நாவல் தொடர் இலக்கியம்

அச்சத்தின் வரைபடம் (நாவல்)

தொடங்கும் இடம்

அரிசங்கர்
02 Sep 2026
0

இரைச்சல் எப்போதும் அர்த்தமற்ற சிந்தனைகளை நோக்கி மனதை இழுத்துச் செல்லும். பதில் தெரியாத கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும். இரைச்சல் ஒரு சாபம். இரைச்சல் ஒரு நோய். இரைச்சல் ஒரு தண்டனை. இரைச்சல் என்பது பயத்தின் இசை. பல நேரங்களில் அது கேட்க மட்டுமே செய்யும். ஆனால், சில நேரம் நம்மால் அதைப் பார்க்கக்கூட செய்ய முடியும். அதற்கு உருவம் உண்டு. அது தன் உருவத்தை நம் ஆழ் மன வெறுப்பிலிருந்து உருவாக்கிக் கொள்கிறது. மனம் மறக்க நினைக்கும் உருவத்தை எடுத்துக்கொண்டு நம் முன்னால் வளைய வருகிறது. இப்போது என் முன்னால் இருக்கும் இரைச்சலின் உருவம் சற்று அருவருப்பானது. பயமுறுத்தக் கூடியது. அதே நேரம் எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மறக்க நினைக்கும், ஆனால் ஒருபோதும் என்னால் மறக்க முடியாத ஒரு உருவம். அதன் உடலில் பல வெட்டுக்கள் உண்டு. அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக்கள். அதில் எப்போதும் ரத்தம் வடிந்துகொண்டேயிருக்கும். ஆறடி உயரம் நூற்றிமுப்பது கிலோ எடை கொண்ட அஜானபாகுவான உடலமைப்பு. முக்கியமான ஒன்று என்னவென்றால் அதன் முகம் கிழிந்து பிய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும். அது முகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதால் ஏற்பட்ட சிதைவு. எப்போது வேண்டுமென்றாலும் பிய்ந்து விழுந்துவிடும் என்பது போல ஒரு சதைத் துண்டு அந்த முகத்தில் தொங்கியவாறே ஆடிக்கொண்டிருக்கும்.  என்னுடைய இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமான என் நண்பன், செத்தப் பிறகும் என்னை தொந்தரவு செய்துகொண்டிருக்கிறான். அதுவும் கொலை செய்யப்பட்டு கடைசியாக எப்படிச் சிதைந்துப் போயிருந்த அவனைப்  பார்த்தேனோ, அதே உருவத்தில் எப்போதும் என் கண் முன்னால் வருகிறான். பேசுகிறான். சிரிக்கிறான். எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறான். விரைவில் நானும் செத்துவிடுவேன் என்கிறான். அது என்னவோ உண்மைதான். அவன் செத்துவிட்டான். போகும்போது எனக்கான சீட்டையும் எடுத்துவிட்டான். இன்னும் வண்டிதான் வந்தபாடில்லை.

வெளியே இரைச்சல் சத்தம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தேன். வீட்டின் எதிரேயிருந்த சிறிய அம்மன்  கோவிலில் ஆடி மாதத் திருவிழா உற்சாகமாக நடந்துகொண்டிருந்தது. நான் என் வீட்டின் முதல் மாடியில் என் அறையில் அடைந்து கிடக்கிறேன். அறையின் கதவு வெளியே பூட்டப்பட்டிருக்கிறது. அம்மாதான் பூட்டிவிட்டுச் சென்றாள். இந்தக் கும்பலில் எங்காவது தான் இருப்பாள். இன்று முழுவதும் நான் இந்த அறைக்குள் தான் இருந்தாக வேண்டுமென்பது அவள் உத்தரவு. சென்று ஆண்டும் இப்படித்தான் செய்தாள். அதற்கு முந்தைய ஆண்டு ஆடி மாதத் திருவிழாவின் போதுதான் என்மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அதுவும் என் வீட்டின் அருகிலேயே, கூட்டத்தின் நடுவே. கூட்டத்தை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்கள். ஆனால், அதே கூட்டத்தைப் பயன்படுத்தி தப்பினேன். நீண்ட நேரம் கோவிலின் கருவறையில் என்னை ஐயர் மறைத்து வைத்திருந்தார். அவர்கள் வீட்டிற்குள்ளெல்லாம் என்று தேடியிருக்கிறார்கள். அதன்பிறகு விஷயம் வெளியே தெரிந்து ஐயர் பலரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். ஐயரைத் திட்டிய ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் சென்று அம்மா வாசலில் சாபம் விட்டுவிட்டு வந்தாள். சில நாட்களில் ஐயரை மாற்றிவிட்டார்கள். அடுத்த வருடம் திருவிழாவிற்கு வசூல் செய்ய வந்தவர்களை அம்மா செருப்பால் அடிக்கச் சென்றாள். பிறகு யாவரும் வருவதில்லை. மற்றவர்களோடு சேர்ந்து அவர்களும் என் சாவுக்குக் காத்திருக்கத் தொடங்கினார்கள். 

“அவனுங்களப் போட்டுட்டு என் எடத்துக்கு நீ வந்துடு மச்சான்” என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவன்தான் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். இப்போதெல்லாம் அவன் உருவத்தைப் பார்த்தால் எனக்கு அருவருப்பு ஏற்படுவதில்லை. பழகிவிட்டது. நான் அவனை ஏளனமாகப் பார்த்தேன். அவன் குலுங்கி குலுங்கிச் சிரித்தான். அவன் முகத்திலிருந்து ஒரு சதைத் துண்டு கிழே விழுந்தது. சிரித்துக் கொண்டு அதை எடுத்து ஒட்டிக்கொண்டான். யாராவது அறையின் கதவைத் திறந்தது என் சிந்தனையை மாற்றும்வரை அவன் மறையப் போவதில்லை. நான் மீண்டும் ஜன்னலின் அருகே நின்றுகொண்டேன். ஒரு சிலர் என்னைப் பார்ப்பது தெரிந்தது. ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு உணர்வு. திமிர், ஆணவம், கருணை. சிலர் இளக்காரமாகப் பார்த்தார்கள், சிலர் பாவமாகப் பார்த்தார்கள். நான் சிறையிலிருப்பதைப் போல உணர்ந்தேன். சட்டென ஒரு ஆவேசம் எனக்குள் பாய்ந்தது. மூச்சு முட்டுவது போல் உணர்ந்தேன் “அம்மா… அம்மா…” என்று கத்திக்கொண்டே கதவை வேகமாகத் தட்டினேன். என்னவோ ஏதோ என்று அலறிக்கொண்டே அம்மா கதவைத் திறந்தாள். உள்ளே என்னைத் தவிர யாருமில்லை. என் உடலில் வெட்டுக்களோ ரத்தமோ இல்லை என்று தெரிந்ததும் அவள் சற்று ஆசுவாசமானாள். என் அருகில் வந்து, “இன்னாப்பா, இன்னாப்பா” என்று என் கைகளைப் பிடித்துகொண்டாள். எனக்கு மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. வேகமாக மூச்சு வாங்கினேன். அம்மா என்னை அழைத்துக்கொண்டு போய்க் கட்டிலில் உட்கார வைத்தாள். வெளியே ஏதே ‘டாமால்’  என்று சத்தம் கேட்டது. அவள் உடனே வேகமாக எழுந்துச் சென்று கதவை உள் தாழ்ப்பாள் போட்டாள். பிறகு ஜன்னல் அருகே சென்று எட்டிப் பார்த்தாள். நானும் மெல்ல எழுந்துச் சென்று அவள் பின்னால் நின்று கொண்டு என்னவென்று பார்த்தேன். ஒருவன் கையில் உடைந்த டியூப் லைட்டை வைத்துக்கொண்டு எதிரிலிருந்தவனை முறைத்துக் கொண்டிருந்திருந்தான். ஏதோ சண்டை” என்று அம்மா சொன்னால். திரும்பி என்னை அழைத்து வந்து கட்டில் உட்கார வைத்தாள். 

“எதாவது சாப்புடறியா?”

நான் வேண்டாம் என்று தலையசைத்தேன். சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். எனக்குக் குடிக்க வேண்டுமென்பது போல் இருந்தது. உடனே “பாருக்குப் போலாமா” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கட்டில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“என்ன நிம்மதியாவே வுடமாட்டியா?” என்று கத்தினேன். 

“நான் இன்னாப்பா பண்ணேன் உன்ன. நானே செத்துப் போயி பாவமா இருக்கேன்” என்றான். 

“உன்னால தான் என் நிம்மதி போச்சி, வாழ்க்கை போச்சி. உன் கூட சேர்ந்த பாவத்துக்குத்தான் நான் அனுபவிக்கறேன்.”

“ஓ… சார் தனியா எந்த பாவமும் பண்ணவேயில்ல, என் கூட சேர்ந்துதான் பாவம் பண்ணீங்க. அப்புடித்தானே?” என்று குத்துவது மாதிரி கேட்டான். என்னிடம் அதற்குப் பதிலில்லை. அவன் சொல்வது உண்மைதான் என்று என் மூளைக்கு உரைத்தது. அந்த உண்மை என்னைப் பதில் பேசவிடாமல் தடுத்தது. 

“நான் ஒன்னும் சொல்லட்டா. நீ எதைப்பத்தியும் கவலப்படாம, நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா வாழப்பாரு. அவ்ளோதான் சொல்லுவேன்.”

“தூங்கிட்டு இருக்கற மனசு எழுந்துட்டா அதுக்கப்பறம் நிம்மதியா வாழ முடியாது.”

“என்னடா சொல்ற, புரியற மாதிரி சொல்லு. செத்துட்டா மட்டும் எனக்கு உடனே அறிவு வளர்ந்துடுமா என்ன?”

“சில பேருக்கு எப்பவுமே மனசு தூங்கிட்டே இருந்துடும். சாகற வரைக்கும். அவங்க எந்தக் குற்றவுணர்வும் இல்லாம எல்லாத் தப்பயும் பண்ணிட்டுக் கெட்டவங்களாவே வாழ்ந்து செத்துடுவாங்க. சில பேருக்கு மனசு தூங்கவே தூங்காது. முழுச்சிக்கிட்டே இருக்கும். அவங்க சாகற வரைக்கும் நல்லவங்களாவே இருந்துடுவாங்க. முழுச்சிகிட்டு இருக்கற அவங்க மனசு அவங்கள எதுவும் செய்ய விடாது. இது மூனாவதா ஒன்னு இருக்கு. அவங்க மனசு தூங்கிட்டு இருக்கும். அதனால இஷ்டத்துக்கு ஆடுவாங்க. திடீர்னு முழுச்சிக்கும். உடனே செஞ்சதெல்லாத்தையும் நெனச்சி நெனச்சி புழுங்கி பயந்து பயந்து சாவ எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாங்க. என்ன மாதிரி”

“ஆமா இந்த மனசு ஏன் திடீர்னு முழுச்சிக்கிது?”

“தெரியல. ஆயிரம் காரணம் இருக்கும். எனக்கு உன் செதஞ்சிப் போன மூஞ்சியும் செத்துப் போன உடம்பயும் பார்த்ததும் முழுச்சிகிச்சி.” என்று திரும்பிப் பார்த்தேன். அவன் மறைந்துவிட்டிருந்தான்.

அவன் சொன்ன வார்த்தைகளுக்கு மெல்ல கால்கள் முலைத்து என் முன் நடனமான ஆரம்பித்தன. நீ வேறு பாவங்கள் எதையுமே செய்யவில்லையா? நீ வேறு பாவங்கள் எதையுமே செய்யவில்லையா? என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே நடனமாடின. நான் செய்ததெல்லாம் பாவங்கள் மட்டும்தான். நம்பிக்கை துரோகம் எனும் பாவம். மாற்றான் மனைவியை இச்சித்தல் எனும் பாவம். அடுத்தவன் பொருளை அபகரித்தல் எனும் பாவம். என் நினைவுகள் மெல்ல மெல்ல சொற்களாக மாறி அவை என்னிலிருந்து பிரிந்து நிரம்பி வழிந்து என்னை மூழ்கடிக்கத் தொடங்கியது. அப்போது அவன் மீண்டும் தோன்றி, “என்ன விடப் பெரிய பாவிடா” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். என் உடல் முழுக்க ரத்தித்திற்குப் பதிலாக அச்சம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. என் நரம்புகள் முழுக்க அச்சத்தின் வரைபடம் போல பிரிந்து எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது.

நான் மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தேன். மொத்தக் கூட்டமும் என் வீட்டின் முன் நின்றுகொண்டு மேலே ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முகமாகப் பார்த்தேன். ஒவ்வொன்றும் என்னால் பாதிக்கப்பட்ட, துன்பப்பட்ட முகம். அதில் சிலர் சிலர் நான் சாக வேண்டுமென்று விரும்பவில்லையென்றாலும், ஒருவேளை நான் செத்தால் சந்தோஷப்படும் முகம். நான் மீண்டும் பார்த்தான். அப்படி யாருமே மேலே பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அனைத்துமே பிரமை. பயம் உருவாக்கும் பிரமை. பயம் ஒரு வேதிப்பொருள். ரத்தத்தில் அது கலக்க கலக்க பயம் அதிகரிக்கும். எனக்கென்னவோ அந்த வேதிபொருள் தான் ரத்தமாகவே ஓட ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றும் அளவிற்கு என் உடல் முழுக்க பயம் பரவ ஆரம்பித்துவிட்டது. இதெல்லாம் ஒரு காலத்தில் பயமில்லாமல் நான் செய்த செயல்களின் பிரதிபலன்கள். நான் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். 

“பின்னே அனுபவிக்காம போயிடுவியா?” என்றது குரல். நான் திரும்பிப் பார்க்கவில்லை. ஜன்னல் வழியாக மீண்டும் தெருவைப் பார்த்தேன். சட்டெனத் தெருவில் யாருமே இல்லாதது போலத் தோன்றியது. எந்தச் சத்தமும் கேட்கவில்லை. இதுவும் பிரமைதான் என்று தெரியும். நான் தெருவையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென மக்கள் கூட்டமும் பெருங்கூச்சலும் திரும்பி வந்தது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரிசங்கர்

அரிசங்கர். புதுச்சேரியை சேர்ந்தவர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் நான்கு நாவல்களும், இரண்டு குறுநாவல் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ஆசிரியர் உரைஇலக்கிய நிகழ்வுகள்அசகவதாளம்கடைசி வெடிச்சத்தம்அறபு இலக்கியம்நகர மயமாக்கம்ரோலாண்ட் பார்த்போர்டோனி பிரஸ்லர்குறுங்கதைபுதிய வருகைதலையங்கம்மழைவில்சிறுகதைத் தொகுதிகாஃப்காவின் காதுகள்ராஜ் கௌதமன்ழ என்ற பாதையில் நடப்பவன்இலக்கிய அறிமுகம்கவிதைகள்இக்பால்வேறொரு மழைநானென்பது லெட்டூஸ்சீர்மை இதழ்கோ கமலக்கண்ணன் கவிதைகள்நிலமெங்கும் பூத்த முகம்வைத்தியம்எழுத்தாளரின் மரணம்பொம்மை கார்நுண்கதைதொ.பத்தினாதன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!