ங்கோத்தா.
என்னுடைய மண்டைக்குள் ஓர் எல்நினோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உடலின் அத்தனை தசைகளும் எனக்கெதிராக ஓலமிடுகின்றன. எலும்புகள் முறுக்கிக்கொண்டு வலிக்கின்றன. மூளை உருகி வழிவதாகத் தகிக்கிறது. நாவு தாகத்தில் எரிய இன்னொருமுறை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
ங்கோத்தா.
கிளைகளில் பூத்து பின் கனிந்து யாராலும் பறவைகளாலும் பூச்சிகளாலும்கூட சீந்தப்படாமல் மரத்திலேயே அழுகிப்போகும் ஒரு கனியைப்போல என் வாழ்க்கை நாறிக்கிடக்கிறது.
கைவிடப்பட்ட ரயில்நிலையத்தின் ஆள்நடமாட்டமற்ற தண்டவாளத்தில் எங்கும் நகராமல் நிற்கும் ஒரு துருப்பிடித்த ரயில்பெட்டியைப் போல எனக்குள் காலம் அசைவற்றிருக்கிறது.
ஒரு நூறாயிரம் ஊசிகளைக் கொண்டு குடைவதுபோல மனதுக்குள் மிகுந்த வேதனையை உணர்கிறேன்.
தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளையைத் தானே வெட்டிக்கொண்டிருந்த காளிதாசனின் கதையை நீங்கள் அறிவீர்கள்தானே? அத்தகைய மனிதர்களின் வழிவந்தவன் நான். கசப்புகளும் துயரங்களும் இழப்புகளும் முடிவின்றி நீளும் நித்தியகாலத்துக்குள் சிக்கியவனாயிருக்கிறேன். என் இழப்புகளின் அளவைக் கணக்கிடும் எந்தக் கருவியும் பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ங்கோத்தா.
வாழ்க்கையில் எனக்கென்று பெரிய கனவுகள் ஏதும் இருந்ததில்லை. அதுவே என் குற்றமாகவும் இருக்கக்கூடும். உண்மையில் இவ்வாழ்க்கை எனக்கு எண்ணற்ற நலங்களை அளித்திருக்கவேண்டும். வசதிகளையும் அனுபவங்களையும் வாரி வழங்கியிருக்கவேண்டும். ஆனால் அது என்னை அழிக்கத்தான் செய்திருக்கிறது. எனக்கு வாய்த்ததெல்லாம் செக்குமாடு போல சுவாரசியமற்ற ஒரு வாழ்க்கை. எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய நல்லவைகளைப் பட்டியலிட்டு வெறுமனே அவற்றை மனதுக்குள் நிகழ்த்திப் பார்க்கும் சுதந்திரம்கூட எனக்கில்லை.
பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காததன் பலனை தற்போது அனுபவிக்கிறேன். ஒரு மனிதனுக்கு மூன்றுவேளை உணவும் இருக்க இடமும் போதாதா? ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால் இந்தவூரில் தலைக்குப் போய் காலுக்கு வருமென இருபது வருடங்களுக்கு முன்பு என் அம்மாவிடம் வீரவசனம் பேசியிருக்கிறேன். ஆனால் இன்று அவ்வளவு சிறிய பணத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் புடுங்க முடியாது என்பதுதான் நிதர்சனம். பணம் மனிதனுக்குத் தரக்கூடிய சவுகரியங்களில் இருந்து விலகி நிற்பதாக பாவனை செய்தே நாற்பத்தைந்து வருடங்களை ஓட்டி விட்டேன். ஆக அதே பணம் இன்று என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கிறது. இதை விளக்கிச்சொல்ல நான் பெரிய பெரிய கற்பனைகளுக்கெல்லாம் போக வேண்டியதில்லை. வெறுமனே என்னைச் சுற்றி இருக்கும் மக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும். எனக்குத் தெரிந்த மனிதர்களனைவரும் ஒவ்வொரு வருடமும் பணக்காரர்களாகிக் கொண்டே போகிறார்கள். பணம் எப்போதும் பணத்தை மதிப்பவர்களிடம்தான் சேரும் என்று சொல்வார்களே, சத்தியமான உண்மை. பள்ளியிலும் கல்லூரியிலும் என்கூடப் படித்தவர்கள் யாரும் இன்று நம் நாட்டிலில்லை. எவனைக் கேட்டாலும் (எவளையும்தான்) வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்போது அழைத்தாலும் பயணத்திலிருப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். விடுமுறைகளுக்கு பாலி, தாய்லாந்து போகிறார்கள். மூன்று மாடிகளோடு வீடு கட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் மூன்றுக்கும் குறையாமல் வீடு கட்டிக்கொள்கிறார்கள். நான் இன்னும் இந்த மாதவாடகைக்கு என்ன செய்வதென்பதை யோசிக்கிறேன்.
எழுத ஆரம்பித்த நாட்களில் என்னோடு நெருக்கமாயிருந்த ஒரு நண்பன் சலித்துக்கொள்வான். தலைக்கு மேல் கூரையும் சுற்றி நான்கு சுவர்களும் கொண்ட ஒரு வீட்டைச் சுட்டி இனி இதற்குள்தான் வாழ வேண்டும் என்பதை யோசிக்கும்போதே எனக்கு அச்சமாயிருக்கிறது நண்பா. இன்று அவனுக்கு ஊருக்குள் எத்தனை வீடுகள் உள்ளன என்பது அவனுக்கே தெரியாது. கேட்டபோது மாற்றம் ஒன்றுதான் மாறாதது நண்பா என்று பாபா முத்திரை காட்டினான். நான் எங்கு சென்று முட்டிக்கொள்ள? கல்லூரியில் என்னோடு படித்த ஒருவனுக்கு 48 அரியர்கள். நான்கு வருடங்கள் படிப்பு முடிந்து கிளம்பும்போது அவனுக்கு அத்தனை ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். சென்றவாரம் பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தான். துபாயில் புதிய தொழிற்சாலை தொடங்கியுள்ளான். இத்தோடு அவனுடைய தொழில்களின் எண்ணிக்கை இருபதைத் தொட்டுவிட்டதாம். நான் பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கிவிட்டு இதோ இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
பாவப்பட்ட ஏழை மனிதர்கள் என யாரும் என்னைச் சுற்றி இல்லையா? அல்லது நான் அவர்களை விட்டு விலகி வந்துவிட்டேனா? அவர்களோடு சேர்ந்து கடல்களுக்குச் சென்றிருக்கிறேன். அலைகளோடு ஆர்ப்பரிக்கும் வெறித்தனமான கடல். பனைமரங்களையும் தாண்டியெழும் அலைகள் எங்களை அச்சுறுத்தின. காற்றைக் குச்சிகளாகப் பயன்படுத்தி இடிகளை எங்கள்மீது ஏவியது வானம். எங்களுக்கான உணவைத் தர மறுத்துவிட்டது கடல். ஒரு மீன் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அலைகளின் வரத்தும் குறையவில்லை. நிலவு மேலேறும் பொழுதுகளில் அலைகள் மேலும் உயர்ந்து எங்களை அச்சுறுத்தின. வேறு வழியின்றி வெறுங்கையோடு வீடு திரும்பினோம். அவர்கள் வெற்றுச் சிப்பிகள், ஒருபோதும் அவர்களுக்குள் முத்துகள் விளையாதென்பதை உணர்ந்தேன். அன்றிலிருந்து நான் அவர்களை விட்டு விலகிவிட்டேன்.
எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் உணர்வு என்னை ஆக்கிரமித்துக் கொள்ள தனித்திருக்க விரும்பியே நான் எளியவர்களை விட்டு விலகினேன். அவர்களோடு என்னால் தொடர்ச்சியாகப் பேசமுடியாது. என்னுடைய விருப்பங்களும் அவர்களின் தேர்வுகளும் வேறுவேறாக இருந்தன. ஆனால் நான் பேச விரும்பும் மனிதர்களிடம், என்னைப் புரிந்துகொள்வார்கள் என நினைப்பவர்களிடம் நிறையப் பணமிருக்கிறது. ஆனால் பகிர்ந்துகொள்ளும் மனமில்லை. தங்கள் நண்பன் எழுத்தாளன் என்பதில் இவர்களுக்கெல்லாம் பெருமையுண்டு. பிரபஞ்சத்தின் நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து என்னைப் பிடுங்கிவந்து காலம் அவர்களின் கைகளில் தந்திருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் எனக்கென்று எதையும் செய்ய அவர்களுக்குத் தோன்றாது. இவர்களில் யாராவது என்னைத் தத்தெடுக்கக்கொள்ள மாட்டார்களா என நான் ஏங்குகிறேன். ஆனால் அவர்கள் அதை யோசிக்கவும் மாட்டார்கள். அவர்கள் வசிக்கும் வசதியான வட்டத்துக்கு வெளியே நின்று பேசமட்டுமே எனக்கு உரிமையுண்டு. ஆனால் உள்ளே வர எனக்கு ஒருபோதும் அனுமதி கிட்டாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னும் கொஞ்சம் பணம் மட்டும் என்னிடம் இருந்திருந்தால் என் அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்றி மேலும் சில காலம் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்திருப்பேன்.
கசப்பும் வெறுப்புணர்வும் எனக்குள் நச்சுப் புகையைப்போல பரவி நிற்கின்றன. ஆகவே முன்னைவிட இன்னுமதிகமாக என்னை இறுக்கிக் கொள்கிறேன். உண்மையில் இதுவொரு தற்காப்பு முயற்சி. என்னைக் கடுமையானவனாகக் காட்டிக்கொள்ளும்வகையில் என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன். என் ஏமாற்றங்களை எனக்குள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கிறேன். ஏதாவது பெரிய அற்புதம் நிகழ்ந்தாலொழிய எனது இந்த நிலை மாறப்போவதில்லை. ஆனால் நான் பிழைத்துக்கிடப்பதே பெரிய அற்புதம் எனும்போது இன்னொரு அற்புதத்துக்கு நான் எங்கே போக? புலம்பிச் சாவது மட்டும்தான் எனக்கு முன்னாலிருக்கும் ஒரே வாய்ப்பு. ஏன் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? என் ஒருவனின் கனவுகளை நிறைவேற்றுவதால் இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் தலைகீழாகப் புரண்டுவிடுமா என்ன?
ங்கோத்தா.
ஒரு மனிதன் பிறக்கும்போது அவனுடைய தரித்திரமும் கூடவே பிறந்து விடுமா என்ன? நான் புராணங்களை புரட்டிப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் ஏதோ பெயரில் துரதிர்ஷ்டத்தின் தேவதைகளைப் பற்றிச் சொல்கிறார்கள். நம்மூரில் அவளின் பெயர் மூதேவி அல்லது அ-லட்சுமி. சீதேவியின் அக்கா. கிரேக்கப் புராணத்தில் வரும் ஏடி மனிதர்களைத் தவறான முடிவுகளின் மூலம் மாபெரும் துயரங்களுக்கு அழைத்துச் செல்பவள். கிரேக்க மக்களிடம் இன்னொரு கடவுளும் உண்டு. ஓய்சிஸ் – வலியின் முழுவடிவம். ஜப்பான் மக்களோ வறுமையின் தேவதைக்கு பின்போகாமி எனப் பெயரிடுகிறார்கள். விதியின் வடிவமான பெண் கடவுளை ரோமானியர்கள் பார்சே என்று அழைக்கிறார்கள். இவர்களில் யார் என்னோடு பிறந்தது? நான் கடவுள்களை நம்பாதவன். ஆனால் இத்தனை துன்பங்களுக்குப் பிறகு, குறைந்தபட்சம் துயரைத் தாங்கிவரும் இத்தேவதைகள் நம்மோடு எங்கோ ஒளிந்துள்ளன என்பதை நம்புகிறேன். என்னை இத்தனை வாட்டிவதைக்குமளவுக்கு நான் செய்த தவறுகள் என்னவென்பதைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
பிறந்த நாட்களிலிருந்தே இந்தத் துயரங்கள் என்னைப் பற்றிக்கொண்டன என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். எனக்கு முன்னால் என் அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்தன. அவற்றில் ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. நான் இந்தப் பூமியில் நிலைபெறுவேன் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு வெகு குறைவாகவே இருந்தது. நான் பிறந்து பத்து மாதங்கள்வரை அம்மா என்னைக் கைகளில் ஏந்தவே அஞ்சி நடுங்குவார் என்பார்கள். அம்மாவுக்கு நம்பிக்கை வந்து என்னை ஏந்திய கணங்களில் அப்பா என்னை விட்டு விலகிச்சென்றார். அவருக்கு அதற்கான நியாயங்கள் இருந்திருக்கலாம். ஆனால் பத்துவயது வரைக்கும் உன் அப்பா யார் என்ற கேள்வியை மகன் எவ்வாறு எதிர்கொள்வான் என்பதையும் அவர் யோசித்து இருக்கலாம். பள்ளியில் உடன்படிப்பவர்கள் அனைவருக்கும் அப்பா என்ற உறவிருப்பதே எனக்கு அக்காலங்களில் அதிசயமாயிருந்தது. என்னுடைய அந்தச் சிறிய வீட்டில் என்னோடு இந்த தரித்திரமும் சேர்ந்தே உறைந்திருந்தது. ஏறத்தாழ பத்துப் பேருக்கும் அதிகமிருந்த குடும்பத்தில் எனக்கென எதையும் வாய்திறந்து கேட்கமுடியாது. மாதமொருமுறை வாங்கும் கறியைக்கூட முழுதாய் ரசித்துச் சாப்பிடவிடாமல் அம்மாவின் கண்கள் எப்போதும் என்மீது ஆழமாய்ப் பதிந்திருக்கும். இன்னும் கொஞ்சம் வேண்டுமென மகன் கேட்டுவிடுவானோ என்கிற பயம் அவருக்குள் என்னவாய் உறைந்திருக்குமென்பதை இன்று என்னால் உருவகப்படுத்த முடிகிறது. என்னைப் பள்ளியில் சேர்க்கவும் படிக்க வைக்கவும் அவர் யாரிடமெல்லாம் கெஞ்சியிருப்பார் என்பதை யூகிக்கமுடிகிறது.
பள்ளியில் உடன்படிப்பவர்கள் காரில் வருவார்கள். ஒருசிலரை அவர்களின் அப்பா பைக்கில் கொண்டு வந்து விட்டுப்போவார்கள். நான் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடப்பேன். என்னுடைய இன்னொரு கையை தரித்திரம் பிடித்திருக்கும்போல. இடைவேளை நேரங்களில் எல்லாக் குழந்தைகளும் அப்பளமும் எலந்தவடையும் வாங்கிச் சாப்பிடுவார்கள். நான் அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருமுறை பள்ளியில் மாறுவேடப்போட்டி நடத்தினார்கள். நான் தாத்தாவின் வேட்டியை கட்டிக்கொண்டு பாரதியாரின் பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன். ஆனால் பரிசு இன்னொருவனுக்குச் சென்றது. அவன் எமனின் வேடத்தைப் பூண்டிருந்தான். அவன் அப்பா ஊருக்குள் மிகப்பெரிய மருத்துவர். அந்தச் சிறிய பள்ளியில் நடந்த எளிமையான போட்டிக்கு அவர் சென்னையில் திரைப்படங்களில் பணியாற்றும் ஒருவரை அழைத்துவந்து மகனுக்கு ஒப்பனை செய்வித்தார். பணமும் அதிகாரமும் என்ன செய்யும் என்பதை வாழ்வில் முதன்முதலாக உணர்ந்த தருணம் அது.
எனது பத்தாவது வயதில் அப்பா என்னிடம் வந்தார். எல்லாவற்றையும் தாண்டி அவருக்கு என்மேல் பாசமிருந்தது. ஆனால் சிறுவயதுமுதலே அவரைப் பற்றி நான் கேட்டு வளர்ந்திருந்த வார்த்தைகள் அவரிடம் என்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்வதைத் தடுத்து நிறுத்தின. உன்னை நான் நேசிக்கிறேன் என்பதை எனக்குத் தெரியப்படுத்த அந்த எளிய மனிதர் அவரால் இயன்ற அனைத்தையும் செய்வார். திரைப்படங்களுக்கு அழைத்துப் போவார். எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கித் தருவார். தீபாவளிக்கு பண்டு பிடித்து பட்டாசுகளை வாங்கிவரும் பழக்கம் நான் வந்தபிறகே அவருக்கு வந்ததாகப் பெருமைபொங்கச் சொல்வார். அனைத்தையும் நான் வாங்கிக் கொள்வேன். எனக்குச் செய்யவேண்டிய கடமை என்பதைவிட சிறுவயதில் எனக்கு அவரிழைத்த தவறுகளுக்கு மாற்றாகவே அவற்றைக் காண்பேன். முழுமனதாக அவரோடு ஒட்டிக்கொள்ள எனக்கு ஆகவில்லை. அவர் சார்ந்த மனிதர்களைக் காணும்போதெல்லாம் வெறுப்பு மட்டுமே எனக்குள் நிறைந்திருக்கும். என் அம்மாவின் பத்துவருடத் துயரங்களுக்கு இவர்களே காரணமானவர்கள் என்பது நினைவுக்கு வரும்போதெல்லாம் நரகலை மிதித்ததுபோல உணர்வேன். அவர்களை நான் அவமானப்படுத்தும் தருணங்களில் எல்லாம் அப்பா உடைந்து போவார். நானதைக் கண்டு எனக்குள் ஆனந்திப்பேன். அப்பாவைப் பெற்றவள் செத்தபோது நீர்மாலை எடுக்கமாட்டேன் என பிடிவாதமாக இருந்த கணத்தில் அப்பாவுக்கு என் மீதிருந்த நன்மதிப்பின் கண்ணி அறுந்திருக்கக்கூடும். அன்று அவர் அழுது அரற்றியது இப்போதும் எனக்கு நினைவுள்ளது. என்னோடு கூடவே பிறந்த தரித்திரம்தான் இந்த எண்ணங்களை எனக்குள் விதைத்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.
ங்கோத்தா.
பால்யத்தில் என்னோடிருந்த நண்பர்களை யோசித்துப் பார்க்கிறேன். எவனும் நிம்மதியாக இல்லை. என்னைப்போலவே அவர்களும் வாழ்க்கையைத் திட்டிக் கொண்டிருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் சாபமென்பது தனிமனிதன் சார்ந்ததல்ல. அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் கால்களையும் ஒரு சர்ப்பத்தைப் போல அது இறுக்கமாகச் சுற்றிக்கொள்கிறது. தலையும் வாலும் ஒன்றாகவமைந்த சர்ப்பம். உரோபரோஸ் எனும் கொடிய சர்ப்பம். தன்னுடைய வாலை அது முழுங்க முற்படுவதைப்போல இந்த என்னுடைய வாழ்க்கை என்னை அழிக்கப்பார்க்கிறது. எனது தரித்திரம் உரோபரோஸின் வேறு வடிவம் என நம்புகிறேன். ஒன்றை அது எனக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிச் செல்கிறது. “முடிவில்தான் இருக்கிறது தொடக்கமும்.”
கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்குச் சில நண்பர்கள் உருவானார்கள். என் சூழலையறிந்து என்னுடைய குறைபாடுகளுடன் என்னை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் என்னால் யாருக்கும் நேர்மையாக விசுவாசமாக இருக்க முடிந்ததில்லை. மாலை வேளைகளில் எங்காவது சென்று சாப்பிட்டு வரலாம் என அவர்கள் கிளம்பும்போது நான் வேறு சிலரின் அறைகளுக்குள் ஒளிந்துகொள்வேன். ஒவ்வொரு நாளும் மற்றவர்கள் வாங்கித் தரும்போது உற்சாகமாக அதை ஏற்றுக்கொண்டால் என்றாவது ஒருநாளேனும் நான் வாங்கித் தரும் சூழல் வருமென்பதற்காக விலகிச்செல்வேன். என்னைத் தேடி ஏமாந்து அவர்கள் கிளம்பிச் செல்லும்வரையில் வாய்மூடி கண்களில் கண்ணீரோடு ஒளிந்திருப்பேன். ஏன் இவ்வாறு செய்கிறாய் என அவர்கள் கேட்கும்போது என்னிடம் பதில் ஏதுமிருக்காது. அப்போதும் கண்ணீர் மட்டும் என்னிடம் மீந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் கல்விக்கட்டணம் கட்ட அம்மா என்ன சிரமப்படுகிறார் என்பதைச் சொன்னால் அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். ஆனால் யாருடைய கருணையையும் யாசிக்க நான் விரும்பவில்லை.
நண்பர்களின் கரங்களும் படிப்பும் ஒளியற்ற அந்த இருள்வெளியைக் கடக்க எனக்குதவும் என்றெண்ணினேன். ஆனால் எப்போதும்போல வாழ்க்கையின் எண்ணங்கள் வேறாயிருந்தன. பெண்கள் யாரும் நுழையாதவரைக்கும் எங்களுடைய நண்பர்கள் குழு முழுமையான நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் எங்களுள் ஒருவன் காதலில் விழுந்தபிறகு யாவும் மாறிப்போனது. எப்பொழுதும் எவரின் கண்ணுக்கும் தட்டுப்படாத சிறிய புழுபோலத்தான் சந்தேகம் மனிதனுக்குள் உண்டாகிறது. அவனைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உண்டுசெரித்து வளர்கிறது. திடீரென்று ஒருநாள் நெருப்பைக் கக்கும் மகத்தான டிராகனாக நம்முன்னே அது வளர்ந்து நிற்கும்போது நாம் திகைத்துப் போகிறோம். நாங்கள் அடித்துக்கொண்டோம். யாரும் யாரையும் நம்பத் தயாராயில்லை. அதுநாள்வரையில் என்னைத் தாங்கிநின்ற வேர்கள் யாவும் சட்டென்று அறுந்தன. இயல்பாகவே மனிதர்களின் ஆதாரங்களும் பணமிருப்பவர்களின் திசைநோக்கி நீள்வது இயல்புதானே. என் கண்முன்னே நட்பின் மெழுகுதிரி எரிந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அது முழுமுற்றாக எரிந்து காற்றில் கரைந்து போகக்கூடும் அல்லது மெழுகுதிரியைக் காப்பாற்ற சுடரை அணைத்தால் என் வாழ்க்கை இருண்டு போகக்கூடும். தரித்திரம் என் பின்னால் நின்று மெழுகுதிரியை அணைத்திட நான் மீண்டும் தனியனாகி நின்றேன்.
ங்கோத்தா.
வாழ்வின் இறுதி நம்பிக்கைகளாக இரு விசயங்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஆசிரியர் ஆனேன். எழுதவும் தொடங்கினேன்.
இளைஞர்களோடு பயணிப்பதன் மூலமாக என்னை நான் பாதுகாக்க முடியும் அதேவேளையில் தொடர்ச்சியான உரையாடல்களின் வழியே அவர்களுக்கு ஒளிகூட்ட முடியும் எனவும் நம்பினேன். கிராமப்புறங்களில் இருக்கும் கல்விக்கூடங்களாகப் பார்த்து பணிபுரிந்தேன். என்னுடைய நம்பிக்கைகளைப் பேசும் வெளியாக வகுப்பறை எனக்கு விரிந்தது. நானறிந்த அனைத்தையும் மாணவர்களிடம் பகிர்ந்தேன். இயலாமையில் வாடுபவர்களுக்குக் கைகொடுப்பதை வாழ்வின் தலையாயக் கடைமையாக உணர்ந்தேன். அதற்கு எவரிடமும் யாசகம் கேட்க அஞ்சியதில்லை. எதிரிலிருப்பவர்களின் கேலிகளை நான் கருத்தில் கொண்டதில்லை. என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் எகத்தாளமாகச் சிரிக்கக்கூடும். இவனுக்கு வேறு வேலையில்லை என அலுத்துக் கொள்ளக்கூடும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் யாரேனும் ஒருவரையாவது நம் வார்த்தைகள் தீண்டிவிடாதா என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது அவற்றையும் இழந்து நிற்கிறேன். காலம் குறித்த தன்னுணர்வைத் தொலைத்துவிட்டேன். கிராமப்புறங்களில் படிக்க எந்த மாணவனுக்கும் விருப்பமில்லை. பெருநகரங்களைத் தேடி ஓடுகிறார்கள். யாருமில்லாத கல்லூரியில் யாருக்கு நான் பாடம் சொல்லித்தருவது? புதிய நிலங்களைத் தேடும் வலசைப் பறவையாக நகரப்புறங்களுக்கு நகர்ந்தேன். ஆனால் இம்மாணவர்களுக்கோ அவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் ஊதியம் வாங்கும் ஒரு மகிமைப்படுத்தப்பட்ட பிச்சைக்காரன் நான். எனக்கும் அவர்களுக்கும் எந்த உணர்வுப்பூர்வமான பிணைப்புமில்லை. மெல்ல அடையாளங்களை நான் தொலைத்துவருகிறேன். எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்திடம் என்னுடைய மன்றாடல்கள் செவிடர்கள் காதுகளில் ஓங்கி ஒலிக்கும் சங்காக மாறிப்போகின்றன. தஸ்த்யாவெஸ்கி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. மகத்தான எதுவும் மனிதனுக்கு நடப்பதில்லை. முழுதும் நஞ்சூட்டப்பட்டு விட்ட மனங்களுக்கு மத்தியில் வற்றிப்போன ஒரு நதிக்கரை நகரத்தில் என்னுடைய நம்பிக்கைகள் யாவையும் தொலைத்து வெற்றுக்கூடாக நடமாடுகிறேன்.
எழுத்துசார்ந்த என் நம்பிக்கைகளை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எனது நிறைவேறாத ஆசைகளின் மீது இரவின் நிழல் படிந்து பரவுகிறது. அதற்குள் உறங்கி கனா காண்கிறேன். நான் போகவிரும்பும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். அல்லது அந்த இடத்திற்கு நான் போக வேண்டும் என்றால் முதலில் வெகுதொலைவு செல்லவேண்டும். திரிசங்கு சொர்க்கம் உண்மையில் உள்ளதுதான் போல. ஓர் உறக்கமற்ற மனிதன் நடுராத்திரியில் எழுந்து புலம்புவதைப்போல இந்த தரித்திரம் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
நான் ஆச்சரியத்துடன் யோசித்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையின் ஒரு கணத்தில்கூட இந்த தரித்திரம் என்னை விட்டுப் பிரிந்ததில்லை. என்மீது இத்தனை பிரியம் அதற்கு ஏன் உண்டானது? என்னுடைய சின்னஞ்சிறு கண்களும் கூன்விழுந்த தளர்நடையும் அதை என்பால் ஈர்த்திருக்குமோ? சிறுவயதில் நானிருந்த வாடகைவீட்டின் அருகில் வீசும் சாக்கடைமணம் அதற்கு அத்தனை பிடித்திருக்குமோ? படிப்புக்காக நான் ஊர்விட்டு ஊர் வந்தபோது அம்மாகூட என்னைப் பிரிந்து இருந்திருக்கிறார். ஆனால் இந்த தரித்திரம் ஒருகணமும் என்னை விட்டு அகன்றதில்லை. அது என் கூடவே வந்தது. அதைக் கழற்றி விடுகிற என் முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின. நான் வேலைக்குப் போகும்போது என் வண்டியின் பின்னால் அமர்ந்து அது வந்தது. (மூன்று முறை விபத்தில் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்டு வந்திருக்கிறேன். என் பின்னாலமர்ந்து உரக்கச் சிரிக்கும் தரித்திரத்தின் குரலை என்னால் கேட்க முடிந்தது.) இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வேலையை இழந்து புதிய வேலைகளுக்காக அலையும் பொழுதுகளில் என் பேனாவின் முனைகளில் அதுவும் அமர்ந்திருக்கிறது. காதலை எப்போதும் என்னிடமிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. அதை நீங்கித் தப்பிப்பதற்காக என் மூளையை கசக்கி எத்தனையோ திட்டங்களைத் தீட்டியிருக்கிறேன். ஆனால் அவை யாவும் தோல்வியைத் தழுவின. ஒவ்வொருமுறையும் நான் வென்றதைப் போன்ற ஒரு மாயத்தோற்றம் எனக்குள் உருவாகும், அதை ஒழித்துக் கட்டிவிட்டதாக எனக்குள் மகிழ்ச்சியடைவேன். ஆனால் திரும்பி வந்து பார்க்கும்போது என்னறைக்குள் எனக்கு முன்னால் வந்து அது அமர்ந்திருக்கும். தன்னியல்பாக இது நிகழ்வதை தற்போது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.
ங்கோத்தா.
நான் திடுக்கிடுகிறேன். இது என் குரலில்லை. இம்முறை வசைச்சொல்லை நான் சொல்லவில்லை. சிறிதளவும் மென்மையும் ஆனால் அதேவேளையில் மிகுந்த கடுமையும் ஒன்றுகலந்து ஒலிக்கும் குரல். முகம் வெளிறியவனாகச் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். ஓர் ஒளி அறைக்குள் பரவத்தொடங்குகிறது. அந்த ஒளிக்குள் இருந்து ஓர் உருவம் துலங்கிவருகிறது. நான் கண்களை கசக்கிக் கொண்டு பார்க்கிறேன். அதுவொரு பெண்ணுருவம். எனக்கு இந்த ஒட்டுமொத்தச் சூழலும் மணாளனே மங்கையின் பாக்கியம் திரைப்படத்தை நினைவுறுத்துகிறது. எதிரிகளால் அடித்துப் போடப்படும் ஜெமினி கணேசன் நீரற்ற ஒரு குளத்தின் வாயிலில் கிடப்பார். மாலையில் பௌர்ணமி நிலவு வானில் ஏகியதும் அந்தக் குளத்தில் கங்கை ஊற்றெடுக்கத் தொடங்கும். விண்ணில் ஒரு பெரிய வெளிச்சப்பொட்டு உருவாகி வளர ஆரம்பிக்கும். அது பெரிதாகிப் பெரிதாகி அதற்குள்ளிருந்து கந்தர்வப் பெண்கள் வெளியேறி வருவார்கள். அவர்களுக்கு நடுவில் அஞ்சலிதேவியின் ஜொலிக்கும் முகம் துலங்கிவரும். சட்டென்று நான் மீண்டும் நினைவுக்கு வந்தேன். இப்போது இங்கே வருவதும் அஞ்சலிதேவியாக இருக்குமோ? நான் சற்றுக் கண்களை குறுக்கி அந்த உருவத்தின் முகத்தை உற்றுநோக்கினேன். இதுவரை நான் பார்த்திராத முகம். அஞ்சலிதேவி இல்லை. எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. உருவம் என்னருகில் வந்தது.
ங்கோத்தா.
அதன் மென்மையான குரல் எனக்குள் சூரிக்கத்தியைப் போலிறங்கியது. நான் அவ்வுருவத்தின் முகத்தை மீண்டும் உற்றுப்பார்த்தேன்.
யார் நீ?
இத்தனை நேரம் புலம்பவும் திட்டவும் செய்தாயே? அது நான்தான்.
நீ.. நீதான் தரித்திரமா? தரித்திரத்தின் தேவதை நீதானா? எனில் கடவுள்கள் இப்பூமியில் இருப்பது உண்மையா? என்னால் நம்ப முடியவில்லை.
நீ நம்புகிறாய், நம்பவில்லை என்பதற்காக நான் இங்கு வரவில்லை.
உன் பெயர் என்ன? அ-லட்சுமி, மூதேவி, ஏடி, ஓய்சிஸ் அல்லது வேறு ஏதாவதா?
பெயர்கள் வெறும் குறியீடுகள். அர்த்தமில்லா அடையாளங்கள். என்னுடைய உலகில் அவற்றுக்கு மதிப்பில்லை. எனக்கென்று எந்தப் பெயருமில்லை. பூமியின் மீது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனோடு கூடவே ஒரு தேவதையும் பிறக்கிறோம். அவனது பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும் அவனை நியாயப்படுத்தி கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எங்களுக்குண்டு. நான் உன்னோடு பிறந்தவள். உன்னோடு சேர்ந்து உன் சுகதுக்கங்களை அனுபவிப்பவள். நீ இறக்கும் நாளில் நானும் ஒரு நட்சத்திரமாக இப்பிரபஞ்ச வெளியில் கலந்துபோவேன்.
எங்கிருந்து தொடங்க என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனை நாட்களாக எந்த நம்பிக்கைகளின் பாற்பட்டு நீ இயங்கிவந்தாயோ அவையனைத்தையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறாய். நிஜமாக நீ ஒரு அறிவிலி, முட்டாள், சிந்தனையைத் தொலைத்து நிற்கும் மூர்க்கன். நீ பிறந்தநாள்முதல் உனக்கு நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றலை நீ இழந்து விட்டாய். உனக்கு இதையெல்லாம் விளக்கிச் சொல்வதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் சில மனிதர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் எதையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. என்றபோதும் என்மீது நீ சொன்ன குற்றச்சாட்டுகளை நான் மறுக்க விரும்புகிறேன். என்னுடைய செயல்களை மறுக்கும் உரிமைகள் உனக்கில்லை என்பதைச் சுட்டுகிறேன். பிறகு உன்னிஷ்டம்.
பணம் இல்லாமல் இருப்பதற்கும் தேவைக்கதிகமான பணம் இல்லாமல் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உன்னுடைய ஆசைகளை நான் நன்கறிவேன். நீ வெளிநாடுகளுக்குச் செல்ல ஆசைப்படுகிறாய். செவ்விந்தியர்கள் பிரயாணித்த தடத்தில் நீயும் பயணிக்க விரும்புகிறாய். கொலரோடோ நதியில் முகம் நனைக்க ஏங்குகிறாய். லாஸ் வேகாஸின் சூதாட்டக்களங்களில் உனது (நமது) நல்வாய்ப்புகளைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறாய். இவையெல்லாம் இதுநாள்வரையில் நடக்கவில்லை என்பது உன் ஏக்கமா? இவற்றில் ஏதும் எதிர்காலத்தில் நடக்காதென்று உனக்குத் தெரியுமா? தொலையட்டும். இதுநாள்வரை உன்னுடைய விருப்பம்போல நீ பிரயாணம் செய்ததில்லையா என்ன? உன் அப்பாவின் பணியின் பொருட்டு எத்தனையோ இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறாயென்பதை மறுப்பாயா? எளிதில் யாரும் போகமுடியாத இடங்களுக்குக் கூட நீ போயிருக்கிறாய். உனது பதினைந்தாவது வயது முதல் நீ போய்வந்த பயணங்களை உனக்கு நினைவிருக்கிறதா? அஜ்மீர் தர்காவின் முன்பு உன் அம்மாவோடு நிற்கிறாய். உனக்கு முன்னால் தரையோடு சேர்ந்து பெரிய மண்கிணறு. அதற்குள் மனிதர்கள் பணத்தையும் தானியங்களையும் வீசியெறிகிறார்கள். எதற்காக என்று ஒரு முதியவரிடம் கேட்கிறாய். வாரமுழுதும் கிணற்றுக்குள் சேரும் பணத்தில் வறியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தர்காவில் உணவு சமைப்பார்கள் என்று அவர் சொன்ன மறுகணம் அந்தப் பிரயாணத்துக்கென்று நீ சேர்த்த பணத்தைக் கிணற்றுக்குள் தூக்கி வீசுகிறாய். அதற்காகத்தான் உனது இந்தக் கேவலமான வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்கிறேன். அன்றிரவு பாலைவனப்பரப்பில் உடன்வந்த நண்பர்களோடு விளையாடிக் களித்த சமயத்தில் நீ கூறிய வார்த்தைகள் நினைவுள்ளதா? காணும் திசையெங்கும் பொன்மணற்பரப்பு, தலைக்குமேல் போர்வையாய் ஒற்றை வானம், வாழ்வின் மகத்தான நாளிது, மற்றொருமுறை இப்படியொரு மகிழ்ச்சியைக் காண்பேனா எனத் தெரியவில்லை என்றாய். பின்னாட்களில் ஷிம்லா போகும் மலைரயிலில் ஆறரைமணி நேரம் பிரயாணித்து மிகுந்த பசியோடு மிளகாய் ஊறுகாயுடன் ஒரு ரொட்டியைத் தின்றபோதும் இதையே சொன்னாய். உண்மையில் இரட்டை நாவிருப்பது சர்ப்பத்துக்கல்ல, மனிதர்களுக்குத்தான். இன்னும் நீ போய்வந்த ஊர்களைப் பட்டியலிடவா? கல்கத்தாவின் காளியும் அகமதாபாத்தின் காந்தி ஆசிரமமும் கேரளத்தின் கடற்கரைகளும் ஜெய்ப்பூரின் அரண்மனைகளும் டெல்லியின் கோட்டைகளும் நீ கண்டதில்லையா? உன் வயதொத்தவர்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியம் என ஒருமுறையேனும் யோசித்திருக்கிறாயா? உனக்கென்று ஒரு வேலையைத் தேடிக்கொண்ட பிறகும் புதிய மனிதர்களைப் புதுநிலங்களை தேடித்தானே இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறாய்? ஆனால் இப்போது தவறனைத்தும் எனது என்கிறாய்.
சிறுவயதில் அப்பாவை விட்டு நீ விலகியிருந்ததை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த ஒரு மனிதரின் இன்மையை ஈடுகட்ட நான் உனக்கு எத்தனை மனிதர்களின் அன்பைத் தேடியெடுத்துத் தந்தேன்? உனக்கு நான்கு வயது. எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கிய காலம். வாரவாரம் பத்திரிகையோடு சேர்ந்து வரும் சிறுவர் இதழை நீ விரும்பி வாசிப்பாய். வீட்டில் அனைவரும் கோயில் சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார்கள். திரும்பி வர ஒருவாரம் ஆகும் எனும்போது நீ அடம்பிடித்து அழுகிறாய். எனக்குச் சுற்றுலாவை விடவும் புத்தகம் முக்கியம் எனத் தேம்புகிறாய். உன் தாத்தா உனக்காக வீட்டிலேயே இருந்தார். மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குக் கிளம்பிப்போக நீ புத்தகம் வாசிப்பதற்காக அவர் உன்னோடு இருந்தார். இந்த மனிதர்களைத்தான் நான் உனக்குப் பரிசளித்தேன். அவரை விடு, அவர் உன் தாத்தா, உன் அம்மாவைப் பெற்றவர். ஜக்கையா பெரியப்பாவை நினைவிருக்கிறதா? நீங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர். மூன்றுசக்கர வண்டியில் தெருத்தெருவாகச் சென்று மண்ணெண்ணெய் விற்றுவிட்டு முழுக்கக் குடித்துவிட்டு வீடுதிரும்பும் அவர் தன் மகன்களைத் தேடமாட்டார். மகனே என்று அத்தனை பிரியத்தோடு உன்னை மடியிலிருத்திக் கொண்டு பலகாரங்களைச் சாப்பிட வைப்பார். பேரல் வெடித்துத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் கிடந்தபோதும் அவர் உன் பெயரைச் சொல்லித்தானே புலம்பினார். அவர் மனைவி ஈஸ்வரி பெரியம்மாவுக்கு நீ மூத்த மகனாயிருந்தாய். அவர்களின் பிள்ளைகளுக்குச் சகோதரனாகவும். வீட்டுக்குள்ளும் அதற்கு வெளியிலும் உன்னைச் சுற்றி இருந்த அத்தனை உறவுகளுக்கும் நீ செல்லமாயிருந்தாய். எங்கு போனாலும் யாருடைய இன்மையும் உன்னை பாதிக்கக்கூடாது என்பதில் நான் அத்தனை கவனமாயிருந்தேன்.
ங்கோத்தா.
பள்ளியில் உன்னைச் சுற்றியிருந்த மனிதர்களையெல்லாம் உன்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்தது யார்? மாறுவேடப்போட்டியில் இன்னொரு சிறுவன் பணத்தால் வென்றதைக் குறிப்பிட்டாய். உனது வாழ்வில் அது எத்தனை மகத்தான நாள் தெரியுமா? அன்று நீ கூறிய பாரதியார் கவிதைகளைக் கேட்டே உனது தமிழ் ஆசிரியர் மாட் மிஸ் உன்னைக் கண்டடைந்தார். இன்று மூச்சுக்கு முன்னூறு முறை எழுத்து வாசிப்பு என்கிறாயே, அதன் ஆரம்பம் அங்குதான் தொடங்கியது. தமிழ் மீது உனக்கிருந்த ஆர்வத்தை அடையாளங்கண்டு உனக்கு நல்லப் புத்தகங்களை வழங்கி வாசிக்கவைத்தது அவர்தானே? நானில்லாமல் அவரென்ன வானத்தில் இருந்து குதித்தாரா? உன் ஆசிரியர்கள் அனைவரும் உன்மேல் அத்தனை பிரியத்தோடிருக்க யார் காரணமென்று நினைத்தாய்?
உன் நண்பர்கள் இன்று என்னவாக இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விடுத்து உனக்கு அவர்கள் என்னவாயிருந்தார்கள் என்பதைச் சற்றே யோசி. எல்லாக் காலங்களிலும் உன்னை மனதார ஏற்றுக்கொள்ளும் நண்பர்களை நான் உனக்கு வழங்கியிருக்கிறேன். கல்லூரியில் உன் நண்பனின் காதலால் நட்பைத் தொலைத்ததாக வெம்புகிறாயே? உன்னுடைய நண்பர்கள் குழாம் உங்களுக்குள் சண்டையிட்டுப் பிரிந்தபோது உனக்கு ஆதரவாயிருந்தவர்கள் யாரென்று நினைவுள்ளதா? அதுநாள் வரையிலும் நீ வெறுத்தொதுக்கிய மற்றவர்களே உன்னை ஏந்தினார்கள். அன்பானாலும் வெறுப்பானாலும் இந்தப் பூமியின் மீது எதுவும் நிரந்தரமல்ல என்பதை அப்போதுதான் நீ உளப்பூர்வமாக உணர்ந்தாய். ரயில்வே காலனியில் உனக்குக் கிடைத்த நண்பர்களைப்போல வாழ்க்கையில் வேறு யாருக்கும் கிடைத்திருப்பார்களா? இன்றளவும் சாமி கார்த்தி உனக்குள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறான்? குழாயடி குரூப்ஸை நீ மனதுக்குள் நினைக்காத நாளென்று எதுவுமுண்டா? வாழ்வென்பது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு, அது போகும் பாதையை யாரும் அறிந்திடமுடியாது – இதைச் சொன்னவன் நீதானே? இன்று நீயே இதனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?
உன் அப்பாவும் அம்மாவும் இறந்ததைப் பற்றிச் சொன்னாய். வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்றாவது ஒருநாள் அது முடியுமென்பதே. இதைச் சொன்னது யாரென்று தெரியும்தானே? உன் பிரியத்துக்குரிய காஃப்கா. வாழ்க்கைக்கு என்று ஒரு முடிவு இருப்பதால்தான் நாம் வாழும் ஒவ்வொரு கணமும் அர்த்தமுடையதாக மாறுகிறது. நீயும் நானும் நினைத்தாலும் கூட ஒருபோதும் மரணத்தை ஒத்திப்போடமுடியாது. உன்னைப் பெற்றவர்கள் வாழ்ந்த காலம் முழுக்க இதை உணர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால் உனக்கு இன்று இது புரியவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாயுள்ளது. நீ உன் அப்பாவை விட்டு விலகி நில்லாதிருந்தால் அவர் உன்மீது இத்தனை பிரியத்துடன் நெருங்கியிருக்கமாட்டார். கிட்டிய ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் உன்னிடம் தன்னை நிரூபிக்க முயற்சித்தவாறே இருந்ததும் அதன் காரணமாகத்தான். வாழ்க்கை எப்போதும் தன்னைச் சமநிலைக்குள்ளாக வைத்திருக்கும் சூத்திரத்தை அறிந்திருக்கிறது. ஆகவே உனது வெறுப்பை அவருடைய அன்பைக்கொண்டு அது சமன்செய்தது.
வாழ்வில் எல்லாவற்றிலும் தோல்வியைத்தான் சந்தித்ததாகச் சொன்னாய். வெற்றிகரமான வாழ்க்கையைக் காட்டிலும் நிம்மதியான வாழ்க்கைதான் யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. வெற்றி பெறும் மனிதனை உலகம் கொண்டாடும், அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும். ஆனால் மனதுக்குள் ஒருவர் உணரும் நிம்மதியை எப்போதும் இவ்வுலகம் காணமுடியாது. ஏனென்றால் அது உள்ளார்ந்தது. நட்சத்திரத்தின் ஒளியைப் போல ஆன்மாவுக்குள் ஒளிர்வது. ஒருகாலத்தில் இதை நீ உணர்ந்திருந்தாய். எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் உன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தன. ஆனால் இப்போது ஏக்கமும் ஆசைகளும் உன்னை வேறொரு மனிதனாக மாற்றியுள்ளன.
ங்கோத்தா.
உனது எழுத்துதான் இன்று உன்னுடைய அடையாளம். அதை உனக்குத் தந்தது யார்? நீ எழுதும் ஒவ்வொரு கணமும் உன் முதுகுக்குப் பின்னால் நின்று ஒவ்வொரு வார்த்தையையும் நான் கவனித்திருக்கிறேன். கறுப்பு வெள்ளை என்ற இரண்டு நிறங்களுக்குள் அடங்கிப்போகாமல் உன்னுடைய எழுத்துகளின் வண்ணங்களை நானே கோர்த்தேன். வார்த்தைகளின் வழியே உனக்கொரு உலகத்தை உருவாக்கித் தந்தேன். அதற்குள் நீ சவுகரியமாக அமர்ந்துகொள்ள வழிவகை செய்தேன். புறவுலகின் தீங்குகள் ஏதும் உன்னை அண்டாமல் அதற்குள் நீ பாதுகாப்பாக இருந்தாய். வேறொருவரை வாசித்து நீ எழுத வந்த காலம் முடிந்து இன்று உன்னை வாசித்து மற்றவர்கள் எழுத வரும் காலத்தை உருவாக்கித் தந்திருக்கிறேன். நீ எழுதிய கதைகளை வாசித்துவிட்டு வெகுதூரம் பயணித்து உன்னைப் பார்க்கவந்த மனிதர்கள் இல்லையென்று மறுப்பாயா? உன் கதைகளுக்குள் உலாவும் மனிதர்களை உனக்குள் உன் மனதுக்குள் அலையவிட்டது யாருடைய வேலை? நான் இல்லாமல் நீ எதை எழுதியிருந்தாலும் அது விளங்கியிருக்காது. வெற்றுச் சிந்தனைகளாக மீந்து போயிருக்கும். நான் அவற்றுக்கு உயிர்கொடுத்தேன். உன் கதைகளின் ஆதாரமான வன்மத்தையும் அருவருப்பையும் எழுதலாம் என்ற நம்பிக்கையைத் தந்ததும் நான். ஆனால் இதையும்கூட இன்றுனக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான் என்னுடைய துயரம்.
உன்னிடமிருந்து சற்று விலகி நான் வேடிக்கை பார்த்த தருணங்கள் உண்டா எனில் ஆம், வெகு சில தருணங்கள் உண்டு (அஜ்மீரைப் போல). படித்தபிறகு உனது பணியை நீ தேர்ந்தெடுத்த கணமும் அதில் ஒன்று. நீ ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தபோது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் இன்றுவரைக்கும் எந்தக் கணத்திலும் அதைத் தேர்ந்தெடுத்தற்காக உன்னை எண்ணி நான் வேதனைப்படும் செயலெதையும் நீ செய்ததில்லை. மாறாக உன்னை எண்ணி நான் பெருமைப்படவே செய்திருக்கிறேன். படிப்பு முடிந்த முதல் வருடத்துக்குள் கொடைக்கானலில் உனக்கு வேலை கிடைத்தது. அந்தக் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு நீ வகுப்பாசிரியர். ஒருநாள் அந்த வகுப்பில் படிக்கும் பெண் ஒருவரின் தந்தை உன்னைப் பார்க்க வந்திருந்தார். குறைந்தபட்சம் ஐம்பது வயதிருக்கக்கூடிய அந்த மனிதர் உன்னைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்று வணங்கினார். எங்கோ ஒரு ஊரில் நாங்கள் இருக்க எங்களுடைய பிள்ளையை உங்களை நம்பித்தான் விட்டுப் போகிறோம், ஒரு சகோதரன் என நீங்கள்தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் உன்னிடம் பேசிக் கொண்டிருந்த நிமிடங்களை உன்னால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது. என்னாலும். உனது பணியின் முக்கியத்துவத்தை நீ உணர்ந்த நாள் அதுதான். உன்னிடம் பாடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் உன் நெருங்கின உறவுகள் எனும் உணர்வை உனக்குள் விதைத்தேன். இன்றளவும் அது அப்படியேதான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். உன்னிடம் பயின்ற மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்திருப்பதாக உன்னை அழைத்துச் சொல்லும்போது உனக்குள் உண்டாகும் உற்சாகத்துக்கு எவ்வளவு பணம் தந்தாலும் ஈடுவைக்க முடியுமா? இருபது வருடங்களாக நீ வழிநடத்தியுள்ள மாணவர்கள் உன்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக நினைப்பதை விடப் பெரிதாக நீ வேறென்ன சாதித்துவிடப்போகிறாய்? இது தவிரவும் முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகளின் படிப்புக்காக மற்றவர்களிடம் கையேந்தவும் நீ தயங்குவதில்லையே? யாரென்றே அறியாத ஒருவன் நமக்கு உதவுகிறான் என எங்கிருந்தோ அவர்கள் வாழ்த்துவது உனக்கு வேண்டுமானாமால் கேட்காமல் போகலாம், ஆனால் அவையனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். உன்னைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் இத்தனை நல்லது இருக்கும்போது உன் கண்ணில் இதெல்லாம் தட்டுப்படவில்லை என்பதுதான் வேதனை.
தொலையட்டும், இதற்குமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. உன் புலம்பல்களைக் கேட்டுக்கேட்டு எனக்குச் சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு நீங்குகிறேன். இதைத்தான் நீ மனதார விரும்பினாய் எனும்போது அதையும் நான் உனக்குத் தருவதுதான் முறையாக இருக்கும். மீண்டும் ஒருமுறை இந்த தரித்திரம் பீடித்த தேவதையை நீ வாழ்நாளில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போகட்டும். இதை மட்டும் நினைவில் கொள், நீ எவ்வளவுதான் அழுது புலம்பினாலும் நிகழ்ந்த எதையும் உன்னால் மாற்ற முடியாது. அதுபோலவே எதிர்காலமும். என்ன நடக்குமென்பதைக் கணித்து அதை உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் இயலாது. உன்னுடைய கவலைகள் எதுவும் எதிர்காலத்துக்கு ஒரு பொருட்டேயல்ல. உன்னுடைய சக்திக்கு மீறிய ஆசைகள் எப்போதும் நிம்மதியைக் குலைத்து அச்சத்தை மட்டுமே விளைவிக்கும். ஆசைப்படும் யாவும் நடக்குமென்று வெறுமனே காத்துக் கொண்டிருப்பது நம்முடைய கனவுகளை நனவாக்கப் போவதில்லை. இந்தக் கணம் மட்டுமே உண்மை என்பதை நம்பத்தொடங்கு. உனக்குத் தரப்பட்டிருக்கும் நாட்களையும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் ரசித்து வாழப் பழகிக்கொள். இது எதையும் நான் இன்று உனக்குப் புதிதாகச் சொல்லவில்லை. மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
இதைச் சொல்லிவிட்டு அந்தத் தேவதை என்னை விட்டு விலகுகிறாள். பெரிய வலி எனக்குள் பரவுகிறது. கால்களுக்குக் கீழே தரை நழுவவதைப் போலத் தள்ளாடுகிறேன். நான் மிகவும் பூஞ்சையான ஒரு மனிதன். யார் சொல்வதையும் சரியென்று கேட்டுக்கொள்பவன். எனும்போது, எனக்குள் ஒரு பகுதியாக என்னோடு பிறந்த எனக்கான தேவதை சொல்லும்போது நான் அதை எப்படி மறுப்பேன்? வாழ்வின் தருணங்களை அனைத்தையும் எனக்காகச் செதுக்கிய ஒருத்தியைப் பிரிந்துசெல்ல எப்படி அனுமதிப்பேன்?
நில், உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னை விட்டுப்போகாதே.
தேவதையின் பாதையை மறிக்கிறேன். என்னை நிமிர்ந்து பார்க்கிறாள்.
உனக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
சொல்.
உன் விருப்பப்படியே பணமும் அதிகாரமும் உன்னைத் தேடிவரும். ஆனால் நான் உன்னை நீங்கிவிடுவேன். இல்லையென்றால், இப்போது நாம் வாழும் இந்த வாழ்க்கையைத் தொடருவோம். எது எப்போது நிகழும் என்கிற நிச்சயமற்ற, ஆனால் ஒருபோதும் உன்னை எதற்காகவும் விட்டுத்தராத ஒரு வாழ்க்கை. எப்போதும் போல நீ புலம்பலாம், என்னைத் திட்டலாம், வராத செல்வத்தை எண்ணி ஏங்கலாம். ஆனால் ஓர் ஆசிரியனாக எழுதுபவனாக நீ துடிப்புடன் இயங்கலாம். தேர்வு உன்னுடையது.
நான் கண்களை மூடுகிறேன். என்னுடைய பாதை எதுவென்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்.
ங்கோத்தா.
என்னுடைய மண்டைக்குள் ஓர் எல்நினோ..







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கார்த்திகைப் பாண்டியன்
ரமீஸ் பிலாலி
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.