திருநகர் அண்ணா பூங்காவுக்குப் பக்கத்துல புள்ளையார் கோவிலை ஒட்டுனாப்பில இருந்த சங்கீதா சாப்பிங் காம்பிளக்சில இருந்த நான்கு கடைகளில் ஒரு கடையில், எங்க பக்கத்து வீட்டில் உள்ள மோகன் அண்ணன் காய்கறிக்கட வச்சிருந்தாரு. நான் படிக்கிற வயசுல படிக்காம சும்மா சுத்தித் திரியிறனே என்று அவர்ர கடையில என்னைய உதவிக்கா வச்சிருந்தாரு. அப்போ எனக்குப் பதினெட்டு வயசு இருக்கும். காலையில் கடைக்கு அவருடைய சைக்கிள்ள கூட்டிட்டு போவார். அவரு மொத்த காய்கறி மார்கட்டுக்குப் போயிட்டாருன்னா நானா கடைக்குப் போவேன். ஒன்பது மணிக்கு இம்பாலா ஓட்டலுக்குக் காய்கறி அவருடைய சைக்கிள்ல கொண்டுபோய் கொடுக்கணும். பத்து மணிக்கு வீரபாண்டியன் சார் வீட்டுக்குப் புதுசா வந்த காய்கறிகள மோகன் அண்ணன் தேர்வு செஞ்சு தருவாரு, அத அவர் வீட்டுல கொண்டுபோய் கொடுக்கணும். காய்கறிக்கு மோகனண்ணா காசு வாங்குவாரா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இதுதான் இந்தக் கடையில என்னுடைய பிரதான வேலை. ரீ வாங்கி வருவது. எடுபிடி வேலை செய்வதும்தான் என்னுடைய வேலை. அவர் தர்ர காசுல அப்பப்ப கலைவாணி தியட்டர்ல இரவுக்காட்சி படம் பார்ப்பேன். நா ரஜனி ரசிகர் என்பதால அண்ணாமலை படம் மூணுதடவை பாத்தேன். கடைக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. மரக்கறி குடுக்கப்போய்த்தான் வீரபாண்டியன் சார் அறிமுகமானாரு. நேத்து பின்நேரம்தான் கடையில வச்சு சொன்னாரு,
“மகேந்திரன் காலையில ஏழு மணிக்கு வீட்டுக்கு வா”
ஏன்சார் வரணும் என்பதுபோல் அவரைப் பார்த்தேன். கேட்பதற்கு தைரியம் வரல.
“மோகன் மகேந்திரன காலையில வீட்டுக்கு அனுப்பு” என்றார் மோகன் அண்ணாவைப் பார்த்து.
அது உத்தரவு போடுவதுபோல் இருந்தது. மோகன் அண்ணாவும் ஏன் என்றுகூட கேக்கல, “சரி சார் அனுப்புறேன்” என்றிட்டார்.
நானும் மேற்கொண்டு கேக்க தைரியமில்லாததால திரும்பக் கேக்கல. ஏதாவது எடுபுடி வேலையாககூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
கூத்தியார்குண்டு பேரூந்து நிறுத்தத்தில் இருந்து பாண்டியன் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்தில் ஒரு ரூபாய் நாற்பது பைசா பயணச்சீட்டு வாங்கி, திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கி, இடது பக்கமாக பூங்காத் தெருவில் நடந்து, எல்ஐசி ஆபீசக் கடந்து, காவல் நிலையத்தையும் தாண்டி, வெட்ட வெளியா இருந்த அண்ணா பூங்விற்கு குறுக்கால நடந்து சென்று, ஆறாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்த அமலாக் காண்வெண்டிற்கு அருகில் உள்ள சாலை வழியாகச் சென்றால், காண்வென்டிற்குப் பின்னாடி உள்ள தெருவில் மூணாவதா வீரபாண்டியன் சார் வீடு இருக்கு. வளாகத்தின் முன் ஒரு வீடும் அதற்குப் பின்னாடி மற்றொரு வீடும் இருந்தது. முன் வீட்டுக்கு வடக்குப் பக்கம் சிறிய சந்து வழியாகப் பின்னாடி சென்றால், சாருடைய வீடு பின்னாடி இருந்தது. இது வாடகை வீடா அல்லது சொந்த வீடான்னு தெரியல.
காலை ஏழு மணி இருக்கும் கதவருகில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினேன். அழகான குழந்தை முகம் கொண்ட பெண் நைட்டி உடையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தது. முதல் பார்வையில் சௌராஸ்ரா பொண்ணு மாதிரி வெள்ளையா இருந்தாலும் சற்றுக் குட்டையாக இருப்பதுபோல் தெரிந்தது.
“சார் வரச் சொன்னார்” என்றேன். கதவைச் சாத்திட்டு உள்ள போனாங்க. எதுவும் பேசவில்லை. நான் வாசலில் காத்து நின்றேன். உள்ள இருந்து எந்தச் சத்தமும் இல்லை. சாரும் வரவில்லை. ஆறடி உயரம் என்றாலும் வீரபாண்டியன் சார் இருப்பார். தடித்த கறுத்த உருவம். இவருக்கு இப்படி ஒரு குழந்தை முகம் கொண்ட மனைவியா. மகள் என்றாலும் யாரும் நம்பிவிடுவார்கள். முன்பும் பலதடவை காய்கறி குடுக்க வந்திருந்தாலும் சரியாகக் கவனித்ததில்லை. பெரும்பாலும் சார்தான் கதவைத் திறந்து காய்கறியை வாங்கிச் செல்வார். முன் வீட்டுச் சிவரில் சாய்ந்து கொண்டு நின்றேன்.
உள்ளே குழந்தை அழும் குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து பெரியவர்கள் உரையாடல் கேட்டது. நான் பேந்தப்பேந்த முழுச்சிக் கொண்டு வாசலடியில் காத்து நின்றேன். கதவைத் திறந்துகொண்டு சார் வெளியே வந்தார். அவர் கையில் இருந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது.
“மகேந்திரன் பாப்பாவக் கொஞ்சநேரம் வைச்சிரு நான் ரெடியாயிட்டு வர்ரேன்” என்று குழந்தையை என் கையில் கொடுத்தார்.
குழந்தை என்னிடம் வர விரும்பாமல் அடம்பிடித்தாலும், வலுக்கட்டாயமாக என் கையில் திணித்தார். முடியாது என்று மறுக்கும் இடத்தில் நான் இல்லை. அவருடைய செயல் உத்தரவுபோல் இருந்தது. முற்றிலும் நான் எதிர்பாக்காத நிகழ்வு. அதிர்ச்சியாகவே இருந்தது.
முதல்தடவையாக, குழந்தையைத் தூக்கும்போது ஏற்பட்ட தயக்கம் எனக்கு. அனேகமாகத் தவளும் பருவமாக இருக்கலாம். நொழுநொழு என்றிருந்தது என் கைக்கு குழந்தை வந்தபோது. இதற்கு முன் இப்படி குழந்தைகளைத் தூக்கிய அனுபவமும் இல்லை. ஓடி விளையாடும் குழந்தைகளிடம்கூட அதிக நேரம் நான் மெனக்கெடுவதில்லை. புழுப்போல இருக்கும் என்று நினைத்து, பிறந்த குழந்தைகளைக்கூடப் பார்ப்பதுமில்லை. குழந்தை கையில் இருந்து அழுதுகொண்டே இருந்தது. அதை எப்படிச் சமாதானப்படுத்துவது, எப்படி அழுகையயை நிறுத்துவது தெரியாமல் தடுமாறுகிறேன். வீட்டுக்குள் உரையாடலின் சத்தம் முன்பைவிட அதிகமாகக் கேட்டது. ஒருவேளை சண்டை போடுகிறார்களா தெரியல. அழும் குழந்தையிடம் எப்படி மழழைக் குரலில் பேசுவது என்றும் தெரியல. குழந்தையும் அழுவதை நிறுத்துவதாகவும் இல்லை. இரண்டு வீடுகளுக்கும் இடையில் அங்கிட்டும் இங்கிட்டும் நடந்தேன். லேசாக அசைந்து அசைந்து நடந்நேன். அப்பவும் அழுவதை குழந்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து அழுதால் உள்ள இருந்து யாராவது வந்து குழந்தையை வாங்குவார்கள் என்று பார்த்தேன். உள்ள முன்பு கேட்ட சத்தம்கூட கேட்கவில்லை. குழந்தையை நான் வேணுமெண்டே அழ வைப்பதாக நினைத்துவிடுவார்களோ என்ற பயம் வேறு இருந்தது.
காம்பவுண்ட் மதில் ஓரமாக வளர்ந்து நின்ற தென்னை மரத்தை நோக்கிக் கையைக் காட்டினேன். குழந்தை அதைச் சட்டை செய்யவில்லை. அழுவதையும் நிறுத்தவில்லை. செல்லக்குட்டி, அம்முக்குட்டி என்று ஏதாவது சொல்வதற்கு எனக்குக் கூச்சமா அல்லது அப்படியெல்லாம் சொல்லத் தெரியலியா தெரியல. என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியல. குழந்தையைக் கொடுக்கும்போது கேட்டிருக்கலாம். என் வாய் திறக்கவில்லை. அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதற்கான சூழல்கூட என்னைச் சுற்றி இருந்ததில்லை. இவர்களுக்கு அவ்வளவு தைரியமா, அல்லது வேறு வழியில்லாமலா என்னிடம் அழும் குழந்தையைக் கொடுத்தார்கள். நான் அவ்வளவு ஒன்றும் தெளிவான விபரமானவனும் இல்லையே. குழந்தை பார்பதற்காகவா என்னை வரச்ச்சொன்னார். இருக்காது. வேறு காரணம் இருக்கலாம்.
மறுபடியும் தென்னை மரத்தைக் காண்பித்தால் குழந்தை என் முகத்தையே பார்த்து அழுகிறது. நான் அதற்குப் புதிதாக இருப்பதால் அழுகிறதா தெரியல. எனக்கும் அழுகை வந்திரும்போல் இருந்தது. தாயைப்போல அழகான வட்ட முகம். உருண்டைக் கண்கள். கருகரு என்ற கறுத்த தலைமுடி நிறைய இருந்தது. இன்னும் மொட்டை அடித்துக் காதுகுத்தவில்லைப்போல. கொழுகொழு என்று குழந்தை அழகாக இருந்தது. அவர் பாப்பா என்று சொன்னதால் பெண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். பருத்தித் துணியில் ஒரு சட்டையும் கழுசானும் போட்டிருந்தது. அழுது அழுது கண்ணீர் வடிந்திருந்தது. வாயில் இருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடிந்து நெஞ்சு சட்டை நனைந்திருந்தது. பேண்டுப் பாக்கட்டில் இருந்து கர்சிப்பை எடுத்துத் துடைத்துவிட்டேன். கதவைத் தட்டி அவர்களிடமே குழந்தையைக் கொடுத்து விடலாம்தான், ஆனால் தயக்கம் என்பதைவிடப் பயமாக இருந்தது. கதவு அடைத்திருப்பதால் ஒரு வேளை குழந்தை அழும் சத்தம் அவர்களுக்குக் கேட்காமல் இருக்கலாம். திரும்பவும் அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிட்டே நடந்தேன். குழந்தையின் பெரும் அழுகை அடங்கிச் சிணுங்கலாக மாறியிருந்தது.
சத்தம் வெளியே வராமல், “அழுவாத அழுவாத அச்சாபுள்ளை” என்று வாயை மட்டும் அசைத்தேன் சினுங்கலும் நின்றது.
மறுபடியும் முகத்தைத் துடச்சுவிட்டேன். குழந்தை சிரிக்க ஆரம்பித்ததது. எனக்குத்தான் வாய் உழைந்துபோனது. நான் சும்மா இருந்தால் சினுங்கும். வாயில ஏதாவது சொல்வதுபோல் அசைவு இருந்தால் துருதுருண்ணு என் வாயப் பார்த்துக்கிட்டே தன் பிஞ்சுக் கையால் என் முகத்தில் அடித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அந்த நேரத்தில் அது எழுப்பும் ஓசையை நான் ரசிக்க ஆரம்பித்தேன். இதைத்தான் மழலைக் குரல் என்கிறார்களா தெரியல. அப்படியே நெஞ்சோட அணச்சு கொஞ்ச வேண்டும்போல் இருந்தது.
அரை மணி நேரத்துக்கு மேல இருக்கும் கதவைத் திறந்துகொண்டு சார் வெளியே வந்தார். அவரைக் கண்டதும் குழந்தை அவரிடம் போகத் தாவியது. குழந்தையை வாங்கிக்கொண்டார்.
“மகேந்திரன் காண்வென்டுக்குப் பக்கத்துல வேப்பமரத்தடியில இருக்கிற ஓட்டல்ல இரண்டு இட்லி பாப்பாவுக்கு வாங்கிட்டு வா”
என்று சிறிய தூக்கு வாளியை கொடுத்தார். தூக்குவாழியின் கைப்பிடி வளையத்தில் அவர் கையிருந்தது. நான் அடிப்பகுதியை எனது வலது கையால் தாங்கிப் பிடித்து மறுகையால் தூக்கு வாழியின் கைப்பிடியை பிடித்தேன். பத்துரூபா காசும் கொடுத்தார்.
அவர் சொன்ன கடையில இட்லி வாங்கி வந்து கொடுத்தேன். மிகக் கவனமாகத் தூக்கு வாழியின் கைப்பிடி வளையத்தை மட்டும் இரண்டு விரல்களால் பிடித்துத் தூக்கியது உறுத்தலாக இருந்தது. ஏன் இப்படி இயல்புக்கு மாறாகச் செய்கிறார். இதுல ஏதோ ஒரு விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
“மகேந்திரன் நீ இட்லி வாங்கின கடைக்குப் பக்கத்துல இருக்கிற சைக்கிள் கடையில வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்துட்டு வா”
“சார் என்ன நம்பித் தரமாட்டாங்க”
“நான் சொன்னேன்னு சொல்லு தருவாங்க”
இட்லி வாங்கிய கடைக்கு அருகில் இருந்த சைக்கிள் வாடகைக் கடையில் வீரபாண்டியன் சார் சைக்கிள் வாங்கிட்டு வரச்சொன்னார் என்றதும் அந்தப் பெரியவர் எந்த விசாரணையும் இல்லாமல் சைக்கிள எடுத்துப் போகச் சொன்னார். சைக்கிளக் கொண்டு போய் கேற்றடியில நிப்பாட்டிட்டுக் காத்திருந்தேன் சிறிது நேரத்தில் வந்தார்.
“வண்டிய எடு போகலாம்”
“எங்க சார் போகணும்”
எங்க போகவேண்டும் என்பதற்கு அவர் பதில் சொல்லவில்லை. சைக்கிளில் பின்னாடி கரியரில் உக்காந்திருந்தார். கான்வெண்ட தாண்டியதும் வடக்குப் பக்கமாகப் போகச் சொன்னார். இப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் இந்தப்பக்கம் என்று சொல்லிக் கொண்டே வந்தார். அவர் சொன்னபடி கிழக்குப் பக்கம் திரும்பியதும்
“பலோட்டி சர்ச்சு தெரியுமா” என்றார்.
“இல்லைசார் எனக்குத் தெரியாது. நான் இந்தப்பக்கம் வந்ததில்லை” என்றேன்.
“சரி இரண்டாவது தெருவில வடக்கால திரும்பு” என்றார்.
சற்றுத் தள்ளிப் போனதும் ஏத்தம் வந்தது. வேகமாகச் சென்று ஏத்தத்தில் ஏறி இறங்கினேன். அது கோயிலை ஒட்டியச் சிறிய குன்று பகுதி. இறங்கி சற்றுத் தொலைவு போனதும் மறுபடியும் கிழக்கால போற தெருவில போகச் சொன்னார். ஏத்தத்தில சைக்கிள் மிதித்ததில் எனக்கு வேர்த்திருந்தது.
“என்னப்பா இதுக்கே மூச்சு வாங்கிற” என்றார். அதற்கு நான் பதில் சொல்லவில்லை.
சைக்கிள் சற்று மெதுவாகப் போன நேரத்தில் அவராகக் குதித்து சைக்கிளில் இருந்து இறங்கினார். நான் சற்றுத் தடுமாறி பிறேக்குப் பிடித்து சைக்கிளை நிறுத்தினேன்.
“இந்த ஊருக்கு வந்திருக்கிறியா” என்றார்.
“இல்ல சார் வந்ததில்ல”.
பெரிய படகை கவுத்தி வைத்ததுபோல் இங்குள்ள வீடுகள் வித்தியாசமாக இருந்தது. எல்லா வீடுகளும் வரிசையாக ஒரே மாதிரி இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நடந்து சென்றவருக்குப் பின்னாடி மெதுவாக சைக்கிளை ஓட்டிச் சென்றேன். அவர் நடையை மெதுவாக்கி என்னை முன்னால விட்டு பின்னாடி வந்தார். மெதுவாக என் சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. எதுக்கு நடக்கிறார் சைக்கிள்ளயே வரலாமே என்று நான் கேக்கல. எனக்கு அவர்மேல பயமிருந்தது. அவர் நடக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம்.
கொஞ்சத்தூரம் போனதும் திரும்பிப் பார்த்தேன். சார் படகை கவுத்தி வச்ச வீடு ஒன்றின் கேற்றடியில் நின்றார். நான் திரும்பி வந்து கேற்றடியில தெரு ஓரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் அருகில் நின்றேன்.
“உள்ள வாப்பா” என்று சார் கூப்பிட்டார்.
உள்ளே போனேன் சிறிய ஹாலில் சார் ஒரு பிளாஸ்டிக் கதிரையில் உக்காந்திருந்தார். அவருக்கு நேர் எதிரில் இருந்த கதிரையில் சார்தான் என்னை உக்காரச் சொன்னார். ஒரு நடுத்தர வயதுடையவர் மற்றொரு கதிரையில் இருந்தார். ஒரு இளம் பெண்ணும் ஒரு பொடியனும் ஓரமாக நின்றிருந்தார்கள். அவருடைய பிள்ளைகளாக இருக்கும்போல. அந்தப் பொடியனுக்கு என் வயது இருக்கலாம். அவர்கள் அனைவரும் சோகமாக இருப்பதாக ஆரம்பத்திலயே தெரிந்தது. அவர்கள் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. பெரியவர் சற்று நடுங்கிய குரலில்,
“நீங்கதான் சார் எப்படி என்றாலும் கண்டுபிடித்து தரவேனும்” என்றார்.
“பயப்படாதீங்க அதுக்குத்தானே நாங்க இருக்கிறம், அரசாங்கமிருக்கு நீங்க தைரியமா இருங்க” என்றார்.
சார் பெரியவரிடம் பேசுகிறாரே தவிர அவர் பார்வை முழுவதும் என்மேல் இருந்ததைக் கவனித்தேன். எனக்கு அந்த இடம் சங்கோசத்தைக் கொடுத்ததது. நெளிந்துகொண்டிருந்தேன். என்னை எதுக்குத் தேவையில்லாமல் இங்கு கூட்டி வந்தார் என்ற கேள்விதான் வந்தது.
“விரல் ரேகை ஏதாவது பதிவாகியிருக்கிறதா என்று நேற்று வந்து பதிவு செய்துகொண்டு போனார்கள்” என்றார் பெரியவர்.
“ஓ அப்படியா”
என்றாரே தவிர வேறு எதுவும் சார் அதற்குப் பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மட்டும் எனக்குப் புரிந்தது. கடத்தலா அல்லது களவு ஏதாவது நடந்திருக்குமா தெரியல. அந்த நடுத்தர வயதுக்காரருக்கு மனைவி இருந்ததா? இருந்து காணாமல் போயிடுச்சா? அல்லது யாரும் காசுக்காகக் கடத்திட்டாங்களா எதுவும் தெரியல. பேந்தப்பேந்த முழுச்சிக் கொண்டிருந்தேன். பிரச்சனையின் வாலும் தெரியல தலப்பும் தெரியல.
“இந்த பையனத் தெரியுமா” என்றார் சார்.
நடுத்தர வயதுக்காரர் தெரியாது என்று தலையசைத்தார். நின்றிருந்தவர்கள் எதுவும் சொல்லவில்லை.
“இங்க கூத்தியார்குண்டுக்குப் பக்கத்துல இருக்கிற உச்சப்பட்டியில அகதிகள் முகாம் இருக்கு தெரியுமா”.
“ஓம் தெரியும் சார் எங்கட சொந்தக்காரர் குடும்பம் ஒன்று அங்க இருந்தாங்க”.
“நீங்க அங்க போயிருக்கிறீங்களா”
“ரெம்பநாளைக்கு முன்னாடி ஒரு தடவை போயிருக்கிறேன்”.
“இந்தப் பையனும் அங்கதான் இருக்கிறான்”.
“எங்களுக்கு இவரத் தெரியாது, பார்த்ததில்லை”.
சம்பந்தமில்லாமல் என்னை எதுக்கு இழுக்கிறார்கள். ஒரு மண்ணும் எனக்குப் புரியல. பேசுபவர்கள் வாயவே அவர் குழந்தைபோலப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“இந்த பர்மாக் காலனிக்கு எப்படி வந்தீங்க”.
“எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இங்க இருந்தாங்க அவங்கமூலமாக இங்க வந்தம்”.
“அவர்கள் இப்பவும் இருக்கிறார்களா”.
“இல்ல சார் அவங்க குடும்பத்தோட கனடாவுக்குப் போயிட்டாங்க”.
“அப்ப நீங்க போகலியா” பெரியவர் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சார் அவர் பதிலை எதிர்பார்த்திருந்தார். கொஞ்சம் தாமதித்த பெரியவர்,
“கனடாவில குடும்பத்துல ஒருத்தர் இருந்தாலும் முழுக் குடும்பத்தையும் ஸ்பாண்சர் பண்ணி எடுக்கலாம். லண்டன்ல இருக்கிறவங்க அப்படி ஸ்பொண்சர் பண்ண முடியாது சார்” என்றார்.
அந்தப் பொண்ணு ஆங்கர் பால் மாவில போட்ட ரீ கொண்டு வந்து கொடுத்தாள். சைக்கிள் ஓட்டியதால எனக்கு தண்ணித் தாகமாக இருந்தது. கேக்கிறதுக்குப் பயத்துல பேசாமல் ரீய வாங்கிக் குடித்தேன். சார் ரீயும் குடிக்கல.
“ஏதாவது தகவல் கிடைத்தால் போலிஸ் ஸ்டேசன்ல சொல்லுங்க” என்று சார் எந்திருச்சார்.
நான் வேகமாக வெளியே வந்து சைக்கிளடியில வந்து நின்டேன். உள்ள ஏதோ கதைக்கிற சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்தில் சார் வெளியே வந்தார்.
அதுக்குப் பிறகு மோகனண்ணா என்னைக் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லிட்டார்.
நேற்று பின்னேரம் அண்ணா பூங்காவுக்குப் போனேன். முப்பது ஆண்டுகள்ல எவ்வளவு மாற்றம். மோகன் அண்ணாவின் மரக்கறிக்கடை இருந்த இடத்தில் இப்போ மெடிக்கல் சாப் இருக்கிறது. வெட்டவெளியாகக் கிடந்த பூங்காவைச் சுற்றி கம்பி வலையால் வேலி அடைத்திருக்கிறது. புள்ளையார் கோவிலடிய ஒட்டிய பூங்காப் பகுதியின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரித்து அழகாக கிறில் வைத்து மதில் கட்டி அண்ணா சிறுவர் அறிவியல் பூங்கா என்று பெரிய எழுத்துல போர்டு வைத்திருக்கிறார்கள். அதற்குள் குழந்தைகள் விளையாடுவதற்காக விதவிதமான அறிவியல் உபகரணங்கள் வைத்திருக்கிறார்கள். பூங்காவைச் சுத்தி கல்லுப் பதித்த நடைபாதை உருவாக்கியிருக்கிகிறார்கள். நடைபாதையில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். பழைய ஞாபகங்கள் திரைக் காட்சி மாதிரி வந்துகொண்டேயிருந்தது. ஒரு வட்டம் சுற்றி சிறுவர் பூங்கா வாசலடியில் வரவும் புதிதாக நடை பழகிய பெண் குழந்தை தத்தக்காபித்தக்கா என்று வேகமாக ஓடி வந்தது. வட்ட முகம், உருண்டைக் கண்கள், வயதுக்கு மீறிய கருகரு என்று தலைமுடி. குழந்தைக்குப் பின்னாடியே குழந்தையின் தாய், குழந்தை விழுந்து விடுவாளோ என்று பதற்றமாக ஓடி வந்தாள். குழந்தை மோதிவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக எனது நடையை மெதுவாக்கி ஓரமாக விலத்தினேன். ஓடி வந்த குழந்தை மிகச்சரியாக எனது வலது கைச் சிறுவிரலைப் புடித்துக்கொண்டு என்னுடன் நடக்க ஆரம்பித்தது. ஆச்சர்யம். அப்படியே நெகிழ்ந்போபோய் நின்றுவிட்டேன். பின்னால ஓடி வந்த தாய்,
“அங்கிளோட நாளைக்கு வாக்கிங் போவம். இப்ப வீட்டுக்குப் போவோம்”
என்று கொஞ்சல் குரலில் சொல்லிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள்.
நான் திகைப்பில் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒருவேளை இந்தக் குழந்தையின் தாய் நான் தூக்கி, மூக்குச் சளியைத் துடைத்துவிட்ட குழந்தையாக இருக்குமானால், அவள் கணவன் உளவுத்துறை அதிகாரியாக இருக்கக்கூடாது என்று தன்னியல்பாக என் மனம் நினைத்துக்கொண்டது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

தொ. பத்தினாதன்
ரமீஸ் பிலாலி
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.