சிறுகதை நடப்பியல்

மலைச்சாமியின் ஈமச்சடங்கு

சிபி சரவணன்
02 Sep 2026
0

விடியலுக்கும், இரவுக்குமான இடைவெளியைச் சுமந்திருக்கும் அந்த நேரத்தில் ஊரே நிசப்தமாக இருந்தது. மலைச்சாமியின் வீட்டில் பசு மாடுகளின் மடி பாலைச் சுரப்பதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தன. தூக்கக் கலக்கத்தில் அதன் வாய்களில் இருந்து கசிந்த கோழைகளை ஒரு நூலாம்படையைப் போல் தரைவரை நீண்டிருந்தது. மலைச்சாமி நாள்பட்ட வாதையால் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அவர் எப்போதும் ஜன்னல் வழியே மாடுகளோடு சகஜமாக உரையாடுவார். நேற்று அந்த மலைச்சாமியும் ஜன்னல் வழியே தட்டுப்படவில்லை என மாடுகளுக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது.

திடீரென நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மலைச்சாமியின் கண்கள் திறந்து மார் மூச்சு வாங்க மேலும், கீழும் ஏறி இறங்கின. அவர் கைகளால் அருகிலிருந்த சொம்பைத் தேட, சொம்பு தடுமாறி கீழே விழுந்து  தண்ணீர் சிந்தியது.  மலைச்சாமியின் கட்டிலுக்கு அருகில் படுத்திருந்த இருளாயி திடுக்கிட்டு எழுந்து மூச்சு வாங்கி கொண்டிருந்த மலைச்சாமியின் எலும்பும், தோலுமாய் இருந்த மார்பைத் தேய்த்து விட, மலைச்சாமியின் நீண்ட மூச்சு வாங்கல் மெல்ல குறைந்தது.  இருளாயி எழுந்து தன் சேலை முந்தானையைத் தூக்கி ஜாக்கெட் பட்டன் கழற்றிவிடப்பட்ட தன் மார்பை மறைத்துக்கொண்டே தண்ணீர் மோந்து கொண்டு வந்தாள்.  மலைச்சாமியின் உடல் இன்னும் வேகமாக மேலும், கீழும் ஏறி இறங்கின. அவரது ஆண் குறி ஒற்றை வேட்டியை விலக்கி கொண்டு விறைத்து நின்றது. இருளாயி அதனை மறைத்துக்கொண்டே , மலைச்சாமியின் வாயில் தண்ணீர் ஊற்றினாள். மலைச்சாமி அதனை விழுங்க முடியாமல் துப்பிக்கொண்டே அவர் கண்கள் விரிய உயிர் பிரிந்தது.

இருளாயி அவரது நெஞ்சில் காது வைத்துப் பார்க்க, இதயத் துடிப்பின் சகிம்சைகள் துளியும் தெரியவில்லை. இருளாயி எழுந்து தன் முந்தானையைக் கழற்றி ஜாக்கெட் பட்டனை போட்டுக்கொண்டு, சேலையைத் தெளிவாகக் கட்டினாள். கலைந்திருந்த கொண்டையைச் சரி செய்தவாரே, பீரோவை நெருங்கிப் போன இருளாயி தன் கழுத்தில் போட்டிருந்த சங்கிலியைக் கழற்றினாள். பிறகு காதில் போட்டிருந்த தந்தட்டி மற்றும் மூக்குத்தியைக் கழற்றிய இருளாயி அதனை பீரோவில் வைத்தாள். பின்னர் மெல்ல நடந்து வந்து அடுப்பங்கரையில் முகத்தைக் கழுவினாள். சட்டியை திறந்து பழைய கஞ்சியை நன்றாகக் கறைத்து மடமடவெனக் குடித்து முடிக்க, மாடு தொடந்து கத்த ஆரம்பித்தது.

ஆள் அரவமற்ற அந்தத் தெருவுக்குள், ஒரு சைக்கிள் இரண்டு பக்கமும் பால் பாத்திரங்களைச் சுமந்து கொண்டே  வந்தது. முன்பே பழக்கப்பட்ட முகம் என்பதெல்லாம் தெருவிலிருந்த நாய்களெல்லாம் சைக்கிள் சத்தம் கேட்டவுடனே  தங்கள் காது மடல்களை லேசாக ஆட்டி ஆசுவாசப்படுத்திக் கொண்டே மீண்டும் உறங்கத் துவங்கிவிட்டன. பால்காரன் நேராக வண்டியை மலைச்சாமியின் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டுப் பால் சட்டியை எடுத்துக்கொண்டு வந்து மாட்டின் மடியின் முன்னால் குத்த வைத்து உட்கார்ந்து, லேசாக எண்ணையை எடுத்துச் சில்லிட்டு இருந்த மாட்டின் மடியில் தேய்த்துக்கொண்டு கறக்க , சூடான பால் வடிகட்டியில் பட்டுத் தெறித்தது.

"அய்யோ… ராசா… என்னைய விட்டு போயிட்டீயே… " என்ற சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்த பால்காரன் நேராக வீட்டை நோக்கி நடந்தான்.  

" இப்டி என்ன அனாமத்தா விட்டுப் போனா, நான் என்னா செய்வேன் என் ராசா" என மார்பில் அடித்து அழுதாள்.

" வெக்காளி கோயில் கும்புட்ற நேரத்துல செத்துத் தொலைஞ்சிருக்கானே பெருசு"

அக்கம்பக்கத்தினர் எல்லோரது வீட்டிலும் லைட் எறிய ஆரம்பிக்க, மலைச்சாமி வீட்டுச் சாவு ஊருக்கே தெரிந்து போனது. மலைச்சாமிக்கு மிளகைப் போல காரமான குணம் கொண்ட ஒரே ஒரு மகன் தான். அவனும் சிங்கப்பூரில் வேலைக்குப் போன  இடத்தில் ஒரு மலாய் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு அங்கயே செட்டில் ஆகிவிட்டான். அவ்வப்போது காசு அனுப்பி, பெற்றோர் மீதான கரிசனத்தைக் காட்டிக் கொள்வதோடு சரி. அப்பாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்டிப்பாக நான் ஊருக்கு வருவேன் என மட்டும் போனில் சொல்லிக்கொண்டு இருப்பான். 

அந்த ஊரில் இதுமாதிரியான பொது வேலை பார்பதற்கெனவே, வாஜ்பாய் என்ற ஒரு ஆள் இருக்கிறார். அவருக்கு என்ன காரணத்திற்காக அந்த பெயர் வந்ததென தெரியவில்லை. ஊருக்குள் அந்த காலத்திலே நன்றாகக் கணக்கு வழக்கு பார்க்க தெரிந்த ஆள் என்றதால் கூட அந்த பெயர் வைத்திருக்கலாம். வாஜ்பாய்க்கு 50 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியாக வீட்டில் வசித்து வரும் அவருக்கு இது மாதிரியான பொதுக் காரியங்களில் மூக்கை விட்டுப் பார்ப்பதில் அலாதி ப்ரியம்.  வாஜ்பாய் தடித்த உருவம், எப்போதும் வெள்ளைச் சட்டை, காவி வேட்டிதான் கட்டி இருப்பார். வாஜ்பாய்க்கு இந்த ஊர்க்கார்கள் மீதெல்லாம் அவ்வளவு கரிசனை எல்லாம் இல்லை. ஏதோ இது போன்ற காரியங்களில் ஈடுபடும்போது, சுய இன்பம் செய்த பிறகு கிடைக்கும் திருப்தியைப் போல ஒரு சொல்ல முடியாத இன்பம் அவருக்குக் கிடைக்கிறது.

மலைச்சாமி வீட்டுக்கு முன்னே ஒரே கூட்டம், ஆட்கள் எல்லோரும் மலைச்சாமி குடும்ப வரலாற்றை , புரட்டிப்போட்டு ஊர் பொறணி பேசிக் கொண்டிருக்க, வாஜ்பாய் அவர்களை விலக்கிக்கொண்டு உள்ளே போனார்.  மலைச்சாமியின் உடல் கட்டிலில் கிடப்பதைப் பார்த்துக் கடுப்பான வாஜ்பாய்

" உசுரு போச்சுனா, கட்டில்ல போட கூடாதப்பா, இறக்கிப் போடுவோம் வாங்க. யே… மூக்காத்தா விலகு, எவேன் வீட்டு எழவுனாலும் வந்து ஒப்பாரி வைக்க வேண்டியது."

மலைச்சாமியின் உடலை அப்படியே போர்வையையோடு இறுக்கிக் கட்டித் தூக்கிக் கீழே போட்டார்கள்.

"பொம்பளையாளு எல்லாம் வெளிய போக, பெருச குளிப்பாட்டி, நல்ல துணி உடுத்தி ஜம்முனு ரெடி பண்ணுவோம்"

பெண்கள் எல்லோரும் வெளியே போக, வாஜ்பாய் இரண்டு ஆண்களோடு சேர்ந்து இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது ஒரு காய்ந்த வாழை மட்டையைப் போல மெலிந்த அந்த உடலைப் பார்த்ததும் வாஜ்பாய்க்கே ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து விட்டது. குளிர்ந்து சில்லிட்டு இருந்த அந்த முகத்தின் தோலை இழுத்துப் பிடித்துச் சவரம் செய்த ஆள் மிகவும் சிரமப்பட்டு வேலையைச் செய்தார். பிறகு பெருசுக்கு நல்ல வெள்ளை வேட்டிச் சட்டை உடுத்தி, உருமா கட்டி ரெண்டு மரச்சேரைக் கொண்டு வந்து அதன் மீது துணியை விரித்து, தலைக்கு மட்டும் ஒரு சிறிய முக்காலியைப் போட்டு படுக்க வைத்தார்கள்.

" சொந்த பந்தம், கூட பிறந்தது, இறந்தவரு பிள்ளைகள் எல்லாம் வந்து பத்தி குச்சி சுத்தி சாமி கும்புடுங்க"

தேங்காய், வாழைப்பழம்  வைக்கப்பட்டு, வெத்திலை சூடமெல்லாம் வைத்து அதனோடு, பெரிய அரைக்காப்பிடி மானத்தில் நெல் வைத்து உடலை ஒரு கடவுளைப் போல வழிபட்டுச் சாமி கும்புடுகிறார்கள்.

"என்னம்மா… மகனுக்கு தகவல் குடுத்தாச்சாமா?"

" ஆச்சு மகனே, நாளைக்கு மதியந்தே வருவானாம்"

"நாளைக்கா, என்னத்தா நீ வேற, ஊருக்குள்ள நாளைக்குக் கோயில் கும்புடுனு உனக்குத் தெரியும்ல, அதுவரைக்கும் உடம்ப வைக்க முடியுமா? அவன படக்குனு கிளம்பி வர சொல்லுத்தா"

" சிங்கப்பூர் என்ன பக்கத்திலையா இருக்கு, பஸ் பிடிச்சு வாரதுக்கு"

"எவண்டா அவேன்.. எனக்கு என்ன ஒண்ணும் தெரியாதா? நான் என்ன கேன பயலா? இந்த மாதிரி எகத்தாளமா மட்டும் பேசுங்க.. நல்லது கெட்டதுனா வந்து நின்னுராதீங்க"

"உருமி காரு இன்னும் வரலயா?"

"லே.. பேட்டை வாடா வண்டிய எட்றா, நம்ம போயி ஆளப் பிடிச்சுட்டு வருவோம்"

என்றவாறு வீட்டுக்கு வெளியே வர, ஆட்கள் பந்தல் போட்டு கொண்டிருக்க, ஊர் நிர்வாகிகள் அங்கு வருகிறார்கள்.

"இந்தா வந்துட்டாங்கள? "

"என்ன வாஜ்பாயி.. படக்கு, படக்குனு வேலையப் பாரு, கோயில் கும்புட வச்சுகிட்டு நீ பாட்டுல மந்தமா இருக்காத"

வாஜ்பாய் அவர்களைக் கண்டு கொள்ளாதது போல, பேட்டையனுடைய பைக்கில் ஏறிக்கொண்டு கிளம்பினார்.  உருமிக்காரரின் களி மண் வீடு பூட்டிக் கிடக்கிறது. வாஜ்பாயும், பேட்டையனும் ஊரெல்லாம் விசாரித்து பைக்கில் தேடுகிறார்கள். உறுமி அடிக்கும் ஆளைப் பிடிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில்  கடுப்பாகி, வாய்க்கால் அருகே பைக்கை நிறுத்திவிட்டு பேட்டையன் சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் ஒரு புதரில் சிறுநீர் கழிக்க, அதற்குள் இருந்து அரை போதையில் உருமிகாரர் எழுந்து வருகிறார். வாஜ்பாயும் பேட்டையனும், அவரைத் தூக்கிக்கொண்டு போய் வாய்க்காலில் வைத்துக் குளிப்பாட்டி உருமி அடிக்கக் கூட்டி வருகிறார்.

பிறவியிலே மாறு கண்கொண்ட உருமிக்காரர்  எங்குப் பார்த்து உருமி அடிக்கிறார் என யாருக்கும் தெரியாது. உருமியை எடுத்துத் தோளில் மாட்டிய நிமிசத்தில் தன்னை ஒரு வித்வான் ஆக்கிக் கொண்டு விடுவார். மெல்ல குச்சியை எடுத்துத் தேய்த்துத் தேய்த்துக் கறுத்துப் போயிருக்கும் தவிலில் வைத்து இழுத்தால், புலி உறுமுவதுபோலச் சத்தம் கிளம்பும். அதற்கு ஏற்க இடது பக்கம் தவிலை அடிப்பார். உருமிச் சத்தம் முழங்க, ஊரடக்கி நடந்து வந்தால் ஊருக்கே எழவு செய்தி போய்ச் சேர்ந்து விடும்.

"மகனே ஊர் காரங்க.. இன்னைக்கே அய்யன எடுக்க சொல்றாகடா, எனக்கு என்னா செய்றதுனு ஒரு எழவும் புரியல"

"நீ சும்மாருத்தா.. ஒத்த புள்ளையப் பெத்துட்டுக் கொல்லிகூட வைக்க விடாம விடுவாகலா, அவங்க கிடக்காங்க.. நான் பாத்துக்கிறேன்."

ஊருக்குள் திருவிழா நடப்பதால் பெரியதாக யாரும் எழவு வீட்டுக்கு வரவில்லை. ஆண்களில் பலரும் கையில் கங்கணம் கட்டி விரதம் இருப்பதால் சொந்த பந்தங்களும், அசுலூர் ஆட்களும்தான் வீட்டுக்குள் எல்லா ஏற்பாட்டையும் செய்தனர். இருளாயிடமிருந்து கொஞ்சம் காசை வாங்கிய வாஜ்பாய் எழவு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆட்களை அனுப்பி வைத்தார்.  வாஜ்பாய் எழவு வீட்டு முன்னால் உட்கார்ந்திருக்க, ஊர் மக்கள் சார்பாக போடுவனம் வசூலிக்கப்பட்டது. அதாவது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டு ஆட்களும் இறந்த குடும்பத்திற்கு தலா 10 ரூபாய் விகிதம் எல்லா எழவுக்கும் தர வேண்டுமென ஒரு முறை இருக்கிறது. அந்த தொகை எழவு வீட்டார்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்கும் என்பதுதான் அதன் அடிப்படை கணக்கு.

ஒரு பக்கம் ஊர் திருவிழா வேலைகள் மும்பராக நடந்து கொண்டிருக்க,  ஆங்காங்க ரேடியோவில் சினிமா பாட்டு ஒலித்தது. சீரியல் பல்புகளும், தோரணங்களும் ஊரையே அழகாக வைத்திருந்தன. ஆனால் மலைச்சாமி வீட்டின் முன்பாக ஒப்பாரி வைக்கும் கிழவிகள்கூட வாய்க்குள் முனகிக்கொண்டே ஒப்பாரிப் பாட்டைப் பாடினார்கள்.  

மதியப் பொழுதில் அங்கு வந்த ஊர் நிர்வாகி, இருளாயியைப் பார்த்து

"சாய்ங்காலமா தூக்கிறாத்தா… பொணத்த ஊருகுள்ள வச்சுக்கிட்டு சாமி கும்புட்டா எதாச்சும் விலங்குமா? எல்லாம் ரெடி பண்ணி வைங்க… நாங்களும் சமுதாயத்து சார்பா செய்றத தூரத்தில நின்னு செய்வோம்"

"தூரத்துல நின்னு செய்றதுத்தே. சமுதாயம்னு ஒண்ணு இருக்காடா? ஒரு நாள் தள்ளிப் பொணத்த வச்சா.. எந்த சாமியும் கோச்சுக்காது.. செத்தவரு மகேன் வந்த பிறகுதே தூக்குவோம். நீ ஆகுறத பாரு"

"வாஜ்பாயி எல்லாம் ஒரு அளவுதே.. பெரிய ஆளூக பேசி முடிவு பண்ணியாச்சு.. படக்குனு நைட்டுக்குள்ள தூக்குற வேலையப் பாருங்க… இல்லனா நாங்களே தூக்கிட்டு எரிக்க வேண்டியது வருது வரும்"

உடனே கோபமடைந்த இருளாயி, விரித்துக்கிடந்து கொண்டையை முடிந்துகொண்டு

"என்னடா.. சொன்ன.. யார, யாரு தூக்கிட்டுப் போறது. ஏன் புருசேன் கோயில் நிர்வாகத்துல இருந்து இம்புட்டு நா கணக்கு வழக்கு பாத்ததெல்லாம் உனக்கென்ன மறந்தா போச்சு. சொத்த திங்கிறியா.. இல்ல பிய்ய திங்கிறியா"

"எழா… என்னாடி முண்ட.. விட்டா பேசிக்கே போற, ஊருக்கு ஒரு சட்டம் உங்களுக்கு ஒரு சட்டமா, அப்படி உங்க இஷ்டத்துக்குதே ஆடுவீங்கனா.. உங்கள ஊருல இருந்து ஒதுக்கி வச்சிருவோம்"

"நீங்க என்னடா புழுத்துறது… ஒரு கெட்ட காரியத்துக்குத் துணைக்கு நிக்காத சமுதாயம் என்னடா சமுதாயம்?"

" ஓ… அப்டியா! இந்தா வீட்டுக்குள்ள ஒக்காந்திருக்க பொம்பளயாளுகளா, நான் சொல்றத நல்லாக் கேட்டுங்க.. இவங்க எழவு வேலைக்குப் போறவுக யாரா இருந்தாலும், அவுக வீட்டு நல்லது கெட்டதுக்கு இனி ஊர் நிக்காது பாத்துகிடுங்க சொல்றத சொல்லிபுட்டேன்"

என்று சொன்னதும் வீட்டுக்குள் இருந்த ஆட்கள் எல்லாம் வெளியேறி, இருளாயின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டே சென்று விட்டார்கள். அன்று இரவில் ஊரில் வாணவேடிக்கை கரகாட்டம் என எல்லாக் கூத்தும் கோலாகாலமாக நடந்தது. இருளாயியும், அசுலூர்காரர்களும் தவிர எழவு வீட்டில் யாருமில்லை. வாஜ்பாயும் ஒத்த பொட்டு உறக்கமில்லாமல் சேரில் உட்கார்ந்து போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தார்.

விடியலில் பெண்கள் சிலர் மஞ்சள் உடை உடுத்தி , தீச்சட்டி எடுத்து நடனமாடிக்கொண்டே இருளாயியின் வீட்டை கடந்து செல்ல, இருளாயி அதைக் கண்டு கொள்ளாமல் நினைவுகளில் ஆழ்ந்திருந்தார். அட்ட மதியானத்தில் காரில் வந்து இறங்கிய சிவனேசன் எந்தவித உணர்வும் இல்லாமல் எழவு வீட்டு ஏற்பாட்டுக்கு ஆயத்தமானான்.

ஊருக்குப் பொதுவான தேர் கிடைக்காததால் வேறு வழியின்றி அசுலூரிலிருந்து பாடை கட்டுபவரைக் கூட்டி வந்த வாஜ்பாய் கிடுக்கில் பாடை கட்டினார். மீண்டும் ஒரு முறை மலைச்சாமியைக் குளிப்பாட்டி அய்யாவுக்கு நாடி கட்டி எல்லாக் கருமாயங்களும் செய்து மொத்தமே 10 பேருக்கும் குறைவான ஆட்களோடு இருளாயி சுடுகாட்டை நோக்கிப் பாடையில் ஒரு கால் பிடித்து மலைச்சாமியின் உடலைச் சுமந்து கொண்டு நடந்தாள்.  பொதுவாக ஊருக்குள் பிணத்தை எரிக்கும்போதோ புதைக்கும்போதோ, பெண்கள் அனுமதிக்கபடுவதில்லை. ஆனால் இருளாயி ஊர் விதிகளை மீறி திமிராக இருகாட்டுக்குள் போனாள். சுடுகாட்டில் கட்டை அடிக்கி வைக்கக் கூட ஆள் இல்லாமல், மலைச்சாமி குடும்பத்தினேரே எல்லா வேலைகளும் செய்து கடைசியாக நீர் பானை சுமக்க, கடைசியாக சிவனேசன், அப்பாவுக்குக் கொல்லி வைத்தான். தீ எரிந்து பிணத்தின் நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்த சமயத்தில், கோயிலில் சாமி சிலையைத் தூக்கி மேள தாளம் முழங்கத் தூக்கி வைத்தனர்.

மலைச்சாமி குடும்பத்தினர் வீட்டுக்கு வர, வாசலுக்கு நேராக ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தைப் பார்த்து விட்டு அவர் கிளம்ப, வாஜ்பாய் மட்டும் உட்கார்ந்து எழவு வீட்டு கணக்கு வழக்கை எழுதினார். அப்போது அங்கு கையில் சுக்கு காப்பியுடன் வந்த இருளாயி

"இந்தா மகனே குடி…"

"ஆத்தா.. எல்லா செலவும் போக, 430 சொச்சம் நிக்குது"

"சரியா.. சரியா.. அத நீயெ வச்சிக்கயா"

"அட நீங்க வேற.. இந்தாங்க பிடிங்க… "

காசை வாங்கி ஜாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்ட கிழவி

"சிவனேசனுக்கு முன்னாடி பிறந்த பிள்ள, 6 மாசத்துல பொறந்த புள்ளப்பா, சீக்கு வந்து செத்து போச்சு.. ஒரு வேள அது வளர்ந்து இருந்தா.. அப்டியே உன் முக ஜாடைதே இருக்கும்" என வாஜ்பாயின் கன்னத்தைத் தொட்டுச் சுத்திப் போடுகிறாள். கிழவி போனபின்னும் சேரிலிருந்து எழுந்திருக்க முடியாமல் வாஜ்பாய் உட்கார்ந்திருந்தார். அவரது கால்கள் இறுகி போய் எடுத்து வைக்க முடியாத அளவுக்குக் கனமாக இருந்தது. 

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சிபி சரவணன்

சிபி சரவணன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இவர் அஞர் என்ற ஒரு நாவல் எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.



1





பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

தவெககு இலக்கியன்விஜய்பெருங்கொங்கை பூத்தாள்கஸல்நவீனத்துவம்கவிதைகள்தமிழக அரசியல்சந்துரு மாயவன்இலக்கிய நிகழ்வுகள்தலித் வரலாறுஅக்காக்கள்ம.கேசவன்காஃப்காவின் காதுகள்எஸ் அற்புதராஜ்கோ கமலக்கண்ணன் கவிதைகள்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்ஆய்வுடோனி பிரஸ்லர்கவிதையியல்தாரா கேம்பெல்அங்கதம்மழைவில்நேர்காணல்வேறொரு மழைஇணைய இதழ்பொம்மை கார்சீர்மைபிம்ப அரசியல்சதுக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!