கட்டுரை கவிதையியல்

நிலையற்றுப் பறத்தல்

ஃபெர்ணான்டோ பெசோவா கவிதைகள் குறித்து

ஞா. தியாகராஜன்
02 Sep 2026
0

ஃபெர்ணான்டோ பெசோவா பெயர் தமிழ்ச் சூழலில் அதிகம் அறியப்படாத பெயராகவே தோன்றுகிறது. ஆனால் உலக இலக்கியத்தில் அவரின் இடம் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இவரின் எழுத்து முறையானது போர்ஹே, இடாலோ கால்வினோ போன்றவர்களின் எழுத்துகளுடன் வைத்துப் பேசப்படுவதாகத் தெரிகிறது. காரணம் இவர் கையாண்டுள்ள ‘ஹெட்டரோனிம்’ என்னும் எழுத்து வகையாகும். எழுத்தாளர்கள் பல்வேறு புனைபெயர்களில் எழுதுவதுண்டு எனினும் அவர்களின் மொழிநடை, பொருண்மை போன்றவைகளில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. ஆனால் ‘ஹெட்டரோனிம்’ என்பது அவ்வாறு இல்லாது வெவ்வேறு ஆளுமைகள் கொண்ட தன்னிலைகளையயே உருவாக்குதல் ஆகும். அதாவது பிறந்த தேதி, வரலாறு என முற்றிலும் வேறு பண்புகளும், வேறுபட்ட சிந்தனைகளும் கொண்ட ஆளுமையை ஒருவரே உருவாக்கி அவர்களுக்கான படைப்புலகை உருவாக்குதல் என்பதாகும். அந்த வகையில் அதிக ஆளுமைகளை உருவாக்கிய படைப்பாளராக பெசோவா அறியப்படுகிறார். எம். டி. முத்துக்குமாரசாமி அவரின் கவிதைகளை ‘இந்த முழு பிரபஞ்சத்தையும் விட சற்றே பெரியது’ என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். பெசோவா மூன்று  புனைபெயரில் எழுதிய கவிதைகளும் தனது சொந்த பெயரில் எழுதிய கவிதைகளும் இம்மொழிபெயர்ப்பில் அடங்குகின்றன. 

பெசோவா பல்வேறு புனைபெயர்களில் பல்வேறு தன்னிலைகளாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அவரின் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது அத்தகைய உணர்வுகள் தோன்றவில்லை. மாறாக ஒரு கவிஞனின் சாராம்சமான தேடல்களும், கண்டடைதல்களும் என்னவாக இருக்குமோ அதனையே இத்தொகுப்பில் வாசிக்க முடிகிறது. மேலும் ஒரு தன்னிலைக்குள்ளேயே அவர் முரண்பட்டு பேசும் இடங்களும் வருகின்றன. ஒரு சமயம் கடவுளை உணர முற்படும் ஞானியின் குரலாகவும், நகரங்களை வெறுப்பவராகவும், இயற்கையை ஆராதிப்பவராகவும் வரும் இவரின் கவிதைகள், அதற்கடுத்தே அவற்றிற்கெல்லாம் எதிரான போக்கிலும் இயங்குகின்றன. அறிவு மறுப்பைக் கொண்டாடுபவையாக அவை காட்சி தந்தாலும் மீண்டும் அந்த சிந்தனையின் மீதும் சந்தேகம் கொள்கின்றன.

‘எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் தெளிவாக இருக்கிறது’ கவிதையை எடுத்துக்கொள்ளலாம். 

எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் 
தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் 
பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் 
நான் எனக்குப் பின்னால் பார்க்கிறேன் 
ஒவ்வொரு கணமும் நான் பார்ப்பது 
அதற்கு முன்னால் நான் என்றுமே 
பார்க்காததாயிருக்கிறது
நான் பொருட்களை வெகு நன்றாகக் 
கவனிப்பவன் 
புதிதாய்ப் பிறந்த குழந்தை 
உலகைப் பார்க்கும் அதே அதிசயத்தை 
நான் உணர முடிந்தவன்

(.....)

நான் டெய்சி மலர்களில் நம்பிக்கை 
வைத்திருப்பது போலவே 
உலகின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன் 
ஏனெனில் நான் இந்த உலகைப் பார்க்கிறேன் 
ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதில்லை 
ஏனெனில் சிந்திப்பது என்பது 
புரிந்துகொள்ளாமல் போவதற்கு. 
உலகம் நாம் புரிந்துகொள்வதற்காக 
உண்டாக்கப்பட்டதில்லை
(சிந்திப்பது என்பது சரியாக இயங்காத 
கண்கள் கொண்டிருப்பது)
ஆனால் உலகைப் பார்ப்பது என்பது அதோடு 
சம்மதம் கொள்வது. 

எனக்கு எந்த தத்துவமும் இல்லை, 
எனக்குப் புலன்கள் இருக்கின்றன 
நான் இயற்கையைப் பற்றி பேசுகிறேன் என்றால் 
எனக்கு அது என்னவென்று தெரியும் என்பதால் அல்ல
நான் இயற்கையைக் காதலிக்கிறேன் என்பதால் 
ஏனென்றால் காதலிப்பவர்கள் அனைவருக்குமே 
தாங்கள் எதைக் காதலிக்கிறோமென என்றுமே 
தெரிவதில்லை 
அல்லது 
ஏன் காதலிக்கிறோமென 
அல்லது 
எது காதல் என 
காதல் என்பது நிலைபேறுடைய 
அப்பாவித்தன்மை 
ஒரே அப்பாவித்தன்மை 
சிந்திக்காமலிருப்பது மட்டுமே. 

சாதாரண அன்றாடத் தன்மையிலிருந்து தொடங்கினாலும் கவிதை பின்னால் பல தத்துவ சார்பான பார்வைகளுக்குள் நகர்கிறது. அதன் முதன்மையான அம்சமாக இருப்பது குழந்தையின் பார்வையுடன் வியப்பு குன்றாமல் உலகைக் காண்பதாக இருக்கிறது. உலகின் மீது நம்பிக்கைக் கொள்ள முடிகிறதெனக் கூறும் போது அதற்குக் காரணம் எதைப் பற்றியும் சிந்திக்காதிருப்பது என்பதாகக் கூறுப்படுகிறது. ஒருவிதத்தில் இது ஆன்மீக சார்பான பார்வையாகவும் தோன்றுகிறது. உணர்வு பிராதனப்படும் இடத்தில்தானே ஆன்மீகமும் தோன்றுகிறது. ஒருவிதத்தில் ஆன்மீகமும் அறிவைச் சற்று தள்ளி வைப்பதையே விரும்புகிறது அல்லது போதிக்கிறது. கேள்விகளற்ற சரணாகதிக்கு உந்துவதுதான் ஆன்மீகத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இயற்கையுடன் கலத்தல் என்கிற பார்வையில் இது தோன்றினாலும் மற்றொரு கவிதையில் ‘கடவுளைப் பற்றி சிந்திப்பதென்பது அவருக்குக் கீழ்ப்படியாமலிருப்பது’ எனக் குறிப்பிடுகிறார். பெசோவா ஆல்பெர்டோ கைரோ என்னும் புனைபெயரில் எழுதியுள்ள இக்கவிதைகள் கருத்துமுதல்வாத சார்புகொண்டவைகளாகவே அமைகின்றன. நமது பக்தி இயக்க மரபு போன்றே இவையும் இறை சிந்தனையில் காதலின் விதியைப் பொருத்துகின்றன. ஒருவேளை இவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த பகுத்தறிவு மரபிற்கு எதிரான அல்லது அவற்றை விமர்சிக்கும் பார்வையாகவும் இருக்கலாம். குறிப்பாகப் பகுத்தறிவு மரபின் வெளிப்பாடாகக் கருதப்படும் நகர்மையமாதல் என்பதும் இதில் எதிர்க்கப்படுகிறது. ‘பூமியிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தை எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு நான் என் கிராமத்திலிருந்து பார்க்கிறேன்’ என்னும் கவிதையில் இது பின்வருமாறு வெளிப்படுகிறது. 

‘நகரங்களில் வாழ்க்கை சிறியதாக இருக்கிறது 
இங்கே மலையுச்சியில் இருக்கும் என் 
வீட்டைவிட. 
நகரங்களின் பெரிய கட்டிடங்கள் 
பார்வையை மறைத்துவிடுகின்றன
திறந்த ஆகாயத்திலிருந்து அவை நம் 
பார்வையை வெகு தொலைவிற்கு இழுத்துச்சென்றுவிடுகின்றன. 

ஒன்றை அறிவதன் பொருட்டுச் சிந்திப்பதற்கு எதிரான மேற்கூறிய கவிதைகளின் பொருண்மை இதில் சற்று வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள இடம் தருகிறது. வளர்ந்த கட்டிடங்கள் நம் பார்வையை மறைக்கின்றன எனக் கவிதையில் கூறப்படுகிறது. நம் பார்வையின் விசாலத்தைக் குறைத்துவிடுகின்றன என்னும் போது ‘மனிதமையவாத’ சிந்தனைகளுக்கு எதிரான வேண்டுகோளாக இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

காதல் போன்ற நிலைபேறுடைய அப்பாவிதனத்தைக் கூறும் இதே கவிஞர் ‘சில சமயம் முழு நிறைவான துல்லியமான ஒளி நிரம்பிய நாட்களில்’ என்னும் கவிதையில் பொருட்களுக்கு ஏன் அழகு கூட்டப்படுகின்றன என்பதைச் சிந்திக்கின்றார். பொருட்களை உள்ளது உள்ளவாறே சிந்திப்பதுகூட எவ்வளவு கடினமாகிவிட்டதென கேள்வி எழுப்புகிறார். உண்மையில் ஒரு மாதிரியான தத்துவசார்பான ஆன்மீக அனுபவங்களையே பேசிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு நடுவே இதுபோன்ற தன் அறிவையே மீண்டும் கேள்வி எழுப்பிக்கொள்ளக் கூடிய கவிதைகளும் அமைகின்றன. அதனால்தான் தொடக்கத்திலேயே இவை ஒரு கவிஞனின் சாராம்சமான தேடல்களேயே நினைவுறுத்துவதாகக் கூறினேன். மகிழ்ச்சி * மகிழ்ச்சியின்மை, அறிவு * அறிவின்மை என எல்லா இருமை எதிர்வுகளுக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இக்கவிதைகள் பேசுகின்றன. ஆனால் எங்கேயும் உரத்த குரலில் அவை எதையும் அறுதியிடவில்லை என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். இக்கவிதைகள் ருசிகரமானதாகவும், கவிதையின்பம் அளிக்கக்கூடியவையாகவும் அமைவதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன. அதனால்தான் மகிழ்ச்சியின்மையினையும் இயற்கையின் ஒரு பகுதியாகக் காணும் பின்வரும் கவிதையானது வியப்பூட்டுகின்றது. 

அவ்வப்போது மகிழ்ச்சியாய் இல்லாதிருப்பது 
இயற்கையாய் இருப்பதன் பகுதி 
எல்லா நாட்களும் வெளியார்ந்தவையாக இருப்பதில்லை
மழை அரிதாகிவிடும்போது 
நாம் அதற்காகப் பிரார்த்திக்கிறோம் 
ஆகையால் நான் மகிழ்ச்சியின்மையை 
மகிழ்ச்சியோடு சேர்த்து 
எடுத்துக்கொள்கிறேன். 

இப்படியாக எல்லாவித இருமைகளையும் இக்கவிதைகள் பேசிச் செல்கின்றன. முதிர்ந்த ஞானியின் குரலும், அறியாமையினால் விளைந்த குழப்பங்களும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. வாழ்க்கையை எந்த தத்துவங்களின் எடையுமற்று அவை தன் போக்கில் கடந்து செல்லவிடுவதே பெசோவாவின் பெரும்பாலான தன்னிலைகளின் வெளிப்பாடாக உள்ளன. 

நாம் இன்னும் அமைதியுடன் 
நம் நிச்சயமற்ற வாழ்வை நேசிப்போம் (ரிக்கார்டோ ரீஸ்)
ஒரு கடவுளைப் போல என் வாழ்க்கையையோ 
உண்மையையோ நான் ஒழுங்கில் வைக்கவில்லை (ஆல்வேரோ டி காம்பஸ்) 

பெசோவா அவருடைய பெயரிலேயே படைத்திருக்கும் கவிதைகள் நிலையான எந்த தத்துவங்கள் மீதும் சாய்ந்துகொள்ள முடியாத கவிஞனின் அலைக்கழிப்பை வெளிப்படுத்துகின்றன. ‘சலிப்பைத் தவிர எல்லாமே எனக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன’, ‘சுதந்திரம்’, ‘கடற் பறவைகள் தாழத் தரையருகே பறக்கின்றன’ ஆகிய கவிதைகள் உதாரணமாக அமைகின்றன. இவை செயல்களின் விளைவின்மையினைனால் சோம்பல் கொள்கின்றன. 

எவ்வளவு இனிமையாக இருக்கிறது 
ஒரு வேலையை முடிக்காமல் விடுவது 
ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு 
அது என்ன சொல்கிறது என அறியாமல் இருப்பது. 

முற்றும் அறிந்திருத்தலே கவிஞனின் தகுதி என்ற தவறான சித்தரிப்பு தமிழ்ச் சூழலில் எப்படியோ புரையோடியிருக்கிறது. எதையும் வயதான முதிர்ந்த குரலிலோ, தீவிரமான பாவனையிலையோ பேச வேண்டுமென தமிழ்க் கவிதைகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அதற்கு மாறாக சிந்தனை மறுப்பை கொண்டாடும், சோம்பலை, நிலையற்று பறத்தலைப் பேசும் பெசோவாவின் கவிதைகள் உவப்பானதாகத் தெரிகின்றன. சுதந்திரம் குறித்து, இயற்கை குறித்து, தன் காலத்தின் கவிதைப் போக்குகள் பற்றி சுயமான அவதானிப்புகள் பெசோவாவிடம் வெளிப்படுகின்றன. அவற்றின் எளிமைக்குள் ஒரு மகத்தான வீழ்ச்சியை வாசிக்க முடிகிறது. அதுவே பெசோவா கவிதையை மேலும் மேலும் ஆழ்ந்து வாசிப்பதற்கான உந்துதலைத் தருகின்றன.    

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஞா. தியாகராஜன்

ஞா.தியாகராஜன் மதுரையில் வசித்து வருகிறார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தற்கால சிறுகதைகள் தொடர்பான முனைவர்ப்பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். 'போகூழ்' என்னும் கவிதை தொகுப்பு மணல்வீடு வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறுபத்திரிகைகளில் கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதி வருகிறார்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

டோனி பிரஸ்லர்சிறுகதைதாரா கேம்பெல்ரமீஸ் பிலாலிபுதிய வருகைரூமி‘நாளையும் நாளையேகிராமியம்அப்பாவின் குழிஇக்பால்குறிகேட்டல்சீர்மை இதழ்கடைசி வெடிச்சத்தம்கஸல்ரோலாண்ட் பார்த்தமிழக அரசியல்கருத்தரங்கங்கள்மழைவில்பின்னவீனத்துவம்ஒளிரும் சொற்கள்அங்கதம்சாகுல் ஹமீதுகவிதையியல்கு இலக்கியன்பெருங்கொங்கை பூத்தாள்நகர மயமாக்கம்இணைய இதழ்காலச்சுவடுபிரான்ஸ் காஃப்காதலித் வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!