கிறித்துவ மதம் இருமைகளுக்குள் எப்போதும் சிக்கிக் கொள்ளும். பாவம் – மன்னிப்பு, அறம்- அறப்பிழை, நன்மை – தீமை முதலியனவற்றின் மீது மத நெறிகளைச் செப்பனிட்டிருக்கும். மனித வாழ்வு இருமைகளுக்குள் சிக்காத ஒன்று. மேற்குறிப்பிட்ட அல்லது அதனைப் போன்ற இருமைகளுக்குள் ஊடாடும் கட்டுக்கோப்பற்ற தர்க்கங்களால் நிரம்பியது மனித மனம். இதில் ஆன்மீகத்தின் இடம் என்ன எனும் கேள்வி, அவை மதம் சார்ந்ததா, கோட்பாடுகள் சார்ந்ததா, சார்பு நிலை கொண்டதா, தனித்துவமானதா முதலிய எண்ணற்ற கிளைக் கேள்விகளுக்கு இட்டுச் செல்கின்றன. கிறித்துவம் துறவை முதன்மைப்படுத்துகிறது. காதலையும் காமத்தையும் பாவச் செயலாகக் கருதுகிறது. மேலும் இச்சைகளைத் துறப்பதன் வழியே மேன்மையை, இறையை உணர முடியும் என்பதை வலியுறுத்துகிறது. இச்சையைத் துறப்பது பல்வேறு படிநிலைகளும் வாழும் சூழ்நிலைகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியது. ஆனால் அவற்றிற்கான வழிமுறைகள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மனித உணர்வுகளின் அடிப்படைகளாக இருக்கும் அன்பு (காதல், காமம்), பகை (வெறுப்பு, கோபம்), கழிவிரக்கம் (குற்றவுணர்ச்சி, இழப்பு) ஆகியன பிற மனிதர்களின் மீதான சார்பினால் உண்டாகும் இச்சைகளின் வெளிப்பாடாகிறது. இன்னிலையில் இச்சைகளைத் துறப்பது நொடி நேரச் செயல்பாடன்று. அது ஒரு வாழ்வியல் முறையாகப் பாவிக்கப்படுகிறது. அதே நேரம் செயல்படுத்தும்போது அதற்கென இருக்கும் இடர்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. இந்தப் பயணத்தை சில கதாபாத்திரங்களின் துணைகொண்டு நுட்பமாகப் பேச முயன்றிருக்கும் நாவல் லாவண்யா சுந்தரராஜனின் “மாயமலர்”.
நாவலின் ஆரம்பப் பக்கங்களிலேயே இரண்டு மையக் கதாபாத்திரங்களை ஆட்டுவிக்கும் ஆதாரக் கேள்விகளை அழகாக முன்வைக்கிறார். பிலோமினா கன்னியாஸ்திரியாக விரும்பும் நாயகி. அவளுடைய அம்மா சிறுவயதிலிருந்தே வேண்டுதலின் அடிப்படையில் சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். பிலோமினாவும் மனதளவிலும் தயாராக இருக்கிறாள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அதற்கான ஆயத்தங்களுக்காகக் காத்திருக்கிறாள். வாழ்வியல் இலக்காக இறைச் சேவை எனில் அவளுடைய அன்றாடம் வேறு லட்சியங்களைக் கொண்டிருக்கின்றன. இறை வாழ்க்கை பல்வேறு சமகால நுகர்வு விஷயங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு அமையப்பெறும். அதற்குள் வாசிப்பின் வழியே வரலாற்றையும் அழகியலையும் அறிய நினைக்கிறாள். கதை நிகழும் (கல்லூரிப் பருவ) திருச்சியின் வரலாற்றுத் தடங்களை ஆர்வங்கொண்டு அறிவதும் நண்பர்களிடம் சொல்வதும் இதன் ஒரு வெளிப்பாடாகிறது. வாசிப்பு மனித உணர்வுகளின் ஊடாட்டங்களை அறிய அவளுக்கு உதவுகிறது.
அடுத்த கதாபாத்திரம் டேனியல். தந்தை தன் மீது பிரயோகித்த வன்முறை ஆழமான வடுவாகிறது. சக மனிதர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் எனும் எண்ணத்தை விதைக்கிறது. பணியிடத்தில், சுற்றத்தில் தனித்திருப்பவனாகவே விளங்குகிறான். வன்முறை மீது அவனுக்கிருக்கும் அச்சம் அகச்சிக்கலாகிறது. வேறொரு விதத்தில் சொல்வதாக இருந்தால் அன்பு எனும் விழுமியத்தின் மீது அச்சம் கவிகிறது.
இந்த இருவருக்கும் அடிப்படையில் இருக்கும் ஒற்றுமை ‘அன்பு’ எனும் கருத்தியலை இவர்கள் அணுகும் விதமாக அமைகிறது. அன்பைக் கண்டு விலகியோடும் டேனியலைத் தேடி சுற்றமும் பணியிடச் சூழலும் நெருக்கம் காட்டுகிறது. அவனிடம் அசௌகரியம் மேலிடுகிறது. பிலோமினாவிற்கு அணுக்கத் தோழியாக வருகிறார் சித்ராவாணி. அளவு கடந்து கொட்டும் அன்பின் திகட்டலில் பிலோமினாவின் கதைப் பக்கங்கள் நீள்கின்றன. ஆனால் தள்ளிவைத்துப் பார்க்கும் தன்மை இயல்பாகப் பெற்றிருக்கும் பிலோமினாவிடம் சித்ராவாணிக்குத் தன் மேல் ஏன் இத்தனை அன்பு எனும் கேள்வியை விதைக்கிறது. அன்பைப் பகிர்வதற்கு எது எல்லை எனும் கேள்விக்குப் பதிலற்று யோசிக்கின்றனர். மேலும் நட்பு எனும் வட்டத்திலிருந்து அன்பை வெளிக்காட்டுதல் எங்கு மேலெழும்புகிறது எனும் அம்சம் பகுத்தறிவிற்கு அப்பால் தற்செயலின் சாயல்கொண்டு நாவலில் செயல்படுகிறது.
நாவலின் மையச்சரடு அன்பு எனும் உணர்வு சார் அம்சத்தை ஆன்மீகத்தின் சட்டகத்தில் பொருத்தி தர்க்கப்பொருளாக மாற்றுவதே ஆகும். நாவலின் தொடக்கத்தில் தாய்மைக்கும் கன்னிமைக்கும் இடையிலான உரையாடல் நிகழ்கிறது. கிறித்துவ மதசார்பான கதைகளில் இரண்டிற்கும் இடமுண்டு. இரண்டுமே இறைச் சேவையின் பால் அர்த்தப்படுகிறது. ஆனால் வயதைப் பொறுத்து அவை மேன்மை நிலையை அடைகின்றன. பதின் வயதில் இருக்கும் பெண் எட்டும் தாய்மை குற்றத்தின் கண் கொண்டு பார்க்கப்படுகிறது. வயதேறி கன்னிமையுடன் இருக்கும் பெண் சீடர் எனும் இடத்தை அடைகிறார். இரண்டிலும் அப்பெண் மட்டுமே காரணமாக்கப்படுமா ? ஆன்மீகம் விழுமியம் சார்ந்ததா ஆட்கள் சார்ந்ததா ? காலமும் சூழலும் இட்டுச்செல்லும் புதிர் மண்டிய காலத்தில் தாய்மையும் கன்னிமையும் தனிமனிதர்களின் தேர்வாகிறது. அத்தேர்விற்கும் விரும்பித் துறக்கும் விஷயம் எதுவாக இருக்கிறது எனும் இடத்தில் நாவலின் மையத் தர்க்கம் கூர்மையடைகிறது. இறைச் சேவையில் சரணடையத் துறக்கும் அம்சமாக அன்பு மட்டுமே அமைகிறது. கடவுள் அன்பின் வடிவானவர் எனில், துறக்கும் இடத்தில் வைக்கப்படும் விஷயமும் அன்பு எனில் “அன்பு” எனும் சொல்லின் அர்த்தம் என்ன ? முடிவுக்கு எட்டாது நீளும் உரையாடலாகக் கதாமாந்தர்களின் வாழ்க்கை இக்கேள்விக்குப் பதில் சொல்ல முயற்சி செய்கிறது.
பிலோமினா கதாபாத்திரத்தை மையப்படுத்தி நாம் எழுப்பும் உரையாடல்கள் டேனியலுக்கும் பொருந்துகிறது. ஆனால் அது தந்தை மகனுக்கு இடையிலான உறவு என்பதும் அவை வெறுப்பின் பாற்பட்டிருப்பதும் உரையாடலை மேலும் ஆழத்திற்கு இட்டுச் செல்கிறது. அன்பு இயல்பாகப் பெருக வேண்டிய இடத்தில் வெறுப்பு குடிபுகும்போது வாழ்வின் மீதான பற்று சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. சக மனிதர்களுடன் சேர்ந்து சார்போடு வாழ வேண்டிய வாழ்வை வெறுத்து டேனியல் ஓடுகிறான். அலைக்கழிக்கப்படுகிறான். வேறு வேறு அனுபவங்களை அடைகிறான்.
நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு இடையில் வெளிப்படும் துல்லியமான விவரணைகள் ஒவ்வொருவரையும் நினைவில் நிறுத்த உதவுகிறது. மேலும் எல்லோரிடமும் இடம்பெறும் குழப்பமான கேள்விகளும், தர்க்கங்களும் நாவல் நெடுக சீராகச் சுமக்கப்படுகிறது. அன்பை அடிநாதமாகச் சுமக்கும் கதாபாத்திரங்கள் சுயமரியாதையைக் கண்டறியும் இடம் நோக்கி நகர்வதும், வெறுப்பைச் சுமக்கும் மனிதர்கள் கையறு நிலை நோக்கி நகர்வதும் நாவலின், வாழ்வின் நகைமுரணாகிறது.
நாவலில் சில ஆபத்தான பகுதிகளும் இடம்பெறுகின்றன. சித்ராவாணி – பிலோமினா இடையிலான உறவு மிகுதியான உணர்வெழுச்சிகளால் சிக்கலுக்கு உள்ளாகிறது. அதன்பிறகான நாவல் மைய தர்க்கத்திற்கு விரைந்து நகர்ந்தாலும் கதையோட்டம் அதன் நிதானத்தை இழக்கிறது. மேலும் விவரிக்கப்படும் சிக்கலான பகுதிகள் நாவலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாய் அமைகிறது. அதுவே இந்த நாவலின் அடிப்படை விஷயமாக கருதப்படும் அச்சமும் ஏற்படுகிறது. மேலும் சித்ராவாணியின் திகட்டும் அன்பு வெளிக்காட்டுகளையும், நாவலில் நிதானம் இழக்கும் பகுதிகளும் இன்னமும் சற்றுக் கவனமாகக் கையாண்டிருக்கலாம் எனும் எண்ணம் எழாமலில்லை.
தேவைக்கு அதிகமின்றிக் கையாளப்பட்டிருக்கும் கிறித்துவ உரையாடல்கள், ஊர்சார்ந்த விவரணைகள், இடையிடையே எழுதப்படும் சுருக்கமான கவிதைகள் முதலியன கச்சிதமாக இடம்பெறுகின்றன. ஆன்மீக அனுபவங்களைத் தர்க்கங்களுக்கு உள்ளாக்கும் நவீன நாவலாக மாயமலர் மிளிர்கிறது. இன்னமும் விரிவாக எழுதியிருக்கலாம் என்பது நாவலின் நற்பகுதிகள் எழுப்பும் எதிர்பார்ப்பாகிறது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கிருஷ்ணமூர்த்தி
பழ. அதியமான்
இப்ராஹிம்
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.