்து பார்த்தேன். அவர் ஒரு சரோட் இசைக் கலைஞர் எனத் தெரிந்தது. அறைக்குச் சென்று அவரின் பக்கத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஒரு மாஸ்டர்.

ஹம்பிப் பயணம் பலவிதமான பயண அனுபவத்தைக் கொடுத்தவாறே இருந்தது. இந்த வரலாறு நமக்குப் புரியவைப்பதுதான் என்ன? ஹம்பியிலேயே 6 நாட்களும் இருந்துவிடலாமா என தோன்ற வைத்தது. ஆனால் பயணப்பட வேண்டும். பிஜப்பூர் சென்றுவர நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் வேறு எங்கேனும் திட்டத்தை மாற்றலாம் என யோசித்தோம். ஹம்பியைப் போலவே மற்றொரு ஆச்சர்யமான துவாரசமுத்திரத்திற்குச் செல்வோம் எனக் கிளம்பினோம். அதாவது ஹலபீடு நகரத்திற்குக் கிளம்பினோம்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தோம். பெட்டியை வண்டியில் மாட்டலாம் எனக் கதவைத் திறந்தால், அறையின் முதலாளி வாசலில் அமர்ந்திருந்தார். ‘ஹப்பாடா வெளிய வந்துட்டானுங்க’ என்றாவாறே ஒரு சிரிப்பைச் சிரித்தார். நானும் அதற்கேற்றவாறே, ‘இதோ கிளம்பிட்டோம் கவலப்படாதீங்க’ என்றேன். திரும்பவும் ‘ஹீ ஹீ’ என்றார்.

மெல்லமாக வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். போகும் வழியில்தான் அஹமத் கானின் கல்லறை. துங்கபத்ரா அணையைக் கடந்துகொண்டிருந்தோம். எத்தனை எத்தனை வரலாறு. ஆறுகள்தானே நாகரீக வரலாற்றின் சாட்சியங்கள். இவர் ஆட்சி செய்தார் அவர் ஆட்சி செய்தார் எனக் கூறி மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான ஆட்சியாளர்கள் என்னவோ ஆறுகள்தானே! 

ஒரு பயணி என்பவன் யார்? இடமோ வழியோ ஊரோ மக்களோ வரலாறோ எல்லாவற்றையும் உள்வாங்கி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும், வானத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு பறவையைப் போல உணர்பவன்தானே.

மாலை 4 மணியளவில் ஹலபீட்டை அடைந்திருந்தோம். சாலையோரம் காய்கறி விற்பனை செய்துகொண்டிருந்த இஸ்லாமிய சகோதரர் ஒருவரிடத்தில் எங்கே தங்கலாம் எனக் கேட்டேன். தங்கும் இடங்கள் இங்கே குறைவு. பெட்டி எல்லாம் கட்டிக்கொண்டு ஏலியன் போல உடைகளை மாட்டிக்கொண்டிருந்ததால் உங்கள் வசதிக்கு என ஆரம்பித்தார், ‘அய்யா எங்களுக்குச் சாதாரணமாகப் போதும்’ என இடைமறித்தேன் (உருதுமொழியில் பேசினேன்). அருகிலே இருக்கும் ஒரு இடத்தைக் காண்பித்தார். ‘பைக் விடுவதற்கு இடம் உண்டு. கேமரா வசதியும் இருக்கிறது. உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்’ என்று காண்பித்தார். அவர் சொன்னது சரி தான். பாதுகாப்பான இடம்.

பொருட்களை எல்லாம் அறையில் வைத்துவிட்டு ஹொய்சாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றடைந்தோம். கட்டிடக்கலையில் பிரம்மாண்டத்தின் உச்சம், நேர்த்தி என்று என்ன வார்த்தை சொன்னாலும் தகும். ஹொய்சாளர்களின் கலை வெறி மிகத்தெளிவாகத் தெரிந்தது. எவ்வளவு சிறிதாயினும் அதிலும் ஒரு நேர்த்தி என அவ்விடம் முழுக்க ஒரே ஆச்சர்யம். கோயிலின் உள்ளே விகாரத்திலும் சிலை வேலைப்பாடுகள். அப்படியே கோயிலின் அருகே இருக்கும் அருங்காட்சியகம். அங்கும் சிலைகள். அதைத் தாண்டி தனித்து நின்றிருக்கும் பாகுபலியின் சிலை. எல்லாம் பார்த்துமுடித்துவிட்டு வெளியே வருகையில் ஒரு பத்து சாம்பல் இருவாச்சி (Indian Gray Hornbill) பார்த்ததில் இன்னும் ஆனந்தமாகிவிட்டது. அங்கிருந்து கிளம்பி கேதேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அதே பிரம்மாண்டம். அங்கிருந்து புறப்பட்டு அறைக்கு வரும் வழியிலேயே சமணர் கோயில். ஆனால் பூட்டப்பட்டிருந்தது. ‘காலை 8 மணிக்கு வாருங்கள் திறந்துவிடுவோம்’ என்றார் ஒருவர்.

சமணர் கோயில் என்றாலே ஓர் ஈர்ப்பு. ஒரு பேரமைதி. துவாரசமுத்திரத்தில் இருக்கும் கலை வேலைப்பாடுகளில் எல்லாம் சமணர்களின் கைவண்ணம் இருப்பதாகவே தோன்றியது எனக்கு. கேள்விகளும் சந்தேகங்களும் தானே புதிய திறப்புகளுக்கு நுழைவாயில்.

அடுத்தநாள் காலை சரியாக எட்டுமணிக்கு சமணர் கோவில் சென்றுவிட்டோம். ஒரே கல்லில் செய்யப்பட்டமூன்று தீர்த்தங்கர்களின் சிலைகள். பார்சவநாதர், சாந்திநாதர் மற்றும் ஆதிநாதர் சிலைகள். ஹம்பியைத் துவார சமுத்திரத்திற்கு விடைகொடுக்க வேண்டிய நேரம். அடுத்து எங்குச் செல்வதென சந்தேகமே இல்லை. திப்புவின் நீண்ட உறக்கத்தின் அமைதியை மெளனமாகக் கேட்ட, ஸ்ரீரங்கப்பட்டணம்தான்!

ஹம்பிப் பயணத்தின் திட்டம் ஒன்றாகவும், நடந்தது ஒன்றாகவும் இருந்தது. ஹம்பியிலிருந்து பிஜப்பூர் சுல்தானைப் பார்த்துவிட்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் பிஜப்பூர் சுல்தானுக்கும் ஆலம்கிர் ஒளரங்கசேப்பிற்கும் இடையே நடைபெற்ற சண்டை சுவாரஸ்யமானது. கத்தியின்றி இரத்தமின்றி நடைபெற்ற சண்டை என்றே சொல்லலாம். பிஜப்பூரைப் பிடிப்பதற்காக படை பரிவாரங்களுடன் சென்ற மாமன்னர் ஒளரங்கசேப்பிடம் மிக எளிதில் சரணடைந்துவிடவில்லையாம் ஷா மன்னன். என்னிடம் சரண் அடைந்துவிடு என்றதுற்கு அதெல்லாம் ஆகமுடியாது, உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று ஒரு சிறு நகரத்து மன்னன் எவனாவது சொல்வானா? ஆனால் ஷா ஆலம் ஒளரங்கசேப்பிடம் சொல்லியிருக்கிறார். சொல்லிவிட்டுக் கோட்டையை மூடிவிட்டார்கள். ஒளரங்கசேப்பும் சண்டை எல்லாம் வேணாம், உணவு மொத்தமாகத் தீர்ந்து அவர்களாக வெளியே வரட்டும். நாம் கூடாரங்களை அமைத்துத் தங்குவோம் என்று சொல்லிவிட்டாராம் ஆலம்கிர். கிட்டத்தட்ட 45 நாட்கள் கழித்து ஷா ஆலம் கோட்டையின் கதவைத் திறந்து ஆலம்கீரிடத்தில் சரணடைந்தார் என்பது வரலாறு.

இப்படியான பகுதிக்குக் கால சூழலால் போகமுடியாமல்தான் ஹலபீடு வந்தோம். ஹலபீட்டில் தான் முடிவு செய்தோம். பிஜப்பூர் போகவில்லை என்றால் என்ன? ஸ்ரீரங்கப்பட்டணம் இருக்கிறதே?

மொஹிபுல் ஹசனின் திப்பு சுல்தான் நூலில் ஒரு வரி உண்டு. வரலாற்றின் முதல் பக்கத்தில் முதல் வரியில் முதல் எழுத்தாகப் பொறிக்கப்படவேண்டியது திப்புவின் பெயர் என்று எழுதியிருப்பார். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்கள் ஹைதரும் திப்புவும். நான்கு மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களைப் பல்வேறு விதமாக எதிர்த்தது. உதவிக்காக கான்ஸ்டாண்டி நோபிளைத் தொடர்பு கொண்டது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அச்சுறுத்தலாக இருந்த பிரெஞ்ச் படைகளை உதவிக்கு அழைத்தது, நெப்போலியன் 1798இல் திப்புவிற்குக் கடிதம் எழுதியது என திப்புவைச் சுற்றிய வரலாறு மிக அதிகம். அப்படியான வீரனின் கல்லறைக்குச் சென்றுவரவே ஸ்ரீரங்கப்பட்டணம் செல்ல ஆசைப்பட்டோம். இதுமாதிரியான இலக்குகளற்ற பயணங்களைத் தொடர்வதற்கு உற்ற நண்பரும் நம்மைப் போலவே இலக்குகளற்ற தேசாந்திரியாய் அமைய வேண்டும். அப்படித்தான் எனக்கு நண்பர் நிரஞ்சன். 

ஹலபீடிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் செல்வதற்கான பாதை மெல்லமாகக் கடல்மட்டத்திலிந்து மேலே ஏறிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. ஏனெனில் ஷிவ்மோகா, சிக்மகளூர் செல்லும் வழியே அதற்குக் காரணம். முன்னரே சொல்லியிருப்பேன். தக்காண பீடபூமியின் நில அமைப்பு தனித்துவமானது. மாலை 4 மணி அளவில் ஸ்ரீரங்கப்பட்டணம் அடைந்திருந்தோம். அறை எடுத்து பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு, 1784இல் திப்புவால் கட்டப்பட்ட மஸ்ஜித்-ஏ-ஆலம் பள்ளிவாசலுக்குச் சென்றோம். துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் எங்களை நீண்ட நேரம் சோதனை செய்துவிட்டு ‘போட்டோ எடுக்கக்கூடாது’ எனச் சொல்லியனுப்பினார். வினோதமாக இருந்தது. தொழுகை முடித்துவிட்டு உள்ளே இருந்த சிலரிடம் விசாரித்தேன், ஏன் இப்படியான கெடுபிடி என.

வலதுசாரி கரசேவகர்கள் இந்தப் பள்ளிவாசலில் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது எனக் கலவரம் செய்திருப்பதாகச் சொன்னார்கள். ஒளரங்கசேப்பைத்தானே எப்போதும் கடிப்பார்கள், இப்போதும் அதில் திப்புவும் விதிவிலக்கில்ல எனப் புரிந்துகொண்டேன். பள்ளிவாசலின் பக்கத்திலேயே சிறிய வயதில் திப்பு வீட்டுக்காவல் வைக்கப்பட்டிருந்த வீடு ஒன்று உண்டு. அப்படியே அங்கிருந்து வடக்குப் பக்கமாகச் சென்றால் திப்பு இறந்துகிடந்த இடம் வரும். எவரும் எதிர்பாராதவிதமாக வீரர்களோடு வீரராக மாண்டுபோயிருப்பார் திப்பு. 1839இல் வரைந்த டேவில் வில்கே என்பவரின் ஓவியம் ஒன்று உண்டு. அந்த ஓவியத்தில் டேவிட் பைட் திப்புவின் உடலைப் பார்த்த மாதிரியும், இரண்டு நபர்களின் மடியில் திப்பு கிடத்தி வைக்கப்பட்டிருப்பார். அங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்வோமானால் பிரசித்திபெற்ற ரங்கநாத ஸ்வாமிகள் ஆலயம். இந்தக் கோவிலுக்கு பல உதவிகளையும், அங்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வையும் வழங்கியுள்ளார் திப்பு.

1791இல் இந்துக்களாகவே இருந்த மராத்தியப் படையினர் சிருங்கேரி மடத்தின் மீதும் கோவிலின் மீதும் தாக்குதல் நடத்தினர். பலரைக் கொன்றும் காயப்படுத்தியும், மடத்தின் அனைத்து விலைமதிப்பற்ற பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்தனர். அப்போதைய சங்கராச்சாரியார் உதவிகோரி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு சுல்தானுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே கன்னட மொழியில் பரிமாறிக் கொள்ளப்பட்ட சுமார் 30 கடிதங்களின் தொகுப்பை, 1916ஆம் ஆண்டில் மைசூர் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் கண்டுபிடித்தார். இந்தத் தாக்குதல் குறித்த செய்தியைக் கேட்ட திப்பு சுல்தான் தனது கடும் கோபத்தையும் வருத்தத்தையும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

"இத்தகைய புனிதமான இடத்திற்கு எதிராகப் பாவம் செய்தவர்கள், 'ஹஸத்பிஹ் க்ரியதே கர்மா ருதத்பிர்-அனுபூயதே' (மக்கள் [தீய] செயல்களைச் சிரித்துக்கொண்டே செய்கிறார்கள், ஆனால் அதன் விளைவுகளை அழுதுகொண்டே அனுபவிக்கிறார்கள்) என்ற சுலோகத்தின்படி, இந்தக் கலியுகத்தில் வெகுவிரைவில் தங்களின் தவறான செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள்."

அவர் உடனடியாக பெட்னூரின் ஆசாப்பிற்கு (Asaf), சங்கராச்சாரியாருக்கு 200 ரஹாதிகள் (பணங்கள்) ரொக்கமாகவும், பிற பரிசுகள் மற்றும் பொருட்களையும் வழங்குமாறு உத்தரவிட்டார். சிருங்கேரி கோவில் மீதான திப்பு சுல்தானின் அக்கறை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. மேலும் அவர் 1790களிலும் சுவாமிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்.

திப்பு சுல்தானின் பொருளாளராக கிருஷ்ணராவ் இருந்தார். ஷாமய்யா அய்யங்கார் அவரது அஞ்சல் மற்றும் காவல் துறை அமைச்சராகவும், அவரது சகோதரர் ரங்க அய்யங்கார் ஒரு அதிகாரியாகவும் இருந்தனர். மேலும் பூர்ணய்யா 'திவான்' என்ற மிக முக்கியமான பதவியை வகித்தார். முகலாய அரசவையில் மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் ஆகியோர் அவரது முதன்மை முகவர்களாக இருந்தனர். அத்துடன் அவரது தலைமை "பேஷ்கார்" (Peshkar) சுபா ராவும் ஒரு இந்து ஆவார். மைசூர் அரசிதழ்களின் (Mysore Gazettes) ஆசிரியர் ஸ்ரீகண்டையா, திப்பு சுல்தான் தவறாமல் ஆண்டு மானியங்கள் வழங்கிய 156 கோவில்களைப் பட்டியலிட்டுள்ளார். மானியப் பத்திரங்கள், அவரது அரசவைக்கும் கோவில்களுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்கள், மற்றும் பல கோவில்களுக்கு அவர் நகைகளை நன்கொடையாக வழங்கியதற்கும், நில மானியங்கள் அளித்ததற்குமான சான்றுகள் உள்ளன.

இந்து ஆட்சியாளர்களுடன் கூட்டணியை ஏற்படுத்துவதற்காகவே அவர் இவற்றைச் செய்ததாகச் சிலர் கூறுகின்றனர். 1782 முதல் 1799 வரை திப்பு சுல்தான் தனது ஆளுகைக்குட்பட்ட கோவில்களுக்கு 34 அறக்கட்டளை "சன்னதுகளை" (பத்திரங்களை) வழங்கினார். மேலும் பல கோவில்களுக்கு வெள்ளி மற்றும் தங்கத் தட்டுகளையும் பரிசளித்தார். நஞ்சன்கூட்டில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், திப்பு சுல்தான் வழங்கிய ஆபரணங்கள் பதிக்கப்பட்ட கோப்பையை இன்றும் பாதுகாத்து வருகிறது.

இப்படியாக வாழ்ந்த வீரனின் கல்லறையைப் பார்க்கவே ஸ்ரீரங்கப்பட்டணம் வந்தேன். அடுத்தநாள் காலை, திப்பு கோடையில் ஒய்வெடுக்கும் சிறிய அரண்மனைக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் என எல்லாம் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. அங்கே சில ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் சில விசயங்கள் நினைவுக்கு வந்து சென்றது. திப்புவின் அப்பா ஹைதர் அலியின் பெயர் அமெரிக்காவில் மிகப் பிரபலம். அமெரிக்காவின் ஆரம்பப் போர்க்காலங்களில் ஹைதரின் பெயர் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து வாசிக்கும் போது எனக்குமே ஆச்சர்யமாகவே இருந்தது. Commodore Joshua Barney by William Frederick Adams என்பவரின் நூலில் உள்ள சில குறிப்புகள் தான் அது. அக்குறிப்புகளில் USS Hyder Ally என்கிற அமெரிக்கக் கப்பல் மைசூரின் ஹைதர் அலியின் பெயர் தாங்கியிருந்தது ஆச்சர்யமளித்தது. இன்று உலகையே அச்சுறுத்தும் USS Abrahamஇன் முன்னோடி இந்த USS Hyder Ally.

பிரிட்டிஷைப் பலமுறை வீழ்த்திய ஹைதர் அலியின் தந்திரங்கள் ஆரம்பகால அமெரிக்க விடுதலைப் போருக்குப் பயனுள்ளதாக இருந்ததன் விளைவே அமெரிக்க விடுதலைக் கால கப்பல்படையில் ஒரு கப்பலுக்கு ஹைதரின் பெயரைச் சூட்டியிருக்கிறது. James Hamilton என்பவர் வரைந்த படம் ஒன்றே போதும் மேற்சொன்ன தகவலுக்குச் சான்று. அன்றைய ஆங்கிலேயே அரசின் கடற்படை கப்பலான General Monk உடன் USS Hyder Ally சண்டையிடும் காட்சியை வரைந்திருப்பார். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வரிகளே சான்று.

Ballads were made upon the brilliant victory of the Hyder-Ally over the General Monk, and sung through the streets of Philadelphia, and the name of the gallant 137

Barney was in every mouth, “familiar as household words.”

இப்படியான பல நினைவுகளை அசைபோட்டபடி இறுதியாகவே கும்பாஸ் எனப்படும் திப்பு, ஹைதர் அலி மற்றும் அவரின் மனைவியின் கல்லறைகள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கும்பாஸைச் சுற்றிலும் அவரது சகோதரர்கள், தளபதிகள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு வீரனின் கல்லறைக்குச் செல்லும் போது ஏதோவொரு பிரமிப்பு. சில இடங்களுக்குள் நுழையும்போது மட்டுமே ஒருமாதிரியான தலைசுற்றல் நிலை ஏற்படும். கும்பாஸிற்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஏற்பட்டது. ஒரு ஒரமாக அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்துகொண்டேன். அது என்ன மாதிரியான மனநிலை என விவரிக்க முடியவில்லை. ஒரு வீரனுக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் ஏற்பட்ட பதட்டமாகக்கூட இருக்கலாம். வரலாற்றில் படித்த ஒருவரின் கல்லறைக்கு முன்பாக நிற்கிறோம் என்கிற மகிழ்ச்சியாக இருக்கலாம். அங்கிருந்து வெளியே வரும்போது மனம் வெற்றிடமாக இருந்ததை உணரமுடிந்தது. அங்கே பணிபுரியும் பெண் ஒருவரிடத்தில் பேச்சு கொடுத்தேன். திப்புவின் மொழி வளமைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பெர்சிய மொழி, அரபி, கன்னடம், மராத்தி, ப்ரெஞ்ச், ஆங்கிலம் என அவர் அடுக்கிக் கொண்டே போனார். எல்லாவற்றிலும் அவரால் பேசவும் எழுதவும் முடியும் என்றார். உங்களுக்குக் கனவுகளின் மீது விருப்பம் இருந்தால், திப்புவின் கனவுகளைப் பற்றிய அவரின் குறிப்புகளை வாசியுங்கள் என்றார். திப்பு தனக்கு ஏற்படும் கனவுகளைக் பற்றி எழுதிவைத்திருக்கிறார் (திப்பு சுல்தானின் கனவுகள், ரமீஸ் பிலாலி, சீர்மை வெளியீடு). 

இப்படியாகப் பல திப்புவின் நிகழ்வுகளைப் பற்றி மனதில் அசைபோட்டபடி திருவண்ணாமலைக்குக் கிளம்பினேன். ஹம்பி, ஹலபீடு, ஸ்ரீரங்கப்பட்டணம் கொடுத்த அனுபவங்கள், ஆச்சர்யங்கள் என்றைக்கும் மனதைவிட்டு நீங்காது என நினைத்துக்கொண்டே கனகபுரா மாவட்டத்தை அடைந்திருந்தோம். தேசிய நெடுஞ்சாலைவழியில் பயணிக்காமல் சிற்றூர்களின் வழியே பயணிக்கலாம் எனக் காவேரி வனவிலங்கு சரணாலயம் வழியாக தேன்கனிக்கோட்டையை நோக்கிய பாதையில் கிளம்பினோம். சூரியன் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது, ஏற்ற இறக்கமான பாதையில் ஒரு புது உலகிற்குப் பயணித்துக் கொண்டிருந்த உணர்வு. சென்று வந்த இடங்களின் அனுபவங்களை மறந்துவிட்டு, இந்தப் பாதையின் அனுபவங்களை மனதில் ஏற்றிக்கொள்ளலாம் என்பதான பாதைகள். 

நிச்சயம் நீங்களும் இந்தப் பாதைகளில் பயணிக்க அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன். புதிய இடங்களும் மனிதர்களும் உணவும் வரலாறும் நாம் புத்தகங்களில் படிப்பதைப் போல இல்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். 

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சிறகன்

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

இலக்கியக் கூட்டம்நாளையும் நாளையேஇலக்கிய நிகழ்வுகள்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்நானென்பது லெட்டூஸ்திருச்சி வாழ்க்கைஆலடியான்அக்காக்கள்கடைசி வெடிச்சத்தம்சாய் வைஷ்ணவிநிலமெங்கும் பூத்த முகம்எஸ் அற்புதராஜ்ஏ ஜி கௌதம்இலக்கியம்தலித் இலக்கியம்மழைவில்கருத்தரங்கங்கள்சந்துரு மாயவன்ழ என்ற பாதையில் நடப்பவன்கிராமியம்டோனி பிரஸ்லர்போர்கிருஷ்ணமூர்த்திசுஜித் லெனின்ஆய்வுவைத்தியம்இக்பால்தலையங்கம்தலித் வரலாறுகாலச்சுவடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!