கருப்பி. நாயின் பெயர். கழுத்தில் சிவப்பு நிறத்திலான பட்டை அணிந்திருந்தது. குன்றுமலையின் அடிவாரமும் உச்சிமலையும் மழை வெயில் என புழங்குவதற்கும் ஒதுங்கிகொள்வதற்கும் தோதுவான இடமாக இருந்தது. குன்றுமலைக்கு வருபவர்களுக்கு கருப்பிதான் காவலாக இருந்தான். தை பூசத்திற்கு கோவிலுக்கு வருபவர்கள் கருப்பிக்கு அரைமூடித் தேங்காய் மற்றும் தீனி சாமான் என கொடுத்து விடுவார்கள். அதுதான் பெரும் சோதனை. கருப்பிக்கு தேங்காயை கடித்து தின்னுவதற்கு தெரியாது. உருட்டிக்கொண்டே இருப்பான். இரவு வழக்கம்போல வரும். வாயில் கவ்விக்கொண்ட தேங்காயை மலையின் உச்சிக்கு கொண்டு சென்றுவிடுவான். குன்றுமலையின் உச்சிக்கு பக்கத்தில் துளுக்க மண்டபம் இருக்கிறது. கருப்பி சமாதானகாரன். குன்றுமலை, துளுக்க மண்டபம் என எந்த வித்தியாசமும் அவனுக்கு கிடையாது. இரண்டு இடத்திலும் படுத்துக் கொள்வான். மண்டபத்தில் ஆடு, கோழி என பலி கொடுக்கப்பட்டிருக்கும். இரத்தம் படிந்து கிடக்கும் வாசத்தைக்கொண்டு அந்த இடத்திற்கு அவனோடு சுற்றிக்கொண்டிருக்கும் மற்ற நாய்களும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
வெள்ளை, செவலை என பலவகை நிறத்தில் நாய்கள் இருந்தன. அவர்களுக்குள் சண்டை சச்சரவுகளும் இருந்தன. ஆனாலும் நண்பர்களாகவே இருந்தனர். குன்றுமலைக்கு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தார்கள். பிரியாணி சோறு, பொங்கல், தினைச் சோறு என மாற்று ருசியாக இருந்தாலும் அனைத்தும் அவர்களை பசியாற்றவே செய்தன. பிரியாணி கூடுதல் ருசி. பொங்கல் கொஞ்சம் மட்டுப்பட்ட ருசி என்ற வகைபாடுதான் உண்டு. பிரியாணிக்காக கடித்துக் குதறிக்கொள்வார்கள். குதறிக்கொள்வது என்றால், கருப்பியின் கூட்டத்திற்குள் அது ஒருவகையான வாழ்வியல் முறை. அதில் கோபம், சந்தோசம், தொலைவில் இருப்பவர்களை நெருக்கமாக அழைத்தல், பக்கத்தில் இருந்துகொண்டு தொந்தரவு செய்பவர்களை தொலைவுக்கு விரட்டியடித்தல் என அனைத்தும் அடக்கம். “சோற்றுக்கான சண்டை எங்குதான் இல்லை” பிறகு களவியில் கூட அவர்கள் ஒன்றாகவே ஈடுபட்டார்கள். ஒன்றாக சுற்றி உணவிற்காக கடித்துக்கொண்டு உருண்டுகொண்டாலும் நிரந்தரமாக பிரிதலின் நிமித்தம் இதுவரை வந்ததே இல்லை. குரைத்துக்கொள்வார்கள். அது இயல்பானதுதான். பின்னர் ஒன்றாக சேர்ந்துகொள்வார்கள். ஒருநாள் ஒயிட்டி தீபத் தூணுக்கு அடியில் படுத்துக் கிடந்தால், மறுநாள் துளுக்க மண்டபத்தில் செவலை இருப்பான். மற்றொருநாள் இருவரும் மலையின் உச்சியில் கால்களை நீட்டிப் படுத்துக் கிடப்பார்கள்.
சிண்டாட்டி நாய்காரன். அவ்வப்பொழுது தீபத் தூணுக்கு வந்து செல்பவன். கொடி பிடித்துக்கொண்டு மேலும் சிலரும் அவனோடு வருவார்கள். துளுக்கு மண்டபத்தில் கிடா வெட்டுக்குப் பிறகு அவன் இரண்டு மாதங்களுக்கு மேலாக குன்றுமலைக்கு வரவில்லை. இரண்டு நாட்களாக குன்றில் படையலும் இல்லை. குன்றுக்கும் அடிவாரத்திற்கும் சுற்றிக்கொண்டுவரும் வகையில் கருப்பிக்கு சில விசயங்களை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. சிண்டாட்டியின் ஏற்பாட்டில்தான் அடிவாரத்தில் கலவரம் மூண்டது என்பது கருப்பியின் யூகம் மட்டும் இல்லை. உண்மையும் அதுதான். ஒருவகையில் அதன் காரணமாகவே அவனிடம் இருந்து பிரிந்து கருப்பி குன்றுமலையின் உச்சிக்கு வந்துவிட்டான். அடிவாரத்தில் என்ன நடந்தது என்று குன்றுமலையில் இருக்கும் மற்ற இரண்டு நாய்களுக்கும் தெரியாது. கருப்பி அளவிற்கு அவர்களுக்கு குன்றுமலையினைப் பற்றிய புரிதலும் இல்லை. செவலையும் வெள்ளையும் பசியாறவேண்டும். அடிவாரம் வரை இறங்கி வந்தார்கள். பெருங் கூட்டமாக இருந்தது. பின்னர் இருவரும் மேலே ஏறிச்சென்று துளுக்க மண்டபத்தில் படுத்துக்கொண்டார்கள்.
“பிரச்சனைன்னு வந்துட்டா, வயித்துக்கு எதுவும் கிடக்கறதில்ல”
“இது ஏன் புரிய மாட்டேங்குதுன்னுத் தெரியல”
“இவ்வளவு ஓட்டமும் நடையும் இந்த வயித்துக்குத்தானே” என ஆளாளுக்கு அவர்களுக்குள் தெரிந்ததைப்போல நியாயம் பேசினார்கள். அவர்கள் பேசும் நியாயத்தை கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். கருப்பி உள்பட மூவருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது.
இரவு நேரத்தில் இவர்களைத் தவிர குன்று மலைக்கு வேறு யாரும் இனி வர போவதும் இல்லை. இதுதான் வாடிக்கையாக இருந்தது. உலைத் தண்ணீரில் குளித்ததைப்போல நிலா ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிண்டாட்டி நாய்காரன் குன்றுமைலைக்கு மேலே வருவது தெரிந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு வருகிறான். கருப்பிதான் முதன் முதலில் கவனித்தான். குரைத்துக்கொண்டே படியில் இறங்கி ஓடினான். அவனுக்கு பின்னால் அவனது மற்ற கூட்டாளிகளும் தாண்டித் தாண்டி ஓடி வந்தார்கள். மேலேறி வருபவனிடம் இருந்து மாமிசத் துண்டுகளின் வாசம் வந்தது. குரைத்துக்கொண்டு வரும் நாய்களுக்கு முன்னால் கையில் வைத்திருந்த சில மாமிசத் துண்டுகளை விசிறினான். கருப்பியைத் தவிர அவனது பெயர் மற்ற இரண்டு நாய்களுக்குத் தெரியாது. பெயர் இல்லாதவனை எப்படி சொல்வது. சிண்டாட்டி அல்லது நாய்காரன் என்று நாய்கள் மனதில் பதிய வைத்துக்கொண்டன. கருப்பிக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கிடந்த வயிறு. உணவின் மீது ஆசை. மனது தயங்கவில்லை. பசியில் மட்டும்தான் எந்த சிக்கலையும் கொலைப் பாதகத்தையும் பற்றியும் மனம் நினைப்பதே இல்லை. மனமும் செயலும் ஒன்றாக பிணைகிறது. உணவை பசிக்கொண்டு விழுங்கும் நேரம் ஆழ்ந்த தியானத்திற்கு சமமானது. இரத்த நாடி, பித்த நாடி என மூச்சை வழுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றி உள்ளிளுக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. கண்களை மூட வேண்டியதில்லை. மனதை ஒரு நிலைப் படுத்தவேண்டியதில்லை. சிண்டாட்டி விசிறிய மாமிசத் துண்டுகளை பேராசைக்கொண்டு மூவரும் கடித்து விழுங்கினர். அவன் விசிறிய மாமிசத் துண்டுகளைக்கொண்டு அவன் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை செவலையும் வெள்ளையும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. நாய்காரன் பசியை செயற்கையாக ஏற்படுத்தியும், அதனை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேடுபவனாக இருப்பவன். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறான். ஆனால் இந்த சிண்டாட்டி இன்று குன்றுமலைக்கு ஏன் ஏறி வந்திருக்கிறான்? எதற்காக எல்லோருக்கும் மாமிசத் துண்டினை வீசுகிறான்? அவன் எல்லாவற்றிற்கும் சில காரணங்களை வைத்திருப்பான். அவனது திட்டம் பசித்து கிடக்கும் கருப்பின் கூட்டத்திற்கு உணவு அளித்திட வேண்டும் என்பதில்லை. குன்றுமலையின் உச்சியில் இருக்கும் தீபத் தூணுக்கு அருகில் போனான். எண்ணைப் பிசுபிசுப்போடு இருந்த திரியினை கையில் எடுத்தான். தனது பையில் வைத்திருந்த பசுவின் மாமிசத் துண்டுகளைப் அகல் விளக்கில் போட்டான். பின்னர் துளுக்க மண்டபத்தின் உச்சியில் விளக்குத் திரியை வீசி எறிந்தான். சிண்டாட்டி மலையுச்சிக்கு ஏறி வந்ததிற்கான நோக்கம் நிறைவேறியது. மகிழ்ச்சியாக கீழிறங்கிச் சென்றுவிட்டான். ஆனால் சிண்டாட்டியின் நோக்கத்தினை கருப்பியின் கூட்டம் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு உணவிடவே வந்திருக்கிறான் என்று வெள்ளந்தியாய் கிடந்தார்கள். ஆனால் கருப்பிக்கு மனது சரியில்லை. குழப்பம் மேலிட்டது. குன்றுமலையின் படிக்கட்டுகளில் குதித்தான்.
கருப்பிக்கு சிண்டாட்டியுடனான நாட்கள் நினைவில் வந்தது. ஒரு மழை வெள்ளத்தில் கருப்பியின் அம்மா தண்ணீரில் முழ்கி இறந்து போனது. தாய் இல்லாமல் அலைந்து திரிந்து பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. போகும் இடமெல்லாம் கற்களால் அடி விழுந்தது. காரணமே இருக்காது. ஆனாலும் அடி விழும். இது எங்கும் நடந்ததே இல்லை. எந்த இனத்திலும் நடப்பதில்லை. அவசியத்தின் அடிப்படையிலேயே தாக்குதல்கள், முறைப்பாடுகள் என்பது நடக்கும். ஆனால் மனிதர்கள் மட்டுமே இப்படியாக நடந்துகொள்கிறார்கள். இது விடுவிக்க முடியாத புதிர். யாரிடமும் சென்று முறையிடவும் முடிவதில்லை. அப்படியாக கற்களால் அடிவிழுந்த சமயத்தில்தான் கருப்பிக்கு புதிய நட்பாக கிடைத்தவன்தான் சிண்டாட்டி. பின்னந்தலையில் சிண்டு வைத்திருந்தான். தன்னுடைய இனத்தில் இல்லாத உருவ அமைப்பு அவனிடம் இருப்பதை கருப்பி கவனித்தான். தலையிலிருந்து ஒற்றைக் கால் என்ற வகையில் தொடங்கும் அவை, இடுப்பிற்கு பிறகாக இரண்டாக பிரிந்திருந்தது. அவனும் ஒரு வகையில் பிராணிதான். இரண்டு கால்களைக் கொண்ட பிராணி. கருப்பித் தேடிக்கொண்டுவரும் உணவை அவனோடு பகிர்ந்து உண்டு, பசியாறிக் கொண்டான். அவனோடு படுத்துக்கொண்டான்.
சிண்டாட்டிக்கு அடுத்த வேளை உணவினை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. அதன் பொருட்டு அவன் வயிற்றுப் பாட்டிற்காக வெளியே சென்று விடுவான். கருப்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. வயிறு நிறைந்து விட்டிருந்தாலும் இவன் ஏன் அடங்கி இருப்பதில்லை. இப்படி அலைந்து திரிவதினால்தான் அவனுக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருக்கிறது. நான்கு கால்கள் அவனுக்கு அமைந்திருந்தால் அவனை கட்டுப் படுத்த முடியாது என தனது கால்களுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டான் கருப்பி. படுக்கைக்கு சென்று தலையை சாய்த்து கண்களை மூடினான். அவனைப் பற்றிய அபிப்பிராயங்கள் அதிகமாக தோன்றியது.
“அவனுக்கு ஏன் பெயர் இல்லை”
பெயர் வைப்பதற்கு யாரேனும் இருக்க வேண்டும். அவனுக்கு அப்படி யாரும் இல்லை. அதனால் அவனுக்கு பெயர் இல்லை. சிண்டாட்டியின் உடல் கவிச்சியினை மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. அவனை தேடி வருவதற்கும், அவனோடு இருப்பதற்கும் அவனது உடலின் வாசம் கருப்பிக்கு போதுமானதாக இருந்தது. கருப்பி அவனுக்கு நன்றியுடனே இருக்கிறான். ஆனால் இப்பொழுதெல்லாம் சிண்டாட்டியின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. தனக்கென இருக்கும் அடையாளத்தை அவன் மாற்றிக்கொண்டே இருக்கிறான். தனக்கு ஒவ்வாத காரியங்களை செய்ய சொல்கிறான். தனது நண்பர்களான வெள்ளை, செவலையிடம் அடிக்கடி சண்டை ஏற்படுத்தி வைப்பதை கருப்பியால் உணர முடிகிறது. வீட்டிற்கு முன்னால் யாசகம் பெற்றுத் தின்னும் சிண்டாட்டி, முழுமையான வளர்ந்திடாத ஒரு ஆட்டினை பிடித்து வந்திருந்தான். அதனை அவனே அடிவாரத்தில் வெட்டி சமைத்தான். அதில் தொடைக்கறியை மட்டும் அவன் உண்டான். தலைக் கறியை வெள்ளைக்கு கொடுத்தான். செவலைக்கு கால்களையும் எலும்புகளையும் கொடுத்தான். கருப்பிக்கு குடலை கொடுத்தான்.
“நீ கழிவு உறுப்பான குடலைதான் சாப்பிட வேண்டும்” என்று அதட்டினான். கட்டாயப் படுத்தினான். அதற்கு பின்னதாகவும் அப்படியே நடந்தது. பின்னதாகவும் அப்படியே நடக்கிறது. அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படியாக செய்கிறான்? இது எதேச்சையானதாக இல்லை என்பதை மட்டும் கருப்பியால் புரிந்துகொள்ள முடிந்தது. உணவை பங்கிட்டுக் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுகிறான். உணவை உன்னும் அடிப்படையில் வகைப்பாடு பிரிப்பது ஏன் என கருப்பி குழப்பத்தில் ஆழந்தான். இப்படியாக அடுத்தடுத்த உணவு வேளைகளில் உணவை பிரித்து உன்னுவதில் வெள்ளை, செவலை, கருப்பி என அவர்களுக்குள்ளாகவே பெரும் சண்டை மூண்டுவிட்டது. கழிவு உறுப்பினைத் தின்னும் கருப்பி கீழ் தரமாகிவிட்டிருந்தான். அதன் காரணமாகவே துன்புறுத்த பட்டான். அதன் பிறகுதான் நாய்காரனை விட்டு கருப்பி விலகி, குன்றுமலைக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தான். இது வெகு நாட்களுக்கு முன்னதாக நடந்தது. அதன் பிறகு சிண்டாட்டி நாய்காரனை கருப்பி பார்க்கவே இல்லை. ஆனால் இன்று குன்றுமலை படியேறி, இறங்கியிருக்கிறான்.
வெள்ளையும் செவலையும் குன்றுமலையில் இருந்தார்கள். கருப்பி, சிண்டாட்டியினை பின் தொடருகிறான். மலையேறி வந்து மாமிச துண்டுகளை வீசிய அவனது நோக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.
இப்பொழுதெல்லாம், நாய்காரன் தனது வயிற்றுப் பசிக்காக எந்த வீட்டிற்கும் செல்வதில்லை. நகரத்தின் தெருக்களில் நடந்து செல்கிறான். சோற்றுக் குழம்பின் வாசனை எங்கிருந்தாவது கமழ்ந்துவரும். அங்கு இருக்கும் வெட்டவெளி அல்லது ஓய்விடங்களைப் பார்த்து அமர்ந்துகொண்டு விடுவான். கொஞ்சம் நாழிகை கழிந்தால் போதும். தெருவின் மூலைக்கு மீதமான சோறு வந்து சேர்ந்துவிடும். இலைகளில் மீந்து கிடக்கும் சோறு அவனுக்கு போதுமானதாகி விடுகிறது. குப்பைத் தொட்டிக்கூட எல்லோருக்குமான உணவை தன்னகத்தே வைத்திருக்கிறது. அதனை நாம் தேடி கண்டடைய வேண்டும் என்பதுதான் பசித்திருப்பவர்களின் வேலை என்று வியக்காணம் பேசினான். இதற்காக நாம் நாய்காரனை நம்பிக் கிடந்துவிட்டோம் என்ற கேள்வி கருப்பியிடம் தோன்றாமல் இல்லை. வெட்கமாககூட இருந்தது.
“இருக்கட்டும். ஒரு பசித்திருந்த பொழுதில் உணவை கொடுத்தவன். பாதுகாப்பு கொடுத்தவன். நன்றியோடு இருக்க வேண்டும்” என்ற எண்ணப்பாடு வந்தது. கருப்பி நாக்கால் முகத்தை துடைத்து அடக்கிக்கொண்டான். உணர்ச்சி வசப்படவில்லை.
“மாமிச துண்டு வேலை செய்யுது” என்று கருப்பியைப் பார்த்து நக்கலடித்தான் சிண்டாட்டி.
சிண்டாட்டி என்ன நினைக்கிறான் என்பதை கருப்பியால் புரிந்துகொள்ள முடிந்தது. வெளிகாட்டிக்கொள்ளவில்லை. கருப்பியை, நத்தரசா பள்ளிவாசல் தெருவிற்கு அவன் அழைத்து வந்திருந்தான். பள்ளிவாசலில் துளுக்கமார்கள் துவா செய்துகொண்டிருந்தார்கள். குறுகிய இடைவெளியில் விட்டுவிட்டுப் பிரார்த்தனையின் சத்தம் கேட்டது. நாய்காரனுக்கு எந்த தெருவில் சென்றால் என்ன கிடைக்கும் என்பது நன்றாகத் தெரியும். அந்த புரிதல்தான் அவனது உழைப்பின் மூலதனமாக இருந்தது. வேறு எதுவும் தெரியாது. ரம்ஜானுக்கு முதல் நாள். நோன்பு கஞ்சிக்குப் பிறகாக பிரியாணி, அசைவ தாளிச்சா வந்துவிடும் என்பது உறுதியானது.
“கருப்பி! இன்னிக்கி நல்ல வேட்டைதான்”
கழுத்தில் பிணைக்கப்பட்டிருந்த பெல்டை கையில் பிடித்தான்.
“குன்றுமலைக்கு ஏன் வந்தாய்? அதன் காரணத்தை அறியாமல் நான் உன்னைவிட்டு விலகுவதில்லை. உன்னை நான் கைவிட போவதும் இல்லை” என்பதைபோல கருப்பி தனது நீளமாக தொங்கும் நாக்கால் நாய்காரனின் முகத்தினை நக்கியது. அடர்ந்து ரோமம் மண்டிக் கிடக்கும் அவனது முகம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. இரண்டு முறை நக்கிய பிறகு முகத்தினை திருப்பிக்கொண்டது. நாக்கை சுழித்து உடலை குலுக்கி கக்கியது. சல்லுக் கொட்டியது. இன்றைக்கு கருப்பிதான் நாய்காரனை கூடுதலாக வழி நடத்தியது. உணவு இருக்கும் இடத்தினை தேடி அடைவதுடன், அவனுக்கான உணவினை கொண்டு வந்து சேர்ப்பதில் அலைந்து திரிந்தது. பள்ளிவாசலுக்கு அனைத்து தெருக்களில் இருந்தும் நாய்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்திருந்த நாய்கள், பெருங் கூட்டமாகி போனது. இதற்கு முன்னதாக இப்படியொரு நாய் கூட்டத்தினை சிண்டாட்டி நாய்காரன் பார்த்ததே இல்லை. கருப்பிக்கூட இப்பொழுதுதான் பார்க்கிறான். வெட்டுப் பற்கள் தெரியும்படியாக குரைத்தன. ஒவ்வொன்றோடும் கடித்துக் குதறிக்கொண்டன. நாய்காரன் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு இந்த சண்டை மிகவும் பிடித்திருந்தது. இந்த சண்டை அவனுக்காக பொழுது போக்கை உத்திரவாதப் படுத்தியிருந்தது. மேலும் இவர்களுக்குள்ளாக நடக்கும் இந்த சண்டையில்தான் தனக்கான உழைப்பில்லாத உணவு தடையில்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை கெட்டிப் பட்டது. தெருவின் மூலைக்கு உணவு வந்து சேருவதற்குள் நாய்கள் கடித்துக்கொண்டு புரண்டன. பார்த்துக்கொண்டே இருந்தான். நாய்காரன் சிண்டாட்டியுடன் கருப்பி பொறுமையாக உட்கார்ந்திருந்தான். ஆனால் அவர்கள் கருப்பியையும் விடவில்லை. குரைத்தார்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து கருப்பியையும் கடித்து குதறினார்கள். தன்னுடன் இருக்கும் கருப்பியிடம் அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்ற கோபம் நாய்காரன் சிண்டாட்டியிடம் இல்லை. கருப்பிக்கு ஏதேனும் உடல் ஊனம் ஏற்பட்டு விடக்கூடாது. சுகவீனம் அடைந்துவிடக் கூடாது. தனக்கு கிடைக்கும் வயிற்றுச் சோற்றுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் மட்டும்தான் மேலிட்டது. கையில் வைத்திருந்த தடியினை விட்டு எறிந்தான். கருப்பியின் முதுகில் வலுவாக விழுந்துவிட்டது. வெக்கைக்கு வெடிக்கும் உளுந்தினைப்போல சுற்றியிருந்த நாய் கூட்டம் பறந்து ஓடின.
“தனக்கு வேண்டப் பட்டவனையே சிண்டாட்டி நாய்காரன் தடியால் அடிக்கிறான்”
“ஓடுனாதான், உதையில்லாம தப்பிக்க முடியும்”
“சோறுன்னு வந்துட்டா… சொந்தமாவது.. பந்தமாவது”
என்று கலைந்து ஓடிய மற்ற நாய்கள் பேசிக்கொண்டன.
கருப்பி வலியால் துடித்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. முதுகை வளைத்து குன்றிப் போனான். சிண்டாட்டி நாய்க்காரனை குறுகிப் பார்த்தது கருப்பி. சிண்டாட்டி தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. ஒரு கனிவான பார்வையோடு பார்த்திருந்தால், கருப்பி புரிந்து கொண்டுவிட்டிருப்பான். தவறு இயல்பானதுதான். ஆனால் இந்த சிண்டாட்டி ஏன் தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்ற கோபம் கருப்பியின் மூக்கில் எகிறியது. அதன் பிறகாக அவனது பக்கத்தில் வரவே இல்லை. ஓடிவிட்டது.
“கருப்பி எங்க போயிடுவான். வந்திடுவான். சோற்று நேரம் ஆகட்டும். வாலாட்டிக்கிட்டு வந்து நிற்கத்தானே போகுது” என்று சிண்டாட்டிக்கு மனதிற்குள்ளாகவே இளக்காரம் பேசியது. பின்னந் தலையில் தொங்கும் பம்பைத் தலையை உருவி தடவினான். இதை கருப்பிக்குத்தான் அவன் செய்திருக்க வேண்டும். எப்படியோ சோறு வந்துவிடுகிறது என்ற மிதப்பு அவனிடம் இருந்தது. அவன் தனது தவறுக்கு வருந்தவே இல்லை.
“பசிக்கு ஒரு பிடிச்சை சோறு போட்டுட்டா, காலமெல்லாம் காலடியில கெடக்கனுன்னு எதிர்பார்க்கிற கடன்காரப் புத்தி” என்று கருப்பிக்கு கோபம் வந்தது. முதுகில் பலத்த அடிவாங்கிக்கொண்ட அவனது கோபத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
இனி அவன் முகத்தில்கூட விழிக்கக் கூடாது. வயிற்று பசிக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், எங்காவது கிடக்கும் வறட்டு எலும்பையாவது கடித்துத் தின்று பிழைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தது. தன்னோடு சண்டையிட்டவர்களோடு சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று சர்ச் தெருவிற்குதான் முதலில் ஓடினான் கருப்பி. தூய மரியண்ணை ஒரு கையில் குழந்தையை மார்போடு அணைத்தபடியிருந்தாள். மற்றொரு கையினை தன்னை நோக்கி நீட்டி நின்றுகொண்டிருந்ததை பார்த்தான். தேவாலயத்திலிருந்து பிரார்த்தனையின் சத்தம் வந்தது. கூடவே பின் பக்கத்தில் இருந்து நாய்களின் குரைப்புச் சத்தமும் ஒன்றாய் சேர்ந்துகொண்டது. கருப்பி அவர்களை நோக்கி ஓடினான். கருப்பியை பார்த்ததும் வேகமாக குரைக்க ஆரம்பித்தார்கள். தான் சமாதானத்திற்குதான் வந்திருக்கிறேன். கூடி, ஆடி வயிறாறலாம் என்று எப்படி சொல்வது? முன்னங்கால்களை தூக்கி காட்டினான். பயனில்லை. இதற்கிடையில் மசூதிலியிருந்து துவா செய்வதற்கென அழைப்புச் சத்தம் கேட்டது. தெருவில் இருந்து எல்லோரும் வரத் தொடங்கினார்கள். தேவாலயத்தின் பிரார்த்தனையும் மசூதியின் துவா செய்வதற்கென்ற அழைப்பும் அவர்களின் குரைப்புச் சத்தத்தினை கட்டிப் போட்டது. வாய் பிளந்து குரைத்த நாய்கள் அப்படியே நின்று விட்டன. கருப்பிக்கு தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
“கருப்பி… கருப்பி”
சிண்டாட்டியின் கூப்பாட்டுச் சத்தம் கேட்டது. கையில் தடியோடு வந்திருந்தான். முகத்தில் கோபத்தின் அனல் தகித்தது.
“எங்கெல்லாம் தேடுறது? வரமாட்டே?” அவனது குரல் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தது. தேவாலத்தின் பிரார்த்தனையும், மசூதின் துவாவிற்குமான நேரமும் ஒன்றாக சேர்ந்திருந்த நேரத்தில்தான் சிண்டாட்டி தேடிக்கொண்டு வந்திருக்கிறான். பள்ளிவாசலில் இருந்து வரும் சத்தத்தையும் தேவாலயத்தில் இருந்து வரும் இந்த இரண்டு சத்தங்களையும் ஒரு கலவரத்தின் சூழலில் கருப்பி ஒன்றாக கேட்டதில்லை. இன்றைக்கு அப்படியான ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதுவும் தன்னை நோக்கி அதிகாரத்தின் ஏவல் குரல் காதில் பட்டுத் தெறிக்கும் நேரம். கடும் கோபம் வந்தது. கருப்பியின் பாய்ச்சலோடு அனைத்து நாய்களும் ஒன்றாய் சேர்ந்துகொண்டன. இப்பொழுது அவர்களிடம் எந்த வேற்றுமையும் இல்லை. அனைவரும் ஒன்றாய் சேர்ந்து சிண்டாட்டியை கடித்து குதறினார்கள். அவன் இதைபோன்ற ஒரு நிலையை இதுவரை எதிர்பார்த்ததே இல்லை. இரவு நேரம் என்பதால் நாய்கள் கடித்துக் குதறிக்கொண்டிருப்பது யாருடைய கவனத்திற்கும் வரவில்லை. சிண்டாட்டி நாய்காரன் கூக்குரலிட்டுக் கத்தினான். அவனது கூக்குரலின் சத்தம் யாருக்கும் கேட்கவும் இல்லை. நாய் கூட்டத்தின் பெருஞ் சத்தம் அவனைக் கடித்துக் குதறியதோடு நின்றுவிடவில்லை. தங்களின் உழைப்பினைப் பிடுங்கித் தின்ற ஒருவனை தண்டிக்கும் தருணத்தினை நாய்களின் கூட்டம் உணர்ந்துகொண்டிருக்கின்றன. அதனாலேயே கருப்பிக் கூட்டத்தின் திட்டம் நாய்காரனின் கடைசிச் சத்தம் அடக்கும்வரை மிகச் சரியாக நடந்து முடிந்தது.
குன்றுமலையிலிருந்த செவலையும் வெள்ளையும் கருப்பியை தேடிக்கொண்டு வந்திருந்தார்கள். தூய மரியண்ணை சிலையின் பாதத்திற்கு அடியில் கருப்பியோடு சேர்ந்து எல்லோரும் கடித்து புரண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். சிண்டாட்டி மாண்டுக் கிடக்கிறான். கருப்பி தலையை கவ்விக் கொண்டான். தொடைக் கறியாக தின்று வளர்ந்த அவனது சதைப்பிடிப்பான இடத்தை தேடினான். அந்த பகுதியை செவலை பற்றிக்கொண்டிருந்தான். தனக்கு கிடைத்த தலையை வெட்டுப் பற்களால் கடித்தான். இப்படியாக இனம் பார்த்து அடுக்குகளை தீர்மானிக்கும் மூளை அங்குதான் இருக்கிறது. ஒரு வகையில் கருப்பியின் முடிவும் சரியாகத்தான் இருந்தது. அதனை இறுக்கமாக பற்றிக்கொண்டான். மற்றவர்கள் வாய்க்கு அகப்பட்ட உடல் பாகங்களை கடித்துக்கொண்டார்கள். அவனை பொலி கொடுக்க வேண்டும். சிண்டாட்டியின் உடலை கவ்விக்கொண்டபடி எல்லோரும் குன்றுமலைக்கு படியேறினார்கள். மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்கும் மலையின் தீபத் தூணின் பாதத்திற்கு அவனை இழுத்துக்கொண்டே போனார்கள். சிண்டாட்டியை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதில்தான் மீண்டும் கருப்பிக் கூட்டத்திற்குள் சண்டை வெடித்தது. சில நாய்கள் தீபத் தூணிற்கு அடியில்தான் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்பதைப்போல அவனை இழுத்தன. அதில் சிலர் வழக்கத்திலிருந்து மாறுபட்டிருந்தனர். பக்கத்தில்தான் சர்வே கல் இருந்தது. அதை நோக்கி சில நாய்கள் இழுத்தன. இப்படியாக சிண்டாட்டி நாய்காரனின் உடலை வேறு வேறு திசையில் கவ்வி இழுத்ததில், உடல் பல பாகங்களாக துண்டுபட்டன. குரைப்புச் சண்டை ஒரு பக்கம் ஏகமாக நடந்து கொண்டிருந்தது. வாயில் அகப்பட்டு துண்டுபட்ட சதை துண்டங்களை சில நாய்கள் கடித்து மென்றன. வயிற்றுக்கென சதைக்கறித் துண்டு கிடைக்கும்போது நாம் யாரையும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அது தியானத்திற்கான நேரம். கவனிக்கவும் வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் சில நாய்கள் இருந்தன. செவலை ஓடிவந்தான். அவர்களை கடித்துக் குதறினான்.
“சண்டை, சண்டையாக இருக்கும்போது வயிற்றுப் பிழைப்பு அவ்வளவு முக்கியமானதா போச்சா!”
இத்தனைக்கும் மத்தியிலும் சிண்டாட்டிக்கு வேண்டப்பட்டவர்கள் இன்னும்கூட அந்த கூட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிண்டாட்டிக்கு சில ஆதரவு நாய்களும் இருக்கத்தான் செய்தன. அவனது ஆதரவு நாய்கள் கருப்பியின் நண்பர்களையும் கடித்துக் குதறினார்கள். உடல் பாகங்கள் துண்டுப்பட்டுக் கிடக்கும் சிண்டாட்டியின் தலை மட்டும் தீபத் தூணுக்கு அடியில் கிடந்தது. மற்றவை மூலைக்கு ஒன்றாக சிதறிக் கிடந்தன. கருப்பியின் கூட்டத்திற்கு இதற்கு முன்னதாக இப்படியொரு கோபம் வந்ததில்லை. அதிலும் தங்களுக்குள்ளாகவே தெருவினை எல்லையாகவும், உணவை வகைப்படுத்தியும் பிரித்து சண்டையிட வைத்திருப்பதை கருப்பியின் கூட்டாளிகள் நன்றாக தெரிந்துகொண்டார்கள். எல்லோரையும் ஏமாற்றி வளர்ந்திருந்த உடல் சதையை குதறுவது, கருப்பியின் கூட்டாளிகளுக்கு ஜென்ம பகையினை தீர்த்துக்கொள்வதைப்போல இருந்தது. சிண்டாட்டியின் குரல் இனி குரல் ஒலிக்கப் போவதில்லை. குன்றுமலையின் தீபத் தூணுக்கு அடியில் அவனது குதறப்பட்ட உடல் கேட்பாறற்றுக் கிடந்தது. தூணின் உச்சியில் கிடந்த பசு மாமிசத் துண்டினை பற்றியபடி கருப்பி இனத்தின் வெட்டுப் பற்களின் நிறத்தில் வெளிச்சம் பெருந் தீபமாக ஒளிர்ந்தது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

க. மூர்த்தி
ரமீஸ் பிலாலி
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
ம. கேசவன்
Be the first person to add a comment.