சிறுகதை இலக்கியம்

மருந்து

சரண்குமார்
02 Sep 2026
1

 "எந்திரி மணி ஆறரை ஆச்சு" என்று கால்களைக் கீறினாள் சுலோ. கண்களை இறுகச் சுருக்கி விழிக்க முற்பட்டான், முடியவில்லை. சிறிது நேரம் அப்படியே மூடிக்கொண்டான். அவள் ஏற்கனவே அறையை விட்டு வெளியே சென்றிருந்தாள். மெதுவாகக் கண்களைத் திறந்தவனின் முகத்தில் சன்னல் வழி சூரியன் சுர்ரென்று பாய்ந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்தவன், வெளியே கட்டிலில் படுத்திருந்த மகளின் அருகில் சென்று அவளை அணைத்து மீண்டும் படுத்துக்கொண்டான்.

டொக் டொக் டொக் என்று மெஷினில் பால் கறக்கும் சத்தம் வலது பக்கக் கொட்டகையிலிருந்து கேட்டது. கோழிகள் அங்கும் இங்குமாய்ச் சுற்றித் திரிந்தன. அந்த வீட்டில் இருந்து அம்மாவும் அப்பாவும் வண்டியில் வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கும் போதே, "அப்பனுக்கும் மவளுக்கும் இன்னும் விடியலயா" என்று சொல்லிக்கொண்டே வந்தார் அம்மா.

"பாருங்க, எந்திரிச்சு வந்து மவளப் புடிச்சுகிட்டுப் படுத்திருக்கு" என்றாள் சுலோ.

"எந்திரி தம்பி, அவன் பால் பீச்சினதும் எரியூர் போய்ட்டு வந்துருங்க" என்றார் அம்மா.

எழ மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தான். எரியூர் போவதை ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களாக வீட்டில் நடக்கும் ஏதும் இவன் உடன்பாடில்லாமல் நடந்து கொண்டிருந்தது. அம்மாவுக்காகவும் சுலோவிற்காகவும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு முன் அவனும் தம்பியும் அந்தப் பெரியவரின் வீடு தேடிப் பைக்கில் எரியூர் சென்றிருந்தனர். ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்று வந்ததாக நினைப்பு. இருவருக்கும் சரியான வீடு எது என்று குழப்பமாக இருந்தது. அந்த வழி நெடுகத் தென்னை மரம் நின்று குழப்பிற்று. ஓரமாக மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு அம்மாவைப் பார்த்துத் தம்பி கேட்டான், "அம்மா, இங்க மருந்து எடுக்கிறவங்க வீடு எங்கம்மா?".

"மூக்குப்பொடி வூடா?" என்று கேட்டவர் தம்பி 'ஆம்' என்று தலை அசைப்பதைப் பார்த்து "வந்த வழியிலயே கொஞ்சம் பின்னாடி போனீங்கன்னா, வரிசையாப் பனமரம் வச்சுத் தடம் போவும். நேராப் போனீங்கன்னா அவங்க வீட்டுக்கேதான் போவும்" என்றார்.

“ம்” என்று தலையாட்டியபடி வண்டியைத் திருப்பி வந்த பாதையிலேயே விட்டான். அவர் சொன்னாது போலப் பனைமர வரிசையை ஒட்டி  இரண்டடிப் பாதை சென்றது. அதில் செல்ல அது  நூறு அடி தூரம் குறுகலாகச் சென்று சற்று விரிவடைந்தது. நேராக அந்தப் பாதையின் முடிவில் தெரியும் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் தம்பி.

ஏற்கனவே அங்கு  ஏழெட்டு பேர் நின்றிருந்தனர். ஒன்றிரண்டு வண்டிகளும் இருந்தன.  அட்டை வீடு. அதன் எதிர்ப்புறத்தில் மூடிய தொட்டி ஒன்றைத் தனியாகக் கட்டியிருந்தனர். வீட்டின் பாதையை ஒட்டியே வயல் இருந்தது, அதில் நிலக்கடலை பயிரிட்டிருந்தார்கள். கொடிகள் நீண்டு பரந்து வளர்ந்திருந்தன.

வண்டியை விட்டு இறங்கிய இவர்களைப் பார்த்தவுடன் அங்கிருந்த பெண் ஒருவர் "மருந்து எடுக்கவாண்ணா?" என்றார்.

"ஆமாக்கா" என்றான்.

"இருங்க, மாமா கொஞ்ச நேரத்துல வந்துருவாரு " என்று சொல்லி உள்ளே சென்றார்.

வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டான். ஒன்றும் பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இவன் சின்னம்மா பையனை மருந்து எடுக்கக் கூட்டி வந்திருந்தான். இப்போது தனக்காக இங்கு வந்திருக்கிறான். 

வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை, ஒன்று சரி ஆனால் இன்னொன்று என்று மாறி மாறி வந்துகொண்டிருந்தது. அம்மா எங்கோ சாமி கேட்கச் செல்ல, "இவனுக்கு யாரோ மருந்து வைத்திருக்கக்கூடும்" என்று சாமி சொல்ல, இவனை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

ஐந்து நிமிடம் கழித்து முண்டா பனியன், அழுக்கு படிந்த வெள்ளை வேட்டி, எண்ணெய் வைத்து வாரிய நரைத் தலையுடன் ஒரு பெரியவர் வெளியில் வந்தார். அவர் நடை சற்று வித்தியாசமாக இருந்தது; வயதின் காரணமாக இருக்கக்கூடும் என்று எண்ணினான்.

வந்தவர் அங்கே நின்றிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்தார். அவரின் கைகளைப் பிடித்து ஒவ்வொரு நகக்கண்ணாக அழுத்தினார். பின்னர் கண்கள் இரண்டையும் திறந்து பார்த்தார். வயிற்றை அமுக்கிப் பார்த்தார். பார்த்துவிட்டுப் பக்கத்தில் நின்றவரிடம் "ஒண்ணுமில்ல" என்றார்.

வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இந்தச் சடங்கு நடந்தது. சிலருக்கு "இருக்கு" என்றார்; சிலரைப் பரிசோதித்து "இல்லை" என்றார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இவன் மனம் ஏதோ குழப்பத்துக்கு உள்ளானயிற்று. சென்ற முறை வந்தபோது தம்பியை விட்டுவிட்டுப் போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இம்முறை இவனுக்காக வரவும் பல கேள்விகள்  மனதில் ஊடுருவிக் கொண்டிருந்தன. 'இது உண்மையா? கையப் புடிச்சுக் கண்ணப் பாத்தா வயித்துல இருக்கிற மருந்து தெரிஞ்சுருமா?' என்றெண்ணினான். எல்லாவற்றையும் விட இதிலெல்லாம் இவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை.

யோசனையில் இருந்தவனை “நீ வா” என்று அழைத்தார் பெரியவர். மெல்ல நகர்ந்து சென்று அவர் முன் நின்றான் , அவர் கண்ணைப் பார்த்தான். எழுபதைக் கடந்த கிழவனின் கண்கள் பூத்துப் பழுப்பு நிறத்தில் இருந்தன, அதில் எந்தச் சலனமும் தென்படவில்லை. இவனது இரண்டு கைகளையும் இழுத்து பிடித்தார் கிழவர். ஏனோ கைகள் நடுங்கின. நகக்கண்களை நசுக்கிப் பார்த்தார். கண்ணை விரித்துப் பார்த்தார். அப்போது இவன் அந்த மூக்குப்பொடிப் பெரியவரின் கண்ணைப் பார்த்தான். 

இவன் பனியனைத் தூக்கச் சொன்னார். வயிற்றை மேலிருந்து கீழாக அழுத்திப் பார்த்தார்.  ஏதும் பெரிதாகப் பேசாமல் உடனிருந்த இவன் தம்பியைப் பார்த்து "இருக்கு" என்றார்.

இவன் ஏதும் பேசவில்லை.  தம்பி கேட்டான் "எவ்வளவு செலவாகும்ங்க?".

கிழவர் கண்களைச் சுருக்கிக்கொண்டு இரண்டு விரல்களைக் காட்டி "ரெண்டரை" என்றார். 

"வரும்போது இருபத்தஞ்சு வெத்தலை, அதுக்குப் பாக்கு, ஒரு லிட்டர் பச்சைப் பசும்பால் எல்லாம் கொண்டு வரணும். காலைல எழுந்து டீ, காபி ஏதும் குடிக்கக் கூடாது, வெறும் வயித்துல வரணும்" என்றார்.

"சரி" என்று தலை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பச் சென்றனர். அருகிருந்த ஒருவர் "எந்த ஊருப்பா?" என்றார். இருவருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை.

வண்டியைத் திருப்பிய தம்பி "என்னதான் மருந்து எடுத்தாலும் தல கீழக் குதிச்சாலும் நம்ம நெனச்சாத்தான் எதுவுமே சரியாய் நடக்கும் " என்றான்.

இவன் ஏதும் பேசாமல் நிமிர்ந்து தம்பியின் முகத்தைப் பார்த்தான்.

"எனக்கும் சேத்துத்தான் சொல்றேன்" என்றான் தம்பி.

வரும் வழியில் தம்பி கேட்டான் "இந்தாளுக்கு எதுக்கு மூக்குப்பொடின்னு பேர் வந்துச்சுன்னு தெரியுமா?” பதில் ஏதும் பேசும் முன் தொடர்ந்தான் “இந்தாளு மாமனார் கூடச் சொத்துப் பிரச்சனை வந்தப்ப அடிதடியாகி மச்சினன் இவரு மூஞ்சிலயே மூக்குப்பொடியை வீசிப்புட்டான். அப்போதிலிருந்து இவரை ஊரே 'மூக்குப்பொடி'ன்னுதான் கூப்பிடுது. அந்தப் பிரச்சனைக்கு அப்பறம் இந்தாளும் மச்சினனும் சேர்ந்து சந்தன மரமெல்லாம் கடத்தியிருக்கானுங்க. ஆனா மனுஷன் பொண்டாட்டி செத்த அப்புறம், மருமககிட்ட பொட்டிப் பாம்பா அடங்கிட்டாருனு சொல்லறாங்க. இப்படி மருந்து எடுத்துச் சம்பாரிக்கலனா இந்நேரம் வீட்டைக் காலி பண்ணியிருப்பாங்க." 

 

இன்று எப்படியும் சென்றாக வேண்டும் இல்லை என்றால் அம்மாவும் சுலோவும் சும்மா விடமாட்டார்கள்.

எழுந்து பல் விளக்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து "தம்பி, பால் இந்தப் பச்சப் பாட்டில்ல ஊத்திருக்கன்" என்றார் அப்பா. திரும்பிப் பார்த்துத் தலையசைத்தான். 

ஏதோ யோசனை செய்துகொண்டே தொட்டியிலிருந்து நீரை அருகே எடுத்து சென்றான்.  கையில் நீர் இல்லை. சுதாரித்தவனாய்  மீண்டும் அள்ளி வாய் கொப்பளித்தான். படுக்கையிலிருந்து மகள் எழுந்து இவனருகே வந்தாள்.

"போ தங்கம்... போயிப் பல்ல விளக்கு, அம்மா பால் தருவா. குடி" என்றான்.

"பால் குடிச்சுட்டு நம்ம நீ படிச்ச ஸ்கூலப் பாக்க போறோந்தானப்பா?" என்றாள் மகள்.

"இன்னைக்கு வேற வேலை இருக்கும்மா. இன்னொரு நாள் போலாம் தங்கம்" என்றான்.

"போப்பா... நீ எப்பப் பாரு போலாம்ங்கிற, ஆனாக் கூட்டிட்டுப் போக மாட்டேங்கிற" என்று கோபித்துக் கொண்டாள்.

கொப்பளித்த வாயை லுங்கியால் துடைத்துக் கொண்டு மகளைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டான், 

"நம்ம சென்னைக்கு லீவு முடிஞ்சு திரும்பிப் போறதுக்குள்ள கண்டிப்பா என் ஸ்கூலக் காட்டுறேன் உனக்கு, ஓகேவா?"

“ம்” என்று தலையசைத்து விட்டு அவனை விட்டு விலகி வீட்டினுள் ஓடினாள் மகள்.

அம்மா, அப்பா, சுலோவிடம் சொல்லிவிட்டு இவனும் தம்பியும் கிளம்பினார்கள். எரியூர் போகும் வழியெல்லாம் இவன் மனது அலை பாய்ந்தது.

'கிழவன் எப்படி மருந்தை எடுக்கிறான்? நிஜமாத்தான் எடுக்கிறானா? அப்டி எடுத்தா  நம்ம பிரச்சனை சரி ஆகிடருமா?'

எரியூர் பக்கமாகச் சென்றவுடன் வழியில் தென்பட்ட  கடையைப் பார்த்து வண்டியை நிறுத்தினான் தம்பி. இருவரும் இறங்கினார்கள். 

அங்கிருந்த கடைக்காரரிடம் "அண்ணா, இருபத்தஞ்சு வெத்தலை, அதுக்குப் பாக்கு குடுங்க" என்றான்.

ஏதோ எழுதிக் கொண்டிருந்த கடைக்காரர் ஒருமுறை நிமிர்ந்து இவன் முகத்தைப் பார்த்தார். 

"பால் இருக்குதா கண்ணு?" என்றார்.

"இருக்குண்ணா" என்றான்.

வெற்றிலை பாக்கிற்குப் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர்.

போகிற வழியிலெல்லாம் கடைக்காரர் கேட்ட "பால் இருக்குதா?" என்ற வார்த்தை மட்டும் இவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

அங்கு ஏற்கனவே மூன்று பேர் காத்திருந்தனர். இவர்கள் சென்று சில நிமிடங்களில் கிழவர் வந்தார். 

அங்கிருந்த ஒரு பெண்ணை அழைத்து "இதெல்லாம் கொஞ்சம் கழுவும்மா" என்று அங்கிருந்த நான்கைந்து பிளாஸ்டிக் டப்பாக்களையும்  பெரிய கேனையும் காட்டினார். குனிந்து நின்றிருந்த இவன் கிழவரின் கால்களைக் கவனித்தான். பாதம் முழுவதும் வெடிப்பு; ஒரு கால் பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் தென்பட்டது. அந்தப் பெண் கழுவுகையில் பெரியவர் அங்கிருந்த முருங்கை மரத்தில் சில கணு இலைகளைப் பறித்து வரச் சொன்னார். அங்கிருந்த ஒருவர் வேகமாக ஓடிப் பறித்து வந்தார். அதைக் கொதிக்கும் நீரில் போட்டு வாட்டினார் மூக்குப்பொடி.

வெந்நீரில் வாட்டிய இலையையும் அதனுடன் வேறேதோ இலையையும் சேர்த்து அங்கிருந்த அம்மியில் அரைத்தார் கிழவர். வயதின் மூப்பால் ஒவ்வொரு அரைப்பிற்கும்  மூச்சு வாங்கியது. அரைத்த ஊனை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்குச் சென்றார். அங்குச் சுற்றிலும் மாதுளை, வாழை என்று பழ மரங்கள் சூழ்ந்திருந்தன. ஒரு மாதுளை மரத்தடியில் இருந்த இரண்டு கல்களைத் தூக்க முடியாமல் அகற்றினார். அவற்றின் அடியில் இருந்த பழைய கிழிந்த சாக்கை எடுத்துக் கீழே போட்டு உட்கார்ந்தார். எல்லாரையும் பாலையும் வெற்றிலையையும் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். அவர் முன் விரித்திருந்த சாக்கில் கொண்டு வந்து வைத்தனர். மெதுவாக ஒவ்வொன்றாக அனைத்துப் பால் பாட்டில்களையும் எடுத்துப் பெரிய கேனிற்குள் ஊற்றினார். 

அங்கிருந்த ஒருவரைக் கூப்பிட்டு 

"அங்கிருக்கிற வேப்ப மரத்துல போய்ப் பல்லு விளக்குறா மாதிரி நாலு குச்சி ஒடிச்சுட்டு வா" என்றார் கிழவர். அந்த ஒருவர் குச்சி ஒடிக்க வேகமாகப் புறப்பட்டார். பாலைக் கேனில் ஊற்றிய பின்  அரைத்த ஊனுடன் ஏதோ  சாம்பல் நிற மாவு போன்றதைக் கலந்தார். அந்தப் புதுக் கலவையை எடுத்துப் பாலில் கலந்தார். கிழவரின் இந்தச் செயல்களையெல்லாம் இவன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த நான்கு சட்டிகளைக் காட்டி ஒரு பேப்பரைக் கொடுத்து "எல்லார்கிட்டயும் ஒவ்வொன்னு எடுத்து வை" என்றார் அங்கிருந்த ஒருவரைப் பார்த்து. "அந்தச் சட்டிலதான் வாந்தி எடுத்து வைக்கணும்" என்றார் பொதுவாக.

எல்லா வெற்றிலையையும் அரை அரையாகக் கிழித்து அதோடு பாக்கை வைத்தார். நான்கு பேருக்கும் ஒவ்வொரு டப்பாப் பாலும் நான்கைந்து வெற்றிலைகளும் கொடுக்கப்பட்டன.

இவனருகே வந்த பெரியவர் "இந்தா... இந்தப் பாலக் குடிச்சுட்டு வெத்தலை பாக்கை நல்லா மென்னு முழுங்கணும்" என்றார்.

இவன் பாலை எடுத்து மோந்து பார்த்தான்; பெரிதாக நெடி இல்லை. சிறிது குடிக்க முயன்றான். இவனுக்குப் பால் வாடையே ஆகாது. கஷ்டப்பட்டுக் குடித்தான். பின்னாலிருந்த இவன் தம்பி "முடிச்சிடுப்பா ராஜா..." என்றான் நக்கலாக. 

குடித்த பின் வெற்றிலையைப் பார்த்தான். யாரோ வாங்கி வந்த வெற்றிலை பழுத்துப் போய் இருந்தது. கிழவர் கவனிக்காத போது அதைத் தூக்கிப் போட்டான். நன்றாக இருந்த ஒரு வெற்றிலையை எடுத்துப் பாக்குடன் சேர்த்து மெள்ள முயன்றான். வயறு புரட்டிற்று.

சிறிது நேரத்தில் இரண்டாம் சுற்றுப் பால் வந்தது; அதைத் திணறித் திணறிக் குடித்தான். முடியவில்லை. வயிறு புரட்டி வாந்தி வந்தது; அதை அந்தச் சட்டியிலேயே எடுத்தான்.

"வெத்தலையை நல்லா மெல்லு" என்றார் கிழவர்.

அங்கிருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆள் ஒருவர் முதல் டப்பாப் பாலையே குடிக்க முடியாமல் திணறினார். அதைப் பார்த்த கிழவர் அங்கிருந்த சிறுபெண்ணைச் சுட்டிக்காட்டி "அங்க பாரு, அந்தச் சின்னப் புள்ள எப்படி குடிக்குது! நீ என்னடான்னா இப்படி யோசிக்கிறியே" என்றார்.

சிறிது நேரத்தில் இவன் இரண்டு முறை வாந்தி எடுத்துவிட்டான். 

மூன்றாம் சுற்றுக்கு முன் கிழவர் தன் பையிலிருந்து ஏதோ ஒரு பொட்டலத்தை எடுத்தார். அதிலிருந்த தூளை ஒவ்வொரு டப்பாவாக நான்கிற்குள்ளும் சிறிது சிறிதாகப் போட்டார். பின் கையில் ஒரு வடிகட்டியை எடுத்துக்கொண்டார். ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு இவனுக்கு முன்னால் இருந்தவரிடம் சென்றார். அந்த ஆளுக்கு முன்னாலிருந்த டப்பாவிற்குள் இவர் கொண்டு சென்ற பாலை வடிகட்டி ஊற்றினார். வடிகட்டியது போக அவர் கொண்டு வந்த டப்பாவில் மீதமுள்ளதை வாந்தி இருக்கும் சட்டிக்குள் ஊற்றினார். இதேபோல் அனைவருக்கும் நடந்தது.

"குடிச்சு முடிச்சதும் வேப்பங்குச்சியில பல்லை விளக்குங்க. வயித்துல இருக்கிறதெல்லாம் வெளிய வரணும்" என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த  பழைய, உடைந்த இரும்புச் சல்லடையை எடுத்துக்கொண்டு  மேடு போன்றிருந்த பகுதிக்குச் சென்றார். அந்த இடத்தில் ஏற்கனவே ஏதோ நெருப்பு மூட்டி எரிந்திருந்த சாம்பல் இருந்தது.

அனைவரின் சட்டியும் வாந்தியால் நிரம்பி இருந்தது "எடுத்துட்டு வா" என்றார்.

இவனே முதலில் சென்றான். "மெதுவா அந்தச் சல்லடையில ஊத்து" என்றார் கிழவர். கிழவரின் கண்கள் எதையோ தேடின. பக்கத்தில் கிடந்த ஒரு சிறிய குச்சியைத் தன் கையில் எடுத்தார்.

இவன் தான் கக்கியதைச் சட்டியிலிருந்து மெதுவாக அந்தச் சல்லடையின் மேல் ஊற்றினான். ஊற்ற ஊற்ற வயிற்றினுள் இருந்த பால் தயிராகக் கொட்டியது. கிழவர் அதைக் குச்சியால் கிளறினார். அதில் ஏதோ வெளிர் பச்சை நிறத்தில் புலப்பட்டது. சிறிது சிறிதாக மூன்று உருண்டைகள்.

நிமிர்ந்தவர் இவன் தம்பியைப் பார்த்து "மூனு இருக்குப்பா... வச்சு ஒன்னர வருஷமாச்சும் இருக்கும்" என்றார். அங்கே தடித்திருந்த பால் கட்டி போன்றதைக் காட்டிப் "பாரு, கோழிக்கறியில வச்சுருக்காங்க" என்றார். அதைத் தன் போனில் போட்டோ எடுத்துக்கொண்டான் தம்பி.

கிழவரிடம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயைத் தம்பி எடுத்துக் கொடுத்தான். கிழவர் அதை வாங்கித் தன் டிரவுசர் பையில் வைத்துக்கொண்டார். 

"ரெண்டு மணி நேரம் எதும் ஆகாரம் வேண்டாம். அப்பறம் வெறும் ரசம்தான் சாப்பிடணும். நல்லா ரெண்டு டம்ளர் குடி" என்றார் இவனைப் பார்த்து. 

"ஏதாவது பிரச்சினைன்னா எனக்குப் போன் போடுங்க" என்றார்.

இருவரும் புறப்பட்டனர். இவனுக்குத் தொண்டையெல்லாம் வறண்டு பசி வயிற்றைப் பறித்தது. வண்டி கிளம்பியதும் தம்பி "கிழவனுக்கு இன்னைக்குப் பத்தாயிரம். நாலு பேருக்கு மருந்து எடுத்தாக்கூட நல்லாப் பொழைச்சுக்கலாம் போல" என்றான்.

தம்பி வண்டியை முடுக்கினான். இவன் டப்பாவில் இருந்த சொச்சத்தை சட்டியில் ஊற்றியதும் தடித்த பாலைக் 'கறி' என்று கிழவன் கூறியதும் நினைத்து மனது குழம்பிற்று. தன்னை மறந்து யோசித்துக் கொண்டிருந்தவனைத் தம்பி வேகமாகப் போட்ட வண்டியின் பிரேக் தட்டி எழுப்பியது.

முன்னே ஒருவர் ஓடி வந்த கன்றுக் குட்டியைப் பிடித்து ஓரமாக இருந்த கம்பியில் ஏதோ முனகிக்கொண்டே இழுத்துக் கட்டினார். "எரும... பேச்சக் கேக்குதா பாரு. இன்னமே உன்ன அவுத்து விட்டேன்னா கேளு..." என்று அவர் திட்டிய வார்த்தைகள் இவன் காதில் விழுந்தன.

 

 

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சரண்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணி. இது இவருடைய முதல் சிறுகதை.



1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

YasothaVimal    7 hours ago

Nice story saran. Keep going. Congrats

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

காலச்சுவடுநகர மயமாக்கம்பிரான்ஸ் காஃப்காஇக்பால்பதிப்புத் துறைஇலக்கிய நிகழ்வுகள்தலையங்கம்ம.கேசவன்அலர் பதிப்பகம்சந்துரு மாயவன்கோ கமலக்கண்ணன் கவிதைகள்விஜய்நேர்காணல்மெல்லிய கோடுகள்சீர்மை இதழ்நிலமெங்கும் பூத்த முகம்கிராமியம்மழை ஓய்ந்த சாலையில்கருத்தரங்கங்கள்ரூமி‘இலக்கியக் கூட்டம்அங்கதம்இலக்கியம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்எஸ் அற்புதராஜ்பிப்ரவரி தினம்கருத்தரங்குகள்மண்வாசனை கதைகள்இலக்கிய விமர்சனம்அசகவதாளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!