கவிதை இலக்கியம்

வருணன் கவிதைகள்

வருணன்
02 Sep 2026
0

வசைஞனொருவன்

ரத்தினத்தைக் கண்டாலே ஒதுங்கிக் கொள்வார்கள்
வாய் நிறைய வசைகளோடுதான் இருப்பான் எப்போதும்
எதிரெதிராய் எவரும் பேச மாட்டார்கள்
நகர்ந்த பின் ‘இவனெல்லாம் மனுசனா’ என்பார்கள்

ஆதியிலே அவனும் மனிதனாய் இருந்திருக்கலாம்
தன் அகவெளியின் இருளைச் சகியாமலோ
மேடுகளே காணாத விரக்தியோ
பள்ளங்களினின்று மீளும் முயற்சியாகவோ
தாம்புகளாக்கி ஏறிட எத்தனிக்கும்
அயற்சியூட்டுகிற முயற்சிகளாயிருக்கலாம் அவ் வசைகள்

எனக்கு என்னையே பிடிக்கவில்லை என்பதையே
அவன் காண்போரிடமெல்லாம் விதவிதமாய்
சொல்லிக் கொண்டிருக்கிறான்
பாவம் அவன். 

 

அடைக்கலன்

மங்கிய நிறத்தில் சோகையான வெளிச்சத்தில்
கடைசி இழை பிரிந்து கொண்டிருக்கிற ஒரு காதல்
சரிபார்க்கிறது பிரியவிருக்கும் இணைத் தடங்களின் திசையை
விடம் ஒரு மிடறு தேடுகிற மனதைக் கொஞ்சம் திசைமாற்றி போக்குக் காட்டவும்
வசந்தத்தின் ஊற்றெடுத்த முதல் நாளின் முதல் பார்வை தொட்டு
அனைத்தையும் அசைபோட்டுக் குமுறும் இணை மனதின் பின்கதவின் தாழ்திறந்து
சகலத்தையும் வெளியேற்றி சுத்தம் செய்யவும் யோசனை கொள்கிறது.
இறப்பிற்கு முந்தைய மூச்சை 
இயல்புக்கு மீறிய பிரயத்தனத்துடன் வெளியேற்றியபடியே
உடல்கள் இறந்து தான் வாழ்வதைக் காட்டிலும் இதுவே பரவாயில்லை எனப் புரிந்தது போல
தேடுகிறது பிறிதொரு ஜோடி உடல்களை
அடைக்கலமாக

ஒன்றிற்கு இடையில்

பனிக்குடம் உடையட்டுமெனக் காத்திருக்கும்
மருத்துவச்சியின் பொறுமையுடனும்
பனிக்குடமுடையக் காத்திருப்பவளின் பீதியுடனும் 
கழிகின்றது வாழ்க்கை
பிரசவிக்கவிருப்பது ஏதெனும் 
புதிருடன்

நீலியெனும் மீனொருத்தி

இவ்வளவு குட்டித் தொட்டியென்கிறீர்கள் நீங்கள்
எவ்வளவு பெரிய பிரபஞ்சமென்கிறாள் நீலி
அவளொரு குட்டி இளமஞ்சள் மீன்
அவளது பிரபஞ்சம் 
கண்ணாடி மதில்களுக்கு மத்தியிலானது 
(மதில்கள் பற்றி அவள் அறியாள்)
நீள்வாக்கிலும் மேல்வாக்கிலும்
அலைந்தலைந்து உலவுவாள்
மேலிருந்து கடவுள்கள் வண்ண உருண்டைகள்
இடுகையில் துள்ளி வருவாள்
ஒரு பெருவெள்ளப் பெருக்கின்
முதல் சாமத்தில் மதில்கள் சரிய
தன்னுலகம் விரியக் கண்டாள்
அன்றாடம் உணவிடுமொரு கடவுள்
கதறியழுவதைப் புரியாமல் காணும் அவளது
சின்னஞ்சிறு  குமிழ் விழிகள் விரியச் சொன்னாள்
‘யப்பா! இந்த பிரபஞ்சம் இன்னும் பெருசு’.

***

கையகல மனசுக்குள்
கடலளவு இடம்
மனம் சுமக்கும் திவலை வாழ்விற்குள்
எதற்குத்தான் இடமில்லை
எதிலும் ஒட்டாமல் 
எங்கும் சேராமல்
கடக்கும் கணங்களுக்கு
மெழுகு முத்தங்கள்
பதிப்பத்தொரு கலை

எரி நிலவு

மரித்துப் போய்விட்ட கணங்களை
மடிதனில் கிடத்தி விதையுரமிட்டு
தளிர்க்கையில் கத்தரிக்கும் கரங்கள்
கொல்லும் நினைவுகள்
அறுபட்ட மரப்பிளவுள் இருந்து சுனைக்கும்
பிசினென வழிகிறதென் தூயநற்காமம்
பலிகிடாவாக தோள் விரித்து
விரைத்த உடல் கிடத்தி
கூர்முத்தக் கத்தியோடு காத்திருக்கிறேன்
குறு விரல் நுனியசைவால் ஒரு சைகையோ
கடைக்கண் சிமிட்டலாயொரு சமிக்ஞையோ
அல்லேல்
செங்குத்தாய் கைகளுயர்த்தி கதிரருவாளெனக் காந்தும்
பிறை எரி நிலவு பிடித்து
ஒரே இறக்கு
இரவுகள்தோறும் இம்சைக் கெவுளியென
நின்ற இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்குமிந்த
ஞாபக நசையின் வாலறுந்து துடிதுடிக்க

***

முயங்குந்தோறும் பிணைந்து
உட்புகுந்து சுருள்கையில் இணைந்து சுருளும்
சொற்போர்வையின் சுருக்கங்கள் போக
இறுதியாய்
ஒரு முறை நீவு
துடித்தேனும் அடங்கட்டும்
மொழியின் குறி

****

வில் டூரண்டின்
‘தத்துவத்தின் கதை’ நூலில்
ஆனானப்பட்ட
அரிஸ்டாட்டில் எவ்வளவு பிற்போக்காகவும் 
சிந்தித்திருக்கிறார்
என்பதை அறிந்து கொண்டேன்.
ப:79 இல் அரிஸ் தனது
சூப்பர்மேன் பற்றி சொன்னது
கிடக்கட்டும்...

பாருங்களேன் அவர் பார்வை
எப்படி மோசமானதாகவும் இருந்திருக்கிறது. 
இப்படியாக அந்த வாசிப்பின் வழி
ஒரு யானையிடமிருந்து
பிச்சையெடுப்பது எப்படியெனும்
அதிமுக்கிய படிப்பினையைக் கற்றுக் கொண்டாயிற்று.

பார்க்காமல் சந்தித்த நண்பன்

சந்திக்கச் சென்ற நண்பன்
வருவதற்கு சற்று முன்
கிளம்பிவிட்ட சேதியையும்
கருநீலச் சட்டையணிந்து 
சென்றிருக்கும் தகவலையும்
எடுத்துக் கொண்டு வீதிக்கு வருகிறேன்.
அதுவரை தட்டுப்படாத கருநீலச் 
சட்டைகள் நாலைந்து ஆங்காங்கே
அவனது இரட்டை நாடி
கைகுலுக்கிக் கொள்ளும் அடர் புருவங்கள்
மெலிந்த முன் கைகள்
வெளுத்துத் தடித்த கீழுதடு
காதுமடல் தாண்டாத வால் கிருதா
அவனைத் தவிர 
எல்லாம் கண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.
“என்ன நண்பன பார்த்தாச்சா?"

“……..”

***

ஒரு மர மேசை
ஒரு காலத்தில் மரமாய்
மேலே ஒரு குவளை 
ஒரு காலத்தில் மண்ணாய்
உள்ளே பாதி நீர்
எங்கோ ஊற்றெடுத்த சுனையாய்
மீதம் காற்று
எங்கிருந்தோ தவழ்ந்து வந்த தென்றலாய்
காலத்திற்குள் அமிழ்ந்து
ஊறிக் கொண்டிருக்கிற
எல்லாம்
கரையாமல் மீந்திருப்பதெ துவுமில்லை
ஆனாலும்  இல்லாம லாவதில்லை.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வருணன்

பிறந்தது மதுரை. தூத்துக்குடியில் இயற்பியல் முதுகலை ஆசிரியராக பணி. திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். 2020 இல் ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ திரைப்படத் திறனாய்வு கட்டுரைத் தொகுப்பு வாசகசாலை வெளியீடாக வெளிவந்துள்ளது. கவிதைகளின் மீது தனியீர்ப்புண்டு. எழுதிய கவிதைகள் இணைய இதழ்களிலும், மணல் வீடு, உதிரிகள், அம்ருதா, உயிர் எழுத்து ஆகிய அச்சு இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு : writervarunan@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ஒரு துளி கருணைபிப்ரவரி தினம்டோனி பிரஸ்லர்சாகுல் ஹமீதுவேறொரு மழைதிருச்சி வாழ்க்கைகருத்தரங்கங்கள்இலக்கிய விமர்சனம்மழை ஓய்ந்த சாலையில்சிறுகதைத் தொகுதிஅலர் பதிப்பகம்விஜய்ரோலாண்ட் பார்த்ஜார்ஜ் ஜோசப்தலையங்கம்சூஃபி இசைஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்நறுங்கதைஇலக்கியக் கூட்டம்சாய் வைஷ்ணவிதாரா கேம்பெல்சந்துரு மாயவன்கவிதைகள்ஆய்வுபேட்டிதலித் வரலாறுஅதிகாரம்மெல்லிய கோடுகள்கருத்தரங்குகள்அக்காக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!