கவிதை இலக்கியம்

பயணி கவிதைகள்

பயணி
02 Sep 2026
0

அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்

இன்று அடர்பனியின் கனத்த நிறமாலை
இந்தக் காலையெங்கும்
சீதளப்பாம்பு சுற்றிச் சுற்றி
சுழன்றுகொண்டிருந்தது
கொடிகளிலும் செடிகளிலும்
மரங்களிலும் வேர்களிலும்
மறைந்து திரியும் ஆவிகளாக
அது பொசிந்துகொண்டிருந்தது
என் எலும்புகள்வரை
அந்த அலங்காரத்தின் நடனம்

வழியில் மூவர்
நெருப்பைச் சுற்றிக் குந்தியிருந்தனர்
நாங்கள் இப்போது நால்வரானோம்
எங்களுக்குள் அறிமுகங்களில்லை
உலகை அறிந்துகொள்ளாதவர்களுக்கே
அறிமுகம் தேவைப்படுகிறது
எங்களுக்குப் பொதுவில்
நெருப்பு எரிந்துகொண்டிருந்தது

சுவனத்திலிருந்து
மனிதகுலத்திற்காக
புரோமித்தியெஸ் திருடிவந்த
நெருப்பாக அது எரிந்துகொண்டிருந்தது
நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அதை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்
அதற்குத்தான் எத்துணை கண்கள்
அதற்கு முன்பாக
என் இரு கண்கள்தான்
எத்துணை சிறுமையானவை
நானொரு பார்வையற்றவன்
என்பதாகவே இப்போது உணர்கிறேன்
இன்னும் சிறிதுநேரத்தில்
இந்தத் தீச்சுடரும் அணைந்துவிடலாம்
என்றபோதிலும்,
கனன்றுகொண்டிருக்கும் அந்த மூன்றாம் கண் மட்டும்
அந்தரத்தில்
எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்

அதற்குக் காதலென்றும் பெயர்

தொடும்போது
அது திறந்துகொள்கிறது
தீண்டாதபோது
மேலும் தீவிரமடைகிறது
அருகிருக்கும்போது
அது மலர்ந்துகொண்டே இருக்கிறது
சேய்மையில்
நினைவை முகர்ந்து முகர்ந்து போதையாகிறது
பேசும்போது
பேசிப் பேசி சிலிர்ப்படைகிறது
மெளனத்தைப் போர்த்தும்போது
சொல்லாத சொல்லில் 
உன்மத்தமடைகிறது
அனைத்தையும்
திறந்துவைப்பதே அதன் பணி
அதன் பிறகு
திரும்புதலோ
விடைபெறுதலோ இல்லை
இல்லவே இல்லை

 

மூட்டைகளின் ஓலம்

நான் வழக்கமாகச் செல்லும் தெருவில்
மூட்டைகள் சிதறிக் கிடந்தன
அவை என் வீதியில் உலா வரும்
பைத்தியக்காரிக்குச் சொந்தமானது
அந்த மூட்டைகளையும் அவளையும்
பிரிக்க இயலாதென்றே எண்ணியிருந்தேன்
ஆனால் இன்றோ பிரிந்து கிடக்கிறார்கள்
அந்த மூட்டைகளுக்குள் என்னதான் இருக்கும்?
என்ன வேண்டுமானாலும்…
பழைய புடைவைகள் 
பழைய ரவிக்கைகள் மற்றும் பாவாடைகள்
சமீபத்தில் கிட்டிய சோற்றுப்பொதிகள்
பழைய பேனாக்கள்
பழைய காலி பாட்டில்கள் மற்றும் புட்டிகள்
ஞெகிழிகள்
பலநாளாய் வாசம் செய்யும் துர்நாற்றமெடுத்த கனிகள்
அனைத்திற்கும் மேலாக
அவளேகூட அதில் இருக்கலாம்
யாரோ மூட்டைகளைப் பிரிக்கத் தொடங்குகிறார்கள் – 
அது நான்தான்
மூட்டைகளைப் பிரிக்கிறார்கள் அல்லது
பிரிக்கிறேன்
அவை மூடியிருந்ததைப் போலவே திறந்திருந்தன|
அவற்றில் எதுவுமில்லை
அவற்றில் ஒன்றுமே இல்லை
ஆனால் ஒன்றுமில்லைக்குள்தான்
எல்லாம் இருக்கிறது போலும்
அங்கே அனைத்தையும் திறந்துகொண்டிருந்தவன் – 
அவன் நான்தானோ
ஒரு பைத்தியத்தைப் போலவே 
ஓலமெடுத்துக் கத்தத் தொடங்குகிறான்
சுருண்டிருந்த தெருக்கள்
நீண்டு, வளர்ந்தபடிச் சென்றுகொண்டேயிருந்தன

கொக்குகள்
ஏரிகள்
கண்ணாடிகள்

மூன்று கொக்குகள் அடையாறு ஏரியில்
தியானித்தபடி
யாருக்கோ
எதற்கோ
காத்திருக்கின்றன
உறக்கம்
வெறுமை
நிச்சலனம்
சிறிதுநேரம் செல்கிறது
உறக்கம்
வெறுமை
நிச்சலனம்
மேலும் பல மணிநேரம் செல்கிறது
உறக்கம்
வெறுமை
நிச்சலனம்
இன்னும் பல மணிநேரம் கடக்கும்
இருப்பது போலிருக்கும் கொக்குகள்
இல்லாமலாகும்
பிறகு காணாமல் போகும்
அப்போது இந்த ஏரியும் கண்ணாடியாகும்
நிச்சலனம்
வெறுமை
உறக்கம்

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பயணி

கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் வெளியீட்டாளர். தருமபுரியில் பிறந்த இவர் இப்போது வசிப்பது சென்னையில். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். ’சிறுபத்திரிகை’ எனும் கலை-இலக்கிய சிற்றிதழை அச்சிதழாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். வேறு எதன் பொருட்டும் அல்லாமல், கவிதை கவிதையின் பொருட்டே எழுதப்படுகிறது என்னும் கோட்பாட்டைக் கொண்டவர். இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:ரகசிய மொழி (2006) மீள மேலும் மூன்று வழிகள் (2013) காமத்தில் நிலவுதல் (2023) உப்புஸ்தூபியில் மிதக்கும் கடல் (2024) payani1975@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

கஸல்பதிப்புத் துறைஒளிரும் சொற்கள்கவிதையியல்வேறொரு மழைமண்வாசனை கதைகள்சீர்மை இதழ்திருச்சி வாழ்க்கைஒரு துளி கருணைகு இலக்கியன்இலக்கிய விமர்சனம்வாசகர் கூட்டம்இக்பால்அதிகாரம்ஏ ஜி கௌதம்அலர் பதிப்பகம்ரோலாண்ட் பார்த்சாட்சிநிலமெங்கும் பூத்த முகம்நவீனத்துவம்நறுங்கதைகாஃப்காவின் காதுகள்தலித் இலக்கியம்ராஜ் கௌதமன்நகர மயமாக்கம்தமிழக அரசியல்அநித்யம்கருத்தரங்கங்கள்அங்கதம்தலித் வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!