கட்டுரை நூல் மதிப்புரை

வீடு, வீதி, வியக்தி

நான் கண்ட இந்தியா

பழ. அதியமான்
02 Sep 2026
0

நம் நாட்டைப்  பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது ஒன்று; நம்மைப் பற்றிப் பிறர் என்ன கருதுகிறார்கள் என்பது இன்னொன்று. முன்னது subjective பார்வை, பின்னது objective பார்வை. உலக அளவில் இரண்டாவது வகை கருத்துக்குச் செல்வாக்கு அதிகம். இந்த இரண்டாவது வகையில் அமைவது தான் "நான் கண்ட இந்தியா" என்ற இந்த மொழிபெயர்ப்பு நூல். துருக்கி எழுத்தாளர் ஹாலித் எடிப் அட்வார் இந்தியாவைப் பற்றி எழுதியது,"இஸ்க்ரா" (சதீஸ்குமார்) தமிழாக்கியது.

ஆ. இரா.வேங்கடாசலபதி, சாகித்திய அகாதமி விருது பெற்ற போது வரலாற்று நூலுக்கும்,மறு பதிப்பான நூலுக்கும் விருது தரலாமா என்று ஒரு சர்ச்சை தொடங்கியது. "இஸ்க்ரா" என்ற  இளைஞர் சாகித்திய அகாதெமி விதிகளைச் சுட்டிக்காட்டி  போட்டிருந்த பதிவு , உள்நோக்கமற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கியது. ஏறக்குறைய சர்ச்சையை முடித்து வைத்தது. அந்தத் தெளிவு மிக்க பதிவைப் பார்த்த பிறகு,  "யார்ரா இந்தப் பையன்" என்று அறிய முயன்றேன். 2024  புத்தகக் காட்சியில் வெளியாகியிருந்த அவரது "நான் கண்ட இந்தியா" என்ற மொழிபெயர்ப்பை வாங்கி வந்தேன். இதற்கு முன் உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள், காலத்தின் குரல் என்ற மொழிபெயர்ப்பு நூல்களையும்  "கிழக்கு" மூலம் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்தியாவைப் பற்றி வெளிநாட்டார் பலர் எழுதியுள்ளனர். அந்நாட்டாருக்கு  எப்படியோ, வரலாற்றுத் தேவையை உணர்ந்திருக்கிற நமக்கு அவை முக்கியம். 'மெகஸ்தனிஸ் முதல் மாஹோன் வரை ' இந்தியாவிற்கு வந்த அயலவர் பற்றி ஒரு பெரு நூலை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். ஏறக்குறைய ஏழுக்கு மேற்பட்டவர் எழுதிய குறிப்புகளை அவர் அதில் பேசியுள்ளார். அல் புரூனி, டியூட்லா பெஞ்சமின், மார்க்கோ போலோ, மெகஸ்தனிஸ், யுவான் சுவாங் என அவர்கள் பலர். அவை பெரும்பாலும் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகள். அவர்களின் குறிப்புகளைக் கொண்டுதான் அவர்கள் வந்த காலத்தையே நம்மால் சொல்ல முடிகிறது. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய காலம் அவை.

அண்மையில்  அதாவது விடுதலைப் போராட்ட காலத்தில் கேத்தரின் மேயோ, அல்டவுஸ் ஹக்ஸ்லி,  ஹாலித் எடிப்  அட்வார்,  ரோமன் ரோலண்ட் , மார்க்ஸ், மேக்ஸ் முல்லர் ஆகியோர் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ளனர்.  இந்தியாவை வந்து பார்த்து இந்தியாவைப் பற்றி எழுதியவர்கள் என்றும் இந்தியாவிற்கே வராமல் இந்தியாவைப் பற்றி எழுதியவர்கள் என்றும் இவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். கேத்தரின் மேயோ, அல்டவுஸ் ஹக்ஸ்லி,  ஹாலித் எடிப்  அட்வார் போன்றோர் முன் வகையினர். ரோமன் ரோலண்ட் , மார்க்ஸ், மேக்ஸ் முல்லர்  ஆகியோர் இந்தியாவிற்கு வந்தவர்கள் இல்லை.

1927இல் வெளிவந்த அமெரிக்க எழுத்தாளர் கேத்தரின் மேயோ(1867-1940)வின் "மதர் இந்தியா" என்ற நூல் விடுதலைக் கால தேசிய அரசியலில் புயலைக் கிளப்பிய நூல். இந்தியாவின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்த மேயோ இந்தியர்களின் மூடநம்பிக்கைகளையும் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளையும் கோயில் பூசாரிகளின் ஒழுக்கமற்ற  நடவடிக்கைகளையும் எழுதித் தீர்த்தார். 'சுயாட்சிக்கு  இந்தியர் தகுதியற்றவர் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதலையைத் தள்ளிப் போடுவது' இவரது நூலின் நோக்கம் என்றனர் தேசியர்கள். இந்நூலைச்  'சாக்கடைப் பரிசோதகரின் அறிக்கை' என்று காந்தி கடிந்துரைத்தார். 'இல்லாத குறையையா மேயோ  கூறிவிட்டார்! ' என்று கேட்டார் பெரியார். இந்த நூலுக்கு எதிர்ப்பும் ஆதரவுமாகப் பல நூல்கள் தமிழிலும் எழுதப்பட்டன. மேயோவின் நூல் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1937இல் துருக்கியைச் சேர்ந்த ஹாலித் எடிப்  நூலான 'இன்சைடு இந்தியா'  வெளிவந்தது.' இவரது வருகையால் இந்து முஸ்லிம் ஒற்றுமையில் பிரிக்க முடியாத பிணைப்பு ஏற்படும்' (பக்கம் 89, " நான் கண்ட இந்தியா)என்று காந்தி நம்பிக்கை தெரிவித்தார். எனினும் இந்த நூல் 'மதர் இந்தியா' அளவுக்கு கவனம் பெறவில்லை. 2002 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் மூஷிருல் ஹசன்(1949-2018) இந்த நூலுக்கு விரிவான அறிமுகத்தை எழுதி மறு பதிப்பு செய்த போது தான் 

இந்தியாவில் இந்நூல் கவனம் பெற்றதாகத் தெரிகிறது.

1925 - 26 இல் இந்தியா வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் அல்டவுஸ் ஹக்ஸ்லி(1894-1963) திருப்தி அடைந்தவராக திரும்பவில்லை. "இங்குள்ள சில மனிதர்கள் பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவதோடு, அவற்றை உண்மையென்றும் நம்பி வாழ்கிறார்கள் என்று ஹக்ஸ்லி பலமுறை பல்லைக் கடித்தபடி சொல்லியிருக்கிறார்" என்று ஹாலித் எடிப் இந்த நூலில் (ப.106) அந்த அதிருப்தியை நினைவு கூர்ந்துள்ளார். பின்னால்  ஹக்ஸ்லி மனம் திருந்திய மைந்தரானார் என்கிறது வரலாறு.  இந்தியா விடுதலையை நெருங்கிக் கொண்டிருந்த  நெருக்கடியான காலகட்டத்தில்  இந்தியாவிற்கு வந்து திரும்பிய துருக்கியப் பெண்மணியான ஹாலித் எடிப் எழுதிய இந்த நூல் இந்தியாவைப் பற்றிய நேர்மறைச் சித்திரமாகவே  அமைந்துள்ளது எனலாம்.

இந்தியாவிற்குத் துருக்கியுடன் அனட்டோலியா காலத்திலிருந்தே நல்லுறவு  இருந்தது. 1912- 13ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் பால்கன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு , இந்தியாவிலிருந்து சென்ற சிவப்பு இளம்பிறை சங்கத்தினர்  மருத்துவ உதவி செய்தனர்.  இதை மேற்பார்வையிடச்   சென்றவர்களுள்  காங்கிரஸ் தலைவர் டாக்டர் எம்.ஏ. அன்சாரி( அவருக்குத்தான் இந்த நூலை ஹாலித் சமர்ப்பித்திருக்கிறார்), அப்துல் ரகுமான் பேஷாவரி ஆகியோர் சிலர் . துருக்கியின் விடுதலைப் 

போருக்கு காந்தி ஆதரவாய் இருந்தார். பின் கிலாபத் இயக்க காலத்திலும் இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்பும் உறவும் வலுத்தது.  விடுதலைக்குப் பிறகு கே. ஆர். நாராயணன் போன்றோர் எல்லாம்  இந்தியத் தூதராகப்  பணியாற்றியிருக்கிறார்கள். எனினும் தற்போது உறவின் நிலைமை சரியில்லை. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நிலைப்பாட்டையே துருக்கி ஆதரிக்கிறது; 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் துருக்கி ஆதரிக்கவில்லை. இப்பொழுது 'ஆப்பரேஷன் செந்தூர்'  நடவடிக்கையிலும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையே துருக்கி எடுத்தது. இதனால் துருக்கிக்கும் ஆளும் இந்திய அரசுக்கும்  ராஜரீக உறவு மதிப்பார்ந்ததாய் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கலாசாரத் தொடர்பில் எந்தத் தொய்வும் இதுவரையில்லை.

துருக்கி எழுத்தாளர்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டவர்களாக உள்ளனர். தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு துருக்கி எழுத்தாளர் 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக். துருக்கியிலிருந்து பல நூல்கள் காலச்சுவடு மூலம் ஜி. குப்புசாமி, முடவன் குட்டி முகமது அலி, தி.அ. ஸ்ரீனிவாசன், சுகுமாரன் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஓரான் பாமுக் தவிர புர்ஹான் ஸென் மெஸ், அகமத் ஹம்தி தன்பினார், அல்ப் ருன்ஷ்  ஆகியோரது படைப்புகளும் தமிழாகியுள்ளன. கண்ணனின் பல்லாண்டு காலத் தொடர் முயற்சியின் விளைவாகத் துருக்கி- தமிழக இலக்கிய உறவு 

சாத்தியமாகியுள்ளது. துருக்கியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நூல்கள் அனேகமாக எல்லாமே புனைவுகளாக இருக்க அல் புனைவாக Inside India , நான் கண்ட இந்தியா என்னும் பெயரில் தமிழுக்கு இப்போது வந்துள்ளது.

நான் கண்ட இந்தியா நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ள  மூல நூலாசிரியர் ஹாலித்  படத்தைப் பார்த்ததும் 'இளைஞி' என்று எவரும் மயங்கி விடுவர்# சதீஸ் சாமர்த்தியம். இந்த நூலை எழுதும்போதே அவருக்கு வயது 53. இப்பொழுது இருந்திருந்தால் அவருக்கு 140 வயதாகி யிருக்கும். நேரு காலமான ஆண்டில் மரணித்த அவர், நேருவை விட ஐந்தாண்டுகள் மூத்தவர். ஹாலித் எடிப் அட்வார் ( 1884 -1964) ஆசிரியர், பெண்ணிய அறிஞர் , நாவலாசிரியர், அரசியலர். அவரது அரசியல் வாழ்க்கை சாகசம் நிறைந்தது. துருக்கியின் புரட்சித்தலைவர் முஸ்தபா கமால் பாடசா வுடன்  இணைந்து பணியாற்றினார். ஒட்டமான் பேரரசு வீழ்ந்து முஸ்தபா அரசுரிமை பெற்றதும் அவருடன் பிணங்கினார். அரசு தண்டிக்க முனைந்தபோது கணவருடன் ஐரோப்பாவிற்குத் தப்பினார். பிரான்சிலும் இங்கிலாந்திலும் 1939 வரை வாழ்ந்தார். அப்பொழுது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பயணம் செய்தார். 1935இல் இந்தியாவிற்கு வந்திருந்த போது பெற்ற அனுபவங்களின் பதிவுதான் இந்நூல். The Conflict of East and West என்ற இன்னொரு நூலையும் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ளார். இது இந்திய முஸ்லிம்களின் இஸ்லாமிய உணர்வெழுச்சி பற்றியது. புர்கா அணியாத  முஸ்லிம் பெண்ணாக 

உலகம் சுற்றியவர் ஹாலித்.  

ஹாலித்  இந்தியாவில் , அவருக்கு  துருக்கி நாட்டில் முன்பே பழக்கமான, விடுதலைப் போராட்ட வீரர் எம்.ஏ. அன்சாரியின், வீட்டில் தங்கியிருந்தார். இந்தியாவின் டில்லி, பம்பாய், ஹைதராபாத், லக்னோ, லாகூர், கல்கத்தா, பெஷாவர், அலிகர் என்று பல நகரங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்ததுடன் விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். சமகால இந்திய ஆளுமைகள் பலரைப் பற்றியும் அவர்களது கருத்துநிலைகள் பற்றியும் எழுதியுள்ளார். ஆக, தங்கியிருந்த வீட்டிலிருந்து பார்த்தவைகளும், பயணம் செய்த வீதிகளிலிருந்து தெரிந்து கொண்டவைகளும், சமகால  இந்திய வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருந்த ஆளுமைகளைப் பற்றிய கருத்து நிலைகளும் கொண்டதாக அவர்  கண்ட இந்தியா வை உருவாக்கியுள்ளார் ஹாலித். வீட்டிலிருந்து பார்த்த இந்தியாவை ஒன்பது இயல்களிலும் நெடுஞ்சாலையில் கண்டடைந்த இந்தியாவை எட்டு இயல்களிலும் 'உருக்குப் பானை'யில் கொதித்த இந்தியாவை ஒன்பது இயல்களிலும் ஏறக்குறைய சம அளவில்  நூலில் பதிவு செய்திருக்கிறார்.

வீடு

அன்சாரியின் வீட்டில் வாழ்ந்த இஸ்லாமிய பெண் ஜோஹ்ராவைப் பற்றி இப்படி எழுதுகிறார்: "ஒரு காலை முக்காடு அணிந்த பர்தாவுக்குள்ளும் மற்றொரு காலை புரட்சி மலர் தூவும் 

விடுதலைக்குள்ளும் ஊன்றி நடப்பது சாத்தியமாகுமா?"

( ப. 35). " மீனுக்கு நீச்சல் அடிப்பது மாதிரி சரோஜினிக்குப் பேச்சுக்கலை" என்று அதே  வீட்டில் தான் சந்தித்த சரோஜினி நாயுடுவைப் புகழ்கிறார். அவரையும் 'இந்துக்களின் இந்து'  மீராபென், மரபுமீறாத நவீனமான பேகம் அன்சாரி, மரபுக்கும் நவீனத்துக்கும் இடையில் ஊடாடிய  முன் சொன்ன ஜோஹ்ரா போன்ற பல பெண்களையும் அன்சாரியின் வீட்டில் தான் ஹாலித் சந்திக்கிறார்.  இந்தியப் பெண்களின் மாதிரிகளான இப்பெண்களை விவரிப்பதின் ஊடாக ஒட்டுமொத்த இந்தியப்பெண்கள் பற்றிய தம் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

" அடிக்கடி எச்சில் துப்பி, மூக்கைத் துடைக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. பல இடங்களில், இன்னும் குறிப்பாகக் கிராமங்களில் சாக்கடை வசதி கிடையாது என்பது துர்நாற்றமான உண்மை. ஆனால் அந்த நாற்றம் அவர்கள் உடம்பிலிருந்து வருவதில்லை"( ப.41). இது குறிப்பாக பெண்களைப் பற்றியது அல்ல, பொதுவாக இந்தியர்களைப் பற்றிய அவரது கருத்து. இப்படி மேயோவை போல உண்மையையும் சொல்லுகிறார் ஆனால் இந்த உண்மைகள் மேயோ போல தேசியரைக் கோபமூட்டவில்லை.

" சாதி முறை பற்றி அவரது பேச்சில் தெளிவு இல்லை, ஆனால் தீண்டாமை மீதான கண்டனக் குரலில் தெளிவும் வீரியமும் இருந்தது. இந்து மதம் 

உயிர்ப்போடு இருக்க, தீண்டாமை பழக்கம் வேரோடு சாய வேண்டும்" (ப.76). இது இந்தியாவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் ஜாதி பற்றிய கருத்தைக் குறித்து ஹாலித் செய்த விமர்சனம். ஹாலித் யாரைப் பற்றி கூறுகிறார்  என்று ஒரு சாதாரண வரலாற்று மாணவன் கூடச் சொல்லிவிட முடியும். காந்தியைப் பற்றிய இந்தப் பார்வை  நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் ஹாலித்தின் ஆற்றலைக் காட்டுகிறது.

ஜாமியாவில் நிகழ்த்திய உரைகள்,அங்கு கண்ட மனிதர்கள், சமகால இந்தியாவில் அதாவது 1930 களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த  வகுப்பு வாதம், தேசியவாதம் போன்ற  பல கருத்தாக்கங்கள்  குறித்தும் பேசியுள்ளார் ஹாலித்.

 

வீதி

'நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் கண்டடைந்த இந்தியா' என்றே நூலின் இரண்டாம் பாகத்திற்குத் தலைப்பிட்டுள்ளார் ஹாலித். இந்தப் பகுதியில் அலிகர் தொடங்கி , கல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்டு பம்பாய் வரை தான் பயணித்த இந்தியாவின் எட்டு நகர அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். 

 '170  முஸ்லிம் பெண்கள், சொத்துரிமைக்காக கிறிஸ்துவ மதம் தழுவியதாக' விருந்தினர் ஷா நவாஸ் குறிப்பிட்டதைப் பற்றி ஹாலித் பின்வருமாறு பேசுகிறார்: " தன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு, இணக்கமான மாற்றுச் சமூக 

நம்பிக்கைகளைக் கைக்கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இயல்பாக வாய்க்க வேண்டும். ஆனால் இது பொருளாசைகளை மையமிட்டு நடந்தால், அருவருப்பாக இருக்கும்"( ப.149).

லக்னோவிற்கு அருகில் இருந்த சில கிராமங்களையும் அங்கிருந்த சில வீடுகளையும் பார்த்துள்ளார். அதைப் பற்றிய விவரணைகளுள் ஒன்று." முதல் வீட்டைக் காட்டிலும் ஓரளவு நல்ல வீடுகளும் அங்கு இருந்தன. அப்படியென்றால் பெயரளவில் படுக்கைகளும் துணிமணிகளும் தட்டுமுட்டுச் சாமான்களும் இருந்தன என்று பொருள்"( ப.186).

"நான் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே ஓடி வந்து ஓவியத்தை மறைத்தபடி கண்முன் நின்றார். அந்த ஓவியத்தில் இருந்தது அவரின் வழிபடு கடவுள் என்றும் இஸ்லாமிய நாத்திகர் ஒருவர் அதைக் காண்பதை அவர் விரும்பவில்லை என்றும் பேகம் வாசிம் பின்னர் [எனக்குச்] சொன்னார்"( ப.186).

"[காசி] நகரின் அருவருப்பான, பிசுபிசுப்பு கூடிய கரிய நிறச் சாக்கடை நீர்  தெப்பங்களின் ஊடாக கங்கை நதியில் கலந்தது. இத்தகைய சூழலில் இங்கு ஏன் காலரா, டைஃபாய்டு போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கங்கை நீரில்  கிருமிகளை அழிக்கும் விசேஷ சக்தி இருப்பதாக, இந்நீரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்  

சொன்னதாய் என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள்"( ப.206).

இது காசி நகரைப் பற்றிய ஹாலித்தின் பார்வை. இந்தப் பத்தியின்  முதல் பாகமான குற்றச்சாட்டோடு  சொல்வதை நிறுத்தி இருப்பார் மேயோ. ஆனால் ஹாலித் இரண்டாவது பகுதியான சமாதானத்தையும் சேர்த்து சொல்லி விடுகிறார். 

பெரும்பாலும் இஸ்லாமியர்களையும் அவர்களது சமயக் கருத்துகளையுமே பேசி வந்த ஹாலித், கல்கத்தாவில் வரலாற்று முறையில் மாறிவந்தது உள்பட ஆரிய சமாஜம் பற்றியும் விரிவாகப் பேசுகிறார். கல்கத்தா காளிக்கு  உயிர்ப்பலியிட்டு வணங்கும் வழிபாட்டில்  தனக்கு உடன்பாடு இல்லாததைச் சொல்லி இந்து சமயம் பற்றியும் கருத்து தெரிவித்து விடுகிறார். 

பொருளாசையால் மதமாற்றம், ஏழ்மையான வீடுகள், நாத்திக எதிர்ப்பு, தூய்மையற்ற கங்கை நதி, வேறுபட்ட பார்வையுள்ள இஸ்லாம், மாறிவந்த ஆரிய சமாஜம், உயிர்க்கொலை நிகழும் கோயில் வழிபாடு ஆகியவைகளின் சமகால இந்திய நிலைகளைக் கண்டு காட்டுகிறார்.

 

வியக்தி

மூன்றாம் பகுதியில் இந்து மதம், இஸ்லாம், மகாத்மா காந்தி, அவரது  கொள்கைகள், நேரு, கான் அப்துல் கபார்கான, ஒற்றை இந்திய தேசமா? அல்லது இரட்டை இந்திய தேசங்களா?,

இந்தியாவில் பிரிட்டிஷார் என்ற எட்டு அத்தியாயங்களில் பலவற்றைப்  பற்றி பேசுகிறார் ஹாலித். என்றாலும் இந்த நூலின் முக்கிய விவாதமே இப்பகுதியில் இடம்பெறுவதுதான். ஒற்றை தேசத்தை வலியுறுத்தும் இஸ்லாமியர்களையே இந்தியா அதிகம் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் பொருட்டு கான் அப்துல் கபார்கான் போன்ற வலிமைமிக்க பதானியத்  தலைவர்கள் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் சொல்வதுதான். எனினும் அதற்கு எதிர்நிலையான பாகிஸ்தான்(PAKISTAN) என்ற பெயரை முன்னுரைத்த ரஹமத் அலியின் கருத்துக்களையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஹாலித்  இஸ்லாமியருக்குள் நடுநிலையாளர் என்ற தோற்றத்தை அது தருகிறது.

ஒருவகையான 'அகநிலையான பற்றுத'லே இந்தியாவைப் பற்றி எழுதத் தூண்டியது என்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் இந்தியாவில் வாழ்ந்த இந்து, இஸ்லாமிய, பிரிட்டிஷார் என்ற மூன்று வகையினரைப் பற்றி எழுதியிருந்தாலும் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகத்து இஸ்லாமிய அல்லது பொதுச் சமூகம் அறிய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கலாம்.

1935 என்பது இந்தியா, விடுதலையை நெருங்கிவிட்ட காலம். இந்திய முஸ்லிம்கள், இந்தியா என்ற ஒற்றை தேசத்தை விரும்புகின்றனரா? பாகிஸ்தான் என்ற புதிய தேசத்தை' அவாவுகின்றனரா?  என்பதைத் தான் புரிந்து கொள்ளவும், அதை உலகிற்கு அறிவிக்கவுமான முயற்சி இந்த நூல் எனத் 

தோன்றுகிறது. அதனால் தான் தனது பெரும்பாலான நூல்களைத் துருக்கி மொழியில் எழுதிய ஹாலித்  இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதினார். ஹாலித் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பிறகே துருக்கி மொழியில் இந்நூல் வெளியானது.

விடுதலை அடையாத, பிரிக்கப்படாத, ஒரு குறிப்பிட்ட கால இந்தியாவைப் பற்றிய பொதுவாக  ஒரு வெளிநாட்டவரின்,குறிப்பாக  ஒரு இஸ்லாமியரின், கூர்மையான, விவரமான அவதானிப்பை அறிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய இஸ்லாமியரின்  வரலாற்றை, வாழ்வை , எதிர்காலம் பற்றிய விருப்பத்தை உலகத்துக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்பட்ட நூல் இது  எனலாம். எழுதப்பட்டு 90 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நூல் படிப்பதற்கு சுவையான வரலாற்று நூலாக  விளங்குகிறது. அதற்கு காரணம் சம்பவங்களைச் சொல்வதோடு அமையாமல்  அதன் அடிநாதமாக திகழ்கிற  மனித உணர்வுகளை விளக்குவது தான் என்று தோன்றுகிறது. அதிலும் காந்தி, கான் அப்துல் கபார்கான் பற்றிய அலசல்கள் நுணுக்கமானவை, ஆழமானவை, ஆச்சரியமானவை, சுவையானவை, தெளிவானவை.   

இந்த நூலை மொழிபெயர்க்க தேர்வு செய்ததன் காரணம் ஏதும் நூலில் சொல்லப்படவில்லை. 'வரலாறு, அரசியல், சமூகம், மதம், பண்பாடு என்று பல தளங்களில் பயணம் செய்யும்  முக்கியமான ஒரு வரலாற்றுப் பிரதி' என்று அவர்கள் குறிப்பிடுவதே காரணமாக இருக்கலாம். 

ஆங்கில நூலை நான் வாசிக்கவில்லை அதனால்  ஒப்பிட்டு   மொழிபெயர்ப்பின் சரித்தன்மையைப் பற்றி சொல்ல இயலாது. ஆனால் மொழிபெயர்ப்பு பிரதி வாசிக்கச் சுவையாக உள்ளது.   இந்நூலைத்  தமிழாக்கியுள்ள இஸ்க்ராவின் இளம் வயது ஆற்றல் மகிழ்ச்சி அளிக்கிறது.

"கப்பல் போன்ற கப்பல் மேலும் கீழுமாக ஆடியது"( ப.18) என்று ஒரு சுவையான தொடர் வருகிறது. பக்கவாட்டில் தான் பெரும்பாலும் கப்பல்கள் ஆட்டம் காணும் என்றாலும் இத்தொடரில் 'கப்பல் போன்ற கப்பல்' என்ற வெளிப்பாடு நன்று. முதல் கப்பலுக்குப் பெரியது என்று பொருள். " அவர் [மகாத்மா காந்தி ] மிகவும் சிக்கனமாகப் பேசுவது கூட, அன்றாடம் பேசி அலுத்துப் போனதின் அடையாளமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது"( ப. 63) என்ற ஒரு விவரணை.  ஆங்கிலம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, தமிழ் நன்றாகப் புரிகிறது.

"கஸ்தூரிபாய் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டவர்களுக்கு 'உடன்கட்டை ஏறுதல்' வழக்கம் அந்தக் காலத்தில் தன்முனைப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது" (ப.70).   இந்தத் தமிழ்த்தொடர்  நூலாசிரியரின் கூர்மையான அவதானிப்பையும், மொழிபெயர்ப்பாளரின் புரிந்துகொள்ளலையும், வெளிப்படுத்தலையும், சதி என்ற வழக்கத்திற்கு எதிரான நூலாசிரியரின் மனநிலையையும்  ஒருசேர விளக்கி விடுகிறது.

சென்று போன நாட்கள்(ப. 172), இராப்பாடி(ப. 254) போன்ற வித்தியாசமான தமிழ்த் தொடர்களை எல்லாம் பயன்படுத்தி நூலை வாசகனுக்கு அருகில் நிறுத்துகிறார் மொழிபெயர்ப்பாளர். ஒரு பதானியாக இருந்து கொண்டு அகிம்சையை, கான் அப்துல்  கபார் கான்  கடைப்பிடித்தது பற்றி விவரமாக எழுதியது பெரும் சுவையாக  உள்ளது. இது தெளிவாகப் புரியும்படி தமிழில் வந்துள்ளது.

"வன்முறைக்கு ஆளாகும்போது, எவ்விதப் பதில் தாக்குதலும் இன்றி, முழுவதுமாக உம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு, கொண்ட கொள்கைக்கும் பிடிப்புக்கும் உறுதியாக இருந்து பேச்சு, செயல் உட்பட அனைத்து வழிகளிலும் வன்முறையைப் பிரயோகிக்காமல் இருப்பதே அகிம்சைக்கு வழிவகுக்கும் பயிற்சி"(ப.361).

நூலாசிரியர் தான் பார்க்கும் எதையும் சாதாரணமாக கடந்து போவதில்லை. ஒரு சமாதியைக் கூட விவரிக்காமல் விடவில்லை.  துக்ளக்கின் சமாதியைப் பற்றி எழுதிய வரிகளுள் சில  பின்வருவன: "அவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் நேர்மையானவர். ஓரளவு முரட்டுத்தனமான உறுதியோடு இருந்தார்.  ஒரு வீரனுக்குப் போர்ப் பாசறையில் எடுக்கப்படும் கூடாரத்தைப் போல், காட்சிக்கு எளிமையாய் உயிரோட்டத்துடன் இருந்தது அந்தக் கல்லறை"( ப.39). தமிழில் எழுதப்பட்டது போலவே இருப்பதைக் கவனியுங்கள்.

மூலநூலோடு ஒப்பிட்டுப் பார்க்காததால்  சில சந்தேகங்கள் உள்ளன.

"இந்திய நாடாளுமன்றத்தை இவர் [சரோஜினி] தலைமை தாங்கி நடத்திய போது, கிழக்கின் பெண்களுக்கு மெய்சிலிர்த்த

அந்த நொடியை  இன்னும் நான் மறக்கவில்லை"( ப. 47). இது புரியவில்லை. சரோஜினி இந்தப் பதவியை எப்போது அலங்கரித்தார் என்பது தெரியவில்லை. 

"மேற்கத்திய சித்தாந்தத்தின் பிரெஞ்சு கால்வாய் எண்ணவோட்டங்களை விட ஆங்கிலோ- சாக்சன் எண்ணவோட்டங்கள் அதிகம்  விரவியிருப்பதாக நான் கருதுகிறேன்"(ப.110).  பிரெஞ்சு கால்வாய் எனக் குறிப்பிடப்படுவது எதுவென்று புரியவில்லை. 

"தீண்டாமை நிலைக்க வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும் என்று சாதி இந்துக்களின் மனதில் நன்றாகப் புரியும்படி [காந்தி]பாடம் நடத்தினார்"(ப.77). இதற்கான மூல ஆங்கில வாசகத்தைப் படிக்காமல் இந்த மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லை. 

இப்படிச் சில  உள்ளன என முடிக்க விரும்பினாலும் இதைச் சொல்லி முடித்துக் கொள் என்று மேலும் சில, என்னை வற்புறுத்துகின்றன. அவையாவன.

சில சொற் பயன்பாடுகள்: " வெளியி[லி]ருந்து பார்த்தால் அவரை ஓர் அனைத்துமட்ட  இஸ்லாமியர் என்று சொல்லிவிடலாம்"(ப.181). இது என்ன "அனைத்து மட்ட"? என்று தெரியவில்லை.

'கதவு திறந்துகொண்டே இருந்தது'( ப. 63), 

'முன்வரிசையில் ஒரேயொரு பல் தொடுத்துக் கொண்டிருந்தது'(ப. 60) என்பனவற்றின் பொருள் விளங்கவில்லை. 'வெண் தண்ணீரில் குளிப்பாட்டி'(ப. 164) என்றொரு  வாக்கியம் ஆரம்பிக்கிறது, வெந்நீரில் குளிப்பாட்டி இருக்கலாம். 'துளாவி பார்க்கும் ஆர்வத்தை'க் (ப.164) கொஞ்சம் அடக்கிக்கொண்டு  துழாவிப் பார்த்திருக்கலாம்.

ர,ற,ன,ண ஆகிய எழுத்துகள் இன்றைய பேச்சில், ஒலிப்பில் தான் வேறுபாட்டை இழந்து தவிக்கின்றன. எழுத்து வடிவில் தம்இருப்பை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளன. குரல் மூலம் தட்டச்சு (voice to text) செய்தாரோ? 

சுவற்றில்(சுவரில்), தருவாயில் (தறுவாயில்) போன்ற தவறுகளைக் கண்டிப்பார் யாருமில்லை. பீத்தல், உத்துப் பார்த்தல்  போன்ற  தவறான வடிவங்களை ( பீற்றல் , உற்றுப் பார்த்தல் ) முகநூலில் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன.

மொழிபெயர்ப்பு அழுத்தமாக உள்ளது என்று பாராட்ட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு வசதியாக 'மனச்சாட்சி, சீர்த்திருத்தம், உபச்சாரம், நடைப்பெற்றுள்ளன" எனச் சில கண்ணில் படலாம். 

அழகுத் தமிழில் செய்யப்பட்டுள்ள நூலின் வாசிப்பைத் தடுத்து நிறுத்தும் பெரும்பான்மைப் பிழைகள், னகரம் வரவேண்டிய இடங்களில்  ணகரம்  வருவதுதாம். 'பெரும்பாண்மை, சிறுபாண்மை, கணவான், பிண்ணிப் பினைந்தது' போன்றவைதாம். இவை போன்ற அச்சுப்பிழைகளை அடுத்த பதிப்பில்  தவிர்த்து விட்டால் இந்த மொழிபெயர்ப்பு நூல், அருமை, அருமை, அருமை.


'நான் கண்ட இந்தியா', ஆசிரியர்: ஹாலித் எடிப், தமிழில் : இஸ்க்ரா, கிழக்குப் பதிப்பகம், 2024, பக்கம் 408, விலை ரூபாய் 450.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பழ. அதியமான்

பழ. அதியமான் (பிறப்பு: 1961) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். நவீன தமிழகத்தின் வரலாறு தொடர்பாக முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். நூல்கள்: தி.ஜ. ரங்கநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப், சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடி பதிப்பாளுமை), வைக்கம் போராட்டம், பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்.








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

காலச்சுவடுரமீஸ் பிலாலிகவிதையியல்பிம்ப அரசியல்அசகவதாளம்பொம்மை கார்கவ்வாலிஆலடியான்இலக்கிய நிகழ்வுகள்அறபு இலக்கியம்இணைய இதழ்ராஜ் கௌதமன்டோனி பிரஸ்லர்பெருங்கொங்கை பூத்தாள்பின்னவீனத்துவம்தலித் இலக்கியம்தாரா கேம்பெல்வாசகர் கூட்டம்சிறுகதைமண்வாசனை கதைகள்கருத்தரங்கங்கள்கஸல்ஆய்வுகிருஷ்ணமூர்த்திகிராமியம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்நேர்காணல்சீர்மைபேட்டிபிப்ரவரி தினம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!