கட்டுரை நூல் மதிப்புரை

முரண்களின் வழியே மனிதனை நோக்கி

இப்ராஹிம்
02 Sep 2026
0

ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்த பிறகு, அதிலிருந்து எந்தக் கதையை நினைவில் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமே அந்தத் தொகுப்பின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அந்தக் கதைகள் வாசகரின் மனதில் எந்தக் கேள்வியை விட்டுச் செல்கின்றன, எந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன என்பதுதான் முக்கியம். அதுவும் அந்தக் கதைகள் மனிதனைப் பற்றி நாம் வைத்திருக்கும் சில பிம்பங்களை உடைத்துப் போட்டால், நீண்ட நாட்கள் நம்மோடு பயணிக்கும். இவான் கார்த்திக்கின் 'சற்றே இனிக்கும் கரும்புகள்' அவ்வகைப்பட்டது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் பலதரப்பட்ட களங்களில் நிகழ்கின்றன. நாஞ்சில் வட்டார வாழ்வியலில் இருந்து தொடங்கி வெளிநாட்டு நிலப்பரப்புகள் வரை செல்கின்றன. குடும்பம், காதல், மதம், மரணம், சாதி, நினைவு, நவீன வாழ்க்கை என்று பல விடயங்களைப் பேசுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் வாசித்து முடித்தபோது, இந்தத் தொகுப்பை இணைக்கும் ஒரு சொல்லை மட்டும் கூற வேண்டும் என்றால் அது முரண் என்பதுதான்.

பொதுவாக மனிதனைப் பற்றிப் பேசும்போது அவன் நல்லவனா? கெட்டவனா? என்ற இரு எல்லைகளுக்குள்தான் நம் சிந்தனை சென்று நிற்கிறது. ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. ஒருவன் நல்லவனாக இருந்தாலும் அவனுக்குள் வன்முறை இருக்கிறது. கோபம் இருக்கிறது. அதேபோல் கொடுமையானவனாகத் தோன்றுபவனுக்குள்ளும் அன்பு எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கிறது. இந்த இரண்டையும் பிரித்து மனிதனைப் பார்க்க முடியாது என்பதைத்தான் இவானின் கதைகள் உணர்த்துகின்றன.

சற்றே இனிக்கும் கரும்புகள் கதையை எடுத்துக்கொண்டால், அந்தக் கதையின் முடிச்சான திருமணமோ, வரதட்சணையோ முக்கியமாகப் படவில்லை. தன் கொள்கைக்கும், தன் அம்மாவின் வாழ்வியல் அனுபவத்திற்கும் நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் ஒருவனது மனம்தான் முக்கியமாகப் பட்டது. வாழ்க்கையில் நம்முடைய கொள்கைகளை நாம் பிடித்துக்கொண்டு வாழ நினைக்கிறோம். ஆனால் சில நேரங்களில் நம்மைவிட நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்வு அந்தக் கொள்கைகளை விடப் பெரியதாக நின்றுவிடுகிறது. அந்த இடத்தில் சரி, தவறு என்று பிரித்துச் சொல்ல முடியாத ஒரு மனநிலை உருவாகிறது.

இந்தக் கதையில் மிகவும் கவரக்கூடியது அதன் இறுதிப்பகுதி. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்த தம்பதியினர், அடுத்த கணமே கொஞ்சிக் குழாவிச் செல்வதைப் பார்க்கும்போது கதைசொல்லியின் மனம் மாறுகிறது. அதுவரை இருந்த இறுக்கம் கரைகிறது. கரும்பின் இனிப்பு அவனுக்கு அப்போதுதான் புரிகிறது. இந்த இடத்தை ஒரு படிமமாகப் பார்க்கலாம். மனித உறவுகள் இப்படித்தான். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு பொருள். அதற்குள் வாழ்பவர்களுக்கு முற்றிலும் வேறொரு பொருள். அதனால்தான் ஒரு மனிதனின் வாழ்வை அவனைப் பார்த்து மட்டும் புரிந்துகொள்ள முடியாது என்று தோன்றுகிறது.

விதைக்குள்ளும் இருப்பது கதையிலும் இதே முரண்தான் வேறொரு வடிவத்தில் வருகிறது. நம் மனதில் உருவாகும் வெறுப்போ, கோபமோ ஒரே நாளில் தோன்றுவதில்லை. அது ஒரு விதை. அந்த விதை எப்போது முளைக்கும் என்று நமக்கே தெரியாது. பல வருடங்களாக அமைதியாக இருந்த மனம், ஒரு சந்திப்பால் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்குகிறது. ஆனால் மனம் கொந்தளிப்பது போல உடல் செயல்படுகிறதா என்றால் இல்லை. இந்த இடம்தான் என்னை மிகவும் ஈர்த்தது. நம்முடைய உடலும் மனமும் எப்போதும் ஒன்றாக இயங்குவதில்லை. அதனால்தான் மனிதன் பல நேரங்களில் தன்னுடைய இயலாமையின் முன் தோற்றுப் போகிறான். அந்த இயலாமையே இந்தக் கதையின் மையம் என்று எனக்குத் தோன்றியது.

தண்ணீர் பாம்பு கதையை வாசித்தபோது, முதலில் அது ஒரு சாதாரணக் கதையாகத்தான் பட்டது. ஆனால் தலைப்பை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் நினைத்துப் பார்த்தபோதுதான் அதன் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட்டது. விஷமில்லாத பாம்பு என்றாலும் அது பாம்புதான். வாழ்க்கையிலும் அப்படித்தான். நம்மை அழிப்பவை எல்லாம் வெளிப்படையான எதிரிகளாக இருக்க வேண்டியதில்லை. நம்முடைய மிக நெருக்கமான உறவுகளே சில நேரங்களில் நம்முடைய வாழ்வை மெதுவாகச் சிதைத்து விடுகின்றன. அந்தத் தாய் அப்படித்தான் கோபாலின் வாழ்க்கையில் இருக்கிறாள். அதே நேரத்தில் அவளையும் முழுமையாகக் குற்றம் சொல்ல முடியவில்லை. அவளும் அவள் வாழ்ந்த வாழ்க்கையின் விளைவுதான். இதில் யார் யாருக்குத் தண்ணீர்ப் பாம்பாக இருக்கிறார்கள் என்று சூசகமாகக் கூறுவதாகப் படுகிறது. 

இத்தொகுப்பில் ஈர்த்த இன்னொரு விஷயம், படிமங்களை ஆசிரியர் கையாண்டிருக்கும் பாங்கு. கரும்பு, விதை, தண்ணீர் பாம்பு, சங்குப்பூ, சிலுவை என்று ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு படிமம் வருகிறது. ஆனால் அந்தப் படிமங்கள் கதையை அலங்கரிப்பதற்காக இல்லை. அந்தக் கதாபாத்திரங்களின் மனநிலையை இன்னொரு தளத்தில் நகர்த்துகின்றன.

தீராவிஷம், இந்தத் தொகுப்பில் மொழியால் என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் ஒன்று. சங்க இலக்கியங்களின் கதாபாத்திரங்கள் போல ஒரு நாட்டார் கதையாடல் தொனியில் இருந்தது. ஆனால் அதைத் தாண்டி ஈர்த்தது, வாழ்வில் நிகழும் பேரிழப்புகளுக்கு மனிதன் தேடும் காரணங்கள்தான். "நாம் யாருக்குத் தீங்கு செய்தோம்?" என்ற கேள்வி இந்த வாழவில் நமக்கு வரக்கூடியதுதான் ஆனால் அந்தக் கேள்விக்கு வாழ்க்கை ஒருபோதும் பதில் சொல்லுவதில்லை. அந்தப் பதில் இல்லாத இடத்தில்தான் மனிதன் அவனுக்கு நம்பிக்கையை உருவாக ஒரு கதையாடலை உருவாக்குகிறான் என்று தோன்றுகிறது. இந்தக் கதையில் இருக்கும் படிமங்கள் பல கருத்தாக்கங்களைக் கிளை பரப்பி விரிவடைத்துக் கொண்டே செல்வது இதனின் மற்றொரு சிறப்பம்சம். 

ஓர்மை கதையைப் பொறுத்தவரை, இந்தத் தொகுப்பில் இருக்கும் மிகவும் அமைதியான கதைகளில் இதுவும் ஒன்று. எந்தவிதமான பெரிய சம்பவங்களும் இல்லை. ஆனால் வாசித்து முடித்த பிறகு மனதில் நீண்ட நேரம் தங்கிய கதை. இதற்குக் காரணம், இந்தக் கதை முதுமையைப் பற்றி மட்டும் பேசவில்லை. நினைவுகள் எப்படி ஒரு மனிதனை உயிரோடு வைத்திருக்கின்றன என்பதைப் பேசுகிறது.

எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு முதியவரை அவருடைய பேரன் மட்டும் பார்த்துக்கொள்கிறான். இதை ஒரு நன்றியுணர்வின் கதையாக மட்டும் பார்க்க முடியவில்லை. ஒருவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக வாழ்ந்துவிட்டு, இறுதியில் ஏன் தனியாக விடப்படுகிறான் என்ற கேள்வியும் இதில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்தக் கதையில் வரும் அந்த முதியவர் திரும்பத் திரும்பச் சொல்லும் கதை, அவருடைய மனைவி அவர் இறந்த பிறகும் அதையே சொல்லிக்கொண்டிருப்பது என்று பார்க்கும்போது, மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் வாழ்ந்த அனுபவங்கள் இறப்பதில்லை, ஒருவேளை நினைவுகள்தான் மனிதர்களின் இன்னொரு வாழ்க்கையாக இருக்கலாம். இந்தக் கதையில் வரும் தேயிலை மரம், அந்த முதியவரின் பேருருவமாக இருக்கிறது. இவானின் கதைகளில் இப்படியான படிமங்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் வந்து அமர்வது லயிக்கச் செய்கிறது.

புனித வெள்ளி, இந்தத் தொகுப்பில் நான் மிகவும் ரசித்த கதைகளில் ஒன்று.  இந்தக் கதையின் மையம் மதமும் அன்பும் அல்ல. தொடர்ந்து ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனம்தான்.

பொதுவாக அன்பு எல்லாவற்றையும் வென்றுவிடும் என்று நாம் நம்ப விரும்புகிறோம். ஆனால் அன்பு மட்டும் போதுமானதா என்ற கேள்வியை இந்தக் கதை எழுப்புகிறது. ஒருவன் எப்போதும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், அவனுக்குள் தேங்கும் கோபம் எங்கே போகும்? அந்தக் கோபம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெளிப்படாதா? என்ற கேள்வியை இந்தக் கதை தவிர்க்கவில்லை.

இந்தக் கதையின் முடிவு என்னை மிகவும் பாதித்தது. இயேசுவைப் போல வாழ நினைத்தவன், தன்னுடைய கோபத்தின் முன் தோற்றுப்போகிறான். ஆனால் அதற்குப் பிறகு அவன் அடையும் குற்றவுணர்வும் அவனுடையதே. மனிதன் அன்புக்கும் வன்முறைக்கும் நடுவே எப்போதும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறான். இந்த முரணை மிக அழகாக இந்தக் கதை பிடித்திருக்கிறது. 

டெவலப்பர் கதையில் இவான் எடுத்துக்கொண்ட களம் இந்தக் காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு மனிதனின் அடையாளம் அவன் யார் என்பதை வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. அவனைச் சுற்றி இருப்பவர்கள் யார், அவனுடைய பெற்றோர் யார், அவன் என்ன வேலை செய்கிறான், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று பல அடுக்குகளின் வழியாகத்தான் அவனை இந்த உலகம் பார்க்கிறது.

இந்தக் கதையில் தன்னுடைய தாயைத் தேடிக்கொண்டிருக்கும் மகனின் மனம் என்னை அதிகம் ஈர்த்தது. அவன் தன்னுடைய அடையாளத்தையே தேடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவன் வாழும் உலகம் அவனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பதில்லை. அவனைப் பற்றிய தீர்ப்புகளை முன்பே சொல்லிவிடுகிறது. இந்தக் கதையின் முடிவு எனக்கு முழுமையாகப் பொருந்தவில்லை. ஆனால் அதற்காக அந்தக் கதையின் மையக் கேள்வி வலுவிழந்துவிடவில்லை. சில கதைகள் நமக்குப் பிடிக்காமல் போனாலும் அவை எழுப்பும் கேள்விகள் நம்மோடு தங்கிவிடும். 

அஞ்சலி கதையை வாசிக்கும்போது, நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நம்மோடு தினமும் வேலை செய்யும் மனிதர்களைப் பற்றி நமக்கு உண்மையில் எந்த அளவுக்குத் தெரியும்? அவர்களுடைய வாழ்க்கை, துயரம், தனிமை இவற்றில் எதுவுமே தெரியாமல் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்கிறோம். அவர்கள் இறந்த பிறகும், ஒரு மின்னஞ்சலின் வழியாகத்தான் அந்தச் செய்தியை அறிகிறோம்.

இந்தக் கதை ஒரு நிறுவனத்தைப் பற்றிய கதை மட்டுமன்று. உணர்வுகளையே இயந்திரத்தனமாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தைப் பற்றிய கதையாகத்தான் எனக்குப் பட்டது. இப்போது இரங்கல் தெரிவிப்பதற்குக்கூட நம்முடைய சொற்கள் நம்மிடம் இல்லை. அதையும் வேறு ஒன்றிடம் கேட்டுத்தான் எழுத வேண்டிய நிலை வந்திருக்கிறது. தொழில்நுட்பம் வளர்வது தவறு இல்லை. ஆனால் மனிதர்களின் உணர்வுகள் அதனோடு சேர்ந்து தேய்ந்து போகின்றனவோ?

இவான் மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளை எழுதுகிறார். பெரிய சம்பவங்களை உருவாக்கி அதிர்ச்சியடைய வைப்பதைவிட, சாதாரணமான வாழ்க்கைக்குள் மறைந்து கிடக்கும் அசாதாரணமான தருணங்களைத் தேடிச் செல்கிறார்.

கூரிருள் களம் இந்தத் தொகுப்பில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த கதைகளில் ஒன்று. இந்தக் கதையை வாசித்த பிறகு உடனடியாக அந்தக் கதையை முழுமையாக உள்வாங்க முடியவில்லை, நேரம் எடுத்துக்கொண்டது. கதையின் மையத்தில் இருந்த கேள்வியாக நான் பார்த்தது, மனிதன் தேடுவது உண்மையில் எதை? விடுதலையையா? இல்லை தன்னிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரு இடத்தையா?

வாழ்க்கையில் நெருக்கடிகள் வரும்போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு எங்காவது சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு கணம் தோன்றும். ஆனால் நம்முடைய மனதை மட்டும் எங்கேயும் விட்டுவிட்டுச் செல்ல முடியாது. அது நம்மோடுதான் வருகிறது. இந்தக் கதையில் வரும் சங்குப்பூ அப்படித்தான் எனக்குப் பட்டது. அது ஒரு பூ மட்டுமல்ல. அவன் சுமந்து கொண்டிருக்கும் நினைவாகவும், அச்சமாகவும், விடுபட முடியாத வாழ்வாகவும் தோன்றியது.

இந்தக் கதையில் குரு கூறும், "விடுதலை நாம் நமக்கே அளித்துக் கொள்வது" என்ற வரி, கதையின் சாரத்துடன் தொகுப்பில் இருக்கும் பல கதைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது. மனிதனை அவனிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. அவனே அவனை எதிர்கொள்ள வேண்டும்.

பிம்பப்பெருக்கு கதையை வாசித்தபோது, இவானின் கதைகளின் பரப்பு இன்னும் விரிவடைவதை உணர முடிந்தது. இந்தக் கதை நாஞ்சில் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்குச் சென்றாலும், பேசுவது மனிதர்களைத்தான். ஈழத் தமிழரின் நினைவும், இன்னொரு நாட்டின் தொன்மமும் ஒன்றாக இணையும்போது, தாய் என்ற படிமம் உருவாகிறது. இந்தத் தாய் என்பது ஒரே நேரத்தில் நிலமாகவும், மொழியாகவும், நினைவாகவும் மாறுகிறது.

மனிதன் ஏன் தன்னுடைய வேர்களை இவ்வளவு இறுகப் பற்றிக்கொள்கிறான்? அது அவனுக்கு ஆறுதலா தருகிறது? இல்லை இன்னொரு துயரத்தையா உருவாக்குகிறது? இந்தக் கதையில் அதற்கான நேரடியான பதில் இல்லை. ஆனால் அந்தக் கேள்வியை உருவாக்குகிறது. கதாசிரியர் அதற்கான பதில்களைச் சொல்லுவதில்லை. கேள்விகளை மட்டும் நம்மிடம் ஒப்படைத்துவிட்டுக் கடந்து செல்கிறார்.

மூலப் பிரகிருதிக்கு வணக்கம், மிகவும் கனமான கதைகளில் ஒன்று. ஒரு குழந்தையை இழந்த தாயின் மனநிலையைப் பற்றி எழுதுவது எளிதான காரியம் இல்லை. அதிலும் அந்தத் தாயின் இயலாமையை வாசகர் உணரும் அளவுக்கு எழுதுவது இன்னும் கடினம். இந்தக் கதையில் அபி என்ற கதாபாத்திரத்தின் மீது எனக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக அவளுடைய கோபம்தான் என்னை அதிகம் பாதித்தது. வாழ்க்கையை நோக்கி எழுப்படும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதபோதுதான் மனித மனம் வேறு உலகங்களை உருவாக்கத் தொடங்குகிறது. அபியின் மனமும் அப்படித்தான் செய்கிறது. அவளுடைய கற்பனைகள், அவளுடைய கோபம், அவளுடைய வாழ்வியல் மீதான வெறுப்பு எல்லாமே அந்தப் பேரிழப்பின் நீட்சிதான். ஒரு பெற்றோராக அந்தத் தாயின் இயலாமையை என்னால் உணர முடிந்தது. அதனால்தான் இந்தக் கதை மற்ற கதைகளைவிட அதிக அசௌகரியத்தைத் தந்தது.

சில்வர் கலர் க்ராஸ் மற்றும் சரியாகப் பொருந்திப் போகுதல் ஆகிய கதைகள் என்னை மற்ற கதைகளைப் போல ஈர்க்கவில்லை. ஆனால் அதற்காக அவை முக்கியமற்ற கதைகள் என்றும் கூற முடியாது. குறிப்பாக சில்வர் கலர் க்ராஸ் கதையில் சாதியைப் பற்றிய உரையாடல் நேரடியாக இல்லாமல், மனிதர்களின் அணுகுமுறையின் வழியாக உருவாகிறது. ஒரு சமூகத்தின் வரலாற்றை மறந்துவிட்டு மனிதநேயம் மட்டும் போதும் என்று கூறிவிட முடியுமா என்ற கேள்வி அதில் இருக்கிறது.

சரியாகப் பொருந்திப் போகுதல் கதையில் இருக்கும் மையக் கருத்தும் சுவாரஸ்யமானதுதான். மனிதர்கள் தங்களுடைய உண்மையான முகத்தை எல்லோரிடமும் காட்டுவதில்லை. குறிப்பாக நெருக்கமான உறவுகளில்தான் அதிகமான முகமூடிகள் இருக்கின்றன. இந்தக் கருத்து என்னை ஈர்த்தாலும், அதற்காக ஆசிரியர் உருவாக்கிய புனைவு முழுமையாக எனக்குப் பொருந்தாதுபோல இருந்தது. ஆனாலும் அந்த முயற்சி கவனிக்கத்தக்கதாகவே இருந்தது.

இவான் கார்த்திக்கின் கதைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம், இந்தக் கதைகள் எதையும் இறுதியாகத் தீர்மானித்துச் சொல்லவில்லை. மாறாக, மனிதனைப் பற்றிய நம்முடைய தீர்மானங்களையே கொஞ்சம் கொஞ்சமாகக் கலைத்துவிடுகின்றன.

இந்தக் கதைகளில் வரும் மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வாழ்வியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து எல்லோராலும் வெளியே வந்துவிடவும் முடியவில்லை. சிலர் அதற்குள் சிக்கியே வாழ்கிறார்கள். சிலர் அதைக் கடந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் அதனோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரையும் இந்தக் கதைகள் குற்றவாளியாக நிறுத்தவில்லை. அதேபோல், யாரையும் புனிதர்களாகவும் மாற்றவில்லை. இதுதான் இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம் என்று தோன்றுகிறது.

மேலும், இந்தக் கதைகளில் மனிதர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்கள் வாழும் நிலமும் முக்கியம். இயற்கையும் அவர்கள் பேசும் மொழியும் முக்கியம். அந்த நிலத்தில் வாழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் இவானின் கதைகளில் வரும் படிமங்களும், உரையாடல்களும், வட்டார மொழியும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
இப்ராஹிம்

இப்ராஹிம் – முழுப்பெயர் முகமது இப்ராஹிம் அலி. சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்‌. ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

பின்னவீனத்துவம்அலர் பதிப்பகம்திருச்சி வாழ்க்கைஅப்பாவின் குழிகஸல்ம.கேசவன்தாரா கேம்பெல்இலக்கிய நிகழ்வுகள்ஆய்வுஜார்ஜ் ஜோசப்எஸ் அற்புதராஜ்நேர்காணல்நானென்பது லெட்டூஸ்அதிகாரம்அறபு இலக்கியம்நறுங்கதைநாஞ்சில்நாடன்கருத்தரங்கங்கள்கிருஷ்ணமூர்த்திரூமி‘அக்காக்கள்தலித் இலக்கியம்விமர்சனம்கருத்தரங்குகள்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்கவ்வாலிநான் ஏன் பதிப்பிக்கிறேன்பெருங்கொங்கை பூத்தாள்ஒளிரும் சொற்கள்அநித்யம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!