எழுத்தாளர் சுந்தர ராமசாமியால் தொடங்கப் பெற்ற காலச்சுவடு இதழ் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளைக் கடந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. காலச்சுவடு ஒரு பதிப்பகமாகவும் தன்னை மதிப்பிற்குரிய முதன்மையான இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்நெடும் பயணத்தில் காலச்சுவடு இதழ் மற்றும் பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ள பதிப்பாளர் கண்ணனை, எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘நான் ஏன் பதிப்பிக்கிறேன்’ என்கிற பேட்டித் தொடருக்காக நேர்கண்டுள்ளார்.
***
பெ. மு. : காலச்சுவடு பதிப்பகம் ஒரு நூலை வெளியிடும் முறைப்பாடு (process) என்ன? அதாவது பிரதியைத் தேர்வுசெய்வது முதல் விற்பனைக்குக் கொண்டுசெல்வது வரையான செயல்முறையைக் கேட்கிறேன்.
கண்ணன்: காலச்சுவடு பதிப்பகத்தின் தேர்வு தனிநபர்கள் சார்ந்ததாகப் பார்க்கப்படக்கூடாது எனத் தொடக்க காலம் முதலே முயன்றுவருகிறேன். தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள் சார்ந்து தேர்வு அமையக் கூடாது, அவ்வாறு பார்க்கப்படவும் கூடாது என்பதே முதன்மையான கரிசனம்.
காலச்சுவடின் தொடக்க காலத்தில் இது சற்று கடினமாக இருந்தது. நூலாசிரியர்கள் நேரில் வந்து தமது படைப்புகளைத் தரவேண்டும் என்று விரும்புவார்கள். அதுதான் மரியாதை என்று கருதினார்கள். மரியாதை செய்வதும் முகப் பரிச்சயமும் தேர்வுக்கு வழிவகுக்கும் என்று கருதியிருக்கலாம். யாரும் நேரில் வரவேண்டியதில்லை, யாருடைய அறிமுகமும் பரிந்துரையும் தேவையில்லை, அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிதலைக் கொண்டுவரக் காலம் எடுத்தது.
ஒரு படைப்பை யார் படித்துப் பார்ப்பார்கள் என்று நிர்ணயம் செய்வதில்லை. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருத்தை, காலச்சுவடு அணிக்கு அப்பால் இருப்பவர்கள் கருத்தையும் கேட்கிறோம். இக்காலகட்டத்தில் கலந்தாலோசிக்க உலகளவில் வாழும் நண்பர்களை எளிதில் அணுகமுடிகிறது. தேவைப்படும்போது துறைசார்ந்த நிபுணர்களின் கருத்தைக் கேட்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்புகள் சார்ந்தும் படைப்பாளர்கள் சார்ந்தும் விருப்பு வெறுப்புகள் நம் எல்லோருக்கும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். அதையும் கணக்கிலெடுத்துத்தான் ஒரு படைப்புக்கான வாசிப்பாளரைத் தேர்வுசெய்கிறோம்.
இருப்பினும் யாரோ ஒருவருடைய தலை ஒவ்வொரு காலத்திலும் தேர்வின் காரணவராகப் பார்க்கப்பட்டு உருளும். இக்காலத்தில் அதிகம் உருளும் தலை சுகுமாரனுடையது. ஒருவர் சும்மா அடித்துவிட்டாலும் பிறர் நம்பும்படியான ராசி அவருக்கு அமைந்திருக்கிறது!
இன்று தேர்வு முறைமை பெருமளவுக்கு மேம்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் தேர்வு சரியாகவோ பிழையாகவோ அமையலாம். ஆனால் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு அது அமைவதில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும்.
ஒரு படைப்பு தேர்வானதும் அதன் முதல் மெய்ப்பை எடுத்து நுலாசிரியருக்கே அனுப்புகிறோம். அவர் இறுதி மாற்றங்கள் செய்து, நூலில் இடம்பெற வேண்டிய எல்லாச் செய்திகளையும் சேர்த்து இறுதியாகச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னரும் ஒன்றைச் சேர்ப்பதையும் பெரிய மாற்றங்கள் செய்வதையும் அவசியம் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம். இதன் பின்னர் பிரதி மேம்படுத்துநர் கைக்குச் செல்கிறது. முதல்நிலைத் திருத்தங்கள் முடிந்ததும் அவை மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் மேம்படுத்துநர் கைக்குச் செல்கிறது. இந்த இரண்டு நிலைகளிலும் முக்கியமான அணுகுமுறை எழுத்தாளர் அனுமதியின்றி எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பதுதான். திருத்தங்கள் நியாயமாக, மேம்படுத்துவதாக இருந்தால் எழுத்தாளர்கள் மறுப்பதில்லை என்பதே எங்கள் அனுபவம். இதன் பின்னர் பக்கம் வடிவமைத்து இறுதியாக மெய்ப்புப் பார்க்கிறோம். தேவைப்பட்டால் ஒன்றுக்கு இரண்டுமுறை. இதன் பின்னர் இரண்டு முன்-அச்சுப் பிரதிகள் எடுத்து ஒன்றை நூலாசிரியருக்கு அனுப்பி இறுதியாக ஒருமுறை கவனமாகப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறோம். மற்றொரு பிரதி அலுவலகத்திலும் சரிபார்க்கப்படுகிறது. இறுதிக்கட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே நூல் அச்சுக்குச் செல்கிறது. நூல் அச்சாகும்போதே மின்னூலும் தயாராகிறது. இயன்றவரை இரண்டையும் ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கொண்டுசென்று சமூக வலைத்தளங்களில் அறிவிக்கிறோம். முதல் கட்டமாக ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சில பிரதிகளை உடன் அனுப்புகிறோம்.
பெ. மு. : நூலுக்கு விலை நிர்ணயம் செய்யும் காரணிகள் எவை? காலச்சுவடு நூல்களின் விலை அதிகம் என்று பொதுவெளியில் கருத்து உள்ளதே?
கண்ணன்: ஒவ்வொரு நூலின் தயாரிப்புச் செலவும் ஒன்றுபோல அமைவதில்லை. பல நூல்களுக்கு காலச்சுவடின் உள்ளும் புறமும் நண்பர்கள் வழங்கும் உழைப்பு அதிகமும் தன்னார்வத் தொண்டாக அமைந்துவிடுகிறது. ஒருமுறை ஒரு தெற்காசிய நாட்டில் ஒரு விருந்தில் தமிழும் சீனமும் அறிந்த வானொலி மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்தேன். செருப்புத் தைப்பவன் காலணியைப் பார்ப்பது போல உடனே அவரிடம் ‘நீங்கள் ஏன் படைப்புகளைச் சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக் கூடாது?’ என்று கேட்டேன். உடனே அவர் ‘அதனால் எனக்கு என்ன பயன்?’ என்று கேட்டார். நமது மகத்தான மொழிசார் பங்களிப்புகளை ஒருகணம் எண்ணிப் பார்த்து மௌனமானேன். இந்தக் கேள்வியுடன் தொடங்கியிருந்தால் அவை யாவையும் நடந்தேறியிருக்காது. இப்படி யோசிக்காத, தமிழுக்காக என்று எண்ணிச் சீனத்திலிருந்து மொழிபெயர்க்கும் ஸ்ரீதரனையும் ஸெள சின்னை (ஈஸ்வரி)யும் இதுபோல நூற்றாண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் எண்ணற்ற ஆளுமைகளையும் கவரும் ஆற்றல் தமிழுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த கு. அழகிரிசாமி நாட்குறிப்புகள் நூலுக்கு பழ. அதியமானும் அ. சாரங்கராஜனும் மேற்கொண்ட உழைப்புக்கும் அவர்களுக்கு ஈடு கொடுத்த காலச்சுவடு அன்பர்களின் பல ஆண்டுகாலச் செயல்திறனுக்கும் நியாயம் கிடைக்க அந்நூல் சில பத்தாயிரம் பிரதிகள் விற்க வேண்டும். ஆனால் தமிழ்ப் புத்தகச் சந்தையின் யதார்த்தம் வேறு. இந்நூலைத் தயாரிக்க ஆன செலவை நாளடைவில் விற்கக்கூடிய ஆயிரம் பிரதிகளின் மேல் ஏற்றினால் யாரும் வாங்க முடியாது. ஒப்பீட்டளவில் எளிதில் தயாராகும் ஒரு நாவல் பல ஆயிரம் பிரதிகள் விற்கவும் செய்கிறது. இதுபோன்ற நூல்கள் ஈட்டும் உபரி மதிப்பு மற்றொரு பெரும்பணியைச் சாத்தியப்படுத்துகிறது.
இன்று காலச்சுவடு நூலின் பொதுவான விலை ஒரு பக்கத்திற்கு ரூ 1.30. சில மாதங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்புக்குத் தினவெடுத்து ஈரானைத் தாக்கியதால் தமிழ் நூலின் தயாரிப்புச் செலவு கூடிவிட்டது! காலச்சுவடு நூலின் தரத்திற்கு விலை அதிகம் என்று யாரும் குறிப்பாக நினைப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதற்குச் சற்று முன்பின்னாகத்தான் இன்று தரமான தமிழ் நூல்களின் விலை பொதுவாகவே உள்ளது. ஆனால் பொதுவாகத் தமிழ்ப் புத்தகங்களின் விலை அதிகம் என்ற ஆவலாதி இருப்பது உண்மைதான். ஆனால் இந்திய ஆங்கில நூல்களுடனோ பிறமொழி நூல்களுடனோ ஒப்பிட்டுப் பார்க்கையில் இது ஒரு ஆய்ந்தறிந்த கருத்து அல்ல என்பது புலப்படும்.
ஒரு வாசகருக்கு தான் விரும்பும் நூல்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கக் கட்டுப்படியாகவில்லை என்ற உணர்வு ஏற்பட்டால் அதை ஒருபோதும் உதாசீனப்படுத்த முடியாது. இதற்குப் பதிப்பாளர்களைப் பழிப்பது மேலோட்டமான அறிதல் சார்ந்த முடிவு. இதற்கான தீர்வு அரசு பொது நுலகத்துறை வழி அல்லது பள்ளி, கல்லூரி அல்லது தனியார் நூலகங்கள் வழி ஏற்பட வேண்டும். நூலகங்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல ஒன்று அமைய வேண்டும். பலப்பல துணை நூலகங்கள் இருக்க வேண்டும். ஒரு வாசகருக்கு அவசியமான நூல்களை அவை கொள்முதல் செய்து வாசிக்கக் கொடுக்க வேண்டும். நூல்களை வாங்கும் வசதி உள்ளவர்களே அவற்றை வாங்க வேண்டும். மாறாகப் பதிப்பாளர்கள் விலை குறைவாக விற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
நமது புத்தகச் சந்தை பெரிதும் விரிவடைந்தால், கூடுதல் எண்ணிக்கையில் குறைந்த விலையில் நூல்களைத் தயாரிக்கும் மாதிரியை உருவாக்க முடியும். இதை உணர்த்தும் விதமாக நாங்களும் 'விலையடக்கப் பதிப்பு', 'தீஞ்சொல்' போன்ற சிறப்புப் பதிப்புகள் வழி கோடிகாட்டியிருக்கிறோம். ஆனால் நமது சந்தை ஒரு வளர்ந்த புத்தகப் பண்பாடாகப் பரிணமிக்க இன்னும் காலம் செல்லும் என்றுதான் நினைக்கிறேன்.
பெ. மு. : பதிப்புத் துறையில் முப்பது ஆண்டுகளைக் கடந்திருப்பது பெரும் சாதனை. அதுவும் ஒருபோதும் தொய்வு இல்லாமல் வளர்முகத்தில் காலச்சுவடு பதிப்பகம் நடை போட்டு வந்திருக்கிறது. இந்தப் பயணம் திட்டமிட்டதா? இயல்பாக அமைந்ததா?
கண்ணன்: ஒரு சாதனை நடந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை என்னுடையதாக எண்ணவில்லை. முதலில் காலச்சுவடு தொடங்கப்பட்ட காலச்சூழல் பொருளாதார எழுச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும் ஏற்பட்ட காலம். கல்வி பரவலாகிச் சமூக மாற்றம் விரிவடைந்து புதிய சிந்தனைகள் கிளர்ந்த காலகட்டம். காலச்சுவடுக்கு அமைந்த சமுக மூலதனம், சுராவின் நற்பெயர், அபாரமானது. காலச்சுவடைச் சுற்றித் திரண்ட குழுவின் பங்களிப்பு அசாதாரணமானது. இவற்றுடன் எனது உழைப்பும் பங்களிப்பும் உண்டு.
கருத்துச் சுதந்திரம்தான் காலச்சுவடின் ஆதார சுருதி என்பதை உறுதியாகத் தொடக்கத்திலேயே முடிவுசெய்துவிட்டேன். பலரும் எழுத்தாளர்களையும் நண்பர்களையும் முன்னிலைப்படுத்திச் செயல்பட்ட காலகட்டத்தில், வாசகர்களை முன்னிலைப்படுத்திச் செயல்பட்டேன். அவர்களுடைய எதிர்பார்ப்புதான் காலத்தின் குரல் என்று ஏற்றுக்கொண்டேன். பலதரப்பட்ட சிந்தனைப் போக்குடையவர்கள் ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று உறுதியாக நம்பினேன். புதுமைப்பித்தனுக்கு ஒரு செம்பதிப்பு கொண்டுவர எந்தக் கொள்கை அல்லது கோட்பாடு சார்ந்தவர்களுக்கு மறுப்பிருக்க முடியும்? இப்படித்தான் தத்தமது நம்பிக்கைகளுடன், கருத்து வேறுபாடுகளுடன், விவாதங்களுடன் இணைந்து செயல்படும் காலச்சுவடு வட்டம் உருவாகி விரிவடைந்துவருகிறது. இந்த விரிவாக்கத்தின் பயனாகக் காலச்சுவடும் வளர்ச்சி அடைகிறது. புதிய சிந்தனைகளும் புதிய கருப்பொருட்களும் புதிய படைப்புகளும் காலச்சுவடு நூல் பட்டியலுக்கு வலு சேர்க்கின்றன.
காலச்சுவடு ஐந்தாண்டு காலத் திட்டம் வகுத்துச் செயல்படவில்லை. ஆனால் சமகாலச் செயல்பாடுகள் பற்றியும் நீண்டகால நோக்கம் பற்றியும் சிந்திப்பதும் விவாதிப்பதும் உண்டு. நினைத்தவை பலவும் கைகூடாது; தானாகப் பலவும் கூடி வரும். கைகூடாதவை பற்றிய புலம்பலைத் தவிர்த்து, எதிர்பாராது கிட்டும் கனிகளை முதன்மைப்படுத்திச் செயல்படுவதே என் இயல்பு.
பெ.மு.: பதிப்பகப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை? அவற்றை எப்படிக் கடந்தீர்கள்?
கண்ணன்: ஒரு பதிப்பகத்திற்கு அவசியமான சூழல் என்பது கருத்துச் சுதந்திரமும் சகிப்புத்தன்மையும் பொதுப்பண்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கும் நிலைதான். தமிழகத்தில் அது இல்லை. இது மோடியின் வருகையால் தீவிரமடைந்தாலும் அதனால் உருவாகவில்லை. சகிப்புத்தன்மை வலதுசாரிகளிடமும் இல்லை, இடதுசாரிகளிடமும் இல்லை. தமிழ் அறிவுலகத்திலும் கருத்துச் சுதந்திரத்தை இளக்காரமாகச் சுட்டுவதுதான் வழமை. இப்படிக் கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத அறிவுலகத்தை உலகில் எங்கும் நான் பார்க்கவில்லை. இங்கு கருத்துச் சுதந்திரம் என்று நான் குறிப்பிடுவது ஒருவர் தாம் கருதும் நம்பிக்கையும் பண்பாடும் மறுக்கப்படும்போது கதறுவதை அல்ல. தமக்கு உடன்பாடற்றதிற்கும் இடமுண்டு என்று ஏற்பதைத்தான். தமக்கு உடன்பாடற்ற கருத்தைச் சொல்பவரைக் கைது செய்ய வேண்டும், வெளியிடும் ஊடகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று காலங்காலமாகக் குரல் கொடுப்பவர்கள்தான் நமது முற்போக்காளர்கள்.
சு.ரா.வின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதையை அதன் பண்பாட்டுச் சூழலில் இருத்திப் புரிந்துகொள்ள முயலாமல், அதற்குத் திரணியில்லாமல், தலித் கதாபாத்திரமே இல்லாத அக்கதைக்காக அவரை, முதுமை கூடிய காலத்தில், வன்கொடுமைத் தடைச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூடிக் குரல் கொடுத்தார்கள் நம் முற்போக்காளர்கள். அந்த வெறியும் ஆவேசமும் பாசிசக் களத்திற்குரியது. இன்றுவரை அதற்கு வருந்தாமல் தமது அபத்த வாசிப்பை நியாயப்படுத்தி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பத்ரி சேஷாத்ரி அவரது (மிகத் தவறான) கருத்துக்காகக் கைது செய்யப்பட்டதைக் கொண்டாடினார்கள். நாங்கள் எட்டுப் பேர் அவர் விடுதலையை வேண்டி ஒரு அறிக்கை வெளியிட்டபோது சகிப்பின்மையின் வெறி கொண்டு கூவினார்கள்.
காலச்சுவடு முதல் (எங்களுடைய) இதழ் வெளிவருவதற்கு முன்னர் இருந்தே — அதாவது இதழ் வெளிவருவதை அறிவித்த நிலையிலேயே — இந்தச் சகிப்பின்மையைச் சந்தித்துவருகிறோம். காலச்சுவடில் வெளிவரும் தமக்கு உடன்பாடு இல்லாத ஒவ்வொரு கருத்தையும் அதை எழுதியவரின் கருத்தாக எடுக்காமல், காலச்சுவடின் கருத்தாக முன்னிறுத்தி எதிர்வினையாற்றுவது, அபத்தமான சந்தேகங்களை வீசியெறிந்து அதற்கு நாங்கள் இவர்களுடைய கட்டைப் பஞ்சாயத்தில் தோன்றிக் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்று பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று எவ்வளவோ சொல்லலாம். இந்தக் கசப்பையும் வெறுப்பையும் கடந்துவர முடிந்ததற்குக் காரணம் வாசகரும், எமது பணியின் சிறப்பை உணர்ந்து அமைதியான ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருபவர்களும்தான்.
காலச்சுவடை நடத்துவது என்பது ஒரு பதிப்பகத்தைத் திறம்பட நடத்துவதாக அல்லாமல் ஒரு பண்பாட்டு அரசியல் போர்க்களத்தில் செயல்படும் உணர்வைப் பல சமயங்களில் கொடுக்கும்.
இதழ் ஒன்பதிலிருந்து (1994) தொடங்கி விரிவடைந்த எமது எந்த எந்தச் செயல்பாடுகளுக்காகத் தாக்கப்பட்டோம் என்று ஒரு சிறு பட்டியலைப் பார்ப்போம்.
1. படைப்புகளில் பாலியல் அல்லது வசைச் சொற்கள். தாக்கியவர்கள் இடதுசாரிப் பெரியோர்கள். ஒரு பெரியவர் பேச்சாளர் மேசையில் இருந்த என்னை நோக்கி ஆவேசமாக முன்னேறி வந்தபோது அவர் உதடுகளுக்குப் பின்னால் சோர்பிட்ரேட் மாத்திரையை இடுக்கியிருப்பது தெரிந்தது. அன்று விவாதத்தில் அவருக்குத்தான் வெற்றி. நான் கொலைபாதகத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்று குலைநடுங்கிக் கொண்டிருந்தேன்.
2. 90களில் வலுப்பெற்ற பெண் எழுத்து. பெண்கள் தமது உடலை, காமத்தை, இச்சைகளை வெளிப்படுத்தல். தாக்கியவர்கள் அதிகமும் தமிழ்த் தேசியவாதிகள், பண்பாட்டுக் காவலர்கள். எப்போதுமே தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதில் முன்னணியில் இருக்கும் திரைத்துறையினர் பலர் இதிலும் முன்னின்றார்கள்.
3. தமிழ் இனி 2000 கருத்தரங்கம். தாக்கியவர்கள் பல தரப்பினர். ஜெயமோகன் ('ரவிக்குமார் போன்றவர்கள்' கலந்துகொள்வதால்), அ. மார்க்ஸ் (எதற்கு வெகு ஆவேசமாகத் தாக்கினார் என்பது மறந்துவிட்டது), ஜெயகாந்தன். ஜெயகாந்தன் ஈழத்தமிழர்கள் கலந்துகொள்வது தொடர்பில் தனது மனஅவசத்தை வெளிப்படுத்தித் தினமணிக் கதிரில் ஒரு நேர்காணல் அளித்தார். துக்ளக் இதழ், இடதுசாரிகள். வருகைதந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் மதிய உணவளித்தோம். ஆனால் பேச்சாளர்களுக்கு உணவகத்திலும் பார்வையாளர்களுக்குப் பந்தலிலும் அளித்தது அவர்தம் சமத்துவ உணர்வைத் தூண்டிவிட்டது. தமிழ் தேசியவாதிகள். குறிப்பாக அறிவுமதி ‘ஆறாம் திணை’ என்ற இணைய இதழில் காறித் துப்பிக்கொண்டே இருந்தார். இன்ன பிற.
4. புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் தொகுக்கும் பெரும்பணி. ஆ. இரா. வேங்கடாசலபதியைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நடந்தது. தாக்கியவர்கள் மேற்படி அனைவரும். கூடுதலாகச் சாதிப்பற்றாளர்கள்.
பு.பி.யின் மனைவியார், ஒரே மகள் ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்து மேற்கொண்ட இப்பணிக்குத் தெரிவிக்கப்பட்ட கண்மூடித்தனமான எதிர்ப்புபோல ஒரு அபத்தத்தைத் தமிழ் அறிவுலகம் அதுவரை எதிர்கொண்டதில்லை. இதற்குள் எனக்குத் தோல் தடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் சலபதியின் உடல்நலம் பின்னடைவு கண்டது. இந்தத் தீய நோக்கத்தின் பயனாகத்தான் புபி படைப்புகள், அவை பொதுவுடைமையாவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டுடைமையாக்கப்பட்டன. அன்றே ஒரு வேகத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய பு.பி.யின் முழுப் படைப்புகளையும் தொகுக்கும் பணி, இன்றுவரை முடியாமல் இருக்க இந்தக் கீழறுப்பு வேலைகளே காரணம். இக்களத்தில் கள் குடித்த குரங்குகளைப் போல ஆடியவர்கள் அதன் பிறகு புதுமைப்பித்தனுக்காக ஒரு புல்லைக்கூடப் பிடுங்கவில்லை.
5. சங்கராச்சாரியார் கைது தொடர்பில் வெளியான இரண்டு இதழ்கள். நாங்கள் காலச்சுவடுக்கு ஒத்தாசையாக இருக்குமென மேற்கொண்ட ஒரு முக்கியத் திட்டம், அதை ஆதரித்த கார்ப்பரேட்டால் இடைநிறுத்தப்பட்டது. சென்னையில் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்த பெரும் நெருக்கடி ஏற்பட்டது. காலச்சுவடு தலையங்கங்கள் எப்போதும் பிரச்சினையின் மறுதரப்பினரையும் சிந்திக்க வைக்க எத்தனிக்கும் தொனியில் இருக்கும். ஆகவே மதம் மாறியவர்களிடம் பிரச்சாரம் செய்யும் கடும்தொனியில் பேசவில்லை என்று முற்போக்காளர்கள் சந்தேகம் கொண்டு எதிர்த்தார்கள். குறிப்பாகச் சங்கராச்சாரியார் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்று தலையங்கம் குறிப்பிட்டது. ஒரு அரசியல் பாப்பாவுக்குக் கூட தெரிந்த செய்தியைக் குறிப்பிட்டது சர்ச்சையானது. ஆனால் அது போலவே நடந்தது. வெளிப்டையாகத் தெரியும் ஒரு யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுவது தொந்தரவு செய்கிறது. பிரச்சாரத்தையே மனம் வேண்டுகிறது. இந்த வரிக்காகத் துடித்தவர்கள், 2006இல் திமுக அரசு (கோ.சி. மணியை காஞ்சி மடத்திற்குத் தூது அனுப்பினார்கள்) வழக்கை நீர்த்துப்போகச் செய்தபோதும் நீதிமன்றம் அவரை விடுவித்தபோதும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. சாரமல்ல, அடவுகளே முக்கியம்!
6. 2008 மார்ச் இதழில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் உருவானபோது, முதல்வரே அதன் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அடங்கிய தொனியில் பண்புடன் அதைத் தவிர்த்துவிடும்படியும் மொழிசார் அறிஞரை அப்பொறுப்பில் நியமிக்கும்படியும் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துத் தலையங்கம் எழுதினோம். 2008இல் ஜனவரி இதழில்தான் ‘மெய்ப்பட வேண்டிய கனவு’ என்ற தலைப்புடன் தமிழக அரசின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை, நான் தலைமைச் செயலகம் சென்று சேகரித்த தகவல்களின் அடிப்படையில், பாராட்டித் தலையங்கம் எழுதியிருந்தோம். செம்மொழித் தலையங்கம் மரர்ச்சில் வெளிவந்ததும் ஏப்ரல் மாதமே காலச்சுவடு இதழ்கள் நூலகங்களில் தடை செய்யப்பட்டன. ‘அரசு நினைத்தால் காலச்சுவடையே நிறுத்தமுடியும்’ என்று எச்சரித்துக் கடிதம் எழுதினார் இமையம். அப்போது திமுக ஆதரவில்தான் மத்திய அரசும் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தோம். நீதிபதி சந்துரு இடைக்காலத் தடை வழங்கினார். தடையை முறியடிக்க கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சென்னையில் இருந்து பறந்துவந்து ஆஜரானார்! ஈ ஏறி மலை சாயுமா என்ன? வழக்கின் ஒரு கட்டத்தில் ஆட்சி மாறியது. அரசு நூலக ஆணையைத் திரும்ப அளித்தது.
அடுத்த முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் செம்மொழி நிறுவனத்தைப் புறக்கணித்தார். இப்படித்தான் நடக்கும் என்பதை முன்னுணர்ந்து சொல்லத் தீர்க்க தரிசனம் அவசியம் இல்லை. அடிப்படை அறிவு போதுமானது.
2009இல் அரசு திடீரென்று சு.ரா.வின் மீது அன்பின் பார்வையைச் செலுத்தியது. அவர் ஒரு தமிழ் நாட்டுச் சொத்து என்பதை உணர்ந்தது. எனவே சு.ரா.வின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியது. இதன் வழி காலச்சுவடின் அடித்தளத்தை அசைத்துவிடலாம் என்பது அரசை அறிவுறுத்திய சூதுவாது செய்யும் படித்தவர்களின் திட்டம். காப்புரிமையாளர்களின் அனுமதியின்றி இப்படி நாட்டுடைமையாக்க முடியாது என்ற பாடத்தை அரசுக்குக் கற்பித்தோம். முயற்சி கைவிடப்பட்டது. அதன் பின்னர் காப்புரிமையாளர்களின் முன் அனுமதி பெறாமல் நிதிநிலை அறிக்கையின்போது தன்னிச்சையாக நாட்டுடைமையாக்கப் பட்டியலை நிதியமைச்சர் அறிவிக்கும் நடைமுறையும் முடிவுக்கு வந்தது.
இன்னும் பல கதைகள் உண்டு. எனவே பெருமாள்முருகன் பிரச்சினை வெடித்தபோது, நான் புடம் போடப்பட்டு இருந்தேன்.
பெ. மு. : பதிப்புப் பணிகளுக்குத் தமிழ் அறிவுலகின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்தது, இருக்கிறது? அது போதுமானதா?
கண்ணன்: ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பவர்களிடமிருந்தும் செயலாற்றுபவர்களிடமிருந்தும் அபரிமிதமான ஆதரவு கிடைத்தது. இல்லையென்றால் இத்தனை பெரும் பணிகள் நடந்தேறியிருக்க முடியாது. பல்துறை சார்ந்த நிபுணர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி காலச்சுவடு வெளியீடுகளின் கருப்பொருள் விரிவும் ஆழமும் பெறப் பங்களித்திருக்கிறார்கள். எதிர்ப்பு உரக்க, கண்கூடாக வெளிப்படும். ஆதரவு நம்மைச் சாந்தமாக, இணக்கமாக வந்தடையும்.
1994இல் காலச்சுவடு இதழில் வெளிவராத புதுமைப்பித்தன் படைப்புகளை பிரசுரிக்கத் தொடங்கியதுமே ஒரு மினி வாசக எழுச்சி ஏற்பட்டது. பின்னர் ஜி. நாகராஜன் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கியதுமே வாசகர்கள் எங்களை அடையாளம் கண்டுகொண்டார்கள். அதன் பின்னர் முன்பின் அறியாத நூல் சேகரிப்பாளர்கள் தங்கள் சேகரிப்புகளை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்கள். முதல் பதிப்புகள், கிடைக்காத நூல்கள், இதழ்கள் எனப் பலவற்றையும் பகிர்ந்து எங்கள் பதிப்புகளை மேம்படுத்திவருகிறார்கள்.
பொதுவாகக் கல்வித்துறையினர் போதுமான அளவுக்கு காலச்சுவடை அன்றும் இன்றும் ஆதரிக்கவில்லை. அவர்கள் பரவலாக வாசிப்பதும் இல்லை, மாணவர்களை வாசிக்கத் தூண்டுவதும் இல்லை. கல்விப்புல நூலகங்களுக்கு காலச்சுவடு நூல்களை, இதழை வாங்குவது மந்தமாகவே நடக்கிறது. பாடத்திட்டத்தில் காலச்சுவடு நூல்கள் தேர்வுசெய்யப்படுவதும் குறைவுதான். இந்தப் பிரதேசம் முழுவதும் என்.சி.பி.எச்.சின் எதேச்சதிகாரத்தினுள் இருப்பது ஒரு முக்கியப் பிரச்சினை.
பெ. மு. : பதிப்பகத்தை நிறுவனமாக நடத்துவதில் அன்றாட நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கும். அதுவும் தலைநகருக்குத் தொலைவில் உள்ள நாகர்கோவிலில் இருந்து காலச்சுவடு பதிப்பகம் இயங்கிவருவதால் உங்களுக்கெனப் பிரத்யேகச் சிக்கல்கள் இருக்குமே?
கண்ணன்: இன்று திரும்பிப் பார்க்கையில் காலச்சுவடு நாகர்கோவிலிலிருந்து நடத்தப்படுவது மறைபொருளாக இருக்கும் கொடுப்பினை என்றுதான் பார்க்கிறேன். பெருநகரத்தின் தளும்பல்கள், சிதறல்கள், ஊடக வெளிச்சம், அரசியல், அதிகார நெருக்கம் இல்லாமல் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து பணியாற்ற முடிகிறது. ஒரு சிறுநகரத்தில் ஒரு பதிப்பகம் நடந்திடத் தேவையான நிபுணத்துவத்தை உருவாக்க முடிகிறது. தினசரிப் பயணத்தில் விரயமாகும் நேரம் ஆகக்குறைவு. வீடும் அலுவலகமும் ஒரே இடத்தில் இருப்பதால் மதியம் ஓய்வெடுக்கும் பாக்கியமும் உண்டு! நமது ஆளும்வர்க்கத்துடனும் அறிவுலகின் உயரடுக்குகளுடனும் ஊடாடாமல் ஒரு பதிப்பகத்தை, இதழை நடத்த முடியாது. ஆனால் அகலாமல் அணுகாமல் இயங்கிட முடியும். நமது உயர்வகுப்பினருடன் இரண்டறக் கலந்துவிடுவதில்லை என்பது தமிழ் இனி 2000 நடத்தியபோது எடுத்துக்கொண்ட உறுதிப்பாடு. வெளிப்பார்வைக்கு முரண்பட்டு நிற்கும் சக்திகள் உள்ளடியில் கைகோத்திருப்பார்கள் என்பது அப்போது கிடைத்த தரிசனம். இந்த விலகல் சாத்தியப்பட்டதற்கு வாழுமிடமும் ஒரு காரணம்.
பெ. மு. : எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் நல்லுறவு அமைவது அரிது. எழுத்தாளர்களைக் கையாள்வதில் உங்கள் அனுபவம் எப்படி?
கண்ணன்: எனக்குப் பெரிய புகார்கள் இல்லை. நாம் சரியாக, நம்பிக்கையாக நடந்துகொண்டால் எழுத்தாளர்கள் சரியாகவே உறவாடுகிறார்கள் என்பதுதான் என் அனுபவம். இதில் விதிவிலக்காக ஏற்பட்ட சிக்கல்கள் இந்த விதியை உறுதிப்படுத்தின. எழுத்தாளர்கள் பதற்றமடைவதை, என்னிடம் கோபம்கொள்வதை நான் பெரிதுபடுத்துவதில்லை. கோபத்தைக் கடந்து விளக்க வேண்டியது, பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு. என்னுடைய ஆசிரியர் குழுவினரிடமும் இக்கோபத்தை அமைதியாக உள்வாங்கிக் கொள்ளும்படிதான் அறிவுறுத்துகிறேன். ஆனால் சில எழுத்தாளர்கள் நம்மை எதிர்கொள்ளத் தயங்கி, இங்கு பணியாற்றும் இளைஞர்களிடம் — அவர்கள் காலச்சுவடின் எந்தக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் பொறுப்பல்ல — தமது கனலைக் கொட்டுவதுதான் என்னைக் கடும்கோபமடையச் செய்வது.
பெ. மு. : இதுவரை நீங்கள் பதிப்பித்த நூல்களில் எதிர்பாராமல் பெருங்கவனம் பெற்றவை, எதிர்பார்த்துக் கவனம் பெறாமல் போனவை எவை?
கண்ணன்: ‘திருடன் மணியன்பிள்ளை’ நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்று குளச்சல் யூசுப் கேட்டார். நானும் உரிமை வாங்கிவிட்டேன். அவருக்கு நிதானித்துச் சிந்திக்கையில் நூலின் அளவைக் கருதிப் பெரும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. அச்சம் பல பக்கங்களை மொழிபெயர்ப்பது பற்றியது அல்ல. காலச்சுவடுக்கு நட்டம் ஏற்படும் என்ற கவலை. ஏற்றுக்கொண்ட பணியைச் செய்து முடிப்போம், கவலை வேண்டாம் என்றேன். இது 15 ஆண்டுகளுக்கு முன்னர். அந்நூல் இன்றுவரை விற்றுக்கொண்டே இருக்கும் என்று இருவருமே அப்போது நம்பவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏ. கே. செட்டியாரின் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ சலபதி பதிப்பிக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியிட்டோம். ஆனால் அது வாசக வரவேற்பைப் பெறவில்லை. ஏன் என்பது புரியவும் இல்லை. இதுபோன்ற விஷயங்கள் சற்று சிறிதும் பெரிதுமாக ஆண்டுதோறும் நடக்கும். பதிப்பகப் பணியின் மர்மங்களில் இதுவும் ஒன்று.
பெ. மு. : பதிப்பு சார்ந்து உங்களுக்குப் பெருந்திட்டம் ஏதேனும் உள்ளதா? அதைச் சாத்தியப்படுத்த எத்தகைய முயற்சிகளைச் செய்கிறீர்கள்?
கண்ணன்: நிறைய திட்டங்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் நிறைவேற்றப் போதிய முதலீடும் திறனாளர்களும் தேவை. காலச்சுவடைச் சுற்றி ஒரு உலகளாவிய பல்துறை நிபுணர்கள் குழு உள்ளது. பெரிய திட்டங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றும் திறனையும் நிரூபித்திருக்கிறோம். இருப்பினும் அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க கோடிகளைக் கொட்டுபவர்கள் —தமிழக அரசும் கூட — இத்தனை சாதனையான நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு போன்ற தனியார் நிறுவனங்களின் மீது கடைக்கண் பார்வையைச் செலுத்துவதில்லை. மெதுவாக வளர்ந்து, முதலீட்டைப் பெருக்கிச் சாத்தியமான பெரும்பணிகளைக் கைக்கொண்டு செயல்படுத்துகிறோம். இந்தாண்டு இரண்டு தொகுதிகளாக வெளியான கு. அழகிரிசாமி நாட்குறிப்புகள், ஒரு பல்கலையின் பதிப்புத்துறை கையிலெடுக்க வேண்டிய பணி. ஆனால் பதிப்புத்துறையே இல்லாத பல்கலைகளின் அவலச்சூழலில் நாம் பணியாற்றுகிறோம். இப்பணியில் எந்தக் கல்வியாளரும் பங்களிக்கவில்லை என்பது மற்றொரு செய்தி!
பெ. மு. : வாசகரை காலச்சுவடு பதிப்பகம் எப்படி அணுகுகிறது? வாசகருக்கு எனப் பல திட்டங்களை வைத்துள்ளீர்கள். அவ்வப்போது பல சலுகைகளையும் அறிவிக்கிறீர்கள். வரவேற்பு எப்படி உள்ளது?
கண்ணன்: நம்முடைய செயல்பாடுகள் முறையாக இருந்தால் எப்போதும் நம் பக்கம் இருப்பவர்கள் வாசகர்கள்தான். சூழலில் எதிர்மறைகள் கள்வெறி கொள்ளும்போது எமது பணிகளைத் தொடரத் தேவையான நிதானத்தை வழங்குபவர்கள் வாசகர்கள்தான். காலச்சுவடின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துப் பல திட்டங்கள் வழி கணிசமான முதலீட்டையும் வழங்குகிறார்கள். இவர்கள் காலச்சுவடு அரங்கில் தவறாமல் பெரும் எண்ணிக்கையில் கூடுவதால்தான் அதிகார மையங்கள் எங்களை விட்டுவைக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்!
தமிழ்ப் பதிப்புலகம் நூலகத்துறை ஆணையை முழுவதுமாக நம்பிச் செயல்பட்டது ஒரு வரலாற்றுச் சரிவு. வாசகர் இருப்பு பலவீனமாக இருந்த காலத்திலும் முழுவதுமாக வாசகரை நம்பிச் செயல்பட எத்தனித்திருக்க வேண்டும். எது விற்பனையாகும் என்று பதிப்பாளர்கள் செய்த யூகங்கள் அவர்களுடைய சிந்தையின் வரையறைகள் சார்ந்து அமைந்தன; வாசகரின் ரசனை, பண்பு சார்ந்து அல்ல. வாசகர் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அந்த நிலை இப்போது மாறிவருகிறது. வாசகர்களும் உற்சாகமாகப் புத்தகச் சந்தைகளை வரவேற்கிறார்கள்.
வாசகரை எட்டும் பயணத்திற்கு முடிவே இல்லை. நம் கற்பனைகளைத் தாண்டி அது விரிவடையும். பாரிஸின் மையத்திலிருக்கும் ஒரு பிரெஞ்சுப் புத்தகக்கடையில் இப்போது தமிழ் நூல்கள் விற்பனையில் உள்ளன!







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கண்ணன்
பெருமாள் முருகன்
ம. கேசவன்
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
Be the first person to add a comment.