கட்டுரை அரசியல்

அழகென்று சொல்லுக்கு...

ர.முகமது இல்யாஸ்
02 Sep 2026
0

இந்துக் கடவுள்களுள் முருகனுக்குத் தமிழ்ச் சமூகத்தில் முதன்மையான இடம் உண்டு. முருகனின் படம், வேல், மயில், சேவல் போன்றவற்றை அன்றாடம் பொது இடங்களிலும், தனிமனிதர்கள் பொது இடங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் இடங்களான வாகனங்கள், செல்ஃபோன்களின் பின்பக்கம் முதலானவற்றில் அதிகளவில் காண முடியும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு, முருகன் என்றால் நம் நினைவுக்கு வரும் படங்கள் பெரும்பாலும் நாம் ஏதேனும் நாள்காட்டியிலோ, கடைகளில் முதலாளிகளுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும் படங்களுள் ஒன்றாகவோ பார்த்திருக்க முடியும். அவற்றில் இருக்கும் முருகன் சிறுவயதுக் குழந்தையாகவோ, சிறுவனாகவோ இருப்பார். எந்த அச்சமும் இன்றி, எவராலும் அணுகக்கூடிய ஒரு குழந்தையின் முகம் கொண்ட உருவம் முருகனுடையது. 

சமகாலத்தில் தமிழ் சினிமாவிலும், தமிழ் இணையத்திலும் புழங்கத் தொடங்கியிருக்கும் முருகனின் உருவத்திற்கும், மேலே குறிப்பிட்டுள்ள நமக்கு நன்கு பழக்கமான முருகனின் உருவத்திற்கும் அதிகளவில் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. சமகாலத்தின் முருகன் உடல் வலிமை கொண்டவனாக, தசைகள் முறுக்கேறியவனாக, சிவந்த ரத்தத்துடன் தொடர்புகொண்டவனாகச் சித்தரிக்கப்படும் வழக்கம் வெகுஜனப் படைப்புகளில் தென்படத் தொடங்கியுள்ளன. சூரனை வதம் செய்ய பயன்பட்டது என்றாலும், முருகனின் வேல் பெரும்பாலும் பாதுகாப்பு என்பதன் பொருளில் இருந்து நகர்ந்து வன்முறையின் சின்னமாக மாறுவதும், ஒரு கடவுளின் உருவம் ஏறத்தாழ தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்களைப் பிரதிபலிக்கும் நிலைக்கு நகர்ந்து வருவதும் சிக்கலான எதிர்காலத்திற்கான அறிகுறி. 

 

முருகன் தமிழ்க் கடவுளா, வடவர்களின் கடவுளா, ஆரியக் கடவுளா, திராவிடக் கடவுளா, கந்தனா, கார்த்திகேயனா முதலான கேள்விகளுக்கு விடை தேடுவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்று. அது வழிபாடு, வரலாறு முதலான ஆய்வாளர்களின் பணி. இந்தக் கட்டுரையின் நோக்கம், சமகால முருகனின் உருவம் ஏன் தசைகள் முறுக்கேறி, ஆயுதங்கள் தரித்து, போருக்கு ஆயத்தமாகும் தன்மையில், வன்முறையோடு இணைக்கப்பட்டு நமது கலைப் படைப்புகளில் இடம்பெறுகின்றன என்பதையும், அது நீண்ட கால நோக்கில் எத்தகைய மாறுதல்களை உருவாக்கக்கூடியது என்பதையும் பற்றிச் சிந்திப்பது. சமகால நவீன டிஜிட்டல் யுகத்தின் முருகனும், அதன் சித்தரிப்பும் மட்டுமே இந்தக் கட்டுரையின் எல்லை. 

இந்துக் கடவுள்களை அதீத ஆண்மை கொண்டவர்களாக, போருக்கு ஆயத்தமாகும் விதமாக உருவாக்கப்படும் வழக்கம் இன்று தோன்றியது அன்று. 1980களில் வட இந்தியாவில் ராமரின் உருவத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ராமரை வழிபடும் பல கோடி மக்களின் எண்ணங்களில் தாக்கம் செலுத்தின. பல தலைமுறைகளாக, சாந்தமான முகம் கொண்டவராக, கைகளை எழுப்பி மக்களுக்கு ஆசிர்வாதம் செய்த கடவுளாக இருந்த ராமர், இந்துத் தேசியவாதிகளால் ஆயுதம் தரித்தவராக, போருக்குத் தயாரானவராக, தசைகள் முறுக்கேற்றப்பட்டுச் சித்தரிக்கப்படத் தொடங்கினார்.

ராமரின் தோற்றம் வெகுஜனக் கற்பனையில் இருந்து மாற்றம் பெற்றது குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதிய பேராசிரியர் அனுராதா கபூர் இத்தகைய மாற்றங்கள் பக்தி என்பதன் பொருளை மாற்றியமைத்ததாகவும், அதன் விளைவாகத் தொடர்ந்து வெகுஜன இந்து மதத்தையும் மாற்றியதையும் குறிப்பிடுகிறார். அதாவது ராமரின் புதிய தோற்றம் அன்றைய அரசியல் சூழலைப் பிரதிபலிக்கவில்லை என வாதிடும் அவர், அத்தகைய சூழலை உருவாக்கியதிலேயே புதிய தோற்றத்திற்குப் பங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார். ஆசிர்வாதம் செய்யும் கடவுளுக்குப் பின்னால் யாரும் அணிதிரளப் போவதில்லை. மாறாக, ஆயுதம் தாங்கி, போருக்கு அழைக்கும் கடவுளின் பின்னால் மக்களைத் திரட்ட முடியும். ஏறத்தாழ இதே மாற்றங்கள் டிஜிட்டல் சூழலில் முருகனுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தென்னிந்தியா முழுவதும் முருகன் குறித்து ஆய்வு செய்த ஃப்ரெட் க்ளோதி என்னும் ஆய்வாளர் முருகனின் கதாபாத்திரப் படைப்பு பல தளங்களில் செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். மலைக்கடவுளாக, போர் வீரனாக, தெய்வீகம் கொண்ட குழந்தையாக, அரசனாக, ஆண்டியாக.. பல முகங்களை, பல்வேறு சமூகக் குழுக்களால், பல்வேறு காலகட்டங்களில் கொண்டிருக்கும் வழிபாட்டுச் சின்னமாக முருகன் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது அவரின் ஆய்வு. இதனால் ஒற்றை அடையாளமாக முருகன் என்பதை வரையறுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. 

பல முகங்கள் கொண்ட முருகனுக்கு, ஒருபக்கம் சாந்தம் இருப்பதைப் போல, மறுபக்கம் ரௌத்திரம் இருப்பதில் தவறேதும் இல்லை. எனினும், அத்தகைய மறுபக்கம் எந்த விதப் பின்னணியில் பயன்படுத்தப்படுகிறது என்பது ஆராயப்பட வேண்டியதாகும். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முருகன் என்பவர் யார் என்பது நமது கேள்வி அன்று; இன்றைய சூழலில் முருகன் என்பவர் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார் என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. 

சமீபத்தில் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘தமிழ் முருகன்’ தமிழ் அடையாளத்தை முன்வைக்கும் அரசியலைப் பேசப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதன் சித்தரிப்புகள் போரையும், யானை மீது ஆயுதம் தரித்து, நன்கு செதுக்கப்பட்ட சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்ட முருகனைச் சித்தரிக்கிறது. சர்வதேச அளவில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உருவாக்கிய தாக்கத்தால், இந்திய சினிமாவில் வரலாறு குறித்த ஆண்மைமிக்க திரைப்படங்களின் வருகை அதிகரித்திருக்கிறது. ‘பாகுபலி’ தொடங்கி, பாலிவுட்டில் உருவாக்கப்படும் ஒவ்வொரு பிரீயட் திரைப்படங்களும் அத்தகைய நாயகர்களைத் தமது முன்னோர்களாக கற்பனை செய்து பார்வையாளர்களைக் கிளர்ச்சியில் தள்ளி வரும் நிலையில், ‘தமிழ் முருகன்’ எத்தகைய அரசியலைப் பேசினாலும், அதன் மேலோட்டமான பணி என்பது முருகனின் சமகால உருவத்தை கருத்துருவாக்கம் செய்வதாக இருக்கிறது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு, தனுஷ் நடித்த ‘சீடன்’ என்ற திரைப்படத்தில் அவரே முருகன் வேடத்தில் சமையல்காரராகத் தோன்றியிருப்பார். ஏழைப் பெண்ணுக்கு உதவுபவராக, சமையல் செய்யும் ஆணாக இருக்கும் முருகன் இன்று அதே தனுஷ் நடிப்பில் தசைகள் முறுக்கேறி போருக்கு ஆயத்தமாவதாகச் சித்தரிக்கப்படுவது பண்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்களின் அறிகுறி. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘சேயோன்’ முருகனின் வேல், மயில் முதலானவற்றை மாஸ் ஹீரோவுக்கான இலக்கணத்தில் பொருத்துவதுடன், ஊர்ச்சண்டைகளில் ஈடுபடும் சண்டியர்களோடு இணைக்கும் ஒன்றாக இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பில் ரத்தம் தோய்ந்த முருகனின் வேல் ரஜினியின் பிரேஸ்லெட்டாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது. 

லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் கந்த சஷ்டி கவசப் பாடல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆக்ஷன் திரைப்படங்களின் நாயகனின் சண்டைக் காட்சிகளுக்கான பின்னணி இசைக் கோர்வையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ பெரியார் பின்னணியில் வளர்ந்த கதாநாயகன் முருகனின் பின்னணியில் ஆக்ஷன் அவதாரம் எடுப்பதாக மாறும் காட்சி இடம்பெறுகிறது. 

2000களில் வெளியான ‘பில்லா’ திரைப்படத்தின் ‘சேவல் கொடி’ பாடலும், 2010களில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் ‘ஆறுபடை வேல்முருகா’ பாடலும், இவற்றைப் போலவே அந்தக் காலகட்டத்தின் பிற முருகன் பாடல்களும், சித்தரிப்புகளும் இன்றைய சித்தரிப்புகளுக்கு நேரெதிர் தன்மை கொண்டவை. அப்படியானால், மாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முருகனின் தோற்றம் எத்தகைய பொருள்களை வெகுஜனங்களிடையே மறைமுகமாக உருவாக்கும் என்ற கேள்வி நம்முன் இருக்கிறது. 

சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து தேசியவாதிகள் எழுப்பியிருக்கும் சர்ச்சை, 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் நடத்தப்பட்ட வேல் யாத்திரை முதலானவை ’முருகன்’ என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் தமிழ்ப் பேசும் இந்துக்களை ஒன்றிணைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள். கடந்த 2024இல் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்பட்ட ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ சார்பாக வெளியிடப்பட்ட அழைப்பிதழிலும் இதே போன்ற தசை முறுக்கேறிய முருகன் தனது வேலைத் தூக்கியவாறு இருப்பதைக் காண முடியும். அந்த விழாவில் பேசிய அன்றைய துணை முதலமைச்சரும், திமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ‘முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டுமன்று; தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் இருக்கிறது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். ’நாம் தமிழர்’ கட்சியின் ‘முப்பாட்டன் முருகன்’ ஏறத்தாழ இதே போன்ற ஒரு சமகால நாயகனை ஒத்த சித்தரிப்பைக் கொண்டது.  தற்போதைய தமிழக முதல்வர் விஜய் தனது பதவியேற்புக்கு முன்பே திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபட்டதும், வேலுடன் காட்சியளித்ததும் இணையத்தில் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைச் சமகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன என்றாலும், அவற்றை இணைக்கும் கருவியாக பண்பாடு இயங்குகின்றது. திரையில் உருவாக்கப்படும் நாயக பிம்பம் பண்பாட்டுத் தளத்தில் அடையும் வெற்றியே, அரசியல் தளத்திற்கும் கடத்தப்படுகிறது. விஜய் தன்னை வெகுமக்களிடையே குடும்பத்தில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொண்டார்; அந்தப் பிம்பத்தைத் தலைவன் என்னும் மற்றொரு பிம்பத்தோடு பொருத்திக் கொண்டார். பண்பாட்டுத் தளத்தில் வெற்றியடைந்த இந்தப் பிம்பத்தின் பின்னணியில் வெகுமக்கள் குழுக்களாகத் திரண்டார்கள். தம்மை ‘விஜய் ரசிகர்’ என்னும் நவீன சமூகங்களாகக் கருதிக் கொண்டார்கள். அது அரசியல் தளத்திற்குள் நகர்ந்து, தவெக தொண்டர், விசிலுக்கான வாக்காளர் என்பதாக மாற்றம் அடைந்தது. 

இப்படியொரு சமூகக் கட்டமைப்பில், முருகன் போன்ற இந்துக் கடவுள்கள் திரை நாயகர்களைப் போன்ற உடல்களைப் பெறுவதும், போர் முரசு கொட்டி வன்முறையைக் கொண்டாடுவதும் ஆபத்தான போக்கு. திரை நாயகர்கள் வலுவிழக்கும் சூழலில், முருகனின் சமகால அவதாரம் திரை நாயகர்களால் ஒருங்கிணைக்கப்படும் நவீன சமூகங்களை எளிதில் கவர முடியும். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் திரை நடிகர்களால் மாநில உணர்வை இந்திய ஒன்றியத்திற்கு எதிராகக் கட்டமைத்து அரசியல் கட்சிகளாக மாற்றி வெல்ல முடிந்தது. எனினும், அவற்றிற்கு இடையிலான வேறுபாடு, தமிழ்நாட்டில் திராவிடக் கருத்தியல் அதன் குறைந்தபட்ச வடிவத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இடம்பெற்றன; ஆந்திராவில் என்டிஆர் கடவுள் கதாபாத்திரங்களாகவே தேடித் தேடி நடித்தார். ஆந்திர மக்கள் அவரைக் கடவுளாகவே கருதினர். எம்.ஜி.ஆர் இங்கு வாத்தியாராக நீடித்தார். 

இன்றைய முருகனின் பலத்தால் வெல்லும் திரை நாயகர்கள் மறைமுகமாக தமிழ் இந்து என்னும் அடையாளத்தைக் கட்டமைக்கின்றனர். இந்தக் கட்டமைப்பை இந்து தேசியவாதிகள் சுரண்டுவதற்கான சூழல்களை உருவாக்குகின்றனர். தொடர்ந்து இவை தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. 

மென்மையான முகம் கொண்ட, குழந்தை உருவத்தில் இருக்கும் கடவுளின் தோற்றத்தைத் தமிழ்நாட்டில் எந்தச் சமூகத்தவரும் தன்னுடைய குழந்தையாகச் சொந்தம் கொண்டாடிக் கொள்ள முடியும். எனினும், போருக்குத் தயாராக ஆயுதம் தூக்கியபடி நிற்கும் கடவுளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அதன் இயல்பிலேயே அந்தக் கடவுளுக்கு ஒரு எதிரி கட்டமைக்கப்பட வேண்டும். அப்படியான எதிரிகள், அத்தகைய முருகனை வணங்காமல், தங்கள் ‘தமிழ்’ அடையாளத்தை நிரூபிக்க இயலாத பிற சமயத்தவர் வெகு விரைவில் முறுக்கேறிய ஆண்மை பொருந்திய கடவுளால் மற்றமையாக்கப்படும் சாத்தியங்கள் உருவாக்கப்படும் மறைமுக நடவடிக்கைகள் நம் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. 

சாந்தமான தோற்றத்தில் இருந்து முறுக்கேறிய ஆண்மை பொருந்திய உருவத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட கடவுளின் படம் உருவாக்கிய விளைவுகள் நம் சமகால வரலாற்றில் வெளிச்சமாகியிருக்கின்றன. முருகன் வடநாட்டவரா, தமிழ்நாட்டவரா, அவரை முதலில் வழிபட்டவர் யார், அவர் கடவுளா, மூதாதையரா முதலான கேள்விகளைத் தாண்டி, இன்றைய முருகன் வரையறுக்கும் எல்லைக்குள் நிற்பவர்கள் யார், வெளியேற்றப்படுபவர்கள் யார் என்பதில் தொடங்க வேண்டும் முன்னெச்சரிக்கைக்கான கேள்விகள்.  

இந்துத் தேசியம் முழுவதுமாக அமைய 'அனைத்து விதமான அரசியலையும் இந்துமயமாக்க வேண்டும்; இந்து மதத்தை ராணுவமயமாக்க வேண்டும்' என்றார் சாவர்க்கர். 

குழந்தை உருவக் கடவுளின் வழியாக எந்தச் சமூகத்தையும் ராணுவமயப்படுத்த முடியாது. 

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ர.முகமது இல்யாஸ்

1995ல் பிறந்தவர். இந்து தேசியம் இந்திய சினிமா, ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0 ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமிழ் சினிமா - சமகால திரை நட்சத்திரங்கள் - நாயக பிம்பம் - வெகுஜனக் கலாச்சாரம் குறித்த முனைவர் பட்டத்திற்கான இறுதிகட்ட ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார். வெகுஜன ஊடகங்களில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. Read Between Lines என்ற ஊடகக் கண்காணிப்பு மற்றும் ஊடகக் கல்வியறிவுக்கான அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். திரைப்படம், பண்பாடு, ஊடகவியல், ஊடக கல்வியறிவு, அரசியல் தொடர்பியல், நவதாராளமயம், அடையாள உருவாக்கம் முதலானவை குறித்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அங்கதம்காஃப்காவின் காதுகள்ஆய்வுகிருஷ்ணமூர்த்திஆசிரியர் உரைநான் ஏன் பதிப்பிக்கிறேன்டோனி பிரஸ்லர்சிறுகதைபிப்ரவரி தினம்திருச்சி வாழ்க்கைநாஞ்சில்நாடன்பிம்ப அரசியல்தமிழக அரசியல்அசகவதாளம்சுஜித் லெனின்நுண்கதைழ என்ற பாதையில் நடப்பவன்கவ்வாலிகு இலக்கியன்நவீனத்துவம்எஸ் அற்புதராஜ்சூஃபி இசைம.கேசவன்குறுங்கதைநேர்காணல்இணைய இதழ்சந்துரு மாயவன்புதிய வருகைகோ கமலக்கண்ணன் கவிதைகள்பிரான்ஸ் காஃப்கா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!