சிறுகதை இலக்கியம்

ஒரு குழந்தையின் இரகசியம்

ஃபௌத் அல்-திக்கிரிலி தி. மரிய தனராஜ்
02 Sep 2026
0

அன்று விடுமுறை. மத்தியானத்திற்கும் முந்தைய பொழுது. பாக்தாத்-இன் நீல வானத்தை வெயில் நிறைத்திருந்தது. எங்கும் பரவியிருந்த சூரிய ஒளி எங்களது தோட்டத்தின் மரங்களினூடாக அதன் கதிர்களைச் செலுத்தியபோது அது சிகப்பு, மஞ்சள், பச்சை போன்ற பல வண்ணங்களைப் பிரதிபலித்தது. நான் வீட்டின் நடு அறையில் அமர்ந்து இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து அறையிலிருந்து எனது மகன் ஷமி என்னை அழைப்பது கேட்டது: "அப்பா, கேட்கிறதா? நான் சொல்வது கேட்கிறதா? என்னிடம் ஒரு அட்டகாசமான யோசனை இருக்கிறது."

அப்போது வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். அதற்கும் கொஞ்சநேரத்திற்கு முன்புதான் என் மனைவி ஏதோ வாங்கவேண்டும் என்று கடைக்குச் சென்றிருந்தாள். அவள் கிளம்பியபோது பக்கத்து அறையிலிருந்த ஷமி வீட்டுப்பாடம் செய்வதுபோல நடித்துக்கொண்டிருந்ததால் அவள் அவனை உடன் கூட்டிச் செல்லவில்லை. "ம்ம்...கேட்கிறது. ஏன் கத்திக்கொண்டே இருக்கிறாய்? இங்கே வா... இங்கே வந்து என்னிடம் சொல்லு" என்று அசதி தொனிக்கும் குரலில் பதிலளித்தேன்.

சொல்லி முடிப்பதற்குள்ளாக வந்துவிட்டான். கையில் பேனாவும் குறிப்பேடுமாக முகத்தில் புன்னகை தவழ நுழைவாயிலின் மத்தியப்பகுதியில் வந்து அவன் நின்ற அந்தக் காட்சி புகைப்படச் சட்டகம் போல இருந்தது. "அப்பா, சத்தியமாகச் சொல்கிறேன்... நான் சொல்லப்போவது ஓர் அட்டகாசமான யோசனை" என்று சொல்லிக்கொண்டே என்னை நெருங்கி வந்தான்.

நீளமான சோபாவில் அமர்ந்திருந்த நான் என்னைச் சூழ்ந்திருந்த உலகின் அமைதியிலும் வசந்தகாலச் சூரியனும் தோட்டத்து மரங்களின் வண்ணங்களும் சேர்ந்து அருளிய ஆனந்தத்திலும் மூழ்கிப்போயிருந்தேன். 

"அப்பா, நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் இருவருமாக இணைந்து - நீங்களும் நானும் சேர்ந்து - கதை ஒன்றை எழுதுவோமா? நல்ல யோசனைதானே? என்ன சொல்கிறீர்கள்?" என்று ஷமி கேட்டான். 

"நீ சொல்வதில் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லைதான்."

"நிஜமாகத்தானே....அப்பா, உண்மையைச் சொல்லுங்கள்."

"நச்சரிக்காதே ஷமி. நான்தான் சம்மதம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே!"

"அப்படியென்றால் மிகவும் நல்லது. அப்பா.. இப்போது கவனமாகக் கேளுங்கள்" என்று சொன்னவன் சோபாவின் நுனிப்பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டான். தனது குறிப்பேட்டைத் திறந்து வைத்துக்கொண்டு கையில் பென்சிலோடு தயார்நிலையில் இருந்தான். "நான் ஆரம்பிக்கவா? அல்லது உங்களிடம் ஏதும் யோசனை இருக்கிறதா?" என்று கேட்டான். ஷமிக்குப் பன்னிரெண்டு வயதாகிறது. புத்திசாலி. அடுத்தவர்மீது அக்கறை கொண்டவன். இந்தப் பண்புகள் எதிர்காலத்தில் இவனுக்கு எந்தெந்த மாதிரியான கஷ்டங்களைக் கொண்டுவரக்கூடுமோ என்ற கவலைதான் எனக்கிருந்தது.

"இணைந்து கதை எழுதவேண்டும் என்பது உன்னுடைய யோசனைதானே! நீயே தொடங்கு."

"கதைக்கென ஒரு யோசனை இருக்கிறதுதான். நல்ல யோசனைதான். புதுமையான யோசனைதான் என்றும் எனக்கே தெரிகிறது. ஆனால் அதை எப்படிக் கதையாக எழுதுவது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. எப்படிக் கதையாக எழுதலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்றான்.

எங்களது குடும்பத்தை - நான், எனது மனைவி, ஷமி - ஒரு மகிழ்ச்சியற்ற குடும்பம் என்று சொல்லமுடியாது. பாக்தாத் நகரில் எளிய சமூக அந்தஸ்து கொண்ட ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படக்கூடிய அதே வழக்கமான அன்றாட சந்தோசம் எங்களது குடும்பத்திலும் இருந்தது.

"கதைக்கான உனது யோசனை என்னவென்றே எனக்குத் தெரியாதபோது அதை எப்படிக் கதையாக எழுதுவது என்று 'எப்படி' என்னால் கூற இயலும்? என்னதான் செய்யலாம் என்று யோசிக்கிறாய்? அதையாவது சொல்லு...." 

"சொல்லாமல் விட்டது எனது தப்புதான் அப்பா. மன்னித்துக் கொள்ளுங்கள். எனது யோசனை என்னவென்றால் எனது பள்ளிக்கூட நண்பன் அஹமது - அதுதான் நமது பக்கத்துவீட்டுக்காரங்களோட பையன் - பற்றி எழுதுவதுதான்."

"அஹமதம்மா பையன் பற்றியா சொல்கிறாய்?" என்று கேட்டேன். அஹமது மற்றும் அஹமதுவின் தாய் பற்றிப் பேசியதுமே என்னை மீறி ஒரு பதட்டம் என்னைத் தொற்றிக்கொண்டது.

"ஆமாம் அப்பா....அவனைப் பற்றித்தான். வேறு யார் என்று நினைத்தீர்கள்?"

 

முப்பத்தைந்து வயதுக் கைம்பெண் அவள். எங்களது வீட்டிற்கு அடுத்த வீட்டில்தான் அவள் குடியிருந்தாள். சில ஆண்டுகளுக்கு முன்பே அவளது கணவன் நாட்டிற்காகப் போரில் தனது உயிரைத் தியாகம் செய்திருந்தான். பஹிஜா என்பது அவளது பெயராகும். அவளது பையன்தான் அஹமது. எனது மகனின் பள்ளித்தோழன். 

 

"அப்பா, இதில் ரொம்பக் குழப்பமெல்லாம் கிடையாது. அஹமது என்னிடம் ஏற்கனவே சொன்னதுதான். அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பிடிக்கவில்லையாம். உண்மையைச் சொல்வதென்றால், அவன் அவனது அம்மாவை வெறுக்கிறானாம்."

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் பேசுவதை இடைமறித்து அவனிடம், "என்னது, அவனது அம்மாவை அவன் வெறுக்கிறானா?" என்று கேட்டேன்.

"இல்லை....இல்லை...அப்படிக் கிடையாது. அது என்னவென்றால்.....அதை நான் சரியாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன். அவன் என்ன சொன்னானென்றால் அவனது அம்மாவை முன்புபோல இப்போது அவனால் அன்பு செய்ய முடியவில்லையாம்."

 

அவளது கணவனின் மரணத்திற்கு முன்பு அவள் பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பாள். அந்தக் கம்பீரத்தில் ஒருவிதமான இறுக்கமும் செயற்கைத்தனமும் இருப்பதுண்டு. தனது உடலின் வனப்பை இன்னும் அதிகமாக மெருகூட்டிக் காட்டக்கூடிய உடைகளையே கவனமாக தேர்ந்தெடுத்து அவள் அணிந்து வருவதுண்டு. சில அன்றாட நிகழ்வுகளில் இவர்களது இரு குடும்பங்களும் சந்தித்துக்கொண்டபோது அவனை நோக்கி அவள் வீசிய பார்வைக்கணங்கள் பூடகமான வேறு அர்த்தத்தைக் குறிப்பனவாக இருந்தன. அவற்றை அவனால் முழுதாக விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

 

"ஷமி, நீ பேசுவது முட்டாள்தனமாக இருக்கிறது. அவனுக்கு அவனது அம்மாவைப் பிடிக்கவில்லை என்கிறாய். அதேபோல அவனது அம்மாவை அவன் வெறுக்கவும் இல்லை என்கிறாய். ஒன்று மாற்றி ஒன்று பேசுகிறாயே!"

"அவசரப்படாதீர்கள் அப்பா. எனக்கும் சரியாக விளங்கவில்லைதான். எனக்கு வேண்டியதெல்லாம் நீங்களும் நானுமாக இணைந்து இதைக் கதையாக எழுதுவதுதான்..ஓகேயா?"

"அதற்குச் சரியென்றுதானே சொல்லியிருந்தேன். எழுதலாம்தான். ஆனால் நாம் எழுதுவது வாசிப்பவர்களுக்கும் புரியவேண்டும் இல்லையா?"

"வாசிப்பவர்களா? நாம் எழுதுவதை யாராவது வாசிக்கவேண்டுமா என்ன?"

"வாசிக்கணும் இல்லையா? ஒருவரும் வாசிக்கப் போவதில்லை என்றால் ஏன் இவ்வளவு சிரமமெடுத்து எழுதவேண்டும்?"

"அப்பா...நீங்கள் சொல்வது சரிதான்.."

 

அவளது கணவன் நாட்டிற்காக போரில் உயிரைத் மாய்த்திருந்தான். அப்போது நல்லதொரு அண்டைவீட்டுக்காரராக என்னென்ன உதவிகள் செய்யமுடியுமோ, அவற்றையெல்லாம் அவன் அவளுக்குச் செய்துகொடுத்திருந்தான். அப்படிச் செய்ததை அவனது மனைவியும் ஊக்கப்படுத்தியிருந்தாள். ஆனால் முழு மனநிறைவோடு அந்த உதவிகளைச் செய்ததாக அவனுக்குத் தோன்றவில்லை. நாள்கள் செல்லச் செல்ல அவளது அணுகுமுறையிலும் அவள் அவனைப் பார்த்தவிதத்திலும் மாற்றம் தெரிந்தது. அவர்கள் இருவர் மட்டுமே இருந்த நேரங்களில் பூடகமாக இல்லாமல் வெளிப்படையாகவே சபல மொழியில் பேசலானாள். அவள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும் அவளது உடலின் வனப்பு ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டி அதற்காகவே படைக்கப்பட்டிருந்தது போலிருந்தது.

 

"சரி...அப்படியென்றால் இப்படிச் சொல்லிப் பார்ப்போம். அதாவது அஹமது இருந்த சூழலில் அவனால் அவனது அம்மாமீது போதுமான அளவு அன்பைப் பொழிய இயலாமல் போனது."

"அருமையாகச் சொன்னீர்கள். நான் ஏற்கனவே சொன்னதுபோல நீங்களும் நானுமாக இணைந்து ஒரு நல்ல கதையை எழுதத்தான் போகிறோம்."

"அவசரப்படாதே! பிறகு என்ன நடந்தது. கதைக்கு ஒரு நிகழ்வு தேவை."

"சரிதான்...இப்போது நம்மிடம் இருக்கும் யோசனை இது மட்டுமே. அதாவது, அஹமது ஒரு சூழலில் இருக்கிறான். அந்தச் சூழலில் இருக்கும் அவனால் - நீங்கள் சொன்னீர்களே, அதேபோல - தேவையான அன்பைப் பொழிய இயலாமல் போனது. சரிதானே?"

"அவனால் அவனது அம்மாமீது போதுமான அளவு அன்பைப் பொழிய இயலாமல் போனது."

"ஆம். அதுதான் சரி. 'அவனால் அவனது அம்மாமீது போதுமான அளவு அன்பைப் பொழிய இயலாமல் போனது.' அதன்பிறகு அவனுக்கு அவனது அம்மாவின் சொல்பேச்சைக் கேட்கமுடியவில்லையாம். அவனது அம்மாமீது அவனுக்கு அக்கறையும் இல்லாமல் போய்விட்டதாம். சாப்பிடுவதில்லையாம்; குடிப்பதில்லையாம்; பற்களைக்கூட விலக்குவதில்லையாம். அதிலும் குறிப்பாக அவனது அம்மா அவனைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் செய்வதை உடனே நிறுத்திவிடுவானாம். இது சரிதானா?"

"ம்ம்...மேலே சொல்லு."

"சொல்கிறேன்...சொல்கிறேன். அப்பா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? அஹமது ஒரு சிறு குழந்தையைப்போல இருக்கிறான்."

"அவன் சிறு குழந்தைதானே! நீ என்னதான் சொல்ல வருகிறாய்?"

"எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை...சில நாள்களுக்கு முன்பு அழுதுகொண்டே வந்தவன் என்னிடம் என்ன சொன்னான் தெரியுமா? 'ஷமி, எனக்கு எனது அப்பா வேண்டும்....எனக்கு எனது அப்பா வேண்டும்.' ஏதோ என்னால் அவனது அப்பாவைத் திருப்பிக் கொண்டுவந்து விடமுடியும் என்று என்னிடம் இவ்வாறு கேட்டான்." 

 

அதன்பிறகும் அவ்வப்போது அவளுக்கு அவளது வீட்டுவேலைகளைச் செய்வதில் அவன் தனக்கு ஏற்பட்ட எரிச்சலையும் மீறி அவளுக்கு உதவி செய்தான். அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என வீட்டிற்கு வரும் அந்த நேரத்தில்தான் அவள் அவனை உதவிசெய்ய அழைப்பதுண்டு. அவன் வந்ததுமே மதில் சுவரின் அந்தப் பக்கத்திலிருந்து ஷமியின் அம்மாவை அழைத்து அவனை உதவிசெய்ய வரும்படி சொல்லுவாள். அப்படி அவள் கூப்பிடும் நேரங்களில் நன்கு உடையணிந்து தன்னை நேர்த்தியாக அலங்கரித்திருப்பாள். இவன் பாதிமனதாக அவள் வீட்டிற்குச் சென்று எரிவாயு சீசாவை நிரப்ப உதவி செய்யும்போது அவனுக்கு உதவி செய்யும் சாக்கில் அவள் வெட்கத்தைவிட்டுச் சிரித்துக்கொண்டே அவனை உரசிக்கொண்டு இருப்பாள்.

 

"ஷமி, உனது நண்பன் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதுபோலத் தெரிகிறது."

"இது நன்றாக இருக்கிறதே! அப்படியெனில் நமது கதை உளவியல் சார்ந்த கதையாக இருக்கப்போகிறது. அதில் எனக்கும் சம்மதமே."

"சரி. இதுவரை சொன்னதெல்லாவற்றையும் எழுதி விட்டாயா?"

"இன்னும் எழுதவில்லை. கதையின் முக்கியமான புள்ளிகளை மட்டும் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்."

"அடக்கடவுளே, அப்படியெனில் எப்போதுதான் இந்தக் கதையை எழுதப்போகிறாய்?"

"எப்போது என்று நீங்களே சொல்லுங்கள். அப்போது உடனே நாம் இதை எழுதத் தொடங்கலாம்."

"எப்போது நீ வீட்டுப்பாடம் செய்துமுடிக்கிறாயோ அப்போது எழுதத் தொடங்கலாம். சரியா?"

"அதுதான் சரியான நேரம் என்று எனக்கும் தெரியும். நீங்கள் அதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவசியமில்லை."

"சரி...சரி...அடுத்து என்னவென்று சொல்லு." 

 

அவளது வீட்டிற்குள் நுழையும்போதே வீட்டுக்குள் இருப்பவளை மதிக்கும் பொருட்டு ஆண்டவரைப் போற்றிக்கொண்டே உள்ளே நுழைவான். உடனேயே அவனை அன்போடு வரவேற்பவள் அதன்பின் அவனருகிலேயே அவனை ஒட்டிக்கொண்டு கூடவே இருப்பாள். அவன் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவளது நறுமணத்தைலம் அவனது நாசியை நிறைக்கும். அவ்வப்போது அவள் வருவதும் போவதுமாக இருப்பாள். அந்தப் பொழுதில் அவளது நடையானது அவனை ஒருசேர கிளர்ச்சிக்கும் உள்ளாக்கியது; சங்கடப்படவும் வைத்தது.

 

"அப்பா, இன்னுமொரு யோசனை. இப்போதுதான் தோன்றியது. அஹமதுவின் உளவியலை ஆராய்வதாக விவரித்து எழுதுவதில் கவனத்தைக் குவிக்கவேண்டும். குறைந்தது பத்து பக்கங்களுக்காகவாது இதை விவரிக்கவேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"வாசிப்பவரைச் சாகடிக்கவேண்டும் என்று விரும்புகிறாயா?"

"ஹா....ஹா....நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? வெறும் பத்து பக்கங்களைக்கொண்டு வாசிப்பவரைச் சாகடிக்க முடியுமா?"

"சில வேளைகளில் அதற்கும் குறைவான பக்கங்களே அதற்குப் போதுமானது."

"அப்பா....கேலி பண்ணாதீர்கள்."

"சரி. உன்னுடைய கதைக்கே - அஹமது பற்றிய கதைக்கே - திரும்ப வருவோம். அவனுக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று? அதைச் சொல்லு."

"அவனது அம்மாவை அவனுக்குத் தொடர்ந்து பிடிக்காமல் போனது. அவரது சொல்பேச்சிற்கு அவன் தொடர்ந்து கீழ்ப்படியாமல் இருந்தான். அவனது அம்மா எது செய்யக்கேட்டாலும் தொடர்ந்து மறுத்தான். இதுதான் நடந்தது. எப்படிச் சொல்வதென்றால் அவன் வேறு மாதிரியாக மாறியிருந்தான். இதை எப்படிப் புரிந்துகொள்வது? அப்பா...நீங்கள்தான் இதில் எனக்கு உதவ வேண்டும்."

"அவனுக்கு என்னதான் நடந்தது என்பதை முதலில் சொல்."

"அது எனக்குச் சரியாகத் தெரியவில்லை."

"அப்படியென்றால் எப்படித்தான் நீ இந்தக் கதையை முடிக்கப் போகிறாய்?"

"நீங்கள்தான் உதவ வேண்டும். என்னால் இதைத் தனியாக எழுதி முடிக்க இயலாது என்றுதான் உங்களிடம் முதலிலேயே உதவி கோரியிருந்தேனே?"

"சரி...சரி...அப்படியென்றால் அவனுக்குப் பித்து பிடித்துவிட்டது என்று சொல்வோமா?"

"அப்பா. அது வேண்டாம்! கெஞ்சிக் கேட்கிறேன். அது வேண்டவே வேண்டாம்! அவன் பைத்தியமாக மாறியிருக்கவில்லை. அவன் வேறு ஒருவனாக மாறியிருந்தான். அவ்வளவே!"

"நாம் எல்லோருமே ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு வேறு ஒருவராகத்தான் இருக்கிறோம்? இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப்போகிறது?"

"உண்மைதான். ஆனாலும் நாம் அனைவரும் பித்துப் பிடித்தவர்கள் அல்லவே! அவன் ஒருமுறை என்னிடம் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது."

"என்ன திடீரென்று இப்போது நினைவுக்கு வருகிறது? அவன் உன்னிடம் புதிதாக எதையும் சொல்லியிருந்தான் என்று இதுவரை நீ எதையும் சொல்லவே இல்லையே?"

"ஆம்...சொல்லவில்லைதான். அதாவது அவன் ஒருமுறை ஏதோ ஒன்றைப் பார்த்ததாகச் சொன்னான்."

 

அது முற்றிலும் மாறுபட்டதொரு மாலைப்பொழுது. அப்போது நான் மட்டுமே வீட்டிலிருந்தேன். மதில் சுவரின் அந்தப் பக்கமிருந்த அவள் தலையை உயர்த்தி விடாமல் என்னை அழைத்தாள். ஷமியும் அவனது அம்மாவும் ஏதோவொரு வேலைக்கென்று, என்ன வேலையென்று ஞாபகமில்லை வெளியே சென்றிருந்தார்கள். கதிரவனின் செந்நிறக் கதிர்களில் அவளது அழகுபடுத்தப்பட்ட முகம் பளபளக்க அவளது கண்களோ ஜொலித்தன. எதற்காகக் கூப்பிடுகிறாள் என்று கேட்டேன். சிரிப்பு ஒன்றையே எனக்குப் பதிலாகத் தந்தாள். எச்சரிக்கை உணர்வோடு மதில் சுவரை அணுகினேன். ஷமியின் அம்மாவைப் பற்றி அவள் விசாரிக்கவே அவர்கள் வெளியே போயிருப்பதைப் பற்றி அவளிடம் கூறினேன். உடனேயே அவளது வீட்டில் பழுதாகிப் போயிருந்த வாஷிங்மெஷினை நான் வந்து சரி செய்து கொடுக்கவேண்டும் என்று ஏக்கம் தொனிக்கும் குரலில் கெஞ்சிக் கேட்டுவிட்டாள். மேலும் முந்தைய நாளிலிருந்து அவளது மகன் அஹமதுவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததினால் பழுதடைந்திருந்த வாஷிங் மெஷினை இயக்கி ஓய்வெடுக்கும் அவனை இன்னும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினாள்.  

 

"அப்படி அவன் என்னதான் பார்த்தான்?"

"அவன் சொல்லவில்லை. ஆக இது படைப்பு வெளிப்பாட்டில் இக்கட்டதானதொரு தருணம் என்று சொல்லலாம். அப்படித்தானே அப்பா?"

"ஆமாம். நீ சொல்வது சரிதான். இப்போது நாமாக ஒரு நிகழ்வை உருவாக்கி அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டும்."

 

எனக்காக அவளது வீட்டின் முன்புற முற்றத்தில் காத்துக்கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்தபோது எந்தவித தவறான எண்ணங்களுக்கும் என் மனம் இடம் கொடுத்திருக்கவில்லைதான். அவள் எப்போதும்போலவே தன்னை அலங்கரித்திருந்தாள். உடலோடு ஒட்டியிருக்கும் இறுக்கமான ஆடையை அணிந்திருந்ததால் அவளது உடல் திமிறிக்கொண்டு இருந்தது. குறிப்பாக முலைகள் இன்னும் பெரிதாகத் தெரிந்தன. அவளை எப்போதும் அப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் அதில் ஒன்றும் புதிதாக இருக்கவில்லை. ஆனால் இம்முறை அவளைப் பார்த்தபோது அவளை அடைந்துவிடவேண்டும் என்ற வெறித்தனமான ஆசை என்னை உக்கிரமாக ஆட்கொண்டுவிட்டது. ஒரே ஒரு யோசனை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னாடி வந்து நின்றது: 'ஏதோ ஒன்றை நான் செய்யவேண்டும் என்று அவள் விரும்புகிறாள்; அவள் விரும்பியதை நான் செய்தே ஆகவேண்டும்.' ஆசைத்தீ என்னை விழுங்குவதையும் அவளை நோக்கி என்னை உந்தித் தள்ளுவதையும் நான் உணர்ந்தேன்.

 

"இப்போது என்ன செய்யலாம், அப்பா?"

"கற்பனை செய்யவேண்டும். அந்த மடப்பயல் அஹமது எதைப் பார்த்தான் என்பதை நாம் கற்பனை செய்யவேண்டும்."

"மடப்பயல் என்று ஏன் சொல்கிறீர்கள், அப்பா?"

"தெரியவில்லையே. அவன்தான் உன்னிடம் அவன் பார்த்ததைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? ஒருவேளை அதனால் அப்படிச் சொல்லியிருப்பேனோ என்னவோ?"

"ஆம். அது உண்மைதான். அவன் என்னிடம் எதைப் பார்த்தான் என்று சொல்லவேயில்லைதான்."

 

அவள் அவனை வாஷிங் மெஷின் இல்லாத வேறு ஓர் அறைக்கு அழைத்துச் சென்றாள். அதை அவன் கவனித்திருந்தாலும் ஏன் என்று அவளிடம் கேட்கவில்லை. இருவருக்குமே விஷேசக் கிறுக்கு பிடித்திருந்ததால் மௌனமான ஒரு மறைமுக ஒப்பந்தத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தது. தான் செய்யப்போவது சரியா தவறா என்று யோசிக்க ஒரு கணம்கூட எடுத்துக் கொள்ளவில்லை அவன். அப்படியே அவளோடு பயணப்படத் தொடங்கினான். அவளுடைய துணிச்சலும் வெறித்தனமான கொந்தளிப்பும் அவனை வியப்பில் ஆழ்த்தின. பெரும் ஆசை கொண்டிருந்த ராட்சதப் பாம்பு ஒன்றால் தான் விழுங்கப்படுவதைப்போல உணர்ந்தான் அவன். அவர்கள் மூச்சிரைத்துக்கொண்டிருந்தபோது அவனது கடைவாயிலிருந்து வழிந்த உமிழ்நீர் அவளது உதடுகளில் தங்கி அவளது உமிழ்நீரோடும் கலந்திருப்பதை அவன் உணர்ந்த அதே தருணத்தில்தான் அவன் அவனைப் பார்த்தான்: கொஞ்சமாகத் திறந்திருந்த பக்கவாட்டுக் கதவிடுக்கின் வழியாகத் தெரிந்த ஒரு குழந்தையின் வெளிறிய முகம். அந்தக் குழந்தையின் கண்கள் திகைத்துப் பயந்துபோயிருந்தன.

 

"ஷமி, அவன் எதைப் பார்த்தான் என்று நீ அழுத்தி அழுத்திக் கேட்கவில்லையா?"

"அப்பா...நான் எதற்காக அவனை அழுத்தி அழுத்திக் கேட்கவேண்டும்? அவன்தான் அதைப்பற்றி பேச விரும்பவில்லையே! அதனால் அவன் எதைப் பார்த்திருப்பான் என்று நாமே கற்பனை செய்வோம்."

"சரி. உன் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும்."

"கற்பனையைப் பறக்கவிடுவோம், அப்பா. அவன் எதைப் பார்த்தான் என்பதை ஒருவேளை நாம் கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம்."

"எனக்கென்னமோ அதைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை."

"அப்பா, அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். கதைதான் முடியப்போகிறதே! இப்போது ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஏனென்றால் சில நேரங்களில் வாழ்வின் விசித்திரமான எதார்த்த உண்மைகளை கற்பனையால்கூட ஈடு செய்ய முடியாது."

(அறபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் கேர்ட் யான் வான் கெல்டர்)

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஃபௌத் அல்-திக்கிரிலி

ஃபௌத் அல்-திக்கிரிலி (1927 – 2008) ஈராக் நாட்டைச் சார்ந்தவர். சட்டம் பயின்ற இவர் நீதிமன்றத்தில் நடுநிலை தவறாத நீதிபதியாக சில ஆண்டுகள் செயல்பட்டவர். பின்பு எழுத்துப்பணியைச் செய்வதற்க்கென்றே தனது வேலையிலிருந்து விலகியவர். இவருடைய முக்கியமான புதினமாக கருதப்படுவது The Long Way Back என்பதாகும். இது ஈராக் நாட்டில் முடியாட்சிக்குப் பிறகான நான்கு ஆட்சி மாற்றங்களையும் அந்த ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்த புதினமாகும். ஈராக் நாட்டில் போர்ப்பதற்றம் ஏற்பட்ட நேரத்தில் ஜோர்டன் நாட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தவர் கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்கேயே தனது எண்பதாவது வயதில் இறந்தார்.

தி. மரிய தனராஜ்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊரைச் சேர்ந்தவர். இளங்கலையில் ஆங்கில இலக்கியமும், முதுகலையில் நாட்டுப்புறவியலும் பயின்றவர். தற்போது நாட்டுப்புறவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். ‘மற்றவர்களின் சிலுவை’, ‘எழுத்தில் எங்க சாமிகள்’ ஆகிய தொகை நூல்களின் தொகுப்பாசிரியர். தற்போது உலகச் சிறுகதைகளை தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அங்கதம்தலித் வரலாறுபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்சாகுல் ஹமீதுபிம்ப அரசியல்தாரகன்இலக்கிய அறிமுகம்குறிகேட்டல்கவிதையியல்அநித்யம்இலக்கியம்பெருங்கொங்கை பூத்தாள்ரூமி‘போர்நாஞ்சில்நாடன்நாளையும் நாளையேஆய்வுசாய் வைஷ்ணவிவிமர்சனம்பதிப்புத் துறைவேறொரு மழைகாலச்சுவடுஅசகவதாளம்நானென்பது லெட்டூஸ்பிப்ரவரி தினம்திருச்சி வாழ்க்கைபுதிய வருகைவாசகர் கூட்டம்ழ என்ற பாதையில் நடப்பவன்சீர்மை இதழ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!