கவிதை இலக்கியம்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ
02 Sep 2026
0

தலைகள்

சென்னையின் அண்ணா சாலையில் எரியும் பகலை
வேறோர் ஊரில் நலம் விசாரிக்கும்படி நேர்ந்தது
நலமாயில்லை என்றுவிட்டு
அசைந்து போனது அதன் நிழல்

மனிதர்கள் விம்பங்களாய் மீந்து விடுவதில்
யாருக்கோ பயன் போலும்

பேரம் பேசி மட்டுப்படுத்திட
அனைத்து தந்திர வியாக்கியானங்களும் உள்ளன

அவை
குறித்த இடத்திலிருந்து கிளம்புவதாகயில்லை

நன்கு பழக்கப்பட்டிருக்கும் மனித மூளைகள்
மீண்டும் மீண்டும் கருப்பையுள் உற்பத்தியாவதின் புதிரை

எவரும் அறிந்துகொள்ள
போதிய அவகாசம் இல்லையெங்கும்

உலகின் அரசியல் முடுக்குகளில்
சமாதான கொடிகள் நிரந்தரமாய் அரைக்கம்பத்தில்
பறக்கின்றன

எண்ணெய் கச்சாப்பொருளின் கருநிழல்
தார் பாவி
சாலை கானல் நீரில் இளகி அழுந்துகிறது
கனரக வாகனங்களின் டயர்கள் அவற்றின் மீது விரைகின்றன

உழைப்பை வழங்கும் உடல்களுக்கு
அவ்வப்போது குளிரூட்டப்பட்ட இருக்கையும்
வாய்க்கிறது
ஜி.எஸ்.டி அதன் உள்ளடக்கம்

ஓட்டு வங்கியின் படிவங்களோ ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை அடமானம்
உலக வங்கியில்

 

பிணைப்பு

மாலை வேளைகளில் உன்னைப் பற்றிய நினைப்பு
விலகத் தொடங்குகிறது
பரபரப்பான பிற பொழுதுகளில்
எப்போதும் ஆக்கிரமித்திருக்கும் கடந்த காலம்
விடாப்பிடியாக
உறுத்துகிறது சிறு இடைவெளிகளையும்
இதுவரை
எந்த சாட் மெசேஜ்ஜூம் நிலுவையில் இல்லை
பதிலளிக்கப்பட்டுவிட்ட
எல்லாவற்றையும்
ஓர் இதயம் மட்டும் பற்றிக் கொண்டிருக்கிறது

 

ஒளி தூரம்

அவன் என்னை நோக்கி வந்தான்
பழைய ரப்பர் பந்தை
கையில் தந்தான்
எறியச் சொன்னான்

எந்தத் திசையில் எறிவது
என்னும் குழப்பம் வந்தது
பிறகு
உத்தேசமாய் மேற்கு நோக்கி எறிந்தேன்

எங்கிருந்தோ தாவி வந்த
நாயொன்று
பந்தைக் கவ்விக் கொண்டு
தெற்குத் திசை நோக்கி ஓடி மறைந்தது

நானும் அவனும் அத்திசை நோக்கி
வெகு நேரம் அமர்ந்திருந்தோம்
எப்போதோ
நாங்கள் சிறுவர்களாக இருந்ததை
மறந்துவிட்டிருந்தோம்

 

நிர்-நிர்மாணம்

நாம் விவாதிக்கத்தான் வேண்டும்
புதிய உலக அடுக்கின் வித்தியாசங்கள் குறித்து
தீவிரமாக யோசித்தாக வேண்டும்

ஒவ்வோர் இரவும்
வேறொன்றாக விடிந்து கொண்டிருக்கும் நுட்பத்தை
சந்தைப் பெருக்கமாகும் உழைப்பின் அவலத்தை
நுகரப்படும் மணித்துளிகளில் விரயமாகும் மனிதத்தை
நாம் விவாதித்தாக வேண்டும்

நமக்கே தெரியாமல் நாம் அடகு வைக்கப்படும்
மேஜைகளில்
கூடுதலாய் ஒரு சூழ்நிலை வடிவமைக்கப்படுவதை
தீவிரமாக யோசித்தாக வேண்டும்

எது குறித்தும்
ஒற்றைத் தகவலறிக்கையென
எண்ணூற்று முந்நூறு கோடி பொறுப்புகளாய்
மடைமாற்றம் செய்யும்
தொழில்நுட்பத்தை
தொடர்ந்து எழுதும் பல லட்சம் விரல்களைத் தாராளமாய்

இப்போது
பூமியின் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு
கைகுலுக்கி பங்கிட்டு கொள்கிறது
நமதல்லாத நம்மை
விவாதிக்கத்தான் வேண்டும்

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

வேறொரு மழைவைத்தியம்சாகுல் ஹமீதுஇலக்கிய நிகழ்வுகள்புதிய வருகைரோலாண்ட் பார்த்சூஃபி இசைசந்துரு மாயவன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்தவெகநகர மயமாக்கம்குறிகேட்டல்ஏ ஜி கௌதம்சிறுகதைஅதிகாரம்அலர் பதிப்பகம்ஆய்வுசதுக்கம்ஆலடியான்மழைவில்விஜய்எஸ் அற்புதராஜ்நானென்பது லெட்டூஸ்இலக்கியம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ஒரு துளி கருணைபின்னவீனத்துவம்நறுங்கதைதலித் வரலாறுஎழுத்தாளரின் மரணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!