கரப்பான்களின் காலமாகுமா?
தேசத்தில் இதுவரை கவனிக்கப்படாமல் இருந்த கரப்பான்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமானமும் வேலை வாய்ப்புகளும் தகுந்த வளர்ச்சித் திட்டங்களும் அமையப் பெறாத அக்கரப்பான்கள், தங்களுக்கான உரிமைகளை, நீதிவேட்டலை நிறைவேற்றிக்கொள்ள ஒன்றுகூடி - ஒன்றைச் சாதித்த திருப்தியோடுகூட - பிரிந்துள்ளனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தோடு ஒப்பிட முடியாது எனினும் பெருந்திரள் ஜந்தர் மந்தரில் திரண்டு நின்றது, கவனிக்கத்தக்கது. நாட்டின் கல்விக் கொள்கை மீதான கேள்விகளை ஆழப்படுத்துவதாக அது மாறியிருக்க வேண்டும். ஆனால் தனிநபர் ராஜினாமாவை முன்னிறுத்தி ஃபேர் நீட் என்பதை மட்டுமே தன் இலக்கெனக் கொண்டு நீர்த்துப் போய்விட்டது. முறைகேடாகவே தொடர்ந்து நிகழ்ந்து வரும் தகுதித் தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து ஆலோசிக்கவும் கேள்விகள் எழுப்பவும் வட இந்திய இளைஞர்களை வழி நடத்த வலுவான கோட்பாட்டுப் பின்னணி இல்லைபோல் தெரிகிறது.
நீட் தேர்வு உறுதியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதும் கல்வியும் மருத்துவமும் மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப வேண்டும் என்பதும் கரப்பான்களின் ஒற்றைக் கோரிக்கையாக மாறியிருந்தால் இந்தக் கூட்டத்தைக் கொண்டாடியிருக்கலாம். நிகழ மறுத்த அற்புதமாகி விட்டது. தேர்வு நிறுவனங்களும் தேர்வுப் பயிற்சி நிறுவனங்களும் வலுவிழந்து நொறுங்க மீண்டும் கரப்பான்களையோ தட்டான்களையோ எதிர்பார்த்து இருக்கத்தான் வேண்டும்போல. கரப்பான் கழகம் தனது சமீபத்திய அறிவிப்பில்கூட, தேசத்திலுள்ள பள்ளிகளின் கட்டமைப்புக் குறைகளை முதன்மைப்படுத்தவேண்டும் என்று பேசியிருக்கிறதே (அதுவும் அவசியம்தான்) தவிர, கற்றல் - கற்பித்தல் தரத்தைக் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.
அடிப்படை கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் தொடர்ந்து முகம் கொடுப்பதன் வழியாக மட்டுமே கரப்பான்களால் உதிர மறுப்பவற்றைச் செல்லரிக்க இயலுமா என்று பார்க்க முடியும்.
புத்தரசியல் எழுச்சி
தமிழ்நாட்டில் அறுபதாண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஓய்வுக்கு வந்துள்ளது. இரண்டாண்டு புதிய கட்சியான த.வெ.க ஆட்சியமைத்து நூறு நாட்களைக் கடந்துவிட்டது. பெரும்பான்மைக் கிடைக்கவில்லை எனினும் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படும் சலம்பல்கள் தவிர்த்துப் பெரிய சிக்கல்கள் இன்றி ஆட்சித் தொடர்கிறது. முதல்வர் விஜயின் வெற்றி, திரைக்கவர்ச்சியால்தான் சாத்தியமானது என்று போட்டியிட்ட ஏனைய கட்சிகளும் ஆய்வாளர்களும் நிறைய பேசிவிட்டனர். திரைக்கவர்ச்சி ஒரு குறிப்பிட்ட சதவீதம்தானே தவிர, இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கு எதிரான கூட்டு மனப்பான்மையும் விரக்தியுமே மையக் காரணம் என்பது போதுமான அளவு பேசப் படுவதில்லை. எதிர்ப்பு அலை முந்தைய ஆட்சிகளின் மீது இல்லவே இல்லை என்பதுபோலான பிம்பம் தூக்கிப் பிடிக்கப்படுகிறது அவர்களுக்கு வசதியான சொல்லாகத்தான் மாறிவிட்டிருக்கிறது ‘திரைக்கவர்ச்சி.’
எம்.ஜி.ஆருக்குப் பின் எத்தனையோ திரை நாயகர்கள் (நாயகிகளும்தான்) அரசியலுக்குள் வந்திருந்தாலும், விஜய் போல் போட்டியிட்ட முதல் தேர்தலிலே நாட்டை ஆளக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் யாராலும் பெற முடிந்ததில்லை. மற்ற திரைநாயகர்களின் கட்சிகள் திராவிட-தேசியக் கட்சிகளுக்குள் சங்கமமானால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்ற சூழல் மாறி, தற்போது வெற்றி பெற்றிருக்கும் கட்சியில், பல்லாண்டுக் காலம் ஆட்சியில் திளைத்த அ.தி.மு.க.வே கரைந்து வருகிறது (கரைக்கப்பட்டு வருகிறது).
வலதுசாரிகள் தங்கள் ஆயுதமென வைத்திருந்த தெய்வப் பற்றையும் தேசியத்தையும் இடதுசாரிகளின் சமூகநீதி-பெண்ணிய-தலித் ஆதரவுநிலை கோட்பாட்டையும் இணைத்துப் பயணிக்கும் சாதுர்யமானவராக விஜய் தன்னைக் காட்டிக்கொள்கிறார். பெரும்பாலான தமிழக இந்துக்களுக்குக் கிறிஸ்தவர் என்றாலே தலித் என்ற நம்பிக்கை ஆழப் பதிந்திருக்கையில், ச. ஜோசப் விஜயின் இந்த வெற்றி பிரமிக்கத்தக்க ஒன்றுதான். த.வெ.க தன் வேட்பாளர்களை சாதிப் பார்த்துத்தான் பல இடங்களிலும் நிறுத்தியிருக்கிறது என்றாலும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சாதி பார்க்கவில்லை என்பது முடிவுகளிலிருந்து தெரிகிறது (விதிவிலக்காகச் சில மாவட்டங்கள் அமைந்துள்ளன).
தந்தை பெரியாரை, த.வெ.க தங்கள் கட்சியின் முதன்மைக் கொள்கை தலைவராக முன்னிலைப்படுத்துவதும் தலித்துகளுக்கு அமைச்சரவையில் கணிசமான இடம் கொடுத்திருப்பதும், சமூக நீதிக்கான ஒற்றைப் பிரதிநிதிக் கட்சியெனத் தன்னைச் சொல்லி வந்த திமுகவிற்குக் கடும் சவாலாக மாறியுள்ளது.
இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், கோட்பாட்டாளர்கள் என எல்லோரும் இந்த ஆட்சியின் மீது சார்பு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாடு எடுத்துவிட்டனர். பலரும் அதுகுறித்து இதழ்களிலும் பொதுத் தளங்களிலும் எழுதிவிட்டனர். தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் கொண்ட இலக்கியவாதிகளும்கூட, மௌனம் கலைத்துவிட்டனர். தமிழ்ச் சிற்றிதழ்களும் இந்த மாற்றத்தை வலுவாகப் பேசத் தவறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
தமிழகத்திற்கு விரோதமாக யாதொரு கொள்கை முடிவுகளையும் தற்போதுவரை த.வெ.க ஆட்சி எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் சிக்கலை மதித்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டிருப்பது ஆதரவளிக்க வேண்டிய விஷயம். அரசு அலுவலகங்களில் வெளிப்படையாக இருந்த கையூட்டுப் புழக்கமும் சற்றே (அரசு அலுவலகங்களில் - இயன்றால் டீ செலவுக்கு கொடுங்கள் என்றளவில்) குறைந்திருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளும் நடத்தைகளும்தான் பொதுமக்கள் மனதில் தங்கும். முதல்வரின் தொனி பிடிக்கவில்லை; பேச்சு முதல்வருக்கானதாக இல்லை; உடை நம் நாட்டிற்குப் பொருத்தமானதாக இல்லை போன்ற விமர்சனங்களும் அதைச் சுற்றிய வாயாடல்களும் மறுநாளே அர்த்தமிழந்துபோகும் (போய்விட்டது). சட்டசபை தொடர் நேரலை கேளிக்கை நிகழ்ச்சிபோல் அதிதீவிரமாகப் பார்க்கப்பட்டுப் பரவலாக மக்களால் ரசிக்கப்படுகிறது. தமிழ்நாடு போன்ற அறிவார்ந்த மாநிலத்தில் சட்டசபை நேரலை மிகவும் அவசியமானதே.
ஆட்சிக்கு வந்த பின்னும், போகும் வரும் இடமெல்லாம் ஜனம் முண்டியத்துப் பரவசத்துடன் விஜயைப் பார்ப்பதைக் கவனித்தால் எழுத்தாளர் டி.தருமராஜின் சொல்படி, தயங்காமல் விஜயை வாடிவாசலை விட்டுப் பாய்ந்துவரும் ஜல்லிக்கட்டு என்று குறிப்பிடலாம்போல. விஜயைத் ங்களுக்கான பிடி வாகு தராச் சீறும் காளையென மக்களே மாற்றி வைத்திருக்கிறார்கள். நடப்பவை அனைத்தும் அதைத்தான் நமக்குத் தெரிவிக்கின்றன.
விஜயின் பலம்
விஜயின் ஆதரவுத் தளம் கண்ணுக்குத் தெரியாத அவரது ரசிகர்களே. தங்கள் தலைவரின் எந்தச் செயலையும் போற்றவும் கொண்டாடவும் செய்பவர்கள்தாம், பிடிக்கவில்லை என்றால் தூற்றவும் செய்கின்றனர். விஜய் - திரிஷா இணைந்து வெளிவருவது ஒரு பூதாகர பிரச்சினையென விமர்சனங்கள் எழுந்தபோது, விஜயின் ரசிகர்களும் தொண்டர்களுமே அவரைத் திட்டித் தீர்த்து நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
விதவிதமான மீம்கள் உருவாக்கியும், பல்வேறு நபர்களை இதற்கான காரணங்கள் என முன்வைத்து நகைச்சுவை ஆக்கியதன் வழியாகவும், வெவ்வேறு நடிகர்களுக்கு நிகழ்ந்த விவாகரத்து மற்றும் திருமணம் கடந்த உறவுகள் பேசப்பட்டதன் வழியாகவும் விஜய் மண வாழ்விலிருந்து வெளியேறியது வாக்கரசியலில் எந்தப் பாதிப்பையும் தராதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது. விஜயை இவ்விஷயத்தில் அதீதமாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவே, அதுவும் மக்கள் மத்தியில் அவருக்கான பரிதாபத்தைச் சம்பாதித்து தந்தது. ‘உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியட்டும்’ போன்ற தர்க்கப் பேச்சுகளை விஜய் சார்பாக மக்களே பேசினர். குறிப்பாக, பெண்கள்.
அதிகாரப்பூர்வமான த.வெ.க.வின் இணையப் பக்கங்கள் மாற்றுக் கட்சியின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்லும் முன்னரே, விர்சுவல் வாரியர்ஸ் பதில் சொல்லி விடுகின்றனர். பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னர் வந்தே மாதரம் இசைக்கப்பட்ட பிரச்சினைக்கு, அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்ற - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற - விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முந்தி வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட காணொலியைப் பரப்பினதே ஒரு சான்று.
த.வெ.க.வை எதிர்த்துச் சமரிட வேண்டியவர்கள் ஒன்றை அதிவேகமாகத் தேடி எடிட் செய்து பரப்பும் ஆற்றல் கொண்ட ஆயிரக்கணக்கான சம்பளமில்லாத் தொண்டர்களுடன் மோத வேண்டியுள்ளது. இவர்களுக்குப் பின் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இன்றி விஜய் அமைதியாக அமர்ந்திருக்கிறார். விஜய் தவறு செய்யும் தருணங்களில், அவருக்கு ஆதரவாகத் தவறான செய்திகளைப் பரப்பி மாட்டிக்கொண்டால் மட்டுமே இவ்விணையப் படையின் செல்வாக்கு சரிய நேரிடும்.
இப்படிப் பெருந்திரளான ஒரு இளந்தலைமுறை வாக்காளர்களை ‘தற்குறிகள்’ என்று புறந்தள்ளி நகைப்பவர்கள், முந்தைய ஆட்சியின் ஆதரவாள இளைஞர்கள் தங்களை ‘கொத்தூஸ்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதைப் பார்த்து மகிழ்வதும் மௌனம் சாதிப்பதும் நாணத்தக்க வகையில் உள்ளது.
உண்மையாக விமர்சிக்க வேண்டிய இடங்களும் இவ்வாட்சியில் தாராளமாகவே இருக்கின்றன. அறிவிக்கப்படாத மின்வெட்டு முழுமையாக ஓயவில்லை. போதைப் பொருள் புழக்கத்தினால் ஏற்படும் இளவயது மரணங்களும் குற்றங்களும் நின்றபாடில்லை. சாதிய ஆணவக் கொலைகளும் காவல்துறையின் ஒடுக்குமுறைச் செயல்பாடுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வற்றுவதுபோன்றே தெரியவில்லை. நாகர்கோவிலில் சபரிவர்மன் என்கிற மாற்றுத் திறனாளி சிறையில் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழ்ந்தபின் மேற்கொள்ளப்படும் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரிகின்றன. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை காவலில் உள்ளனர். எனினும் இவை போதாது. லாக்அப் மரணங்களுக்கு எதிரான கடுஞ்சட்டம் நிறைவேற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும். கொலைக்குக் கொலை தீர்வில்லை எனினும் சாத்தான்குள வழக்கில் காவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை, காவலர்கள் ஒரு கடும் எச்சரிக்கையாகக் கொண்டு அஞ்சியிருக்க வேண்டும். இதுவரை நடக்கவில்லை போல்தான் தெரிகிறது. எதிர்த்துப் பேசும் பொதுமக்களை கன்னத்தில் அறைவதே தன் சாதனை முகம் என வாழ்ந்து வருகிறது நம் காவல்துறை. நல்லவேளை இப்போதெல்லாம் காவல்களே தங்களை பொதுமக்களின் நண்பன் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டது.
சென்ற ஆட்சி நிறைவின்போது கஸ்டடடி மரணமடைந்த ஆகாஷின் இறப்புக்கு முதல்வர் நேரில் சென்றிருக்க வேண்டும். செய்யவில்லை. கோவை அமுதனது பெற்றோரையாவது பார்த்திருக்கலாம்.
சமூக நீதித்துறையின் (சில வாரங்களுக்கு முன்பு: ஆதிதிராவிடர் நலத்துறை) அமைச்சராக உள்ள வன்னியரசின் செயல்பாடுகள் ஈர்க்கும் வண்ணம் உள்ளன. மக்களோடு மக்களாக அவர் இணைந்து வலம் வருவதையும் உழைப்பதையும் பொதுமக்கள் மதிக்கின்றனர். கனிமவளத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை போன்றவற்றில் நல்ல முன்னெடுப்புகள் தொடர்கின்றன. சுகாதாரத்துறையின் அமைச்சராக உள்ள அருண்ராஜின் செயல்பாடுகள் மதிக்கத்தக்க வகையில் உள்ளன. அதேவேளை இந்து அறநிலையத்துறையின் வருவாய் கோவில்களுக்கு மட்டுமே உரியது என இந்த அரசு செயல்படுவது, சமூக வளர்ச்சிக்கு விரோதமானது. அந்நிதியிலிருந்து கல்விக்கூடங்கள் தொடங்குவதாலும் கலாசாலைகளை மேம்படுத்தும் பணிகளைச் செய்வதாலும் தெய்வங்களும் பக்தர்களும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.
அதிக வருமானம் உள்ள துறையின் சம்பத்துகளைக் கோயிலுக்குள்ளே முடக்குவது மக்களுக்கு எதிரானது. தமிழ்த் தெய்வங்கள் இலக்கியங்கள் தோறும் மொழிக் காதல் கொண்டவையாக உள்ளன. குறைந்தது, கோயில்களில் இருந்து கிடைக்கும் வருமானத் தொகையில் கணிசமான பங்கைத் தமிழ் மொழி வளர்ச்சியிலாவது போடலாம்! மேலும் கோவில்களுக்குள் அலைபேசியை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று கெடுபிடி காட்டுவதும் அநாவசியமான முன்னெடுப்புகள்.
செவித்திறன் உள்ள அரசாக இது இருப்பின், இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கூர்ந்து கவனித்து மதிக்க வேண்டும்.
எந்தவொரு புது அரசையும் போலச் சொற்ப காலத்துக்குச் சாமானியர்களில் ஒருவனாகக் காட்டிக்கொண்டு, மிச்ச காலத்தில் வழமையான அதிகாரப் பண்ணையார்த்தன பாதைக்கு இந்த ஆட்சியும் திரும்பப் போகிறதா அல்லது மக்கள் வைத்த நம்பிக்கை மற்றும் அன்பின்பால் மனம் இளகி அறம்செய்ய விரும்பப் போகிறதா என்று பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கலைஞனின் குரல்
கனவுலக ஆட்சி நிகழ்ந்தாலும் புனிதர் ஒருவரே அரியணையில் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தாலும் மக்களின் கூட்டு மனசாட்சியையும் சமூக மேம்பாட்டையும் தனிமனித விழிப்பையும் கலைவழி பிரதிபலிக்கக்கூடிய கலைஞர்கள், அரசுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான கேள்விகளை முன்வைப்பதிலேதான் தங்களது கவனத்தைக் குவிக்க வேண்டும். கலைகள் நிகழ்கால அரசியல் போக்குகளைப் பாதித்த வரலாறுகள் உண்டு. தாக்கம் செலுத்தாத வரலாறும் உண்டு. ஆனால் நெடுங்கால ஓட்டத்தின் முடிவில் கலைவழி ஏற்படும் சமூக மாற்றங்களும் தாக்கங்களும் அனேகம்.
பாடல்களும் பெருங்காப்பியங்களும் கதையாடல்களும் கட்டமைத்தவையே காலந்தோறும் நமது அறங்கள். அறமதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொருவரையும் பாதித்து வந்துள்ளன. வருகின்றன. கட்டமைக்கப்பட்டவை கூர்மையுற்று சமயங்களாகவும் சித்தாந்தங்களாகவும் வளர்ச்சிபெற்று தவிர்க்கவும் மறுக்கவும் அழிக்கவும் முடியாத நிரந்தரத் தளையாக மனிதனைப் பற்றிவிடுகிறது. விரும்பியும் சூழலுக்குள் சிக்கியும் தனிமனிதர்கள் அத்தகைய கதையாடல்களின் அங்கங்களாக உள்ளனர். இப்பெரும் காலவெளியில் வெவ்வேறு தருணங்களில் சிருஷ்டிக்கப்பட்ட கதைகள் கூட்டாக இணைந்து, நம்மை ஆட்சிபுரிகின்றன. இதில் கட்சிசார்பும் ஆளுமைசார்பும் தனிநபர் அபிமானமும் தலைதூக்கிக் கலைஞனை மழுங்கடிக்கக் கூடாது.
ஏற்றதை வரவேற்கவும், ஏற்பில்லாததை மறுக்கவும், விரும்பினால் மௌனித்துக் கிடக்கவும் கலைஞனுக்கு சகல உரிமையும் உண்டு!
யூமா வாசுகிக்குப் பணி நீட்டிப்புக்கான ஆணையை விரைந்து வழங்கிய பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்குப் பாராட்டு.
ராஜ் கௌதமன், சா.கந்தசாமி உள்ளிட்ட எழுத்தாளர்களது நூல்களை நாட்டுமை ஆக்கிய தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.
கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பூமணி போன்ற இலக்கியச் சாதனையாளர்களின் இறுதிச் சடங்கில் தமிழக அரசால் அரச மரியாதை வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
கவனக்குவிதலும் வாசிப்பும்
ஒரு பிரதிசார்ந்த உண்மையான அக்கறையும் வாசிப்புத் தேடலும் சிந்தனையும் இல்லாது, அதை விளம்பரப் படுத்தி தருவதன் மூலம் சுய அடையாளத்தை உருவாக்க நினைக்கும் மோகம் வாசிப்புக் கலைக்குள் ஐக்கியம் ஆகிவிட்டதுபோல. ஓரிரு கதைகளைப் படித்துவிட்டு எழுத்தாளரை எடைபோட முனைதல்; நவீன கவிதைகள் பற்றிய அரிச்சுவடியே அறியாமல் அதில் உள்ள போதாமை என விரக்தி கலந்த தொனியில் வருந்துதல்; வாசிக்காத புத்தகத்தைப் பலரும் வியக்கிறார்கள் என்ற காரணத்தினாலே பரிந்துரைக்கிறேன் என உளறி வைத்தல் என்று கவனம் தன் மீது விழ மட்டுமே வாசிப்பு என்று வாழ்கின்றனர் ஒரு தரப்பினர்.
மிகப் பிரபலமான சமூக வலைத்தளக் கணக்கைக் கொண்டவரின் நூல்களாகத் தேடி வாசித்துப் பாராட்டுப் பத்திரம் படிப்பது; அதனால் கிடைக்கக்கூடிய விளம்பரத்தைக் கொண்டு ஆதாயம் தரும் போலி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது; குறைந்த காலத்திலே தன்னை ஓர் இலக்கிய ஆளுமையெனப் பாவித்துக் கொள்வது; துறைசார் வல்லுநர்களிடமும் அசல் ஆளுமைகளிடமும் வார்த்தை போரிடுவது; வலிமையாக உள்ள குழுக்களில் இணைந்துகொண்டு அதன் தலைமைகளைச் சந்திக்கவும் தொடர்ந்து பேசவும் உரையாடவும் செய்து அவற்றைப் படங்களாக சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றிப் பெருமையடைவது; அக்குழுக்களில் தொடர் அங்கமாகி, அறிவுஜீவி அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு இறும்பூது அடைவது என வாசகத் தரப்பில் ஒரு பிரிவு விளம்பரத் தன்முனைப்பில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
வாசிப்புக்கு என ஓர் உழைப்பு தேவைப்படுகிறது. அது நேரத்தையும் கவனத்தையும் முழுமையாகக் கோரும் பணி. ஆழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இன்றி, இன்னொருவரின் மனதின் வழி வெளிப்பட்டுள்ள பல்வேறு மனங்களை ஊடுறுவ முடியாது. அதைச் சில நூறு விருப்பக் குறியீடுகளுக்காகவும் கவனக் குவிதலுக்காகவும் செய்து வருபவர்கள் பெருகிவிட்டனர். அத்தகையவர்களின் விளம்பர மோகத்தை அறிந்து தனக்கெனப் பயன்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களும் பெருகிவிட்டனர். தன் நூலை வாசித்துக் கருத்தெழுதி மொய் வைத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக ஒரு எழுத்தாளர் பிறிதொரு எழுத்தாளருக்குக் கூச்சமின்றிப் போலச் செய்தல் வியாதியெனப் பெருகிவிட்டது.
உங்களுக்கு என்னதான் ஆயிற்று என்று இவர்களிடம் நாம் கேட்பதைக் கட்டாயம் நிறுத்தத்தான் வேண்டும். ஆனால் முடிவதில்லை.
வாழும் தகுதி!
ஆற்றுப்படை எழுத்தாளர் சிறிது காலத்திற்கு முன்பு ஒரு காணொலியில் தான் சொல்ல வரும் இந்த எளிய உட்கருத்தைக் கூட அறிய முடியாதவர் உயிருடன் இருந்து என்ன செய்யப் போகிறார்? என்றொரு கேள்வியை எழுப்பினார். அவரது உலகத்தில் அவர் அறிவேமயமாக உள்ளார். பிரபஞ்ச ஞானத்தின் திறவுகோல் அவரே! அவரது வாசகர்களும் நேயர்களும் அவரது அறிவைத் தொழுபவர்களாக மாறியுள்ளார். அவ்வறிவூற்றின் கண், அத்தகையோருக்கு அள்ள அள்ளக் குறையாத சுனையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தமிழ்ப் பூமியில் அவரை வாசிக்காத, எவரையும் வாசிக்காதவர் இருக்கத்தானே செய்வார். அவருக்கு வாழ்வதற்கான தகுதி இல்லையா! ஜீவிதம் கற்றவருக்குத்தான் சிறப்பாக அமையும் என்றால்கூட அது சரி. கற்காதவருக்கு ஜீவிதம் இருந்தென்ன என்ற சிந்தனை தூய்மையான ஆணவத்தின் வெளிப்பாடில்லையா!
எல்லாவற்றுக்கும் என்னிடம் சகல நிவாரணி மருந்துள்ளது என்று சிகிச்சை செய்யப் புகுந்திருக்கும் முதிய எழுத்தாளுமைகள் தங்களை அறிந்தும் அறியாமலும் அகந்தை தொனிக்கப் பேசிவருவது ரசிக்கும்படியாக இல்லை. இது வித்யாகர்வம் இல்லை!
***
மனதைவிட்டு அகலாத ஆழமான காட்சிகளை உருவாக்கிய, தமிழ் மக்களின் விருப்பத்திற்குரிய திரை ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாய்த் திரையிசையில் தவிர்க்க இயலாத குரலுக்கு உரியவரான பாடகி ஜானகி அம்மையாருக்கும்
உலக சினிமா ரசனை வெகுஜனத்தை எட்டவேண்டி எழுத்துப் பணியையும் சேர்த்து செய்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனுக்கும் அஞ்சலிகள்.
***
பூமணி பன்முக ஆளுமை கொண்டவர். தன் எளிய சொல்முறையாலும் அடர்த்தி நிறைந்த கதைகளாலும் தவிர்க்காமல் வாசிக்க வேண்டிய முன்னோடி என்ற இடத்தை அடைந்தவர். 6 நாவல்களும் 51 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சிறார் உழைப்பு, கரிசல் நிலத்தின் வெம்மை, உழைப்பிலே உழலும் பெண்கள், திமிர் எனும் நோய்மை நிறைந்த ஆண்கள், சாதியப் புறக்கணிப்பை ஏற்றுப் பழகும் இயல்பு கொண்டவர்கள் என அவரது எழுத்து முன் வைத்த முகங்கள் பலவாறாக உள்ளன. திரை இயக்குநராகவும் ’கருவேலம் பூக்கள்’ மூலம் காலூன்றியவர். ஆனால் வேர் பரப்பும்படி தொடரவில்லை. பூச்சுகளும் புனிதப்படுத்துதல்களும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி காட்டிய எழுத்தாளர் பூமணியின் மறைவு வேதனையளிக்கிறது. முன்னோடிக்கு அஞ்சலி.
****
கடந்த இரு ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சிகளில் வெளியான சமகால இலக்கியப் படைப்புகள் பற்றிய சிறப்பிதழாக அடுத்த இதழ் வரவுள்ளது. எழுத்தாளர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் இப்பொருண்மையில் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

ஜார்ஜ் ஜோசப்
ரமீஸ் பிலாலி
அரிசங்கர்
ஃபௌத் அல்-திக்கிரிலி
தி. மரிய தனராஜ்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
ம. கேசவன்
Be the first person to add a comment.