கட்டுரை பண்பாடு

பண்பாடு - பிடிபடாத ஒன்றின் நினைவியல்

டி. தருமராஜ்
02 Sep 2026
1

மொழியைப் பண்பாட்டின் வெளிப்பாட்டு வடிவமாகக் கருதுவது அறிவுலகின் இயல்பான பழக்கமாகிவிட்டது. ஒரு சமூகத்தின் மொழியைப் படித்தால் அதன் பண்பாட்டை அறிந்துகொள்ளலாம்; இலக்கியங்களை வாசித்தால் அதன் கூட்டு மனநிலையைப் புரிந்துகொள்ளலாம்; சடங்குகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள் ஆகியவற்றைச் சேகரித்தால் அதன் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை இதிலிருந்தே தோன்றுகிறது.  மானிடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளில் உருவான பல அணுகுமுறைகளும் ஏதோ ஒரு வகையில் இந்த பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் மீது தீவிர நம்பிக்கை வைத்துள்ளன.

ஆனால், இந்த நம்பிக்கையின் அடிப்படை சிக்கலானது. பண்பாடு என்பது உண்மையில் வெளிப்படுத்த முடிகிற ஒரு பொருளா? மொழி பண்பாட்டின் கண்ணாடியா? எழுத்து ஒரு சமூகத்தின் பண்பாட்டு உண்மையைப் பாதுகாக்கிறதா? ஒரு சடங்கு நிகழ்த்தப்படும்போது நாம் பண்பாட்டை பார்க்கிறோமா, அல்லது பண்பாட்டின் சில தடையங்களை மட்டுமே பார்க்கிறோமா என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும். 

‘மொழி, ஒரு பண்பாட்டு வெளிப்பாடு’ என்பது கவர்ச்சிகரமான வாக்கியம். ஆனால் அதில் முக்கியமானவொரு முன்தீர்மானம் மறைந்திருக்கிறது. அதாவது, மொழிக்கு முன்பே ஒரு முழுமையான பண்பாடு இருக்கிறது என்றும், அந்தப் பண்பாடே பின்னர் மொழியின் வழியாக வெளிப்படுகிறது என்பதுமே அந்த முன்தீர்மானம்.  இதன் அடிப்படையில், பண்பாடு முதன்மையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது; மொழிக்கு இரண்டாவது இடம். பண்பாட்டை உள்ளடக்கம் என்றால் மொழியை அதன் வெளிப்பாட்டு வடிவம் என்றும் சொல்ல வேண்டும்.

ஆனால், பெரும்பாலும் இது இப்படி அமைவது இல்லை.

ஒரு சமூகத்தின் அனுபவங்கள், உறவுகள், நினைவுகள், பொருட்கள், செயல்பாடுகள் போன்றவை சுயாதீனமாக ‘பண்பாடு’ என்ற பெயரில் ஒருங்கிணைவதில்லை. மாறாக, அவற்றைத் தேர்ந்தெடுத்து, பெயரிட்டு, வகைப்படுத்தி, ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்துவதன் மூலமே அவை பண்பாடாகத் தோன்றுகின்றன.  இந்த வேலைத்திட்டத்தில் மொழியின் பங்கு அதிகம்.  எனவே, நாம், மொழி பண்பாட்டின் கண்ணாடி அல்ல; பண்பாட்டைப் புலப்படுத்தும் ஒரு வகைப்பாட்டு கருவி என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நிகழ்வை ‘சடங்கு’ என்று அழைக்கும் தருணத்திலேயே அது பண்பாட்டு நிகழ்வாகத் தோன்றுகிறது. ஒரு கட்டிடத்தையோ உபகரணத்தையோ ‘பாரம்பரியப் பொருள்’ என்று அழைத்தவுடன் அது ஒரு குறிப்பிட்ட காலத்தையும் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்குகிறது. ஒரு பாடலை ‘நாட்டுப்புறப் பாடல்’ என்று வகைப்படுத்தியவுடன் அது ஒரு குறிப்பிட்ட அறிவியல் சட்டகத்திற்குள் இடம் பெற்று விடுகிறது.

எனவே மொழி பண்பாட்டை வெளிப்படுத்துவதோடு நிற்கவில்லை; பண்பாடு என்று நாம் அறியும் பொருளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

‘மொழி’ என்று சொல்லும்போது எழுத்து மொழியை வேறுபடுத்தியே ஆக வேண்டும். எழுத்து என்றைக்குமே பேச்சிற்கு நியாயமாக இருந்தது இல்லை.  ஏனெனில், அது பேச்சிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்பம். பேச்சில் குரல் இருக்கிறது; உடல் இருக்கிறது; இடம் இருக்கிறது; காலம் இருக்கிறது; தயக்கம் இருக்கிறது; மறதி இருக்கிறது; தடுமாற்றம் இருக்கிறது; கேட்பவரின் எதிர்வினையும் இருக்கிறது. எழுத்து இவற்றில் பெரும்பகுதியை நீக்கி விட்டே ஒரு பனுவலை உருவாக்குகிறது.

இதனால் எழுத்து உண்மையைப் பதிவு செய்கிறது என்று சொல்வது முழுமையானது அல்ல; துல்லியமாகச் சொல்வது என்றால், எழுத்து உண்மையைத் தேர்ந்தெடுக்கிறது.  எதைப் பதிவு செய்ய வேண்டும், எதை விட வேண்டும், எதை முக்கியமாக்க வேண்டும், எதைச் சுருக்க வேண்டும், எதை மறக்க வேண்டும் என்பதையெல்லாம் எழுத்தே முடிவு செய்கிறது.  இதனால் ஒரு எழுத்துப் பனுவலைப் பண்பாட்டின் நேரடி ஆவணமாகக் கருதுவது ஆபத்தானது. அந்தப் பனுவலில் இருப்பது முழுமைமையானப் பண்பாடு இல்லை; பண்பாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வடிவம் மட்டுமே. 

எழுத்து மௌனமாக வெளிப்படும் இடங்கள் அதன் வாக்கியங்களைப் போலவே முக்கியமானவை.  எது எழுதப்படவில்லை?  யாருடைய குரல் இடம்பெறவில்லை?  யாருடைய அனுபவம் இலக்கியமாக அங்கீகரிக்கப்படவில்லை? யாருடைய நினைவு வரலாறாகப் பதிவு செய்யப்படவில்லை?  இந்தக் கேள்விகள் இல்லாமல் எழுத்தைப் பண்பாட்டு சான்றாக வாசிப்பது, எழுத்தின் அரசியலை மூடி மறைப்பதற்கு சமம்.

இந்த இடத்தில்தான் ‘எழுத்து, பண்பாடு குறித்த ஆசை’ என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையின் பிரதிபிம்பமாக வாசிப்பதே பெரும்பான்மையோரின் வழக்கம். ஆனால் இலக்கியம் அன்றாட வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்வதில்லை. அந்தச் சமூகம் தன்னை எவ்வாறு நினைவுகூர விரும்புகிறது, எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறது, எவ்வாறு நியாயப்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்பதையும் அது வெளிப்படுத்துகிறது.

எனவே எழுத்து கடந்த காலம் பற்றிய முழுமையான ஆவணம் அல்ல.  அது கடந்த காலத்தைப் பற்றிய நிகழ்காலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவு மட்டுமே. ஒரு சமூகத்தின் எழுத்துகளை வாசிக்கும் போது அந்தச் சமூகத்தின் பண்பாட்டை நாம் நேரடியாகப் பார்ப்பது இல்லை. மாறாக, அந்தச் சமூகம் தன்னைப் பற்றி என்ன நினைக்க விரும்புகிறது என்பதையே நாம் பார்க்கிறோம்.

இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.  பண்பாடும் பண்பாட்டின் பிரதிநிதித்துவமும் ஒன்று அல்ல.  நிறைய தருணங்களில் பிரதிநிதித்துவம் ‘நானே பண்பாடு’ என்று நிரூபிக்க முயற்சி செய்கிறது.  இது நன்கு தெரிந்திருந்தும், இந்த மாறுவேஷத்திற்கு எழுத்தும் துணைபோகிறது என்பதே நம் பிரச்சினை.

எழுத்தின் நேர்மையை சந்தேகிப்பதால் பேச்சு உண்மைக்கு அருகில் இருப்பதாக அர்த்தம் இல்லை.  பேச்சும்கூட இன்னொரு வகை நிகழ்த்துதல் தான்.  ஒருவர் பேசும்போது தேர்ந்தெடுத்தே பேசுகிறார்;  தனக்கு உவப்பானதை மட்டுமே நினைவுகூர்கிறார்; பலவற்றை மறக்கிறார்; சிலவற்றை மிகைப்படுத்துகிறார்; மேலும் சிலதை தெரிந்தே மறைக்கிறார்; அபூர்வமான சில நேரங்களில் மட்டும் தன்னைத் தானே திருத்திக்கொள்கிறார்.  பேச்சு ஒரு நிகழ்வு; அதற்குள் உடல், சூழல், உறவு, அதிகாரம் போன்ற சமூகக் காரணிகள் இயங்குகின்றன.

எனவே, எழுத்து பொய்; பேச்சு உண்மை என்ற இருமை நிலைப்பாடு சரியானது அல்ல.  அதற்குப் பதிலாக நாம் இப்படிச் சொல்லிப்பார்க்கலாம்.  எழுத்தும் பேச்சும் உண்மையின் முழுமையான பிரதிநிதித்துவங்கள் அல்ல; அவை உண்மை வெளிப்படக்கூடிய வெவ்வேறு நிகழ்த்துதல் வடிவங்கள்.  

இப்படிச் சொல்வதன் மூலம் வாய்மொழி மரபை தூய்மையான, மாசுபடாத பண்பாட்டுக் களஞ்சியமாகப் பார்க்கும் பழக்கத்தை நாம் தவிர்க்க முடியும்.  ஏனெனில், வாய்மொழியும் மாறுகிறது.  ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அது மறுவடிவம் பெறுகிறது.  ஒவ்வொரு நினைவுகூரலிலும் அது புதிதாக உருவெடுக்கிறது.  ஒவ்வொரு தலைமுறையிலும் அது விதவிதமான தடயங்களை விட்டுச் செல்கிறது.

ஒரு சடங்கு நிகழ்கிறது. அதை நாம் பார்க்கிறோம். பதிவு செய்கிறோம். புகைப்படம் எடுக்கிறோம். காணொளியாக்குகிறோம். அதனைப் பற்றிய குறிப்புகளை எழுதுகிறோம். பின்னர் அதை ‘பண்பாடு’ என்று அழைக்கிறோம் என்றால், நாம் பார்த்தது என்ன?  ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், சிலக் குறிப்பிட்ட மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வு.  அந்த நிகழ்வே பண்பாட்டின் முழுமையா என்றால், இல்லை.

அந்த நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் ஞாபகமும் வேறுபடக்கூடும். அவர்கள் அதற்கு வழங்கும் அர்த்தங்கள் வேறுபடும். அந்த நிகழ்வில் பங்கேற்காதவர்களுக்கு அது நிச்சயமாக வேறுவிதமாகத் தோன்றும்.  அடுத்த தலைமுறை அதை தனக்குத் தோதான வகையில் வேறுவிதமாகவே நிகழ்த்தும்.  எனவே நிகழ்த்தல் என்பது என்றைக்குமே பண்பாட்டின் முழுமை அல்ல.

நிகழ்த்துதல் என்பது பண்பாட்டின் ஒரு தற்காலிகத் தோற்றம்.  நிகழ்த்துதலில் பண்பாட்டை நாம் முழுமையாகக் காணமுடிவதில்லை. பண்பாடு, நிகழ்த்துதலின் போது ஒரு கணம் தோன்றி பின் மறைந்து விடுகிறது.

பண்பாட்டைத் தேடும் பயணம், ஓடிக் கொண்டிருக்கும் நதியில் கையால் மீன் பிடிப்பதைப் போன்றது.  ஒவ்வொரு முறை அகப்பட்ட பின்பும் மீன் எப்படியோ நழுவி விடுகிறது.  நமக்கு கையில் எஞ்சுவது மீனின் வளவளப்பு மட்டுமே.  மீனைப் பிடித்ததற்கான் ஒரே சான்று இது மட்டுமே.  மீன் கையில் இல்லை என்பதால், அந்தத் தடயம் பொய் என்று அர்த்தம் இல்லை.  ஆனால் அதே நேரம் அந்தத் தடயம் மீனும் அல்ல.  

பண்பாட்டைப் பற்றிய நமது அனுபவமும் இப்படித்தான். ஒரு பாடல் கிடைக்கிறது. ஒரு சடங்கு கிடைக்கிறது.  ஒரு பழமொழி கிடைக்கிறது.  ஒரு பயன்படு பொருள் கிடைக்கிறது. ஒரு முதியவரின் நினைவு கிடைக்கிறது.  ஒரு ஆவணம் கிடைக்கிறது. ஒரு இலக்கியப் பதிவு கூட கிடைக்கிறது.  இவை அனைத்தும் பண்பாட்டின் தடயங்கள். ஆனால், அவை எதுவும் தனித்து பண்பாடு அல்ல.  மாறாக, அவற்றின் தொகுப்பிலிருந்து நாம் ஒரு மொத்தத்தை கற்பனை செய்கிறோம். அந்த மொத்தத்திற்கு பண்பாடு என்று பெயர் சூட்டுகிறோம்.  பண்பாடு ஒரு பருப்பொருளைப் போல நமக்குக் கிடைப்பதில்லை. அது தடயங்களிலிருந்தே புனரமைக்கப்படுகிறது.  

இந்த சிந்தனையை தெரிதாவின் ‘சுவடு’ என்ற கருத்துடன் இணைத்து யோசிக்கலாம். எந்தவொரு சொல்லும் முழுமையான அர்த்தத்தைக் கொண்டிருப்பதில்லை. அது மற்ற சொற்களின் வேறுபாடுகளையும், முந்தைய பயன்பாடுகளின் நினைவுகளையும் சுமந்துகொண்டிருக்கிறது.  

இதேபோல் பண்பாட்டிற்கும் ஒரு இறுதி அர்த்தம் கிடையாது. நாம் பண்பாட்டைக் கண்டுபிடிப்பதாக நினைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு நினைவு மட்டுமே எஞ்சுகிறது.  அந்த ஞாபகம், என்றைக்குமே, அது சுட்டக்கூடிய பொருளின் முழுமையாகாது.  இதனால் பண்பாட்டிற்கு இருப்பு இல்லை;  அது சுவடுகளின் தொடர்ச்சி.  பண்பாட்டை நம்மால் நேரடியாக அறிய முடியாததன் காரணம் அது எங்கேயும் இல்லை என்பதால் அல்ல.  மாறாக, அது எல்லா இடத்திலும் இருக்கிறது என்பதாலேயே நம்மால் முழுமையாக உணர முடிவதில்லை. 

மேலும், பண்பாடு எப்போதும் ஏதோ ஒன்றின் வழியாக மட்டுமே நம்மைச் சந்திக்கிறது. ஒரு மொழியின் வழியாகவோ. ஒரு பொருளின் வழியாகவோ. ஒரு நினைவின் வழியாக. ஒரு உடல் இயக்கத்தின் வழியாக.  ஒரு கதையின் வழியாக.  இவை அனைத்தும் பண்பாட்டைச் சுட்டுகின்றன என்றாலும், பண்பாடு இவற்றில் முழுமையாக அடங்குவதில்லை.

அதே நேரம், பண்பாட்டின் சுவடுகளை / தடயங்களை சேகரிப்பது ஒரு முழுமையான அறிவியல் செயல்பாடும் அல்ல.  எதைத் தடயமாகக் கருதுவது?  அவற்றுள், எதைப் பாதுகாப்பது?  எதைப் பதிவு செய்வது? இறுதியில் எதை ‘பண்பாடு’ என்று பெயரிடுவது போன்ற அனைத்தும் அதிகாரத்துடன் தொடர்புடையவை.

இந்த இடத்தில் ஃபூக்கோ குறிப்பிடும் சொல்லாடலின் ஒழுங்கை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.  ஒரு சமூகத்தின் எல்லா செயல்பாடுகளும் சமமாக அணுகப்படுவதில்லை.  சில நடைமுறைகள் பாரம்பரியம் என்று அழைக்கப்படுகின்றன; சில மூடநம்பிக்கை என்று சொல்லப்படுகின்றன. சில மொழி வெளிப்பாடுகள் செம்மையானவை என்று அங்கீகரிக்கப்படுகின்றன; சில கொச்சை என்று நிராகரிக்கப்படுகின்றன. சில நினைவுகள் வரலாறு ஆகின்றன; மற்றவை கதை அல்லது புராணம் ஆகின்றன.

எனவே பண்பாடு பற்றிய கேள்வி,  ‘பண்பாடு என்றால் என்ன’ என்பதோடு முடிந்து விடுவதில்லை.  அதற்கு முன்பாக, ‘எதைப் பண்பாடு என்று அழைக்க முடியும்’ என்று நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.  அதிலும் முக்கியமாக, ‘ஒரு காரியத்தை பண்பாடு என்று அழைக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது’ என்றும் நாம் கேட்க வேண்டும்.

இன்னொரு வகையில், பண்பாட்டை ஒரு அறிவுத் தொகுப்பாகப் பார்ப்பதும் பிரச்சினைக்குரியது தான். ஒரு குழந்தை ஒரு சமூகத்தின் பண்பாட்டை அகராதி அல்லது பாடநூல் வழியாகக் கற்றுக்கொள்வதில்லை.  எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும், யாரிடம் எப்படி பேச வேண்டும், எந்த இடத்தில் எப்படி உட்கார வேண்டும், எந்த உணவை யாருடன் பகிர வேண்டும், உடலை எவ்வாறு வைத்திருக்க வேண்டும், போன்ற தகவல்கள், அது வளர வளர, படிப்படியாக அதன் உடலில் பதிய ஆரம்பிக்கின்றன. பியர் பூர்தியோ இதனை ‘பழக்க வழக்கம்’ என்ற கருத்தின் வழியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.  பழக்கவழக்கம் என்று சொல்லும் போது பண்பாடு அறிவதற்கான பொருள் அல்ல என்பது நமக்குத் தெளிவாகிறது.  அது நம் உடலின் பல்வேறு பாகங்களிலும் படிந்திருக்கும் அனுபவத் திறன்.  

மொழியை புத்திபூர்வமாய் உள்வாங்கிக் கொள்வதைப் போல பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை.  மொழி, நமது மூளையில் பதிந்திருக்கிறது என்றால், பண்பாடு உடலெங்கும் பதிந்திருக்கிறது.  எனவே அதை ஒருவர் பழகிக் கொள்ள முடியுமேயொழிய கற்றுக் கொள்ள முடியாது.  உறவுமுறை அமைப்பே பண்பாட்டின் சூத்திரம் என்று யோசித்த ஆரம்பகால மானிடவியலாளர்கள், ஒரு பண்பாட்டை முழுமையாக விளங்கிக் கொள்ள அதில் நேரடியாகப் பங்கேற்பதே ஒரே வழி என்று கருதி, தாம் ஆராயச் சென்ற பழங்குடியினப் பெண்களையே மணந்து கொள்ளும் சாகசங்களை செய்து பார்த்திருந்தார்கள்.  

அதே போல், தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக் கொள்ள விரும்பிய ஐரோப்பிய மதபோதகர்கள் தங்கள் பெயர்களைத் தமிழில் மாற்றிக் கொண்டதோடு, தமிழ் சந்நியாசிகளைப் போல வாழவும் முற்பட்டார்கள் என்பது வரலாறு.  இந்த இரண்டு முயற்சிகளுமே தோல்வியில் முடிந்ததைத் தான் நாம் பார்க்கிறோம்.  பண்பாட்டைக் கற்றுக் கொள்வதற்கு கண்மூடித்தனமான நம்பிக்கையொன்று தேவைப்படுகிறது என்பதை மானிடவியலாளர்களும் மதபோதகர்களும் கவனிக்க மறந்தார்கள் என்றே தோன்றுகிறது.  

பண்பாட்டில் திளைப்பதற்கு விமர்சனக் கண்ணோட்டத்திற்கு இடம் இல்லை என்பது முக்கியம்.  ஆனால், மானிடவியலாளர்கள் அந்தந்தப் பழங்குடிப் பண்பாட்டின் அமைப்பியல் கூறுகளையே தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்ததால் பண்பாட்டை அறிவியல் கண்ணோடு பார்ப்பதிலிருந்து விடுபட முடியாமல் போயிற்று.  அதே போல், ஐரோப்பிய மதபோதகர்களூம் கூட தமிழ்ப் பண்பாட்டின் மீது காட்டிய அக்கறை வாழ்வதற்காக அல்ல என்பது முக்கியம்.  தமிழ்ப் பண்பாட்டுக் கற்றலை அவர்கள் ஒரு சாகசம் போலச் செய்ய விரும்பினார்கள்.  அதுவே அவர்களின் தோல்வியாக மாறியது.  நிறைய மொழிகளை ஒருவரால் கற்றுக் கொள்ள முடியும்; பேசவும் முடியும்.  ஆனால், ஏதாவது ஒரு பண்பாட்டில் தான் வாழ முடிகிறது.  

பண்பாட்டை ஏன் கற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதற்கு அதன் பன்முகத்தன்மையையும் காரணமாகச் சொல்ல வேண்டும்.  தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும்போது, ஒரே மாதிரியான அனுபவங்களைப் பெற்ற சமூகத்தை நாம் கற்பனை செய்கிறோம்.  ஆனால் ஒரு சமூகத்திற்குள் சாதி, வர்க்கம், பாலினம், மதம், தொழில், வட்டாரம், தலைமுறை, நகரம், கிராமம், கல்வி, பொருளாதார நிலை என்று எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன.  எனவே பண்பாட்டை பன்மை என்று அழைப்பதே சரியாக இருக்கும். 

அதற்கு ஒரு மையம் இல்லை.  ஒரே குரல் இல்லை.  ஒரே அனுபவம் இல்லை.  ஒரே நினைவு இல்லை.  ஆனால், ஒரே மாதிரியான உணர்வெழுச்சிக்கு அது ஆட்படுகிறது.  இதனால் ‘தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன’ என்ற கேள்வியை விட, யாருடைய அனுபவங்கள், எந்த வரலாற்றுத் தருணத்தில் ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற பெயரில் ஒன்றிணைக்கப்படுகின்றன என்ற கேள்வியே சரியானதாக இருக்கும். 

இங்கே பண்பாட்டின் இன்னொரு அடிப்படை குணம் வெளிப்படுவதைக் கவனியுங்கள். எந்தவொரு சமூகத்திற்கும் அதன் கடந்த காலம் சிதறிக் கிடப்பதில் விருப்பமில்லை.  அது ஒரு தொடர்ச்சியை எதிர்பார்க்கிறது.  அதனால் அது கடந்த காலத்தை கூடுதல் அக்கறையுடன் கையாளத் தொடங்குகிறது.  தனது கடந்த கால நிகழ்வுகளில் சிலவற்றை நினைவுகூர்கிறது.  வேறு சிலவற்றை மறந்து விடுகிறது.  அதன் பின், இன்னும் சொற்பமானதை புனிதப்படுத்துகிறது.  ஒன்றிரண்டை வெட்கப்பட வேண்டியவை என்றும் அறிவிக்கிறது.  சிலவற்றை பெருமையாக மாற்றுகிறது.  இவ்வாறு பண்பாட்டின் கடந்த காலம் நிகழ்காலத்தால் மறுசீரமைக்கப்படுகிறது.  இந்த அடிப்படையில், பண்பாடு என்பது கடந்த காலத்தின் மிச்சமீதி அல்ல என்று நம்மால் சொல்ல முடியும்.  கடந்த காலம் பற்றிய நிகழ்காலத்தின் ஆசையே பண்பாடு.  இந்த அடிப்படையில், மரபு அல்லது பாரம்பரியம் என்பது பழைய விஷயம் அல்ல; பழைய ஒன்றை நிகழ்காலம் தேர்ந்தெடுத்து மரபாக மாற்றியமைத்திருக்கிறது. 

இதன் விளைவாக, பண்பாட்டை ஒரு களஞ்சியமாகக் கருதும் பார்வையையும் நாம் மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும்.  களஞ்சியம் என்று சொல்வதன் மூலம் அதற்குள் ஏற்கெனவே பொருட்கள் இடப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றைத் தேடிச் சென்று மீட்டெடுக்கலாம் என்றும் ஒரு சித்திரம் தோன்றுகிறது.  ஆனால் பண்பாடு அப்படி அல்ல.  நாம் ஒரு பண்பாட்டு களஞ்சியத்தை உருவாக்கும் தருணத்தில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விலக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறோம்.  எனவே, களஞ்சியம் பண்பாட்டை சேமிக்கிற காரியம் மட்டுமில்லை; பண்பாடு என்ற கருத்தையும் அதுவே உருவாக்குகிறது.  

நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவன் அவற்றை மட்டும் சேமிப்பதில்லை. ‘நாட்டுப்புறப் பாடல்’ என்ற வகைமையையும் அவனே உருவாக்குகிறான்.  சடங்குகளைப் பதிவு செய்பவன் சடங்கை மட்டும் பாதுகாப்பதில்லை. ‘சடங்கு’ என்ற அறிவியல் வகைமையை அவன் உருவாக்குகிறான்.  இதனால் பண்பாட்டு ஆய்வாளர் புறவயமானவர் அல்ல என்பது உறுதியாகிறது. அவர் பண்பாட்டை உருவாக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்க ஆரம்பிக்கிறார். 

இந்தக் கோட்பாடு நாட்டுப்புறவியலில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.  நாட்டுப்புறவியல் நீண்ட காலமாக மக்களின் பண்பாட்டை சேகரித்து, பதிவு செய்து, பாதுகாக்கும் முயற்சியாக தன்னை முன்வைத்து வருகிறது.   ஆனால், இங்கு ஒரு புதிய கேள்வி எழுகிறது.   நாம் மக்களின் பண்பாட்டைச் சேகரிக்கிறோமா, அல்லது மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து பண்பாடு என்ற ஒரு அறிவியல் பொருளை உருவாக்குகிறோமா?  

இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டா என்றால், உண்டு.

ஒரு பாடலைப் பதிவு செய்வதன் மூலம் அப்பாடலைப் பாதுகாக்கிறோம் என்று நாம் சொல்லலாம்.  பாடல் நிகழ்த்தப்பட்ட சூழலைக் கூட நம்மால் பாதுகாக்க முடியும்.  ஆனால், பாடகரின் உடலை, கேட்பவர்களின் உள்ளத்தை, நிகழ்வின் காலப்பரிமாணத்தை, மக்களின் மறதிகளை, அதில் நடைபெற்ற மாற்றங்களை, மௌனங்களைப் பதிவு செய்ய முடியுமா?  அப்படி இல்லாமல், ஒரு பாடலைச் சூழலோடு பதிவு செய்த தருணத்திலேயே அந்நிகழ்வு வேறொன்றாக மாறிவிடுகிறது. எனவே நாட்டுப்புறவியலின் பிரச்சினை தரவு சேகரிப்பு மட்டும் அல்ல.  அத்தரவுகளை பருப்பொருளாகக் கருதிவிடும் அபாயமே நமக்கு முக்கியமானது.

அப்படியானால் பண்பாட்டைப் புரிந்துகொள்ளவே முடியாதா என்று ஒருவர் கேட்கலாம்.   முடியும்.  ஆனால் முழுமையாக அறிதல் என்ற வேட்கை என்றைக்குமே நிறைவேறுவதில்லை. அதனால், பண்பாட்டைப் புரிந்துகொள்வது என்றால் அதன் முழுமையான சாரத்தை மீட்டெடுப்பது அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அது விட்டுச் செல்லும் சுவடுகளுக்கு இடையிலான உறவுகளைப் புரிந்துகொள்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். எது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, எது மறைந்து கொண்டிருக்கிறது, எது புதிதாக உருவாகிறது, எது நினைவில் வைக்கப்படுகிறது,  எது மறக்கப்படுகிறது, எது எழுதப்படுகிறது,  எது பேசப்பட்டபடியே மறைந்து போகிறது,  எது அதிகாரத்தால் அங்கீகரிக்கப்படுகிறது,  எது நிராகரிக்கப்படுகிறது, போன்ற கேள்விகளின் வழி மட்டுமே பண்பாட்டு ஆய்வுகள் தங்களை விமர்சனபூர்வமாய் தரமுயர்த்திக் கொள்ள முடியும்.

இறுதியாக, ‘பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதா’ என்ற கேள்வியை விட ‘பண்பாடு என்று நாம் ஏன் ஒரு பொருளை உருவாக்க வேண்டியிருக்கிறது’ என்ற கேள்வியே முக்கியமானதாகிறது.  பண்பாடு என்பது அன்றாட வாழ்வின் பின்னால் ஒளிந்திருக்கும் மறைபொருள் அல்ல.  அது சமூக வாழ்க்கையின் பல்வேறு சுவடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஒரு கருத்தாக்கம்.  அதனால் பண்பாடு உள்ளர்த்தமாக இருப்பதைவிட ஒரு ஆய்வுச் சிக்கலாகவே எப்பொழுதும் இருக்கிறது.  அந்த வகையில், பண்பாடு ஏற்கனவே சொல்லப்பட்ட அர்த்தம் அல்ல; தொடர்ந்து மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டிய கேள்வி.

பண்பாட்டைப் பிடிக்க முயல்வது கைகளால் மீனைப் பிடிப்பதைப் போன்றது என்றே சொல்ல வேண்டும்.  நமக்கு எஞ்சுவது அதன் வளவளப்பு மட்டுமே.  அந்த வளவளப்பு உண்மையானது.  ஆனால் அது மீனின் முழுமை அல்ல.  அதை உணரும் ஒவ்வொரு முறையும் மீனை நம்மால் நினைவுகூர முடியும்.   அதன் வடிவத்தை ஊகிக்க முடியும்.   அது எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடியும். ஆனால் கையில் உணரும் வளவளப்பைக் காட்டி இதோ மீன் என்று சொல்ல முடியாது.  பண்பாட்டைப் பற்றிய நமது அறிவும் இதேபோலத்தான்.  ஒரு மொழி. ஒரு கதை. ஒரு சடங்கு. ஒரு பாடல்.  ஒரு பொருள். ஒரு உடல். ஒரு நினைவு. ஒரு ஆவணம். ஒரு எழுத்து.  இவை அனைத்தும் பண்பாட்டின் வளவளப்புகள் தான்.  அவற்றை ஒன்றாக இணைத்து நாம் பண்பாடு என்று சொல்லிக் கொள்கிறோம்.   ஆனால் அந்தத் தொகுப்பின் பின்னால் இருக்கும் ஒரு முழுமையான, நிலையான, தூய்மையான பண்பாட்டை எவராலும் பிடித்துக் காட்ட முடியாது.

எனவே பண்பாட்டைத் தேடும் ஆய்வு, பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆய்வாக இருக்க வேண்டியதில்லை.  அது பண்பாடு என்று அழைக்கப்படும் தடயங்கள் எவ்வாறு உருவாகின்றன, தேர்ந்தெடுக்கப்படுகின்றன, மறக்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன, அதிகாரத்திற்கு உட்படுத்தப்படுகின்றன, மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன என்பதைக் கண்டறியும் விமர்சனமாக இருக்கலாம்.  இதனால் பண்பாட்டின் உண்மை அதன் இருப்பில் இல்லை. அதன் நழுவலில் இருக்கிறது. அதை நாம் பிடித்த தருணத்தில் அது பண்பாடாக இல்லாமல் ஒரு உணர்வாக மாறி விடுகிறது.  பிடிக்க முடியாத இடங்களில் மட்டுமே அது பண்பாடாகத் தொடர்கிறது.  பண்பாடு என்பது கையில் கிடைத்த மீன் அல்ல; கையில் எஞ்சிய வளவளப்பின் பெயர்.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி. தருமராஜ்

மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கு வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கூட. ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் ப்ணியாற்றியவர். அயோத்திதாசரை முற்றிலும் புதிய கோணத்தில் விவாதிக்கும் ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ என்ற நூல், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த அடிப்படை நூலாகத் திகழும் ‘தமிழ் நாட்டுப்புறவியல்’, மிகுந்த சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளான ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பான ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’, பெரிதும் வரவேற்பைப் பெற்ற ‘யாதுக் காடே யாவரும் மிருகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர். இவரது சமீபத்திய நூலான ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ தொடர்ச்சியான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எழுத்துலகின் உச்சம் என்றும் முன்னுதாரணங்கள் இல்லாதது என்றும் கருதப்படும் இந்நூல், சமகாலத் தமிழக அரசியலை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் விளக்குகிறது.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Maria Dhanaraj T   16 hours ago

The concept of 'Cultural Memory' by Aleida and Jan Assmann could be also included in the discussion.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ரோலாண்ட் பார்த்பேட்டிகுறுங்கதைசுஜித் லெனின்ஏ ஜி கௌதம்நிலமெங்கும் பூத்த முகம்ரூமி‘எழுத்தாளரின் மரணம்பிரான்ஸ் காஃப்காஅதிகாரம்இலக்கிய நிகழ்வுகள்தமிழக அரசியல்சாய் வைஷ்ணவிபோர்வைத்தியம்பின்னவீனத்துவம்கவிதைகள்ரமீஸ் பிலாலிசீர்மைநேர்காணல்தலித் வரலாறுகுறிகேட்டல்காஃப்காவின் காதுகள்அப்பாவின் குழிஆய்வுஒளிரும் சொற்கள்நகர மயமாக்கம்தொ.பத்தினாதன்அநித்யம்பதிப்புத் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!