கட்டுரை இலக்கியம், ஸுஃபித்துவம், ஆன்மீகம்

இத்ரீஸ் ஷாவும் ஓஷோவும்

ரமீஸ் பிலாலி
02 Sep 2026
0

இந்தியாவில் பிறந்து வளர்ந்து உலகம் முழுவதும் தன் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்திய இருபதாம் நூற்றாண்டு ஆளுமை ஓஷோ. உலகத்தின் அனைத்து ஞான மரபுகள் குறித்தும் மிக ஆழமாகவும் அகலமாகவும் வாசித்தவர். தான் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நூல்களை வாசித்திருப்பதாக அவரே சொல்கிறார்! இது இன்றைக்கும் விவாதத்துக்குரிய ஒரு செய்தியாக உள்ளது. அவரின் தனிப்பட்ட நூலகத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் நூல்கள் இருக்கின்றன.

இவ்வளவு பரவலாக வாசித்த ஓஷோ ஒருமுறை, தான் நேசிக்கும் நூறு நூல்கள் பற்றிப் பத்து நாட்கள் தொடர் உரை நிகழ்த்தினார், நாளொன்றுக்கு பத்து நூல்கள் என்ற கணக்கில். அதில், நூல் பெயர் அல்லாமல் சில ஆளுமைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் இத்ரீஸ் ஷாஹ் மிகவும் முக்கியமானவர். இந்த உரைகள் தொகுக்கப்பட்டு “Books I have loved” (நான் நேசித்த புத்தகங்கள்) என்று ஒரு நூலாக வெளியாகியுள்ளது. 

நேற்றுதான் இத்ரீஸ் ஷாஹ் எழுதிய அல்லது தொகுத்த “Wisdom of the Idiots” என்னும் நூலை “முட்டாள்களின் ஞானம்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்து சீர்மை பதிப்பகத்துக்கு அனுப்பினேன். அதன் பின்னட்டையில் “நான் நேசித்த புத்தகங்கள்” என்னும் நூலில் ஓஷோ கூறிய கருத்து ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளேன்: 

“ஒரு மனிதன், இத்ரீஸ் ஷாஹ். நான் அவரின் நூல்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன், ஏனெனில் அவை அனைத்துமே அழகானவை. இந்த மனிதனின் ஒவ்வொரு நூலையும் நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.”  

இத்ரீஸ் ஷாஹ் எவ்வளவு முக்கியமானவர் என்பதற்கு இந்த ஒரு கருத்தே போதுமானது. ஓஷோவிடம் இத்ரீஸ் ஷாஹ்வின் தாக்கம் உண்டு. “Wisdom of the Idiots” என்று இத்ரீஸ் ஷாஹ் எழுதிய அதே அர்த்தத்தில் ஓஷோவின் நூல் ஒன்றும் உண்டு. அதன் தலைப்பு “Wisdom of Folly” என்பதாகும். இந்த நூலில் ஓஷோ முல்லா நஸ்ருத்தீனை வைத்து இருநூறு நவீன நகைச்சுவைத் துணுக்குகளைப் புனைந்திருக்கிறார். ஓஷோவை மிகவும் கவர்ந்த அந்த முல்லா நஸ்ருத்தீன் என்னும் ஆளுமையை உலகறியச் செய்தவர் இத்ரீஸ் ஷாஹ்தான். அது பற்றி ஓஷோ இப்படிச் சொல்கிறார்:

“முல்லா நஸ்ருத்தீனை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அது ஒரு அதிசயமான சேவை. அதற்கான கைம்மாறு செய்யப்படவே முடியாது. மேற்குலகம் என்றென்றைக்கும் அவருக்குக் கடன் பட்டதாகவே இருக்க வேண்டியதுதான். நஸ்ருத்தீனின் சின்னச் சின்ன நீதிக் கதைகளை இத்ரீஸ் ஷாஹ் மேலும் அழகாக்கிவிட்டார். அந்த நீதிக் கதைகளைத் துல்லியமாக மொழிபெயர்க்கும் திறன் மட்டுமல்ல, அவற்றை மெருகூட்டி மனதைக் கவரத்தக்கதாகவும் அர்த்தக் கூர்மை உடையதாகவும் ஆக்கும் திறனும் இந்த மனிதனிடம் இருக்கிறது. அவரின் அனைத்து நூல்களையும் நான் பரிந்துரைக்கிறேன்.”

இத்ரீஸ் ஷாஹ்வின் தாக்கம் ஓஷோவிடம் உண்டு என்பதற்கு இன்னொரு உதாரணம் தருகிறேன். இது முன்பு காட்டியதைவிட மேலும் சிறப்பானது.

இத்ரீஸ் ஷாஹ் எழுதிய ஐம்பத்தாறு நூல்களில் “The Book of the Book” என்பதுதான் மிகவும் விசித்திரமானது.  மொத்தம் 278 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் முதல் பதினேழு பக்கங்கள் மட்டும்தான் பிரதி (text) இருக்கிறது. மீதமுள்ள 261 பக்கங்கள் வெள்ளைத் தாள்களாகவே உள்ளன. அது அப்படித்தான் வெளியிடப்பட்டது, ஒரு பதெனேழு பக்க புத்தகமும் 261 பக்க நோட்புக்கும் ஒன்றாக பைண்டு செய்யப்பட்டது போல! அல்லது, அந்தப் பதினேழு பக்கங்களில் உள்ள சிறிய கதைகளுக்கான பின் குறிப்புகளை வாசகர்கள் எழுதிக் கொள்வதற்காக 261 வெற்றுப் பக்கங்கள் தந்திருக்கிறார்கள் போலும்! அவ்வளவு ஆழமான செய்திகள் உடைய நூல்!

ஆனால் இது ஒரு ஸூஃபி உத்தி என்று ஓஷோ சொல்கிறார். இந்த நூலை அவர் மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளார்:

“ஸூஃபிகளிடம் ஒரு நூல் இருக்க்கிறது : புத்தகங்களின் புத்தகம். அதில் எதுவுமே எழுதப்பட்டிருக்காது. அது வெறுமையாக உள்ளது. அதை வெளியிட எந்தப் பதிப்பகமும் முன் வரவில்லை. அதை அச்சிடுவதற்கான பைத்தியக்காரத்தனம் எவரிடம்தான் இருக்கும்? – அச்சிடுவதற்கு அதில் எதுவுமே இல்லையே! அண்மையில், அதனை வெளியிடும் தைரியம் ஒரு பதிப்பகத்திடம் உண்டாகிவிட்டது. ஏனெனில், முகம்மது நபியின் வமிச வாரிசு ஒருவர் அந்த வெற்று நூலுக்கு ஒரு சிறு முன்னுரை எழுத முன்வந்தார். அந்த நபர், இத்ரீஸ் ஷாஹ், ஒரு பத்து அல்லது இருபது பக்கங்களில் அந்த வெற்று நூலுக்கு ஒரு முன்னுரை எழுதினார். அத்துடன் இருநூறு பக்கங்கள் வெறுமையாக இருந்தன – ஆனால் ஒருவழியாக அது பதிப்பிக்கப்பட்டுவிட்டது.”

இந்த நூலைத் தமிழாக்கம் செய்யலாம் என்று நான் யோசித்தேன். பதினேழு பக்கங்கள் மட்டுமே பிரதியும், இருநூறு வெற்றுப் பக்கங்களும் என்று ஒரு புத்தகம் வெளிவந்தால் யார் அதை வாங்குவார்கள்? மேலும், அந்தப் பதினேழு பக்க முன்னுரையைத் தமிழில் பெயர்த்தால் பத்துப் பக்கம்கூட வராது என்றே நினைக்கிறேன். எனவே அதை இந்தக் கட்டுரையில் பெயர்த்து வழங்கிவிடலாம் என்று பார்க்கிறேன்.

இத்ரீஸ் ஷாஹ் அதற்கு முன்னுரை எழுதியதே அந்த நூலுக்குச் செய்த அநீதம் என்கிறார் ஓஷோ! ஏழெட்டு நூற்றாண்டுகளாக அது வெறுமையாகவே இருந்து வந்துள்ளது. இந்த மனிதர் வந்து அதற்கு ஒரு பதினேழு பக்க முன்னுரையை ஏன் எழுத வேண்டும்? அப்போதுதான் மனிதர்கள் அதை வாங்குவார்கள் என்று அவர் அப்படிச் செய்திருந்தாலும் அது  அந்த நூலுக்குச் செய்த அநியாயம்தான் என்கிறார் அவர். என்ன செய்வது? இந்த நூல் எப்படியாவது தமிழுக்கு வந்துவிட வேண்டும் என்னும் அக்கறை எனக்கு இருப்பதால், இப்போது இத்ரீஸ் ஷாஹ்வின் முன்னுரைப் பகுதியைத் தமிழாக்கம் செய்து நானும் அந்த நூலுக்கு அநீதம் செய்ய வேண்டி இருக்கிறது! நான் இன்னதுதான் செய்கிறேன் என்று தெரிந்தே செய்தாலும் கருணை மிக்க இறைவன் என்னை மன்னிப்பானாக! 

இதோ அந்த நூலின் தமிழாக்கம்:

புத்தகங்களின் புத்தகம்

முன்னுரை

ஒரு ஈசாப் நீதிக் கதை. ஒரு பெண் சிங்கத்திடம் அது ஒரு பிரசவத்தில் எத்தனை குட்டிகளை ஈன்றது என்று கேட்கப்பட்டது.

அது சொல்லிற்று: 

“ஒன்று – ஆனால் அந்த ஒன்று ஒரு சிங்கம்.”

- இத்ரீஸ் ஷாஹ்.

1.

அரசன் ஆன தர்வேஷ்

முன்பு ஒரு தர்வேஷ் இருந்தார். அவர் சத்தியத்தைக் கண்டவர். மக்கள் தன் போதனைகளைக் கேட்பதற்கு முன் உலக ரீதியில் தான் சக்தி உடையவனாக ஆக வேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே எல்லாருக்கும் கண்ணுக்குத் தெரிந்த வகையில் அதிகாரம் மிக்கவனாக மாறுவதில் அவர் தன் முழு ஆற்றலையும் குவித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் அந்த நாட்டுக்கு அரசர் ஆகிவிட்டார்.

சில காலம் ராஜாவாக இருந்த பின்னர் அவருக்கு ஒன்று புரிந்தது. அதாவது, அவர் போதிக்கும் முறையை மக்கள் விரும்பவே இல்லை.

அவர்கள் அவருக்குச் செவி கொடுப்பதாக வெளியே தெரிந்தாலும் சன்மானத்துக்கான ஆசையாலோ தண்டனைக்கான பயத்தாலோ மட்டுமே அவர்கள் செயல்பட்டனர்.

ஞான போதனை செய்வதற்கான உத்தி அந்த தர்வேஷ் மன்னரிடம் இல்லை. அவரின் ஆயுள் முடியப் போகும் தருணம்வரை எவருமே அவரை நாடி வரவில்லை.

2

பச்சையுடுத்திய அந்நியன்

வயதாகிவிட்ட மன்னர் ஒருவர் வேட்டைக்குப் போனபோது களைத்துப் போய் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருந்த ஒருவர் அரசனை அணுகினார். 

அரசனுக்கு அவர் முகமன் உரைத்துவிட்டு ஒரு கதை சொன்னார். அது இதுதான். இந்த புத்தகத்தின் கதை.

அடுத்தப் பகுதியில் புத்தகத்தின் கதை ஆரம்பிக்கிறது.

3

எதிர்பார்த்ததுக்கு மாறாக

தன் காலத்தின் அற்புதமாக இருந்த ஞானி ஒருவர் தன் சீடர்களுக்குப் போதித்து வந்தார். அள்ள அள்ளத் தீராத ஒரு மூலத்தில் இருந்து அவர் ஞானங்களை எடுத்து வழங்குவதாகத் தோன்றியது.

அவரின் அறையில் தண்டியான ஒரு பாரநூல் இருந்தது. அது அவருக்கான மரியாதை நிமித்தம் வைக்கப்பட்டிருந்தது. தன் அறிவு அனைத்தும் அதிலிருந்து கிடைத்ததே என்று அவர் கூறினார்.

அந்த கிரந்தத்தைத் திறந்து பார்க்க வேறு யாரையுமே அவர் அனுமதித்தது இல்லை.

அவர் ஒருநாள் இறந்துவிட்டார். அவரைச் சுற்றி நின்ற சீடர்கள் தம்மை அவரின் வாரிசுகள் என்று கருதிக்கொண்டு அந்த நூலுக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்துடன் அதை நோக்கி ஓடினார்கள். 

அதைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அவர்கள் வியந்தார்கள், குழ்மபினார்கள், ஏமாந்து சலித்தார்கள்.

அந்த ஒரே பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்ணுற்றபோது அந்த வாசகத்தின் அர்த்தம் என்ன என்று அவர்கள் மேலும் திகைத்தார்கள், விரக்தியடைந்தார்கள்.

அதில் எழுதப்பட்டிருந்தது:

“பாத்திரம் மற்றும் உள்ளீடு ஆகியவற்றின் வேறுபாட்டை நீங்கள் உணரும்போது உங்களுக்கு அறிவு கிடைக்கும்.”

4

அறிஞர்களின் கருத்து

அந்த ஞானியின் பிரதிநிதிகள் அந்த நூலைத் தம் காலத்தின் பிரபலமான அறிஞர்களிடம் எடுத்துச் சென்றனர்.

“எங்களிடம் இந்த நூல் இருக்கிறது. உங்களின் வியாக்கியானத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறோம். இது இன்னார் ஆன ஒரு பெரிய ஞானியின் உடைமையாக இருந்தது. அவர் தன் காலத்தின் அற்புதமாக இருந்தார். இப்போது அவர் இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்றதெல்லாம் இந்த ஒரு புத்தகம்தான். இது எங்களுக்கு மர்மமாக இருக்கிறது. இதன் அர்த்தம் எங்களுக்கு விளங்கவில்லை” என்று கூறினார்கள்.

முதலில் அந்த அறிஞர்கள் அந்த நூலின் அளவைப் பார்த்து இவ்வளவு பெரிய கிரந்தமா என்று பரவசப்பட்டனர். அதன் அட்டையில் அதன் முந்தைய உரிமையாளரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் உண்மையில் மக்கள் திரளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஓர் ஆளுமைதான்.

அவர்கள் சொல்லினர்: 

“நிச்சயமாக, நாங்கள் உங்களுக்கு இதன் உண்மையான வியாக்கியானத்தை அளிப்போம்.”

ஆனால் அதனை அவர்கள் திறந்து பார்த்தபோது அது வெறுமையாக இருக்கக் கண்டனர். அதில் வெள்ளைத் தாள்கள் மட்டுமே இருந்தன. அதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருந்த சுருக்கமான வாசகத்தின் வார்த்தைகள் அவர்களுக்கு விளங்கவே இல்லை. அதற்கு அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அவர்கள் ஏளனம் செய்தனர். அப்புறம் ஸூஃபியின் மாணவர்களைக் கோபமாகத் தூற்றி அங்கிருந்து விரட்டிவிட்டனர். 

தாம் ஒரு மோசடிக்கு இலக்காகிவிட்டோம் என்று அவர்கள் நம்பினர்.

அது அறிஞர்கள் குறைவாகவும் வெளியரங்கமான அறிவு மட்டுமே உடையோராகவும் இருந்த காலக்கட்டம்.

உங்களை ஏதேனும் செய்யும் ஒரு நூலை அவர்களால் கற்பனை பண்ணக்கூட முடியவில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் உங்களிடம் ஏதேனும் சொல்லும் நூல் மட்டுமே.

5

தர்வேஷின் வியாக்கியானம்

மனம் உடைந்துபோன அந்த மாணவர்கள் அங்கிருந்து சென்று சத்திரம் ஒன்றில் ஓய்வெடுத்தனர். அப்போது அங்கே ஒரு தர்வேஷ் வந்தார். அவரிடம் அவர்கள் தம் குழப்பத்தைக் கூறினர்.

“அறிஞர்களிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“ஒன்றுமே இல்லை. அவர்கள் எங்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை” என்று அவர்கள் கூறினர்.

தர்வேஷ் சொன்னார்: 

“இல்லை. மாறாக, அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டனர்.

“இந்த புத்தகத்தை நீங்கள் அனுமானிக்கும் விதத்திலோ அவர்கள் அனுமானிக்கும் விதத்திலோ புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் காட்டியுள்ளனர்.

“அவர்களின் அறிவில் ஆழம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்களிடமும் உங்கள் பங்குக்குப் புத்திக் கூர்மை இல்லை.

“நீங்கள் ‘உறங்குபவர்’களாக உள்ள நிலையில் இந்த நிகழ்வின் வழியாகவே இந்த புத்தகம் எதையோ போதிக்கிறது.” 

ஆனால் தர்வேஷ் சொன்ன இந்த விளக்கம் தம் மூளைக்கு மிகவும் நுட்பமானதாக இருக்கிறது என்று அந்த மாணவர்கள் கண்டனர். அந்த நூலின் அறிவைப் பேணுகின்ற ஒரே ஆளாக இருந்தவர் அப்போது அந்தச் சத்திரத்திற்கு ஏதேச்சையாக வந்த ஒரு பயணி மட்டுமே. அரசன் ஆன தர்வேஷே! அவர் இந்த உரையாடலைக் காதில் வாங்கினார். உண்மையை அறிந்துகொண்டார்.

இதைச் சொல்லிவிட்டு, பச்சையுடுத்திய அந்நியர் எழுந்து திரும்பிப் போய்விட்டார்.

6

பாதுகாவலரும் புத்தகத் திருட்டும்

அந்த அந்நியனின் கதை அரசனிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கிற்று. அந்தக் அதை அழகான எழுத்துக்களால் வரையப்பட்டு ஒரு பெரிய புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான்.

இது அவனின் கருவூலத்தில் ஒரு மாடத்தில் வைக்கப்பட்டு இரவும் பகலும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் காவல் காக்கப்பட்டது.

வயது முதிர்ந்த அரசன் ஒருநாள் இறந்துவிட்டான். அரக்கத்தனமான படையெடுப்பாளன் ஒருவன் அவரின் நாட்டைச் சூறையாடினான்.

கருவூலத்துக்குள் உடைத்துப் புகுந்த அவன் குவிமாடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த நூலைக் கண்டான். “ஓ! இந்த நாடு இவ்வளவு வளமும் நலமும் அறிவும் பெற்றுத் திகழந்ததற்கான ரகசியம் இதுதான்!” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் உரக்கச் சொன்னான்: “அந்த நூலைக் கீழே இறக்குங்கள். அதை என் தாய்மொழியில் வாசித்துக் காட்டுங்கள்.”

இந்தப் படையெடுப்பாளன் என்னதான் ஈடு இணையற்ற உடல் வலிமை பெற்றவனாக இருந்தாலும் மூளையற்ற மூடனாகவே இருந்தான். அந்த நூலில் இருந்த ஒற்றை வாசகத்தை அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

7

மாலி அந்த நூலைக் காப்பாற்றுகிறான்

அரக்கப் படையெடுப்பாளன் அந்த நூலை அழிக்கச் செய்தான். ஆனால் அவனின் வியாக்கியானியான மாலி என்பவர் அதன் உள்ளடக்கத்தை நினைவில் வைத்திருந்தார்.

அவரின் எழுத்து வழியாகவே அந்த நூலின் போதனை அடுத்த தலைமுறையை அடைந்தது. மாலி ஒரு கடை திறந்தார்.

அதில் அவர் ‘புத்தகங்களின் புத்தகம்’ என்னும் அந்த நூலின் பிரதிகளை விற்பனைக்கு அடுக்கி வைத்தார். 

ஒரு பிரதியின் விலை இரண்டு பொற்காசுகள். அதைக் கொடுத்து நூலை வாங்குவதற்கு முன் அதைத் திறந்து பார்க்க அவர் எவரையும் அனுமதிக்கவில்லை.

சிலர் அந்த நூலின் பாடத்தைப் பயின்றுவிட்டு மாலியிடம் தங்கிப் பயில வந்தார்கள்.

பிறர் தம் காசு மீண்டும் தமக்கு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் மாலி எப்போதும் சொன்னார்:

“நூலை நீங்கள் திருப்பிக் கொடுப்பதுடன் அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதை எனக்குத் திருப்பியளித்தால் மட்டுமே நான் உங்களுக்கு உங்கள் காசுகளைத் திருப்பித் தருவேன். இல்லை என்றால் இல்லை.”

சிலர் உள்ளீட்டை விட வெறுமனே வெளித் தோற்றத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். அத்தகையோர் மாலியை ஒரு ஏமாற்றுக்காரன் என்றனர்.

ஆனால் மாலி அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் வழி நெடுகிலும் ஏமாற்றுக்காரர்களையே தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். எனவே எவரிலும் நீங்கள் அத்தகைய ஒருவரைக் கண்டடைந்து விட்டதாக அனுமானிப்பீர்கள்.”

8

யாசவி அதைப் பன்னிரு பொற்காசுகளுக்கு வாங்குகிறார்

அஹ்மத் யாசவி ஒரு மாணவராக இருந்தபோது மாலியிடமிருந்து அந்த நூலின் ஒரு பிரதியைப் பன்னிரண்டு பொற்காசுகளுக்கு வாங்கினார்.

அடுத்த நாள் அவர் திரும்பி வந்து மாலிக்கு மேலும் பத்துப் பொற்காசுகள் கொடுத்தார். அவர் சொன்னார்: 

“அந்த நூலில் இருந்து நான் கற்றுக் கொண்டது இதைவிட மதிப்பானது.

“ஆனால் என்னிடம் வேறு காசு இல்லை. எனவே என்னிடம் இருந்த அனைத்தையும் தந்துவிட்டேன். ஏனெனில், இந்தப் பாடத்தை நான் என் உடைமைகள் அனைத்தையும் விட மேலானது என்று மதிப்பிடுகிறேன்.”

9

குரு யாசவி அதனைக் கையளித்தல்

யாசவி அந்த ‘புத்தகங்களின் புத்தகம்’ என்னும் அருநூலின் வரலாற்றையும் உள்ளடக்கத்தையும் ஒரே நூலாகக் கோர்வைப் படுத்தினார். அது இருநூறு பக்கங்களுக்கும் அதிகமாக இருந்தது. அதன் அட்டையில் எழுதப்பட்டிருந்தது:

“புத்தகங்களின் தடிமன் அவற்றின் உள்ளடக்க மதிப்பை நிர்ணயிக்கும் என்றால் நிச்சயமாக இந்த நூல் இன்னும் தடித்ததாக இருந்திருக்கும்.”

மத்திய ஆசியாவின் குருமார் (ஃக்வாஜகான்) மரபைச் சேர்ந்த அஹ்மத் யாசவியின் காலத்தில் இருந்து இந்தக் கதை எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தி வைக்கப்பட்டு வருகிறது.

“புத்தகத்தின் புத்தகம்” என்னும் நூலுக்கு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய முன்னுரை அல்லது தொடக்கப் பகுதி முற்றிற்று.

இந்த நூலை தான் ஆரம்பித்த ISF (இத்ரீஸ் ஷாஹ் ஃபவுண்டேஷன்) என்னும் நிறுவனத்தின் வழியாக இத்ரீஸ் ஷாஹ்வேதான் 1969-இல் பதிப்பித்தார். இந்த நூலின் தாக்கத்தால் ஓஷோவும் இதே போன்ற ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். அதன் பெயர் “The Rajneesh Nothing Book”. அந்த நூலில் 220 வெற்றுத் தாள்கள் மட்டும் இருந்தன, விளையாடுவதற்காக!

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரமீஸ் பிலாலி

இயற்பெயர் அ. தௌஃபீக் ரமீஸ் (1976). கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர். ஸூஃபித்துவம், இஸ்லாமிய ஞான ஆக்கங்கள், கவிதைகள் எனப் பலவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்துள்ளார். குறிப்பாக ரூமியின் பாடல்களையும் உரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தில் தனித்துவமானவர். தொடர்புக்கு: trameez4l@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அங்கதம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்நிலமெங்கும் பூத்த முகம்கடைசி வெடிச்சத்தம்இக்பால்தலையங்கம்இலக்கிய நிகழ்வுகள்மழைவில்மண்வாசனை கதைகள்சாய் வைஷ்ணவிவிமர்சனம்ரோலாண்ட் பார்த்புதிய வருகைஜார்ஜ் ஜோசப்ஆலடியான்பின்னவீனத்துவம்நறுங்கதைகவிதைகள்வாசகர் கூட்டம்சதுக்கம்காஃப்காவின் காதுகள்சீர்மை இதழ்சிறுகதைத் தொகுதிதாரகன்நேர்காணல்இலக்கியம்மெல்லிய கோடுகள்விஜய்இலக்கிய விமர்சனம்கருத்தரங்கங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!