சிறுகதை இலக்கியம்

கல்லில் கண்ட கனவு

யான் ஃபோஸே மோகன ரவிச்சந்திரன்
02 Sep 2026
0

“நீ பிளந்து கற்களாக மாறிய ஒரு பெரும் பிளவு; பிறகு அந்தப் பெருவெளியில் இருந்த கற்கள், ஒரு சுவரில் அழகாக அடுக்கப்பட்டது போல அங்கே கிடந்தன.”

I

எல்லாமே மிக மெதுவாகச் சரிந்து விழுந்ததால், அந்த நிலச்சரிவை யாரும் பார்க்கவில்லை. நாள்வாரியாக அல்ல, மணிவாரியாக அல்ல, ஏன் நிமிட வாரியாகக்கூட அல்ல. ஆனால் அது சரிந்து விழுந்தது. அது முழுநேரமும் சரிந்து கொண்டேயிருந்தது. அது ஒரு நிலச்சரிவுதான். அது நிலச்சரிவாகத்தான் இருக்க வேண்டும், அப்படியன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

ஆனால் அது சேற்றைப் போல நழுவிச் சென்றதா?

இல்லை. அது சேற்றைப்போல நழுவவில்லை. அது திடீரென நிகழும், ஆனால் சட்டென்று புலப்படாத ஒரு அதிர்வைப் போல இருந்தது.

யாராவது அதைப் பார்த்திருக்க வேண்டுமே?

இல்லை, யாருமில்லை. அல்லது யாராவது பார்த்திருக்கலாம். பார்க்க விரும்பாமல் இருந்திருக்கலாம். அல்லது ஒருவேளை யாருமே அதைப் பார்க்கவில்லை. அந்த அதிர்வுகள் மிக வேகமாக இருந்தன. அதிர்வுக்கு மேல் அதிர்வு.

அப்படியென்றால், அதை நீங்கள் உண்மையில் நிலச்சரிவு என்று அழைக்க முடியாதுதானே?

ஆம், அது ஒரு நிலச்சரிவுதான், அது நிலச்சரிவுதான்.

அதன் நடுவில் எங்கேனும் ஒரு பலவீனம் இருந்ததா?

அதை ஏன் கேட்கிறாய்?

எங்கேயோ ஒரு விரிசல் இருந்ததால்தான், அது இறுதியாக உடைந்து சிதறியது என்று நினைக்கிறேன்.

இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய விரிசலாக இல்லாமல், பல சிறிய விரிசல்கள் இருந்தன என்றுநினைக்கிறேன், கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத பல விரிசல்கள்.

ஆம், அது அப்படியும் இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் சிறிய, கண்ணுக்குத் தெரியாத விரிசல்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்து ஒரு பெரிய விரிசலாக, கிட்டத்தட்ட ஒரு பெரும் பிளவாக மாறியது.

உன் குரலில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருப்பது போலத் தெரிகிறது.

ஒரு ஆழமான திறப்பு.

ஆம், ஆம், ஒரு பெரும் பிளவைப் போல.

II

அது எப்படி அவ்வளவு மெதுவாக, அவ்வளவு புலப்படாத வகையில் மெதுவாகச் சரிந்து விழுந்தது என்பதைப் பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஆம், நீ ஏற்கனவே அதைச் சொல்லிவிட்டாய்.

ஆம்.

ஆனால் அந்த நிலச்சரிவு, அது உண்மையில் திடீரென்றுதான் வந்தது.

ஆம்.

ஆம். மேலும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டன என்றும், அதன் பிறகு அது அப்படியே கிடந்தது என்றும் சொல்கிறாய்.

அப்படியே கிடந்தேன்.

நீ அப்படியே கிடந்தாய்.

ஆம், நான் என் வீட்டின் முன் படிக்கட்டுகளில் அப்படியே கிடந்தேன்.

பிறகு?

பிறகு யாரோ ஏதோ சொன்னார்கள். எழுந்து நிற்க முயன்றேன், ஆனால் என்னால் முடியவில்லை. யாரோ எனக்கு உதவினர். அங்கே நின்றேன். பிறகு ஒரு கதவைத் திறந்தேன். உள்ளே சென்று எனக்குப் பின்னால் கதவை மூடினேன்.

பிறகு?

எனக்கு எதுவும் நினைவில்லை. விழித்தெழுந்தபோது உள்ளே தரையில் கிடந்தது நினைவிருக்கிறது. எழுந்தேன். நின்றுகொண்டிருந்தேன். நடந்தேன்.

பிறகு?

போய் படுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

ஆம்.

ஆம். பிறகு மீண்டும் விழித்தேன். சமையலறை மேசைக்கு அருகில் கிடந்தேன். பிறகு  சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எழுந்தேன்.  நின்றேன். சோஃபாவைக் கண்டுபிடித்துப் படுத்துக்கொண்டேன்.

III

மூன்று முறை அது உடைந்து சரிந்தது. எல்லாமே இருட்டாகிவிட்டது; என் உறக்கத்தில் ஒரு வகையான பனிமூட்டம். ஆனால் உள்ளே எங்கோ ஒரு வகையான நடுக்கத்துடன், நகரும் கற்பொடிகளைப் போல, அல்லது ஒரு மெதுவான நிலச்சரிவில் உள்ள சிறிய கற்களைப் போல, அது எவ்வளவு மெதுவானது என்றால் அதை நிலச்சரிவு என்று அழைக்க முடியாது.

ஆம், நீ அதைச் சொன்னாய்.

ஆம்.

பிறகு?

அந்த நிலச்சரிவை யாரும் பார்க்கவில்லை.

நீ தனியாக இருந்தாய்.

ஆம். நான் தனியாகத்தான் இருந்தேன்.

அநேகமாக அதனால்தான் அது ஒரு நிலச்சரிவாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

இல்லை, ஒருவேளை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதைப் போன்ற ஒன்றுதான்.

ஆம்.

பிறகு நாம் சில காலம் அமைதியாக இருக்கிறோம்.

இப்போது.

இப்போது.

நீ என்ன நினைக்கிறாய்? அந்த நிலச்சரிவைப் பற்றி. அந்தக் கற்கள் எல்லாம் எங்கே போயின?

அவை அங்கேயேதான் கிடந்தன. ஆனால் பின்னர் அவை மீண்டும் சரிந்து விழுந்தன.

ஆம்.

IV

கற்பலகையின் துண்டுகள், இந்தக் கற்களும் கூட, சிறிய கற்கள், சாம்பல் நிறப் பனிமூட்டத்தில் பிரகாசித்தன. அவை பலவீனமாகப் பிரகாசித்தன. ஆனால் பிரகாசித்தன. பின்னர் அந்த வெளிச்சம் ஒன்று திரண்டது. ஒரு சோஃபாவில் படுத்திருப்பதை உணர்ந்தேன்.  எழுந்து நின்றேன். ஒரு கதவு வழியாக வெளியே சென்றேன்.

எனக்குப் பின்னால் ஒரு கதவை மூடினேன். நடந்தேன். ஒரு பேருந்துக்காகக் காத்திருந்தேன். நிற்பதே கடினமாக இருந்தது. பிறகு அது மீண்டும் சரிந்து விழுந்தது. ஒரு நடைபாதையில் கிடந்தேன். ஒரு நடைபாதையில் கிடப்பதைத் திடீரென்று உணர்ந்தேன். யாரோ ஓடி வந்தார்கள். அவர் எனக்கு உதவினார். நின்றுகொண்டிருந்தேன். ஒரு பேருந்தில் ஏற முயன்றேன். ஆனால் மற்றொரு மனிதன் ஓடி வந்து என்னால் பேருந்தில் செல்ல முடியாது என்றும், இது என்னைப் போன்ற ஒருவனுக்கான பேருந்து அல்ல என்றும் சொன்னான். பேருந்தில் சும்மா உட்காரக் கூடாதா என்று கேட்டேன், ஆனால் இல்லை, இல்லை, இது என்னைப் போன்ற ஒருவனுக்கான பேருந்து அல்ல என்று அவன் சொன்னான். ஓட்டுநரிடம் கேட்டேன். அது ஒரு பெண், அவள் புன்னகைத்துத் தன் தலையை அசைத்தாள். அவள் எதுவும் சொல்லவில்லை. அல்லது இல்லை என்று சொல்லியிருக்கலாம். பிறகு, எனக்கு ஞாபகக் குறைபாடு இல்லை என்றால் அது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். எனக்கு உதவி அழைத்து வந்த மனிதன் என்னை ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டு அமர்த்தினான். நானும் ஓட்டுநரும் புறப்பட்டோம். வண்டி ஓட்டிய மனிதன் தான் பல நேரங்களில் எதையும் பற்றி நினைப்பதில்லை என்றும், 'இன்மை' என்பது எல்லாவற்றிலும் எப்படிக் கலந்திருக்கிறது என்றும் சொன்னான்.

ஆம்.

நான் அவரிடம் கற்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இல்லை, நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டாய்.

நிலச்சரிவைப் பற்றி எதுவும் இல்லை.

இல்லை, நிச்சயமாக நீ சொல்லியிருக்க மாட்டாய்.

பிறகு நாங்கள் அங்கே அமர்ந்திருந்தோம். எங்கள் இருவரில் யாரும் எதுவும் பேசவில்லை. நாங்கள் நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம்.

நீ கற்களைப் பற்றியும் நிலச்சரிவைப் பற்றியும் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. அது ஒரு வகையில் போலியானது. நீ பொய் சொல்வது போல இருக்கிறது.

ஆம். கிட்டத்தட்ட அப்படித்தான் தோன்றுகிறது

ஆனால் பிறகு ஏன் அதைச் செய்கிறாய்?

எனக்கு முழுமையாகத் தெரியவில்லை.

இல்லை, அதை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல போலும்.

V

கற்கள் பாடுகின்றன. பாடாமலும் இருக்கின்றன. பனிமூட்டம் மறைந்த பிறகும்கூட கற்கள் அங்கேதான் கிடக்கின்றன. ஒன்றுக்கொன்று சாய்ந்தபடி, அவை அவ்வளவு அழகாகக் கிடக்கின்றன. ஏதோ ஒரு அற்புதமான திறமையான கற்சித்தர் அவற்றை ஒன்றாக இணைத்தது போல, நிலச்சரிவுக்குப் பிறகும் அவை அப்படித்தான் கிடந்தன. உடைந்து சரிந்தபடி.

ஆம், ஆம்.

அப்புறம் நாம் சிரிக்கிறோம். ஆம், நாம் சிரிக்கிறோம். நிலச்சரிவுக்குப் பிறகும்கூட.

அப்படியானால் நீ ஒரு காரில் அமர்ந்திருந்தாய். வண்டி ஓட்டிய மனிதன் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு இன்மை இருக்கிறது என்று சொன்னார், பிறகு என்ன நடந்தது?

அது ஒரு டாக்ஸி, நாங்கள் இன்மையைப் பற்றியும், இருப்பதன் பின்னாலும் உள்ளேயும் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே இருக்கிறது என்று அந்த ஓட்டுநர் சொன்னார்.

அந்த டாக்ஸி ஓட்டுநர்.

ஆம், அவர்தான், ஆம், தொடக்கத்திற்கு முன்பு கடவுளாக இருப்பது எதுவுமில்லை என்றும், அது 'வார்த்தை'யிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் சொன்னார். ஆம், அவர்தான், காரை ஓட்டிய அந்த மனிதன் அதைச் சொன்னார்.

அது நன்றாகச் சொல்லப்பட்டது.

எதுவுமே உடைந்து சரிந்துவிடாதது போல இருந்தது. ஆனால் எல்லாமே மிகவும் சாம்பல் நிறமாக, ஒரு பனிமூட்டத்தைப் போல இருந்தது.

சாம்பல் நிறக் கல்லைப் போல என்று நீ சொன்னாய்.

ஆம். ஆனால் காரின் உள்ளே சற்று வெளிச்சமாக இருந்தது.

டாக்ஸியில்.

ஆம்.

பிறகு?

சரி, பிறகு டாக்ஸியிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றேன். அப்புறம் அது மீண்டும் சரிந்து விழுந்தது. தரையில் கிடந்தேன். அண்ணாந்து பார்த்தபோது என்னைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தார்கள். யாரோ என் நாடியைப் பார்த்துவிட்டு, அவன் பலவீனமாக இருக்கிறான் என்று சொன்னார். பிறகு சக்கர நாற்காலியுடன் ஒரு மனிதன் வந்து என்னை அந்த நாற்காலியில் அமர வைத்து ஒரு அறைக்குத் தள்ளிச் சென்றார். அங்கே அமர்ந்திருந்தேன். என்னால் விமானத்தில் ஏற முடியும் என்று அவர் சொன்னார். அவர்கள் என்னை பரிசோதிப்பார்கள் என்று சொன்னார். அவர் தண்ணீர் கொடுத்தார். பிறகு மற்ற எல்லாப் பயணிகளுக்கும் முன்னதாக என்னைச் சக்கர நாற்காலியில் விமானத்திற்குத் தள்ளிச் சென்றார். நாங்கள் விமானத்தின் கதவை அடைந்தபோது என்னை வரவேற்பதற்கு யாரோ வந்தார்கள் . . .

யார்?

. . . ஒரு விமானப் பணிப்பெண் என்னைச் சந்தித்து, அவர் உள்ளே வரலாம் என்று சொன்னாள். பிறகு அவர்கள் என்னை விமானத்திற்குள் தள்ளிச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார்கள். பிறகு வேறொருவர் . . .

மற்றொரு விமானப் பணிப்பெண்ணா?

. . . எனக்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டார். கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று சொன்னேன். பிறகு எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கப்பட்டது. கல்லும் தண்ணீரும். நான் ஒரு நிலச்சரிவாக இருந்தேன். கற்பலகையின் துண்டுகள். அந்தக் கற்கள் அனைத்தும் ஒரு சாம்பல் நிறப் பனிமூட்டத்தில் இருந்தன. அது நொறுக்கப்பட்ட கற்களிலிருந்து சற்றே பிரகாசிப்பது போலத் தெரிந்தது. மேலும் அவை ஒரு வகையான சுவரைப் போல தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டது போல, ஒன்றுக்கொன்று சாய்ந்தபடி சரியான வரிசையில் இருந்தன. ஒரு அழகான சுவர்.

ஆம், நீ ஏற்கனவே அதைச் சொல்லிவிட்டாய். இந்தக் கல்லையும் நிலச்சரிவையும் பற்றிய பேச்சு வெறும் பொய்யும் மறைப்பும் அன்றி வேறில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதில் ஏதோ ஒன்று இருக்கக்கூடும் என்றும் நினைக்கிறேன்.

ஒரு அழகான புதிய சுவர்.

பிறகு?

அப்புறம் விமானத்திலிருந்து ஒரு சக்கர நாற்காலியில் வெளியே தள்ளப்பட்டேன். என்னால் நடக்க முடியும் என்று  சொன்னேன். ஆனால் மீண்டும் விழுந்துவிடக்கூடும் என்பதால் அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. அதனால்தான்  சக்கர நாற்காலியில் இருப்பது சிறந்தது என்று சொன்னார்கள். பிறகு அழைத்துச் செல்லப்பட்டேன். ஆம், உனக்கு அது நினைவிருக்கிறது, இல்லையா?

இல்லை, உன்னை அழைத்துச் சென்றது நானில்லை.

இல்லை, இல்லை, அது நீ அல்ல. என்னை அழைத்துச் சென்றது வேறு யாரோ ஒருவர்தான். அவர் என்னை தன் காரில் ஏற்றி என் பிளாட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். நான் படுத்துக்கொண்டேன். அங்கே கிடந்தேன். நான் ஒரு நிலச்சரிவாக இருந்தேன். பல கற்களாக மாறிய ஒரு கல்லாக இருந்தேன். ஒரு நிலச்சரிவு. தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலச்சரிவு. நான் சும்மா அங்கேயே கிடந்தேன். பிறகு அந்த நிலச்சரிவு நகரத் தொடங்கி தனக்குள்ளேயே சுழன்றது. நடுங்கினேன். நான் நடுங்கி நடுங்கிப் பிறகு நடுக்கம் சற்றே குறைந்தது. நடுங்கினேன். எல்லாமே பனிமூட்டத்தில் இருந்த சாம்பல் நிறக் கற்களாக இருந்தன. எல்லாமே ஒரு மெதுவான நிலச்சரிவாக இருந்தது. மெதுவானது. அந்தச் சாம்பல் நிறத்தில் சற்றே வெண்மை கலந்திருந்தது. அது வெண்மையாகத் தெரியவில்லை. ஆனால் அது வெண்மையா, அது வெண்மையா?

அது பனியைப் போல வெண்மையா?

இல்லை, அது பனியைப் போல இல்லை. அது வெண்மையும் இல்லை. ஆனால் அது வெண்மையைப் போல இருக்கிறது. அது பனி. அது பனி அல்ல . . . இல்லை, அது வெண்மை அல்ல. அது பனி அல்ல. அது சாம்பல் நிறம். வெறும் சாம்பல் நிறம். அது இன்னும் சாம்பல் நிறமானது... அங்கே இன்னும் இருந்த கற்கள் இல்லையென்றால் அது வெறும் எளிய சாம்பல் நிறம்தான். அந்த நிலச்சரிவு தன்னை அவ்வளவு அழகாக ஒழுங்கமைத்துக் கொண்டது. நான் நடுங்கிக் கொண்டிருந்தபோதும் அந்தக் கற்கள் அவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் அங்கே கிடந்தன... என் மகன் எனக்காக இரவு உணவு சமைத்தான். ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை. அவன் எனக்காக ஒரு பாட்டில் வோட்கா வாங்கினான். என் நடுக்கம் குறைந்து அமைதியானேன். பிறகு அந்தச் சாம்பல் நிறப் பிரகாசமான கற்களின் மேல், அல்லது அதற்குள், நன்றாகத் தூங்கினேன். நான் தூங்கினேன். எனக்கு அதற்கு மேல் எதுவும் நினைவில்லை. எனக்குக் குறைவாகவும் இன்னும் குறைவாகவுமே நினைவிருக்கிறது. பிறகு அவர்கள் ஒரு ஸ்ட்ரெச்சருடன் வந்து என்னிடம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அப்பொழுது நீ, அவனால் அதைச் செய்ய முடியாது, உனக்குத் தெரியவில்லையா என்று சொன்னாய். நான் நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். ஒரு குளியல் அங்கி அணிந்து கொள்ளலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அது எளிதாக இருந்தது. பிறகு ஸ்ட்ரெச்சரில் கிடந்தேன். நடுநடுங்கினேன். அந்த நிலச்சரிவு மறைந்துவிட்டதைப் பார்த்தேன். நான்தான் அந்த நிலச்சரிவாக இருந்தேன்.

ஆனால் அந்தக் கற்கள் உடைந்து சரிந்து கொண்டிருந்தாலும், ஒரு சுவராக அங்கே கிடந்தன.

அப்படித்தான் நினைக்கிறேன். ஏனென்றால் நிலச்சரிவில் இருந்த கற்கள் நான்தான் என்று தோன்றியது.

VI

நீ பிளந்து கற்களாக மாறிய ஒரு பெரும் பிளவு. பிறகு அந்தக் கற்கள் ஒரு சுவரில் அழகாக அடுக்கப்பட்டது போல அங்கே கிடந்தன.

ஆம். ஆம், அது அப்படித்தான் தோன்றுவது போல இருக்கிறது. இப்போது அப்படித்தான் தோன்றுகிறது.

ஆம். மேலும் அந்தப் பெரும் பிளவு இப்போது மறைந்துவிட்டதா?

அந்தப் பெருவெடிப்பு இப்போது இல்லை.

மேலும் கற்கள் தங்களின் சொந்த புதிய வடிவத்தில் பிரகாசிக்கின்றன.

ஆம். முன்பு பெரும் பிளவாக இருந்த இடம் இப்போது கற்களுக்கு இடையே உள்ளது.

ஒன்றாக அடுக்கப்பட்ட கற்கள் ஒரு திறந்த அறையை உருவாக்குகின்றனவா?

ஆம்.

அந்த அறையில் ஏதேனும் இருக்கிறதா?

அப்படித்தான் நினைக்கிறேன். என்னால் அங்கே ஏதோ ஒன்றைப் பார்க்க முடிகிறது.

பிறகு நாம் மௌனமாக அமர்ந்திருக்கிறோம்.

எல்லாவற்றிலும் இன்மை இருக்கிறது என்று சொன்னாரே அந்த மனிதன்.

ஆம். அவரைப் பற்றி என்ன?

இல்லை, ஒன்றுமில்லை.

VII

இந்த மெதுவான அசைவுகள், உடைந்து சரிதல், பின்னர் அந்தத் திடீர் அசைவுகள், நம்பமுடியாத அளவு வேகமானவை, திடீர் சூறாவளிகளைப் போல. பிறகு அந்த அமைதி. தன் வெளிச்சத்தைக் கொண்ட அந்தப் பெரிய விரிசல். பிறகு அந்த மெதுவான, புலப்படாத நிலச்சரிவு. பிறகு இந்தத் திடீர் இயக்கம். இந்தத் திடீர் உடைந்து சரிதல். பிறகு பனிமூட்டத்தைப் போலச் சாம்பல் நிறத்தில் இருக்கும் அந்தக் கற்கள். இருந்தாலும் ஒன்றுமில்லாமைக்குப் பதிலாக ஒரு மங்கலான ஒளியுடன் பிரகாசிக்கின்றன. ஒரு சிறிய வெளிச்சம், மிகவும் பலவீனமானது, கிட்டத்தட்ட சாம்பலைப் போல, கல்லின் மேல் எரியும் சாம்பலைப் போல. பிறகு கல்லின் மேல் கல். கற்களின் சுவருக்குப் பின்னால் உள்ள அறையில் நான் இருக்கிறேன். என் கற்கள், மற்ற மனிதர்களின் கற்கள், அங்கே உள்ளே வெளிச்சம் இருக்கின்றன. வானத்திலிருந்து, கற்களிலிருந்து வரும் அந்த வலுவான கண்ணுக்குத் தெரியாத ஒளி. இன்மையின் ஒளி. இன்மையின் ஒளி கல்லுக்குள் இருக்கிறது. அன்பின் ஒளி கல்லுக்குள் இருக்கிறது.

VIII

நான் உள்ளே, கற்களுக்குப் பின்னால் செல்கிறேன். அமர்கிறேன். அமர்ந்து கற்களைப் பார்க்கிறேன். அது நான்தான் என்பதைக் காண்கிறேன். நான்தான் அந்தக் கற்கள்: அது என்னைப்போல அல்ல. ஆனால் எனக்குள் 'நான்' ஆக இருப்பது எதுவோ அதைப்போல. நான் கற்களுக்கு இடையே சென்று என் இடத்தை எடுத்துக் கொள்கிறேன். நான் அங்கே கைகளை விரித்து, ஒரு சிலுவையைப் போல நிற்கிறேன். ஒரு சிலுவையைக் காண்கிறேன். கீழே பார்க்கிறேன். மேலே பார்க்கிறேன். அமர்கிறேன். ஒரு சுவரில், கல்லின் மேல் கல்லாக, அவ்வளவு அழகாக அடுக்கப்பட்டிருக்கும் கற்களைப் பார்க்கிறேன். எழுகிறேன். நிற்கிறேன்.

IX

பிறகு நீ என் கையைப் பிடித்துக் கொள்கிறாய். மேலும் அன்பு இருக்கிறது. அன்பு வாழ்கிறது என்று கற்கள் சொல்கின்றன.

உனக்குப் பயமாக இல்லையா?

இல்லை, ஒருபோதும் இல்லை.

ஆனால் நீ கிட்டத்தட்ட இறந்துவிட்டாயே.

நான் இறப்பதற்குப் பயப்படவில்லை.

நானும் இறப்பதற்குப் பயப்படவில்லை.

இல்லை.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யான் ஃபோஸே

யான் ஃபோஸே, ஒரு புகழ்பெற்ற நோர்வே நாட்டு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.இவருடைய புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக 2023ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.ஹென்ரிக் இப்சனுக்குப் பிறகு உலகளவில் நாடகங்கள் அதிகம் மேடையேற்றப்பட்ட நோர்வே நாடக ஆசிரியர் இவராவார்.

மோகன ரவிச்சந்திரன்

பல சிற்றிதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளிவந்துள்ளன. உள்ளுறை, எதிர்முனை பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் எழுதி பிரசுரம் பெற்ற நூல்கள்: 1. மெய்நிகர் (கவிதைத் தொகுப்பு) லயம் வெளியீடு 2. கவிதையின் மெய்மை (கவிதை பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) தமிழினி வெளியீடு 3. எனக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு பறவை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) தமிழினி வெளியீடு 4. கவிதையின் மெய்மை - புதிர்வழிப் பாதை (பின் நவீனத்துவம் மற்றும் கவிதை பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) உன்னதம் வெளியீடு 5. மாயவித்தைக்காரனின் வெள்ளி மீன்கள் (கவிதைத் தொகுப்பு) எதிர்முனை வெளியீடு








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

நவீனத்துவம்தாரகன்தலித் இலக்கியம்பிப்ரவரி தினம்சாகுல் ஹமீதுசந்துரு மாயவன்ஒளிரும் சொற்கள்சதுக்கம்நகர மயமாக்கம்நுண்கதைபிரான்ஸ் காஃப்காசாட்சிஇலக்கியக் கூட்டம்கு இலக்கியன்நேர்காணல்வேறொரு மழைழ என்ற பாதையில் நடப்பவன்ம.கேசவன்இலக்கிய நிகழ்வுகள்தமிழக அரசியல்கடைசி வெடிச்சத்தம்பிம்ப அரசியல்மழை ஓய்ந்த சாலையில்வைத்தியம்அநித்யம்சீர்மைரோலாண்ட் பார்த்தாரா கேம்பெல்சாய் வைஷ்ணவிஆலடியான்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!